Home Saivism மறைஞான சம்பந்தர்

மறைஞான சம்பந்தர்

by Dr.K.Subashini
0 comment

திருமதி. கீதா சாம்பசிவம்

 

சைவப் பெரியோர் பலருள் ஞானசம்பந்தர் என்ற பெயருள்ள மூவர்மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் ஆவார்கள்.  அவர்கள் திருஞானசம்பந்தர் என்னும் சமயக்குரவரில் முதல்வரும், மறைஞானசம்பந்தர் என்னும் சந்தானக்குரவரில் மூன்றாமவரும், குருஞானசம்பந்தர் என்னும் குருமுதல்வர் ஆனவரும், தருமபுர ஆதீனத்தின் நிறுவனரும் ஆவார்கள்.  இவர்களில் மறைஞானசம்பந்தரையே இங்கே பார்க்கப் போகிறோம்.

 

மெய்கண்டாரின் அவதாரத்தலமாகிய பெண்ணாகடத்தில் பராசர கோத்திரத்தில் சாமவேத மரபில் பிறந்தவர் ஆவார்.  இவர் அருணந்தி சிவாசாரியாரிடம் உபதேசம் பெற்றார்.  தில்லைச் சிதம்பரத்திற்கு வடகிழக்கிலுள்ள திருக்களாஞ்சேரியில் வாழ்ந்து வந்தார்.  இவரிடம் சீடராய் இருந்தவர்களுள் முக்கியமானவர் உமாபதி சிவம் எனப்பட்ட சந்தானகுரவரில் நான்காமவர் ஆவார்.  இன்னொருவர் மச்சுச் செட்டியார் என்னும் அருள் நமச்சிவாயர், மறைஞான சம்பந்தர் நூல் எதுவும் செய்யவில்லை என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.  ஆனால் இவர் சிவதர்மம் என்னும் ஆகமத்தின் உத்தரபாகத்தைத் தமிழில் மொழிபெயர்த்ததாகச் சொல்லப்படுகிறது.  மறைஞான சம்பந்தரிடம் உமாபதி சிவம் சீடராகச் சேர்ந்ததே ஒரு சுவையான சம்பவம் மூலமே. 

அக்காலத்தில் தில்லை மூவாயிரவரில் முக்கியமாய்த் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தீக்ஷிதரை மேள, தாளத்தோடு பல்லக்கில் தீவட்டி மரியாதையோடு அனுப்பி வைக்கும் பழக்கம் இருந்து வந்தது.  பகல் நேரமானாலும் இந்த தீவட்டி மரியாதை உண்டு.  ஒருநாள் உமாபதி சிவம் அப்படியே கோயிலில் வழிபாடுகளை முடித்துக்கொண்டு பல்லக்கில் அமர்ந்து தீவட்டி மரியாதை சகிதம், மேளதாளத்தோடு சென்று கொண்டிருந்தார்.  அங்கே ஓர் வீட்டில் திண்ணையில் அமர்ந்திருந்த மறைஞான சம்பந்தர் இதைக் கண்டதும், “பட்ட மரத்தில் பகல் குருடு போகுது பார்!” என்று உமாபதி சிவத்தின் காதில் விழும்படி சத்தமாய்ச் சொல்லிச் சிரித்தார்.  அதைக் கேட்ட உமாபதி சிவத்திற்கு அதன் தாத்பரியம் புரிய அவர் மனதில் அந்த வித்து விழுந்து ஞானாக்னி பற்றிக்கொண்டது.

 

பல்லக்கிலிருந்து அப்படியே குதித்து மறைஞான சம்பந்தரின் கால்களில் விழுந்து வணங்கித் தன்னை சீடனாக ஏற்கும்படி கேட்டுக்கொண்டார்.  மறைஞானசம்பந்தர் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அங்கிருந்து எழுந்து நடக்கத் தொடங்கினார்.  உமாபதி சிவம் அவரைப் பின்பற்றினார்.  சற்றுத் தூரம் சென்ற மறைஞான சம்பந்தர் ஒரு வீட்டின் வாசலில் நிற்க அங்கே அவர் கைகளில் கூழை வார்த்தனர்.  அந்தக் கூழை அப்படியே கைகளில் ஏந்திக் குடித்தார் மறைஞான சம்பந்தர்.  அப்போது கூழ் அவர் கைகளின் வழியே வழிந்தது.  உமாபதி சிவம் சிந்திய கூழை குருப் பிரசாதம் எனக் கூறிவிட்டுக் கைகளில் வாங்கிக் குடித்தார்.  அன்று முதல் அவரின் அத்யந்த சீடரானார். நாலாவது சந்தானகுரவராகவும் ஆனால்.  திருக்களாஞ்சேரியில் வசித்த மறைஞான சம்பந்தரைப் பற்றிய மேலதிக தகவல்கள் கிட்டவில்லை.  அவர் அங்கேயே இருந்து முக்தியடைந்ததாய்த் தெரிய வருகிறது.  சதமணிக்கோவை என்னும் நூல் ஒன்றை மறைஞான சம்பந்தர் செய்திருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.  திருக்களாஞ்சேரி தற்போது சிங்காரத் தோப்பு என்ற பெயரில் வழங்குகிறது.  இங்கே மறைஞானசம்பந்தரின் மடமும் திருக்களாஞ்செடியுடைய மஹாதேவர் கோயிலும் உள்ளது.  மடத்திலேயே மறைஞானசம்பந்தரின் சமாதி உள்ளது.  மடமும், சமாதியும் திருவாவடுதுறை ஆதீனத்தின் பொறுப்பில் உள்ளது.

You may also like

Leave a Comment