Home History செட்டி நாடு

செட்டி நாடு

by Dr.K.Subashini
0 comment

செட்டிநாடு — அறிமுகம்

ராஜம்

[email protected]

 

 

“செட்டிநாடு” பற்றியும் “நாட்டுக்கோட்டைச் செட்டியார்,” “நகரத்தார்” என்று குறிக்கப்பெறும் மக்கள் பற்றியும் எல்லாரும் தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகள் நிறைய உண்டு. கட்டிடக் கலை, வணிகம், மருத்துவம், சைவம், தமிழ், கல்வி, நூற்பதிப்பு … இன்ன பிற துறைகளில் தேர்ச்சி பெற்று, அந்தத் துறைகள் செழித்துத் தழைக்க இந்த இனத்தவர் செய்த, செய்துவரும் பணிகளும் உதவிகளும் மதிப்பிற்குரியவை, போற்றற்குரியவை.

 

செட்டிநாட்டவர் ஆற்றிய/ஆற்றிவரும் மிகச் சிறந்த பணியை இந்தப் பகுதியில் அலச இயலாது. எனவே சில குறிப்புக்களை மட்டும் இங்கே காணலாம்.

 

குறிப்புக்களைத் திரட்டப் பேருதவி செய்த திரு. சொ. வினைதீர்த்தான் ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

செட்டிநாட்டு ஊர்களுக்குப் போய்ப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தால் விடவேண்டாம்! இன்றைக்குப் பழுதுபட்டிருக்கும் இடங்களைச் செப்பனிட்டுப் பாதுகாக்கும் முயற்சி மேற்கொள்ளவும் தயங்கவேண்டாம்!

பழந்தமிழ் நாட்டின் ஏதோ ஒரு சிறு அடையாளத்தையாவது ஒவ்வொரு செட்டிநாட்டு ஊரும் இன்றும் தாங்கிவைத்திருக்கிறது என்பது என் உள்ளுணர்வு.

நிற்க.

இன்றைய நிலையைப் பார்ப்போம்.

செட்டிநாடு எது?

தமிழ் நாட்டின் தென் பகுதியில் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் காரைக்குடியை மையமாகக் கொண்ட குறிப்பிட்ட சில ஊர்கள் சேர்ந்த பகுதியைச் “செட்டிநாடு” என்று சொல்கிறார்கள். குறிப்பாகக் காரைக்குடி, புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றிக் குறிப்பிட்ட மக்கள் குடியேறிய 96 ஊர்களும் சேர்ந்து “செட்டிநாடு” என்று குறிக்கப்படுகிறது. இந்த ஊர்களில் காரைக்குடி, தேவகோட்டை பெரிய ஊர்கள். மற்றவை: கானாடுகாத்தான், பள்ளத்தூர், கோட்டையூர், ஆத்தங்குடி, அரியக்குடி, கண்டரமாணிக்கம், பாகனேரி, நாட்டரசன்கோட்டை, ஒக்கூர், வேந்தன்பட்டி, பொன்னமராவதி போன்றவை.

செட்டிநாட்டு மக்கள்

சோழ நாட்டின் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து பாண்டிய நாட்டுக்குக் குடியேறி, மன்னர் அளித்த பகுதிகளில் “காடுவெட்டிப் போட்டுக் கடிய நிலந்திருத்தி வீடுகட்டிக் கொண்டிருக்கும் வேள்வணிகர்”களாய்த் தமக்கெனத் தனிப் பண்பாட்டையும் அடையாளங்களையும் கொண்டு வாழ்ந்து வருகிற தமிழ்க்குடிமக்களே “நாட்டுக்கோட்டைச் செட்டியார்” அல்லது “நகரத்தார்” என்று அறியப்படுகிறார்கள். இவர்கள் “செட்டி” என்ற குலப்பெயராலும் அறியப்படுகிறார்கள்.

பண்டைத் தமிழ் இலக்கியக் குறிப்பு

இந்தக் குலத்து மக்கள் சிலருடைய பெயர்களை முதன்முதலாகப் பண்டைத் தமிழ் இலக்கியங்களான சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் காண்கிறோம்.

 

சிலப்பதிகார வரந்தரு காதையில் அரட்டன் செட்டி என்பவன் குறிக்கப்படுகிறான். இந்த அரட்டன் செட்டியின் இரட்டைப் பெண்கள் கண்ணகிக்குச் சேரன் எடுத்த விழாவைக் காண வருகிறார்கள். இவர்கள் முற்பிறவியில் கண்ணகியின் தாயும் கோவலனின் தாயும் ஆக இருந்தமை தெரிகிறது.

 

“கம்பளச்செட்டி” என்ற பெயர் மணிமேகலைக் காப்பியத்தில் உள்ளது. இந்தக் “கம்பளச்செட்டி”யின் இயற்பெயர் என்ன என்று தெரியவில்லை. ஆனால், நாகநாட்டுப் பீலிவளை என்பவள் சோழ அரசனுடன் தான் கொண்ட உறவினால் பிறந்த குழந்தையைக் கம்பளச்செட்டியிடம் ஒப்படைத்துச் சோழ நாட்டில் சேர்ப்பித்துவிடும்படி வேண்டுகிறாள் என்று தெரிகிறது.

 

இது தவிர, மணிமேகலை “ஒன்பது செட்டி”களைப் பற்றியும் குறிக்கிறது. ஆபுத்திரன் மணிபல்லவத் தீவில் கோமுகிப் பொய்கையில் அமுதசுரபியை இட்டுவிட்டு உண்ணாநோன்பு மேற்கொண்டு உயிர்விடுகிறான். ஆபுத்திரனைத் தேடி வருகிறார்கள் ஒன்பது செட்டிகள். அந்த ஒன்பது செட்டிகளும் ஆபுத்திரன் உயிர் நீங்கியதைப் பார்த்துத் தாங்களும் அவனைப்போலவே உயிர்விடுகிறார்கள்.

 

இந்தக் குறிப்புக்களால் பண்டைக் காலத்தில் செட்டியர் கடல் கடந்து சென்றனர் என்று தெரிகிறது. திரைகடல் ஓடியும் திரவியம் தேடிய இந்த வணிக மக்கள் சொற்பழுது இல்லாத வணிககுலம் எனப் போற்றப்பட்டனர்.

நகரத்தாரின் இன்றைய நிலை

நகரத்தார் குலத்தவர் ஒன்பது ஊர்களில் சிவன் கோயில்கள் அமைத்து அக்கோவில்கள் சார்ந்த குடிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த ஒன்பது நகரக் கோவில்கள்: இளையாத்தங்குடி, இரணியூர், சூரக்குடி, மாத்தூர், பிள்ளையார் பட்டி, வயிரவன் கோயில், நேமங்கோவில், இலுப்பைக்குடி, வேலங்குடி..

 

ஒரு கோவிலைச் சார்ந்தவர்கள் அனைவரும் பங்காளிகள். பொதுவாக, பங்காளிகளுக்குள் திருமணத்தொடர்பு இல்லை. இளையாத்தங்குடி, மாத்தூர்க் கோவில்களில் மட்டும் உட்பிரிவுகளில் திருமணத்தொடர்பு உண்டு.

 

முதலில் செட்டிநாடு முழுவதும் 96 ஊர்களில் வாழ்ந்து வந்த நகரத்தார் காலப்போக்கில் இப்போது 75 ஊர்களிலும் அயல்நாடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள்.

 

தொடக்கத்தில் செல்வ வணிகமான வட்டித் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர்கள் காலப்போக்கில் கல்வித் துறையையும் கண்ணெனப் போற்றி, ஆலைத்தொழில், தொழில் நிறுவனங்கள், மருந்து வணிகம் போன்ற பிற தொழில்களிலும் ஈடுபட்டுவருகின்றனர். பொறியாளர்களாகவும் கணக்காளராகவும் பிற பல துறைகளில் அலுவலர்களாகவும் பணியாற்றுகின்றனர்.

 

இவர்கள் தமிழும் சிவமும் இரு கண்களெனப் போற்றுகிறார்கள். முன்பு, வணி்கத்தில் தர்மத்திற்கும் ஒரு பங்கு வைத்துக் கோவில்கள் நிர்மாணித்தும் புதுக்கியும் அன்ன சத்திரங்கள், பசுமடங்கள், வேதபாடசாலைகள், கல்வி நிறுவனங்கள் நிறுவியும் பரிபாலித்தும் வந்தனர். இன்றும் வணிகத்தினாலும் அலுவல் பணியினாலும் உலகம் எங்கும் பரவியுள்ள சுமார் இரண்டு இலட்சம் மக்கள் தொகையுள்ள இந்தச் சமுதாயம் பல சங்கங்கள் அமைத்து அவற்றின் மூலம் அறப்பணியை உலகெங்கும் தொடர்ந்து வருகிறது.

நகரத்தாரின் கட்டிடக்கலைச் சிறப்பு

இவர்கள் பண்டைய நாட்களில் சோழநாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து ஆழிப்பேரலை போன்ற இயற்கையின் சீற்றத்தாலோ அல்லது மாறிய அரசியல் சூழ்நிலையாலோ, நீரால் கேடு உண்டாகாத நிலையை விரும்பி, பாண்டிய நாட்டிற்கு வந்து வெள்ளம் புக முடியாத வகையில் உயர்ந்த தளம் அமைத்து வீடுகள் கட்டி வாழ்ந்திருக்கலாம் என்பது பொதுவான கருத்து.

 

நகரத்தார் மரபில் வந்த வரகவி முத்தப்ப செட்டியாரின் பாடல் இவர்கள் வீடுகளில் புழங்குகிறது. வாக்குப்பலிதம் உள்ள அவர் சொற்கள் தங்கள் வீடுகளின் செல்வச் செழிப்புக்குக் காரணம் என்ற நம்பிக்கை இவர்களுக்கு உண்டு. அப்பாடல் வரிகள்:

காடுவெட்டிப் போட்டுக்கடிய நிலந்திருத்தி
வீடுகட்டிக் கொண்டிருக்கும் வேள்வணிகர் வீடுகட்கு
அன்றைக்கு வந்த எங்கள் அம்மா இலக்குமியே
என்றைக்கும் நீங்கா திரு!

 

இன்று செட்டிநாட்டில் சில வீடுகள் பகுதி பகுதியாகப் பிரித்து எடுத்து விற்கப்படுகின்றன. வீட்டில் புழங்கிய பொருள்களும் பகுதி பகுதியாக விற்கப்படுகின்றன. சில கட்டிடங்கள் பராமரிப்பு இல்லாமல் இடிந்தும் சிதைந்தும் காணப்படுகின்றன. ஆனால், சில ஊர்களில் சில வீடுகள் மிக நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு வருவது ஆறுதல் தரும் செய்தி.

 

உசாத்துணை

நகரத்தார் வரலாற்றைச் சுருக்கமாகத் தெரிந்துகொள்ள இங்கே பார்க்கலாம்:
http://ilayathankuditemple.com/Nagarathar.htm

 

சில நூல்கள்

  • நகரத்தார் திருமண நடைமுறை (ஆசிரியர்: பழ. அண்ணாமலை)
  • நகரத்தார் பண்பாடும் பழக்கங்களும் (ஆசிரியர்: பழ. அண்ணாமலை)
  • செட்டிநாடு ஊரும் பேரும் (ஆசிரியர்: பழ. அண்ணாமலை)

You may also like

Leave a Comment