Home Palm Leaf 11 – திருவள்ளூர்

11 – திருவள்ளூர்

by Dr.K.Subashini
0 comment

 

ஓலைச்சுவடிகளைத   தேடிய  படலம்  ! –  ௧௧  (11 )

களப்பணி   அறிக்கை

ஆறுமுகமங்கலத்திலிருந்து ஆழ்வார்திருநகரிக்குப்  போய்விட்டுத்   திருநெல்வேலி வந்தேன். தெற்குப் புதுத் தெருவிலிருந்த வக்கீல் சுபபையா பிள்ளை என்பவரிடம் சில ஏடுகள் உண்டென்று கேள்வியுற்று அங்கே சென்றேன்.


"எங்கள் வீட்டில் ஊர்க்காட்டு வாத்தியார் புத்தகங்கள் வண்டிக்கணக்கில் இருந்தன. எல்லாம் பழுதுபட்டு ஒடிந்து உபயோகமில்லாமல் போய் விட்டன. இடத்தை அடைத்துக்கொண்டு யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் இருந்த அவற்றை எனன செய்வதென்று   யோசித்தேன். ஆற்றில் போட்டு விடலாமென்றும் ஆடிப்பதினெட்டில் சுவடிகளைத் தேர் போலக்கட்டி விடுவது சம்பிரதாயமென்று சில முதிய பெண்கள் சொன்னார்கள்; நான் அப்படியே   எல்லா ஏடுகளையும்  ஓர்  ஆடிப் பதினேட்டில் வாய்க்காலில் விட்டுவிட்டேன்" என்றார். 
     
                                                                                    உ வே சா  அவர்களின் ’என் சரித்திரம்’ எனும் நூலில் இருந்து

 

சிறியவயதில் ஆடிப் பதினெட்டில் சப்பரம் எனும் சிறிய தேர் செய்து அதை இழுத்துக்கொண்டு ஆற்றங்கரை சென்றதுண்டு;  ஆனால் நல்ல வேளையாக அதில்  சுவடிகளை  வைத்து  யாரும் இழுத்து சென்றதைப் பார்த்ததில்லை; ஆனால் இந்தப் பழக்கம் ஏன் வந்திருக்கிறது என்று தெரிந்தபோது  மனம் பதறுகிறது.
உலகின் எந்த ஒரு நாட்டிலும்  அவர்களின் பழைய அறிவுச் செல்வங்களான சுவடிகளுக்கு  இத்தகைய ஒரு முடிவு கிடைத்ததாக எந்தச் சான்றும் இல்லை; ஆனால் நாம் மட்டும் ஏன்  அப்படிச் செய்தோம ?  சுவடிகள் ஹோமத்தீயில் ஆஹுதி ஆகிறது.

 

கட்டுக்கட்டாக ஆற்றில் வரும்  புது வெள்ளத்தில் பூசனை செய்து விடப்படுகிறது !  ஏன் இப்படி ? நம் மரபுச் செல்வங்கள் மட்டும்   ஏன்  நம்மால்  மதிக்கப்படவில்லை ?
 
இப்படி அழிந்த செல்வங்கள் எத்தனை எத்தனையோ !
 

முடிவடைந்த திருவள்ளூர்த் தேடல்

ஆடவல்லான் நாட்டியமாடிய பஞ்ச சபைகளில் முதல் தலமாவதும்,  ரத்தினசபை என்றழைக்கப்படுவதுமான திருவாலங்காட்டுக்கு நாங்கள் மீண்டும் போக நேர்ந்தது. பலாவனத்தில்  இருந்து ஆலங்காட்டிற்குச் சென்றோம்.  ஆலங்காட்டிலும் சிதம்பரம் மாதிரி ஒரு  ரகசியம் மறைந்து கிடக்கிறது. நடராஜருக்குப்  பின்புறம் சன்னிதியில் பாதியை மறைத்துச் சுவர் கட்டப் பட்டுள்ளது; இதற்குள் எப்போதும்  காரைக் காலம்மையார் சிவ தாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருப்பதாக ஒரு வரலாறு  இருக்கிறது.  காரைக்காலம்மையார் மூத்த திருப்பதிகம் பாடி, முக்தியடைந்த ஸ்தலம் இதுவே.

திருவாலங்காட்டில் பட்டியலின் படி நிறைய முகவரிகள்  இருந்தன.

நாங்கள் ஒவ்வொன்றாகப் பார்த்து வந்தோம். பலருக்கும் ஓலைச் சுவடியுடன் தொடர்பே  இல்லை எனக் கூறிவிட்டார்கள். ஆனால் அதில் கணேசன் என்பவர் மட்டும் ” சுமார்  120  ஆண்டுகளுக்கு முன் எம்  முன்னோர் வருடாவருடம்  நாடகம் போடுவது உண்டு. அது சம்பந்த மான மகா பாரதக்கதைகளைக் கவிதையாக எழுதிய  ஓலைச்சுவடிப்   பாடங்கள்  எங்கள் வீட்டில் இருந்தன; ஆனால் நாங்கள் படித்துவிட்டு வேறுவேறு   வேலைகளுக்கு இரண்டு தலைமுறையாக போகத் தொடங்கியதும் இந்த நாடகம் போடும் வழக்கம்   எங்கள் குடும்பத்தை விட்டுப் போய்விட்டது" என்றார். 

 

அவரது பாட்டனார் பெயர் தாண்டவ ராய ரெட்டியார்.  அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற சகோதரர்கள் பெயர்கள்  எங்கள் பட்டியலில்  இடம் பெற்றிருந்தன.  ஆவலை அடக்க முடியாத நாங்கள் "எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கி றோம்  கொஞ்சம் தேடிப்பாருங்கள் " என்று நயமாகப் பேசத்தொடங்கி னோம் .  அவர் ” நான் அரசுப்  போக்கு வரத்துத்துறையில் நடத்துனராக இருக்கிறேன் . எனக்கு இந்த ஓலைச் சுவடி பற்றிய அறிவோ, ஆவலோ கொஞ்சம் கூடக் கிடையாது; நான் வீடு கட்டிக்கொண்டு தனியே வந்து விட்டேன்; அப்போதில் இருந்தே நான் வீட்டில் எந்தச்  சுவடிகளையும் எப்போதும் கண்டதில்லை ; எனவே தேடவேண்டிய அவசியமே இல்லை” என்றார்; ஆனாலும்  வாடத்தொடங்கிய எங்கள் முகத்தைக் கண்டு எனன நினைத்தாரோ  " சரி,  வாருங்கள். எங்கள் பூர்வீக வீட்டில் இப்போது எங்கள் அண்ணன்தான்   இருக்கிறார்; அவரிடம் அழைத்துப் போகிறேன்"  என்றார். எங்கள் முகவரிப் பட்டியலில்  அவர் அண்ணன்  பெயரும் இருந்தது; எப்படியும் போகத்தான் போகிறோம்; ஆனால் அலைந்து  திரிந்து போவதைவிட வழி தெரிந்தவர் கூடப் போவது சுலபமல்லவா?  எனவே சந்தோஷத்துடன்   அவருடன் புறப்பட்டோம் .

அவர் அண்ணன் திரு கோதண்டம்  வீட்டிற்குச்  சென்றடைந்தோம் .

தம்பி உள்ளே சென்றுவிட்டு வெளியில் வந்தார் ."அண்ணன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். நீங்கள் வந்திருப்பதைக் கூறிவிட்டேன், அவர்  உட்காரச் சொன்னார் " என்றார்.  உட்கார்ந்ததும் ஆசைகள் கிளை விட்டுப் பெருக ஆரம்பித்தன. நிச்சயம் ஏதோ பெரிதாக இங்கே கிடைக்கப் போகிறது என எண்ணங்கள் ஓடத்தொடங்கின. உட்காரச் சொன்ன தம்பி அதற்குள் போய் எங்களுக்கு குளிர்பானம்  வாங்கி வந்துவிட்டார்.  நாங்கள் இந்த இரண்டு மாதத்தில் நாங்கள் சென்னையில் இருந்து  கன்னியாகுமரிவரை சுற்றி வந்து விட்டோம்.  இதில் வாழும் தமிழரிடம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அதிசய குணம் இந்த விருந்தோம்பல்தான்.  அனைவருமே கட்டாயமாக வீட்டுக்கு வருவோருக்கு ஏதாவது உண்பதற்கோ, குடிப்பதற்கோ தர  விரும்புகிறார்கள்; அதை மறுப்பது அவர்களுக்குப் பிடிப்பதில்லை.  எனவே நாங்களும் விருப்பமுடன் ஏற்றுக் கொள்வோம்;  இது மேலும் ஒரு சுமுக நிலையையும் அங்கே தோற்றுவிக்கும்.
சில இடங்களில் குடிக்க நீராவது கொடுக்காமல் இருப்பதில்லை.

நீரை மட்டும் வாங்கிப் பேசாமல் கொஞ்ச நேரம் கையில் வைத் திருந்து, பிறகு அவர்கள்  பார்க்காத போது மெல்லக் கீழே வைத்து விடுவோம். ஓர் இடத்தில் இப்படித்தான் உற்சாக மிகுதியில் தட்ட மாட்டாமல் அவர்கள்  கொடுத்த தண்ணீரைக் குடித்த்தால் அன்றைய இரவே மாத்திரை வாங்க  நூறு ருபாய் செலவு செய்ய நேர்ந்தது; எனவே அது ஓர் எச்சரிக்கையாக  எங்கள் பயணம் முழுவதும் அமைந்தது.
நாங்கள் குளிர்பானம் அருந்தி முடிப்பதற்குள் அண்ணன் கோதண்டமும் சாப்பிட்டுவிட்டு அருகில் வந்து திண்ணையில் அமர்ந்தார்;  கிராமங் களில்தான் இன்னும் சில இடங்களில் திண்ணை இருக்கிறது, இப்படி  உட்கார்ந்து பேச வசதியாக. காற்றோட்டமான  திண்ணைப் பேச்சின் சுகமே தனி !
வழக்கம் போல் எங்கள் அறிமுகம் , எங்கள் பயணத்தின் நோக்கம் இவை பற்றிய விளக்க  உரை எங்களால் அளிக்கப்பட்டது.

அவரும் அவரது மலரும் நினைவுகளில் ஆழ்ந்தார்.

பிறகு " தம்பி சொன்னது உண்மைதான்; நிறையச் சுவடிகள் பலகாலம் எங்களிடம் இருந்தன. இரண்டு தலைமுறையாக எங்கள் குடும்பத்தில் அவற்றைப் படிப்பவர் குறைந்து போனதால்  நாங்களும் சுவடிகளைக் கவனிப் பதில்லை;  அவைகளே மெல்ல மெல்ல அழியத்தொடங்கின. சரஸ்வதி பூஜை காலங்களில் அவற்றைத் தேடி எடுத்து வைத்துப் படைப்ப துண்டு; பிறகு பரண்  மேலேயே வைத்துவிடுவோம். " என்றார். 
”இப்போ இருப்பவைகளைக் கொஞ்சம் காட்டுங்களேன், அவைகளை யாவது அழிவில் இருந்து காப்பாற்றுவோம்  " 

" கொஞ்ச நாள் முன்னே வந்திருக்கக் கூடாதா?  ஒரு மூன்று  மாதத்திற்கு முன் நீங்கள் வைத்திருக்கும் அதே  பட்டியலை வைத்துக்கொண்டு வருவாய்த் துறை அதிகாரிகள் எனது வீட்டிற்கு வந்தார்கள்; அவர்களும் நீங்கள் சொல்வதுபோல் கூறி  எங்களிடம் இருக்கும் ஓலைச்சுவடி பற்றிக் கேட்டார்கள். எங்களால் அப்போதும் உடனே ஓலைச் சுவடிகளைத் தேடி எடுக்க முடியவில்லை. நாங்கள்  அவர்களிடம் தேடிப்பார்க்கிறோம் என்று கூறினோம் . பிறகு ஒரு வாரத்தில் சுவடிகளைத்  தேடி எடுத்து நாங்களே நேரில் திருத்தணி சென்று திருத்தணி தாசில்தாரிடம் கொடுத்துவிட்டோம். " 

" எத்தனை கட்டுகள் கொடுத்தீர்கள் ?"
 
"நான்கு கட்டுகள், சுமார்  200  ஏடுகள் இருக்கும்;   நாங்கள் தாசில்தாரிடம் ஓலைச் சுவடிகளைத் தந்ததும் அவர்கள் ஓர் ஒப்புதல் கடிதம்   கொடுத் தார்கள் ; அதை வேண்டுமானால் காட்டட்டுமா ? "

 

"வேண்டாம் வேண்டாம் அதைப் பார்த்து எனன செய்யப்போகிறோம் ?"

 

முனைவர் கோவை மணி அவரிடம் தஞ்சைப் பல்கலைதான், அனைத்து மாவட்டத்  தலைவர்களுக்கும் கடிதம் எழுதியிருப்பதாகவும்,  அதன் தொடர்பாகவே திருவள்ளூர் மாவட்டத்தலைவர் மூலம் நடவ டிக்கை எடுக்கப்படுவதாகவும்   தெரிவித்தார்;  பிறகு நாங்கள் சென்ற பல இடங்களிலும் வருவாய்த் துறை அதிகாரிகள்  வந்தார்கள்; ஓலைச்சுவடி பற்றிக் கேட்டார்கள் என்ற தகவல்களை எங்களுக்கு அந்த அந்த  மாவட்டத்தில்  கூறினார்கள். பிறகு திருத்தணி சென்று தாசில்தாரை சந்திக்கவேண்டும் என்று முனைவர் கோவைமணி  கூறினார் .

பிறகு அடுத்த இடங்களையும் பார்க்க விரைந்தோம். நல்லாத்தூர் எனும் கிராமத்தில் தேடி அலைந்து பட்டியலில் இருந்த  பாலசுப்ரமணித்தைப் பார்க்க அவர் வீட்டிற்குச் சென்றடைந்தோம் .அங்கே அவர் இல்லை;  அவரின் சிறிய தந்தை ஆறுமுக உடையாரை சந்தித்தோம் .  ” எங்க குடும்பம் பரம்பரையில் வைத்திய குடும்பம்;  சுற்றுப்பட்டு  ஐம்பது கிராமங்களில் இருந்து ஒரு காலத்தில் மக்கள் தேடிவந்து  காத்துக் கிடப்பார்கள். நோய்களை மருந்து, மாந்திரீகம் இவைகளால் எங்கள்  முன்னோர்கள் நீக்கினார்கள்"   எனப் பெருமையுடன்  தம் பரம்பரை பற்றிக் கூறினார்.  பிறகு அவரே “ இரண்டு தலைமுறையாக இப்போது வைத்தியம் செய்வதில்லை; எல்லோரும்  வேறு வேலைக்குப் போய்விட்டார்கள்” என்றார்.  

நாங்களும் " உங்கள் முன்னோர் பயன்படுத்திய ஓலைச் சுவடிகள் எல்லாம் எங்கே ?  நாங்கள் அவற்றைப் பார்க்க வேண்டும் " என்றோம். அதற்கு முருகேச உடையார் இருபது வருடத்திற்கு முன்னேயே  திருப்பதிப் பல்கலை ஆசிரியர் என்று ஒருவர் வநது அவற்றை வாங்கிக்கொண்டு  போய்விட்டதாகக் கூறினார்.
 
” கொஞ்சம் தேடிப்பாருங்களேன், ஏதாவது மீதி இருக்கிறதா ?

நாங்கள் உங்களைத்தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். எங்களை வெறுங்கையுடனா அனுப்புவது ? "  என்றோம்.அவர்களும் உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து “ஓலைச் சுவடிகள் ஒன்றும் இல்லை; இவை   ஏதாவது பயன்படுமா பாருங்கள்” என்றபடி இரண்டு எழுத்தாணிகளின் கைப்பிடியை கொண்டுவந்தார்.   நன்றி சொல்லி அவற்றை முனைவர் கோவை மணி பெற்றுக் கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையின் அருகில் இருக்கும் அம்பத்தூர், கொரட்டூர் , முகப்பேர் முதலியவை இருந்தன.  இவற்றை திருவள்ளூர் மாவட்டம் தேடுதல் முடியப்போகும் கடைசி நாளான ஐந்தாம்  நாள் மாலையில் வைத்துக்கொண்டு பயணத்தை முடிப்பதாக முன்பே திட்டமிட்டிருந்தோம்.  அவ்வாறே அந்தப் பகுதிகளுக்குச் சென்றோம்.

பல இடங்களில் எங்களுக்கு பயனளிக்கும் பதில் கிடைக்கவில்லை; .ஆனால்   கொரட்டூரில் பழனியப்பன் என்பவரின் முகவரியைத்  தேடிய லைந்து அங்கு போய்ச் சேர்ந்தபோது அங்கே   இருந்தவர்கள் பழனி யப்பன் இறந்து சில தினங்களே ஆனதாகக் கூறினார்கள் .

நாங்கள் வந்த நோக்கத்தை எவ்வாறு தெரிவிப்பது எனத் தயங்கி நின்றபோது அவரது   மருமகன் பாலசந்தர் என்பவர் , " பரவாயில்லை  சார், நீங்க வந்த விஷயம் சொல்லுங்க " என்று எங்களை உள்ளே கூப்பிட்டு  அமரச் சொன்னார்; நாங்களும் எங்களைப் பற்றிய சிறிய முகவுரை கூறினோம்.

 

அவர் " திரு பழனியப்பன் ஒரு மிகப் பெரிய ஜோதிடர்; ஜோதிட சாஸ்திரத்தையே கரைத்து  குடித்தவர்; .பல சிறந்த கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதியவர்; உயர் அதிகாரியாகப் பணியாற்றி ஒய்வு பெற்றதும் ஜோதிடம் சம்பந்தமாக நீண்ட ஆராய்ச்சிகள்  செய்து வந்தார்” என அவரது மாமனாரைப்பற்றி மிக உயர்வாகப் பேசினார்.

மேலும் மாடியில் ஓர் அறை  முழுவதும் சுமார்  2000 சோதிடம், மற்றும் பல பண்டைய நூல்கள் சேர்த்து வைக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் தற்போது  அவரது மகன் தந்தையின் இறப்பிற்கு வந்து விட்டு  அமெரிக்கா  சென்றுவிட்டதாகவும், அவரிடம் அனுமதி வாங்கினால் நாம் விரும்பும்படி  அவற்றைப் பார்ப்பதோ, மின்னாக்கம் செய்வதோ முடியும் என்று கூறிவிட்டார்.  திரு பழனியப்பனைச் சந்திக்க முடியா மல் போனதை எண்ணி வருத்தம் தெரிவித்து அவரது  மகனின் முகவரி யைப் பெற்றுக்கொண்டோம்.

எப்படியும் நிச்சயம் அந்தப் புத்தகக் குவியலைப் பார்த்தே தீர வேண்டும் என்ற  உறுதியுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.

இவ்வாறு எங்கள் ஐந்து நாள் திருவள்ளூர் தேடல்  அன்று முடிவுக்கு வந்தது.  அடுத்ததாக்க் காஞ்சீபுரம் மாவட்டம் பார்ப்பதாக உறுதி செய்து கொண்டு அவரவர்  உடைகள் அடங்கிய மூட்டையுடன் எங்கள் வீடு நோக்கிய பயணத்தை தொடங்கினோம்.  பல்லவர் காலத்திலேயே நகரம் என்றால் காஞ்சி என்று பெயரெடுத்த காஞ்சியில் ,நாலந்தா போல் சிறந்த கல்விக் களமாக விளங்கிய காஞ்சியில் எங்களுக்குக்  கிடைக்கப்போகும் சுவடிக்குவியல்களை மனம் வட்டமிட எங்கள் பயணம்  அமைத்தது.  மனத்தில் எண்ணியபடியே உண்மையில் நாங்கள் கண்ட சுவடிக் குவியல் பற்றி அடுத்த  பகுதியில் பார்க்கலாம் .

 

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

You may also like

Leave a Comment