ஓலைச்சுவடிகள் தேடிய படலம் — ௧௮ (18)
செங்கல்பட்டில் இருக்கும் சில முகவரிகளைப் பார்த்துவிட்டுப் பிறகு காஞ்சிபுரம் நகரம் சென்று பார்த்துவிட்டு எங்கள் காஞ்சி மாவட்டத் தேடலை அன்று முடிக்க எண்ணினோம். ஒரு மாவட்டத்திற்கு ஐந்து நாள்கள் வீதம்தான் ஒதுக்க முடிந்தது. எங்களுக்கு மார்ச் மாதம் 31க் குள் அதிகபட்சம் முடிந்தவரை சென்று பார்க்க வேண்டிய நெருக்கடி வேறு இருந்தது; எனவே ஒய்வு என்பதைப் பற்றி நினைத்துப் பார்க்கக் கூட எங்களுக்கு நேரம் இல்லை. 133 முகவரிகள் ஐந்து நாள்களில் பார்ப்பது என்றால் சும்மாவா ? செய்யும் வேலை மனத்திற்குப் பிடித்தி ருந்தால் வேலையே பொழுதுபோக்கு ஆகிவிடுகிறது . செய்யும் வேலை யில் சுகம் காணத்தொடங்கி விட்டால் பிறகு தனியே எதற்கு ஒய்வு ? மனத்திற்கு ஒய்வு தேவைப்படாத போது உடலும் மனத்துடன் சேர்ந்து ஒத்துழைக்கிறது; உண்மையில் களைப்படைவது மனமா, உடலா ? மனமே நீ செய்யும் மாயங்கள்தான் எத்தனை ?
இரவு ஏழு மணிக்கு எங்கள் வேலையை முடிவுக்குக் கொண்டு வந்தாலும் விடுதி வந்து சேர எட்டு மணி ஆகிவிடும்; உடனே சிறிது ஒய்வு எடுத்துக் கொண்டு ஒரு சிறிய குளியல்; பிறகு அருகில் இருக் கும் கணினி இணையக் கடையைத்தேடி ஒரு வேக வேகமான நடை. நாங்கள் போய்ச் சேரும் நேரம் அங்கு கடை மூடும் நேரம் ஆகிவிடும். ”சார்! சீக்கிரம் சீக்கிரம்” எனக் கடைக்காரர் அவசரப் படுத்தலுக்கு இடையே சுபாவுக்கு அன்றைய பணிச் சுருக்கம் பற்றித் தெரிவிப்போம். விரிவாக எழுதவோ, சிந்தனை செய்யவோ எங்களுக்கும் நேரம் இருக்காது; கடைக்காரரும் விடமாட்டார்.
பணி எங்களால் தாமதம் ஆனதாக எப்போதுமே இருந்ததில்லை; செங்கல்பட்டில் இருக்கும் முகவரிகள் ஒவ்வொன்றாகத் தேட ஆரம் பித்தோம்.
Kumuthavalli .Dr
District library office
Chengal pattu
என்று ஒரு முகவரி இருந்தது. ஆனால் அங்கே குமுதவல்லியைப் பார்க்க இயலவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன் மாறுதல் பெற்றுச் சென்று விட்டாராம். நாங்கள் முயன்று D.L.O எனப் படும் மாவட்ட நூல கரைச் சந்தித்தோம்; ஆனால் அவர் அங்கு மூன்று கட்டு ஓலைச் சுவடிகள் முன்பு இருந்ததாகவும், ஆனால் அதைச் சென்னைப் பல் கலைக்குத் தந்து விட்டதாகவும் கூறினார். நாங்கள் தொடர்ந்து இரண்டு நாள்களாக அலைந்து அன்றுதான் இதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. எங்கிருந்தாலும் சரியான இடத்திற்குப் போய்ச் சேர்ந்தால் நன்மை தானே என்று அடுத்த இடத்தை நோக்கி நடந்தோம் .
அடுத்து பெரிய மணியகாரர் வீதியில் கருணாகரன் என்று ஒரு முகவரி இருந்தது, முழுமையான முகவரியாக இல்லாததால் கொஞ்சம் அலைய நேர்ந்தது. ஆனால் நாங்கள் ஒரு கேள்விக் கொத்து இதற்குள் தயாரித்து வைத்திருந்தோம். இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்க ஆரம்பித்தால் எப்படியும் எங்களுக்கு முகவரி இருக்கும் இடம் தெரிந்து விடும். அத்த கைய மாயக் கேள்விகள் அவை. சீராக பதிலளிப்பவரிடம் இருந்து சிந்தனையைச் சரியாகக் கொண்டு செல்லும் பாதை அடங்கிய கேள்விக் கொத்து அது. அதன்படி கருணாகரனின் முகவரியை சரியாகக் கண்டு பிடித்து விட்டோம். அங்கே சென்றால் அவர் எங்களை ஆச்சரியப்படுத்தினார். எங்களை வரவேற்று அவரிடம் இருந்த ஒரு கட்டுச் சுவடியைக் காட்டிய கருணாகரன் ," இதை வாங்க யாரோ வருவார்கள் என்பது எனக்குத் தெரியும், சித்தர்கள் எந்த ரூபத்தில் வருவார்களோ தெரியாது ஆனால் எதிர்பார்த்தேன் " எனக் கூறி எங்களை வியப்பில் ஆழ்த்தினார்; சுவடியைக் கொடையாகவும் தந்து விட்டார். என்னமோ அவரின் உள்ளுணர்வு அப்படிக் கூறி இருக் கிறது . பிறகு " இத்தனை வேர்க்க விருவிருக்க வந்திருக்கிறீர்களே, ஏதாவது குளிர் பானம் சாப்பிடுகிறீர்களா ? " என அன்புடன் வினவினார். எங்களுக்கோ அதிகம் பேசாமலேயே ஒரு கட்டு ஓலைச் சுவடி கிடைத்தது பரம சந்தோஷம் ஆயிற்று. எனவே அவருடைய அன்பிற்கு நன்றி கூறி விடை பெற்றோம். எங்களுடைய வழக்கமான வளவளப் பேச்சு அடுத்த இடத்திற்காக சேமிப்பு ஆனது. பேச்சைக் குறைத்தால் தானே பெரிய சாதனைகள் செய்யமுடியும் !
அடுத்துக் கிள்ளிவளவன் என்று ஒரு முகவரி. அங்கே போய்ப் பார்த்த போது அவர் செங்கல்பட்டு அரசு கலைக்கல்லூரியில் துறைத் தலைவ ராகப் பணிபுரிவது தெரிந்தது. அவர் எங்களுக்குப் பயனுள்ள குறிப்புகள் பல கொடுத்தார். அவரிடம் நன்றி கூறிப் புறப்பட்டோம் .
பெரிய நெமிலி என்ற இடத்தில் கோவிந்த நாயக்கர் என்பவரிடத்தில் ஒரு கட்டுப் பெற்றோம் .
அடுத்துக் காஞ்சிபுரம் சென்றோம் . அங்கே
NARAYANA SEVASRAMA
VAITHHIYA SALAI
என்று ஒரு முகவரி இருந்தது . அந்த இடத்திற்குப் பலரை விசாரித்தபடி சென்றோம். அது ஒரு சிறந்த வைத்திய சாலையாக விளங்கியது. அது ஆன்மிகம் சம்பந்தப்பட்ட ஒரு வைத்திய சாலை. பல நோயாளிகள் அங்கே காத்துக் கிடந்தனர். சிறப்புச் சிகிச்சைகள் பல இங்கே அளிக் கப்படுவதாக அங்கே காத்திருந்தவர்கள் கூறினார்கள். அங்கே ஒரு தெய்விகக் களை வீசியது. எங்களுக்கும் இங்கே ஏதாவது சுவடிகள் கிட்டும் என்ற ஆசை மனத்தில் துளிர்த்தது.
எங்கள் அலைச்சலுக்கு பதிலளிக்க ஓர் அலுவலர் வந்து சேர்ந்தார். அவர் எங்களை அமரச்சொல்லி, அவர்களுடைய வைத்தியச் சிறப்பு களைக் கூறி, ஓலைச் சுவடிகள் ஏதும் தற்போது இல்லை என்றார். அங்கே ஜீவ சமாதி ஆன முந்தைய மூன்று சாமிகளைப் பற்றிக் கூறி மூன்று இடங்களைக் காட்டினார்; அவை கோவில்களாக தற்போது விளங்குகின்றன. மீண்டும் ஒரு முறை வரவேண்டும் என்ற பட்டியலில் இதையும் மனத்தில் சேர்த்துக் கொண்டு, நன்றி கூறி அடுத்த இடம் நோக்கிவிரைந்தோம்.
அடுத்து
SRINIVASA BHATTAR
LITTILE KANCHIPURAM
SOUTH MADA STREET
KANCHIPURAM
என்ற முகவரிக்குச் சென்றோம். தெற்கு மாட வீதியா? மாட வீதியா என்ற சந்தேகம் வந்தது; ஆனாலும் விசாரித்துச் சென்றோம். அது தெற்கு மாட வீதிதான். வரதராஜ ஆலய மாட வீதி அது; ஆனால் நாங்கள் போவதற்குள் ஸ்ரீனிவாச பட்டர்தான் அவசரப்பட்டு இறந்து விட்டார் .
இறந்து சில ஆண்டுகள் ஆவதாக அவர் மகன் ரங்க பட்டர் தெரிவித்தார். அவர் நல்ல சாஸ்திர நிபுணராகத் தென்பட்டார். அவரின் தந்தையைக் காண முடியாமல் போனது குறித்து அவரிடம் வருத்தம் தெரிவித்தோம். குடும்பமே பாரம்பரியமான அறிவு ஜீவிகள். வேத
விற்பனர்கள், சாஸ்திர நிபுணர்கள். ரங்க பட்டர் அவர்களிடம் மூன்று கட்டுகள் கோயில் கட்டும் கலை பற்றிய சாஸ்திரம் பரிபூரணமான ஒரு நூலாக இருந்ததாகவும், அதில் கோயில் எழுப்ப முதலில் பூமி பரீக்ஷை செய்வது எப்படி என்பதில் தொடங்கி, கும்பாபிஷேகம் செய்வது எப்படி என்பது வரை அனைத்து விபரங்களும் பூரணமாக இருந்ததாகவும், அதன் தொன்மையையும் அருமையையும் அறிந்த பல வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஜெர்மனி ,அமெரிக்கா முதலிய இடத்தில் இருந்து வந்து பார்த்துக் குறிப்பெடுத்துச் சென்றதாகவும் எங்களிடம் கூறினார். அவர் கூறக் கூற எங்களின் ஆவலும் அதிகம் ஆயிற்று.
இப்போது அந்தச் சுவடிகள் எங்கே? நாங்கள் பார்க்கலாமா என்றோம் ;ஆனால் அவர் அந்தச் சுவடிகளை ஆராய்ச்சிக்காக பரோடா பல்கலையில் இருந்து வாங்கிச் சென்றிருப்பதாகவும் , அவைகளைக் கொடை யாகத் தரவில்லை, இரவலாகத்தான் தந்திருக்கிறோம் என்றார். எங்களுக்கு இத்தகைய அருமையான சுவடிகளைக் கண்ணால் பார்த்துக் கையால் தொட இயலவில்லையே என்ற ஏமாற்றம் உண்டாயிற்று. பிறகு ரங்க பட்ட்ர் எதிரே இருந்த ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் இத்தகைய சாஸ்திர பிரமாணமாக, ஒரு முன் மாதிரியாகக் கட்டப் பட்டிருப்பதாக அக்கோவிலைப் பற்றியும் விரிவாகக் கூறினார்.
மீண்டும் வந்து பார்க்க வேண்டிய பட்டியலில் அவரையும் வரதராஜப் பெருமாளையும் சேர்த்துக் கொண்டு அவசரமாக அங்கிருந்து புறப் பட்டோம் இத்தனையும் நடந்து கொண்டிருக்கும் போதே இடை இடையே முனைவர் கோவை மணி வக்கீல் நரேந்திர குமாரிடம் பேசிக் கொண்டி ருந்தார். முதலில் கொஞ்சம் பிடி கொடுக்காமல் பேசிய நரேந்திரன் கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் இருந்த மூன்று சுவடிக் கட்டுகளை யும் கொடையாகத் தர சம்மதித்தார். எங்களைப் பற்றிய எல்லா விபரங்களையும் விரிவாகக் கேட்டதோடு அறிமுக அட்டை இருக்கிறதா என்றும் கேட்டார். எங்களிடம் இந்த தேடுதல் பயணத்திலேயே அறிமுக அட்டையைப் பற்றிக் கேட்ட முதல் மனிதர் இந்த வக்கீல் நரேந்திரன் தான். வக்கீல் அல்லவா ? அவர் தொழிலில் கெட்டிக்காரராக இருந்தார் . எங்களை மாலையில் காஞ்சிபுரத்தில் ஒரு முகவரி தந்து அங்கே வரச் சொன்னார். நாங்களும் அவர் கூறிய முகவரிக்கு அவர் சொன்ன நேரத்தில் சரியாகப் போய்ச் சேர்ந்தோம் .
அங்கே வக்கீல் நரேந்திரன் எங்களுக்காகக் காத்திருந்தார். அது ஒரு அச்சகம். அதன் பெயர் அன்பு அச்சகம் என்று இருந்தது. நரேந்திரன் மூன்று சுவடிக் கட்டுகளையும் எடுத்து வந்து காண்பித்தார். திரு வேங்கட மாலை, அருணாசல புராணம், தவிர நாலடியார் போன்ற நீதி நூல்களும் அவற்றில் இருப்பதாக அவர் கூறினார்.
அவர் தரும் இந்தக் கொடையில் அவரது தாத்தாவான தம்பிரான் நாயக்கர், மகன் லட்சுமணன், பேரன்கள் மூன்று பேர் மேலும் அவர்கள் அம்மா பெயரும் இடம் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் அவரது உறவினரான பேரா. ஸ்ரீநிவாசன் வளசரவாக்கம் சென்னை என்பவரிடம் நிறையச் சுவடிகள் இருப்பதாகத் தகவல் தெரிவித்து அவரின் தொலைபேசி எண்ணும் தந்தார். முனைவர் கோவை மணி உடனே அவரிடம் தொலைபேசியில் பேசினார். நரேந்திரனும் அவரிடம் எங்களைப்பற்றிக் கூறி எங்களிடம் சுவடிகளைத் தரலாமா என மீண்டும் கேட்டார். நீண்ட நேரம் எங்களுடன் பேசினார். அவரிடம் சுவடிக் கட்டுகளைப் பெற்றுக்கொண்டு நன்றி கூறி விடை பெற்றோம். அத்துடன் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் எங்கள் தேடுதல் பயணம் முடிவடைந்தது. ஐந்து நாட்கள் ஓடியதே தெரிய வில்லை; எங்கள் ஓட்டத்தைப் போலவே நாட்களின் செல்லும் வேகமும் இருந்தது.
அடுத்து நாமக்கல் மாவட்டத்தில் தேடுதல் ஆரம்பிக்கத் திட்டம் வகுத்து அனைவரும் அவரவர்கள் இடம் நோக்கிய பயணத்தை நிறைந்த மனத்துடன் தொடங்கினோம். முனைவர் கோவை மணியும் பெட்டிகள் நிறைய ஓலைச்சுவடிகளுடன் தஞ்சை நோக்கிப் பயணம் தொடங்கினார்.
இன்னும் கொஞ்சம் சுவடிகளைப் பார்க்க அடுத்த பகுதிவரை காத்திருக்கவேண்டும் .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்