12 Dec, 2010
38. இவைகளும் கூட
எனது ஒவ்வொரு தமிழக பயணத்தின் போதும் சென்னையைத் தாண்டி கிராமங்கள் அல்லது சிற்றுர்களுக்கு நான் பயணம் செய்வதுண்டு. சில வேளை அவை திட்டமிட்ட பயணங்களாக அமைந்து விடும். அல்லது திடீரென்று ஏற்பாடாகும் பயணமாகவும் இது இருக்கும். அப்படி நான் செல்லும் போதெல்லாம் சாலைகளில் நடக்கும் நிகழ்வுகள் எனது பதிவுகளிலும் குறிப்புக்களிலும் இடம்பெறும். அப்படி இல்லாவிட்டாலும் எனது ஞாபகத்தில் நிறைந்திருக்கும்.
தமிழக கிராமப்பகுதி சாலை போக்கு வரத்து என்பது வாகனங்கள், சைக்கிள், கால்நடையாக நடந்து செல்லும் மக்கள் என்பது மட்டுமின்றி விலங்குகளும் ஒரு அங்கமாக சாலை, தெருக்களில் நான் பார்த்திருக்கின்றேன். மக்கள் கூட்ட்டத்தினிடையே மாடுகள் வாலை சுழற்றிக் கொண்டு நடந்து செல்வது, தெரு ஓரத்தில் ஓரிரண்டு எருமை மாடுகள் படுத்து ஓய்வெடுப்பது போன்ற காட்சிகள் ரசிக்கத் தக்கவை. இவை தவிர தமிழக சிற்றூர்களிலும் கிராமங்களிலும் நான் அதிகம் பார்த்த விலங்குகள் என்றால் பன்றிகளைத் தான் குறிப்பிட வேண்டும்.
கருப்பு அல்லது சாம்பல் நிறம் கொண்டவை இந்தப் பன்றிகள். மலேசியாவில் சீனர்கள் உணவுக்காக வளர்க்கும் இளஞ்சிவப்பு நிற பன்றிகளைப் போல இவை இல்லை. இவற்றின் வால் பகுதியும் அந்த வகை பன்றிகளைப் போல சுருண்டு இல்லாமல் ஒரு சிறிய சாமரம் போல நேராக இருக்கின்றது.
எட்டயபுரத்தின் தெருக்களிலும் இந்தப் பன்றிகள் நிறைந்து காணப்படுகின்றன. மக்கள் நடமாட்டத்தைப் பற்றி இவை கவலைப்படுவதில்லை. சாலைகளில் சர்வ சாதாரணமாக தனியாகவோ அல்லது ஒன்றிரண்டு பன்றிகள் இணைந்தோ நடமாடுகின்றன. குறிப்பாக எங்கெல்லாம் குப்பை கொட்டி கிட்டக்கின்றதோ அங்கேயெல்லாம் இவை காட்சியளிக்கின்றன. மனிதர்கள் சாப்பிட்டது போக தூக்கி எறியும் இலைகளில் உள்ள மிஞ்சிய உணவு இவைகளுக்கு உணவாகின்றது. குன்றாகக் குவிந்து கிடக்கும் குப்பையில் இந்தப் பன்றிகளுக்குப் பிடித்த ஏதாவது உணவு இடைத்து விடும் போல. இவற்றின் நீண்ட மூக்குப் பகுதியைக் குப்பைகளுக்கு இடையில் தேய்த்து தேய்த்து அவற்றை கலைத்துப் போட்டு குப்பைகளுக்கு இடையில் கிடைக்கும் உணவை தேடிச் சாப்பிடுகின்றன.
ஒவ்வொரு விலங்கும் ஒரு வகையில் நம்மைக் கவர்கின்றன. பன்றிகளின் மூக்குப் பகுதி அழகானது.
இந்தியாவைப் பொறுத்த வரை இந்த வகை பன்றிகள் தென்னாட்டில் மட்டுமல்லாது வட இந்திய மானிலங்களிலும் கூட இருக்கின்றன. என் வட இந்திய பயணத்தின் போதும் சாலைகளில் குப்பைகளைப் பிரித்து போட்டு அதில் மூக்கை நுழைத்து உணவு தேடும் இதே வகை பன்றிகளை நான் பார்த்திருக்கின்றேன்.
எட்டயபுரத்தின் சாலைகளில் இவை சர்வசாதாரணமாக நடமாடிக்கொண்டிருப்பத்தைப் பார்த்தபோது மனிதர்கள் மேல் இவற்றிற்கு பயம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. சாலையில் நடந்து செல்லும் மக்கள் இதனை பொருட்படுத்துவதுமில்லை. எட்டயபுரத்தில் இவைகளும் ஒரு அங்கம் தான்.
தொடரும்…
அன்புடன்
சுபா