Home Games நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 13

நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 13

by Dr.K.Subashini
0 comment

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

12. பூப்பறிக்க வருகிறோம் விளையாட்டு

சிறுமியர் மட்டும் விளையாடும் விளையாட்டு (7-14 வயது) சிறுமிகளனைவரும் உத்திபிரித்தல் முறை மூலமாக இருஅணிகளாகப் பிரிந்து கொள்கின்றனர். குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு அணியினரும் ஒருவரையொருவர் பார்ப்பதுபோல நின்று கொள்கின்றனர். ஒரு அணியினர் மற்றொரு அணியை நோக்கி மாறி மாறி இரண்டு கால்களையும் தரையில் பதித்து வேகமாக ஓடிவருகின்றனர். எதிரணி அருகில் வந்து பிறகு அதே வேகத்தில் பின்னோக்கித் தங்கள் பழைய இடத்திற்கே திரும்பாமல் வருகின்றனர். அவர்கள் பாதிதூரம் வரும்போதே எதிரணியினர் இவர்களை நோக்கி வேகமாக வருகின்றனர். இவ்வாறு மாறிமாறி இரண்டு அணியினரும் முன்னும் பின்னுமாகச் சென்று வருகின்றனர். அவ்வாறு வரும்போது தங்கள் அணியினரின் கைகளை ஒருவருக்கொருவர் பிடித்துக்கொள்கின்றனர். அப்போது இருவரும் பாடிக்கொள்ளும் உரையாடல் பாடல் கீழே தரப்படுகிறது.

ஒரு அணியினர் – பூப்பறிக்க வருகிறோம், பூப்பறிக்க வருகிறோம்
எதிரணியினர் – எந்த மாசம் வருகிறீர்? எந்த மாசம் வருகிறீர்?
ஒரு அணியினர் – மாசிமாசம் வருகிறோம் மாசி மாசம் வருகிறோம்
எதிரணியினர் – எந்தப் பூவைப் பறிக்கிறீர்? எந்த பூவைப் பறிக்கிறீர்?
ஒரு அணியினர் – மயிலு பூவைப் பறிக்கிறோம். மயிலு பூவைப் பறிக்கிறோம்
எதிரணியினர் – ஏட்டையா பூவைப் பறிக்கிறோம் ஏட்டையா பூவைப்பறிக்கிறோம்

பாடலின் ஒவ்வொரு வரியும் இரண்டுமுறை பாடப்படுகின்றது. எந்தப் பூவைப் பறிக்க வேண்டும் என்பதை மட்டும் அணியின் தலைவர் கூறுகிறார். பாடல் முழுவதும் அணியினர் அனைவரும் பாடுகின்றனர். பாடல் முடிந்ததும் இரண்டு அணிக்கும் இடையில் நடுவில் ஒரு கோடு கிழித்துக் கொள்கின்றனர். பறிப்பதாக அறிவிக்கப்பட்ட இருவரும் (2 பூக்களும்) அக்கோட்டிற்கு இருபுறமும் நின்றுகொண்டு ஒருவரையொருவர் பிடித்திழுக்கின்றனர். ஒருவர் மற்றவரைத் தன்பக்கம் இழுத்துவிட இழுக்கப்பட்டவர் இழுத்தவரின் அணியைச் சார்ந்தவராகிறார். பிறகு மீண்டும் பூப்பறிக்க வருகிறோம் என்று பாடுவதுடன் விளையாட்டு தொடங்குகிறது. இவ்வாறு ஒவ்வொருவராக ஒவ்வொரு அணியினரும் இழுக்க இழுக்க ஒரு கட்டத்தில் இரண்டு அணியினர் ஒரு அணியாகிவிடுகின்றனர். ஒரு அணி மற்றொரு அணியுடன் சேர்ந்துவிடுகிறது. அந்த மற்றொரு அணியே வென்ற அணியாகக் கருதப்படுகிறது. அத்துடன் விளையாட்டு முடிவடைகின்றது
சேகரித்த இடம் – தேன்கல்பட்டி-8.5.95

பிற
1- இவ்விளையாட்டில் வேகம் என்பதே சிறப்பானதாகும். அதாவது ஒரு அணியினர் மற்றொரு அணியினரை நோக்கி வேகமாகப் பாடலைப் பாடியபடியே வேகமாகச் சென்று வருவதுதான்.

2- மற்றொரு இடத்தில் இப்பாடலின் இறுதிவரியான மயிலு பூவைப் பறிக்கிறோம் என்று பாடியவுடன் எதிரணியினர் ‘யாரைவிட்டு அனுப்புகிறீர் என்று கேட்க ஒரு அணியினர் மாலாவை விட்டு அனுப்புகிறோம் என்று கூறுகின்றனர். இது இவ்விடத்தில் இல்லை. இந்த மயிலும் மாலாவுமே ஒருவரையொருவர் இழுக்கும் முயற்சியில் ஈடுபடுவர். (வடபழஞ்சி)

 

[பகுதி 14 க்குச் செல்க]

You may also like

Leave a Comment