ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள்

ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள்

திருமதி.கீதா சாம்பசிவம்

Sept 12 + 13 + 14, 2009

ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் பகுதியில்  வசித்து வந்த நெல்வியாபாரியான சாத்தப்ப பிள்ளைக்கும், செங்கமல அம்மையாருக்கும் பிறந்த ஆண் குழந்தைக்கு அப்பாவு எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். கி.பி.1850—ம் ஆண்டில் விரோதிகிருது வருடத்தில் வெள்ளிக்கிழமை அன்று பிறந்த அந்தக் குழந்தைக்குத் தமிழும், நீச்சல், ஓவியம், தையல் பயிற்சி எனப் பல்வேறுவிதமான கலைகளும் பயிற்றுவிக்கப் பட்டது. தமிழ் சொல்லிக் கொடுத்த முனியாண்டியா பிள்ளையால் இவரின் தமிழறிவு மிகவும் மேம்பட்டு விளங்கியது.  சிறு பிராயத்திலேயே இவர் மிகவும் போற்றத் தகுந்த தெய்வீகமும், ஆன்மீகமும் கலந்த வாழ்க்கையை வாழப் போகின்றார் என்பது ஒரு சோதிடர் மூலம் தெரிய வந்தது. பாம்பனில் அப்பாவு தன் தந்தையாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் நண்பர்களான மற்றச் சிறுவர்களோடு அமர்ந்திருந்த வேளையில் அவர்களைக் கடந்து ஒருவர் சென்றார். அந்தக் காலகட்டத்தில் இலங்கை செல்லும் பயணிகள் படகு மூலமே பயணப் பட்டு வந்தனர். அந்தப் படகுகள் இந்தத் தென்னந்தோப்புக்கு அருகே இருந்த படகுத் துறையில் இருந்தே சென்று கொண்டிருந்தன. அவ்விதம் இலங்கை சென்று கொண்டிருந்த ஒருவர் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைத் தாண்டிச் சென்றவர் என்ன நினைத்தாரோ, திடீரென நின்றார். 

 
சிறுவர்களை ஒரு நோட்டம் விட்டார். பின்னர் அந்தக் குழந்தைகளிடம் பேச்சுக் கொடுத்தார். அவர் ஒரு ஜோதிடர் என்பதை அறிந்த சிறுவர்கள் தங்கள் எதிர்காலத்தை அறிய எண்ணி அவரிடம் தங்கள் கையைக் காட்டினார்கள். அனைவருக்கும் பலன் சொன்ன ஜோதிடர், அப்பாவுவின் கையையும் பார்த்தார்.  ரேகைகளின் அமைப்பைப் பார்த்து வியந்த ஜோதிடர், அவரின் வாயைத் திறந்து நாக்கையும் காட்டுமாறு கேட்டார். அவ்விதம் அவருடைய நாக்கையும் சோதித்து அறிந்த ஜோதிடர், அவரிடம், “தம்பி, உன் திருவாக்கும் சரி, திருக்கரமும் சரி, அதிசயமான ஒன்றாய் உள்ளது. உன் ஜாதகம் சிறப்பாக உள்ளது. உன்னுடைய அசைவுகளுக்காக எதிர்காலமும், மக்களும் காத்திருக்கின்றனர். சிறப்பாக இருப்பாய்.” என்று ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார்.  அவர் சொன்னது புரியாமல் மீண்டும் விளையாட்டைத் தொடர்ந்த அப்பாவு ஒருநாள் தோப்புக்கு வந்தபோது தந்தை தோப்பினுள் இருப்பதை அறிந்து வெளியே நின்றபோது, திடீரென அவர் மனதில் கந்தனைக்குறித்து, கந்த சஷ்டி கவசத்துக்கு ஈடாகும்படியான பாடல்கள் புனையும் ஆவல் தோன்ற, உடனேயே அவர் கருத்தில், “கங்கையைச் சடையிற் பரித்து” என்னும் சொற்கள் தோன்ற, தன் இடுப்பிலிருந்து ஓலையை எடுத்து இதைத் துவக்கமாக வைத்து முதல் பாடலை எழுதினார். அதன் பின்னர் அவர் எழுதிய பாடல்கள் பலவாகும். அவற்றில் குமாரஸ்தவம், பஞ்சாமிர்த வண்ணம் ஆகிய இரண்டும் முக்கியமானவையாக இன்றும் உள்ளன. 

 
1878-ம் ஆண்டு வைகாசி மாதம்  இவருக்குக் காளிமுத்தம்மை என்னும் பெண்ணுடன் திருமணமும் நடந்தது. திருமணம் ராமநாதபுரத்தில் நடந்தது. பாம்பனில் மனைவியுடன் வாழ்ந்த இவருக்கு இரு ஆண் மக்களும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. பெண் குழந்தைக்கு ஒருவயது ஆகும் முன்னேயே முருகன் இவரை ஆட்கொள்ளும் தருணம் வந்துவிட்டது என்பதை மறைமுகமாய் உணர்த்தினான் என்பார்கள். இவரை எந்த விதத்திலும் எதற்கும் கட்டாயப் படுத்த முடியாது என்பதை நன்கு உணர்ந்திருந்தும் இவருடைய மனைவி, அழும் பெண்குழந்தையைச் சமாதானம் செய்யத் திருநீறு பூசும்படி இவரிடம் கேட்க, பாம்பன் ஸ்வாமிகளோ தான் யாருக்கும் திருநீறு தருவதில்லை என்றும், அந்த முருகனிடமே கேட்கும்படியும், அவன் தான் தருவான் என்றும் சொல்லிவிட்டார்.  செய்வதறியாது அந்த அம்மையார் விடாமல் அழும் குழந்தையை எப்படி எப்படியோ சமாதானம் செய்தும் குழந்தை அழுகை நிற்கவே இல்லை. அப்போது திடீரெனக் காவி உடை அணிந்த சந்நியாசி ஒருவர் வீட்டினுள் நுழைந்து, அழும் குழந்தையை வாங்கி உடல் முழுதும் திருநீறு பூசிவிட்டுக் குழந்தை இனிமேல் அழாமல் தூங்கும் என்றும் சொன்னார்.  பின்னர் அவர் வந்த மாதிரியே மறைந்து போகக் குழந்தை அழுகையை நிறுத்தித் தூங்க ஆரம்பிக்கிறது.

 

குழந்தை அழவில்லை எனக் கண்டு உள்ளே வந்த ஸ்வாமிகள், குழந்தை எப்படி அழுகையை நிறுத்தியது என மனைவியை வினவ, அந்த அம்மையார், கணவர் சொற்படி முருகனையே தான் பிரார்த்தித்துக் கொண்டு இருந்ததாகவும், ஒளி பொருந்திய உடலோடு கூடிய ஒரு துறவி வந்து குழந்தைக்கு உடல் முழுதும் திருநீறு தடவி விட்டதாகவும், அதன் பின்னர் குழந்தை தூங்கி விட்டதாகவும் சொன்னார்.  ஸ்வாமிகளுக்கு இது முருகன் திருவிளையாடல் எனப் புரிந்தது.  அதற்குப் பின்னர் ஒரு நாள் நண்பர் ஒருவர் பாடிய சிற்றின்ப வண்ணப் பாடலின் ராகமும், தாளமும் ஸ்வாமிகளைக் கவரவே, அந்த ராகத்தையும், தாளத்தையும் மட்டும் எடுத்துக் கொண்டு முருகன் மேல் பாடிய பாடல்களே “பரிபூதன பஞ்சாமிர்த வண்ணம்” என்னும் பாடல் தொகுப்பு ஆகும்.  முருகப் பெருமானுக்கும் இந்தப் பாடல்கள் மேல் அளவு கடந்த ஆசை உண்டு. எங்கெல்லாம் ராமநாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் அநுமன் இருப்பான் என எவ்வாறு ஸ்ரீராமர் சொன்னாரோ அப்படியே முருகனும், இந்தப் பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களில் மயங்கி, “இந்தப் பாடல்கள் எங்கெல்லாம் பாடப் படுகிறதோ அங்கெல்லாம் நான் எழுந்தருளுவேன்.” என்று கூறியதாகக் குறிப்புகள் சொல்லுகின்றன என்பர் முருகனிடம் பற்றுள்ள ஆன்றோர் பலரும். என்றாலும் இது வெளித் தெரியும்படி நடந்த ஒரு நிகழ்வும் உண்டு.

 
திருச்செந்தூரில் ஆலய அர்ச்சகர் அநந்த சுப்பையருக்கு இந்தப் பரிபூர்ண பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களின் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. ராகமும், தாளமும் இவரை மயக்கி இருந்தது. இதைப் பாராயணம் செய்த வண்ணமே இருப்பார்.  அவருடைய நண்பரான சுப்ரமண்ய ஐயர் என்பவரும், இந்தப் பாடல்களைக் கேட்டுவிட்டு அவரும் இந்தப் பாராயணத்தில் கலந்து கொண்டார்.  மண்டபம் ஒன்றில் அமர்ந்து இருவரும் விடிய விடிய இந்தப் பாடல்களை ராகத்துடன் பாடி வந்தார்கள். தினமும் இது நடந்து வந்தது. ஒருநாள் இந்த மண்டபம் வழியே சென்ற முத்தம்மை என்னும் 80 வயதான பெண்மணி பாடல்களால் கவரப்பட்டு மண்டப்த்தினுள்ளே நுழைந்து இருவரும் இசையுடனும், ஒருமித்த சிந்தனையுடனும் பாடுவதைக் கண்டு மனம் பறி கொடுத்தார். தினமும் அவரும் வந்து பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களைக் கேட்க ஆரம்பித்தார்.  என்ன ஆச்சரியம்? பாடல் புனைந்தவருக்கோ, அல்லது பாடிப் பாடி உருகினவர்களுக்கோ காக்ஷி கொடுக்காமல் முத்தம்மைக்குக்காக்ஷி கொடுக்க எண்ணி இருக்கிறான் முருகன். அவன் திருவிளையாடலின் காரணமும், காரியமும் யார் அறிய முடியும்?  ஒருநால் அது 1918-ம் ஆண்டு சித்திரை மாதம் வியாழக்கிழமை இரவு எட்டு மணி. வழக்கம்போல் பாராயணம் நடக்க முத்தம்மை கேட்டுக் கொண்டிருந்தார். மண்டபத்துக்குள் தன்னைத் தவிர இன்னொரு இளைஞனும் நுழைவதை முத்தம்மை கண்டார். ஆனால் அந்த இளைஞன் இருவரும் அறியும் வண்ணம் எதிரே அமராமல், தூணின் மறைவில் அன்றோ நிற்கின்றான். ஏன்? என்ன அதிசயமிது? அவனையே திரும்பித் திரும்பிப் பார்த்தார் முத்தம்மையார். யாராய் இருக்கும்? குழம்பிப் போனார். அவனை விசாரிக்கலாமா? அவனருகே சென்றால்! ஆஹா, அவனைக் காணோமே! இப்போது இங்கே இருந்தானே! எங்கே போனானோ? பாராயணம் முடிந்ததும், அவர்கள் இருவரிடமும் இது குறித்துச் சொன்னார் முத்தம்மை.

 
மறுநாளும் பாராயணம் தொடந்தது. விடிய விடிய நடந்த அந்தப் பாராயணத்தின் போது அதிகாலை சுமார் நாலு மணிக்கு முதல்நாள் வந்த அதே இளைஞன் மண்டபத்தினுள் வர, இப்போது இவனை விடக் கூடாது என முத்தம்மை அவனருகே சென்று, “நீ யாரப்பா?” என்று கேட்டார்.அந்த இளைஞன் சிரித்துக் கொண்டே, “நான் இந்த ஊர்தானம்மா. என்னைப் பின் தொடர்ந்து வந்தீரென்றால் நான் இருக்கும் இடக் காட்டுவேன்.” என்றான். முத்தம்மையும் சம்மதித்து அவன் பின்னே செல்ல, வீதியில் இறங்கி நடந்த அந்த இளைஞனோடு சற்று நேரத்தில் இளம்பெண் ஒருத்தியும் சேர்ந்து கொண்டு கை கோர்த்துக் கொண்டு நடந்தாள். இருவரும் நடக்க, முத்தம்மை தொடரக் கோயில் வந்தது. இளைஞன் திரும்பி முத்தம்மையைப் பார்த்து, “ அந்த அந்தணர்கள் இருவரும் இசைத்துக் கொண்டிருந்த பஞ்சாமிர்த வண்ணப் பாடல்கள் என் மனதைக் கவர்ந்தது. மகிழ்வைத் தந்தது. ஆனால், இன்னும் இசை சேர்க்கப் படவேண்டும் என அவர்களிடம் சொல்லு. இதை எங்கெல்லாம் இசையுடன் பாடுகின்றார்களோ, அங்கெல்லாம் நான் வருவே. என் இருப்பிடம் இந்த திருக்கோயில்தான்,” என்று சொல்லியவண்ணம் இளைஞன் தன்னுடன் வந்த பெண்ணையும் அழைத்துக் கொண்டு கோயிலுள்ளே சென்று மறைந்தான். முத்தம்மை விதிர்விதிர்த்துப் போனார். தன்னுடன் பேசியது சாக்ஷாத் அந்த முருகப் பெருமானே அல்லவா? ஆஹா, என்ன தவம் செய்தேன்!” என்று மனம் உருகிப் போனார்.

 

இந்தப் பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களைத் தவிர பாம்பன் ஸ்வாமிகள் எழுதிய மற்றப் பாடல்கள் வருமாறு: பரிபூரணாநந்த போதம், சிவசூரிய பிரகாசம், சுத்தாத்வைத நிர்ணயம், தகராலய ரகசியம், சதாநந்த சாகர, சிவஞான தீபம், காசி யாத்திரை, சேந்தன் செந்தமிழ், அமைதி ஐம்பது, திருப்பா, ஸ்ரீமத் குமாரசுவாமியம், குமாரஸ்தவம், திவோத்ய ஷடக்ஷரோப தேசம் என்னும் சிவஞான தேசிகம் என உள்ளன. ஸ்வாமிகள் செய்த யாத்திரைகளும் கணக்கில் அடங்காதது. ராமநாதபுரம், உத்தரகோசமங்கை, மதுரை, திருச்சி, வயலூர், விராலிமலை, திருவானைக்கோவில், திருவண்ணாமலை, திருக்காளத்தி, திருத்தணி, காஞ்சிபுரம், கண்டியூர், திருவையாறு, திருப்பூந்துருத்தி, திருமழப்பாடி, நாகப்பட்டினம், திருக்கழுக்குன்றம், என்று சென்ற ஸ்வாமிகள் பழநி முருகனின் உத்தரவு கிடைக்காததால் பழநி சென்றதில்லை என்றும் சொல்லுகின்றனர். தருமமிகு சென்னைக்கும் வந்து தன் திருவருளைக் காட்டி இருக்கிறார் பாம்பன் ஸ்வாமிகள்.  அவ்வாறு ஒருமுறை சென்னை வந்திருந்த ஸ்வாமிகள், சென்னை பாரிமுனையில் தம்புச்செட்டித் தெருவில் நடந்து சென்ரு கொண்டிருந்தார். அப்போது வீதியில் சென்று கொண்டிருந்த ஒரு குதிரை வண்டி ஸ்வாமிகளின் காலில் ஏறியது. எலும்பு முறிந்து மயங்கிச் சரிந்த ஸ்வாமிகள் பக்தர்களால் அரசு பொது மருத்துவமனையில் அநுமதிக்கப் பட்டார். இது நடந்தது 1923-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் என்று சொல்லுகின்றனர். 

 
மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட ஸ்வாமிகளைக் காண பக்தர்கள் கூட்டம் திரண்டது. அனைவரும் மனம் பதறினார்கள். ஸ்வாமிகள் விரைவில் நலம்பெறவேண்டி ஸ்வாமிகளின் சீடர்களில் ஒருவரான சின்னசாமி ஜோதிடர் என்பவர் தன் வீட்டிலேயே சண்முக கவசம் பாராயணம் பண்ண ஆரம்பித்தார். தினமும் இது தொடர்ந்தது.  அப்போது ஜோசியருக்கு ஒருநாள் பாராயணம் செய்யும்போதே ஸ்வாமிகளின் திருவுருவும், அவரின்  முறிந்த காலை இருவேல்கள் தாங்கிப் பிடித்த வண்ணம் காக்ஷி அளிப்பதும் தெரிந்தது. கண்ணால் இந்தக் காக்ஷியைக் கண்ட ஜோசியர் ஆநந்தத்தில் துள்ளிக் குதித்தார்.  அன்று மட்டுமில்லாமல் தினமும் அவர் பாராயணம் செய்யும்போதெல்லாம் அந்தக் காக்ஷி தோன்றி மறைந்தது. மருத்துவமனையில் ஸ்வாமிகளைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் உணவில் உப்பு, புளி, காரம் போன்றவை இல்லாமையாலும், உண்ணும் உணவின் அளவும் வெகுவாய்க் குறைவாய் உள்ளதாலும் முறிந்த கால் சேரும் அளவுக்கான வலுவான உடல் நிலை இல்லை, என்று சொல்லி விடவே அனைவரும் செய்வதறியாது திகைத்தனர். அப்போது ஒருநாள் மருத்துவ மனையில் சேர்ந்து பதினோராம் நாளன்று இரவில் பாம்பன் ஸ்வாமிகளுக்கு ஓர் அற்புதக் காக்ஷி கண்களில் தெரிந்தது. இரண்டு மயில்கள் அதி அற்புத நடனத்தை ஆடிக் கொண்டே ஆகாயத்தில் துள்ளி விளையாடின. ஒன்று பெரியதாகவும், மற்றது சின்னதாகவும் இருந்தது. அவற்றின் கால்கள் தரையில் படாமல் ஆகாயத்திலேயே அதி அற்புதமான நாட்டியத்தை ஆடின அவ்விரு மயில்களும். முருகனின் திருவருளை எண்ணி வியந்த ஸ்வாமிகள் இரு கரம் குவித்து வணங்கிய வண்ணமே இருந்தார். அடுத்த  சில நாட்களில் முருகன் ஒரு குழந்தை வடிவில் அவருக்குக் காக்ஷி கொடுத்தான்.
 
படுக்கையில் இருந்த ஸ்வாமிகள் செக்கச் செவேல் எனச் சிவந்த நிறத்துடன் கூடிய ஒரு குழந்தை சிரித்த முகத்தோடு வந்து தன்னைக் கண்டு சிரிப்பதைக் கண்டார். அது முருகன் தான் என்பதும் புரிந்தது அவருக்கு. சில விநாடிகளில் குழந்தை மறைந்தது. ஆனாலும் மயில்களின் ஆட்டத்தின் மூலமும், குழந்தை வடிவில் காக்ஷி கொடுத்ததின் மூலமும், முருகன் தன்னுடன் இருப்பதை உணர்த்துவதாகவே புரிந்து கொண்டார் பாம்பன் ஸ்வாமிகள்.  சில நாட்களில் கணுக்கால் எலும்பு முறிவும் சேர்ந்து கூடிவரவே மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். தம் வாழ்நாளின் கடைசிக் கட்டத்தைச் சென்னையிலேயே கழித்தார் ஸ்வாமிகள். அவரே தன் இறுதிக்காலத்தைத் தேர்ந்தெடுத்தார் என்று சொல்லலாம். வைகாசி மாசம் தேய்பிறை சஷ்டியில் அவிட்ட நக்ஷத்திரம் கூடிய வியாழக்கிழமையில் காலை ஏழேகால் மணிக்கு அனைவரும் அறியும் வண்ணம் சுவாசத்தை உள்ளுக்கு இழுத்துக் கொண்டார். உள்ளே இழுத்த மூச்சை வெளியே விடவே இல்லை. உள்ளேயே ஒடுங்கிப் போன மூச்சுடனேயே முருகனின் திருவடிகளில் இரண்டறக் கலந்தார். இந்தச் சமாதி நிலையை குக சாயுஜ்ய நிலை என்று  சொல்லுவார்கள் எனக் கேள்விப் படுகின்றோம். 

 
பக்தர்களால் இரவு பூராவும் திருப்புகழும், முருகன் குறித்த பல்வேறு பாடல்களும் பாடப் பட்டு மறுநாள் திருவான்மியூரில்  ஏற்கெனவே ஸ்வாமிகள் வாங்கிப் போட்டிருந்த நிலத்தில் சமாதிக் கோயில் அமைக்கப் பட்டது. சமாதியான் அதினத்துக்கு மறுநாள் காலை சமாதியுள் அலங்காரத்துடன் ஸ்வாமிகளை அங்கே எழுந்தருளச் செய்தனர் பக்தர்கள்.  சமாதிக் கோயில் கிழக்கே பார்த்து இருந்தாலும், சமாதிக்குள்ளாக ஸ்வாமிகளின் திருமுகம் வடக்கே பார்த்து இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். அங்கே ஒரு கோமுகம் அமைக்கப் பட்டு வில்வமரமும் வைக்கப் பட்டுள்ளது. பக்தர்கள் அங்கே இருந்தவாறு தியானம் செய்வது சிறப்பாகச் சொல்லப் படுகிறது. சமாதித் திருக்கோயிலின் உள் தோற்றத்தைத் தரிசிக்க முடியாது என்றும் திருக்கோயிலின் திருக்கதவு மூடியே இருக்கும் என்றும் ஸ்வாமிகளின் திருவுருவப் படம் அங்கு வழிபாட்டில் உள்ளதாகவும் சொல்லுகின்றனர். படத்துக்கு மட்டுமே பூஜை, வழிபாடுகள் எனவும் சொல்லுகின்றனர். காரணம் தெரியவில்லை. இன்னும் போகவில்லை இந்தக் கோயிலுக்கு. போனால் ஏதேனும் தகவல்கள் கிட்டலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *