Home HistoryEtayapuram 16 – சீவலப்பேரி

16 – சீவலப்பேரி

by Dr.K.Subashini
0 comment
June 5, 2010
 
சீவலப்பேரியில் ..
 
ஒட்டப்பிடாரத்தில் வ. உ.சிதம்பரனார் இல்லத்தில் குறைந்த நேரமே நாங்கள் இருக்கும் நிலை. ஆக அதே கட்டிடத்தில் உள்ள நூலகத்தை பார்வையிடுவதற்குள் நினைவு இல்லத்தின் பார்வையாளர்களுக்கான நேரம் முடிந்ததால் அங்கிருந்து பயணப்பட ஆரம்பித்தோம்..  அவரது நூல்களுள் சிலவும் அவர் நடத்தியதாக நாங்கள் அறிந்து கொண்ட சில பத்திரிக்கைகளும் கூட அங்கு இருக்க வாய்ப்புண்டு.  ஆனால் இதனை அறிந்து கொள்ள நேரம் இல்லாத நிலையில் புறப்பட வேண்டிய கட்டாயம் எங்களுக்கு!  
 
 
வ. உ.சி அவர்கள் பதிப்பித்த நூல்கள், அவர்  எழுதி வெளியிடப்படாத நூல்களாகக் கருதப்படும் சில நூல்கள் ஆகியவற்றைத் தேடி அவற்றை மின்பதிப்பு செய்ய வேண்டியதற்கான அவசியம் உள்ளது. வ. உ .சி அவர்களின் சிந்தனைகள் மக்களை சென்றடைய வேண்டியதில்  நமக்கும் பெரும் பங்கு இருக்கின்றது. தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளில் இதனையும் நாம் கருத்தில் கொண்டு செய்யல்பட வேண்டும் என்ற நினைப்போடு அங்கிருந்து புறப்பட்டோம். ஒட்டப்பிடாரத்திலிருந்து சீவலப்பேரி வந்து அங்கிருந்து நேராக நெல்லைக்குத் திரும்பலாம் என முடிவானது.
 
ஒட்டப்பிடாரத்திலிருந்து சீவலப்பேரி செல்லும் வழியில் ஒரு பழம் கோயில் ஒன்று தென்பட்டது. சற்று நிறுத்திப் பார்த்துச் செல்லலாம் என  நினைத்து வாகனத்தை நிறுத்தினோம். அந்தக் கோயிலின் பெயர் உலகாண்டேஸ்வரி அம்மன் ஆலயம். இந்த அம்மன் கோயிலின் முன்புறத்தில் ஒரு காத்தவராயன் சிலை ஒன்றும் உள்ளது. 
 
 
ஆலயத்தின் பக்கத்திலேயே வயல்கள். அந்த மாலை நேரத்திலும் வயலில் சிலர் நாற்று நட்டுக் கொண்டிருந்தனர். 
 
 
 
வயலை உழுவதற்காகப் பயன்படுத்தப்படும் வண்டி ஒன்றும் பக்கத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
 
 
சற்று நேரம் இந்த சூழலைப் பார்த்து இயற்கையை ரசித்துக் கொண்டே அன்று நாங்கள் பார்த்த விஷயங்களைப் பற்றிய சிந்தனைகளைப் பரிமாறிக் கொண்டோம். 
 
 
 
இந்தக் குறுகிய இடைவேளைக்குப் பின்னர் எங்கள் பயணம் தொடர்ந்தது. திரு.விஸ்வநாதன் சீவலப்பேரியில் ஒரு பிரசித்தி பெற்ற ஆலயம் இருப்பதாகவும் அங்கு சென்று பார்த்த பின்னர் நெல்லைக்குத் திரும்பலாம் என்று திடீரென்று ஒரு கருத்தைக் கூறினார். கோயிலின் பெயர் விஷ்ணு துர்கை ஆலயம்.  இந்த வட்டாரத்தில் சற்று பிரசித்தி பெற்ற ஆலயமாம். கீதா பகவதி இருவரும் கூட இங்கு வந்து பல நாட்கள் ஆகி விட்டதால் வழியில் நிறுத்தி இந்தக் கோயிலையும் பார்த்து வருவது என முடிவானது.  
 
சீவலப்பேரியில் மேலும் சில பழமை வாய்ந்த ஆலயங்கள் இருக்கக் கூடும். வாகனத்தில் பயணிக்கும் போதே தூரத்திலிருந்து மேலும் ஒன்றிரண்டு ஆலயங்கள் வழியில் தென்பட்டன. சற்று நேரத்தில் திரு.விஸ்வநாதன் குறிப்பிட்ட விஷ்ணு துர்க்கை ஆலயத்தை வந்தடைந்தோம். இது மிகப் பழமையான ஆலயமாக இருப்பதற்கான வாய்ப்பில்லை என்பதை ஆலயத்தை பார்த்தபோதே தெரிந்து கொண்டேன். ஆலயம் அமைதியான சூழலில்  நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நாங்கள் சென்ற சமயத்தில் கோயிலில் அர்ச்சகர்கள் அலுவலகத்தோரைத் தவிர வேறு யாருமில்லை.
 
 
கோயிலின் பின் புறத்தில் ஒரு சித்தர் சமாதியும் இருக்கின்றது.  கோயிலின் அமைப்பு மலேசிய ஹிந்து ஆலயங்களின் தோற்றத்தை எனக்கு நினைவூட்டுதாக அமைந்திருந்தது. ஆலயத்தில் வழிபாடு செய்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டோம். 
 
 
சீவலப்பேரியிலிருந்த நெல்லை செல்லும் பாதை செல்வதற்கு பிரச்சனைகள் இல்லாத, ஓரளவு நன்றாக அமைக்கப்பட்ட நிலையிலேதான் இருக்கின்றது. பொதுவாக இப்பகுதியில் வாகனங்கள் பயணிப்பது சற்று குறைவாக இருப்பதனால்  எங்கள் பயணம் சுகமான ஒன்றாகவே அமைந்திருந்தது. சாலையில் சென்று கொண்டிருக்கும் போது வழியில் ஒரு பழைய தேர் ஒன்று நிறுத்தி வைக்கப்படிருப்பதைக் கண்டேன்.
 
 
சற்று அங்கே வாகனத்தை நிறுத்தி விட்டு பார்த்த போது மிக அழகாக மரத்தால் வடிவமைக்கப்பட்ட அந்த தேர் சக்கரம் ஒன்று உடைந்த நிலையில் புழக்கத்தில் இல்லாத நிலையில் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை உணர முடிந்தது. அந்த தேருக்குப் பக்கத்தில் ஒரு மிகச் சிறிய பாழடைந்த ஆலயம் ஒன்று சிதிலமடைந்து ஒரு சிறு பகுதி மட்டும் உள்ளது. அதில் இருக்கும் தெய்வ வடிவம் என்ன என்பது தெரியவில்லை. யாராவது ஒரு சித்தரின்  சமாதியாக இருக்கலாமோ என்ற எண்ணமும் கூட தோன்றியது.
 
 
 
 
இந்தப் பெரிய உடைந்த தேர் அந்தப் பாழடைந்த சிறு கோயிலை மறைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தது. இந்தத் தேர் உடைந்து பயன்பட்டில் இல்லாத நிலையிருந்த போதிலும் அதன் மர வேலைப்பாடுகள் பார்ப்பவர்களைப் பிரமிக்க வைக்கும் வகையில் இருந்தது என்று தான் கூற வேண்டும். 
 
 
சீவலப்பேரியிலிருந்து தொடர்ந்து பயணிக்கும் போது சாலைக்குப் பக்கத்திலேயே தாமிரபரணி ஆறு ஓடிக் கொண்டிருப்பதையும் நாங்கள் பார்க்கத் தவறவில்லை.  அந்த மாலை வேளையில் ஆற்றின் கறைகள் மிகப் பசுமையாக மிக ரம்மியமாக காட்சி அளித்துக் கொண்டிருந்தது. சாலையில் ஆங்காங்கே சில கோயில்கள். பெரும்பாலும் காவல் தெய்வங்களின் கோயில்கள்.  அன்றும் கூட ஏதோ ஒரு திருவிழா ஏற்பாடாகியிருக்க வேண்டும். தாமிரபரணி ஆற்றங்கரையின் ஒரு பகுதியில் சிலர் கூடி இருந்தனர்.
 
 
 
மஞ்சள் நிற வேட்டி துண்டு அணிந்த ஆடவர்களில் சிலர் காவடி எடுப்பதற்காகத் தங்களை ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்தனர். இவர்களை உற்சாகப்படுத்த கிராமிய இசைக் கலைஞர்கள்  வாத்தியக் கருவிகளுடன் கூடியிருந்தனர். ஆற்றங்கரையில் பூஜை செய்து அங்கிருந்து காவடி எடுத்துக் கொண்டு புறப்படுவார்கள் போலும். சற்று நேரம் அங்கிருந்து இதனை பார்த்துக் கொண்டிருந்து விட்டு புறப்பட தயாரானோம். அப்போது சாலையின் குறுக்கே அழகிய மயில் ஒன்று எங்களை கடந்து சென்றது. 
 
 
இந்த சூழல் மறக்க முடியாத மிக அழகிய காட்சியாக என் மனத்தில் இன்றும் நிறைந்திருகின்றது.  
 
அன்புடன்
சுபா
 

 

You may also like

Leave a Comment