Home Historymalaysia ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரர் ஆலயம்

ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரர் ஆலயம்

by Dr.K.Subashini
0 comment

 

ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரர்  ஆலயம்

Sri Veeramuthu Muneeswarar Temple
கிருஷ்ணன், சிங்கை.

 

ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரர் கோயில் மற்ற ஆலயங்களிலிருந்து சற்று மாறுபட்டது. இவர் ’ஹோக் ஹுவாட் கெங்’ [Hock Huat Keng] என்னும் சீனக் கோயிலின் வளாகத்திலேயே குடிகொண்டு எல்லா வகை பூஜை, வழிபாடுகளையும் ஏற்று கம்பீரமாக அருள்பாலித்து வருகிறார்.

 

சீனக் கோயிலில் இந்து சமய வழிபாடா?

 

கேட்பதற்குப் புதுமையாகவும்,வியப்பாகவும் இருக்கிறது அல்லவா? ஆனால், உண்மை. சிங்கப்பூரில் முதன் முறையாக சீனக் கோயில் வளாகத்தில் இந்துக் கோவில் ஒன்று வழிபாடு நடத்தி வருகிறது. ஈ சூன் தொழிற் பேட்டையில் ’ஹோக் ஹுவாட் கெங்’ சீனக்கோவில் வளாகத்திலேயே ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரர் ஆலயம் உள்ளது. பக்தர்கள் தடையின்றி வழிபட ஆலய அதிகாரிகளுடன் சேர்ந்துகொண்டு ’ஹோக் ஹுவாட் கெங்’ ஆலய அதிகாரிகளும் சிறப்பான ஏற்பாடு செய்து தந்துள்ளார்கள்.

 

ஆலய வரலாறு.

நூறு ஆண்டு கால வரலாறு கொண்டது இவ்வாலயம் என்றாலும்,1930-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்த சான்றுகள் கிடைக்கின்றன.தமிழர்கள் சிங்கப்பூரில் ’கம்போங்’(கிராமம்) என்று கூறப்படும் இயோ சூச் காங் சாலையில் அமைந்துள்ள டிரக்.32 (Track.32)ல் சிறிய மண் குன்றின் மீது ஒரு கருங்கல்லை ஸ்தாபனம் செய்து அதற்கு ’வீரமுத்து முனீஸ்வரன்’ என்று பெயரிட்டு வழிபட்டனர். 

 

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் செடிகொடிகளுடன் காடுகளும், புதர்களும் நிறைந்த இடமாக இருந்தாலும் மக்கள் அங்கு குடியேறி வாழ்ந்தனர்.பெரும்பாலும் உடல் உழைப்புத் தொழிலாளர்கள் இங்கு குடியிருந்தனர். பொதுப் பணித்துறையின் (PWD)குடியிருப்பும் அங்கு இருந்தது. நாளடைவில் அவர்கள் தங்கள் வழிபாட்டுக்கு ஓர் இடத்தினைத்  தேர்ந்தெடுத்தார்கள். அவ்விடம் ’ஹோக் ஹுவாட் கெங்’ சீனக் கோவிலின் அருகிலேயே அமையப்பெற்றது.

 

முன்பு இப்பகுதி பெரும் காடாக விளங்கியதால்  புலிகளின் நடமாட்டமும் இருந்தது. புலிகள் அடிக்கடி ’ ஹோக் ஹுவாட் கெங்’ சீனக் கோவிலுக்கு வந்து ஓய்வு கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் புலிகளால் எந்தத் தீங்கும் ஏற்பட்டதில்லை. இதனை நம்மவர்கள் முனீஸ்வரராகவும்,சீனர்கள் தங்கள் தெய்விகச் சின்னம் எனவும் நம்பியதால் ’ஹோக் ஹுவாட் கெங்’ சீனக் கோவிலில் ’துவா பேக் கொங்’ என்ற சீனத் தெய்வத்துடன் புலியின் சிலையையும் வைத்து வழிபட்டனர். காலவோட்டத்தில் புலிகளின் நடமாட்டம் குறைந்தாலும் புலியின் உறுமல் சப்தத்தையும், முனீஸ்வரரின் நிழலுருவையும் சில பக்தர்கள் கேட்டும்,பார்த்தும் உள்ளார்கள்.

 

 

கடந்த காலத்தில் பொத்தோங் பாசீர் வட்டாரத்தில் ஒரு பெரிய புளிய மரத்தடியின் கீழ் முனீஸ்வரரை வைத்துச் சிலர் வணங்கி வந்தனர். நகரச் சீரமைப்பின் காரணமாக அரசாங்கம் அந்நிலத்தைக் கையகப்படுத்தவே திரு. குரும்பையா என்பவர் தலைமையில் அக்கோயில் தொண்டர்கள் இக்கோயிலுடன் இணைந்து இன்று வரை சேவையாற்றி வருகிறார்கள்.

 

நகர விரிவாக்கத்திற்கும், மேம்பாட்டிற்கும் இயோ சூச் காங் சாலையிலிருந்து புதிய இடத்திற்கு ஆலயம் மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆகவே, நம்மவர்கள் போல் அவர்களும் வழிபடும் தெய்வத்தை அணுகி இடம் பெயர அனுமதி வேண்டி அருள் வாக்குக் கேட்டுள்ளனர். ‘என் அண்ணன் முனீஸ்வரன் வந்தால்தான் நானும் வருவேன்’ என்ற அருள் வாக்கு அவர்களுக்கு வியப்பை அளித்தது.

 

‘ஹோக் ஹுவாட் கெங்’ சீனக்கோவில் நிர்வாகத்தினர் வீரமுத்து முனீஸ்வரரின் பக்தர்களை அணுகி விபரம் கூற அவர்களும் சம்மதித்தார்.

 

அதன்படி 1998 ஆண்டு புதிய ஈ சூன் தொழிற் பேட்டை வட்டாரத்தின் ஒரு புதிய பகுதிக்கு இருவருமே ஒரு நள்ளிரவில் வந்து சேர்ந்தனர். ஹோக் ஹுவாட் கெங் சீனக்கோவில் வளாகத்திலேயே சுமார் 100  சதுர அடி நிலத்தில் வீரமுத்து முனீஸ்வரருக்கு ஒரு தனி இடம் கொடுக்கப்பட்டது.  ஒரே இடத்தில் இருந்து அருள் பாலித்த காரணத்தால் முனீஸ்வரரைத் தனியாக விட்டுவிடாமல் ’ஹோக் ஹுவாட் கெங்’ கடவுள் தன்னோடு இணைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

சமய நல்லிணக்கம்

வீரமுத்து முனீஸ்வரருக்கும் மற்ற இந்து தெய்வங்களுக்கும் பல திருவிழாக்கள் இருந்தாலும், வீரமுத்து முனீஸ்வரருக்கு சனவரி முதல் நாள் காவடி காணிக்கையுடன் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. திருவிழா ஏற்பாடுகளைச் சீனக் குழு உறுப்பினர்களும் ஏற்று நடத்தி வருகிறார்கள்.

 

இங்கே காணிக்கை செலுத்தும் பக்தர்கள் காவடி சுமப்பதில்லை.சீன ஆலயத்தில் பொதுவாக நீண்ட அலகுகள் குத்திக் கொள்ளும் வழக்கம் இருப்பதால், நம்மவர்களும் நீண்ட அலகுகள் குத்திக் கொண்டு காவடி எடுக்கிறார்கள்.

 

சீன ஆலயத்தினுள் இந்துக் கோவில் அமைந்துள்ளதால் சீனக் கலாசாரத்தை இந்தியர்களும் அறிந்து கொள்ள முடிகிறது. சீனத் தெய்வங்களின் பெயர்கள் அனைத்தும் இப்போது மனத்தில் பதிந்துவிட்டது என்று கூறும் நிர்வாகக் குழுவினர் சீன பக்தர்களும் நம் கலாசாரங்களை நன்கு அறிந்து கொண்டுள்ளனர் என்று கூறுகின்றனர்.

 

இவ்வாலயத்தில் இந்திய பக்தர்களுடன் சீன பக்தர்களும் பால்குடங்கள் எடுப்பதையும், அலகுக் காவடி எடுத்து முனீசுவரன் சந்நிதிக்கு வருவதையும் காணலாம். சீன ஆலயத்தின் நிர்வாகக் குழுத்தலைவர் திரு.ஜிம்மி இங்கிடம் கேட்ட போது ’நாங்கள் மட்டுமல்ல; எங்கள் தெய்வங்களும் சிறு வயது முதல் நண்பர்கள்’ என்று கூறுகிறார்.

 

இந்த ஆலயத்தின் பல இன சமுதாய வழிபாட்டு ஒற்றுமை உணர்வுதான் உயர்ந்திருக்கிறது! சீனர்கள் ஆலயத்தில் இந்துக் கடவுள் இருப்பதால் நமது இந்திய கலாசாரமும் இங்கே பின்பற்றப்படுகிறது. நன்னீராட்டு விழாவின் போது இந்து பக்தர்கள் பலர் முனீஸ்வரரின் தரிசனத்தைப் பெற்றுக் கொண்டு சீனக்கோவிலில் ஊதுவத்தி ஏற்றி வைத்தனர். சீனர்களும் வரிசையில் நின்று முனீஸ்வரரின் தரிசனத்தைப் பெறுகிறார்கள்.

 

சிங்கப்பூரில் பல இன மக்களிடையே இந்துக்களும் சீனர்களும் ஒன்றாக இணைந்து ஒரே இடத்தில் வழிபடுவது தெய்விகப் புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் பிரதிபலிக்கிறது. அம்மக்களின் புரிந்துணர்வுக்கும் ஒற்றுமைக்கும் இக்கூட்டு வழிபாடு ஒரு சிறந்த உதாரணம் என்று கூறுகிறார் ஆலயத் தலைவர் திரு.சுகுமாரன்.

 

இரு ஆலயங்களிலும் பல சமுதாயத்தினர் வழிபடும் தெய்வங்கள் உண்டு என்பது ஒருபுறமிருந்தாலும் ஒரே வளாகத்தினுள் சீனக் குழந்தைகளும், இந்தியக் குழந்தைகளும் ஒன்றாக வழிபாடுகள் செய்வதும், ஓடியாடித் திரிவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. நாட்டின் உறுதி மொழியை மனத்தில்  கொண்டு செயல்படுகின்றன இந்த ஆலயங்கள்.

மேலாண்மைக் குழுவிலிருக்கும் திரு.சுகுமாரன், திரு.ராஜா ஆகியோரின் கனிவான பேச்சும், சேவையும் ஆலய முன்னேற்றத்திற்கு மிகவும் உறுதுணை புரியும் என்பதில் ஐயமில்லை.

 

ஆலய முகவரி
Veera Muthu Muneeswarar Temple
(Hock Huat Keng Temple)
523 Yishun Industrial Park. A
Singapore. 768 770
9459 7172 9190 7143 9028 2576

You may also like

Leave a Comment