Home HistoryEtayapuram 3 – வம்சமணிதீபிகை

3 – வம்சமணிதீபிகை

by Dr.K.Subashini
0 comment

May 11

 

வம்சமணிதீபிகை
 
எட்டயபுரம் மன்னருக்கு பாரதி அனுப்பிய கடிதம்
 
எட்டயபுரம்
6 ஆகஸ்ட், 1919
 
ஸ்ரீமான் மஹாராஜ ராஜ பூஜித மஹாராஜ ராஜஸ்ரீ எட்டயபுரம் மஹாராஜா, வெங்கடேச எட்டப்ப நாயக்க ஐயனவர்கள் ஸ்ந்திதானத்துக்கு சி.சுப்பிரமணிய பாரதி அநேக ஆசீர்வாதம்.
 
முன்பு கவிகேஸரி ஸ்ரீ ஸ்வாமி தீஷிதரால் எழுதப்பட்ட ‘வம்சமணிதீபிகை’  என்ற எட்டயபுரத்து ராஜ வம்சத்தின் சரித்திரம் மிகவும் கொச்சையான தமிழ் நடையில் பலவிதமான குற்றங்களுடையதாக இருப்பது ஸந்திதானத்துக்கு தெரிந்த விஷயமே.
 
அதைத் திருத்தி நல்ல, இனிய, தெளிந்த தமிழ் நடையில் நான் அமைத்துத் தருவேன். அங்ஙனம் செய்தால் அந் நூலை ராஜாங்கப் பாடசாலைகளில் தமிழ்ப் பாடமாக வைக்க ஏற்பாடு செய்யலாம். சில மாசங்களுக்கு முன், கூடலூரில் என்னை விடுதலை செய்யுங் காலத்தில் விதிக்கப்பட்ட தடைகளெல்லாம் சமீபத்தில் நீங்கிவிட்டதினின்றும், ஆங்கில ராஜாங்கத்தார் என்னிடம் பரிபூர்ணமான நல்லெண்ணம் செலுத்துகிறார்களென்பது தெளிவாகப் புலப்படும். எனவே அந் நூலை சர்க்கார் பள்ளிக்கூடப் பாடங்களில் சேர்க்கும்படி செய்தல் எளிதாகும்.
 
மேலும், நான் அதை எழுதுகிற மாதிரியை ஒட்டியும், என் பெயரை ஒட்டியும் அந் நூல் தமிழ் நாட்டில் வசன காவியத்துக்கோர் இலக்கியமாக எக்காலத்திலும் நின்று நிலவும்படி செய்யப்படும்.
 
அதை அரணமனை அச்சுக் கூடத்திலேயே அடிக்கலாம். சந்திதானத்தின்  உத்தரவு கிடைத்ததற்கு மறுநாள் முதலாவகவே அச்சுக்கூடத்தில்  கோப்பு வேலை தொடங்கிவிடலாம். அன்றாடம் சேர்க்க வேண்டிய பகுதியை நான் முதல் நாள் எழுதிக் கொடுப்பேன். இக் கார்யத்தில் இவ்விடத்து ராஜ குடும்பத்துக்கு அழியாத கீர்த்தியும் தமிழ் மொழிக்கொரு மேன்மையும் பொருந்திய  சரித்திர நூலும் சமையும்.
 
இது தொடங்குவதற்கு  விரைவில் உத்தரவளிக்கும்படி ப்ரார்த்திக்கிறேன். நூலின் "காபிரைட்" அரமனைக்கே சேரும்.
 
                                                                                                                   சந்திதானத்துக்கு மஹா சக்தி அமரத் தன்மை தருக.
 
                                                                                                                                                              சந்திதானத்திடம் மிக்க அன்புள்ள,
                                                                                                                                                                                       சி.சுப்பிரமணிய பாரதி.
 
குறிப்பு: நான் இவ்வூரிலேயே ஸ்திரமாக வசிப்பேன்.
கைம்மாறு விஷ்யம் சந்திதானத்தின் உத்தவுப்படி.
 
                                                                               பாரதி
 
 
வம்சமணிதீபிகை பதிப்பாசிரியர் இளசை மணியம் இன்னூலின் பக்கம் 6-7ல் இந்த கடிதத்தை இணைத்திருக்கின்றார்.
 
எட்டயபுர வரலாற்றை நூலாக வெளியிட வேண்டும் என்ற ஆர்வத்தில் திரு.இளசை மணியம், திரு.வே.சதாசிவன், திரு.மா.ராஜாமணி ஆகீய மூவரும் ஆறு மாதங்கள் தொடர்ந்து உழைத்து இவ்வரலாற்று நூலை  வெளியிட்டனர். அதன் பின்னர், சுவாமி திஷிதரின் வம்சமணிதீபிகை நூலை பதிப்பிக்க வேண்டும் என்ற ஆவலிலும் பாரதியாரின் கடிதம் ஏற்படுத்திய ஆர்வத்தினாலும் இந்த நூலின் பிரதியை தேடிய திரு.இளசை மணியன், ‘திருநெல்வேலி சரித்திரம்’  எழுதிய குருகுஹதாச பிள்ளை அவர்களின் குமாரர் கு.பக்தவச்சலம் அவர்களிடம் தனது விருப்பத்தை தெரிவித்திருக்கின்றார். தன்னிடம் இருந்த ஒரே பிரதியை திரு.இளசை மணியத்திடம் வழங்கி இப்பணியை ஆரம்பிக்குமாறு ஊக்கப்படுத்தியிருக்கின்றார் திரு.கு.பக்தவச்சலம். 
 

எட்டயபுரம் அரண்மனை மேலிருந்து..

 

பாரதி எண்ணப்படி கடின தமிழ் நடையையும் பிழைகளையும் திருத்தி எளிய தமிழில் வெளியிட எண்ணம் கொண்டிருந்த இவர் பலரிடம் இது பற்றி கலந்து பேசிய போது அதனை அப்படியே மாற்றமில்லாமல் பதிப்பிக்குமாறு நண்பர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதில் குறிப்பாக  தொ.மு.சி. ரகுநாதன் அவர்கள் எவ்வித திருத்தமும் செய்யாமல் மூல நூலை அப்படியே வெளியிட வேண்டும் என வற்புறுத்திக் கூறியதன் அடிப்படையில் மாற்றங்கள் இன்றி இன்னூலை பதிப்பித்துள்ளார் திரு.இளசை மணியம் அவர்கள்.
 
வம்சமணிதீபிகையின் மூலம் 1879ல் வெளிவந்துள்ளது. இந்த நூல் வாய்மொழிச் செய்திகள், அரண்மனையில் பாதுகாப்பில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது என்பது நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

 

இந்த நூலில் முதல் பிரகரணம் எட்டயபுரம் ராஜாக்களின் பரம்பரை விஷயங்களைப் பொதுவாகக் கூறுவதாக சிறு பகுதியாக மட்டுமே உள்ளது. இரண்டாம் பிரகரணத்திலிருந்து ராஜ வம்சத்தினரின் பெயர்கள் பட்டியலிடப்பட்ட தகவல் இருக்கின்றது. இந்த இரண்டாம் பிரகரணத்துக்கான இங்கிலீஷ் ஆண்டு 1304 என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆக 1304லிருந்து தொடங்கி இந்த ராஜ வம்சத்தினரைப் பற்றிய தகவல்கள் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதிலும் சிறப்பாக 13ம் பிரகரணத்திலிருந்து 37ம் பிரகரணம் வரை பாஞ்சாலங்குறிச்சி சண்டை தொடர்பான செய்திகள் இடம்பெறுகின்றன.  குறிப்பாக 1799ல் நிகழ்ந்த முதலாம் பாஞ்சாலங் குறிச்சிப் போர், 1801ல் நடந்த இரண்டாம் பாஞ்சாலங்குறிச்சி போர் பற்றிய செய்திகள் இப்பக்குதிகளில் உள்ளன. 
 

இந்த நூலை எளிய தமிழில் எழுதித் தருகிறேன் என விண்ணப்பம் வைத்த பாரதி ஏன் இதனைத் தொடங்கவில்லை என்பது புதிர். அனுமதி சமஸ்தானத்திடமிருந்து கிடைத்ததா இல்லையா? அப்படி கிடைக்கவில்லையென்றால் அதற்கு காரணம் என்ன என்ற கேள்வியும் எழுகின்றது.  இந்தப் பணியை மேற்கொள்ள விண்ணப்பித்த பாரதி பின்னர் தனது நையாண்டி இலக்கியமான சின்னச்சங்கரன் கதையில், எட்டயபுரம் ஜமீன்தாரையும் அவரது ஆட்சி முறையயும் கேலி செய்திருப்பதாக இந்த நூலுக்கு முன்னுரை எழுதிய ஆ.சிவசுப்பிரமணியன் குறிப்பிடுகின்றார். 

 
மறுபதிப்பு கண்டுள்ள வம்சமணி தீபிகை 2008ம் ஆண்டு திரு.இளசை மணியத்தினால் தொகுக்கப்பட்டு, தென்திசை பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.
 
இந்த நூலின் இறுதிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள சில கடிதங்கள் 19ம் நூற்றாண்டின் மத்தியில் நிகழ்ந்த சில விஷயங்களுக்கு ஆதாரமாகவும் அமைந்திருக்கின்றன. ஒரு வகையில் வாசித்து புரிந்து கொள்ள சற்று சிரமமான தமிழ் நடை கொண்ட நூல் இது என்றாலும் படிக்கப் படிக்க விளக்கம் பெற முடிகின்றது.
 
சரி – வம்சமணி தீபிகையில் பாஞ்சாலங்குறிச்சியும் கட்டபொம்மன் ஊமைத்துரை சம்பந்தப்பட்ட வரலாற்று விஷயங்களும் அடங்கியிருப்பது போல எனது பயணமும் பாஞ்சாலங்குறிச்சியையும் இணைத்த ஒன்றாக அமைந்தது ஒரு ஆச்சரியம் தான். எனது பயணத்தின் முதல் நாள் அனுபவத்தை அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.
 
அன்புடன்
சுபா


 

மின் தமிழ்ல் திரு.ஹரிகி அவர்களின் சில தொடர் கருத்துக்கள்.

[email protected]

..

பாரதியின் மேற்படி விண்ணபத்தின் தேதியைப் பாருங்கள்.  6 ஆகஸ்ட் 1919. அதாவது தங்கம்மா பாரதியின் திருமணத்துக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னால்.  இப்படி ஒரு விண்ணப்பத்தை ஜமீனிடம் சமர்ப்பிக்க வேண்டிய நிர்ப்பந்தம் பாரதிக்கு ஏன் ஏற்பட்டது என்பது லேசாகவாவது விளங்கவேண்டும்.


அது ஒருபக்கம்.  சின்ன சங்கரன் கதை எழுதப்பட்டது எப்போது?  பாரதி பாண்டிச்சேரியில் வாசம் செய்தபோது.  ஒருமுறை (தற்போது கிடைத்திருக்கும் வடிவத்தைக் காட்டிலும் நீளமாக) எழுதி போலீஸார் பாரதியின் வீட்டைச் சோதனையிடுகையில் கிழித்துப் போடப்பட்டவற்றோடு அதுவும் போய்விட, வரா முதலான பல நண்பர்கள் வற்புறுத்தியதன் பேரில் அதை மறுபடியும் எழுதத் தொடங்கி, ஞானபாநு பத்திரிகையில் வெளியிட்டு, அது பாதியில் நின்று போனது 1913ல்.


அதாவது, இரண்டாம் முறை எழுதியதே, இந்த விண்ணப்பத்துக்கு ஆறு வருடங்களுக்கு முன்னர்.  அப்படியானால், முதல் முறை எழுதியது, இந்த விண்ணப்பத்துக்குக் குறைந்தது 7-8 ஆண்டுகளுக்க முன்னர் என்பதை உறுதியாகச் சொல்லலாம். 

..

சின்னச் சங்கரன் கதை ‘பாரதி கதைகள்’ தொகுப்பிலும் வந்திருக்கிறது; பற்பல பதிப்புகள் கண்டு, பற்பல பிரதிகள் விற்கப்பட்டும் உள்ளது.  தற்போது வெகு தாரளமாகவும் ஏராளமாகவும் கிடைக்கும் பாரதி எழுத்துகளில் ஒன்று சின்னச் சங்கரன் கதை.  அவசியம் படித்துப் பாருங்கள்.  எட்டயபுரம் ஜமீன்தாரை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது என்று ஊகித்துதான் அறியமுடியும்.  கதையின் நாயகருடைய பெயர் என்னவோ கவுண்டனூர் ஜமீந்தார் ராமசாமி கவுண்டர்.  ‘மஹராஜாவுக்கு ஐந்து மனைவியர்.  ஆனால் ஜமீந்தாரர் அவர்களோ அர்ஜுனனுக்க நிகரானவர்–விராட நகரில் இருந்த அர்ஜுனனுக்கு–அதாவது மஹாராஜ ராஜபூஜித மஹாராஜ ராஜஸ்ரீ மஹாராஜ மார்த்தாண்ட சண்டப்ரசண்ட அண்டபகிரண்ட கவுண்டாதி கவுண்ட கவுண்ட நகராதிப ராமசாமிக் கவுண்டரவர்கள் பரிபூர்ண நபும்சகனென்று தாத்பர்யம்.‘


புத்தகம் முழுக்கவே இப்படிப்பட்ட நையாண்டிதான்.  ஜமீனை விட்டு வெளியேறிய பிறகு, எட்டயபுரம் ஜமீன்தாரரைப் பற்றி பாரதி எழுதியது எதுவும் உயர்வான அபிப்பிராயமாக இல்லை.  இந்தியா பத்திரிகையில் எட்டயபுரம் ஜமீன்தாரருடைய தேசபக்த விரோதப் போக்கைக் கண்டித்து மூன்று முறை செய்தி வெளியிட்டிருக்கிறான்.  ‘வாராய் கவிதையாம் மணிப்பெயர்க் காதலி’ என்று தொடங்கும் பாடலில், 27வது அடியில் ‘தென்றிசைக் கண்ணொரு சிற்றூர்க் கிறைவனாம் ஒருவனைத் துணையெனப் புகுந்து அவன் பணிசெய இசைந்தேன்’ என்று எல்லாப் பதிப்புகளிலும் காணப்படுகிறது.  பதிப்பித்தவர்கள் இடையில் இரண்டு அடிகளை விட்டுவிட்டார்கள்.  1909ல் (அதாவது விண்ணபத்துக்குப் பத்தாண்டுகளுக்கு முன்னால்) பாரதி, ஜமீன்தாரரைப் பற்றி என்ன அபிப்பிராயம் கொண்டிருந்தான் என்பது தெரியவேண்டுமானால், விடுபட்ட அந்த இரண்டு அடிகளையும் அவசியம் படிக்கவேண்டும்:


தென்றிசைக் கண்ணொரு சிற்றூர்க் கிறைவனாம்
திமிங்கில உடலும் சிறுநாய் அறிவும்
பொருந்திய
ஒருவனைத் துணையெனப் புகுந்து அவன்
பணிசெய இசைந்தேன்


இதுதான் முழுவடிவம்.  தடித்த எழுத்தில் காட்டப்பட்டுள்ளது, விடுபட்டிருக்கும் அடிகள்.  இவ்வளவு காட்டமாக ஜமீன்தாரரைப் பற்றி எழுதிய பாரதி, பத்தாண்டுகள் கழித்து இந்த விண்ணப்பத்தை அவருக்கு அனுப்பியது ஏன் என்ற கேள்வி எழும்.  தமிழ்நாட்டில் பெண்ணைப் பெற்றவன் தன்மானத்தை விட்டுவிடத் தயங்கக்கூடாது என்பதற்கும் பாரதியின் வாழ்க்கை எடுத்துக்காட்டாக இருந்திருக்கிறது.  தங்கம்மா பாரதியின் திருமணத்துக்கு இன்னமும் ஓரிரு மாதங்கள் இருந்த நிலையில், பெண்ணைப் பெற்ற தகப்பன் பணத்துக்கு வழியில்லாத நிலையில் எவ்வளவு தாழவேண்டுமானாலும் குனிவான்,  He would not mind stooping from his stature for the sake of his daughter என்பதற்கு பாரதி எடுத்துக்காட்டு என்பது என் கருத்து.  இதுவரையில் எந்த ஆய்வாளரும் இந்தக் கோணத்தைக் காட்டியதில்லை.  தேவைப்பட்டால், இந்த ஆய்வை இந்தத் திசையில் முன்னெடுத்துச் செல்லலாம்.

You may also like

Leave a Comment