27.Aug, 2010
21.எட்டயபுரம் அரண்மனைக்கு செல்வோம்.. வாருங்கள்!
பாரதி பிறந்த இல்லத்தைப் பார்த்து முடித்ததும் அங்கிருந்து புறப்பட்டு எட்டயபுர அரண்மனையைப் பார்ப்பது என முடிவாகியது.
காரிலே அரண்மனையை நோக்கி பயணம் செல்வோம் என்று திரு.கருணாகர பாண்டியன் கூறியவுடன் ஏதோ தூரத்தில் இருக்குமோ என நினைத்திருந்தேன். மூன்று நான்கு குறுக்கு வீதிகளைக் கடந்ததுமே அரண்மனையை வந்தடைந்து விட்டோம். அரண்மனை கட்டிடத்தின் முன்னால் வாகனத்தை நிறுத்தி இறங்கிக் கொண்ட பின்னர் எனது பதிவு செய்யும் வீடியோ, ஒலிப்பதிவு கருவிகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அரண்மனையை நோக்கி மூவரும் நடந்தோம். என்னுடன் திரு.கருணாகர பாண்டியன் மற்றும் மதுரையிலிருந்து வந்திருந்த அவர் நண்பரும் இருந்தார். வாசலில் எங்களுக்காக அரண்மனை மேலாளர் காத்துக் கொண்டிருந்தார். எட்டயபுர ராஜாவின் மூதத மகன் திரு.துரைபாண்டியன் எங்களுக்கு வேண்டிய தகவல்களை வழங்குமாறும் அரண்மனையைச் சுற்றிக் காட்டுமாறும் அவரிடம் சொல்லி அன்றைய தினம் நாங்கள் வரும் போது மேலாளர் இருப்பதை உறுதி செய்திருந்தார். ஆக அரண்மனை மேலாளரை சந்தித்த போது அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.
அரண்மனையின் வாயிற்பகுதியில் உள்ளே நுழையும் போது நம்மை வரவேற்பது சிறிய பூந்தோட்டம். அழகிய சிலைகள், நீறுற்று (தண்ணீர் இல்லை) என கலை நயத்தோடு உருவாக்கப்பட்ட தோட்டம். முன்னர் மிக அழகாக இருந்திருக்க வேண்டும். இப்போது பழைய செழிப்பு குறைந்து தென்பட்டது. இந்த வாசல் பகுதியில் தான் அந்தக்காலத்தில் கச்சேரிகளும் நடக்குமாம். கருணாகர பாண்டியன் தனது சிறு பிராயத்தில் இங்கு ஜமீன் குழந்தைகளுடன் தான் ஓடி விளையாண்ட நிகழ்ச்சிகளை ஞாபகப்படுத்திக் குறிப்பிட்டார். முன்னர், தீபாவளியின் போது எட்டயபுர மக்கள் இங்கு மாலையில் குவிந்து விடுவார்களாம். வானவேடிக்கைகள் இங்கு தான் நடக்குமாம்.
{play}http://www.tamilheritage.org/kidangku/etayapuram/entrance.mp3{/play}
அரண்மனை வாசலின் வலது பக்கம் இருப்பது பூந்தோட்டம். இடது பக்கம் ஒரு கோயில் இருக்கின்றது. அதற்கு பக்கத்தில் இருப்பது அரண்மனை தர்பார் மண்டம், ஜெஜ்ஜை மாளிகை என அழைக்கப்படுவது. இது கண்களைக் கவரும் அழகிய மோகூல் காலத்து கட்டிட அமைப்பு. கொஞ்சம் சீரமைத்து சுவற்றுக்கு வர்ணம் சேர்த்தால் இது கொள்ளை அழகாக இருக்கும். பார்ப்பவர் கண்களை கவரும் கட்டிடக் கலை.
தர்பார் (ஜெஜ்ஜை) மண்டபம்
இந்த அரண்மையைத் தவிர்த்து தோட்டத்து பங்களா என்ற மற்றொரு அரண்மனையும் எட்டயபுர ஜமீனுக்கு பக்கத்திலேயே இருக்கின்றது.
இங்கேதான் பெரிய மஹாராஜாவும் இருந்திருக்கின்றார். ஆனால் அங்கிருந்து மாறி திருநெல்வேலிக்கு தற்சமயம் குடிபெயர்ந்து விட்டார்களாம். திருநெல்வேலியில் பஸ் நிறுத்தத்திற்குப் பின் புறம் இருக்கும் அந்த அரண்மனை பங்களா சிறந்த மர வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு பங்களா எனவும் தெரிந்து கொண்டேன்.
{play}http://www.tamilheritage.org/kidangku/etayapuram/entrance2.mp3{/play}
அரண்மைக்கு நேர் எதிர் புறத்தில் இடது பக்கத்தில் தென்படும் சிறிய வீதியில் சென்றால் எட்டீஸ்வரன் கோயிலை அடைந்து விடலாம். நடக்கும் தூரம் தான். இதற்கு இடையில் ஒரு நினைவுச் சின்னம் வைக்கப்பட்டுள்ளது. அது வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட பின்னர் அச்செய்தியை ஒரு செம்புத்தகட்டில் பதித்து வைத்திருக்கின்றனர். அந்தத் தகடு தற்சமயம் சுவற்றில் பதிக்கபப்ட்டுள்ளது என்ற தகவலையும் அறிந்து கொண்டேன். இதனைப் பற்றி பின்னர் விளக்குகின்றேன்!
இந்த அறிமுகத்தோடு பூட்டியிருந்த அரண்மனைக் கதவை மேலாளர் திறக்க அரண்மணையின் உள்ளே நுழைந்தோம். உள்ளே நுழைந்ததும் முதலில் நம்மை வரவேற்பது வரிசை வரிசையாக சுவற்றில் மாட்டப்படிருக்கும் படங்கள் தான்.
எட்டயபுர ஜமீன் அரசிகளைப் பொது மக்கள் ‘கண்ணப்பன்’ என்று தான் சிறப்பு பெயரிட்டு அழைப்பார்களாம். ‘பெரிய கண்ணப்பன்’, ‘தோட்ட்டத்து கண்ணப்பன்’ என்பன சில உதாரணங்கள். இதற்கு ஏதேனும் காரணம் நிச்சயம் இருக்கும்.
ஸ்ரீமதி லக்ஷ்மி கண்ணப்பன்
இவர் 39-வது பட்டத்து ராணியார். ஸ்ரீ ராஜ ஜெக வீர ராமகுமார வெங்கடேஸ்வர எட்டப்ப நாயக்கர் அய்யன் அவர்கள் துணைவியார். பிறப்பு: 1896; இறப்பு 28.05.1990.
{play}http://www.tamilheritage.org/kidangku/etayapuram/entrance3.mp2{/play}
உள்ளே சுவற்றில் ஒரு விலையுயர்ந்த கண்ணாடி ஒன்று மாட்டப்படிருந்தது. அது ஜெர்மனியிலிருந்து வாங்கப்பட்ட கண்ணாடி என்று கூறி மகிழ்ந்தார் கருணாகர பாண்டியன். ஜெர்மனியில் கண்ணாடி மற்றும் கண்ணாடியில் செய்யப்படும் கைவினைப் பொருட்கள் பிரசித்தி பெற்றவை. லின்ஸ் (Linz) நகரம் இவ்வகை கண்ணாடி உற்பத்திக்கு பிரபலமான ஒன்று. அந்த காலத்திலேயே ஜெர்மன் கண்ணாடிக்கு மதிப்பு இந்திய அரசர்கள் பால் இருந்ததும் அதனை தருவித்து அரண்மனையை அழகு படுத்தியிருக்கின்றார்கள் என்பதும் ஒரு செய்தி தானே!
அன்புடன்
சுபா