Home HistoryEtayapuram 24.பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மு

24.பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மு

by Dr.K.Subashini
0 comment

19-09-2010

 

24.பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மு

எட்டயபுரத்தில் அதன் 31வது பட்டம் ஜெகவீரராம எட்டப்ப நாயக்கர் அய்யனவர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்த வேளையில் எட்டயபுரத்துக்குத் தென்திசையில் சுமார் 15மைல் தூரத்தில் அமைந்திருக்கும் ஒட்டப்பிடாரம் கிராமத்திற்குப் பக்கத்தில் அமைந்திருக்கும் பாஞ்சாலங்க்குறிச்சி நகரத்தை வீரபாண்டிய கட்ட பொம்மன் ஆண்டுகொண்டிருக்கின்றார். இவரைப் பற்றி 1879ம் ஆண்டு வெளியிடப்பட்ட வம்சமணி தீபிகை நூல் கூறும் சில விஷயங்களை இந்தப் பகுதியில் காணலாம்.

 

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கொத்தளங்களுடன் ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது.  அதனை "கருத்தய்யா வென்று பெயர் விளங்கிய வீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கரென்ற பாளையக்காரர் சுமார் 30 வயசுள்ளவர் இராச்சியம் ஆண்டு வந்தார். மேற்படியாருக்கு குமாரசுவாமி நாயக்கரென்றும் கப்பாநாயக்கரென்றும் இரண்டு சகோதரகள். இவர்களில் குமாரசுவாமி நாயக்கர் சுமார் 26 வயசுள்ளவர். இவர் பிறவியிலேயே ஊமைத் தன்மையுஞ் செவிடுமுடையவர். சிவத்தய்யாவென்ற சுப்பாநாயக்கர் சுமார் 17 வயசுள்ளவர்". (பக்கம் 43)

மேற்கூறப்பட்டுள்ள பகுதியிலிருந்து வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கருத்தய்யா என்ற பெயர் அமைந்தது போல அவர் தம்பிகளுக்கு ஊமைத்துரை, சிவத்தய்யா என்ற கூடுதல் பெயர்களும் வழக்கில் இருந்தது தெரியவருகின்றது.

"இவர் நிறாதபாணிகளான அநேக ஜனங்களுடன் வெளியேறி அசல் ஜமீன் கிராமங்களிலும் அயன் கிராமங்களிலும் கொள்ளை  செய்வது ஆட்டுக்கிடை மாட்டுக் கிடைகளை அபகரிப்பதும் தட்டைப்படப்பு முதலான துகளில்த் தீயைப் போடுவதும் ஜனங்களைக் கொலை செய்வதும் இவ்விதமான குருர நடபடிக்கைகளை நடத்தி வந்ததுந்தவிர கலைக்கட்டர் துரையவர்கள் அதிகாரத்துக்கு விரோதமாக அவர் திசைகாவலுக்குட்பட்ட அயன்கிராமங்களிற் பணவசூல் முதலானதுகளுஞ் செய்தார்.  அப்போது அயற்கிராமங்களிற் கொள்ளையிடுவதில் ஆசையினாலே சிலர்களும் அவருடன் சேராவிட்டால் தங்கள் கிராமங்களைக் கொள்ளை யிடுவாரென்ற  பயத்தினாற் சிலர்களுமாக  நாகலாபுரம் குலத்தூர் காடல்குடி ஏழாயிரம்பண்ணை கோலவார்பட்டி மேல்மாந்தை இது முதலான் கிராமங்களிலிருந்த  அநேக பாளையக்காரர்கள் அவர்பக்கஞ் சேர்ந்தார்கள். இவ்விதமாய் தன் பக்கஞ்சேர்ந்த இந்தப் பாளையக்காரர்களையும் இவர்களுடைய முரட்டுச் சேவகர்களின்  கூட்டத்தையுங் கண்டு மகிழ்ந்து பேஷ் கிஸ்து வசூல் செய்ய வந்த நவாபு உத்தியோகத்தர்களுடைய துருப்புகளோடு எதிர்க்கிற வழக்கப்படிக்கு சமயங்களில் கும்பினியாருடைய துருப்புகளோடும் எதிர்க்கலாமென்றும் கெட்ட எண்ணங்கொண்டார்". (பக்கம் 44)

 

மேற்குறிப்பிடப்பட்ட தகவல்கள் Etaiyapuram Past and Present  நூலில் உள்ள தகவல்களை ஒத்ததாக அமைந்திருக்கின்றது. கட்டபொம்மன் ஒரு கொள்ளையிட்டு ஆட்சி செய்து வந்த ஒரு பாளையக்காரராகவே இந்த நூல்களில் சித்தரிக்கப்படுகின்றார். 

"மேஸ்தர் ஜாக்ஸன் துரையவர்கள் எட்டயபுரம் ஜெகவீரராம எட்டப்ப நாயக்கர் அய்யனவர்களுக்கு எழுதிய லெட்டர்  என்னவென்றால் …..பாஞ்சாலங்குறிச்சிப்பாளையக்காரர்கன் நடந்து கொண்ட நிரம்பவுங் கெட்ட நடத்தையை நீர் இதற்கு முன் கேள்விப்பட்டிருப்பீரல்லவா. கும்பினியாரவர்கள்  உத்தரவுப்படிக்கு நம்முடைய கச்சேரிக்கு அவரை வரவழைத்திருந்தோம். நாளது 20வது நாள் கச்சேரிக்கு வந்த்திருந்தவர் அவ்வளவாகிலும் ஒரு முகாந்திரத்துக்கு இடமில்லாமலிருக்க நம்முடைய  உத்தரவு இல்லாமல் கச்சேரியை விட்டு ஓடிப்போனதுமல்லாமல்  அவ்விடம் வந்து இப்படிக்கொத்த  கீழ்ப்பணியாத நடத்தை நடந்து கொண்டது சம்மதியில்லாமல் அவர் ஓடுகிற போது போக வேண்டாமென்று உத்தரவு  கொடுக்க அவ்வப்போது அசிஸ்டெண்டு கிளாற்கு துரையவர்களைத் தன்கையார் குத்திக் கொலை செய்து போட்டுப் போய்விட்டது. அது சங்கதிக்கு கலைக்டர் உத்தரவுப் படிக்கு நீர் இராமனாதபுரத்துக்குப் புறப்பட்டு வந்தால் அதினாலே உமக்கு யாதொரு தொந்தரவுவாவது மோசமாவது வருகிறதா யிருக்குமென்று பயபப்ட்ட இடமிரா தென்று  உங்கள் எல்லாருக்கும் நன்றாய்த் தெரிந்திருக்குமே. பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரருக்கும் இப்படிக்குத் தெரிந்திருக்குமே. அவருக்கு எவ்வளவாகிலும்  பொல்லாப்புச் செய்ய நம்முடைய மனசில் அந்த யோசனையில்லையென்று நாம் அவருக்குச் சொன்னதினாலே அவருக்குத் தெரிந்திருக்குமே. ஆனால் அவர் நெடுகிலும் நிரம்பவும் அயுக்தமாய் நடந்து கொண்டு வந்த நடத்தையும் அதினாலே அவர் பேரில் கும்பினியாருடைய விசனத்தையும் வருவித்துக் கொண்டாரென்றும்….

 

…அந்தத் தாக்கீது உமக்கு வந்து சேருகிறவரைக்கும் இப்படி  நீர் பேசிக்கொண்டிருக்கிறதாய் வெளிக்குவந்தால் அதினாலேவரும் மிகுந்த பொல்லாப்புமாக இருக்கும். இந்த நோக்கம் உமக்குத் தெரியாமலிராதே. இந்தப் பாளையக்காரராவது அவர்சனங்களாவது உம்முடைய  பாளையப்பட்டு எல்லைக்குள்ளாக வந்தால் அவரையும் அவர் வகை மனுஷாளையும் உடனே பிடித்துப் பத்திரப் படுத்திக் கொள்ள வேண்டியது உங்கள் பேரில் விளுந்தபாசமாயிருக்கிறது. ஆகையாலிதைக் கண்டிப்பாக உத்தரவாக எண்ணி கீழ்ப்பணிந்து நடந்து கொள்ளவும்.


1798ம் வருடம் சப்ட்டம்பர் மாதம் 27ம் நாள் இராமனாதபுரம் டப்பீள்யூ.யீ.ஜாக்ஸன் துரையென்று கையொப்பம் வைக்கப்பட்டிருக்கின்றது இந்தத் தஸ்தாவேசு ஆஜரிலிருந்து. "
(பக்கம் 45)

 

கலெக்டர் ஜாக்ஸனின் இந்தக் கடிதம் கட்டபொம்முவைப் பிடித்து விசாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டதாக அமைந்திருப்பதாக மேற்குறிப்பிட்ட கடிதத்தின் பகுதியை வாசிக்கும் போது தெரிகின்றது. அதோடு எட்டயபுர மஹாராஜாவின் உதவியை இதற்கு நாடியதைக காட்டும் சான்றாகவும் அமைந்திருக்கின்றது.
 
குறிப்பு: இங்கு சான்றுக்குப் பயன்படுத்தப்பட்ட வம்சமணிதீபிகை நூலின் பகுதிகள் எழுத்தில் மாற்றமில்லாமல் அப்படியே இங்கு வழங்கப்பட்டுள்ளன.
 
(தொடரும்)
 
 
அன்புடன்
சுபா

You may also like

Leave a Comment