Home Palm Leaf 20 – நாமக்கல்

20 – நாமக்கல்

by Dr.K.Subashini
0 comment

ஓலைச்சுவடிகள்   தேடிய படலம் – ௨௦0 (20)

 

அன்னை  சத்தியா நகர் சென்று பழனிசாமி, கந்தசாமி, மெய்யப்பன் என அங்கிருந்த முகவரிகளைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்ததுமே எங்களைச் சுற்றிப் பெரும் கூட்டம் கூடிவிட்டது. நாங்கள் கையில் ஒரு பட்டியல் அடங்கிய கோப்பு, கமரா, பாண்ட்டு,  கண்ணாடி முதலியவற்றுடன் போனதும் ஏதோ அரசு உதவிகள் தருவதற்காக அதிகாரிகள்  கணக் கெடுக்க வநது விட்டார்கள்;  நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வாராத மா மணிகள் வந்துவிட்டார்கள் என  எண்ணிப் பெண்கள் கூட்டம் எங்களைச் சூழ்ந்து விட்டது .


சூழ்ந்து விட்ட பெண்கள் கூட்டம்

நாங்கள் அவர்களிடம் பொறுமையாக நாங்கள் தேடிவந்திருப்பது ஓலைச் சுவடியைத்தான். ,அரசாங்க உதவிகள் தர அரசு அதிகாரிகள் பிறகு வருவார்கள்; அவர்களுக்கும்  எங்களுக்கும் தொடர்பில்லை என விளக்கினோம்.  ஏதாவது  கிடைக்கும் ஆவலுடன் வந்தவர்களுக்குச் சற்று ஏமாற்றமே.

பிறகு நாங்கள் அவர்களுடன் விரிவாகப் சுவடிகளைப் பேசத் தொடங் கினோம்.  அவர்கள் அங்கே 35 குடும்பங்கள் இருப்பதாகக் கூறினார்கள். அவர்கள் ஒவ்வொரு  குடும்பத்திலும் ஓலைச் சுவடிகள் இருப்பது உண்மையாம்.  இதைக் கேட்டதும் நாங்களோ  பரபரப்பின் உச்சத்திற்குப் போய்விட்டோம்  .
ஒரே பகுதியில் ஏன் 35 சுவடிகள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்றன ?
"சரி வாருங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அங்கிருக்கும் சுவடி களைக் காணலாம்"   என்று அவர்களை அழைத்தோம்.

 

 *தங்கலுக்குப் போகாத குடுகுடுப்பை வாரிசுகள் *

 

"வீட்டிற்குப் போகலாம் ஆனால் சுவடிகளைத்தான் காணமுடியாது " 

"ஏன் ஏன் ?  "

"ஐயா, எல்லாச் சுவடிகளும் ‘ தங்கலுக்கு’  போயிருக்கிறது ?"

”தங்கலா? எங்கே போய் தங்கப் போயிருக்கிறது? ஏன் தங்க வேண்டும்?  எப்போது திரும்பி வரும்? "
”இல்லை ஐயா 35 வீட்டு ஆண்களும் ஓலைச் சுவடிகளை எடுத்துக் கொண்டு ‘தங்கலுக்குப்’ போயிருக்கிறார்கள்.”

எங்களுக்கோ புதிரின் மேல் புதிராக ஏறிக் கொண்டே போனது.  "இப்போது ஏதாவது சில வீடுகளிலாவது ஓலைச் சுவடிகளைப் பார்க்க இயலாதா ?’

ஒருவாறு அவர்கள் எங்களுக்குப் புதிர்களின் விளக்கத்தை அளிக்க ஆரம்பித்தனர்;  அவர்கள் ஒரு கூட்டமாம். அவர்களின் குலத்தொழில் குடுகுடுப்பை மூலம் வருங்காலம் உரைத்தல். அவர்கள் தங்கள் பரம்பரை பற்றி மிகப் பெருமையாகக் கூறிக்கொண்டனர்.

அவர்களின் குலதெய்வம் கட்டுவாளம்பாளையம் முனியப்பன், மற்றும் ஜக்கமா என்றார்கள் . அவர்கள் அனைத்து குடும்பங்களும் ஆண்டுக்கு ஒரு முறை குல தெய்வம் குடி கொண்டிருக்கும் இடத்தில் கூடிப் பொங்கல் வைத்து நன்றி தெரிவிப்பார்களாம் .

ஆண்கள்தான் இந்த குடுகுடுப்பைத் தொழில் செய்வார்களாம்; பெண் களும் சிறுவர்களும் மட்டுமே வீட்டில் தங்கி இருப்பார்களாம். சிலர் சிறிய விவசாயமும், இதரக் கைத்தொழிலும் பார்க்கிறார்களாம்.

ஆண்கள் அவர்களிடம் பரம்பரையாக வந்து கொண்டிருக்கும் ஓலைச் சுவடிகளைக் கையில் வைத்துக்கொண்டு மக்களுக்கு நிமித்தம் கூறுவார்களாம்; அவர்களுக்கு என்று தனிப் பூஜை முறைகள் இருக்கிறதாம்.  இந்த 35 குடும்ப ஆண்களும் ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் தேதி அன்னை சத்தியா நகருக்கு எங்கிருந்தாலும்  திரும்பி வந்து விடுவார்களாம்; பிறகு ஒரு வாரம் குடும்பத்துடன் இருந்து விட்டு மீண்டும் தங்கலுக்குச் செல்வார்களாம். அவர்கள் பணம் ஈட்டச் செல்லும் பயணத்தைத்தான் ’தங்கல்’ என்று கூறுகிறார்கள்; அவர்கள் 35 பேரும் ஒன்றாகச் செல்ல மாட்டார்களாம்; அவர்களுக்கு  எனத் தனித் தனியே பகுதிகள் உண்டு.
 

நாடோடிகளாகத் திரிந்து கொண்டிருந்த இவர்கள் அனைவருக்கும் அரசு இப்போது நாமக்கல்லில்  இலவச வீட்டு மனைகள் வழங்கி, வீடு கட்டிக் கொடுத்திருக்கிறதாம் ..இவ்வாறு பல கூட்டங்கள் வேறு பல இடங்க ளில் இருக்கிறதாம்.  மீண்டும் வர வேண்டிய இடங்களில் இதையும் குறித்துக் கொண்டேன்.

"அவர்களிடம் இருக்கும் சுவடிகள் எந்த வகை சேர்ந்தவை ? அதில் ஜாதக முறைகள் இருக்குமா ?"  இது நாங்கள்.

"இல்லை இல்லை; அவை எங்கள் தனிப்பட்ட பூஜையின் மந்திரங்கள் அடங்கியவை"
"நாங்கள் அவற்றைப் பார்க்கலாமா "?"

"தமிழ் மாதம் ஒன்றாம் தேதிக்குச் சில நாட்களுக்குள் வந்தால் பார்க்கலாம்"

பின்பு அவர்களிடம் அவர்கள் வருமானம், கல்வி ஏன் கற்பதில்லை போன்ற சில விஷயங்கள் பேசி விடை பெற்றோம். அவர்களில் சிலர் தங்கள்  கைபேசி எண்களைத்   தந்தனர்.  இப்போதெல்லாம் யாரிடம் தான் கைபேசி இல்லை?  எல்லாக் குடுகுப்பைக்காரர்களிடமும் கைபேசி இருக்கிறதாம். இது அவர்கள் குடும்பத்தார் தந்த உபரித் தகவல்.

ஓலைச் சுவடி கிடைக்காவிட்டாலும் எங்கள் மண்டையைக் குழப்பிய வினாவிற்கு ஒருவழியாக விடை கிடைத்த திருப்தியுடன் மட்டும் அங்கி ருந்து நாமக்கல் திரும்பினோம்.
அடுத்தநாள் காலை வழக்கம் போல் நாமக்கல் விடுதியில் இருந்து கிளம்பும்போதே  அங்கே நரசிம்மர் சன்னிதியில் இருந்த சில முகவரி களைப் பார்த்து விட்டுப் பிறகு வெளியே செல்லலாம் எனத் தீர்மானித் தோம்; சன்னிதித் தெருவிற்குப் போனால் அப்படி வெளியில்  இருந்த படியே அருள் பாலிக்கும் ஆஞ்ஜநேயரையும் எளிதாக  தரிசித்துக் கொள்ளலாம் என்று ஒரு நினைப்பும கூடவே இருந்தது.

எங்களைப் போல் அவசரக்காரர்களுக்கும் ஏற்ற மாதிரிதான் வெளி யிலேயே பல கோயில்கள்  திறந்த வெளியில் உள்ளனவே. கோவி லுக்குள் செல்ல வேண்டிய வேலை மிச்சம் .அதுவும் இல்லையேல் போகும் வழியில் ஏதாவது ஒரு சாமி வீதிவலம் வரும். எத்தனை எத்தனை வாய்ப்புகள் தருகிறார்கள் பாருங்கள்!  வழியிலேயே காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு நரசிம்மர் சன்னிதித் தெருவுக்கு வந்து விட்டோம்.  அங்கே வேங்கட நரசிம்ம பட்டாசாரியார் என்று கேட்ட வுடன் ஒரு வீட்டைக் கை காட்டினார்கள் அது நரசிம்மர் சன்னிதித் தெருவின்  முதல் வீடு;  நரசிம்மர் சன்னிதிக்கு அருகில் அமைந்த வீடு . சிலர் அதே தெருவின் மறு கோடியில் எதிர் சாரியில் ஒரு வீட்டையும் காண்பித்தனர்.

 

அது ஆஞ்ஜநேய சன்னிதிக்கு அருகில் முதல் வீடு. 

நாங்கள் நரசிம்மர் சன்னிதிக்கு அருகில் இருந்த வீட்டிற்கு முதலில் சென்றோம்; அங்கு வேங்கட நரசிம்ம பட்டாசாரியார் என்பவர் இருந்தார். எங்களை அன்புடன் வரவேற்றார் ; அவரது தந்தையைப் பற்றி மிகவும் பெருமையாகப் பேசினார். டாக்டர் பாக்யாஜி எனும் பெயர்படைத்த மறைந்த அவரது தந்தை சிறந்த அறிஞர், மிகுந்த வேதாந்த ஞானம் படைத்தவர் என நினைவு கூர்ந்தார். நாமக்கல் கோயிலின் பெருமைகளை உலகெங்கும் பரப்ப அவர் பெரும் தொண்டு ஆற்றியதாகத்  தெரிவித்தார். ஆனால் அவரிடம் தற்போது எந்தவிதமான சுவடிகளும்  இல்லை என்றுக் கூறிவிட்டார் .

 

 

ஒரு காலத்தில் மிகுதியாக இருந்ததாகவும், ஆனால் காலப்போக்கில் பலரும் அவரது  தந்தையிடமே வாங்கிச் சென்று விட்டதாகவும் கூறினார். அவரது தந்தை எழுதிய நாமக்கல் திருத்தல மகிமை எனும் நூலை சிறிது காலத்திற்கு ஏற்றபடி திருத்தி அவரது தந்தை பெயர், தனது பெயரான வேங்கட நரசிம்ம பட்டாசாரியார் என்ற பெயரில் வெளியிட்டதாகக் கூறி எங்கள் அனைவருக்கும் தலைக்கு ஒரு பிரதி அளித்தார்.  சிறந்த புத்தகம்தான்; ஆராய வேண்டிய சில குறிப்புகளும் அதில் இருந்தன. வேறு சிலர் வேங்கட நரசிம்ம பட்டாசாரியார் வீடு என வேறு ஒரு வீட்டையும்  காட்டியதால் அவரிடம் அதைப்பற்றிக் கூறாமல் இந்தத் தெருவில் வேறு யாரிடமாவது சுவடிகள் இருக்குமா  எனப் பொதுவாகக் கேட்பது போல் கேட்டோம். அவர் வேறு யாரும் அத்தனை சிறப்பு டையவர்கள் இந்தத் தெருவில் இல்லை என்றார்.  எங்களிடம் அவர் பேசியது மிக அன்பாக இருந்ததுபோல் தோன்றினாலும், ஏதோ ஒரு போலித்தனம் அதில் ஊடுருவி இருப்பதாகவே தோன்றியது . எனினும் அவரைப் போலவே நாங்களும் அவரிடம் அன்புடன்  பேசி விடை பெற்றோம். 

 

சிலர் காட்டிய  வேங்கட நரசிம்ம பட்டாசாரியாரின் மற்றொரு வீட்டைத் தாண்டும் போது நாங்கள் முன்பு பார்த்தவர்தான்  இந்தத் தெருவில் வேறு யாரிடமும் சுவடிகள்  கிடைக்கா என்று கூறிவிட்டாரே என்ற எண்ணம் ஒரு கணம் வந்தது;  ஆனால் வழக்கமான உள்ளுணர்வு எங்களை அவ்வாறு செய்யாமல் ஏனோ தடுத்தது.  ஸ்ரீ ஆஞ்ஜநேயரிடம் போகாமல் அந்த வீட்டின் வாசலில் நின்றோம் .அங்கே பல ஆன்மிகப் பொருட்களை வைத்து வாசலிலேயே விற்றுக்கொண்டு இருந்தனர். அங்கே இருந்த அம்மையாரிடம் " அம்மா,   வேங்கட நரசிம்ம பட்டாசாரியார் இருக்கிறாரா?“ எனப் பணிவாகக் கேட்டோம். அம்மையாரும்  “ இருக்கிறார், இருங்கள் கூப்பிடுகிறேன்; எங்கிருந்து வருகிறீர்கள்? ” என வினவினார்.  நாங்களும் எங்களின் வழக்கமான சுயபுராணத்தை – பயண நோக்கத்தை விரிவாகக் கூறி முடித்தோம்; அதற்குள் அறையில் காவி உடுத்தி, மேலே ஒரு  காவித் துண்டைப் போர்த்திய வண்ணம் ஆன்மிகப் பழமாக வேங்கட நரசிம்ம பட்டாசாரி யார் வெளியே வந்தார். .

 

 

*ஓலைகளை வாரி வாரி வழங்கிய  வேங்கட நரசிம்ம பட்டாசாரியார்*
நாங்கள் அவரிடமும் மீண்டும் ஒரு முறை சுய புராணம் படித்தோம் .  அவரும் "  ஆமாம், என்னிடமும் நிறைய ஓலைச் சுவடிகள் வீட்டை அடைத்துக்கொண்டு நீண்ட நாட்களாகக் கிடக்கின்றன, அவற்றை எனன செய்யலாம் என நினைத்து வந்தேன் " என்றார்.  அவர் கூறியதைக் கேட்டதும் எங்களுக்கு பரம சந்தோஷம் உண்டானது . ஆனாலும்  இப்போதெல்லாம் காதில் தேவகானம் எல்லாம் கேட்பதில்லை;
அந்த ஆரம்ப திரில்லை இப்போது இழந்து  விட்டோம். ஆனால் மகிழ்ச்சிக்கு மட்டும் குறைவில்லை.
 
"அப்படியா சுவாமி ! அவற்றைப் பார்த்து வாங்கிப் போகத்தான் நாங்கள் வந்திருக்கிறோம் "என்றோம்

” சரி சரி, கொஞ்சம் இருங்கள்;  கொஞ்ச நாளைக்கு முன் பெய்த மழையில் பரணில் இருந்த ஒரு மூட்டை ஓலைச் சுவடிகள் கொஞ்சம் நனைந்து விட்டன. அவற்றைச் சில நாள்களுக்கு முன்தான் ஏதோ எடுக்கப் பரணில் ஏறிப்பார்க்கும் போது பார்த்தேன்;  உடனே அவற்றை மாடியில் வெயிலில் நன்றாகக் காயவைத்தேன்” என்று சிறு பிள்ளை தனது செயலுக்கு பாராட்டு கிடைக்கும் என நம்பிச் சொல்வதுபோல் தான் செய்ததை அநாயாசமாகக் கூறினார்.  எங்களுக்கோ ஒரு கணம் இதயம் துடிப்பதை  நிறுத்திவிட்டது போல் ஆகிவிட்டது.

“ ஹா! என்ன ?   வெயிலில் நன்றாகக் காய வைத்தீர்களா? “ என்று அலறும் குரலில்  ஒன்றுபோல் எங்கள் திகைப்பை வெளிப்படுத்தினோம். .

முனைவர் கோவை மணியும் தனது திகைப்பை வெளிப்படுத்தினார்.

”மழையில் நனைந்து விட்ட ஓலைச் சுவடிகளை வேறு என்னதான் செய்வது ? ” என்று இன்னமும் கேட்ட வேங்கட நரசிம்ம பட்டாசாரியார் ” இருங்கள், எடுத்து வருகிறேன் ” என்று கூறி உள்ளே சென்றார்.

உள்ளே இருந்து ஒரு பெரிய அளவு  பிரத்தியேகப் பையில்  முழுவதும் நிரம்பிய ஓலைச் சுவடிகளை தூக்க முடியாமல் தூக்கி வந்தார்;

ஓலைச் சுவடிகளைக் கையில் எடுத்துப்பார்த்தோம்; ஓரளவு கருத்துப் போனதே தவிர உடையவோ அல்லது எழுத்துக்கள் மறையவோ இல்லை .

" சுவாமி, இவற்றை நாங்கள் எடுத்துப் போய்ப் பாதுகாக்கலாமா? " நாங்கள் வினவினோம்.
“பின்னே?  வேறு எதற்குத் தூக்க முடியாமல் தூக்கி வந்தேன்?

இவ்வளவும் உங்களுக்குத்தான்; இனி இவற்றைப் பாதுகாப்பது உங்கள் கடமை ”  என்றார்  வேங்கட நரசிம்ம பட்டாசாரியார். அவரது பேச்சே ஒருவித  குதர்க்கமான தொனியில் இருக்கும். அவரது அத்தகைய கூர்மையான பேச்சுகளை மிகவும் ரசித்தோம். பின்னே ரசிக்காமல் என்ன செய்ய முடியும்? அவர் அடுத்துக் கூறியது எங்களை இன்னும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது.   “ இன்னும் நிறைய நிறைய இருக்கிறது; நீங்கள் இங்கு இருக்கும் நாள் எல்லாம் தினமும் எனக்கு போன் செய்யுங்கள். நான் என்று வருவது என்று கூறுகிறேன். அதற்குள் இருப்பதையும் மூட்டை கட்டி வைத்து விடுகிறேன்” என சர்வ சாதார ணமாகக் கூறினார்.  ஒருவேளை இதன் மதிப்புத் தெரியாதவரா என்றால் அவர் ஒன்றும் அப்படி இல்லை. தாம் தந்த ஓலைகளை எப்படிப் பிரிப்பது என எங்களுக்கு வகுப்பெடுக்க ஆரம்பித்தார் ; பெரிய மனிதர்களை அவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்ள முடியுமா?  அவரிடம் நன்றி கூறி ஓலைச் சுவடிகள் அடங்கிய பையைப் பெற்றுக்கொண்டு அவரிடம்  இருந்து விடைபெற்றோம்.

 

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

 

You may also like

Leave a Comment