எண்ணங்கள் ஊர்வலம் – 11
10-08-2009
உமறுப் புலவர்
எட்டயபுரத்து அரசவைக் கவிஞர்களில் ஒருவர். ஒளரங்கசீப் காலத்தில் வாழ்ந்தவர்; (பாவலர் செ.ரா. சோமசுந்தர மணியக்காரர் எழுதிய உமறுப்புலவர் சரிதை புத்தகத்தில் வரலாற்றாசிரியர் திரு. இராஜமாணிக்கனார் குறிப்பிட்டுள்ளார்) சீறாப்புராணம் – நபிகள் நாயகத்தின் வரலாற்றை எழுதியவர்.நபிகள் நாயகத்தின் அன்பையும் ஆதரவையும் நேரடியாகப் பெற்ற பரம்பரையில் உதித்தவர்; அவர் தந்தை சேகு முதலியாரென்பவர் எட்டயபுர அரண்மனைக்கு வாசனைத் திரவியங்கள் வியாபாரம் செய்து வந்தார்.அவர்மீது பரிவு கொண்ட மன்னர் அவருக்கு வீடளித்து, அவரை நாகலாபுரத்திலிருந்து எட்டயபுரம் வரச் செய்தார். உமறு பிறந்தது எட்டயபுரத்தில். சிறுவயதிலேயே தமிழ்க் காதல் கொண்டவர்;சின்ன வயதில் அனைவரும் வியப்புறும் செயலைச் செய்தவர்; மன்னனின் அரசவைக்கு வடநாட்டிலிருந்து ஒரு கவிஞர் வந்தார். தனக்கு விஞ்சியவர் யாருமில்லை என்று சொல்லித் திரிந்தவர். அவர் தமது கடகத்தைத் திருகவும் ஒரு பாட்டுத் தோன்றியது. உமறு அஞ்சாமல் எழுத்தாணியை மேசையில் வைக்கவும் அது துள்ளி எழுந்து பதில் பாட்டுப் பாடியது. அகந்தையுடன் வந்தவன் அடங்கிப் போய் ஓடிவிட்டான். இது அவர் வரலாற்றுப் புத்தகத்தில் எழுதப் பட்டிருக்கின்றது. உமறுக்கு அப்பொழுது பன்னிரண்டு வயது. “பாரதி சின்னப்பயல்” என்ற கேட்டவுடன் சீறிப்பாய்ந்து பாடிய சுப்பையாவும் (பாரதி) வயதில் சின்னப் பையன் தான். அரசவையில் வயது பெரிதல்ல. ஆற்றலை வளர்த்த பரம்பரை எட்டயபுரம் சமஸ்தானம். தமிழை அரியாசனத்தில் ஏற்றி வைத்து மகிழ்ந்தவர் மன்னர்.
உமறுவின் ஆசிரியர் கடிகைமுத்துப் புலவரும் சமஸ்தான வித்துவான். சமஸ்தான வித்துவான்கள் எத்தனை பேர் ? பெருமாளை வணங்கி வந்தாலும் பல மதத்தினரையும் அணைத்து வாழ்ந்தவர்கள். அந்த அரண்மனையில் பல நிகழ்ச்சிகளைப் பார்த்து வளர்ந்தவள் நான்; ரசித்து வாழ்ந்தவள் நான். அந்த அரண்மனையின் சாதனைகளைப் புத்தகங்களிலிருந்துதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலை எனக்கு இல்லை. அந்தக் கால கட்டத்தில் வாழ்ந்து இப்போது முதுமை எய்தியவள் நான்.
சீதக்காதியின் பேராதரவுடன் சீறாப்புராணம் பாடியவர் உமறுப்புலவர். கம்பனைப்போல் நன்றி மறவாமல் தனக்கு ஆதரவளித்தவர்களின் பெயர்களைத் தம் பாடல்களில் குறிப்பிட்டு முத்திரை பதித்துள்ளார். உமறுப்புலவரின் சமாதிக்குப் போயிருக்கின்றேன். பிச்சைக் கோனார் என்பவர் அவருக்கு சமாதி கட்டியுள்ளார். இந்து முஸ்லீம்கள் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து கொண்டிருந்தோம். மன்னர் எப்படியோ, மக்களும் அவ்வழியே. ஆனால் இன்றைய அரசியல் களத்தில் சலுகைகளைக் காட்டிப் பிரித்து வைத்த சாதிகள் எத்தனை? ஆட்சிக்கு ஆசைப் பட்டு மக்களின் மனத்தினில் பிரிவினை விதையை விதைப்பதை இன்று பார்க்கிறோம். அன்றைய ஆங்கிலேயர்கள் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சி முறைக்கு நம்மவரும் அடிமையாகிவிட்டதை நினைக்கும் பொழுது என் போன்றோர்க்கு மனம் வெதும்புகின்றது.
எட்டயபுர சமஸ்தானம் இசையை வளர்த்தது; கலையை வளர்த்தது; கல்வியை வளர்த்தது. இத்துறை சேர்ந்தவர்களுக்கு இலவசமாக வீடுகளும், பல மான்யங்களும் அளிக்கப் பட்டன.சுதந்திரப் போராட்டத்திற்குப் பொருளுதவி செய்திருக்கிறது. இவர்களின் நடைமுறைகளைக் கேள்விப்பட்டுத்தானே பல துறைகளின் பெரியவர்கள் மன்னரிடம் வந்தார்கள். ஒரு தலை முறை மட்டுமன்று; எட்டயபுரப் பரம்பரையில் எல்லோரும் இப்படித்தான் வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஏற்கனவே பல தகவல்கள் கொடுத்திருப்பதால் மீண்டும் அவைகளை நான் எழுதவில்லை.
இத்தகையோர் திட்டமிட்டுக் காட்டிக் கொடுக்கும் குணமுடையவர்களாக இருந்திருக்க முடியுமா ? உளவியல் படித்தவர்கள் சிந்திக்கலாம்.
வ.உ.சிதம்பரனாரின் கப்பல் நிறுவனத்திற்கு எட்டயபுரம் மன்னர் உதவியுள்ளார். சோமசுந்தர பாரதி இல்லத் திறப்பு விழா நடந்த பொழுது சிதம்பரனார் எட்டயபுரம் வந்திருந்தார்.
வ.உ.சிதம்பரனார்
அந்த இல்லத்தின் பெயர் “தமிழகம்”. எங்களூர் சினிமாக் கொட்டகையின் பெயர் பாரதமாதா டாக்கீஸ். அது மன்னர் மக்களுக்காகக் கட்டிய அரங்கு. அங்கு ஒலிப்பது ஆண்டவனைப்பற்றிய பிரார்த்தனை கீதம் அல்ல." வந்தேமாதரம் “ தான் எங்கள் பிரார்த்தனைப் பாடல். வெறும் களியாட்டத்திற்கு மட்டுமானதன்று அந்த இடம். காங்கிரஸ் கூட்டங்கள் நடந்ததும் அங்கேதான். எத்தனை முறை அங்கே உட்கார்ந்து வியந்தபடி இருந்திருக்கின்றேன்! சுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் தலைவர்களை விருந்தினர் மாளிகையில் தங்க வைத்து உபசாரம் செய்தது அரச குடும்பம். பாரதி மணி மண்டபத்திற்குக் கல்கி மூலம் நிதி வசூலித்தாலும் அந்தக் கட்டடம் வளர அருகே பொறுப்பானவர்களை அமர்த்திப் பார்த்துக் கொண்டது அந்த அரச குடும்பம். அது பதவிக்காக ஓடும் கூட்டமன்று.
மன்னர் முதல் மழலையர் வரை சுதந்திர வேட்கை கொண்டவராக இருந்தோம். பாரதிக்கும் எங்கிருந்தோ அந்த உணர்வு வந்துவிடவில்லை. அந்த மண் எங்களுக்கூட்டிய உணர்வு அது. கவுன் போட்ட காலத்தில் கையில் காங்கிரஸ் கொடியேந்தி, ஊர்வலத்தில் சென்றவள் நான். சுதந்திரம் கிடைக்கும் முன்னரே ” ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே” என்ற எங்கள் பாரதியின் பாட்டுக்கு ஆடித்திரிந்தவள் நான். அன்றைய வரலாற்றின் பார்வையாளரும் பங்குதாரரும் நான். செவிவழிச் செய்திகளை உங்கள்முன் சிந்தவில்லை. அத்தகையோர் மேல் எப்படி ஓர் ஆழமான கரும்புள்ளி ஏற்பட்டது ?
வீரபாண்டிய கட்டபொம்மன் – இந்தப் பெயரைச் சொன்னால் உடனே நம் எண்ணத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வருவார்; கப்பலோட்டிய சிதம்பரனாரும் நடிகர் திலகமே.நடிப்புக் கலையில் அன்றும் என்றும் அவரை விஞ்சியவர் யாரும் இல்லை.பராசக்தியில் கலைஞர் வசனத்தில் தனியிடம் பெற்றவர். அவருக்காகவே எழுதப்பட்ட வசனங்கள்.
கட்டபொம்மனை உயர்த்திக்காட்ட எட்டப்பனை சரியான வில்லனாகக் காட்ட வேண்டும். திட்டங்கள் தீட்டுவதும், கேவலமாகப் பேசுவதும் அந்தப் பாத்திரத்தின் வெளிப்பாடுகள். காட்டிக்கொடுக்கும் துரோகி என்பதற்கு எட்டப்பன் என்ற புதிய அடைமொழியைத் தமிழில் சேர்த்த பெருமை வசனம் எழுதியவரைச் சாரும். சக்தி வாய்ந்த வசனங்கள்; நல்ல சாதனைகளைப் புரிந்துவந்த ஒரு பரம்பரையைச் சாய்த்துவிட்ட வசனங்கள்.
மனித குணம் விசித்திரமானது. கண்ணன் பெயரையோ, பெருமாளின் பெயரையோ சொன்னால் என். டி. இராமாராவ் வந்து விடுவார். அவர் காலத்தில் மக்கள் கிராமங்களிலிருந்து சென்று அவர் முன்னால் தேங்காய் உடைத்துக் கும்பிட்ட செய்திகளும் உண்டு. ஆண்டவன், மக்கள் திலகம் இருவரும் நம் வீட்டு வாசலில் வந்தால் பாவம், ஆண்டவனுக்கு வரவேற்பு இருக்காது. அந்த அளவு சினிமாவின் தாக்கம் மனித மனத்தை ஆட்டிப் படைக்கின்றது. அந்தப் புயலில் அடிபட்டது ஏட்டயபுர மன்னரின் பெருமை. மதிப்பிற்குரிய சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களுக்கும் இதில் பங்குண்டு. அரண்மனைக்கும் அவருக்கும் மனத்தாங்கலும் ஏற்பட்டது. கட்டபொம்மனைத் திருடனாகக் காட்டித் தமிழ்வாணன் எழுதத் தொடங்கிய தொடர் முடிவுறாமல் நிறுத்தப்பட்டது. சில குறிப்பேடுகள் அழிக்கப்பட்டதாகச் செவி வழிச் செய்திகள்.
சிந்திப்பதற்கு என நான் முன்வைக்கும் என் எண்னங்கள், ( கருத்து என்று கூடச் சொல்ல விரும்பவில்லை) இவைகள் தான். எட்டயபுர சமஸ்தான வரலாற்றில் பெருமைபடக்கூடிய சாதனைப்பட்டியல் மிகப் பெரிது. இவை வெள்ளையர்கள் மதிக்கும் காகிதக் குறிப்புகள் அல்ல. நம்முன் கம்பீரமாக நிற்கும் பாரதி மணி மண்டபம்.. அங்கே வாழ்ந்து அடக்கமாகி சமாதியில் தூங்கும் உமறுப் புலவரும் , முத்துசாமி தீட்சதரும், இன்னும் பாரதமாதா டாக்கீஸ் என்று நிற்கும் தியேட்டரும். அங்குள்ள ராஜா உயர் நிலைப்பள்ளி பழைய பதிவேடுகளில் அங்கு கல்வி கற்ற குப்புசாமி (சிவானந்த மகரிஷி) முதல் பல பெரியவர்களின் பெயர்களும், இன்னும் பலவும் அழிக்க முடியாத வரலாற்றுச் சின்னங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. கட்டபொம்மனுக்குக் கதைகள் மட்டும் உண்டு. அரசால் கட்டப்பட்ட நினைவு மண்டபம் உண்டு. கட்ட பொம்மனைக் குறைத்துப்பேச நான் விரும்பவில்லை. ஆனால் அவரை உயர்த்திக்காட்ட ஒரு சாதனையாளரின் பரம்பரையை இழிவு படுத்த வேண்டுமா? இது தொடர்கதையாக நீள்வது சரியா?
சமீபத்தில் பேசிய மன்னர்குல வழித்தோன்றல்களில் ஒருவரான ராம்குமார் பாண்டியன் இந்த வேதனையைக் கொட்டி இருக்கின்றார். காட்டிக்கொடுப்பவனுக்கு மாற்றுச் சொல்லாக எட்டப்பன் என்று சேர்ந்துவிட்ட இந்த அகராதிச் சொல்லை நீக்குவதற்குத் தமிழன் முதலில் முயல வேண்டும். தமிழை வளர்த்த புரவலனுக்குத் தமிழன் செய்ய வேண்டிய கடமை இது.
மீண்டும் சந்திப்போம்.
ஊர்வலம் தொடரும்..
எண்ணங்கள் ஊர்வலம் – 12
13-08-2009
வரலாறு என்று வந்தவுடன் மாற்றுக் கருத்துக்களும் கூடவே வந்து விடும். அதுதான் வரலாற்றின் சிறப்பு.புதிய ஆதாரங்கள் கிடைத்தால் மாற்றி எழுதப்படுவதும் வரலாற்றின் வரலாற்றிலேயே தவிர்க்க முடியாத நிகழ்வுகள்.
சரித்திரப் புதினங்கள் எழுதியவர்களில் கல்கியும் சாண்டில்யனும் முக்கிய இடங்களைச் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்.
கல்கி
கல்கி ஒரு தொடர் ஆரம்பிக்கும் முன் , வரலாற்றுப் புத்தகங்களைப் படிப்பார். பின் வல்லுனர்களைச் சந்தித்து உரையாடுவார். வரலாறு நிகழ்ந்த இடங்களைப் போய்ப் பார்ப்பார். பின் அவர் சிந்தனையில் காட்சிகளை வடிவமைப்பார். அவர் எழுதிய பொன்னியின் செல்வன் பெரும் வரவேற்பைப்
பெற்றது. எத்தனை முறை படித்தாலும் அலுக்காது. நான் பல முறை படித்திருக்கின்றேன். இப்பொழுதும் படிக்கின்றேன். அவர் கதையிலும் நிறைய வரலாற்றுப் பிழைகள் இருக்கின்றன. சாண்டில்யன் எழுதிய கதைகளில் ஒன்று, ஒரு வரலாற்றுப் புத்தகத்தில் இரு பக்கம் கூட இல்லாத செய்திகளை வைத்துக் கொண்டு எழுதப்பட்டது. அவர் எழுதிய இராஜ திலகத்திலோ, விக்கிரமாதித்தன், பரமேஸ்வர வர்மன், இராஜ சிம்மன், கைலாச நாதர் கோயில் இவர்களைச் சுற்றிவரும் பொழுது நிறைய வரலாற்றுப் பிழைகள் செய்திருக்கின்றார். வரலாற்று ஆய்வாளர்களுக்கும், வரலாற்றைப் பற்றி ஏதோ ஓர் ஆர்வத்தில் எழுதுகின்றவர்களுக்கும் உள்ள இடைவெளி இது.
கட்டபொம்மன் செய்தி பற்றி இத்துடன் முடித்து நான் பதில் கூற வேண்டிய மற்ற இரு கேள்விகளையும் பார்க்கலாம்.
எட்டயபுரம் சின்ன கிராமம். அதிலும் சமஸ்தானத்தில் வேலை பார்த்தவர்களின் குடும்பங்கள், அவர்களின் தேவைகளுக்காகக் கடைத் தெருக்கள், அவர்கள் குடும்பங்கள், கல்விச்சாலை போன்ற அமைப்புகளில் வேலை பார்த்தவர்களின் குடும்பங்கள் இவை அமைந்ததே எங்கள் ஊர். செல்வந்தர்களும் மற்றவர்களும் இருந்த ஊர் நடுவிற்பட்டி. இரண்டையும் இணைப்பது ஒரு தெரு. இந்தத் தெருவில்தான் பள்ளியும் திரையரங்கும் இருக்கின்றன.
மன்னர் பலருக்கு வீடுகள் கொடுத்தது, உதவிகள் செய்தது பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன். அவரிடம் நான் கண்ட ஒரு பழக்கத்தை சொல்லாமல் விட்டு விட்டேன். அவரைச் சந்திக்கச் செல்லுகின்றவர்கள் பழம் கொடுப்பது வழக்கம். அவர் கை நீட்டி வாங்க மாட்டார். நாம் பழத்தைக் கையில் வைத்து மரியாதையுடன் நீட்ட வேண்டும். அவர் அதனை எடுப்பார். கொடுக்கும் கையாம், வாங்கக் கூடாதாம். இன்று அதிகாரத்தில் உள்ளவர்கள் இதனை நினைத்துப் பார்க்க வேண்டும். நாம் மற்றவர்களிடமிருந்து பிடுங்கவல்லவா செய்கின்றோம்.
நிர்வாகத்தில் இருந்தவர்களில் பலர் தவறுகள் செய்ததை மறுக்க இயலாது. மனிதன் தனக்கென்று எதுவும் நினைக்காது கூட்டமாகச் சுற்றிக் கொண்டிருந்தான். ஓர் இடத்தில் தங்கிக் குடும்பம் என்ற கோட்பாட்டைக் கொண்டு வந்தவுடன் சுயநலமும் பிறந்து விட்டது. சுரண்டலும் இணைந்தது. மன்னர் ஆட்சியானால் என்ன, மக்கள் ஆட்சியானால் என்ன, மனித குணம் காலச் சக்கரத்துடன் அதுவும் வேகமாகச் சுழன்று கொண்டிருக்கின்றது. கிராமத்தில் ஒன்று சொல்லக் கேட்டிருக்கின்றேன்- “ராசா வீட்டுச் சொத்தைத் திருடிச் சாப்பிடறவன் வம்சம் நாசமாப்போகும்” திருடுதல், அதிகாரத்தில் இருப்பவர்களில் சிலர் அதனைப் பயன்படுத்தி மிரட்டுதல் உண்டு. இதுவும் அன்றும், இன்றும் என்றும் நடைபெறுவதுதான். “ கருடா சவுக்கியமா?’ என்ற கேலிச் சொல் என்றைக்கும் உண்டு. மணியக்காரர் என்ற ஓர் இனம் அதிகமாக இருந்தனர். தேவர்களில் ஒரு பிரிவென்றும், அரண்மனையில் வேலை பார்ப்பதால் அந்தப் பெயர் வந்தது என்றும் சொல்வர்.
மன்னர் ஆட்சி, மக்கள் ஆட்சி இவைகளில் எது சிறப்புப் பெற்றது என்ற கேள்விக்குப் பதில் கொடுக்க நினைத்தால் அதுவும் ஒரு நீண்ட தொடராகிவிடும். மேலும் நான் தொடர் ஆரம்பிக்கும் பொழுது “நினவலைகள்“ என்ற தலைப்பில் புறப்பட்டேன். அது முடியவில்லை. அதற்கு அடித்தளம்தான் எண்ணங்களின் ஊர்வலம். நாம் சுதந்திரம் பெற்ற பின் அறுபது ஆண்டுகளின் வரலாற்றில் காலச் சுவடுகளைக் காணப் போகின்றோம். அரசு, அரசியல், மக்கள் மூன்றின் கூட்டணியின் செயல்பாடுகளை அலசப் போகின்றோம். எனவே இங்கு நான் சொல்ல எதுவும் இல்லை; ஆனாலும் ஒன்றைக் கூறாமலும் இருக்க முடியவில்லை. அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்றவுடன், உரிமை கிடைத்த மகிழ்வில், உரிமைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் கடமைகளில் குறைய ஆரம்பித்து விட்டது மட்டும் உண்மை. பெண்ணியத்திலிருந்து , வாழ்வின் கண்ணியம் வரைக்கும் மாறுதலை வரவேற்ற மனிதன், புறப்பட்ட இடத்திற்குச் சென்று கொண்டிருக்கின்றான்.
ஊர்வலம் போதும். வீட்டைப் பார்க்கலாம். ஒரு மனிதனின் வளர்ச்சியில் உடல், உள்ளம் இரண்டுமே முக்கியமானவை.அவன் குழந்தைப் பருவத்தின் முதல் ஆறு வருடங்கள் முக்கியமானது. பின்னால் அவனிடம் காணும் குணங்களின் வேர்கள் குழந்தைப் பருவத்தில் விதையூன்றப் பட்டு விடுகின்றன. உதாரணத்திற்கு நான். மற்றவரை எடுத்துக் கொள்ளவில்லை. என்னையே எடுத்துக் கொண்டேன்.காந்தியின் சத்திய சோதனை என்னை ஆட்கொண்ட புத்தகம். என் குறைகளை நான் ஒப்புக் கொள்வதில் எனக்குத் தயக்கம் கிடையாது. மனிதன் குறை நிறைகளின் கலவை.
எனக்குள் ஓர் உக்கிரம் உருவானது என் பிள்ளைப் பருவத்தில்தான். காஞ்சியில் காமகோடி சாஸ்திரிகள் என்று ஒருவர். அவர் என்னைப் பார்க்கும் பொழுது காளி என்பார். பெண்ணை வதைக்கும் ஆணைக் கண்டால் நான் காளியாகவே மாறிவிடுவேன். இந்தக் குணம் என்னிடம் தோன்றுவதற்கு கிராமத்தில் நான் கண்ட காட்சிகளும் காரணம்.
குடும்பச் சண்டை வீதிக்கு வரும். பெண்டாட்டியின் தலை மயிரைப் பிடித்து அடிக்கும் காட்சிகளைப் பார்க்கலாம். அவளும் கத்திக் கொண்டே தெருவில் ஓடுவாள். மனைவி இருக்க மற்ற பெண்ணைத் தேடிச் செல்லும் ஆண்கள் புதிதல்லர். மனிதன் தோன்றிய காலத்தில் மணவாழ்க்கைக்குள் உறவு என்பது கிடையாது. வயிற்றுப் பசி போல் உடல் பசி. பக்கத்தில் இருப்பதில் பசி தீர்த்துக் கொள்வான். குடும்பம் என்ற கோட்பாடு வந்த பொழுதும் தனக்கு மட்டும் சலுகையாக இன்னொரு வாழ்க்கைக்கும் அனுமதி வரைந்து கொண்டான். முன்பு தலைவி வீட்டைவிட்டு வெளிவரமாட்டாள். பன்னிரண்டு ஆண்டுகள் கணவனைப் பிரிந்து வாழ்ந்த கண்ணகி பெற்றவர்களிடம் மட்டுமல்ல, கணவனுக்காகச் சிறு தெய்வ வழிபாட்டைக்கூட மறுத்தவள்.
கணவன்மாரின் இரட்டை வாழ்க்கை, பெண்மணிகளை வீதிக்கு வரச் செய்தது. காலம் அளித்த சுதந்திரத்தின் அடையாளம்தான் தெருச் சண்டை. ஆண் அடிப்பதும் பெண் அழுவதும் என் மனத்தில் ஒரு காயத்தை உண்டு பண்ணியது. மனத்தராசின் முள் பெண்ணின் பக்கம் சாய்ந்து விட்டது. அப்பொழுது எனக்கு வரலாறு தெரியாது; வெளி உலக அனுபவங்களும் கிடையா. ஆனால் பத்திரிகைகள் பரந்த உலகைப் பார்க்கும் வாயில்களாக இருந்தன. வீட்டில் இருக்கும் பெண்கள் படிக்கையில், அவர்கள் மனத்தை ஈர்க்கும்படிப் பத்திரிகைகளும் அவர்களுக்கு ஆதரவாக எழுதின. ஆணாதிக்கமும் மேலோங்கி இருந்ததை மறுக்க இயலாது.
இப்பொழுது பெண்ணின் வேகமும் ஆணின் நிலையும் புரியும்.அன்று ஆணின் தாக்குதல் வெளிப்படையானது. இப்பொழுது அவன் மனம் சுருங்கி, ஒதுங்கி ஒடுங்க ஆரம்பித்துவிட்டான். அனுபவங்களை என் நினைவலைகளில் காணலாம். ஆனால் என் இளமைப் பருவத்தில் ஏற்பட்ட வேகம் அக்காலத்தில் பிறரை அச்சுறுத்தியது. ஒரு நிகழ்வை மட்டும் கூற விரும்புகின்றேன்.
அடுத்த சந்திப்பில் காட்சியைக் காணலாம்.
ஊர்வலம் தொடரும்..
எண்ணங்கள் ஊர்வலம் – 13
13-08-2009
சாதாரணமாக ஒரே ஒரு வீட்டுக்குத்தான் என் தந்தை அனுப்புவார். அது என் பாட்டிவீடு. அம்மாவைப் பெற்றவர்கள். என் தகப்பனார் சத்தியாகிரகப் போராட்ட காலத்தில் எங்களை விட்டுப் போயிருந்த காலத்தில் ஹோட்டலில் மாவரைத்து, வீடுகளில் சமையல் செய்து என்னையும் என் தாயையும் காப்பாற்றியவர்கள். ஒரு கிராம முனிசீப் மனைவியாக வாழ்ந்து சீக்கிரமே கணவரைப் பறிகொடுத்து, இரண்டு பெண்களுக்கு ஐந்து நாட்கள் திருமணம் செய்து வைத்து ஓட்டாண்டியாகி, பின்னரும் தன் ஒரே மகனுடன் மகள், பேத்தி இருவரையும் காப்பாற்ற உழைத்த ஒரு மூதாட்டி என் பாட்டி. அவர்கள் மதுரையில் கீழ அனுமந்தராயன் கோயில் தெருவில் ஒரு வீட்டில் ஒண்டுக்குடித்தனம் இருந்தார்கள். செல்லமைய்யர் வீட்டில் ஐந்து குடித்தனங்கள். எல்லோரும் உறவினர்கள். என் பாட்டியை குப்புச் சித்தி என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள். அந்த வீட்டிற்கு ஒரு விஷேசம் உண்டு. அந்த வீட்டைப் பஜனை அய்யர் வீடு என்று அழைப்பார்கள். வீட்டுக்கு நடுவில் பெரிய ஹால் ஒன்று உண்டு. அங்கேதான் வாரம் ஒரு நாள் பஜனை நடக்குமாம்.பக்கத்து தெருக்களிலிருந்தும் ஆட்கள் வருவார்கள். அடுத்து இருந்த மேல அனுமந்தராயன் கோவில் தெருவில் குடியிருந்த வீணை சண்முகவடிவுகூட சிலசமயம் அங்கு வந்து பஜனையில் கலந்து கொண்டிருக்கின்றார்கள். வரும்பொழுது தன் மகள் குஞ்சம்மாளையும் அழைத்து வந்ததுண்டு என்று கூறுவார்கள். அந்த குஞ்சம்மாள் வேறு யாருமல்ல. இசைக் குயில் எம். எஸ். சுப்புலட்சுமி தான். நான் அந்த வீட்டிற்குச் சென்ற பொழுது பஜனை நடத்துவது நின்று போயிருந்தது.
அங்கே சீதாமாமி என்பவரை எனக்குப் பிடிக்கும்; அவருக்கும் என்னை பிடிக்கும். ஆனால் அவர்கள் கணவருக்கு என்னைப் பிடிக்காது. நான் அனாசாரமாகப் பேசுகிறேனாம். ஆமாம், வித்தியாசமாகப் பேசினேன். “ஆமாம், மத்த ஜாதிக்காரா மேலே பட்ட காத்து நம்ம மேலே படறதே” – காத்துக்குத் தோஷம் இல்லே. “அப்போ தண்ணி “ – தண்ணிக்கு தோஷம் இல்லே. தவிர்க்க முடியாதவைகளுக்குத் தனி சமாதானங்கள்.
“பாட்டி, நீ சுத்தத்துக்காக எல்லாம் அலம்பறியா, அல்லது மத்தவா தொட்டுட்டான்னு அலம்பறியா? உப்பையும் சக்கரையும் அலம்பு பாட்டி” அந்த வீட்டில் நான் பொருந்தவில்லை. சீதாமாமி என்னைத் தனியாகக் கூப்பிட்டு , “பாப்பா, காலம் மாறிண்டு வர்ரது. இதுவரை பழக்கப் பட்டுட்டா. நீ சின்னப் பொண். இப்படியெல்லாம் பேசி மத்தவா வாயிலே விழாதே“.
எனக்குத்தான் எத்தனை பெயர்கள். பிறந்த பத்து நாட்களில் ஹோமம் வளர்த்து எனக்கு என் தந்தை வைத்த பெயர் சீதாலட்சுமி. அவர் எங்களை விட்டு ஜெயிலுக்குப் போயிருந்த பொழுது என் தாயார்தான் முதல் வகுப்பில் சேர்த்துவிட்டார்கள் அப்பொழுது வைத்த பெயர் குஞ்சம்மாள். எல்லோரும் கூப்பிடும் பெயர் பாப்பா. மாமியின் அன்பு வார்த்தைகளுக்குக் கட்டுப்பட முயன்றேன்.
நவராத்திரி நேரம் நான் சென்றிருந்தேன். மதுரையில் கோவில்களில் மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் கூடப் பொது மக்கள் பார்க்கச் சில இடங்களில் கொலு வைத்திருப்பார்கள்.வெங்கலக் கடைத்தெருவில் தனியார் கொலுமண்டபம் ஒன்றிற்குச் சென்றோம். கூட்டம் அதிகமாக இருந்தது. பாட்டியுடன் சென்று கொண்டிருந்தேன். திடீரென்று யாரோ என்னைத் தொடும் உணர்ச்சி. கூட்டத்தில் தற்செயலாக நடக்கக் கூடியதுதான். நான் திரும்பிப் பார்த்தேன் என் முதுகுப் பக்கமாய் கை வளைந்து என் தோளைத் பிடித்துக் கொண்டு ஒருவன் அசட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தான். அவ்வளவுதான். நானும் அவனை இறுகப் பிடித்து முதுகில் குத்து குத்தென்று குத்தினேன். எனக்கு எப்படி ஆவேசம் வந்தது என்று தெரியாது. குத்துப்பட்டவன் கீழே விழுந்து எப்படியோ எழுந்து ஓடிவிட்டான். அதற்குள் கூட்டத்தினர் பார்த்து விட்டனர். எல்லோரையும் பார்த்தேன். ஒருவரிடமும் பாராட்டும் முகமோ, இரக்க உணர்வோ தெரியவில்லை. மாறாக, “சே, இப்படியும் ஒரு பொண்ணா, அடங்காப் பிடாரி. கூட்டம்னா மேலே படாமப் போக முடியுமா? வெக்கம் கெட்டவ. கொஞ்சம் கூடக் கூச்சம் இல்லாம , ஒரு ஆம்புள்ளையத் தொட்டு அடிச்சுட்டாளே, ஏய் கிழவி, உம் பொண்ண அடக்கி வை. இல்லே, ஒரு நாள் அறுத்துக்கிட்டுப் போய்டும்“ கூட்டமே கோரஸ் பாடியது. என் மனக்குரலில் பாரதியின் இசை –
“பாதகஞ் செய்பவரைக் கண்டால் நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா”
அவன் முகத்தில் காறித்துப்பவில்லையே என்ற குறை எனக்கு.என் பாட்டி என் கையை இறுகப் பற்றிக் கொண்டு அழுது கொண்டே கூட்டிச் சென்றார்கள். நானா தப்பு செய்தேன்? என்னைக் கட்டிப்பிடிச்சவனை நான் அடித்தது தப்பா? வெட்கத்தை நாய்க்குப் போடச் சொன்ன பாரதி பெரிய மனுஷன்னு ஒப்புக் கொள்ளும் இந்த சமூகம் , தீமையைக் கண்டு பொங்கி எழும் ஒரு பெண்ணுக்குக் கொடுக்கும் பட்டம் “வெட்கம் கெட்டவள்“ மனக் கொதிப்பை என் பாட்டிக்காக அடக்கிக் கொண்டு மவுனமாய் நடந்தேன். மறுநாளே என்னை எட்டயபுரத்திற்குக் கூட்டி வந்து விட்டார்கள். என் மேல் மிகவும் பிரியம் வைத்தவர்கள் பாட்டி. அவர்கள் மனம் வருந்தும்படி நடந்துவிட்ட சம்பவத்திற்கு வருந்தினேன். அவன் மட்டும் மீண்டும் கிடைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் அவனை அடித்திருப்பேன்.
நான் தூங்கிவிட்டேன் என்று என் பாட்டி அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தார்கள் – “குழந்தைய நினச்சாக் கவலையா இருக்கு. ஏன் இப்படி மாறிட்டா? பேப்பர்லே வந்திருந்தா யாராவது கல்யாணம் செய்துப்பாளா? பொண்ணா வளரல்லியே. அவ அப்பன் வளர்ப்பு அப்படி. பத்திரமா பாத்துக்கோ. அந்த மீனாட்சிதான் இவளுக்கு நல்ல புத்தி கொடுக்கணும் “ பாவம் பாட்டி. என் புத்தி கெட்டு விட்டது என்று முடிவிற்கு வந்து
விட்டார்கள். இது அக்கிரஹாரப்பாட்டி. இதுவே கிராமத்துப் பாட்டியாக இருந்திருந்தால் எனக்குப் பேய் பிடித்துவிட்டது என்று பேயோட்டுபவனை அழைத்து வந்து வேப்பிலை அடித்திருப்பார்கள். மீனாட்சி புத்தி கொடுப்பாள்னா அவள் என் பக்கம்தான் பேசுவாள்; அவள் ராணியாச்சே. நடந்ததை மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன். மேலே இடி மட்டும் பட்டிருந்தால் கூட்டத்தைக் காரணமாக நினைத்து ஒதுங்கியிருப்பேன். கட்டிப்பிடித்தது தற்செயல் நிகழ்வாக எப்படி நினைக்க முடியும். சாமி கும்பிட வந்த இடத்தில் மனத்தில் வக்கிரமம். அவனையல்லவா பெண்கள் கண்டித்திருக்க வேண்டும். பெண்ணே இப்படியிருந்தால் ஆண்களை மட்டும் குறை கூறிப்பயன் என்ன? புதைகுழியில் மூழ்கிவிட்ட பெண்ணின் திறன் மீண்டு வருமா? பாட்டிக்கும் அம்மாவிற்கும் இன்னொரு கவலை. பெண்ணுக்கு 15 வயதாகிவிட்டது. யாராவது கல்யாணம் செய்து கொள்வார்களா என்று. நானோ வேறு நினைவில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன்.
“பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிகப் பீழை இருக்கின்றது” என்று என் பாரதி குமுறினானே! இந்தக் கொடுமை நீங்க என்ன செய்யலாம்? ஓடி விளையாடி உற்சாகமாக இருக்க வேண்டிய வயதில் ஊர்க்கவலை; அந்தக்காலத்தில் இப்படி ஒரு பெண். அதுவும் கிராமத்தில் வளர்ந்த பெண், அக்காலச் சூழல், படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், பழகிய மனிதர்கள், வளர்ந்த குடும்பம் இவைகளால் உருவாக்கப்பட்ட ஒருத்தி. ஆனால் பிற்காலத்தில் அவள் மேற்கொண்ட பணிக்கு – உறுதியான நெஞ்சுக்கு உரமிட்ட காலம்.
மேலும் கொஞ்சம் பார்க்கலாம் அடுத்து.
ஊர்வலம் தொடரும்..
எண்ணங்கள் ஊர்வலம் – 14
15-08-2009
பார்ப்பவையெல்லாம் இதயத்தில் பதிந்து விடுவதில்லை. மனம் எங்கோ லயித்து இருக்கும் பொழுது பார்வையில் படும் பல கவனத்தை ஈர்ப்பதில்லை. சில சாதாரணமாகத் தாண்டிப் போய்விடும். சிலவற்றை நாம் பெரிது படுத்தாமல் தெரிந்தே ஒதுக்கி விடுகின்றோம். எஞ்சியிருப்பவை எண்ணக் கிடங்கில் தங்கிவிடும். தூசிதட்டி எடுப்பதுவும் உண்டு, இல்லையெனில் தேவையில்லையெனத் தூக்கி எறிவதும் உண்டு.எண்ணக்கிடங்கு குப்பைக் கிடங்காக மாறுவதும் உண்டு. இத்தனையும் பெரும்பாலானோர் இயல்பு. சிலர் அவைகளை வெளிப்படுத்தும் பொழுது வியந்து போகின்றோம். அப்பொழுது கூட அவை நாம் துக்கி எறிந்தவை என்பதை உணர்வதில்லை. என்னைப் பொருத்தவரையில் குப்பைகளைக்கூடச் சுத்தப் படுத்திச் சேமித்து வைத்துக் கொள்வேன்.
மதுரையில் விதைத்த விதை, முளைத்துச் செடியாகியது எட்டயபுரத்தில் தான். அதிலும் பெரும் பங்கு வகிப்பது இப்பொழுது புலம் பெயர்ந்து சென்ற இடமும், அங்கே உணர்ந்த நிகழ்வுகளும். எட்டயபுரத்தையும் நடுவிற்பட்டியையும் இணைக்கும் பாதையில் அமைந்திருந்தன பள்ளியும், திரையரங்கும். எங்கள் உணவகமும், இல்லமும் தியேட்டரை ஒட்டி இருந்தன.
சிலிர்ப்பைத் தரும் வயது “டீன் ஏஜ் “. கனவுகளில் மிதக்கும் காலம் பருவ காலம். மயக்கத்தில் துள்ளித் திரியும் பருவம். எனக்கோ அப்பொழுதே முதுமைக் காலம் தொடங்கி விட்டது.9 வயதிலேயே பத்திரிகை படிக்க ஆரம்பித்து விட்டேன். சிறுகதை, துணுக்குகளுடன் தொடர்கதைகளும் படித்தேன்.அங்கு எல்லா வார இதழ்களும், மாத இதழ்களும் கிடைத்தன;இத்துடன் தினசரிப் பத்திரிகைகள். கதைகளில் ஆரம்பித்த பழக்கம், தலையங்கம் படித்தபின்னரே கதைகள் படிக்கும் நிலைக்கு மாறினேன். பத்திரிகையில் ஓவியங்கள், ஏன் விளம்பரங்களைக் கூட ரசிக்க ஆரம்பித்தேன். இந்த நிலையில் தான் வீடு மாற்றம் நிகழ்ந்தது. புது இடத்தில் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். என் தந்தை எனக்கு இரு புத்தகங்கள் கொடுத்தார். ஒன்று காந்திஜியின் சத்திய சோதனை; இன்னொன்று வீரசாவர்க்கர் எழுதிய நூலின் மொழி பெயர்ப்பு -“எரிமலை “; பாரதியை ஏற்கனவே படித்து விட்டேன்.
படிக்கிறேன் என்று என் தந்தையை நான் ஏமாற்ற முடியாது; கேள்விகள் கேட்பார். சரியான பதில் சொல்லாவிட்டால் பிரம்படி. கசையடி பட்டுக்கொண்டு நடனமாடிய கதைகள் கேள்விப் பட்டிருக்கின்றோம் . பள்ளிப் பாடங்கள் சரியாகப் படிக்காவிட்டால் பெற்றோர் அடிக்கும் கதைகளும் தெரியும். என் தந்தை வித்தியாசமானவர். மகளுக்குச் சரித்திரம் தெரிந்திருக்க வேண்டும் என்று நினைத்தார். பிற்காலத்தில் நேருஜி தன் மகளுக்கு உலக வரலாற்றைக் கடிதங்கள் மூலமாக எழுதிய செய்தி தெரியவும், என் தந்தையின் மனத்தில் ஏற்பட்ட தாக்கம் எங்கிருந்து என்பதைப் புரிந்து கொண்டேன். ஆனால் இவர் கையாண்ட முறைகளால் எங்களுக்குள் இடைவெளி அதிகமாகிக் கொண்டே போயிற்று. என் சந்தேகங்களைத் தீர்க்க இன்னொருவர் கிடைத்தார்.
சுப்பையா பிள்ளை ஒரு காங்கிரஸ்காரர். வேலை பார்க்கவில்லை. எங்கள் கடைக்குக் காலையில் வந்தால் இரவுதான் திரும்புவார். நான் கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் கூறுவார். அவர் என்னிடம் புதிய சிந்தனை ஒன்றைப் புகுத்தினார். அவர் கார்ல்மார்க்ஸ் கொள்கைகளை விளக்கமாகக் கூறுவார். ஸ்டாலின் இரும்பு மனிதராம். ரசிக்க வைத்து விடுவார். இன்னொரு கேள்வியைக் கேட்டு என்னைச் சிந்திக்க வைத்தார் –
“மாகாளி பராசக்தி உருசிய நாட் டினிற்
கடைக்கண் வைத்தாள், அங்கே
ஆகாவென் றெழுதுந்ததுபார் யுகப்புரட்சி !
கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்”
காளியின் பார்வை ஏன் அங்கே ?
மனிதர் உணவை மனிதர் பறிப்பதை விரும்பார். தனி ஒருவனுக்குணவு இல்லையெனின்
ஜகத்தினையே அழிப்போம் என்கின்றார்- பாரதியின் சித்தாந்தம் என்ன ? பிள்ளையை உற்றுப் பார்த்தேன். உடுத்தியிருப்பது கதர்ச்சட்டை; பேசுவது பொது உடைமை சித்தாந்தம். இப்பொழுது நினைத்துப் பார்த்தால் எப்போதும் தொடர்ந்து இந்தியனின் இதயத்தில் ரஷ்யாவிற்கென ஒரு தனி இடம் இருந்து வந்திருக்கின்றது என்பது புரிகிறது. பெயர் எதுவானால் என்ன? பிள்ளையவர்கள் ஒரு வழியில் என்னை அழைத்துச் சென்றால் என் ஒன்றுவிட்ட சித்தப்பா இன்னொரு வழிக்கு அழைத்துப் போனார். அவர் என்னைவிட 4வயது பெரியவர். கடவுள் மறுப்பு மனிதர். புராணங்களை அறுத்து அலங்கோலமாகக் காட்டுவார். திராவிடக் கொள்கைகள் பற்றிப் பேசுவார். போதாததற்குப் பால்காரன் பேச்சியப்பன் புத்தகங்களை அள்ளிக் கொண்டு வருவான். தந்தை பெரியாரின் சிந்தனைகளும் , அண்ணாவின் அழகுத் தமிழில் சீர்திருத்தக் கட்டுரைகளும் என்னைக் கவர்ந்து இழுத்தன. அது சுதந்திரம் பெற்றவுடன் இளைஞர்களையும், ஏழைகளையும், மாணவர்களையும் ஈர்த்த ஓர் இயக்கம். மனிதன் எதற்கோ போராடிக் கொண்டே இருக்க வேண்டும். அடுக்குத் தொடர்த் தமிழுக்கு அடிமையானேன். மேடைப் பேச்சும், துடிப்பான சினிமா வசனங்களும் மக்களை ஈர்க்க ஆரம்பித்த காலம். எனக்கு 16 வயது. என்னைப் படையெடுத்துச் சூழ்ந்த சிந்தனைகள் கொஞ்சமல்ல.
நல்ல வேளையாக இலக்கியம் என் வீட்டிற்குள் நுழைந்தது,வாத்தியார் துரைராஜின் உருவத்தில்; வந்தவரை என் அப்பா அன்புடன் வரவேற்றார். பிள்ளையில்லாக்குறை தீர்ந்தது.
துரைராஜ் என்னைவிட 5 வயதுதான் பெரியவர். உயர் நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்து ஆசிரியர் பயிற்சி முடித்து நான் படிக்கும் பள்ளிக்கு வந்து சேர்ந்தார். அதே ஊர். பூஜை அறையில் உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தோம். கலித்தொகை என்னைக் கட்டிப்பிடித்தது. அதிகம் சிற்றிலக்கியங்கள் படித்தோம்.ஆங்கிலத்திலும் வொர்ட்ஸ்வொர்த், மில்டன் படித்தோம்.எனக்குக் கொஞ்சம் ஆங்கிலத்தில் படித்துப் புரிந்து கொள்ளுதல் கஷ்டம்; ஆனால் ஆசிரியருடன் சேர்ந்து படித்ததால் புரிந்தது. என் முதல் கதையும், கவிதையும் உதயமாயின. 40 பக்க நோட்டுப் புத்தகத்தில் எழுதியிருக்கின்றேன். “ கதிரேசன் மலை” என்று பெயர். பிள்ளைப் பருவத்தின் பிரசவம். இப்பொழுதும் அதைப் பத்திரமாக வைத்திருக்கின்றேன். இன்று என்னிடம் இருக்கும் இலக்கிய ஆர்வத்திற்கு வித்திட்டவர் எங்கள் ஊர் வாத்தியார். இன்னொரு வாத்தியார் முத்து எங்கள் வாத்தியாரின் சிநேகிதரனார். அவர் ஊர் திருநெல்வேலி.
ஒரு நாள் ஆசிரியர்களுடன் நெல்லை சென்றேன். அது நான் நுழைந்த முதல் தமிழ்க் குடும்பம். நல்ல தொடக்கம். இலக்கிய உலகம் அறிந்தவர்கள். ஆசிரியர் முத்துவின் அம்மா எனக்கும் அம்மாவானார்கள். நான் அந்தக் குடும்பத்தின் செல்லப் பெண்ணானேன். அவர்களை அடுத்துக் காட்டுகின்றேன். உங்களுக்கு அவர்களைத் தெரியும்.
சந்திப்போம்!
ஊர்வலம் தொடரும்..
எண்ணங்கள் ஊர்வலம் – 15
18-08-2009
இலக்கிய உலகில் முத்திரை பதித்த இருவர் – திரு. பாஸ்கரத் தொண்டைமான்; அவரது இளவல் கவிஞர் ரகுநாதன்.அவர்கள் இல்லத்திற்குத்தான் சென்றேன். இவர்களின் மூத்த சகோதரியின் மகன்தான் முத்து. முத்துவின் வீட்டில் ஒண்டி விட்டேன். அவர்களின் தாய்ப்பாசம் என்னை அக்குடும்பத்தில் ஒருவராக்கியது. அந்தக் குடும்பத்தில் கடைக்குட்டிப் பெண் சாவித்திரி. அவர்களைச் சித்தி என்று கூப்பிடுவேன். அவர்களே ஆசிரியர் துரைராஜுக்கு மனைவியான பொழுது என் மகிழ்ச்சி எல்லை கடந்தது. மாணவியாக இருந்த என்னை மெருகேற்றிய குடும்பம் நல்ல தொடக்கம். இதுபோல் பல தமிழ் அறிஞர்கள் குடும்பங்கள் எனக்குக் கிடைத்தன.
திரு. பாஸ்கரத் தொண்டைமான்
துரைராஜ் பணியில் இருந்து கொண்டே படித்து உசிலம்பட்டி கல்லூரியில் முதல்வரும் ஆனார். புலமை மிக்கவர். தூத்துக்குடி இளம்பிறை மணிமாறன் இவருக்கு சுவீகாரத் தங்கை. இவரால் ராஜபாளையம் ஜகன்னாத ராஜா அவர்களும், கோதண்டம் அவர்களும் அறிமுகமானார்கள். இவரை எழுதச் சொல்லி எத்தனை கூறியும் அவர் எழுதாமல் விட்டது எங்களுக்கு வருத்தமே. இவர் பற்றி இன்னொரு தகவல் கொடுத்தால் பலர் புரிந்து கொள்வார்கள். தமிழகத்தின் தென்னகத்தில் அடிகளார் சாமி, சாலமன் பாப்பையா பட்டி மன்றக் குழுவில் தவறாது வந்துவிடுவார். இவரது தம்பி ராஜன் எழுதிய நூற்றுக்கணக்கான சிறுகதைகள் தமிழகப் பத்திரிகைகளில் வந்திருக்கின்றன. முன்னிலை வகிக்கும் எல்லா இதழ்களிலும் எழுதுபவர்; இப்பொழுதும் எழுதிக் கொண்டிருக்கின்றார். இவர் கல்லூரிப் பேராசிரியராக இருந்து சமீபத்தில் பணி ஓய்வு பெற்றவர். விலங்கினங்களைப்பற்றி ஆய்வு செய்து புத்தகங்கள் வெளியிட்டிருக்கின்றார். ராஜன் என் மாணவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகின்றேன். இளசை அருணா என்று இன்னொருவர். கரிசல் மண் எழுத்தாளர்கள் பற்றி புத்தகம் வெளியிட்டிருக்கின்றார். எட்டயபுரம் பல எழுத்தாளர்களை உருவாக்கிய பூமி. அவர்களில் நானும் ஒருத்தி. ரகுநாதன் தன்னிடமிருந்த எல்லாப் புத்தகங்களையும் எட்டயபுரம் நூலகத்திற்கு அளித்துள்ளார். துரைராஜ் அவர்களின் புத்தகங்களும் நூலகத்திற்குத் தரப்பட்டுவிட்டன.அவரிடம் சில அரிய புத்தகங்கள் இருந்தன. அவைகளையும் நூலகத்தில் காணலாம். பாண்டிய நாட்டின் இளசை நாடு எட்டயபுரமானது. என் பிள்ளைப்பருவம் இங்கேதான் கழிந்தது. என்னை உருவாக்கிய கரிசல் மண்ணுக்கு வணக்கம்.
கல்லுரியில் கணக்குப் பாடம் கற்றுப் பட்டம் பெற்று, நான் படித்த அதே பள்ளிக்கு ஆசிரியையாக வந்தேன். ஆண்டவன் கட்டளை வேறாக இருக்கும் பொழுது அந்தப் பணியில் நீடிக்க முடியுமா?. கர்ம வீரர் காமராஜ் அவர்களின் அறிவுரைப்படி சமுதாயப் பணிக்குச் சென்றேன். மஹாபாரதப் போர் 18 நாட்கள் தான். நான் ஏற்றுக் கொண்ட பணியில் 34 ஆண்டுகள் போராட்டம். எட்டயபுரம் என்னைப் போராளியாக உருவாக்கியிருந்தது. பாரதியும் எனக்குள் இருந்து ஊக்குவித்தான்.
நினைவலைகளின் ஓசை இப்பொழுதும் கேட்கின்றது.அந்தக் காலத்தில் வேலைக்கு வந்த பெண்கள் இழந்தது எத்தனையோ?! இரக்கப் படாமல் இகழ்ந்த வாய்கள் அதிகம். சோதனைகளும் வேதனைகளும் சுருட்டிப் போட்டன. நான் பெற்ற பயிற்சி, போராடும் சக்தியைக் கொடுத்தது.பெண்ணியம் பேசியவள் நான். பெண்ணுக்குக் கஷ்டம் என்றால் ஓடிப் போய் உதவியவள் நான். உழைக்கும் மகளிர் நலன் கருதிப் போராடியவள் நான். இன்றைய காலப் போக்கைப் பார்த்து மனம் அழுகின்றது. அன்று பல பெண்கள், மானத்தை, மரியாதையை, ஏன் வாழ்க்கையை, தங்களையே பலிகொடுத்து வாங்கிக் கொடுத்த சுதந்திரம். பெண் விடுதலைக்காகப் பாடியவன் பாரதி. நான் எழுதிய “பாரதி வந்தார்” என்ற ஒரு கதை பத்திரிகையிலும் வெளிவந்தது. வருடம் 1958. மீண்டும் வந்த பாரதி நிலைமையைப் பார்த்துவிட்டு “நான் சொன்ன சுதந்திரம் இதுவன்று” என்று ஓடிப் போவதாக எழுதி இருந்தேன். ஒரு பெண் வேலைக்குப் போனதை ஏதோ பெரிய போருடன் ஒப்பிட்டுப் பேசுகின்றாளே, இது மிகை என்று முணுமுணுப்பது கேட்கின்றது. அங்கே உடல்கள் மட்டும் அழிந்தன. இங்கோ உடலும் உள்ளமும் அழிந்தன. மனிதன் தன் வீட்டுக் கதவை அபாயம் தட்டும்வரை அவன் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். சமுதாய அக்கறையில்லாமல் வாழ்பவனுக்குச் சுற்றுப்புறத்தில் நடப்பது தெரியாது. இன்று கடமையைவிட உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்கின்றது. மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவந்ததைப் பார்த்திருக்கின்றேன். சுதந்திரம் பெற்றவுடன் பொறுப்பாகத் தொடங்கிய சமுதாயம் , சுயநலத்திற்கும் சுரண்டலுக்கும் அடிமையான வரலாற்றுக் காலத்தில் எதிர் நீச்சல் போட்டவள்.எனக்கேற்பட்ட காயங்கள் ஆறாத புண்களாகத் தங்கி இன்றும் துன்புறுத்தி வருகின்றன.
அரசியல்வாதி லஞ்சம் வாங்குகின்றான்; அரசுப் பணியாளர்களும் ஊழல் செய்கின்றார்கள். சீர்திருத்தம் பேசியவர்களால்தான் எத்தனை எத்தனை பிரிவினைகள்! எங்கும் வன்முறை. விலைவாசி சிகரத்தைத் தொட ஆரம்பித்துவிட்டது. குடிக்கும் தண்ணீருக்கும் பிச்சை எடுக்கின்றோம். மாட்டைப் போல் வீட்டுக்குள் பூட்டி வைக்கப்பட்ட பெண் தனக்குப் பாலியல் சுதந்திரம் கேட்கின்றாள். இன்னும் எத்தனையோ விஷயங்களில் உரிமை கிடைக்காத நிலையில் செக்ஸ் பாவமில்லை என்று கூறுவதில் ஆர்வம் காட்டுகிறாள்; ஆக்க பூர்வமான செயல்பாட்டிலிருந்து ஒதுங்கிக் கொண்டு விட்டாள். “காட்டுக்குப் போ” என்று தந்தை சொல்லவும் சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை முகத்துடன் போன இராமன் கதை தெரியும். இன்று பெற்றவர்களை உதறிவிட்டுப் போகும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகின்றது. குடும்பம் என்னும் கோட்பாடு ஆட்டம் காண ஆரம்பித்திருக்கின்றது. ஆண்டவனுடன் வியாபாரம் பேசுகின்றோம். பொழுது போக்குகளில் அதுவும் ஒன்று.
குற்றவாளி யார்? ஒருவனை ஒரு விரலால் சுட்டிக் காட்டும் பொழுது நம்மை நோக்கி மூன்று விரல்கள் இருப்பதை நாம் உணரவில்லை. இது ஏசுநாதரின் பொன் மொழி. இந்தக் குற்றங்களுக்கு நாம் எல்லோரும் பங்குதாரர்கள். இன்றைய செய்தி நாளைய வரலாறு. பழைய வரலாறுகளைப் புரட்டிப் பார்க்கும் பொழுது , தொடர்ந்து வரும் இன்றைய வரலாற்றினையும் தெரிந்து கொள்ள வேண்டும். நோயின் அறிகுறி தெரிந்தவுடன் அந்த நோயை நீக்க முயற்சி செய்ய வேண்டும். புற்றுநோய் போல் தெரியாமல் வளர்ந்து வருவதல்ல சமுதாய நோய்கள். மாற்றங்கள் நம்முன் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இப்பண்பாட்டுச் சீரழிவில் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு. மனித நேயம் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக் கொண்டிருக்கின்றது. நம்மைக் கடவுள் மன்னிக்க மாட்டார். இப்பொழுதாவது விழித்துக் கொண்டு முடிந்தைச் செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் கடமை இருக்கின்றது.
நிமிர்ந்து பார்க்கும் உயரத்தில் இருந்த நான் , சிறப்பிலும் சிறுமையிலும் இருந்த மனிதர்களுடன் பழக வேண்டிய சூழலில் இருந்தேன். சாக்கடையில் இறங்கி , வீழ்ந்துவிட்ட மனிதர்களை மீட்டிருக்கின்றேன். பத்திரிகைகளும், எழுத்துலகப் பெரியவர்களும் என் படைகள். இதை எழுதும் பொழுதே மனக்கடலில் நினைவலைகள் மோதுகின்றன. என்னை எழுதச் சொல்லிப் பல ஆண்டுகளாகப் பலரும் முயன்று வருகின்றனர்; ’நடந்தவைகளைப் பதிந்து வை’ என்று கூறி வருகின்றனர். ஏதோ ஒன்று தடைக் கல்லாக என்னைத் தடுத்து வருகின்றது. பத்திரிகையில் எழுத மறுத்து விட்டேன். கத்திரிக்கோல் ஜீவனை அழித்துவிடலாம். அவர்கள் தேர்ந்தெடுத்த களம் மின்தமிழ்; அவர்கள் கொடுத்த தலைப்புதான் நினைவலைகள். இது சுயசரிதையன்று. நம் கதை. சமுதாய வரலாறு. எழுதுவேனா? தெரியாது. இத்தொடருக்கான அஸ்திவாரம்தான் ”எண்ணங்கள் ஊர்வலம்”. இந்த இழையில் ஊர்வலம் நின்று நினைவலைகளுடன் சங்கமமாகின்றது. நினைவலைகள் வந்தால் நாம் மீண்டும் சந்திக்கலாம்.
முற்றும்!