Home Games நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 15

நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 15

by Dr.K.Subashini
0 comment

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

14. அணில் விளையாட்டு

சிறுவன்கள் மட்டும் விளையாடக்கூடிய விளையாட்டு இது. மரங்கள் இருக்கின்ற இடத்தில்தான் அதாவது பெரியமரமாக இல்லாமல் ஓரளவு சிறியதாக இருக்கின்ற சிறுவர்களால் வேகமாக ஏறக்கூடிய அளவில் உயரமாக மரங்கள் இருக்குமிடத்தில்தான் இவ்விளையாட்டை விளையாட முடியும். மேலும் மரம் ஏறத் தெரிந்தவர்கள் மட்டுமே இந்த விளையாட்டை விளையாட முடியும்.

விளையாடுகின்ற சிறுவர்களனைவரும் கூடி சாட், பூட், த்ரீ மூலம் பட்டவரைத் தேர்ந்தெடுக்கின்றனர். மரத்திற்கருகில் மண்ணில் சிறிய கம்பினால் ஒரு வட்டம் போட்டுக்கொள்கின்றனர். ஒருவர் அந்த வட்டத்தில் நின்று கொண்டு தன்னுடைய ஒரு காலைமட்டும் தூக்கி அந்த இடைவெளியின் வழியாகக் கம்பினைத் தூக்கி வீசுகிறார். அவ்வாறு வீசியதும் விழுந்த இடத்திலிருந்து பட்டவரே அக்கம்பினை எடுத்து வருகிறார். அச்சமயத்தில் மற்றவர்களனைவரும் வேகமாக மரத்தின்மீது ஏறிக்கொள்கின்றனர். பட்டவர் கம்பை எடுத்துக்கொண்டு வந்து மீண்டும் அந்த வட்டத்திற்குள் போட்டுவிட்டு மரத்தில் இருப்பவர்களைத் தொடுவதற்கு முயற்சிக்கிறார். தரையில் இருந்தபடியே எட்டியும் தொடலாம். மரத்தில் ஏறியும் தொடலாம். ஆனால் பட்டவர் மரத்தில் ஏறும்போது மரத்தில் இருப்பவர்களில் ஒருவர் கீழே குதித்து அக்கம்பை எடுத்துவிட முதலில் பட்டவராயிருந்தவரே மீண்டும் பட்டவராகிறார். இவர் ஒருவரைத் தொட்டுவிட்டால் தொடப்பட்டவர் பட்டவராகிறார்.

கம்பினை வீசுகின்றபோது பட்டவர் குறிப்பிட்ட தூரத்தில் நிற்கிறார். அவரை நோக்கிக் கம்பை வீசுகின்றபோது பட்டவர் அதனைப் பிடித்துவிட்டால் வீசியவர் அவுட். விளையாட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார்
சேகரித்த இடம் : கச்சைகட்டி

பிற

1. மரத்தில் ஏறியிருப்பவர்கள் மரத்தில் ஓரிடத்தில் அமர்ந்திருக்கக்கூடாது. கீழே குதித்து மீண்டும் ஏறலாம். அதாவது மரத்திலிருப்பவர்கள் ஒன்றும் செய்யாமல் அமர்ந்திருக்கக்கூடாது. மரத்திலிருந்து குதித்து ஓடலாம். ஓடுகின்றபோது பட்டவர் துரத்தி வந்து பிடிக்கலாம். ஒருமரம் மட்டுமல்ல அருகிலுள்ள மரங்களையும் பயன்படுத்தலாம். ஆனால் அது மற்றவர்களைத் தொடுவதற்குப் பட்டவருக்குக் கடமாக இருப்பதால் ஒருமரம் மட்டும் பயன்படுத்தப்படுகிறது

2. மரமேறிக்குரங்கு என்ற மற்றொரு பெயரும் இதற்கு உண்டு (புளியங்குளம்).

[பகுதி 6 க்குச் செல்க]

 

You may also like

Leave a Comment