ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயம்

 

ஸ்ரீ   கிருஷ்ணன் ஆலயம்

SRI KRISHNAN TEMPLE

கிருஷ்ணன், சிங்கை.
 

 

”கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை” என்று நாச்சியார் திருமொழியில் பாடுகிறார் ஆண்டாள். அண்டர் குலத்து அதிபதியான விஷ்ணு என்னும் பரம்பொருளின் எட்டாம் அவதாரம் கிருஷ்ணாவதாரம். தர்மத்தை நிலைநிறுத்தி அதர்மத்தை வீழ்த்திய அற்புத அவதாரம்; பாரதப் போர் நிகழ்த்தவும், பூமியின் பாரம் தீர்க்கவும், கிருஷ்ண உணர்வுகளை இவ்வுலகில் பரப்பவும் வடமதுரைச் சிறையில் நாராயணன் வந்து பிறந்தான். கோகுலம்,பிருந்தாவனம், வட மதுரை, துவாரகை, அஸ்தினாபுரம், குருஷேத்திரம் ஆகிய இடங்கள் கண்ணனின் லீலைகள் கண்ட தலங்களாகும்.

 

திருமாலின் அவதாரங்களிலேயே மிகச் சிறந்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். கிருஷ்ணாவதாரம் வெறும் தத்துவங்களை மட்டும் சொல்லவில்லை; மனித வாழ்வோடு இணைந்து நிற்கிறது. கோகுலத்துக் குழந்தை கண்ணன்,ஆயர்பாடியில் கோபியர்களோடு காதல் பொழிந்த கோபால கிருஷ்ணன், துவாரகையின் மன்னன் கிருஷ்ணன், பாரதப்போரின் சூத்ரதாரி கண்ணன் என்று குழந்தைப் பருவம் தொடங்கி, நீதியின் வெற்றிக்காக சாரத்தியம் செய்தது வரை கிருஷ்ணன் செய்த ஒவ்வொரு செயலிலும் மனித வாழ்வின் துடிப்பும், பொருளும், இலக்கும், தத்துவமும் ஊடாடி நிற்கின்றன. ஸ்ரீ கிருஷ்ண தத்துவம் மனித வாழ்வில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய யதார்த்தமாக மலர்ந்து மணம் வீசக்காரணமும் அதுவே.

 

1870 ம் ஆண்டு வாக்கில் தோற்றம் கண்ட ஆலயம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயம்.

 

சிங்கப்பூரின் மத்திய வட்டாரப் பகுதியில் அமைந்துள்ள சாலைகள் – பிராஸ் பசா சாலை (Bras Basah Road),
விக்டோரியா சாலை (Victoria Street), பிரிஸ்சிப் சாலை (Prinsep Street), குவின் சாலை (Queen Street), வாட்டர்லூ சாலை (Waterloo Street). இச்சாலைகள் யாவும் சிராங்கூன் சாலையை ஒட்டியே அமைந்திருந்தன.

 

 

இப்பகுதியில் வாழ்ந்த இந்தியர்கள் மாலையில் ஒன்று கூடும் பொது இடமாக வாட்டர்லூ சாலை அமைந்திருந்தது. கடல் கடந்து வந்த இவர்களுக்கு ஒரு வழிபாட்டுத் தலமிருந்தால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. திரு.ஹனுமான் பீம் சிங் (Mr. Hanuman Beem Singh) என்பவருக்குக் கலாசாரத்தில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. தாய் நாட்டை விட்டு வந்திருந்த போதிலும், இறைவழிபாட்டை மறவாது கோயில் கட்டி, பண்பாடு, மதம்,மொழி ஆகிவற்றை மறவாது பேணுவதில் முனைந்திருந்த காலம் அது. இந்தியர் தங்களின் சக்திக்கேற்ப ஆங்காங்கே சிறு குடில்களாகக் கோவில்களை அமைத்து வழிபட்டார்கள்.

 

அவர்கள் அந்த எண்ணத்தைச் செயலாக்க வாட்டர்லூ சாலையிலிருந்த தென்னை,வாழைத் தோட்டங்களைச் சுத்தம் செய்து ஒரு ஆலமரத்தின் கீழ் அனுமான், விநாயகர் தெய்வங்களை வைத்து விளக்கேற்றித் தினந்தோறும் பூஜை செய்து வழிபாட்டைத் தொடங்கினார்கள். சில காலத்திற்குப் பின் கிருஷ்ணனையும் வைத்து வழி்படத்  தொடங்கினர்.                               

சிறிய குடிலாக இருந்தபோதிலும் பக்தர் கூட்டம் அதிகரிக்கவே, பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பக் கோவில் பெரிதாக இருக்கவேண்டும் எண்ணினர்.

 

1880 ம் ஆண்டில் திரு.ஹனுமான் பீம் சிங் கிருஷ்ணன் கோயில் நிர்வாகத்தினைத் தன் மகன் திரு. உம்நா சோமபா (Humna Somapah)  விடம் ஒப்படைத்து, அவரைக்  கோவிலின் அறங்காவலராகவும் நியமித்து உள்ளார்.

 

1880 -1904  திரு. உம்நா சோமபா ஒரு குடிலாக இருந்த கிருஷ்ணன் கோவிலை செங்கல் கட்டிடமாகமாற்றி, சுற்றுபுறங்களைச் செப்பனிட்டு வேலியிட்டு மேம்பாட்டுப் பணிகளைச் செய்துள்ளார்.

 

1904 ல் திரு. உம்நா சோமபா (Humna Somapah) தன் உறவினரான ஜோக்னி அம்மாளிடம்  பொறுப்பை ஒப்படைத்தார். ஜோக்னி அம்மாள் பொறுப்பேற்றவுடன் கோவிலை மேம்படுத்திச் சீரமைத்துள்ளார். புதிய மூலஸ்தானமும், விமானமும் அமைத்து 1933 ல் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார்.

 

1935 ல்  ஜோக்னி அம்மாள் திரு. பக்கிரிசாமியிடம் கோவில் பொறுப்புகளை ஒப்படைத்துள்ளார். திரு. பக்கிரிசாமி பொறுப்பேற்றவுடன் மேலும் சில கட்டிடப் பணிகளை மேற்கொண்டுள்ளார். மூலஸ்தானத்திற்கு முன் மேல் தளத்துடன் கூடிய ஒரு மண்டபம் கட்டியுள்ளார். இதன் கும்பாபிஷேகம் 21-ம் தேதி, சனவரி 1959ம் ஆண்டு நடைபெற்றுள்ளது. 

 

அவர் 1984-ஆம் ஆண்டு கோவில் நிர்வாகத்தைத் தன் மகன் ப.சிவராமனிடம் ஒப்படைத்தார். திரு. சிவராமன் பொறுப்பேற்றவுடன் பெரிய மாற்றங்களைச் செய்தார்.  தேவைக்கேற்பக் கோவில் மேலும் விரிவும், பொலிவும் பெற்றது. நுழைவாயில்,கோபுரம் ஆகியன புதுப்பிக்கப்பட்டன. புதிய சன்னிதிகளில் ஆஞ்ஜநேயர், விஷ்ணு துர்க்கை, குருவாயூரப்பன், சுதர்சனர், மஹா லட்சுமி சிலைகள் ஸ்தாபிக்கப்பட்டன. புதிதாக வசந்த மண்டபமும் கட்டப்பட்டது. புனரமைப்புப் பணி நிறைவு பெற்றதும் 12-11-1989ல் பூஜைகள்  நடந்தேறின.

 

 

 

கண் கொள்ளாக் காட்சி ஸ்ரீ கிருஷ்ணனின் அழகிய வடிவம். கருநீல ஒளி பரப்பும் அழகிய முக மண்டலம், காண்போரின் கண்களையும், கருத்தினையும் கவர்ந்திழுக்கும் அருள் வடிவம்.கிருஷ்ணன் கோவிலை அடுத்து ஒரு சீனக் கோயிலும் அமைந்துள்ளதால் சீன பக்தர்களும் இக்கோயிலுக்கு வந்து கிருஷ்ணனின் தரிசனம் பெற்றுச் செல்கிறார்கள்.

 

137 ஆண்டுகால  வரலாறு கொண்ட இவ்வாலயம்  இன்று கண்கவர் தோற்றத்துடன் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்து வருகிறது.

 

கோவிலில் யோகா, வேத வகுப்புகள், நாதஸ்வரம், தவில், நாட்டியம், தற்காப்புக்கலைகள், நுண்கலை தொடர்பான  வகுப்புகள் போன்ற வகுப்புகளும் நடைபெறுகின்றன.

 

பூஜைகள்

நாள் தோறும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன.காலை 6-30 முதல் 12 மணி வரையும், மாலை 4-30 முதல் இரவு 9-30 வரையும் பூஜைகள் நடக்கின்றன.

 

விழாக்கள்
 

தமிழ்ப் புத்தாண்டு விழா, வைகாசி விசாகம், ஆடி வெள்ளி, செவ்வாய் விழாக்கள், சங்கு அபிஷேகம், வரலட்சுமி விரதம், விநாயகர் சதுர்த்தி, வசந்த நவராத்திரி, புரட்டாசிச் சனி வழிபாடு, திருக்கார்த்திகை – ஸர்வாலய விஷ்ணு தீபம், ஆஞ்ஜநேய ஜயந்தி, வைகுண்ட ஏகாதசி ஆகியன இங்கு நடைபெறும் விழாக்களில் முதன்மையானவை.

 

கல்வி உதவி நிதி

இந்திய சமூகத்தின் முன்னேற்றத்தில் ஆலயங்களும் பங்கேற்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஸ்ரீ கிருஷ்ண ஆலயம் மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்கிறது. தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களும், பலதுறைத் தொழிற் கல்லூரி மாணவர்களும், பல்கலைக் கழக மாணவர்களும் இந்த ஆலயத்திலிருந்து உதவித் தொகை பெறுகின்றனர்.

 

ஆலய முகவரி
Sri Krishnan Temple,
152 Waterloo St.,
Singapore 187961
Tel 6337 7957  F, 6334 2712
67695784 F. 67699003                                
srikrisnatemple@hotmail.com

 

 

 
       ஆலய நுழை வாயில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *