முத்துசாமி தீட்சிதருக்கு ஒரு நினைவு மண்டபம் கட்டப்பட வேண்டும் என்ற எண்ணம் எட்டயபுர ஜமீன் வம்சத்தினருக்கு இருந்திருக்கின்றது. அவர் தான் வாழ்ந்த காலத்திலேயே எட்டயபுர சமஸ்தானத்தின் இசை மேதையாக கௌரவிக்கப்பட்டிருக்கின்றார். பின்னர் இவருக்கு நினைவு மண்டபம் எட்டயபுர நகரின் முக்கிய வீதியிலேயே எழுப்பப்பட வேண்டும் என்ற சிந்தனை தோன்றியதும் அதனை செயல்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். 1946ம் ஆண்டு ஏப்ரம் மாதம் 7ம் தேதி நினைவு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு கட்டடப்பணிகளைத் தொடங்கியிருக்கின்றனர். பின்னர் இந்த மண்டம் சில காரணங்களுக்காக நிறைவு பெறாத நிலையில் 22.08.1973ம் ஆண்டு கட்டிடப் பணி நிறைவு செய்யப்பட்டு இம்மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இசை மும்மூர்த்திர்களில் ஒருவராக போற்றப்படுபவர் முத்துசாமி தீட்சிதர். இராமசுவாமி தீட்சிதருக்கும் சுப்புலட்சுமி அம்மையாருக்கும் மகனாக 1776ம் ஆண்டு பிறந்தவர். தனது 40 வயது வரை குழந்தை இல்லாத நிலையில் வைத்தீஸ்வரன் கோயில் முத்துகுமாரஸ்வாமி அருளால் இக்குழந்தை பிறந்ததால் இறைவன் கருணையில் மகிழ்ந்து அந்த சுவாமியின் திருப்பெயரையே குழந்தைக்குச் சூட்டியிருக்கின்றனர் பெற்றோர். தெலுங்கு சமஸ்கிருதம் மொழிகளையும் இசையையும் தன் தந்தையாரிடமே கற்றவர். இளம் வயதிலேயே இவருக்குத் திருமணம் நடந்தேறியிருக்கின்றது. இசையுடன் வீணை வாசிப்பதிலும் மிகச் சிறந்த தேர்ச்சி பெற்றவராக விளங்கியிருக்கின்றார்.
முத்துஸ்வாமி தீட்சிதரின் கீர்த்தனைகளை அறியாத கர்நாடக சங்கீதம் பயின்றவர்கள் இல்லை எனும் அளவுக்கு புகழ் பெற்றவை இவரது கீர்த்தனைகள். அதில் குறிப்பாக வாதாபி கணபதிம் எனும் ஹம்ஸத்வனி ராகத்தில் அமைந்த பாடலின் இனிமையை மறக்க முடியுமா?
முத்துஸ்வாமி தீட்சிதரைப் பற்றிய மேலும் பல குறிப்புக்கள் தமிழ் விக்கிபீடியாவில் காணக்கிடைக்கின்றன.
முத்துசாமி தீட்சிதரின் இன்னிசை நூல் நிலையம் என அழைக்கப்படும் இந்த நினைவு மண்டபம் எட்டயபுர முக்கிய சாலையிலேயே அமைந்திருக்கின்றது. நகர பேருந்து நிலையத்தின் பக்கத்திலேயே, அட்டை குளம் என்றழைக்கப்படும் ஒரு பெரிய குளத்தின் அருகாமையில் இம்மண்டபம் உள்ளது.
இவர் தெலுங்கு, சமஸ்கிருதத்தில் பாண்டித்யம் பெற்றவர்; தெய்வத் திருவருளால் சங்கீத சாஸ்திர மேதை ஆனவர்; வீணை பயிற்சியும் நிரம்பப் பெற்றவர்; ஜோதிடம், மந்திர சாஸ்திரங்கள் முறையாகக் கற்றுத் தேர்ந்தவர். யமுனா கல்யாணி, பிருந்தாவன சாரங்கா போன்ற இந்துஸ்தானி ராகங்களை கர்நாடக சங்கீதத்தில் சேர்த்தவர். கங்கையில் மந்திர சித்தியால் தெய்வீக வீனை பெற்றவர் என்பன போன்ற தகவல்கள் இம்மணடபத்தின் விளக்கப்பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
ஒரு கோயிலைப் போன்ற அமைப்பில் அமைக்கப்பட்டிருக்கின்றது இந்த மண்டபம். மண்டபத்தின் நடுவே கையில் வீணை ஏந்தியபடி அழகாக வீற்றிருக்கும் முத்துசாமி தீட்சிதரின் கருஞ்சிலை. இங்கே தினமும் மக்கள் வந்து செல்கின்றனர். பூஜை நடக்கின்றது.
மண்டபத்திற்கு பின்புறம் உள்ள பகுதியில் ஒரு குடும்பத்தினர் தங்கியிருக்கின்றனர். உறவினராகவோ இந்த மண்டபத்தின் பணியாளராகவோ இருக்கலாம்.
இந்த மண்டபத்தின் சுவர்களை அலங்கரித்த வண்ணம் முத்துசாமி தீட்சிதரின் பாடல்கள் பொறிக்கப்பட்ட பலகைகள் தொங்க வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் பாடலோடு இராகம் தாளம் ஏனைய குறிப்புக்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த மண்டபத்தை பராமரிப்பவர்கள் தொடர்ந்து ஒவ்வோராண்டும் குருதினம்,சங்கீத விழா மற்றும் சில நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். இவ்வகை முயற்சிகள் நமது பாரம்பரியத்தின் வேர்கள் அழியாமல் காக்கப்படுவதற்குத் துணை புரியும் நடவடிக்கைகள். சங்கீத சாஸ்திர மும்மூர்த்திகளில் ஒருவரான இவரது நினைவாலயத்திற்குச் சென்று வருவது இசைப்பிரியர்களுக்கு நல்ல விருந்தாக நிச்சயம் அமையும்.
இந்த மண்டபத்தை முழுதும் பார்த்து சற்று அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்ட பின்னர் மண்டபத்தின் வெளியே வந்தோம். எட்டயபுர நகரத்தின் மையச் சாலையை சற்று கவனித்தோம்.
தொடரும்…
அன்புடன்
சுபா