ஸ்ரீ சிவ – கிருஷ்ணன் கோவில்
SRI SIVA – KRISHNAN KOVIL
கிருஷ்ணன், சிங்கை.
காக்கும் கடவுளாக விளக்கும் ஸ்ரீ மஹா விஷ்ணுவும், திருவடியில் சேர்த்துக் கொள்ளும் கடவுளாக விளங்கும் பரமேசுவரனும் ஒரே திருமேனியில் சங்கரநாராயண அவதாரமாக ஸ்ரீ சிவகிருஷ்ணர் எனும் திருப்பெயரோடு சிங்கப்பூர் வாழ் அடியார் அனைவருக்கும் அருள் பாலித்து வருகின்றனர்.
ஆலய வரலாறு
முதன்முதலில் 1962 ம் ஆண்டு திரு.குஞ்சு கிருஷ்ணன் என்பவர் செம்பவாங் சாலையில் ஒரு சிறிய நிலப்பகுதியைச் சீர்செய்து, ஒரு கொட்டகை அமைத்துச் சில விக்ரஹங்களை வைத்து வழிபடத் தொடங்கினார். சாலை ஓரத்தில் இருந்த காரணத்தால் வாடகை வண்டி ஓட்டும் இந்தியர்கள் ஓய்வு நேரங்களில் வழிபட வரத்தொடங்கினர்.
திரு.குஞ்சு கிருஷ்ணனின் மறைவுக்குப் பிறகு திரு.வேலாயுதம் என்பவர் அந்த இடத்தை மேலும் சீர் செய்து பல விக்ரஹங்களை வைத்து வழிபாடு செய்யத் தொடங்கினர். அத்திருக்கோயில் ”ஸ்ரீ சிவ – கிருஷ்ணன் கோயில்” என்று பெயர் பெற்றது. காலப்போக்கில் சுற்றுவட்டாரத்திலிருந்து இந்திய பக்தர்கள் அதிகமான வருகை தந்து வழிபாடு செய்யத் தொடங்கினர்.பக்தர்கள் வரவு அதிகரிக்கவே கோவிலைச் சுற்றி இருந்த இடங்கள் அழகாகச் சீர் செய்யப்பட்டது.
1980 ம் ஆண்டு இந்துக் கோயில் கணக்கெடுப்பில் இக்கோயிலைப் பற்றிய தகவல் வெளியிடப்பட்டது. நகரின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக 1982ம் ஆண்டில் அரசாங்கத்தின் புதிய திட்டத்தின் கீழ் இந்த ஆலயம் இடம் மாற வேண்டிய சூழ்நிலை உருவானது. சிங்கப்பூரின் வட பகுதியான உட்லென்ஸ் பகுதியில் மார்சிலிங் ரைஸ் பகுதிக்கு ஆலயம் மாறியது.
1987ம் ஆண்டு திரு. சிவலிங்கம் அவர்களின் தலைமையில், புதிய நிர்வாகத்தின் கீழ்ப் புதிய கோயில் நிர்மாணிக்கத் தீர்மானம் செய்யப்பட்டது. 1987 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி சங்கு ஸ்தாபனம் செய்யப்பட்டு அடிக்கல் நாட்டு விழா நடந்தேறியது. அதனைத் தொடர்ந்து திருப்பணியும் தொடங்கியது. இராஜ கோபுரத்துடன் விநாயகர் சன்னிதி, மூலஸ்தானத்தில் சிவ-கிருஷ்ணர் சன்னிதி, முருகன் சன்னிதி, துர்க்கை சன்னிதி, சிவன் சன்னிதி, இராமர் சன்னிதி, ஐயப்பன் சன்னிதி, முனீஸ்வரர்,கருப்பர், மதுரை வீரன், இடும்பர் சன்னிதிகள் மகா மண்டபம், நவக்கிரக சன்னிதி, கொடி மரம் உட்பட முழுமையான கோவிலாக உருவாகி 1996 ம் ஆண்டில் முதல் கும்பாபிஷேகம் நடந்தேறியது.
முதல் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டு நிறைவு பெறும் தருவாயில் மீண்டும் கோயில் திருப்பணி தொடங்கப்பட்டு புதிய சன்னிதிகளாக, பெரியாச்சி,மாரியம்மன் சன்னிதி, தக்ஷிணா மூர்த்தி சன்னிதி, சண்டிகேஸ்வரர் சன்னிதி ஆகியவை அமைக்கப்பட்டன.
{youtubejw}CVQ-SpKOHgE{/youtubejw}
ஆத்மலிங்கம் உட்பட ஆலயத்தைச் சுற்றிலும் பல புதிய சுதை விக்ரஹங்களோடும், புதிய தூண்களோடும் சிறப்பு வேலைப்பாடுகளுடன்,புதிய பொலிவுடன் 28-01-2008 ல் இரண்டாம் முறை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஊரும், உலகமும் செழிப்பாகத் திகழ இறைவனுக்குத் திருப்பணியும்,காலம் தவறாத கும்பாபிஷேகமும், பெருஞ்சாந்தி விழாவும் அவசியம். இத்திருக்கோயிலில் வாரச் சிறப்பு வழிபாடாக ஸ்ரீ துர்க்கை அம்மன் இராகு கால பூஜை வழிபாடு, விசாலாட்சி விஸ்வநாதர் பிரதோஷ பூஜை வழிபாடு, விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி பூஜை வழிபாடு, ஸ்ரீ முருகனுக்கு மாத கார்த்திகை பூஜை வழிபாடு, மூகாம்பிகைக்கு மாத பெளர்ணமி பூஜை வழிபாடுகளும்,ஆண்டுதோறும் சிறப்பு வழிபாடாக ஸ்ரீ சாரதா நவராத்திரி விழா, ஆடி மாதச் சிறப்பு வழிபாடுகள், சித்திரை பிரம்ம உற்சவம், வைகாசி விசாகம், ஸ்ரீவிநாயக சதுர்த்தி விழா, புரட்டாசிச் சனி வார பூஜை, வைகுண்ட ஏகாதசி பூஜை, மகா சிவராத்திரி வழிபாடு, மார்கழியில் ஆர்த்ரா தரிசன வழிபாடு, தைப்பொங்கல் மகர ஜோதி பூஜைகளும் முறையாக நடைபெற்று வருகின்றன.
ஆலய முகவரி
Sri Sivakrishana Temple,
31, Marsling Rise,
Singapore. 739127
Tel. 6368 0030.
Fax. 6365 1709