Home Palm Leaf 3 – சென்னை

3 – சென்னை

by Dr.K.Subashini
0 comment

 

ஓலைச் சுவடிகளைத்   தேடிய  படலம்  !  — ௩  –  ( 3 )

 2009  டிசம்பர் மாதம்  18  நாள்  அன்று தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் சுபாஷிணியும் , தமிழ்ப் பல்கலைக் கழகமும்   ஓலைச் சுவடிகள் தேடுதல்,  அவற்றை மின்னாக்கம் செய்தல் ஆகியவை  பொருட்டு  ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். உடனே பல்கலைக்  கழகப் பட்டமளிப்பு விழா, அதைத் தொடர்ந்து அரையாண்டு விடு முறை என நாட்கள்  நகர்ந்தன .

 
5/ 2  / 2010 திட்டமிட்டபடி சென்னையில் முனைவர் கோவை மணியுடன்  தேடுதல்  பணி தொடங்கலாம் என்த்தகவலின் படி பணி தொடங்கியது. புறப்பட்ட நேரம் மாலை  6  மணி,  இடம் தஞ்சை, நாள்  4 /2 /2010 .  விடுவோமா  வாய்ப்பை !  செல்வமுரளி மறுநாள் கலந்து கொள்ள நிச்சயித்து  உடுப்பு எடுக்க ஊருக்குப் போக  நான் எடுத்தேன்   ஓட்டம் !இரவு முழுவதும் பயணம் ! விடியலில் மீண்டும் பயணம் !
பத்து மணிக்கே எழும்பூர் !ரயிலும் வந்தது, அத்துடன் கோவை மணியும் வந்தார் .

ரயில் நிலைய பிளாட்பாரத்தின் நாற்காலிகள் எங்கள் ஆலோசனை அறையாக மாறியது . சென்னையில்  சுவடிகள் இருப்பதாக   NMM   தயாரித்த பட்டியலில் இருந்த முகவரிகள் மொத்தம்  76 .நான் முன்பே அவற்றைப்  பகுதி வாரியாக ராயப்பேட்டை, மயிலாப்பூர்  பகுதி என முகவரிகள் பிரித்து வைத்திருந்தேன். அன்று எங்கே போவது ?  எங்கே முடிப்பது என ஆராய்ந்தோம்.  அருகில் இருக்கும் சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர் , திருவல்லிகேணி பார்த்து நான் அங்கே விடுதியில் தங்கு வது. மறுநாள் காலை மீண்டும் அங்கிருந்து ஆரம்பிப்பது என்று  தீர்மானித்தோம் . எதிரே சென்று அவசர அவசரமாக மதிய உணவை முடித்துக் கொண்டோம் . அழைப்பு  வண்டியை (CALL TAXI) அழைத்தோம் . மறுநாள் முதல் நான்கு நாட்களுக்கு ஒரு வண்டியை அமர்த்திக் கொண்டோம் .

உ வே சா  அவர்கள் மாதிரி மாட்டு வண்டியில் செல்லும் பாக்கியம் இப்போது  கிட்டாதே ! ஏதோ கிடைத்த வண்டியில் திருப்தி அடைய வேண்டியதுதான் என மனத்தை சமாதானப்படுத்திக் கொண்டோம். (சும்மா நகைச்சுவைக்குத்தான் !  முன்பே சொல்லிவிட்டேன்,  அது வேறுவகைத் தேடல். NO  COMPARISON  PLEASE ! )
சிந்தாதிரிப் பேட்டையில் ஒரே ஒரு முகவரிதான் இருந்தது. எனவே குழப்பம் இல்லை.  வண்டி நேரே சிந்தாதிரிப் பேட்டை சென்றது. முகவரியில் இருந்த பெயர் நிமலன். பட்டியலில் எப்படி இருந்தது தெரியுமா ?

 Nameelan  .A
107 , CHIKANA CHETTY STREET
CHENDARIPET.   CHENNAI  -2
சிந்தாதிரிப் பேட்டை சென்று தோன்றிய ஓர் இடத்தில்  வண்டியை  நிறுத்தி  நமீலன், சிக்கன செட்டித் தெரு என விசாரிக்க  ஆரம்பித்தோம்.  யாருக்கும் தெருவும் தெரியவில்லை , நபரும் தெரியவில்லை . நடந்து நடந்து வண்டியை விட்டு நீண்ட தூரம் வந்து விட்டோம் . தாகம் நாக்கை இழுத்தது , நடை தளர்ந்தது ! அப்போது தான் தவறு புரிய ஆரமித்தது.

குளிர்பானம் குடிக்க ஒரு கடைக்குச் சென்று பானம் அருந்தி மீண்டும் மெதுவாக ’ இங்கே நமீலன் என யாராவது….’ எனக் கேட்க ஆரம்பித்ததும் ’ நிமலனைக் கேட்கிறீர்களா ? பக்கத்தில்  சிக்கண்ண செட்டித் தெருவில் தான் போங்கள் !’ என்றார்.
.
இரண்டு புதிர்களை ஒரே நேரத்தில் விடுவித்த சாதனை அவருக்குத் தெரியவில்லை! இப்போது கொஞ்சம் தெம்பாக அருகில் இருந்த வீட்டை அடைந்தோம்  வீட்டு எண்ணைப் பார்த்தேன் அதுவும்  107  இல்லை. என்னை அறியாமல் ’முருகா!’ என்றேன்! ஆனால் அப்படி  உரக்கக் கூறும் வழக்கம் எனக்குக் கிடையாது. என்னவோ தோன்றியது,  கூறிவிட்டேன். உள்ளே சென்று ’நிமலன் ஐயா இருக்கிறாரா?’ என்றேன். 
அது ஒரு புத்தகக் கடையாக இருந்தது. ஒரு சிறுமியும் சிறுவனும் இருந்தனர் .’ நிமலன் வெளியே சென்றிருக்கிறார்,  உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டனர். எங்களுக்குச் சுவடிகள் வேண்டும் என எப்படிக் கேட்பது . எனவே நாங்கள் எங்களைப் பற்றியும், சுவடி தேடிக் கிளம்பி இருப்பதையும் கூறினோம். இருவரும் எங்களைச் சில கணங் கள் பரிதாபமாகப் பார்த்தனர்.’ இங்கே ஏன் வந்தீர்கள்?’ எனக் கேட்டனர். பிறகு உடனே  NMM  பற்றி விளக்க ஆரம்பித்தோம் ‘ இந்தப் பட்டியலில் உங்கள் வீட்டில்  160 சுவடிகள் இருப்பதாகப் பதியப் பட்டுள்ளது’ என்றதும் அதுவரை உற்சாகமாகப் பேசிவந்தவர்கள்  இப்போது எங்களை பயத்துடன் ஏதோ பிள்ளை பிடிக்க வந்தவர்களைப் பார்ப்பது போல் பார்த்து , அருகில் இருந்த அழைப்பு மணியை அலற விட்டனர்.

 

உடனே மாடியில் இருந்து  ஒரு பெண்மணி இறங்கி வந்து,  மீண்டும் ஒருமுறை எங்கள் கதையை முழுவதும் கேட்டார். பின் ’இது யார் வீடு தெரியுமா?’ எனக் கேட்டார். நாங்களும் முகத்தை அப்பாவித் தனமாக  வைத்துக்கொண்டு ’ ‘இங்கே நிமலன்…’ என்று இழுத்தோம் . உடனே அந்தப் பெண்மணி மேலும் எங்களைச் சோதிக்க விரும்பாமல்     ‘ இது வாரியார் சுவாமிகள் வீடு ! நான் அவரது சகோதரர் மகள்! நிமலன் அவரது சகோதரர் மகன். அவர் சுவாமிகளின் புத்தகங்களைப் பதிப்பித்து வருகிறார்.  நீங்கள் கூறியபடி இங்கே  160  புத்தகக் கட்டு வேண்டுமானால் இருக்கிறது.  160  சுவடிக் கட்டுகள் கிடையா " என்றார்.

 

வாரியார் சுவாமிகள் பெயரைக் கேட்டதும் ஒரு கணம் நாங்கள் இருவரும் மெய்சிலிர்த்து விட்டோம் . இறையருளாலேயே நாங்கள் முதலில் இங்கு வந்து எங்கள் தேடுதலை ஆரம்பித்ததை உணர்ந்தோம்.
இன்னும் சொல்லப்போனால் வாரியார் சுவாமிகளுக்கும் என் வாழ்க் கைக்கும் தொடர்பு உண்டு . நான் முதல் வெளிநாடு சென்று திரும்பி யதும் ஒரு தொழில் உற்பத்திசாலை ஆரம்பித்தேன் ;.அதைத் திறந்து வைத்தது (1985) வாரியார் சுவாமிகளே ! அத்தொடர்பை நான் கூறியதும் அந்தப் பெண்மணி எங்களை மாடியில் இருக்கும் சுவாமிகளின் பூஜை அறைக்கு அழைத்துச் சென்று, வழிபடச் செய்து, பூஜைகள் நடத்தி, எங்கள் பணி வெற்றியடையும் எனவும் வாழ்த்தினார்.  எங்களுக்குச் சில புத்தகங்களையும் பரிசாகத் தந்தனர். கந்தன் அருள் பெற்ற  சந்தோ ஷத்துடன் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தோம். சிந்தாதிரிப் பேட்டையில் எங்களுக்குச் சுவடி கிடைக்காவிட்டாலும் நான்கு முக்கிய போதனைகள் கிடைத்தன.

 

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

 

You may also like

Leave a Comment