Home Games நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 31

நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 31

by Dr.K.Subashini
0 comment

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

31. வருதுகிளி வரட்டுங்கிளி விளையாட்டு

இருபாலராலும் விளையாடப்படும் விளையாட்டு இது. விளையாடுபவர்களனைவரும் உத்திபிரித்தல் முறை முலம் இரண்டு அணிகளாகப் பிரிந்து கொள்கின்றனர். ஓடுபவர்களும் பிடிப்பவர்களும் யாரென்று தீர்மானித்துக் கொள்கின்றனர். பெரும்பாலும் 12 நபர்களுக்கு மேல் விளையாடுவதில்லை.

பிடிக்கும் அணியினரில் தலைவரைத் தவிர மற்றவர்கள் தரையில் எழுந்து ஒடுவதற்குத் தயாராக அமர்வது போல் அமர்ந்து கொள்கின்றனர். ஒவ்வொருவரும் தங்களுக்கிடையில் ஒடுபவர்கள் ஓடுவதற்கு இடம் விட்டு அமர்கின்றனர். மேலும் ஒருவர் ஒரு திசையைப் பார்த்து அமர அதற்கடுத்தவர் அதற்கு எதிர்திசையைப் பார்த்தவாறு அமர்கின்றார். இப்படியாக அனைவரும் அமர்ந்தபின் ஒடுபவர்கள் இவர்களுக்கிடையில் நின்றுகொள்ள பிடிக்கும் அணியின் தலைவர் ஒருபுறம் நின்றுகொண்டு இவர்களிடம் வருதாங்கிளி என்று கேட்க இவர்கள் வரட்டுங்கிளி என அவர் மீண்டும் எந்தப்பக்கம் என்று கேட்க அவர்கள் ஒரு பக்கம் கையைக்காட்டி இந்தப் பக்கம் என்கின்றனர். அவர்கள் காட்டிய பக்கம் தலைவர் அவர்களைப் பிடிக்க ஓடுகின்றார். அவர் பிடிப்பதற்காக ஒடியபடி அமர்ந்திருப்பவர்களின் அருகில்; வரும்போது ஒருவரின் முதுகில் தட்டி உஷ் என்று கூறுகிறார். இவ்வாறு மாறிமாறி அமர்ந்திருப்பவர்களுக்கு உஷ் கொடுத்து ஓடுபவர்கனைவரையும் தொடுகின்றனர். ஓடுபவர்களனைவரும் அடிபட்டபிறகு முதலில் அமர்ந்தவர்கள் இப்போது ஓடுகின்றனர். அமர்ந்திருப்பவர்கள் அவர்களைத் தொடுகின்றனர். இவ்வாறு தொடர்ந்து மாறி மாறி அவர்களுக்கு இந்த விளையாட்டில் சலிப்பு ஏற்படுகின்ற வரையில் விளையாடிக்கொண்டிருக்கின்றனர்.
சேகரித்த இடம்: வடபழஞ்சி

பிற

1. பிடிப்பதற்காக அமர்ந்திருப்பவர்களில் இருவரை இரண்டுபக்கமும் தூண் போன்று நிற்கவைத்துக் கொள்கின்றனர். ஆனால் அவர்கள் ஓடி மற்றவரைத் தொடமுடியாது. நின்று கொண்டு மட்டும் இருக்கவேண்டும். இப்போது யாரும் நிற்பதற்கு முன்வரவில்லையாதலால் விளையாட்டில் இம்முறை இல்லை.

2. இடது. வலது பக்கங்களுக்கு பதிலாக மோர் (இடது) வேணுமா? தயிர் (வலது) வேணுமா? என்று கேட்கின்றனர். அல்லது நொட்டாம்பக்கம் வேணுமா? சோத்தாம் பக்கம் வேணுமா? என்றும் கேட்கின்றனர்.

3. இன்று தேசிய அளவில் விளையாடப்படும் போட்டி விளையாட்டான கோகோ
விளையாட்டு இந்த விளையாட்டைப் போன்றதாகும். இதற்கு கிளிவிரட்டுதல்.
உஷா விளையாட்டு என்கிற வேறுபெயர்களும் உள்ளன.

[பகுதி 32 க்குச் செல்க]

You may also like

Leave a Comment