ஓலைச் சுவடி தேடல் பணிகள் 2

களப்பணி  — ஓலைச்சுவடிகளைத்   தேடிய  படலம்  !  — ௨    (  2 )

 

களப்பணி   அறிக்கை

 

சுவடிகளைத் தேடி அவற்றை அச்சில் பதிப்பிக்கும் துறையின் முன்னோடிகளாகத் திகழ்ந்தோர் –
 அ. தாண்டவராய முதலியார்,
சிவக்கொழுந்து தேசிகர்,
திருத்தணிகை விசாகப் பெருமாளையர்,
களத்தூர் வேதகிரி முதலியார்,
புஷ்பரதஞ் செட்டியார்,
ஆறுமுக நாவலர்,
சி.வை. தாமோதரம் பிள்ளை,
மழவை மகாலிங்கையர்,
உ.வே. சாமிநாதையர்,
ச. வையாபுரிப்பிள்ளை

 

இவர்கள் அத்துணை பேர்களின் அரிய தமிழ்த் தொண்டும், சீரிய பதிப்பு  முயற்சிகளும் தமிழுக்குப் பல தொல் இலக்கியங்களை மீட்டுத் தந்தன. இவர்கள் அனைவருக்கும் எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
ஆனால்   எங்களது குழுவின் செயல்பாடோ  முற்றிலும் வேறு விதமானது; மேற்கூறிய தமிழ்ச் சான்றோர்களின் செயல்களுடன் எந்த வகையிலும்  ஒப்பு நோக்க  முடியாதது. அவர்கள் அளவு எங்களிடம் தமிழ்ப் புலமை கிடையாது; நிச்சயமாக என்னிடம் இல்லை. தேடுவதும் மின்னாக்கம் செய்வதுமே எங்கள் பணி . பதிப்பித்தல், ஆய்வு இவற்றுக்காக எங்களுடன் தஞ்சைப் பல்கலை உள்ளது . எங்கள்    பணி  NMM  திட்டத்தில் எடுக்கப்பட்ட பட்டியலை வைத்துக்கொண்டு அந்த  முகவரிகளையும், அந்த முகவரிகளில் இருக்கும் பெயர்களை அணுகி அவர்களிடம் ஓலைச்சுவடிகள் உள்ளனவா  என்பதை அவர்கள் வாய் மொழியாகவே அறிந்து , பின் அவர்களைக்  காட்டச் சொல்லி அவற்றைக் கண்ணால் கண்ட பிறகு அவற்றைத் தஞ்சைப் பல் கலைக்குக் கொடையாகத் தந்தால் அவற்றை நீண்ட காலம் அழிவின்றிப் பாதுகாக்க இயலும் என்பதை நன்கு விளக்கி, அவர்களுக்குப் புரிய வைத்து அவர்கள் தாமாகவே அவர்களிடம் இருக்கும் சுவடிகளைக் கொடையாக வழங்கச் செய்வது ஆகும் .

ஆனால் சொல்வது போல் இந்தப் பணி அவ்வளவு சுலபமன்று;
ஏனெனில் நாங்கள் கொண்டு போவதோ நான்கு ஆண்டுகளுக்கு முன் எடுத்த பட்டியலை; முதலில் ஊரையும், அங்கே இருக்கும் தெருவை யும் சரியாகக் கண்டு பிடிக்கவேண்டும். பல இடங்களில் தெருப் பெயர் மாறி இருக்கும் .பிறகு புதிய எண்ணா பழைய எண்ணா என்ற குழப்பம்.

திரு.கோவை மணி – ஓலைகளைச் சோதிக்கின்றார்

 

நகரத்தில் இருப்பவருக்கு  அடுத்த வீட்டில் இருப்பவரையே தெரியாது;  மேலும் அவர் முகவரி மாறி  இருப்பார் .பெரும்பாலும் அந்தப்பெயர் உள்ளவர் இறந்து  போயிருப்பார் .  அவரது சரியான வாரிசு யார் எனக் காணவேண்டும்.  சில சமயம் அவர் ஆசானாக இருப்பார், அவரது சீடர் யார் என்று கண்டு படிக்கவேண்டும் ;.மிகுந்த சமயோசித புத்தி இருக்க வேண்டும். நம்பிக்கை தரும் பேச்சும் நடவடிக்கையும் வேண்டும் .

இத்தனையும் விரிவாகவும், அதே சமயம் சந்தேகம் வராத அளவு மென்மையாகவும்  செய்யவேண்டும் .
சிரமப்பட்டு இத்தனையும் மீறி சரியான நபரைக் கண்டுவிட்டால் பெரும்பாலானோர்  எடுத்தவுடன் எதற்கு வம்பு என்று முதலிலேயே ’சுவடியா, அப்படி என்றால் என்ன?’ என அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு கூறுவார்கள். சலிப்படையக் கூடாது .

கிராமம் என்றால் முகவரி தேடுவது சற்று சுலபம்;  ஆனால் அந்த கிராமத்தைத் தேடுவதுதான் கடினம் .ஆனால் நிஜமாகவே அப்பாவிகள் உண்டு .’ ஓலை தானே ! இருக்கிறது’  என்று சில மைல் தூரம் அழைத்துச் சென்று தங்கள் ஓலைக் குடிசையைக் காட்டியவர்களும் உண்டு .  நாங்களும் ஒன்றும் சாமான்யர்கள் அல்லர்.யாராவது தப்பித்தவறிக்   கொஞ்சம் ஓலைச் சுவடி  எங்களுக்குக் கொடுத்து விட்டால், பழகிய யானையை வைத்து வேறு புதிய யானையைப் பிடிப்பது போல்  அவரையும் நட்பாக்கி எங்கள் குழுவில் இணைத்துக் கொள்வோம். இரண்டு மூன்று நாட்கள் அவர் எங்களுடன் வநது ஊர்களுக்குச் செல்லும் சரியான வழி காட்டவேண்டி இருக்கும்.

 

திரு.செல்வமுரளி ஓலைகளை தொகுக்கின்றார்

பட்டியலில் இல்லாத  புதிய இடங்களில் இருந்தும் ஓலைகளைப் பெற்ற சம்பவங்களும் உண்டு. அடுத்து வரும் இழைகளில் இனி வர இருப்பவை அனுபவங்கள்தான்.  மொத்தம் இரண்டு மூன்று மாதங்கள் நேரடிக் களத்தில் இருந்த காலம் சுமார்  40 நாட்கள். அப்போது குறுக்கும் நெடுக்குமாக நாங்கள் சுவடிதேடி  அலைந்த தூரம் சுமார்  7500  km   இருக்கும் .

 

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

 

குறிப்பு: தமிழ் மரபு அறக்கட்டளையின் கண்ணனும் சுபாவும் சில ஆண்டுகளுக்கு முன் ஓலை சுவடிகளை பற்றி எழுத்திய சில மடல்கள் .மற்றும் செய்திகள் இதோ .

” 
ஜெர்மனியில் தமிழ் ஓலைச் சுவடிகள் பல்வேறு நூலகங்களில் சிதறிக் கிடக்கின்றன. பெர்லின் தலைமை நூலகத்தில் நிரம்ப வைணவ நூல்கள் உள்ளன. பிள்ளை லோகாச்சாரியர், மணவாள மாமுனி, நாலாயிரம், பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம் இப்படி….பரமார்த்தகுருகதை மற்றும் பஞ்ச தந்திரக் கதைகள் கொண்ட நூல் ஒன்று உள்ளது (வீரமாமுனிவர்). பெரும்பாலும் மணிப்பிரவாள அல்லது கிரந்தம். பேரா. இலாஸ் அவர்களுக்கு கிரந்தம் நன்கு தெரிகிறது.


இவைகளை பதிப்பிப்பதில் சிரமமில்லை. ஆனால் இவையெல்லாம் தமிழகத்திலும் உள்ளன. இன்னும் அரிய நூலாக எதையும் காணவில்லை. எலலா நூலகர்களும் ஒத்துழைப்பு தருவதில்லை. பலர் சிடுமூஞ்சிகளாக உள்ளனர். Dog in the manger என்று சொல்வது போல் ஒன்றுக்கும் உதவாமல் உள்ளனர். நாங்கள் தொடர்ந்து முயல்வோம்.

 

பெர்லின் நூலகத்தில் எம் மூதாதையர் கைப்பட எழுதிய வியாக்கியானங்களை அவர்கள் மிக பத்திரமாகத் தர (இந்த இடத்திற்குள் போவதற்கான பந்தோபஸ்தை நீங்கள் பார்க்கவேண்டும்! அப்பா!!) அதை கையில் வாங்கியபோது மெய் சிலிர்த்தது. இந்தியாவின் பாதுகாக்கப் பட்ட நிலையிலுள்ள முதல் ஓலைச் சுவடியொன்று கோபிப் பாலைவனப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப் பட்டு ஜெர்மன் நூலகத்திலுள்ளது. பிராமி எழுதிற்கும் முன்னோடியாக உள்ளது அது. மை வைத்து எழுதியது. பெளத்த நாடகப் பிரதி அது. தேவநாகரி, மற்றும் கிரந்தம், தமிழ் ஓலைச் சுவடிகள் உள்ளன.


ஜெர்மனியிலுள்ள மொத்த தமிழ் ஓலைச் சுவடிகளின் பட்டியல் இன்னும் தயாராகவில்லை. மிக, மிக மெதுவாகத் தயாரிக்கிறார்கள். காரணம் இவைகளை வாசிக்கத் தெரிந்த ஆட்கள் மிகக் குறைவு என்பதால்.வளையாபதி போன்ற நூல்கள் கிடைத்தால் தமிழுக்கு லாபம்.

கண்ணன் 

 

 

சுபா
Re: தினமணி கதிர் – செய்தி  
*விழிப்புணர்வு: புறப்படட்டும் "மரபு அணில்கள்’!*

மருத்துவம், அறிவியல், கணிதம், கட்டடக் கலை, இசை, நடனம், ஓவியம் போன்ற  எந்த விஷயமாக இருந்தாலும் அதில்  பல தலைமுறைகளுக்கும் முன்பாகவே கரை கண்டிருந்தவர்கள் தமிழர்கள். அவர்கள்
வாழ்ந்த காலத்தில் பல துறைகளிலும் அவர்கள் பயன்படுத்திய நுட்பங்களை அன்றைய காலத்திற்கேற்ற எழுத்து வடிவமான பனை ஓலைச் சுவடிகளில்தான் குறித்து வைத்திருப்பர். இந்த ஓலைச் சுவடிகளில்
இருக்கும் விஷயங்களைப் படித்து உணர்ந்து கொள்வதே ஒரு தனிக் கலை. இந்த ஓலைச் சுவடிகளின் அருமை தெரியாமல் அதை அடுப்பெரிக்கவும், பூச்சி,  புழுக்கள் அரிக்க பரணில் அசிரத்தையாகப் போட்டு வைத்திருப்பவர்களும் அதிகம்.

 

தன்னார்வத் தொண்டு நிறுவனமான தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பின் தலைவர் டாக்டர் கண்ணன் இருப்பது  கொரியாவில். துணைத் தலைவர் சுபாஷிணியும் இருப்பது ஜெர்மனியிலும். மூலைக்கு ஒருவராக இருந்தாலும் இணையத்தின் வழியாக இவர்களை இணைத்திருப்பது- தமிழ்!


தமிழின் புராதனமான ஓலைச்சுவடிகளையும், அரிய புத்தகங்களையும் மின் பதிப்பாக மாற்றி வருகிறது தமிழ் மரபு அறக்கட்டளை. இந்த அமைப்பின் செயல் குழுக்களை அமைப்பதற்கும், தன்னார்வலர்களைச் சேகரிப்பதற்கும் ஜெர்மனியிலிருந்து சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தார் தமிழ் மரபு  அறக்கட்டளையின் துணைத் தலைவர் சுபாஷிணி. அறக்கட்டளையின் செயல்பாடுகளைக் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…


"" ஜெர்மனியிலிருக்கும் "ஹெலட் பேகர்ட்’ கம்ப்யூட்டர் நிறுவனத்தில் கணிப்பொறியாளராகப் பணிபுரிகிறேன். புலம் பெயர்ந்த தமிழரான எனக்கு மலேசியாதான் பூர்வீகம். இன்னமும் அச்சில் கொண்டுவரப்படாத ஓலைச்சுவடிகளின் எண்ணிக்கை எத்தனையோ ஆயிரங்களைத் தொடும் என்ற நிதர்சனமான உண்மைதான்,
எங்களை மலேசிய இந்திய காங்கிரஸின் விதைப் பணத்துடன் இந்த தமிழ் மரபு அறக்கட்டளையை மலேசியாவில் கடந்த 2001-ம் வருடம் தொடங்கவைத்தது. இங்கிலாந்தில் முறையாக இந்த அறக்கட்டளையைப் பதிவு செய்திருக்கிறோம்.


தமிழர்களிடம் எல்லாத் திறமைகளும் இருந்தாலும், அவர்கள் எந்தக் காலத்தில் தங்களின் படைப்புகளை
எழுதியிருக்கிறார்கள் என்ற தகவலை அவர்களின் படைப்புகளிலிருந்தோ, இதர குறிப்புகளிலிருந்தோதான் நம்மால் தெரிந்துகொள்ள முடியும். வரலாற்று ரீதியான விழிப்புணர்வு தமிழர்களிடம் குறைவு. வெளிநாட்டு அறிஞர்களின் காலத்தை நம்மால் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிவதுபோல், நம்முடைய பாரம்பரியத்தில் இருப்பவர்களை நம்மால் அடையாளம் காண்பது கடினம். ஓலைச் சுவடிகளை மிகச் சரியாகப் பராமரித்தால் கூட ஐந்து நூற்றாண்டுகள் வரைதான் அதற்கு ஆயுள்காலம் என்பதுதான் அதை மின்பதிப்பாக்கம் செய்வதற்கான அவசர, அவசியத்தை எங்களுக்கு உணர்த்தியது.


நாங்கள் அறக்கட்டளையைத் தொடங்கியவுடன், ஓலைச் சுவடிகள் இருக்கும் இடங்களைக் கண்டறிவது, அதில் இருக்கும் கருத்தை அறிஞர்களைக் கொண்டு எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாக்குவது, அவற்றை மின் பதிப்பாக்குவது, தகவல் வங்கியை உருவாக்குவது… என்று எங்களின் பணிகளை ஒழுங்கு படுத்திக் கொண்டோம். பணிகளை மளமளவென்று தொடங்கினோம். தமிழ் கூறும் நல்லுலகத்திலிருந்து அறிஞர் பெருமக்கள் பலரின் உதவிக் கரம் நீண்டது.

 மேலும் காண 1

பகுதி 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *