Home Games நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 14

நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 14

by Dr.K.Subashini
0 comment

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

13. சேமீஸ் விளையாட்டு விளையாட்டு

இருபாலரும் சேர்ந்து விளையாடும் விளையாட்டு இது. (6-10 வயது). முழுநீள வெள்ளைத்தாளை எடுத்துக் கொண்டு அதனைச் சிறிய சதுரமான துண்டுகளாகக் கிழித்துக்கொள்கின்றனர். விளையாட்டு நபர்களில் ஒரு பேருக்கு மூன்று துண்டுச் சீட்டுகளாக ஏழு நபர்களுக்கு இருபத்தோரு சீட்டுகளாகக் கிழித்துக்கொள்கின்றனர். அச்சீட்டுகளில் ஒரே நிறத்தை (colour)) மூன்று சீட்டுகள் என்கிற எண்ணிக்கையில் எழுதுகின்றனர். ஒவ்வொரு மும்மூன்று சீட்டுகளிலும் கருப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை, ரோஸ், வெண்மை, வெள்ளை என்று ஏழு நிறங்களை எழுதிக்கொள்கின்றனர். இது விளையாட்டு நபர்களின் எண்ணிக்கைக்கேற்ப மாறுபடும்.

பிறகு முழுநீள வெள்ளைத்தாளை எடுத்து அதில் விளையாட்டு நபர்களின் பெயர்களை எழுதி இரண்டு பெயர்களுக்கிடையில் வேறுபாட்டிற்கு நீளமாகக் கோடு போட்டுக் கொள்கின்றனர். அனைவரும் வட்டமாக அமர்ந்து கொள்கின்றனர். இப்பொழுது விளையாட்டின்போது அனைவருக்கும் கிடைக்கின்ற எண்களை வெள்ளைத்தாளில் அவரவர் பெயருக்குக் கீழே தொடர்ந்து எழுதுகின்ற நபரையும், சீட்டுத்துண்டுகளைக் குலுக்கிப் போடுகின்ற நபரையும் யார் யாரெனத் தீர்மானித்துக் கொள்கின்றனர். கிழிக்கப்பட்ட சீட்டுத் துண்டுகளை அதில் எழுதப்பட்டிருக்கும் நிறத்தின் பெயர் வெளியில் தெரியா வண்ணம் மடித்துக் கொள்கின்றனர். இதற்குப் பின்னரே விளையாட்டு ஆரம்பமாகின்றது.

ஒருவர் மடிக்கப்பட்ட சீட்டுத்துண்டுகளையெல்லாம் தன் இருகைகளிலும் வைத்து நன்றாகக் குலுக்கியபின் தங்களுக்கு நடுவில் தரையில் போடுகின்றார். நடுவில் கிடக்கும் சீட்டுத்துண்டுகளை அனைவரும் ஒருவருக்கு மூன்று சீட்டுகள் வீதம் எடுத்துக்கொள்கின்றனர். ஒவ்வொருவரும் மற்றவருக்குத் தெரியாமல் தங்கள் சீட்டுகளில் உள்ள நிறங்களைப் பார்த்துக்கொள்கின்றனர். மூன்று சீட்டுகளிலும் ஒரே நிறங்கள் எழுதப்பட்டவையாக இருந்தால் அச்சீட்டுகளை உடையவர் ‘சேமீஸ்’ என்று கூறியபடி தன்னுடைய கையைத் தரைமீது வைக்கின்றார். (ஒரே நிறமுள்ள பெயர்கள் மூன்று சீட்டுகளிலும் இல்லாவிட்டால ஒரே மாதிரியான மூன்று நிறங்களை சேர்க்கின்ற வரையில் ஒவ்வொருவரும் ஒருவரிடமிருந்து மற்றவருக்கென்று சேராத நிறம் எழுதப்பட்டிருக்கும் சீட்டை மாற்றிக் கொண்டே இருக்கின்றார்கள்)

தரைமீது கையை ஒருவர் வைத்தவுடன் மற்றவர்கள் வேகமாக ஒன்றன் மேல் ஒன்றாக தங்கள் வலது கையினை வைக்கின்றார்கள். பிறகு பேப்பரில் எண்ணிக்கையை எழுதுபவர் தன்னுடைய கையினை மட்டும் உருவிக்கொண்டு அனைவருக்கும் எண்ணிக்கையினை எழுதுகின்றார். தரையில் அடுக்கியதுபோல் வைக்கப்பட்டிருக்கும் கைகளில் – கை வைக்கப்பட்டு இருக்கின்ற இடத்தைக் கணக்கில் வைத்து இந்த எண்ணிக்கை கிடைக்கின்றது. அதாவது ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் கைகளில் முதலில் (மேல்) இருக்கின்ற கை 50 என்றும் அடுத்தது 100 முன்றாவது 150 என்றும் எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டே எழுதி அடியில் இருப்பவர் கை 350 என்று எண்ணிக்கை எழுதுகிறார். ‘சேமீஸ்’ என்று கூறி தரையில் கை வைப்பவருக்கே அதிக எண்ணிக்கை கிடைக்கிறது. அனைவரின் பெயருக்கும் கீழே எண்ணிக்கையை எழுதியபின் மீண்டும் சீட்டுகளை அனைவரிடமும் இருந்து பெற்று சீட்டுகளை குலுக்கிப் போடுவதிலிருந்து ஆட்டம் தொடருகின்றது. வெள்ளைத்தாளின் ஒருபக்கம் நிறைகின்ற வரையிலும் இவ்விளையாட்டு நடைபெறுகிறது. அதிக எண்ணிக்கை பெற்றவர் வென்றவராகிறார்.

வ. எண் தெய்வம் சுகன்யா இளங்கோ கென்னடி மாரி செந்தில் அமலா
1 150 50 200 300 100 350 250
2 200 150 50 300 250 100 350
3 150 350 300 200 50 250 100
4 50 250 200 100 300 350 150
5 250 200 150 350 100 300 50
6 100 50 250 150 350 300 200
மொத்தம்900 1050 1150 1400 1150 1650 1100
சேகரித்த இடம் – வடபழஞ்சி- 6.6.93

பிற
1. தரையிலிருந்து எடுக்கின்ற மூன்று சீட்டுகளில் இரண்டு சீட்டுகள் ஒரே நிறமாக எழுதப்பட்டிருப்பவையாக அல்லது மூன்றுமே வௌ;வேறு நிறங்கள் எழுதப்பட்டவையாக அமைகின்றன. அப்போது ஒரே நிறங்களின் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும் சீட்டுக்கள் சேர்கின்ற வரையில் ஒருவரிடமிருந்து மற்றவருக்குக் சேராத சீட்டினை வரிசையாக மாற்றிக் கொள்கின்றனர். அவ்வாறு மாற்றுகின்ற பொழுது ஒருவர் தனக்கு மற்றவர் தந்த சீட்டையே அடுத்தவருக்குத் தரக்கூடாது என்பது விதியாக இருக்கிறது. ஒருவர் தருகின்ற சீட்டைப் பெற்றுக்கொண்டு அவர் தன்னிடமுள்ள மற்ற சீட்டையே மற்றவருக்குத் தரவேண்டும் என்பது விதி.

2. விளையாடடு நபர்கள் அனைவருமே வெள்ளைத்தாள் கொண்டு வரவேண்டும்.

3. அனைவரின் பெயர்களையும் எண்ணிக்கையையும் எழுதுவதற்கு முழுநீள வெள்ளைத்தாள் அல்லது சிலேட் பயன்படுத்தப்படுகிறது.

4. சிலேட்டில் எண்ணிக்கையை எழுதுபவரே முக்கியமானவராகக் கருதப்படுகிறார். இவரைத் தேர்ந்தெடுப்பதற்கே அதிகமான சச்சரவுகள், சண்டைகள் ஏற்படுகின்றன. இருந்தாலும் சிலேட் அல்லது வெள்ளைத்தாளுக்குச் சொந்தக்காரரே சிலேட்டில் எண்ணிக்கை எழுதுபவராகிறார்.

5. விளையாட்டில் தண்டனை எதுவும் கிடையாது

6. விளையாட்டு நபர்களனைவரும் வெள்ளைத்தாள் கொண்டுவரவேண்டுமென்று கூறினாலும், விளையாட்டு நபர்களில் வயதில் சிறியவரிடமிருந்தே பேனா, பென்சில், சிலேட், வெள்ளைத்தாள், குச்சி, சாக்பீஸ் போன்றவை பெறப்படுகின்றன. இல்லையெனில் அவரை விளையாட்டிற்குச் சேர்ப்பது இல்லை.

7. வேகமாக விளையாடுவதே இவ்விளையாட்டின் சிறப்பு அதாவது ஒருவரிடமிருந்து மற்றவருக்குச் சீட்டு வேகமாக மாறவேண்டும். மற்றொன்று முதலில் ஒருவர் தரையில் சேமீஸ் என்று கூறி கைவைத்தவுடன் மற்றவர்கள் வேகமாகக் கைகளை வைத்து விடுகிறார்கள். ஏனெனில் கூடுதல் எண்ணிக்கை தரையிலிருந்து ஆரம்பமாவதால் வேகமாகக் கைகளை வைத்து அதிக எண்ணிக்கை பெறுகின்றனர். சேமீஸ் என்று கூறுபவர் மட்டும் ஒரே நிறங்களையுடைய மூன்று சீட்டுகள் சேர்த்தால் போதும். மற்றவர்கள் ஒரே நிறங்கள் எழுதப்பட்டிருக்கும் சீட்டுக்களைச் சேர்த்திருக்க வேண்டும் என்கிற விதிமுறை கிடையாது

8. இது ஆண்கள் விளையாடுகின்ற ரம்மி என்கிற சீட்டாட்டத்தை ஒத்ததாக இருக்கிறது.

[பகுதி 15 க்குச் செல்க]

You may also like

Leave a Comment