Home Interviewinterview பேட்டி 2

பேட்டி 2

by Dr.K.Subashini
0 comment

 

மின் நூல்கள்: முனைவர்.க.சுபாஷிணி உடன் இ-நேர்காணல்
பகுதி 2

June 02,2009 

தமிழ் மரபு அறக்கட்டளை (http://www.tamilheritage.org) என்ற அமைப்பு, இந்தியாவிலும் இங்கிலாந்திலும் பதிவு பெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம். ஆனால், இதன் நிறுவனர்கள் மூவர். மூவரும் கொரியா (முனைவர் நா.கண்ணன்), ஜெர்மனி (முனைவர்.க.சுபாஷிணி), சுவிட்சர்லாந்து (முனைவர்.கு.கல்யாணசுந்தரம்) என வெவ்வேறு நாடுகளில் இருக்கின்றனர். இந்த அமைப்பானது, ஓலைச் சுவடிகள், பழமை வாய்ந்த நூல்கள் ஆகியவற்றை மின்னூல்களாக வெளியிடுகிறது; மரபுச் செழுமையை உணர்த்தும் இயல், இசை ஆகியவற்றின் ஒலி – ஒளிப் பதிவுகளை இணையத்தில் சேமிக்கிறது; மின் தமிழ் என்ற இணையக் குழுமத்தில் தமிழ் மின்பதிப்புகள் தொடர்பான விவாதங்களை வளர்க்கிறது. இந்த அமைப்பின் நிறுவனர்களுள் ஒருவரான முனைவர்.க.சுபாஷிணி, ஜெர்மனியில் வசிக்கிறார். Hewlett Packard நிறுவனத்தில் ஐடி கன்சல்டனாகப் பணிபுரியும் அவருடன் சென்னை ஆன்லைன் தமிழ்த் தளத்தின் ஆசிரியர் அண்ணாகண்ணன், மின் அரட்டை வழியே உரையாடினார். இந்த அமைப்பின் மின்னூலாக்க பணிகள் குறித்து இந்த உரையாடல் அமைந்தது. அந்த இ-நேர்காணல் வருமாறு:

 

அண்ணா: தமிழில் மின்னூல் உருவாக்கும் முயற்சியைத் தொடங்கியதன் நோக்கம் என்ன?

 

சுபா: பல அரிய தமிழ் நூல்கள் ஒரு முறை சுவடி நூல்களிலிருந்து அச்சுப் பதிப்பாகப் பதிப்பிக்கப்பட்ட பின்னர் மறுபதிப்பிற்கு வருவதில்லை. இப்படி பல நூல்கள் நாள் செல்லச் செல்ல மறக்கப்பட்ட ஒன்றாகிப் போவதோடு அழிந்தும் விடுகின்றன. இவை மின்னாக்கம் செய்யப்படும் போது பாதுகாக்கப்படுவதோடு பயன்பாட்டிற்கும் கிடைக்கின்றது.

 

இன்றைய நிலையில் தமிழ் மொழி அறிந்தோர் தமிழகத்திலும் இலங்கையிலும் மட்டுமே இருந்த நிலை மாறி, தற்போது உலகின் பல மூலைகளில் வாழ்கின்ற நிலை உள்ளது. இதனைக் கவனிக்கும் போது தமிழ் மக்களின் இரண்டாம், மூன்றாம் தலைமுறையினருக்கும் தமிழ் நூல்களை கிடைக்கச் செய்வது முக்கியமான ஒரு விஷயம். அதிலும் குறிப்பாக நூல்களை இணையத்தின் வழி வழங்குவது மிக முக்கியமான ஒரு செயல்.

 

அது மட்டுமல்லாமல் இணையம் நூல்களை நிரந்தரப்படுத்தும் வழிகளை நமக்குத்தந்திருக்கின்றது. இதனை நாம் பயன்படுத்திக் கொள்வது அவசியம் இல்லையா?

 

அண்ணா: நூல்களை இணையத்தில் நிரந்தரப்படுத்தல் என்பது மாயையோ என்ற ஐயம் ஏற்படுகிறது? நிரந்தரப்படுத்தும் நோக்கத்துடன் வந்த எவ்வளவோ இணைய தளங்கள் தடயமில்லாமல் அழிந்துள்ளதை அண்மைக் காலத்தில் நாம் பார்த்துள்ளோம்?

சுபா: எனக்கு அப்படித் தோன்றவில்லை. ஒரு நூலை நாம் microfilm தொழில்நுட்பம் வழியும், இணையத்தில் கிடைக்கினற பல்வேறு வகைகளிலும் நிச்சயமாக நிரந்தரப்படுத்தலாம். தொழில்நுட்பம் மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அதில் சந்தேகமில்லை. தொழில்நுட்பம் மாறும் போது அதற்கேற்றாற் போல இந்த இணையப் பதிப்புகளையும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது ஒரு சங்கிலித் தொடர் போன்ற முயற்சி. ஆனால் எந்த வகையிலுமே எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்துவிட்டால் பல சிறந்த நூல்களை நாம் இழக்க நேரிடும். ஏற்கெனவே பல ஓலைச் சுவடி நூல்கள் மற்றும் பல பழம் நூல்களை நாம் இப்படி இழந்திருக்கின்றோம். உதாரணமாக பெரிய எழுத்து நூல்கள் என்ற 1930களில் வெளிவந்த சில பழம் நூல்களை த.ம. அறக்கட்டளை மின்பதிப்பு செய்தோம். இவ்வகை நூல்கள் இப்போது மறுபதிப்பு காண்கின்றனவா என்றால் கேள்வியே.

 

அண்ணா: ஹேக்கர், வைரஸ் போன்ற சிக்கல்களாலும் பல இணைய தளங்கள் அழிந்துள்ளனவே?

சுபா: ஆமாம்.  எல்லா இணைய பக்கங்களுக்கும் இவ்வகை பிரச்சனைகள் எழுவது இப்போது சர்வ சாதாரண விஷயமாகி விட்டது. இதனைத் தடுக்க முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகின்றது. த.ம.அறக்கட்டளை நமது வலைப்பக்க்த்திற்கு இப்போது சிறந்த பாதுகாப்பு மென்பொருளை இணைத்துள்ளோம். Authentication, login / password போன்ற விஷயங்களில் மிகுந்த கவனத்தைச் செலுத்துகின்றோம். அதோடு ஒவ்வொரு மாதமும் சர்வரின் முழு backup எடுத்து வைத்துக் கொள்கின்றோம். இப்படி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளால் தான் நாம் சர்வரை இவ்வகை பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க முடியும்.

அண்ணா: இத்தகைய இடர்ப்பாடுகள் இருக்கையில் நிரந்தரப்படுத்தல் என்பது மாயை தானே?

 

சுபா: திருடன் இருக்கின்றான் என்பதற்காக யாரும் விலையுயர்ந்த பொருளை வாங்குவதில்லையா? அது போலத்தான். இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலில், நமக்கு (அதாவது தமிழ்ச் சமுதாயத்திற்கு) உள்ள பிரச்சனை என்பது பதிப்பிக்கப்படாமல் நூல்கள் மற்றும் பதிப்பிக்கப்பட்டு, ஆனால் மறுபதிப்பு காணாது அழிந்து வரும் நூல்களைப் பாதுகாப்பது என்பது. இதை நாம் ஏதாவது ஒரு தொழில்நுட்பத்தை வைத்து செய்து தான் ஆக வேண்டும்.

இரண்டாவது, இணயத்தில் நூல்களை மின்பதிப்பாக்கும் போது அதனை எப்படி பாதுகாப்பது என்பது.

 

அண்ணா: எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற சூழல் இருக்கிறதே?

சுபா: கணினி தொழில்நுட்பம் அறிந்தோர் பாதுகாப்பு முறைகளையும் அறிந்தே இருக்கின்றனர். தற்போதெல்லாம் சிறந்த firewall, security மென்பொருட்கள் கிடைக்கின்றன. வலைபக்கத்தை நிர்வகிப்பவர்கள் இவ்வகை தொழிநுட்பத்தைக் கவனித்து அதற்கேற்றாற்போல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது கணினி உலகில் ஒரு முக்கிய விஷயம்.

 

இணையத்தில் நிரந்தரப்படுத்தினாலும் ஏதாவது ஒரு வகையில் அழிந்து விடுமே என நினைத்து எதையுமே செய்யாமல் இருந்தால் நமது வரலாற்றை பிரதிபலிக்கும் பல நூல்கள நாம் இழக்க நேரிடும். கணினி webmasterகள் எப்போதும் backup வைத்திருக்கும் சூழ்நிலையில் வலைப்பக்கம் பாதிக்கப்பட்டாலும் கூட மீண்டும் அதனை விரைவாகச் சரி படுத்திவிட முடியும். எங்களின் சில மின்பதிப்பாக்க முயற்சியின் போது சிதைந்த பல நூல்கள், அதாவது அச்சு வடிவத்தில் உள்ள நூல்களைக் காணும் அனுபவமும் கிடைத்தது. இதனைக் காணும் போது எவ்வளவு சீக்கிரம் பழம் நூல்களை நாம் மின்பதிப்பு செய்து இனையத்தில் பாதுகாக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நாம் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் தான் மேலும் மேலும் வலுப்பெறுகின்றது.

 

அண்ணா: மதுரைத் திட்டம், சென்னை நூலகம், நூலகம்.நெட், தமிழம்.நெட், தேவாரம்.ஆர்க் ஆகியவற்றிலிருந்து உங்கள் முயற்சி எந்த வகையில் வேறுபட்டது?

 

சுபா: தமிழ் மரபு அறக்கட்டளையில் முக்கியமாகக் கருதப்படுவது ஒரு நூலினை அல்லது ஓலைச் சுவடியை அப்படியே முழுமையாக மின்பதிப்பாக்கம் செய்வது. தட்டச்சு செய்தோ அல்லது பிற மாற்றங்கள் செய்தோ பதிப்பிக்கப்படுவது, த.ம. அறக்கட்டளையைப் பொறுத்தவரை அடுத்த நிலையிலேயே உள்ளது. புத்தகங்களின் ஒவ்வொரு பக்கங்களும் எந்த மாற்றமுமின்றி அப்படியே ஸ்கேன் செய்யப்பட்டு முழுமையாக html  கோப்புகளாகவோ அல்லது pdf கோப்புகளாகவோ நமது வலைப்பக்கத்தில் பதிப்பிக்கப்படுகின்றன. நீங்கள் குறிப்பிட்ட ஏனைய இணைய முயற்சிகளும் தமிழ் நூல்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டவையே. நமது எண்ணிலடங்காத் தமிழ் நூல்களை, தமிழர்களின் சிந்தனைக் கருவூலங்களைப் பலரும் சேர்ந்து முயன்றுதான் மினபதிப்பாக்கங்களாகக் கொண்டுவர முடியும். அதற்கு இந்த ஒரு சில முயற்சிகள் மட்டும் போதாது. மாபெரும் எழுச்சி ஏற்பட வேண்டும். குறிப்பாகப் பலகலைக்கழகங்கள், நூலகங்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் திட்டங்களை வகுத்து அதனைச் செயலாற்ற முடியும். கல்லூரி மாணவர்களையும் கூட இவ்வகைப் பணிகளில், ஆய்வுகளில் ஈடுபடுத்த முடியும். இதற்கு ஆர்வம் தான் தேவை. அந்த விழிப்புணர்ச்சியைத்தான் தமிழ் மரபு அறக்கட்டளை தனது மின் செய்தி அரங்கமான மின்தமிழ், இ-சுவடி, போன்றவற்றிலும் அவ்வப்போது நிகழ்த்தி வரும் கலந்துரையாடல்கள் வழியும் மற்றும் வெவ்வேறு சமயங்களில் நிகழ்ந்த  தமிழகத்துக்கான பயணங்களின் போதும் செய்து வரும் களப்பணி, கருத்தரங்கங்கள், சந்திப்புக் கூட்டங்கள் வழி ஏற்படுத்தி வருகின்றது.

 

அண்ணா: மின்னூல் உருவாக்கத்தில் ஒரே வேலையைத் திரும்பச் செய்யும் வாய்ப்புகள் உண்டா? நீங்கள் உருவாக்கிய அதே மின்னூலை வேறு யாரும் மீண்டும் ஆக்கியுள்ளனரா? அல்லது, வேறு யாரும் புரிந்த பணியை நீங்கள் மீண்டும் ஆக்கியுள்ளீர்களா? இவற்றைத் தவிர்க்க, மின்னூல் உருவாக்குவோரை ஒருங்கிணைக்க, ஒரு பொது அமைப்பு இருந்தால் நல்லது இல்லையா? அதற்கு ஏதும் முயற்சிகள் எடுத்துள்ளீர்களா?

 

சுபா: இந்தப் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் எனக்குத் தெரிந்து ஒரே நூல் ஒரு முறைக்கு மேற்பட்டு மின்பதிப்பு செய்யப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாகத் தமிழ் மரபு அறக்கட்டளையில் ஓலைச் சுவடி மின்பதிப்பாக்கத்திற்கும் மிகப் பழைமையான நூல்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. பழம் நூல்களை மின்பதிப்பாக்கம் செய்யும் முயற்சிகள் மிகக் குறைவு. நீங்கள் குறிப்பிடும்படி ஒரு பொது அமைப்பு இருப்பது உதவும்.ஆனால் யார் அந்த பொது அமைப்பை நிர்வாகிப்பது என்பதே பெரும் பிரச்சனையாகி விடக்கூடிய வாய்ப்பும் உள்ளது. ஆனாலும் இவ்வகை முயற்சி நிச்சயம் மேற்கொள்ளப்பட வேண்டும்.. இணையத்தில் நூல் பதிப்பிக்கபப்ட்டிருந்தால் அதனைத் தமிழில் ஒருங்குறியிலோ அல்லது ஆங்கிலத்திலோ தட்டச்சு செய்து தேடு இயந்திரத்தின் வழியும் தேடிப் பார்க்க முடியும். அப்படி தேடும் போது மின்பதிப்பாக்கம் செய்ய விரும்பும் ஒரு நூல் ஏற்கெனவே செய்யப்பட்டிருந்தால் அதனைத் தெரிந்துகொள்ள முடியும். ஆக, இணையத்தில் மின்பதிப்பாக்கப்பட்ட மின்நூல்களின் database ஒன்று இருக்க வேண்டியது மிக மிக அவசியம். இதில் சந்தேகமில்லை.

 

அண்ணா: சம கால நூல்களையும் மின்னூல்களாக்க வேண்டிய தேவை இருக்கிறதே. இதற்கு உங்கள் திட்டத்தில் இடமுண்டா?

 

சுபா: இது முக்கியமான ஒன்றும் கூட. ஆனால் இதில் பெரும்பாலும் காப்பிரைட் பிரச்சனை எழுவதற்கான வாய்ப்பு பெரிதாக இருப்பதால் நூலின் உரிமையாளர்களின் ஒப்புதல் கிடைக்கும் போது அதனை மின்பதிப்பு செய்து விட முடியும். இப்படித்தான் பெருங்கவிக்கோ அவர்களின் ஒரு நூல், சுத்தானந்த பாரதியாரின் ஒரு நூல என சில சமகால நூல்களை வெளியிட்டிருக்கின்றோம்.

 

அண்ணா: மின்னூல்களைப் படக் கோப்புகளாகச் சேமிப்பது சிறந்த வழியாகத் தெரியவில்லையே? இவற்றில் தேடும் வசதி இல்லை?

சுபா: மின்னூல்களைச் சேர்க்கும் போது அதை இணைக்கும் வலைப் பக்கத்தில் நூல் தொடர்பான keywords சிலவற்றைச் சேர்க்க வேண்டும். இது தேடுதலைச் சுலபமாக்கும். தேடும் வசதி என்பது தட்டச்சு செய்து பதிப்பிக்கும் நூல்களுக்குப் பயன்படுத்தலாம். jpeg படங்களாக அல்லது pdf நூலாக இணைக்கபடும் போது இந்த வசதி குறைகின்றது. ஆனால் இதனைப் போக்கச் சில வழிமுறைகள் உள்ளன. வடிவமைக்கப்படுகின்ற html பக்கத்திலேயே நூலைப் பிரதிபலிக்கும் keywords சேர்த்து விடலாம். இது ஓரளவிற்கு இந்தக் குறையைத் தீர்க்கக்கூடியது. இப்போது புதிதாக page turning என்று சொல்லப்படும் மென்பொருள்கள் கிடைக்கின்றன. இவற்றின் வழி மின் நூல்கள் செய்யப்படும் போது தேடுதல் வசதியும் கிடைக்கின்றது. இதனை இப்போது சோதித்து வருகின்றோம். சோதனைக்குப் பிறகு இந்தத் தொழில்நுட்பத்தை நமது மின் நூலாக்கத்தில் பயன்படுத்த உள்ளோம்.

அண்ணா: வாசிப்பினைத் தூண்டும் விதமாக உங்கள் மின்னூல்களின் வடிவமைப்பு இல்லை; பக்கங்களைப் புரட்டும் வசதி, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்குத் தாவிச் செல்லும் வசதி, பக்கக் குறியீடு (புக்மார்க்), அந்த நூலுடன் தொடர்புடைய நூல்கள் / பக்கங்களின் இணைப்புகள்,  வசதிகள் போன்றவை இல்லை. ஒரு பழைய நூலினை அர்த்தம் புரிந்து படிக்கத் தகுந்த அகராதி, கலைக் களஞ்சியம், உரைகள், தேடுபொறி போன்ற வசதிகள் இணைக்கப்படவில்லை. பக்கங்களை அப்படியே ஒளிவருடி மூலமாக்கும் போது பழைய நூல்களின் காகிதத் தரத்தின்படி பின்னுள்ள பக்கத்தின் எழுத்துகளும் தெரிகின்றன. நம் மின்னூல்களின் தரம், போதுமான அளவில் இல்லை. வடிவமைப்பில் அதிகாலை.காம் (Flipping Book Joomla Component Demo version), விகடன்.காம் ஆகியவற்றின் மின் மலர்களும் சில நல்ல வசதிகளைக் கொண்டிருக்கின்றன. இவை வண்ணத்திலும் உள்ளன. உங்கள் மின்னூல்களின் வடிவமைப்பினை மறு ஆய்வு செய்வீர்களா?

சுபா: வாசிப்பினைத் தூண்டும் வகையில் நூல் இல்லை என்று பொதுவாகச் சொல்லிவிட முடியாது. பல்கலைக்கழககங்கள், பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள், மருத்துவமனைகளின் ஆன்லைன் வலைப்பங்கள் போன்றவற்றில் pdf முறை கொண்டு தயாரிக்கப்பட்ட மின்நூல்களின் பயன்பாடுதான் மிக அதிகம். உதாரணத்திற்கு ஆரக்கிள் மென்பொருள் வலையகத்தின் Document Libraryஐப் பார்த்தால் இது தெரியும். மின்னூல்கள் HTML மற்றும் pdf வகையில் செய்யப்பட்டு வெளியிடப்படுவது பரவலான ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பம். Flipping book மற்றும் turning the page போன்ற புதிய மின்நூல் தயாரிப்பு முறைகள் இப்போது கணிசமாக மின் நூல்கள் பயன்பாட்டில் உள்ளன. இது கடந்த 3 ஆண்டுகளில் அதிலும் குறிப்பாக, கடந்த சில மாதங்களில் பரவலாகப் பேசப்பட்டு வரும் ஒரு மின் நூலாக்கத் தொழில்நுட்பம். turning the page தொழில்நுட்பத்தை British Library மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளது. அதன் நூலக மின் நூல்கள் பல இந்தத் தொழில்நுட்பத்தின் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதனைக் கடந்த 2 மாதங்களாக த.ம. அறக்கட்டளைக் குழுவினரும் பயன்பாட்டிற்காக ஆய்ந்து வருகிறோம்.

இதில் மேலும் ஒரு விஷயம் – நீங்கள் குறிப்பிடும் உதாரண வலைப்பக்கங்களோ அல்லது ஏனைய உலகத் தரம்வாய்ந்த இணைய நூலகங்கள் போலவோ தமிழ் மரபு அறக்கட்டளை ஒரு வர்த்தக அடிப்படையிலான நிறுவனமோ அல்லது சிறந்த பொருளாதார பக்கபலம் உள்ள ஒரு நிறுவனமோ அல்ல. மாறாக, குறிப்பிட்ட ஒரு சிலர் அதிலும் குறிப்பாக ஏழு அல்லது எட்டு பேர் மட்டுமே தீவிரமாக ஈடுபட்டு இந்த மின்பதிப்பாக்கங்களைத் தங்களது சொந்த நேரத்தில், சொந்தச் செலவில் ஒரு தீவிரத்தன்மையோடு செய்து வருகின்றோம். ஆள் பலமும் பொருளாதார பலமும் சேரும் போது மேலும் பல தொழில்நுட்ப நுணுக்கங்களை நுழைத்து மின் நூல்களைச் சிறப்பாக உருவாக்க என்றுமே தமிழ் மரபு அறக்கட்டளை முயன்றுகொண்டே இருக்கும். அதில் சந்தேகமில்லை.

 

அண்ணா: உங்களின் http://www.tamilheritage.org/uk/lontha/panasaiw/photo17.html இந்தப் பக்கத்தில் உள்ள ஒரு படக் கோப்பின் அளவு, 192.85 KB (1,97,480 bytes); அதே நேரம் http://www.tamilheritage.org/uk/lontha/theerpu/theertha.html இந்தப் பக்கத்தில் தீர்த்தகிரி புராணத்தின் 431 பாடல்களையும் தட்டச்சு செய்து வெளியிட்டுள்ளீர்கள். இதன் மொத்தப் பக்க எடை, 1,71,327 bytes. இப்படிப் படக் கோப்பாக இடும்போது உங்கள் சர்வரிலும் அதிக இடம் தேவை. வாசகர்களும் அதிகம் தரவிறக்கம் செய்ய வேண்டி இருக்கிறது. இதனைத் தவிர்க்கலாமே?

 

சுபா: பக்கங்களின் அளவு வேறுபடும். அதிலும் வர்ணத்தில் வெளியிடப்படும் போது பக்கங்களின் அளவு மேலும் கூடுகின்றது. இதனைப் போக்க பல்வேறு compression வழிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது. வர்ணத்தைப் போக்கி கருப்பு – வெள்ளைப் பக்கங்களாக வெளியிடுகின்றோம். சர்வர் கொள்ளளவு என்பது தற்போதைய நிலையில் ஒரு பிரச்சனையில்லை. ஆனால் பக்கங்களின் அளவு என்பது ஒரு பிரச்சனையே. இதனைச் சரி செய்து சிறப்பான வகையில் மின் நூல்களை உருவாக்கத் தொடர்ந்து முயன்று வருகின்றோம்.

 

ஆனால் அளவு குறைவாக இருக்கின்றதே என்பதற்காக தட்டச்சு செய்து வெளியிடுவது என்பது த.ம.அறக்கட்டளையின் நோக்கமில்லை. மாறாக நூலின் அசல் பாதிக்காதவாறு அந்நூலை அப்படியே முழுமையாக ஸ்கேன் செய்து சேர்ப்பதே இந்த நிறுவனத்தின் முதன்மை நோக்கம். தட்டச்சு செய்து நூலை வெளியிடும் போது பல எழுத்துப் பிழைகள் சேர்ந்து விடக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதனால் நூலின் originality பாதிப்படைகின்றது என்பதும் ஒரு முக்கிய விஷயம்.

 

அண்ணா: தட்டச்சு செய்து நூலை வெளியிடும் போது பல எழுத்துப் பிழைகள் சேர்ந்து விடக்கூடிய வாய்ப்பு உள்ளது என்கிறீர்கள். இது தமிழின் அனைத்துப் பதிப்பகங்களுக்கும் இதழ்களுக்கும் இணைய தளங்களுக்கும் உள்ள சிக்கல். இதற்காகப் படக் கோப்பினை நாடுவது சரியில்லை. மெய்ப்பு (புரூப்) பார்க்கத் தகுந்தவர்களை உருவாக்குவதே சிறந்த வழியாய் இருக்கும் இல்லையா?

சுபா: அப்படி சொல்லிவிட முடியாது. தமிழ் தவிர்த்து வேறு மொழிகளிலான, உதாரணத்திற்கு ஆங்கிலம், ஜெர்மன், பிரஞ்சு, லத்தீன், அரபு போன்ற மொழியிலான ஆன்லைன் ஆவண பாதுகாப்பு முயற்சிகள் பொதுவாக படக் கோப்பினை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவையே. ஆவணப் (நூல் இதில் அடங்கும்) பாதுகாப்பைச் செய்யும் முறைகள் வேறுபடும். அதில் ஒன்று, அந்த ஆவணத்தை அதன் வடிவம் மாறாத வகையில் முடிந்த அளவு அதன் அசலை அப்படியே பாதுகாக்க மேற்கொள்ளும் முயற்சி. இரண்டாவது, அந்த ஆவணத்தின் உள்ளே உள்ள விஷயத்தைப் பாதுகாக்க மேற்கொள்ளச் செய்யும் முயற்சி. இது, தட்டச்சு செய்து பாதுகாப்பது. இதில் எது சிறந்தது எது சிறந்ததன்று என்ற கேள்விக்கு இடமில்லை. இவை இரு வேறுபட்ட ஆவணப் பாதுகாப்பு முயற்சிகள். இதனை அப்படித்தான் காண வேண்டும். தமிழ் மரபு அறக்கட்டளை பழம் நூல்களை மின்ன்னாக்கம் செய்யும் போது ஆர்வலர்கள் விரும்பி தங்களுக்குப் பிடித்த நூலைத் தட்டச்சு செய்தும் தருகின்றனர். உதாரணத்திற்கு நமது மின்னூல்கள் தொகுப்பில் உள்ள “எம்பெருமானாருடைய (ஸ்ரீராமாநுஜர்) திவ்விய சரிதம் என்னும் நூலை நமது மின்தமிழ் நண்பர் குமரன் மல்லி அவர்கள் தட்டச்சு செய்து கடந்த சில நாட்களில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆக இப்படி தட்டச்சு செய்து சேர்க்கப்படும் வகையும் த.ம. அறக்க்கட்டளை வலைப்பக்கத்தில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

அண்ணா: த.ம.அ. மின்னூல்களை உருவாக்கும் விதங்களை விவரியுங்கள்…

சுபா: த.ம.அ. வலைப்பக்கத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ள நூல்கள் 2 முறைகளில் செயல்படுத்தப்படுகின்றன.

முறையாகத் திட்டமிட்டு ஒரு திட்டத்தை வகுத்துச் சில பதிப்புகளை வெளியிட்டிருக்கின்றோம். உதாரணமாக பிரித்தானிய நூலகத்தோடு நாம் மேற்கொண்ட ஒரு திட்டத்தின் வழி சில குறிப்பிட்ட நூல்கள் மின்பதிப்பு கண்டன. இது ஒரு உதாரணம்.

அடுத்ததாக உலகம் முழுதுமுள்ள பல தமிழ் ஆர்வலர்கள் மின்பதிப்பு செய்து வழங்கும் நூல்கள் மின் நூல்களாக உருவாக்கப்பட்டு சேர்க்கப்படுகின்றன. இவ்வகையில் நூல்களை வழங்குபவர்களின் பெயர்களும் த.ம.அ. வலைப்பக்கத்தில் சேர்க்கப்பட்டு மின் தமிழ் செய்தி அரங்கிலும் இச்செய்தியும் பகிர்ந்துகொள்ளப்படுகின்றது. இப்பொது சென்னையிலும் த.ம. அறக்கட்டளைக்கு ஒரு பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அண்ணா: தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் இதுவரை 64 மின் நூல்களை உருவாக்கி இருக்கிறீர்கள். இன்னும் உள்ளனவா?

 

சுபா: 64க்கும் மேற்பட்ட நூல்கள் மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவை நமது வலைப்பக்கத்தில் பல பக்கங்களில் பார்க்கக் கிடைக்கின்றன. குறிப்பாக ebooks பகுதியில் 72 நூல்கள் பட்டியலில் இருந்தாலும் தமிழ் மரபு அறக்கட்டளை பல்வேறு திட்டங்களின் வழி உருவாக்கப்படும் மின் நூல்கள் வெவ்வேறு பக்கங்களில் உள்ளன. உதாரணத்திற்கு; பிரித்தானிய நூலகத் திட்டம், தலபுராணம் திட்டம் போன்ற பகுதிகளில் மேலும் பல நூல்களைக் காணலாம்.

 

அண்ணா: மின்னூல்களை உருவாக்கும்போது உள்ள படிநிலைகளை விவரியுங்கள். இதற்கு உதவும் கருவிகள், மென்பொருள்கள் என்னென்ன?

 

சுபா: ஸ்கேனரின் வழி நூலைப் பதிவு எடுத்து, பின்னர் பொருத்தமான image editing மென்பொருள் கொண்டு பக்கங்களின் அளவைக் குறைத்து, சரி செய்து பின்னர் அவற்றை html அல்லது pdf writer வழி pdf நூலாக மாற்றுகின்றோம். இதில் மிக முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் ஸ்கேன் செய்யும் போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள். ஸ்கேன் செய்யும் போது Resolution, வர்ணம் போன்றவை கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள். 300 dpi Resolution வைத்து பக்கத்தை கருப்பு – வெள்ளை முறையில் ஸ்கேன் செய்து அதனை tiff formatல் முதலில் சேகரிக்கின்றோம்.  வர்ணத்திலோ அல்லது மிகக் கூடிய Resolution setting  பயன்படுத்தியோ செய்யும் போது  தனிப்பக்கங்களின் டிஜிட்டல் கோப்புக்கள் மிகப்பெரிய கொள்ளளவு பெறுவதால் இது மின்னூலாக்கத்தை பாதிக்கக் கூடும். ஆக ஸ்கேனிங் செய்யும் போதே இந்த விஷயங்களை மிகக் கவனமாகக் கையாள வேண்டும்.

சென்னையில் உள்ள த.ம.அ. பணிக் குழுவை மேற்பார்வை செய்யும் டாக்டர் திருமூர்த்தி வாசுதேவன் (திவா) அவர்கள் ஸ்டூடியோ பெட்டி ஒன்றினை இதற்காக உருவாக்கியுள்ளார்.

அண்ணா: மின்னூல்களை உருவாக்கும் முறைகளையும் துணை புரியும் ஆர்வலர்களையும் குறிப்பிடுங்கள்.

 

சுபா: உலகம் முழுவதிலுமிருந்து பல நண்பர்கள் மின்னாக்கப் பணிகளில் ஆர்வம் கொண்டு தங்களால் இயன்ற வகையில் உதவி வருகின்றனர். தற்போது சென்னையில் ஆர்வத்தோடு ஒரு குழு மின்னாக்கப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு தொடர்ந்து மின்பதிப்பாக்கச் சந்திப்புகள் நடத்துவது, மற்றும் மின் பதிப்புச் செய்வது போன்ற அரிய தொண்டினை ஆற்றி வருகின்றனர். டாக்டர் திருமூர்த்தி வாசுதேவன், கிருஷ்ணமாச்ச்சாரியார் (தமிழ்த்தேனீ), தேவராஜன், சந்திரசேகரன், ராமதாஸ், யுவராஜன், சுகுமாரன், திரு.ஆண்டோ பீட்டர் போன்றோர் இந்தப் பணிக் குழுவின் நடவடிக்கைகளை ஆர்வத்தோடு தொடர்ந்து வருகின்றனர்.

அண்ணா: இவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். திருமூர்த்தி வாசுதேவன் (திவா) உருவாக்கியுள்ள ஸ்டூடியோ பெட்டியைப் பற்றி விளக்கிச் சொல்லுங்கள்.

சுபா: டாக்டர் திருமூர்த்தி வாசுதேவன் உருவாக்கியிருக்கும் மின்னாக்கக் கையேடு மற்றும் இதன் செயல்முறை விளக்க காணொளி (வீடியோ) ஆகியவை நமது வலைப்பக்கத்தில் உள்ளன. அவற்றை இங்கே காணலாம்.

மின்னாக்கக் கையேடு –  http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html (கீழே)
காணொளி – http://www.tamilheritage.org/media/video/digit/digi.html

அண்ணா: இந்த மின்னூல்களை இதுவரை எவ்வளவு பேர்கள் பார்த்துள்ளார்கள்? மாதாந்தர பக்க நோக்கு எவ்வாறு உள்ளது? இவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளதா?

சுபா: மின்னூல்களை வாசிப்பவர்கள் அல்லது இந்த பக்கங்களைச் சென்று காண்பவர்கள் எண்ணிக்கை என்பது மாறுபட்டுத்தான் இருக்கின்றது. சில மாதங்கள் இப்பக்கத்திற்குச் சென்று பார்ப்போரின் எண்ணிக்கை 8 அல்லது ஒன்பது என்ற வகையில் மிகக் குறைவாக இருக்கின்றது. சில சமயங்களில் 836 hits இந்த பக்கத்திற்குக் கிடைத்துள்ளது. சில சமயங்களில் 1072 hits கிடைத்துள்ளது. இது பல்வேறு காரணங்களினால் அமைவது. ஒரு மின்னூல் உருவாக்கப்பட்டு பதிப்பிக்கப்படும் விஷயம், மின்தமிழ் செய்தி அரங்கில் வெளிவரும் போது இப்பக்கத்திற்கான hits கூடுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தின் அதாவது http://www.tamilheritage.org வலைப்பக்கத்தின் hits ஏப்ரல் மாதம் 217,013 ஆகவும் மே மாதம் 177,383  என்பதாகவும் உள்ளது.

அண்ணா: மின்னூல் உருவாக்கத்தில் தனியுரிம மென்பொருள்களை விடத் திறந்தமூல மென்பொருட்களை முயன்று பார்த்ததுண்டா?

சுபா: ஆமாம். முடிந்த அளவு இவ்வகை மென்பொருட்களைத் தான் பயன்படுத்தி வருகின்றோம்.

 

அண்ணா: டிஜிட்டல் லைப்ரரி, பிரிட்டிஷ் லைப்ரரி ஆகியவற்றுடன் இணைந்து த.ம.அ. மேற்கொண்ட திட்டங்கள் என்னென்ன?

சுபா: டிஜிட்டல் லைப்ரரி திட்டத்தில் பங்கு பெற்றபோது நூல்கள், ஓலைச் சுவடிகள், காணொளி, ஒலிப் பதிவுகள் என மின்னாக்கப் பணிகள் செயல்படுத்தப்பட்டன. அவற்றை http://bharani.dli.ernet.in/thf/index.html பக்கத்தில் காணலாம்.

அதேபோல பிரிட்டிஷ் லைப்ரரியோடு தமிழ் மரபு அறக்கட்டளை செயல்படுத்திய  திட்டம், சிறப்பான ஒன்று. காண்பதற்கு அரிய சில நூல்கள் இந்தத் திட்டத்தின் வழி மின்பதிப்பாக்கம் கண்டன.  http://www.tamilheritage.org/uk/bl_thf/bl_thf.html  வலைப் பக்கத்தில் இந்தத் தொகுப்பினைக் காணலாம். இந்தத் திட்டம் மிகச் சிறந்த அனுபவமாகவும் எங்களுக்கு அமைந்தது.

 

(இந்த அமைப்பின் ஒலி – ஒளிப் பதிவுகள் குறித்து உரையாடல் தொடரும்)

You may also like

Leave a Comment