Home Palm Leaf 17 – காஞ்சிபுரம்

17 – காஞ்சிபுரம்

by Dr.K.Subashini
0 comment

ஓலைச்சுவடிகள் தேடிய படலம் —  ௧௭  (17)

 

அடுத்து நாங்கள்  தேடுதலுக்குப் புறப்பட்ட ஊர் மதுராந்தகம்.

 

பெயரைக் கேட்ட உடனேயே  கல்கியின் பொன்னியின் செல்வன் பாத்திரமான  மதுராந்தகனை  நினைவுபடுத்தும் ஊர்.   உத்தம சோழன் எனப் பெயர் பெற்ற மதுராந்தகன்  கி.பி 950 முதல் கி.பி 957 வரை சோழ நாட்டை ஆண்ட கண்டராதித்தியரின் மகன் ஆவார்.  இவர்  12 ஆண்டுகள் சோழநாட்டை ஆட்சி புரிந்தார் . இவருக்கு பின் இவர் முடிதுறந்ததுமே அகிலம்  போற்றும் ராஜராஜர் ஆட்சிக்கு வந்தார். இது பற்றி ஏதாவது சரித்திர ஆதாரங்கள் இந்த ஊரில் கிடைத்ததா எனத் தெரிய வில்லை;  அதுதான் பெயர்க் காரணமா என்றும் தெரியவில்லை. கடலூர் மாவட்டத்தில் கூட ஒரு மதுராந்தக நல்லூர் உள்ளது.  மதுராந் தகத்தில் இருக்கும்  ஏரிகாத்த ராமர் பலர் உள்ளம் கவர்ந்தவர். இதுவே ஸ்ரீமத் ராமானுஜர் தீட்சை பெற்ற இடம்.

 

மதுராந்தகத்தையும்  சோழ  வரலாற்றையும் இணைக்கும் ஆதாரம் இருக்கிறதா என  சந்தேகம் இருந்தாலும், பல்லவர்களும் சோழர்களும் காஞ்சிபுரம் மாவட்டத்தில்  ஸம்ஸ்க்ருதப் படிப்புக்கும், இலக்கிய வளர்ச் சிக்கும் நிலையான ஆதரவு தந்ததற்குப் பல ஆதாரங்கள்  இந்த மாவட்டத்திலும், அருகில்  விழுப்புரம் மாவட்டத்தில்  இருக்கும்  எண்ணாயிரத்திலும்   கிடைத்துள்ளன.  வேதங்களும் தத்துவங்களும் படிப்பதற்குக் கல்லூரிகளும் மடங்களும் ஏற்படுத்தி அவற்றுக்கு அறக்கட்டளைகள்  ஏற்படுத்தப் பட்டிருந்தன. பிரபாகர மீமாம்ஸமும், ரூபாவதாரமும் பெருவாரியாகப் படிக்கபெற்றதற்குக்  கல்வெட்டுகள் சான்று பகர்கின்றன . முதலாம் ராஜேந்திரன் ஆணைப்படி அவர் காலத்தில் தற்போது தென்னாற்காடு மாவட்டத்தில் இருக்கும் எண் ணாயிரம் ராஜராஜ சதுர்வேதி மங்கலத்துச்  சபையார் அந்த ஊர்க் கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு உணவளிப்பது என்றும், ஆசிரி யர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்வதென்றும் அரசாங்க அதிகாரி ஒருவர் முன்னிலையில் முடிவு செய்திருந்தார்கள். இளநிலை மாணவர்கள் 270 பேரும், முதுநிலை மாணவர்கள் எழுபது பேரும் ஆசிரியர்கள்  14 பேரும்  இருந்திருக்கக்  கூடும் என்று தெரிகிறது; பிரும்மசாரிகளான இளங்கலை மாணவர்கள்  270 பேரில் ரூபாவதார இலக்கணத்தை 40 பேர் படித்தார்கள்; ஏனையோர் மூன்று பிரிவினராக ரிக் வேதத்தை 75 பேரும்,  யஜுர் வேதத்தை 75 பேரும், வாஜபேய ஸாமவேதத்தை இருபது பேரும் , சந்தோக ஸாமவேதத்தை இருபது பேரும், தலவகார ஸாமவேதத்தை இருபது பேரும் , அதர்வண வேதத்தைப் பத்துபேரும் , எஞ்சிய பதின்மர் போதாயான கிருஹ்ய சூத்திரம்,  போதாயான கல்ப சூத்ரம்,  போதாயான ஞான சூத்திரம் ஆகிவவற்றையும்  பயின்றனர் எனத் தெரிகிறது.  இந்த இளநிலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் நாள்தோறும் ஆறு நாழி நெல் கொடுக்கப்பட்டது. சாத்திரர் அல்லது முழு நிலை மாணவரான 70  பேருக்கு 10  நாழி நெல் நாள்தோறும் வழங்கப்பட்டது. இந்தச் செய்திகள் எல்லாம்  கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியின் ’சோழர்கள்’  என்னும் நூலில் விரிவாக இடம் பெற்றுள்ளன.

 

 

நாங்கள்  செல்ல இருப்பதும்  மதுராந்தகத்தில் இருக்கும்  Sanskrit School, Ahobila matam , Madurantakam    என்று இருந்த முகவரிக்குத் தான்; எனவே எங்கள் சிந்தனையும் ஸம்ஸ்க்ருத கல்லூரிகளுக்கு அந்த நாளில் அரசர்கள் ஆதரவளித்த முறைகளைப் பற்றியே  ஓடியது வியப்புக்குரியதன்று.

 

நாங்கள்  அன்று காலையும்  வழக்கம் போல் எட்டு மணிக்கு நாங்கள் தங்கி இருந்த செங்கல் பட்டு விடுதியில் இருந்து  புறப்பட்டு ஒன்பது மணிக்கே மதுராந்தகத்தில் அந்த ஸம்ஸ்க்ருத கல்லூரியின் வாசலில் போய் நின்றுவிட்டோம். உள்ளே சென்று தலைமை ஆசிரியர் முனைவர் பதரியைச் சந்தித்தோம். அப்போது அவர் பாண்ட்டு சட்டை அணிந்து எங்களைப் போலவே  சாதாரணமாகக் காட்சியளித்தார்.

 

 

இன்னும் சிறிது நேரத்தில் வகுப்புகள் ஆரம்பிக்கும் போது வேதகாலச் சீருடைக்கு  மாறிவிடுவோம் என்றார் அவர். அவர்களின் சீருடை என்ன தெரியுமா? பஞ்சகச்சம் வைத்து வேட்டியும். மேலே சட்டையில்லாத உடம்பை மூடும் அங்கவஸ்திரமும், சீராக முடிக்கப்பட்ட சிகையும் ஆகும். மாணவர்களும் அவ்வாறே சீருடை அணிந்து அப்போது காலை வழிபாட்டிற்காகக் கூட ஆரம்பித்திருந்தார்கள் .இவ்வாறு வித்தியாச மான முறையிலே வேதகால பாணியில் உடையணிந்து கல்வியில் சிரத்தையுடனும்,  ஒழுக்கத்துடனும் முகத்தில் தேஜசுடன்  குழும ஆரம்பித்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் பார்த்த கணமே எங்களுக்கும் உடலெங்கும் ஒரு புனிதச் சுழலின் தாக்கம் பரவ ஆரம்பித்தது; ஆனால் வழிபாட்டு சமயம் வெளியாட்கள் இருக்கக் கூடாது என்ற சம்பிரதாயமோ என்னவோ தலைமை ஆசிரியர் முனைவர் பதரி எங்களை வற்புறுத்தி  அருகில் இருந்த காப்பிக் கடைக்கு அழைத்துச் சென்றுவிட்டார்; எங்களுக்கு அங்கேயே  இருந்து அந்த மாணவர்களின் வழிப்பாட்டைப் பார்க்கவேண்டும்  என்ற ஆவல் இருந்தாலும் முனைவர் பதரியின் அன்பைத்தட்ட முடியாமல் அவருடன்  சென்றோம். அங்கே காபி அருந்தியவாறு  அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர் ஓரியன்ட் உயர் நிலைப்பள்ளி என்று அரசின் கல்வித் திட்டத்துடன்  உயர்நிலைப் பள்ளியும், ஸம்ஸ்க்ருத கல்லூரியும் அங்கே நடைபெறுவதாகவும், முனைவர்  பதரி  தாம் உயர்நிலை பள்ளிக்குத் தலைமை ஆசிரியர் ஆகவும், ஸம்ஸ்க்ருதக் கல்லூரிக்குத் தனியாக ஒரு முதல்வர் இருப்பதாகவும் தெரிவித்தார்.  அங்கே அவர்களிடம் கல்விக்காகப் பண்டைய நூல்கள் ஓலைச் சுவடி வடிவில் சுமார்  152  கட்டுகள் இருப்பதாகவும், ஏடுகளின் எண்ணிக்கையில் அவை சுமார்  20,000 இருக்கலாம்  என்றும்  தெரிவித்தார்;  ஆனால் அவை அவர்களின் பயன்பாட்டில் இருப்பதால் அவற்றை நாங்கள் காணலாமே தவிரக் கொடையாகப் பெற இயலாது என்றார். எங்களுக்கு இத்தனை கட்டு களையும் ஒரு சேரக் காணப் போகும் மகிழ்ச்சி உண்டானது.

 

 

ஒருவாறு காப்பி அருந்தியபிறகு பள்ளிக்குச் சென்றோம். சென்றபோது காலை வழிபாடு முடிந்து பல்வேறு வயதில் இருந்த மாணவர்கள் சாரி சாரியாக அவரவர் வகுப்புகளுக்குச் சென்றுகொண்டு இருந்தனர்; வித்தி யாசமான இந்தக் காட்சி எங்கள் மனத்திலும் சற்று வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அந்த வித்தியாசம் ஒரு அசாதாரணப் பரவசம். எங்களுடன் வந்த முனைவர் பதரியும் எங்களை அமரச்சொல்லிவிட்டு தனியே போய் உடை மாற்றிக்கொண்டு,  புதிய மனிதராக வந்து அமர்ந் தார். தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் அந்த பாரம் பரிய உடை அவரிடம் தலை முதல் பாதம் வரை  ஒரு தெய்விகத் தோற்றத்தை ஏற்படுத்தியது. பிறகு எங்களை நூலகத்திற்கு அழைத்துச் சென்று சுவடிகளைக் காண்பிக்குமாறு அலுவலர்  ஒருவரை எங்களுடன் அனுப்பினார். நூலகத்தைப் பார்த்துவிட்டுப் பிறகு முதல்வரையும்  சந்தித்துப் பேசிவிட்டு வருமாறு எங்களிடம் கூறினார். நாங்களும் அவரின் அன்பிற்கு நன்றி கூறிவிட்டு அலுவலருடன் மாடிக்குச் சென்றோம்.

நூலகத்தில் அடுக்கடுக்கான சுவடிகள் சீராகப் பாதுகாக்கப்பட்டு, ஒவ்வொரு கட்டும்  தனித்தனியே அதற்கெனத் தைக்கப்பட்டிருந்த துணிப் பைகளில் வைத்துப்  பாதுகாக்கப்பட்டிருந்தன . அங்கே அமர்ந்து இருவர் சுவடிகளைப் பிரித்து எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஓலைச் சுவடிகள் நல்ல முறையில் பாதுகாக்கப்படுவதாக முனைவர் கோவை மணி கூறினார்; பிறகு நாங்கள் முதல்வர்  V.  ராஜகோபால் அவர்கள் அறைக்குச் சென்றோம்; அவர் எங்களை வரவேற்று அமரச் சொன்னார்.  அவரும் ஓலைச்சுவடிகள் எல்லாம் அஹோபில மடத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன; மிக உயர்ந்த நூல்கள்  இங்கே சுவடியில் இடம் பெற்றுள்ளன என்று கூறினார். எனவே அவற்றை நல்ல முறை யில் பாதுகாத்து வருவதாகக் கூறினார். நாங்கள் சுவடிகளை மின் னாக்கம் செய்யவேண்டியதன் தேவை பற்றி அவரிடம் விளக்கிக்  கூறினோம். அவரும் இந்தகைய முயற்சி அவசியம் செய்ய வேண்டியதே எனக் கூறினார். இங்கேயே வந்து சுவடிகளை மின்னாக்கம் செய்வது குறித்து அவர்களுக்கு  மறுப்பு ஏதும் இல்லை எனக் கூறினார்.

 

 

நாங்களும் பிறகு அவர்களைத தொடர்பு கொள்வதாகக் கூறி விடை பெற்றோம்.  பிறகு அங்கே இருந்து மதுராந்தகத்தின் அருகில் இருந்த சில கிராமங் களுக்குச் சென்றோம். மின்னலே சித்தாம்மூர் என்ற கிராமத்தின் அருகில் கீழ அத்திவாக்கம் என்ற இடத்தில் சேதுபதி என்று ஒரு முகவரி இருந்தது; ஆனால் அங்கே சேதுபதிக்குப் பதில்  அவர் வீட்டில் இருந்த ஆனந்த கவுண்டர் என்பவரை சந்தித்தோம். அவரிடம் ஒரு கட்டு மாந்திரீகச் சுவடி இருந்தது .நாங்கள் அதை வாங்கிப் பார்த்தோம். அது குழந்தைகளுக்கு வரும் நோய்களை மாந்திரீகம் மூலம் நீக்கும் முறைகள்  அடங்கியது; பால கிரகம் என்று பெயர்;  ஆனால் ஆனந்தக்  கவுண்டர்  அவற்றைக் கொடையாகத்தர மறுத்துவிட்டார். அவற்றைத் தாம் உபயோகித்து வருவதாகவும், அதை வைத்தே ஜீவனம் நடத்துவ தாகவும் கூறினார் . இன்னமும் ஓலைச் சுவடிகள் பயன்பாட்டில் இருப்பதும், அது அவரின் ஜீவனத்திற்குப் பயன்படுவதும் எங்களுக்கு மகிழ்ச்சி அளித்தது.  கிராமத்தில் இருக்கும் ஒருவர் ஓலைச் சுவடியில் கூறப்பட்டிருப்பதை வைத்துத் தம்மை நாடி வரும் மக்களின்  குழந்தை களுக்கு மாந்திரீகம் மூலம் நிவாரணம் தரும் நம்பிக்கை இன்னும் நீடித்திருப்பது வியப்பையளித்தது. அது மனோதத்துவமோ மாயமோ, மந்திரமோ தெரியாது; ஆனால் மக்கள் வைத்திருக்கும்  நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்கிறது . கையில்லாமல் கூட வாழ்ந்து  விடலாம்,  ஆனால் நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கை ஏது ?

 

இந்தச் சுவடிகள் தான் அவரின் வாழ்வாதாரம் என்று சொல்லும் போது அவரை எப்படி  மேலும் கட்டாயப்படுத்துவது    என நாங்களும் விட்டு விட்டோம்; ஆனால் ஆனந்த கவுண்டர் எப்போது வேண்டுமானாலும் வந்து சுவடிகளை மின்னாக்கம்  செய்து கொள்ளுங்கள் என அப்போதே அனுமதி வழங்கி விட்டார்.

 

மதுராந்தகத்தின் அருகில் பவுண்சூர் என்னும் பகுதியில் திருவாத்தூர் கிராமத்தில் E.L.Narendra kumar  என்று  ஒரு  முகவரி  இருந்தது  ,சிறிய கிராமமாயிற்றே, எப்படியும் கண்டுபிடித்து விடலாம் என்று சுற்றினால் சுற்றிச் சுற்றி வருகிறோமே தவிர  எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

 

சோர்ந்து போய்த் திரும்பலாமா  என எண்ணியபடி என்று ஒரு  சிறிய கடைக்குச்  சென்று கடைசியாகப் புறப்படுவதற்கு  முன் ஒரு முறை கேட்டுப் பார்க்கலாம் என்று முயற்சி  செய்தோம். ஆச்சரியமாக அங்கே நின்று கொண்டிருந்த சிறுவன் ஒருவன் நரேந்திரன் என்ற ஒருவரை தனக்குத் தெரியும்  என்றும், ஆனால் அவர் தற்போது காஞ்சியில் வசிக் கிறார் என்றும் கூறினான். மேலும் நரேந்திரன் தம்பி கமல் என்பவர் அருகே  வசிப்பதாகவும், அவரிடம் சென்றால் நரேந்திரன் கைபேசி எண் கிடைக்கும் என்றும் கூறினான். கைவிட்டு விடலாம் என்று எண்ணிய தருணத்தில்  அது எங்களுக்குக்  கைவசமாவது குறித்து மகிழ்ச்சி உண்டானது. அடித்துக் கொண்டே இருக்கும்போது எந்த அடியில் கல் உடையும் என்று யாருக்குத் தெரியும்? கல் உடையவேண்டும் என முடிவு செய்து விட்டால் அடித்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான். நாங்களும் எப்போதும் நாலா திசையும் எங்கள் விசாரிப்பை வீசிக் கொண்டே இருப்போம். எங்காவது உபயோகமான தகவல் அல்லது வழிகாட்டல் எங்களுக்கு வந்து சேரும். இதுவே  இந்தப் பயணமெங்கும் வாடிக்கை ஆனது.

 

நாங்களும் அந்த சிறுவனைக் கைப்பிடியாகச் சிக்கெனப் பிடித்துக் கொண்டு தம்பி கமலைப் பிடித்தோம். எங்கள் நல்ல நேரம் கமல் வீட்டில் இருந்தார்;  அவரது அண்ணன்தான் நரேந்திரகுமார் என்றார். அவர் வக்கீலாகப் பணிபுரிந்து வருவதாகவும்,  ஓலைச் சுவடிப்பற்றி அவரிடம் பேசலாம் என்றும் கூறி அவரது கைபேசி எண்ணைத் தந்தார் .

 

உடனே அங்கிருந்தே அவரது சகோதரரிடம் பேசினோம். இவ்வளவு சிரமப்பட்டதற்குப் பலன் இல்லாமல் போகவில்லை; அவரிடம் மூன்று கட்டு ஓலைச் சுவடிகள் இருப்பதாகத் தெரிவித்தார்; எங்களுக்கும் திருப்தியானது. 

 

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

You may also like

Leave a Comment