Home HistoryEtayapuram 19. திருமதி.சாவித்ரி குடும்பத்தினர்

19. திருமதி.சாவித்ரி குடும்பத்தினர்

by Dr.K.Subashini
0 comment

19. திருமதி.சாவித்ரி குடும்பத்தினர்

 

அந்த சாலையில் இருக்கின்ற வீடுகள் அனைத்தும் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை. சாலையின் உள்ளே நுழையும் போது ஒரு சிறிய விநாயகர் கோயில். அது பெருமாள் கோயில் சுவரை ஒட்டி அமைந்திருக்கின்றது.  அந்த சாலையில் உள்ள வீடுகளின் வரிசையில் சாலையில் நுழையும் போது இரண்டாவதாக இருப்பது சுவாமி சிவானந்தர் இல்லம். இங்கு பூஜைகளும் பஜனைகளும் மாலையில் நடைபெறுகின்றன. அதற்கு இரண்டு இல்லங்களை அடுத்து பாரதியார் பிறந்த இல்லம். அதற்கு பக்கத்தில் ஒரு வீடு. அதற்கு அடுத்ததாக திருமதி. சாவித்ரியின் இல்லம்.
 
திருமதி சாவித்ரி பற்றியும் கொஞ்சம் சொல்லவேண்டும். இவரது கணவர் மறைந்த திரு.துரைராஜ் ஆசிரியர். திரு.துரைராஜ்  அவர் வாழ்ந்த காலத்தில் எட்டயபுரத்தில் இருந்த பாரதி அன்பர்களை ஒருங்கினைத்து செயல்பட்டவர். எட்டயபுரம் அரண்மனையுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். எட்டயபுர ஜமீன் வம்சத்தில் மூத்த மகனான திரு.துரை பாண்டியன் அவர்களின் மிக நெருங்கிய நண்பராக இருந்தவர். சிறந்த பேச்சாளராகவும் பட்டிமன்றப் பேச்சாளராகவும் இருந்தவர். அதிலும் குறிப்பாக திரு.சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில் பட்டிமன்றங்களில் பேசியிருக்கின்றார். திரு.துரைராஜ் அவர்கள் உசிலம்பட்டி கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியிருக்கின்றார்.  மாணவர்கள் கல்வி வளர்ச்சியின் மீதும் தமிழ் மீதும் மிகுந்த பற்று கொண்ட இவர் தனது சேகரிப்பில் இருந்த நூல்கள் அனைத்தையும் எட்டயபுரத்தில் உள்ள ரகுநாதன் நூலகத்திற்குக் கொடையாக வழங்கியிருக்கின்றார்.
 
திருமதி.சாவித்ரியின் சகோதரர் திரு.பாஸ்கர தொண்டைமான் அவர்கள்.  அவர் ஒரு  தமிழ் தொண்டாளர். ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றியவர்.  பற்பல கவிதைகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும்,  நூல்களையும் எழுதியிருக்கின்றார்.

 

  • வேங்கடம் முதல் குமரி வரை
  • வேங்கடத்துக்கு அப்பால்
  • பிள்ளைவாள்
  • தமிழறிஞர் முதலியார்
  • ரசிகமணி டி.கே.சி.
  • கலைஞன் கண்ட கடவுள்
  • கல்லும் சொல்லாதோ கவி
  • அமர காதலர்
  • தென்றல் தந்த கவிதை
  • இந்தியக் கலைச் செல்வம்
  • தமிழர் கோயில்களும் பண்பாடும் (கலைக் கட்டுரைத் தொகுப்புகள்)
  • மதுரை மீனாட்சி
  • ஆறுமுகமான பொருள்
  • பிள்ளையார்ப்பட்டிப் பிள்ளையார்
  • கம்பன் சுயசரிதம்
  • கம்பன் கண்ட இராமன்
  • அன்றும் இன்றும்
  • சீதா கல்யாணம்
  • பட்டி மண்டபப் பேருரைகள்

போன்றவை இவர் எழுதிய நூல்களில் சில. இவரது நூல்கள் தமிழக அரசாங்கத்தால் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன என்ற செய்தியை மின் தமிழிலும் காணலாம்.

 

திரு.தொ.மு.பாஸ்கர தொண்டைமான் பற்றிய தினமணி கட்டுரை ஒன்று நமது வலைப்பக்கத்திலும் இங்கு உள்ளது!

இவரது இளைய சகோதரர் தொ.மு.சி.ரகுநாதன் அவர்கள் பாரதி – காலமும் கருத்தும் என்னும் நூலை எழுதியவர். அமரர்.ஜீவாவுக்குப் பிறகு கலை இலக்கிய பெறுமன்றத்தின் தலைவராக தொண்டாற்றியவர். எட்டயபுரத்தில் "ரகுநாதர் நூல் நிலையம் – பாரதி ஆய்வு மையம்" அமைய காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர்.
 
 
தனது கணவர், சகோதரர் போன்று மிகுந்த தமிழார்வம் கொண்டவர் திருமதி.சாவித்ரி. சில ஆண்டுகள் காந்தி கிராமத்தில் ஆசிரியையாகவும் பணியாற்றியிருக்கின்றார் இவருக்கு முதுமையின் காரணமாக தற்சமயம் பல செய்திகள் ஞாபகத்தில் இல்லை. இருந்தாலும் முடிந்தஹ் வ்ரை சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
 
இவரது மகள் செல்வி.கிருஷ்ணவேணி அவர்கள். அங்கேயே படித்து பின்னர் பட்டம் பெற்று தற்சமயம் எட்டயபுரத்தில் உள்ள ராஜா உயர் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகின்றார்.
 
எனக்கு அரண்மனையைச் சுற்றிக் காட்டி எட்டயபுரம் வரலாற்றை ஓரளவு விளக்க உதவியாக வந்திருந்த திரு. கருணாகர பாண்டியன் அவர்களும் திருமதி.சாவித்ரிக்கு உறவினர் தான். இவர். திரு.துரைராஜ் அவர்களின் சகோதரர்.  எட்டயபுரத்திலேயே வளர்ந்து பின்னர் தற்சமயம் பணி நிமித்தம் மதுரையில் இருக்கின்றார். எட்டயபுரத்தை பற்றிய தகவல்கள் வேண்டும் என்ற கோரிக்கையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு உதவ எந்த தயக்கமும் இல்லாமல் ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு எட்டயபுரத்திற்கு அதி காலையிலேயே புறபட்டு தனது நண்பர் ஒருவருடன் தனது வாகனத்தில் வந்து சேர்ந்து விட்டார்.
 
 
திரு. கருணாகர பாண்டியனுடன் தொலைபேசியில் இரண்டு முறை உரையாடியிருந்தாலும் எனது பயணத்தின் முழு நோக்கத்தையும் விளக்க வாய்ப்பு அமையவில்லை. எதற்காக அரண்மனையைப் பற்றிய படங்களும் செய்திகளும் தேவை என என்னை கொஞ்சம் சந்தேகத்துடனேயே முதலில் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். நானும் தமிழ் மரபு அறக்கட்டளை என்ற தன்னார்வ நிறுவனத்தைப் பற்றியும் தொண்டூழியமாக உலகின் பல மூலைகளில் வாழும் நண்பர்கள் செய்யும் வரலாற்று சுவடுகளைப் பாதுகாக்கும், அறிமுகப்படுத்தும்  பணியின் ஒரு பகுதியே இந்த முயற்சி என எனது எண்ணத்தையும் நோக்கத்தையும் வெளிப்படுத்தினேன். நான் ஒரு பத்திரிக்கை நிருபராக இருப்பேனோ என சாவித்ரியும் நினைத்திருந்திருக்கின்றார். என்னைப்பற்றியும் அறிமுகம் செய்து கொண்ட பின்னர் அவர்கள் அனைவருக்கும் வியப்புடன் கூடிய மகிழ்ச்சி.  எட்டயபுரம் பற்றிய செய்திகள், அந்த கிராமத்தின் சரித்திர விஷயங்கள் இணையத்தில் பதிப்பிக்கப்பட முடியும், உலகின் பல மூலைகளில் உள்ளவர்கள் இந்த படங்களை பார்க்க முடியும், எட்டயபுரம் என்ற கிராமத்தின் எழிலைக் காண முடியும், அந்த கிராமத்தின் சிறப்புக்களை அதன் வழி ஓரளவு தெர்ந்து கொள்ளமுடியும் என்று தெரிந்தவுடன்  திரு. கருணாகர பாண்டியனுக்கு அளவில்லாத ஆனந்தம். அவரும் ஒரு சரித்திர ஆசிரியராயிற்றே. உடனே எல்லா தகவல்களையும் தன்னால் முடிந்த அளவுக்கு வழங்குவதாகக்  கூறினார். 

 

 
கிருஷ்ணவேணி வழங்கிய சூடான காப்பியை அருந்திவிட்டு முதலில் பார்ப்பதற்கு பக்கத்தில் இருந்த பாரதியின் பிறந்த இல்லத்திற்கு நடந்தோம். அங்கிருந்து இரண்டாவது வீடு பாரதியின் பிறந்த இல்லம்.
 
அன்புடன்
சுபா

 


 

இணையத்தில் தேடியபோது தொ.மு.சிதம்பர ரகுநாதன் பற்றிய மேலும் சில தகவல்கள் கிடைத்தன.
 
1.
தொ.மு.சிதம்பர ரகுநாதன் பற்றிய ஆறம்திணை அஞ்சலி செய்தி ஒன்று கிடைத்தது. http://archives.aaraamthinai.com/ilakkiyam/newpgs/jn03_thomuchi.asp அதனை யூனிகோடில் மாற்றி இங்கே இணைக்கின்றேன்
 
 
அஞ்சலி

தொ.மு.சிதம்பர ரகுநாதன் (20.10.1923 – 31.12.2001)

தமிழில் முதுபெரும் எழுத்தாளரும் முற்போக்கு இடதுசாரி எழுத்தாளர் பரம்பரையின் முன்னோடியுமான தொ.மு.சி. என்ற தொ.மு. சிதம்பர ரகுநாதன் (78) பாளையங்கோட்டையில் 31.12.2001 ல் காலமானார்.
 
தமிழ் இடதுசாரிப் படைப்புலகில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வந்தவர். சிறுகதை, நாவல், விமரிசனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு ஒப்பிலக்கியம் என பல்வேறு களங்களில் ஆழங்கால் பதித்தவர். ஓர் எழுத்தாளராக மட்டுமின்றி பத்திரிகையாளராக இதழ் ஆசிரியராக முற்போக்கு எழுத்தாளர் பரம்பரையை வழி நடத்துபவராக இயக்கியவர்.
 
பன்முக ஆளுமைச் செழுமையும், இடதுசாரிச் சிந்தனையின் மீதான ஈடுபாடும் ‘அவரை’ உயிர்ப்புமிக்க படைப்புமிகு ஆய்வு ஜீவியாக தொழில்பட வைத்துள்ளது.
 
1941 – ல் இவரது முதல் சிறுகதை பிரசண்ட விகடனில் வெளியானது.
1942 – ல் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டார், சிறை சென்றார். பின்னர் விடுதலையாகி கல்லூரியில் படிப்பு முடித்து இலக்கியத்தில் அதிக நாட்டம் கொண்டார்.
1945 – முதல் குறுநாவலான புயல் வெளியானது.
1948 – இலக்கிய விமரிசனம் எனும் நூல் வெளியானது.
1950 – சோசலிச யதார்த்தவாதத்தை வெளிப்படுத்தும் அதற்கு உதாரணமாக காட்டக்கூடிய ‘பஞ்சும் பசியும்’ எனும் நாவலை எழுதி வெளியிட்டார்.
1951 – ல் புதுமைப்பித்தன் வரலாறு எனும் நூலை எழுதி வெளியிட்டார்.
1944 – தினமணியில் துணை ஆசிரியர்.
1946 – முல்லை இதழில் பணியாற்றினார்.
சாந்தி எனும் இலக்கிய மாத இதழை தானே பதிப்பித்து வெளியிட்டார்.
சோவியத் நாடு இதழின் ஆசிரியராக 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார்.
பாரதியின் சீடராக பாரதி ஆய்வாளராக ரகுநாதன் தன்னை நிலைப்படுத்தினார். கங்கையும் காவிரியும், பாரதியும் ஷெல்லியும், பாரதி சில பார்வைகள், பாரதி காலமும் கருத்தும் ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.பாரதி காலமும் கருத்தும் என்னும் ஆய்வு நூலுக்கு 1983ல் சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.
 
1984 – இளங்கோவடிகள் யார்? எனும் நூலை 96 பக்கங்களில் எழுதி வெளியிட்டுள்ளார்.
1999 – புதுமைப்பித்தன் கதைகள் – சில விமரிசனங்களும் விஷமத்தனங்களும் என்ற நூலை வெளியிட்டார்.
 
தொ.மு.சி. எழுதிய எழுத்துக்கள் அவரது ஆய்வுகள் விமரிசனங்கள் யாவும், தமிழில் மார்க்சிய சிந்தனைத் தனத்தின் விரிவையும், அதன்வழி கிளம்பும் விமரிசன ஆய்வுச் செல்நெறியையும் வளர்த்துச் செல்கிறது. தமிழின் நவீன காலத்து மடைமாற்ற காரணங்களான பாரதி, புதுமைப்பித்தன் ஆகியோரை இனங்கண்டு அவர்களது ஆய்வுக்கான சரியான தடம் அமைத்துக்கொடுத்த ஆய்வாளர் விமரிசகர் தொ.மு.சி.

 
சிறுகதை

  • சேற்றில் மலர்ந்த செந்தாமரை
  • க்ஷணப் பித்தம்
  • சுதர்மம்
  • ரகுநாதன் கதைகள்

கவிதை

  • ரகுநாதன் கவிதைகள்
  • கவியரங்கக் கவிதைகள்
  • காவியப் பரிசு

 
நாவல்

  • கன்னிகா
  • புயல்
  • பஞ்சும் பசியும்

நாடகம்

  • சிலை பேசிற்று
  • மருது பாண்டியன்

விமர்சனம்

  • இலக்கிய விமர்சனம்
  • சமுதாய விமர்சனம்
  • கங்கையும் காவிரியும்
  • பாரதியும் ஷெல்லியும்
  • பாரதி காலமும் கருத்தும்

வரலாறு

  • புதுமைப்பித்தன் வரலாறு

ஆய்வு

  • இளங்கோவடிகள் யார்?

 
நன்றி:ஆறாம்திணை
 
 
 
2. சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் தொ.மு.சி. ரகுநாதன்
 
திருநெல்வேலி, டிச. 9:  சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் தொ.மு.சி. ரகுநாதன் என சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் பாராட்டினார்.
 
 திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக தமிழியல்துறை சார்பில் "தொ.மு.சி. ரகுநாதனின் இலக்கியத் தடங்கள்’ என்ற தலைப்பில் துணைவேந்தர் இரா.தி. சபாபதி மோகன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கைத் தொடக்கி வைத்து "சாகித்ய அகாதெமி’ விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் பேசியது:
  சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு எளிமையாக வாழ்ந்தவர் ரகுநாதன். அவருடன் நெருங்கி உரையாடிய அனுபவம் எனக்கு உண்டு. ரகுநாதனின் புனைப்பெயர் வணங்காமுடி. யாருக்கும் தலைவணங்காதவர், மனசாட்சியை நம்பக்கூடியவர் அவர்.
 
  புத்தகப்பிரியராக வாழ்ந்த அவர், வீட்டில் பெரிய நூலகத்தை வைத்திருந்தார். அறிவை வளர்க்க, தேடல் இல்லை என்றால் வளர்ச்சி அடைய முடியாது என்பதில் அவர் அசைக்க முடியாக நம்பிக்கை வைத்திருந்தார்.
 
  வீட்டில் உள்ள நூலகத்திற்கு யார் வேண்டுமானாலும் வந்து குறிப்பு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் புத்தகத்தை மட்டும் யாரும் வெளியில் எடுத்துச் செல்ல அவர் அனுமதிப்பதில்லை.
 
  ஜீவானந்தம் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர் ரகுநாதன். ஜீவா மட்டுமே அவரது நூலகத்தில் இருந்து புத்தகங்களை தைரியமாக எடுத்துச் செல்வார்.
 
  அவரது வீட்டில் உள்ள 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட நூல்களை நம்முடைய பல்கலைக்கழகங்கள் விலைக்கு கேட்டன. எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம் என்றன. ஆனால் அவர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. எட்டையபுரத்தில் நூலகம் அமைத்து அங்கு அந்த நூல்களை எடுத்துச் சென்றார்.
 
  சிறுவயதில் ரகுநாதன் பேச்சாளராகவும், எழுத்தாளராகவும், அரசியல் தொடர்பும் கொண்டிருந்தார். உளவியல் ரீதியாக அவர் எழுதிய "கன்னித்தாய்’ நாவல், அதைத் தொடர்ந்து எழுதிய "முதல் இரவு’ நாவல் ஆகியவை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. சிலப்பதிகாரத்தைப் பற்றி ஆய்வு செய்து சில உண்மைகளை அவர் வெளிப்படுத்தினார். அதை சிலர் ஏற்றுக்கொள்ள வில்லை.
 
  சிறுகதை எழுத்தாளர் மட்டுமன்றி, புலமைப்பித்தனின் நண்பராகவும் வாழ்ந்தவர் ரகுநாதன். எந்தக் கூட்டமாக இருந்தாலும் தன்னுடைய வாதத்தை ஆணித்தரமாக எடுத்துச் சொன்னவர் ரகுநாதன் என்றார் பொன்னீலன்.
 
  கருத்தரங்கில், ரகுநாதனின் மகள் மஞ்சுளா கலந்து கொண்டார்.
..
 
-சுபா
 

You may also like

Leave a Comment