Home Printing&Publishing சோதிடச்சுவடிகள் பதிப்புமுறை

சோதிடச்சுவடிகள் பதிப்புமுறை

by Dr.K.Subashini
0 comment

சி. மூக்கரெட்டி

 

அ. முன்னுரை

 

       தமிழ் உயர் தனிச் செம்மொழி. முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் மொழி. பலநூறு ஆண்டுக் காலமாக முறையே இலக்கண இலக்கிய வளம் பெற்றுத் தழைத்துள்ள மொழி. இம்மொழியில் உள்ள நூல்கள் இலக்கணம், இலக்கியம், காவியம், புராணம், சிற்றிலக்கியங்கள், சமயம், சாத்திரம், தோத்திரம், கணிதம், அறிவியல் எனப் பல வகையிற் பல்கியுள்ளன. இந்நூல்கள் எல்லாம் கடந்த நூற்றாண்டின் முக்கால் பகுதி வரை பெரும்பாலும் ஏட்டுச் சுவடியிலேயே எழுதப்பெற்று வந்தன. அக்காலத்தில் பக்தி இலக்கியங்கள், சமய சாத்திர நூல்கள், சிறு பிரபந்தங்கள் என்பனவற்றை மட்டும் தமிழ் மக்கள் உணர்ந்திருந்தனர். சங்க இலக்கியம் என்பதைப் பெயரளவில் அறிந்திருந்தனரேயன்றிப் பார்த்துப் படித்தவர்கள் இல்லை. தொல்காப்பியமும், திருக்குறளும் தனிச்சிறப்பால் உணரப்பெற்றன. எனினும் அவற்றின் தொன்மை மக்களால் அறியப்படவில்லை. இலக்கண இலக்கியங்களின் நிலையே இவ்வாறெனின் சோதிடக்கலையின் நிலை யாது என ஒருவாறு ஊகித்தறியலாம். பழமையான ஓலைச்சுவடிக ளெல்லாம் கவனிப் பாரற்றுச் செல்லரித்தும், மண்ணால் அழிக்கபட்டும், வெப்பத்தால் பொடிக்கப்பட்டும் காணப்படுகின்றன. கவனிப்பாரன்றி இவைகள் அழிவை நோக்கியுள்ளன. பழஞ் சுவடிகளையே மறந்துவிட்டோம்.

 

ஆ) சுவடிப்பதிப்பின் இன்றியமையாமை
       
       தமிழில் பல்லாயிரம் ஏட்டுச்சுவடிகள் இன்னும் பதிப்பிக்கப்படாமல் உள்ளன. இவை நம் நாட்டின் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், சரசுவதி மகால் நூல் நிலையம், சென்னைக் கீழ்த்திசைச் சுவடிகள் நிலையம், தமிழ்நாடு ஆவணக் காப்பகம், சென்னை டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், மதுரைப் பல்கலைகழகம், மதுரைத் தமிழ்ச் சங்கம், தமிழகத்தில் உள்ள மடாலயங்கள், பழைய சமீன்தார் வழியினர், பழம் புலவர்களின் வாரிசுகளின் வீடுகள் ஆகிய இடங்களில் உள்ளன. ஒரு சில இடங்கள் தவிர மற்றைய இடங்களில் இந்தச் சுவடிகள் கவனிப்பின்றி நலிவுற்றும், சிதைந்தும் உள்ளன. விரைவில் அழிந்துவிடும் நிலையில் பல ஏடுகள் உள்ளன.

       இவ்வளவு இடங்களில் உள்ள சுவடிகளைப் பற்றி முழுவிவரமும் தொகுத்து ஆய்ந்து வெளிக்கொணரப் பல நூற்றாண்டுகள் தேவைப்படும். ஆனால் இவைகளைப் படித்து பெயர்த்தெழுதும் ஆற்றல் உள்ளவர்கள் இப்போது ஒரு சிலரே உள்ளனர். அவர்களுக்குப் பிறகு இச்சுவடிகளைப் படிப்பவர்களே இல்லை என்ற நிலை வரின் நந்தமிழ்ச் செல்வங்கள் எல்லாம் செல்லுக்கும் மண்ணுக்கும் விருந்தாக நேரிடும். இதை நன்கு உணர்ந்தே உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ‘சுவடி இயல்’ என்ற பிரிவை ஏற்படுத்தி ஆண்டுதோறும் சில நூல்களைப் பதிப்பிக்கின்றது. அன்றியும் தஞ்சையில் உள்ள தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் புலங்களில் சுவடிப்புலமும் ஒன்றாக அமைக்கப் பெற்றுள்ளது.

 

இ. சோதிடச் சுவடிகளின் சிறப்பு நிலை
       
       ‘சோதிடம்’ என்பது காலத்தைப் பற்றி ஆராய்கின்ற நுண்கலையாகும். இக்கலை உணர்ச்சி அறிஞர்கட்கு மிக இன்றியமையாததாகும். அன்றியும் சோதிடம் என்பது கிரகங்களின் நிலையையும் நட்சத்திரங்களின் நிலையையும் கொண்டு மானிட உலக வியவகாரத்தைப் பற்றி முன்கூட்டியே அறிய முடியும் என்ற நம்பிக்கையை ஆதாரமாக உடையது. சோதிடச் சுவடிகளின் வானிலையை மையமாகக் கொண்டு மக்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்து கொள்ளப் பயன்படுகின்றன.

 

       பூமியானது தன்னைத் தானே சுற்றிக்கொண்டு வருவதால் ஒவ்வொரு வேளையிலும் வானவீதியில் ஏதாவது ஒரு இராசி கிழக்குத் திக்கில் உதயமாகிக் கொண்டிருக்கும். அவ்விராசியை, அந்த வேளையின் ‘இலக்கினம்’ என்று கூறுவார்கள். சோதிடர்கள் ஒருவன் குணாகுணங்களை அவன் பிறந்த இலக்கினத்தையும் மற்றுமுள்ள கிரகங்கள், அவ்விராசியுடன் சம்பந்தப்பட்டிருப்பதையும் பொறுத்தே சொல்வதால் இலக்கினம் சோதிடத்தில் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். அது சாதகன் பிறந்த நாளின் அட்சரேகைக்கும் தீர்க்க ரேகைக்கும் தகுந்தபடி சிறிது வேறுபடும். பன்னிரண்டு இராசிகளையும் அவைகளிலுள்ள கிரகங்களையும் இலக்கினத்தையும் படத்தில் உள்ளவாறு எழுதிப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அவை வருமாறு:-

 

மீனம்           மேசம்               ரிசபம்                  மிதுனம்
கும்பம்                     இராசிச்                              கடகம்
மகரம்                      சக்கரம்                               சிம்மம் 

தனுசு           விருச்சிகம்    துலாம்                   கன்னி

 

       ஒரு சாதகனுடைய தற்காலிகப் பலாபலன்களைச் சனியைக் கொண்டும், குருவைக் கொண்டு ஆண்டின் பலன்களையும், சூரியனைக் கொண்டு மாதபலன்களையும், சந்திரனைக் கொண்டு நாட்பலன்களையும் காண்பார்கள்.

 

       மேலும், இந்தியாவில் மணமகளுக்கேற்ற மணமகனையோ, மணமகனுக்கேற்ற மணமகளையோ தேர்ந்தெடுப்பதற்கும் அவர்களுடைய சாதகங்களை ஒத்திட்டுப் பார்ப்பது வழக்கம். இவற்றைத் தவிர வீடு கட்டல், விதைவிதைத்தல், படிக்க வைத்தல், மணம் செய்தல் முதலிய சுபகாரியங்களுக்கு நல்ல வேளைகளைத் தேர்ந்தெடுத்தலும் சோதிடத்தில் ஒரு பகுதியாகும். இஃதன்றி ஒரு நாட்டின் தட்ப வெப்ப நிலை, மழை, விளைபொருள்கள் முதலியவற்றைக் கணிப்பதும், சோதிடத்தின் ஒரு பகுதியாகும். கிரகணம், சமாகமம், வால் நட்சத்திரம் முதலியன தோன்றும் நேரத்தைக் கணிப்பதும் இப்பகுதியில் அடங்கும். சாதகத்தின் மூலம் ஒருவனுக்கு உண்டாகும் நோய் முதலியவைகளையும் அவற்றிற்குப் பரிகாரங்களையும் சொல்வது சோதிடத்தின் மற்றொரு முக்கியமான அம்சமாகும்.

 

ஈ) சோதிடக் கலையின் உட்பிரிவுகள்

 

       சோதிடக் கலை என்பது ஒரு மாபெரும் கடலைப் போன்றது. அதன் ஆழத்தையும் அகலத்தையும் முழுவதும் உணர்ந்தவர்கள் உலகில் ஒரு சிலரே உள்ளனர். உலகெங்கிலும் சோதிடக் கலைக்கு இப்போது ஒரு வரவேற்பு இருக்கிறது. மேனாட்டினர் நம் பாரத நாட்டுச் சோதிடக் கலையில் அளவற்ற ஆர்வம் காட்டி வருகிறார்கள். காரணம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்த நமது சோதிடப் பேராசிரியர்களின்   வானநூல் புலமையேயாகும். ஆகையால் நமது சோதிடக் கலைக்கு மேனாடுகளில் பெரும் செல்வாக்கு ஏற்பட்டுள்ளது. நமது பழமையான சோதிட நூல்களின் (சுவடி) அடிப்படையில் மேனாட்டு ஆசிரியர்கள் பல புதிய நூல்கள் எழுதி உள்ளனர்.

 

       வடமொழியிலும் தமிழிலும் அருமையான சோதிட நூல்கள் ஏராளமாக உள்ளன. ப்ருஹத்ஜாதகம், சாராவளி, ஜாதகதத்வம் முதலிய வடமொழி நூல்களும், சாதகாலங்காரம், குமாரசாமயம், வீமேசுர உள்ளமுடையான் போன்ற தமிழ் நூல்களும் மிகப் புகழ் பெற்றவை. இந்த நூல்கள் வானத்தில் உலாவித் திரியும் கோள்கள், மண்ணில் வாழும் மனிதன் மீது எத்தகைய ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை விவரிக்கின்றன. வானவெளி என்பது பூமியைச் சுற்றி உள்ள ஒரு மாபெரும் வட்டம் ஆகும். அந்த வட்டத்தைப் பன்னிரெண்டு பகுதிகளாகப் பிரித்து இருக்கிறார்கள். இந்தப் பகுதிகளுக்குத்தான் ‘இராசிகள்’ என்று பெயர்.

 

       சோதிடக் கலையை அறிந்துகொள்ள விரும்புபவர்கள் முதலில் இராசிகளின் பெயர்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவை வருமாறு-
 
       1) மேஷம் 2) ரிஷபம் (இடபம்) 3) மிதுனம் 4) கடகம் 5) சிம்மம் 6) கன்னி 7) துலாம் 8) விருச்சிகம் 9) தனுசு 10) மகரம் 11) கும்பம் 12) மீனம்

 

       இந்த பன்னிரெண்டு இராசிகளிலும் ஒன்பது கிரகங்கள் சஞ்சரிக்கிறன. அந்தக் கிரகங்கள் வருமாறு;

 

       1) சூரியன் 2) சந்திரன் 3) செவ்வாய் (அங்காரகன்), 4) புதன் 5) வியாழன் 6) வெள்ளி (சுக்கிரன்), 7) சனி 8) இராகு 9) கேது. இதே போல வானவீதியில் எண்ணற்ற நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றுள் இருபத்தேழு நட்சத்திரங்கள்தான் சோதிடக் கலைக்குப் பயன்படுபவை. அவை, 1) அசுவனி, 2) பரணி, 3) கிருத்திகை (கார்த்திகை), 4) ரோகிணி, 5) மிருகசீரிடம், 6) திருவாதிரை, 7) புனர்பூசம், 8) பூசம், 9) ஆயில்யம், 10) மகம், 11) பூரம், 12) உத்திரம், 13) அஸ்தம், 14) சித்திரை, 15) சுவாதி, 16) விசாகம், 17) அனுசம், 18) கேட்டை, 19) மூலம், 20) பூராடம், 21) உத்தராடம், 22) திருவோணம், 23) அவிட்டம், 24) சதயம், 25) பூரட்டாதி, 26) உத்திரட்டாதி, 27) ரேவதி

 

       இந்த இருபத்தேழு நட்சத்திரங்களும் வான மண்டலத்தில் உள்ள 27 மைல்கற்களைப் போன்றவை. இவைகள் சோதிடக் கலையில் சாதகம் கணிப்பதில் பெரிதும் பயன்படுகின்றன.

 

       சோதிடத்தின் மீது கணிக்கப்படுவது ‘பஞ்சாங்கம்’ எனப்படும். இது பஞ்ச அங்கங்களை உடையது. அதாவது 1) திதி, 2) வாரம், 3) நட்சத்திரம், 4) யோகம், 5) கரணம் என்பன அவை. இவற்றுள் ‘வாரம்’ என்பது ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலான ஏழு கிழமைகள். ‘திதி’ என்பது வளர்பிறைப் பிரதமை முதல் பௌர்ணமி வரையிலான பதினைந்து நாட்களும், தேய்பிறைப் பிரதமை முதல் அமாவாசை வரையிலான பதினைந்து நாட்களும் ஆக மொத்தம் முப்பது நாட்கள். திதியிலிருந்து பிறந்த்துதான் ‘தேதி’.

 

       ‘நட்சத்திரம்’ என்பது அசுவனி முதல் ரேவதி ஈறாக உள்ள இருபத்தேழு. ‘யோகம்’ என்பது விஷ்கம்பம் முதல் வைதிருதி முடிய உள்ள இருபத்தேழு. ‘கரணம்’ என்பது பவம் முதலாகக் கிமிசுதுக்கினம் ஈறாகவுள்ள பதினொன்று. திதியினால் அறியப்படுவது வானவெளியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள தொலைவு, திதியில் பாதி கரணம். வான வெளியில் ஒரு குறித்த இடத்திலிருந்து சூரியனும் சந்திரனும் செல்கிற மொத்த தூரத்தைக் குறிப்பது யோகம். வானவெளியில் சந்திரன் நிற்கும் இடத்தைக் குறிப்பது நட்சத்திரம். இவைகளே சோதிடக் கலையின் அடிப்படை அம்சங்களாகும்.

 

2.சோதிடச் சுவடிகளப் பதிப்பிக்கும்போது ஏற்படும் சிக்கல்களும் தீர்க்கும் வழிகளும்

 

       சோதிடச் சுவடிகளைப் பதிப்பிப்பது எளிதான காரியமன்று. அதற்குத் தெளிந்த சாத்திர அனுபவ ஞானம் வேண்டும். பல சோதிட நூல்களைப் பயின்றிருக்க வேண்டும். அதன்மீது அளவிடற்கரிய ஆர்வம் இருக்க வேண்டும்.

       முதலில் ஒரு சோதிட ஓலைச்சுவடி வெளியிடப் பெற வேண்டுமா? என்பதை நிர்ணயிப்பதற்கு முன்னர் அச்சுவடியின் ஏடுகளைப் படித்து, தற்கால எழுத்தில் பெயர்த்து எழுதிக் கொள்ளவேண்டும். இது சுலபமான வேலை அல்ல. எனினும் அவற்றைத் தற்கால எழுத்தில் பெயர்த்து எழுதிய பிறகே அவற்றின் மதிப்பை நாம் உணரமுடியும். அந்த மூல ஏடுகள் காலக்கிரமத்தில் மசி மங்கிப் பாழாகி விடக்கூடுமாதலால் விரைவில் அவற்றை ஆராய்ந்து பெயர்த்து எழுதுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.

 

       அவ்வாறு எழுதப்பட்ட சோதிடச் சுவடிகளை முதலில் ஊன்றிப் படித்துப் பார்க்க வேண்டும். பல சொற்கள் உருமாறக் காணப்படும். இன்னும் சிலவற்றில் எழுத்துப் பிழைகள் மலிந்து காணப்படும். அவற்றை எல்லம் ஓரளவு திருத்தி எடுத்துக் கொண்டு சோதிட வல்லுநரிடம் காட்டித் திருத்தம் செய்துகொள்ள வேண்டும். பின்னர் சோதிட நூல்கள் பலவற்றை ஒப்பிட்டுத் திருத்தஞ்செய்ய வேண்டும்.
      
       சோதிடச் சுவடிகள் படிப்பது பற்றியும் அவற்றில் உள்ள சிரமங்கள், நுணுக்கங்கள் பற்றியும் இங்குக் கூறுவோம். கடந்த நூற்றாண்டின் முக்கால் பகுதி வரை (கி.பி. 1875) தமிழ் நூல்கள் பெரும்பாலும் ஏட்டுச் சுவடியிலேயே எழுதப்பெற்று வந்தன. ஆசிரியர் சொல்ல மாணவர்கள் அதனை ஏட்டில் எழுதிவந்தனர். அவர்கள் செவிவழிக்கேட்டு எழுதியதால் பிழைகள் மலிந்து காணப்பட்டன. சிலர் இவற்றை அவசர அவசரமாகப் பதிப்பிகும்போது நூல்கள் பல பிழைகளுடன் காணப்படுகின்றன. சுவடியாக இருந்தால் இப்பிழைகளை ஒருவாறு ஊகிக்கலாம். ஆனால் அச்சில் வந்தபின் அவ்விதம் ஊகிக்கவும் இயலாது.
 
       சுவடிகளைப் படித்துப் பெயர்த்தெழுதுவதில் உள்ள துன்பங்கள் மிகுதி; அவற்றைப் பற்றி டாக்டர் உ.வெ.சாமிநாதையர் அவர்கள்,     “இஃது கொம்பு, இது சுழி என்று வேறு பிரித்து அறிய முடியாது. மெய் எழுத்துக்களுக்குப் புள்ளியே இராது. ரகரத்திற்கும் காலுக்கும் வேற்றுமை தெரியாது. சாபம், சரபமாகத் தோற்றும். சரபம் சாபமாகத் தோற்றும். ஓரிடத்தில் ‘சரடு’ என வார்த்தையை நான் சாடு என்று பல காலம் எண்ணி வந்தேன். ‘தான்’ என்பதைத் ‘தரன்’ என்று நினைத்தேன். இடையின ரகரத்திற்கும் வல்லின ற கரத்திற்கும் பேதம் தெரியாமல் மயங்கின இடங்கள் பல” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

       மேலும் இச்சுவடிகளில் பல ‘எழுத்தும்’ சொல்லும் மிகுந்தும், குறைந்தும் பிறழ்ந்தும், திரிந்தும் பலவாறு வேறுபட்டுக் கிலமுற்று இருப்பவை. அவைகளைப் பழைய பிரதிகள் பலவற்றையும் பலகால் ஒப்புநோக்கி இடையறாது பரிசோதனை செய்து அவைகளின் உண்மை வடிவத்தை உணரவேண்டும்.         பழந்தமிழ் நூல்கள் பெரும்பாலும் செய்யுள் அமைப்பிலேயே சுவடியில் அமைந்திருக்கின்றன. தமிழில் உரைநடை பல்கிப் பெருகியது வீரமாமுனிவர் காலத்துக்குப் பிறகுதான். அப்போதெல்லாம் உரைநடை வெகு குறைவாகவே இருந்தது. எனவே பழந்தமிழ் நூல்கள் எல்லாம் கவிதை அமைப்பிலேயே இருந்தன. ஆசிரியர்கள் வாய் வழியாகக் கூற வேறொருவர் அவ்வப்போது பிரதி செய்து வருவர். இவ்வாறு பிரதி செய்பவர் ‘ கற்றுச் சொல்லிகள் ‘ என அழைக்கப்பட்டனர். அதே போல் மன்னர்களும், சமீன்தார்களும், பெருநிலக்கிழார்களும் தங்கள் பரம்பரைச் சொத்தாகிய தமிழ்ப் பெருநூல்களைத் தங்கள் தங்கள் குடும்பங்கள் விரிவடையும்போது பல கூலியாட்களை அமர்த்திப் பிரதி செய்து வந்தனர்.

 

       இவ்விதம் கூலிக் கெழுதியவர்கள் சிறந்த அறிஞர்களாக இருக்கமுடியாது. இவர்கள் தங்களது வருமானத்தையன்றி, நூலின் தரத்தைப் பற்றியோ, நயத்தைப் பற்றியோ கவலைப்படாமல் கைக்கு வந்த வண்ணம் பிழைகள் மலியப் பிரதி செய்தனர். இதே போல் கற்றுச் சொல்லிகளும் பயில வந்தவர்கள் ஆதலினாலே அவர்களிடம் சிறந்த புலமை இல்லை. இவர்கள் எல்லாம் தாங்கள் கேட்டவண்ணம் பிரதி செய்கையில் வல்லினம், இடையினம், ஒற்றுகள், சந்திவிதிகள் இவைகள் எல்லாம் புரியாமல் பிரதி செய்தமையால் பல பிழைகள், பிரதி பேதங்கள் மலிந்து காணப்படுகின்றன.

 

       இச்சோதிடச் சுவடிகளில் குறியீடுகள் எதுவும் இராமல், பாடல்கள் சீர் பிரித்து எழுதவும் பெறாமல், ஒரே சங்கிலித் தொடராகவே எழுதப்பெற்றிருக்கும். எனவே சுவடிகளில் உள்ள சந்தி, குறில், நெடில், மெய், உயிர்மெய், கொம்பு, கால் இவற்றை உணர யாப்பியலும் இலக்கணமுமே கைகொடுத்து உதவுகின்றன. இவ்விலக்கண நூல்களைப் பயில்வதோடு, சோதிடக்கலை நூல்களையும் கற்றுச் சிறந்த புலமையும் இருந்தால்தான் முறையாகச் சரியான வடிவில் பிழையின்றிப் பதிப்பிக்க முடியும்.

 

ஊ. பதிப்பாசிரியருக்கு வேண்டிய தகுதிகள்

       பழமையான சோதிடச் சுவடிகளைப் பதிப்பிக்கும் ஆசிரியருக்குச் சில இன்றியமையாத தகுதிகள் தேவைப்படுகின்றன. அவையாவன:-

 

       1) புராதனமான சோதிட நூல்கள், அவைகளின் உரைகள், விளக்கங்கள் எல்லாம் பண்டைய வடிவம் குன்றாது இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

       2) பிரதிகளில் இல்லாதவற்றைக் கூட்டியும் உள்ளவற்றை மாற்றியும் குறைத்தும், மனம்போனவாறே பதிப்பித்தல் கூடாது. இதில் ஆசிரியர் நேர்மையானவராக இருக்க வேண்டும்.

       3) சோதிடச் சுவடிகளை ஆழ்ந்து படித்து ஒருவகையாகப் பொருள் கொண்டு, பிரதிகளில் இருந்தவாறே பதிப்பிக்க வேண்டும். ஆசிரியராக ஒன்றும் பதிப்பிக்கக்கூடாது. இதில் பிரதிகளில் சில விடங்களில் வடமொழிப் பதங்கள் கிரந்தவெழுத்துக்கள் எழுதப்பட்டிருப்பின் அவ்வாறே பதிப்பிக்க வேண்டும்.

       4) நிறைந்த புலமை உண்மையைக் காணவேண்டும் என்ற ஆர்வம், இடை விடாத உழைப்பு, எதனை ஆராய்கிறோமோ அதன் மயமாய் நின்று தம்மை மறந்து ஒன்றும் இயல்பு, தமக்கு நன்றாகத் தெளிவு பிறக்கும்வரை மென்மேலும் முயற்சி, நேர்மை ஆகிய இத்துணைப் பண்புகளைப் பதிப்பாசிரியர் பெர்றிருக்கவேண்டும்.

       5) பல காலமாக ஏடு எழுதுவோர் செய்த வழுக்கள் சுவடியில் ஏறியிருக்கும். செய்யுள் உருவமே தெரியாது. இடையில் வழக்கு ஒழிந்தமையால் பல பகுதிகளுக்கும் பொருளே தெரியாது. இவற்றையெல்லாம் நுணுகி ஆராய்ந்து உண்மை தெளிந்து வெளியிடும் தகுதி வேண்டும்.

       6) சோதிடச் சுவடியின் பதிப்பில் முதலில் முகவுரை இருக்கவேண்டும். அந்நூலைப் பற்றிய செய்திகளும், ஆசிரியரைப்பற்றிய செய்தியும், ஏட்டுச்சுவடி கிடைத்த வரலாறும் அம்முகவுரையில் இருக்கவேண்டும்.

       7) நூலின் மூலத்தைத் திருத்தமாய்ப் பதிப்பித்து அடியில் குறிப்புகளும் ஒப்புமைப் பகுதிகளும், மேற்கோளாக வந்த இடத்தைப் பற்றிய குறிப்புகளும் பாட பேதங்களும் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

       8) ஆசிரியருக்கு விளங்காத பகுதிகளை ‘இது விளங்கவில்லை’ என்று சொல்வதிலும் பிரதிகளில் உள்ளவாறே பதிப்பிப்பதிலும் நேர்மை வேண்டும்.

       9) சுவடிகள் பொடித்துப்போய் எழுத்துக்கள் இல்லாத விடத்துப் புள்ளிகள் (…………..) எத்தனை எழுத்துக்களோ அத்தனை இடவேண்டும். ஆசிரியருக்குத் தோன்றும் எழுத்துக்களை அடைப்புக் குறிக்குள் ( ) பதிப்பிக்கவேண்டும்.

       10) டாக்டர் உ.வே.சாமிநாதையருக்குப்பின் தமிழ்ச் சுவடிகளைப் பதிப்பிக்கின்ற குறிப்பாக, சோதிடச் சுவடிகளைப் பதிப்பிக்கின்ற நிலை குறைந்து விட்டது. காரணம் தமிழ்ச் சுவடிகளைப் படிப்பதற்கும், பதிப்பிப்பதற்கும் தகுதி யானவர்கள் இன்மையே. எனவே தற்காலத்தில் ஒலைச்சுவடிகளைப் படிப்பதற்கும் பதிப்பிப்பதற்கும் தகுதி பெற்ற ஆசிரியர்கள் வேண்டும். அத்துறையில் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் ஓர் முன்னோடியாக இருக்கவேண்டும்.

 

எ) பதிப்பிக்கப்பட்ட சோதிட நூல்கள்

       இதுவரை சோதிடச் சுவடிகள் சில தனித்தனியே பிரதி செய்யப்பட்டு குறிப்புரை, முன்னுரை, சொற்பொருளகராதியுடன் பதிப்பிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலையத்தின் (1) காலச் சக்கரம் (1969) என்னும் நூலையும் (2) வராகர் ஓரா சாஸ்திரம் (1981) என்னும் நூலையும் கூறலாம். மேலும் அதற்கு முன்பே சென்னை அரசினர் கீழ்த் திசைச் சுவடிச்சாலை நூல் நிலையம் சில நூல்களை வெளியிட்டன. அவைகளின் விபரம் வருமாறு:-

 

சப்தரிஷி நாடி சோதிடம் … மேஷ லக்னம்  …1951
ரிஷபம் லக்னம் … 1953
மிதுனம் லக்னம் … 1954
கடகம் லக்னம் … 1955
சிம்மம் லக்னம் … 1956
கன்யா லக்னம் … 1961
 

இவ்வாறு பதிப்பிக்கப்பட்டுள்ள சோதிட நூற்கள் குறைவே. ஆகவே இன்னும் பதிப்பிக்கப்படவேண்டிய சோதிடச் சுவடிகள் ஏராளமாக உள்ளன.

 

ஏ) முடிவுரை

       மேற்கூறியவற்றால் தமிழ் மக்களுக்குச் சுவடிச் செல்வமே தமிழ்ச் செல்வமாகும். கடல் கொண்டது போக, கண்கண்டதாக இப்போது கிடைக்கும் இன்பத் தமிழ்ச் சுவடிகள் எல்லாம் நிறைய உள்ளன. நீரிலும் நெருப்பிலும் இட்டது போக எஞ்சியுள்ளவற்றில் மிகச் சில சுவடிகள் நூல்களாக வந்துள்ளன. ஏனைய நூல்களையும் விரைவில் பதிப்பிக்க வேண்டும். வானவியிலும், கணிதவியலும் நிறைந்த சோதிடச் சுவடிகளைப் பதிப்பித்து வருங்காலத் தமிழ் மக்களுக்கு வழிகாட்டிகளாக விளங்குவோமாக.

 

மேற்கோள் நூல்கள்

1) பாலசுப்பிரமணியன், டாக்டர் சி. சுவடியியல் பயிற்சி கையேடு, அணிந்துரை பக் X
2) இராமன், மு.கோ; சுவடியியல் பயிற்சி கையேடு, முன்னுரை, பக். 2
3) இராமன், மு.கோ; சுவடியியல் பயிற்சி கையேடு, முன்னுரை, பக். 2
4) தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலையம், காலச்சக்கரம் முன்னுரை, பக்.XIX
5) கலைக்களஞ்சியம், தொகுதி 5, பக். 260
6) கலைக்களஞ்சியம், தொகுதி 5, பக். 260
7) கலைக்களஞ்சியம், தொகுதி 5, பக். 261
8) தமிழ் வாணன் ஜோஸ்யம் கற்றுக் கொள்ளுங்கள், பக். 58-59
9) சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூல்நிலையம்; சித்தாந்த விளக்கம், பக்.X
10) சாமிநாதையர், டாக்டர் உ..வே.சா., என் சரித்திரம், பக்கம். 353.
 


இக்கட்டுரையத் தட்டச்சு செய்தவர்: திரு.ஜி.ஸன்தானம்

You may also like

Leave a Comment