Home Saivism ஸ்ரீராமலிங்க ஸ்வாமிகள்

ஸ்ரீராமலிங்க ஸ்வாமிகள்

by Dr.K.Subashini
0 comment

ஸ்ரீராமலிங்க ஸ்வாமிகள்

திருமதி.கீதா சாம்பசிவம்

 

 

 

 

 

நெய்வேலிக்கு அருகே பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருதூர் என்னும் கிராமத்தில்  ராமையா பிள்ளை என்பவரும் அவர் மனைவி சின்னம்மையும் வாழ்ந்துவந்தனர். குடும்பத்தில் இயல்பாகவே சைவ சித்தாந்தத்தில் பிடிப்பு அதிகம் இருந்தது. ஒருநாள் ராமையா பிள்ளை வீட்டில் இல்லாத நேரத்தில் ஒரு சாது அவர் வீட்டுக்கு வந்தார். சின்னம்மை சாதுவைக் கண்டதும், வணங்கி வரவேற்று அவருக்குத் தகுந்த உபசாரங்கள் செய்து அருமையான சாப்பாடும் கொடுத்தார். சாதுவும் அம்மையின் உபசாரங்களால் மனம் மகிழ்ந்து செல்லும்போது விபூதிப் பிரசாதம் கொடுத்தார். அப்போது அம்மையை ஆசீர்வதித்தார். ஆசீர்வதிக்கும்போது, "உனக்கு ஒரு பையன் பிறப்பான், இறவாமை என்பதை மற்றவர்களுக்கு அவன் போதிப்பான். இந்த உலக மக்கள் அவன் சொல்லுவதை நல்லுபதேசமாக ஏற்பார்கள்." என்று சொல்லி மறைந்தார். இந்த நிகழ்வு ஒரு குறிப்பிடத் தக்க நிகழ்ச்சி என அனைவராலும் ஒப்புக் கொள்ளப் பட்டாலும், இதில் உள்ள முக்கிய விஷயம் என்னவெனில் அந்த அம்மையார் சாது தனக்கு ஒரு பிள்ளை பிறப்பான் என்று சொல்லும்போதே ஏதோ ஓர் ஒளிமயமான ஒன்று தன் கர்ப்பத்துக்குள்ளே பிரவேசித்ததாய் உணர்ந்தாள். இம்மாதிரியான கர்ப்பத்தை சம்புபக்ஷ சிருஷ்டி எனச் சொல்லுவதாய் ஆன்றோர் சொல்லுகின்றனர். சாதாரணமாய் கணவன், மனைவி உடல் ரீதியான உறவினால் ஏற்படும் கர்ப்பம்  அனைவரும் நன்கு அறிந்த ஒன்று. ஆனால் அவதார புருஷர்களோ அப்படிப்பிறப்பதில்லை. இதற்கு சாட்சியே வள்ளலார். சாதுவின் வார்த்தைகள் காதில் விழுந்த கணமே அவரின் உயிர்த்துளி அம்மையாரின் கர்ப்பத்தில் குடிகொண்டது எனலாம். பிறக்கும்போது ஞாநியாகப்பிறக்கும் அவதாரபுருஷர்கள் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்கவேண்டும் என்ற நியதிக்குட்பட்டே பிறந்தாலும் அவர்களின் அவதார மகிமையை அவர்களால் மறைக்கவே முடியாது.

 

எட்டுமாதங்களில் ஆண்குழந்தையும் பிறந்தது. சிலர் பூரணமாய்ப் பத்துமாதங்கள் ஆனதுமே பிறப்பு நேர்ந்தது என்றும் சொல்கின்றனர். எப்படி ஆனாலும் பிறந்த குழந்தைக்கு "ராமலிங்கம்" என்ற பெயரைச் சூட்டிப் பெற்றோர் மிக்க அன்புடனும், கவனத்துடனும், பாசத்துடனும் வளர்த்துவந்தனர். குழந்தைக்கு ஐந்து மாதங்கள் ஆனபோது முதன்முதல் அருகிலிருந்த சிதம்பரம் கோயிலுக்குக் குழந்தையை எடுத்துவந்தனர் பெற்றோர். கோயிலில் மூலஸ்தானத்தில் தீப ஆராதனை காட்டப் பட்டது. தீப ஆராதனையைப் பார்த்த குழந்தை வாய்விட்டுக் கடகடவெனச் சிரித்தது. அனைவரும் குழந்தை தீபஒளியைப் பார்த்து அதிசயித்துச் சிரித்தது என எண்ணினார்கள். ஆனால் வள்ளலாராக பின்னால் அறியப்போகும் ராமலிங்கமோ, தீப ஜோதியைக் கண்டதுமே தன்னுள்ளே உள்ள உள் ஜோதியையும் அறிந்து கொண்டார் என்கின்றனர் ஆன்மீகப் பெருமக்கள்.  இந்த உணர்வை வள்ளலார் பின் நாட்களில் தம்மால் இயற்றப் பட்ட பாடல்களில் சொல்லி இருப்பதாகவும் கூறுகின்றனர்.

 

குழந்தையின் ஆரவாரமான சிரிப்பில் மகிழ்ந்த உற்றாரும், உறவினரும், பெற்றோரும் மனமகிழ்வோடு இருந்தார்கள். ஆனால் அந்த மகிழ்வு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. குழந்தைக்கு எட்டுமாதம் நிறைவதற்குள்ளேயே ராமையா பிள்ளை இறந்துவிட்டார். குழந்தைக்குத் தந்தையின் முகம் நினைவில் வந்து புரிந்துகொள்ளும் முன்னரே இறந்து போனது அனைவருக்கும் மிகவும் துயரத்தைத் தந்தது. தாயார் சின்னம்மை மனம் உடைந்து போனார். என்ன செய்வது எனப் புரியவில்லை. இனி குடும்பம் நடப்பது எவ்வாறு? யோசித்து யோசித்து மனம் கலங்கினார். பின்னர் மருதூரை விட்டு வேறு இடங்களுக்குத் தான் செல்லவேண்டும் என நினைத்து மருதூரிலிருந்து கிளம்பி செங்கல்பட்டில் அவர் தாயாரின் ஊரான சின்னகாவனம் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். அங்கே இருந்த தன் தாயின் உறவினர்களின் துணையோடு வாழ்க்கையை நடத்த முடிவு செய்தார். ஏற்கெனவே வள்ளலாருக்கு முன்னால் அம்மையாருக்கு நான்கு குழந்தைகள் இருந்தன. அவர்களில் மூத்த பிள்ளைக்கு வயதானதும் குடும்பப் பொறுப்பை ஏற்க முன்வந்தார். அவர் குடும்பம் நடத்தச் சென்னை நகரமே சிறந்தது என்னும் முடிவுக்கு வந்து சென்னைக்குக் குடி பெயர்ந்தார். அவரோடு மொத்தக் குடும்பமும் சென்னைக்குக் குடியேறியது.

 

சென்னையிலே பெரிய சகோதரர் ஆன சபாபதி அவர்கள் தமிழில் இலக்கியம் படித்து வந்தார். அதோடு இலக்கிய ஆர்வமும், ஆன்மீக ஆர்வமும் உள்ள பெரிய மனிதர்களின் பழக்கமும் ஏற்பட்டது. கூடவே சிறு வயதுக் குழந்தைகளுக்கு ஆரம்பத் தமிழும் கற்றுக் கொடுத்துவந்தார். இதன் மூலம் கிடைத்த வருமானத்தில் கொஞ்சம் சிரமத்துடனேயே குடும்பம் நடந்தது. என்றாலும் நிம்மதியுடனும், ஆநந்தமாகவுமே வாழ்ந்தனர். ராமலிங்க அடிகளுக்கு அப்போது ஐந்து வயது நிரம்பி இருந்தது. தன்னுடைய சின்னத் தம்பிக்கும் தமிழ் கற்றுக் கொடுக்கும் ஆர்வத்துடன் சகோதரர் சபாபதி அடிப்படைத் தமிழ் இலக்கணமும், தமிழ் இலக்கியமும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. ராமலிங்கத்திற்குப் படிப்பில் ஆர்வம் இருப்பதாய்த் தெரியவில்லை. நாளாக ஆகச் சரியாகும் என நினைத்த சகோதரர் தன் முயற்சியை விடவில்லை. ராமலிங்கமோ, தமிழ் கற்றுக் கொள்வதை விட அங்கே இருந்த கந்தகோட்டத்து முருகன் பேரில் தீராக் காதல் கொண்டார். அடிக்கடி அங்கே சென்றுவிடுவார். முருகனிடம் என்ன பிரார்த்திப்பாரோ. பிரார்த்தனைகள், வழிபாட்டுப் பாடல்கள் பாடியவண்ணம் இருப்பார்.  தமையனாரோ, சொந்தத் தமையனிடம் தம்பி எடுத்துக் கொள்ளும் சலுகை என நினைத்து, மூன்றாவது மனிதர் யாராவது சொல்லிக் கொடுத்தால் சரியாகும் என்று எண்ணினார். 
 

தான் கற்றுக் கொண்டிருந்த தமிழாசிரியரையே தம்பிக்கும் சொல்லிக் கொடுக்க வைத்தார். அவரும் தன்னால் இயன்ற அளவிற்கு முயன்று ராமலிங்கத்துக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்தார். ஓரளவுக்கு வெற்றி பெற்றார் எனினும் ராமலிங்கம் கந்தகோட்டம் செல்லுவதையோ, வழிபாட்டுப்பாடல்கள் பாடுவதையோ, அடிக்கடி தியானத்தில் ஆழ்ந்து போவதையோ நிறுத்தவில்லை.  பாடும்போது ராமலிங்கத்தின் குரலினிமை அனைவரையும் கவர்ந்தது. இதைக் கேள்விப்பட்ட தமிழாசிரியர் அந்தப் பாடல்களைத் தாமும் கேட்க ஆசைகொண்டு, அவற்றைப் பாடும்படி சொல்லித் தானும் கேட்டு அறிந்தார். பாடல்களைக் கேட்ட தமிழாசிரியர் அவற்றின் நேர்த்தியையும், உள்ளார்ந்த பக்தியையும் கண்டு வியந்து, தமிழிலக்கணத்தில் தேர்ந்தவர்களாலேயே தொடமுடியாத இலக்கண நெறியுடனும், அதையும் தாண்டிய பக்தி உணர்வுடனும் பாடல்கள் இருக்கிறதைக் கண்டு வியந்து, இது கடவுளின் பரிசு, இந்தக் குழந்தையும் இறைவன் அளித்த பரிசு என வியந்து பாராட்டினார். 

இத்தனை அருமையாகப் பாடல்கள் தானே இயற்றிப் பாடும் வல்லமை பெற்றவனுக்குத் தான் தமிழ் சொல்லிக் கொடுப்பதா? நம்மைவிடவும் இவன் தமிழறிந்தவனாய் உள்ளான் எனச் சொல்லி வியந்தார். என்றாலும் ராமலிங்கத்தைப் பள்ளியில் சேர்க்க அனைவரும் முயன்றனர். அந்த முயற்சியும் தோற்றது. சபாபதி அவர்களுக்குத் தம்பியின் நிலைமையையும், அவன் எதிர்காலத்தையும் நினைத்துக் கவலை அதிகம் கொண்டு, மிரட்டலின் மூலமும், பயமுறுத்தியும் தம்பியை வழிக்குக் கொண்டுவர முனைந்தார். தம்பிக்கு உணவும், உடையும் அளிக்கவில்லை. வீட்டை விட்டு வெளியேற்றுவதாய்ப் பயமுறுத்தினார். ஆனாலும் எந்தப்பலனும் இல்லை.  அவரின் அண்ணியார் இந்தச் சிறுவனிடம் மிகவும் பாசம் கொண்டு தன் கணவனுக்கும் தெரியாமல் அவனுக்கு உணவும், உடையும் அளித்துப் பாதுகாத்தார். இதனால் எல்லாம் அயராமல் ராமலிங்கம் தன் தெய்வீகப் பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். அவர் உறுதி மேலும் பலப்பட்டது. உள் மனதில் கடவுளைக் கண்டு மனதிற்குள்ளேயே அவற்றிற்கு வழிபாடுகள் செய்யும் அளவிற்கு முன்னேறினார். 

என்றாலும் அண்ணியார் தன் மைத்துனரிடம் தன் கணவனுக்காக, அவர் ஆசையை நிறைவேற்றும்படி வேண்டினார். இது வரையிலும் ராமலிங்கம் அநுபவித்து வந்த துன்பங்கள் தீர்ந்து போகும் என்றும், சுகமான, சண்டையில்லாத நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்றும், குடும்பத்தில் அனைவரும் மகிழ்வார்கள் என்றும் வேண்டினாள். ராமலிங்கமும் அண்ணியாரின் அதீதமான பாசத்தைக் கண்டு, தான் படிக்கச் சம்மதிப்பதாய்ச் சொன்னார். விஷயம் சகோதரர் காதுகளுக்குச் சென்றது. ஒரு நல்ல நாள் பார்த்து மேல்மாடியில் ஒரு தனி அறை ராமலிங்கத்திற்கென ஒதுக்கப் பட்டது. ஆனால் ராமலிங்கம் புத்தகப் படிப்பின் அறிவிற்குப் பதிலாக வழிபாடல்கள் நடத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகளையே செய்தார். இலக்கியப் புத்தகங்கள், இலக்கணப் புத்தகங்களுக்குப் பதிலாய் அறையில் ஒரு கண்ணாடிக்கு எதிரே ஒரு விளக்கை ஏற்றி வைத்துவிட்டு வழிபாடுகளும், தியானமும் செய்ய ஆரம்பித்தார். 
ஆழ்ந்த தியானம் செய்யச் செய்ய ராமலிங்கத்திற்கு யோகசித்திகள் கை கூடி வரலாயின. ஒருநாள் அவர் முருகக் கடவுளைத் தரிசித்தார். ராமலிங்கத்தின் கண்களுக்கு முருகன் புலப்படலானார். நாளாக நாளாக முருகனின் பரிபூரண அருளுக்கும், ஆசிக்கும் பாத்திரமானார். தன் தெய்வீகத் தன்மையால் ராமலிங்க அடிகளாருக்கு,  யோக ரகசியத்தை அறியச் செய்தார். உள்ளொளி பெற்ற ராமலிங்க அடிகளார் தானே ஒரு ஜோதிப் பிழம்பாய் ஜொலித்தார். அவர் முகத்தில் தெய்வீகக் களை தோன்றியது. இறை தரிசனம் பெற்ற களிப்பில் பாடல்கள் அலைபோல் பொங்கி வரலாயிற்று.  சித்திகள் கைவரப் பெற்றார். அதன் மூலம் அற்புதங்களும் நடக்க ஆரம்பித்தன.  ஆனாலும் அவர் அறியவில்லை அதை. அவருடைய அண்ணியாரே பார்த்து வியந்தார் அவரின் அதிசய ஆற்றலைக் கண்டு பேச்சிழந்தார். 

தன்னுடைய அபாரமான தமிழறிவால் ராமலிங்க அடிகளாரின் அண்ணனாகிய சபாபதி அவர்கள் சில பணக்காரர்கள் வீட்டில் இலக்கியச் சொற்பொழிவு, ஆன்மீகச் சொற்பொழிவுகளை அவர்களின் வேண்டுகோளின் பெயரால் நிறைவேற்ற ஆரம்பித்தார்.  இதன் மூலம் அவருக்குக் கொஞ்சம் பணம் கிடைக்கவே குடும்பத்தின் வறுமை ஓரளவு போயிற்று.   பெரியபுராணத்தைப் பற்றிய சொற்பொழிவு ஒன்று செய்ய ஒரு பெரிய மனிதர் அவரை அழைத்திருந்தார். அது ஒரு தொடர் சொற்பொழிவு. சில நாட்கள் அல்லது மாதங்கள் தொடர்ந்து செய்யவேண்டும். சில நாட்கள் வரையிலும் எந்தத் தடையுமின்றி சுமுகமாய்ச் சென்றுகொண்டிருந்தது சபாபதி அவர்களின் சொற்பொழிவுகள். ஒருநாள் அவருக்குக் கடுமையான ஜுரம் வந்து எழுந்திருக்கவே முடியவில்லை. சொற்பொழிவுக்குப் போகமுடியாதே என்ற கவலை சபாபதிக்கு வந்து மனம் கலங்கினார். அந்தப் பணக்காரர் என்ன சொல்லுவாரோ என அஞ்சினார். அப்போது அவர் மனைவி தன் மைத்துனரின் சாமர்த்தியத்தையும், அறிவையும் நேரில் பலமுறை கண்டிருப்பதால், மற்றவருக்கும் இது தெரியவேண்டும் என நினைத்தவராய், தன் கணவரிடம் சென்று ராமலிங்கத்தைச் சொற்பொழிவாற்ற அனுப்பும்படி வேண்டினார்.

ஆனால் சபாபதிக்குத் தன் தம்பியைப் பற்றிய உயர்ந்த அபிப்பிராயம் எதுவுமில்லை. அவருக்கு ஒன்றுமே தெரியாது என்றும், அவர் போகமுடியாது என்றும் சொல்லி மனைவியிடம் கடுமையாகக் கோபித்து மறுத்தார். ஆனால் வேறு ஏற்பாடு செய்யவும் நேரமில்லை. பணக்காரர் வீட்டிலிருந்து ஆள்மேல் ஆள் வந்து கொண்டிருந்தது. வேறு வழியில்லாமல் தம்பியை அழைத்து விபரத்தைக் கூறினார். புத்தகத்தைப் பார்த்து ஒன்றிரண்டு பத்திகள் அல்லது ஒன்றிரண்டு பாடல்களைப் படித்துவிட்டு வருமாறும், தன் அண்ணனுக்கு உடல்நலம் சீரானதும் மேற்கொண்டு தொடருவார் எனக் கூறும்படியும் பணித்தார்.  அதன்படியே ராமலிங்கம் பணக்காரர் வீட்டிற்குச் சென்று தமையனாரின் செய்தியைச் சொன்னார். அந்தக் கூடம் அனைத்து ரசிகப் பெருமக்களாலும் நிரம்பி இருந்தது. கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த பணக்காரருக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. கூட்டத்தினரை எவ்வாறு திரும்பி அனுப்புவது என்று யோசித்தவர், ராமலிங்கத்தைப் பார்த்து ஏதாவது கொஞ்சம் பேசிச் சமாதானம் செய்யுமாறு வேண்டினார். ராமலிங்கமும் மாபெரும் அறிஞர்களும், வித்வான்களும், பண்டிதர்களும் நிறைந்திருந்த அந்தச் சபையில் அனைவரும் பார்க்கும் வண்ணம் அமர்ந்தார். ராமலிங்கத்தின் வயதையும், சின்னஞ்சிறு பையன் அவர் என்பதையும் கவனித்த கூட்டம், விஷயமோ மிகப் பெரியது. யோகத்தையும், ஞானத்தையும் பற்றிப் பேசும் வண்ணம் இந்தக் குழந்தை என்ன அறிந்திருக்கப் போகிறது என நினைத்தனர் .

 

ஆனால் ராமலிங்கம் பேச ஆரம்பித்தாரோ இல்லையோ நல்ல பருவகாலங்களில் இடைவிடாமல் கொட்டும் குற்றால அருவி போல் சொல்மாரி பொழிந்தார். நிறுத்தவே இல்லை. கூட்டத்தினரோ பிரமிப்பும், ஆச்சரியமும் மாறாமல் ஆடாமல், அசையாமல் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவர் மனதிலும் ஒரே உணர்ச்சி. இவன் சிறுவனே அல்ல. கடவுளே நமக்குப் பாடம் சொல்ல, உபதேசிக்க அனுப்பிய ஒரு ஞாநி. என்ற எண்ணமே அனைவர் மனதிலும்.  கூட்டம் ஆரம்பித்துப் பலமணிநேரம் ஆகிவிட்டது. நடு இரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பெரிய புராணத்தின் "உலகெலாம்" என்ற வரியில் ஆரம்பித்த ராமலிங்கம் அந்தப் பாடலின் இரு வரிகளுக்கே அதுவரையில் அர்த்தம் சொல்லி இருந்தார். ஒவ்வொரு விளக்கமும் அற்புதமாய், அருமையாய் அமையக் கூட்டத்தினரால் அவர்கள் ஆச்சரியத்தைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. நேரம் போனதும் அவர்கள் யாருமே அறியவில்லை. கூட்டத்தினர் அனைவரும் ஒருமனதாக இந்தச் சொற்பொழிவுகள் இனிமேல் ராமலிங்கத்தாலேயே நடத்தப் படவேண்டும் எனத் தீர்மானிக்க, அந்தத் தீர்மானம் கூட்டம் நடத்துநர் வாயிலாக சபாபதிக்கும் செய்தி போயிற்று.

 

சபாபதியால் முதலில் இந்தச் செய்தியை நம்பவே முடியவில்லை. தன் தம்பியாவது சொற்பொழிவாற்றுவதாவது? அதுவும் இலக்கியத்தில், பெரிய புராணத்தில்?? என்ன தெரியும் அவனுக்கு?? ஏதோ கட்டுக்கதை என்றே நினைத்தார் அவர். அங்கு கூடி இருந்த மக்கள் பாராட்டினார்கள் என்பதும் அவருக்கு விந்தையாகவே இருந்தது. இல்லை, இல்லை, ஜுரவேகத்தில் நாம் கனவு காண்கின்றோம் என்றே நினைத்தார். ஆனால் இது கனவில்லை, உண்மைதான். அவருடைய மனசாட்சி உறுத்தியது அவருக்கு. பள்ளிக்கே செல்லாத தன் தம்பி இப்படி ஒரு அருமையான பொருள் பொதிந்த ஆன்மீகச் சொற்பொழிவை எப்படிக் கொடுக்கமுடிந்தது?? ம்ம்ம்ம்ம்??? சரி, சரி, அவன் போகட்டும், நாமும் யாருமறியாமல்  சென்று கவனிப்போம். சபாபதி ஒரு முடிவுக்கு வந்தார்.

தம்பி அடுத்தநாள் சொற்பொழிவாற்றச் சென்றபோது யாருமறியாவண்ணம் அந்தப் பெரிய கூடத்தின் ஒரு மூலையில் தன்னை மறைத்துக் கொண்டு அமர்ந்து தம்பியின் சொற்பொழிவைக் கேட்டார். இப்போது அவருக்கு மயக்கமே வந்தது. இப்படி ஒரு மடை திறந்த வெள்ளம் போன்ற பேச்சை அவரால் கூட இதுவரையிலும் தர முடிந்ததில்லை. மீண்டும் கனவோ? தம்மைத் தாமே கிள்ளிப் பார்த்துக் கொண்டார். இது உண்மைதான். தாம் காண்பது கனவல்ல. சொற்பொழிவாற்றுவதும் அவருடைய அருமைத் தம்பியே தான். வேறு யாரும் அல்ல. வீட்டிற்குச் சென்ற அவர் தம் மனைவியிடம் நடந்தவற்றைத் தெரிவித்தார். அவர் மனைவி தாம் இந்த உண்மைகளைத் தவிர இன்னும் பல உண்மைகளை அறிந்திருப்பதாய்க் கூறினார். மனைவி கூறிய செய்திகளில் இருந்து தம் தம்பி ஒரு சாதாரண மனிதன் அல்ல.  இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்டவன், அல்லது இறைவனின்பிரதிநிதியாக இங்கே வந்துள்ளான் என்று புரிந்து கொண்டார். தாம் இத்தனை நாட்கள் தம் தம்பியிடம் நடந்து கொண்ட கடுமையான நடத்தைகளுக்கு மனம் வருந்தினார் சபாபதி.

சொற்பொழிவை முடித்துவிட்டு ராமலிங்கம் வீட்டிற்கு வந்தார். சபாபதி அவரைக் கட்டி அணைத்துக் கொண்டு தாம் செய்த அடாத செயல்களுக்காக உளம் வருந்தினார். தம்மை மன்னிக்கும்படி தம்பியிடம் வேண்டினார். ராமலிங்கமோ அவற்றால் தாம் மனம் வருந்தவில்லை என்பதைக் காண்பிக்கும் வண்ணம் சற்றும் கலங்காமல் மெளனமாகத் தம் மனதுக்குள்ளேயே இறைவனை இவ்வளவு நாள் வழிபட்டாற்போல் அன்றும் வழிபட்டு இந்த நேரமும் இனிமையான நேரமாய்க் கடக்கவேண்டிக் கொண்டார். அவருடைய அண்ணனுக்கும் அவருக்கும் நேரவிருந்த ஒரு பெரிய மனஸ்தாபத்தையும், அதன் விளைவான நடத்தைகளையும் இவ்விதம் தடுத்தார் ராமலிங்கம்.
கொஞ்சம் கொஞ்சமாய்ச் செய்தி சுற்றுவட்டாரங்களில் பரவியது. மக்கள் தினமும் ராமலிங்கத்தைக் காண வரத் தொடங்கினார்கள். ஒரு பார்வை பார்த்தாலோ அல்லது அவன் குரலைக் கேட்டாலோ போதும் என எண்ணிய மக்கள் தேனுள்ள பூக்களை மொய்க்கும் வண்டுகளைப் போல் மொய்த்தனர்.  பல்வேறு இலக்கியகர்த்தாக்களும், மதத்தலைவர்களும் ராமலிங்கத்தின் பேச்சில் மயங்கி அவருக்குச் சீடர்களானார்கள். தொழுவூர் என்னும் ஊரைச் சேர்ந்த வேலாயுத முதலியார் என்பவர் சென்னை ராஜதானிக்கல்லூரியின் தமிழ் இலக்கியப் பேராசிரியராக இருந்துவந்தார். அவர் முதலில் ராமலிங்கத்தைத் தம் குருவாக ஏற்றுக் கொள்ள அவரைத் தொடர்ந்து அனைவரும் அவரைப் பின்பற்றினார்கள். ராமலிங்கம் அப்போது முதல் ராமலிங்க அடிகள் என்றே அழைக்கப் பட்டார். 
ராமலிங்கம் தினமும் திருவொற்றியூர் சென்று அங்குள்ள தெய்வத்தை வழிபடுவதை வழக்கமாய்க் கொண்டிருந்தார். பல பாடல்களைப் புனைந்து தம் சீடர்களுக்கு இவற்றைத் தொகுத்து மக்களுக்கு அளிக்கும்படி செய்தார். இதைத் தவிர தம்மை நாடி வருபவர்களின் ஆன்மீக சந்தேகங்கள், தியான வழிமுறைகள், தியானங்களில் ஏற்படும் சந்தேகங்கள் போன்றவற்றையும் தீர்த்து வைத்தார். சென்னையில்  இருந்து அவர் பல இடங்களுக்குப் புனித யாத்திரை சென்று அங்குள்ள தெய்வங்களின் பேரிலெல்லாம் பாடல்கள் புனைந்தார். பாடல்கள் இரண்டு பெரிய தொகுப்பாகத் தொகுக்கப் பட்டு மக்கள் வாயில் மட்டுமல்லாமல் மனதிலும் இடம் பெறத் தொடங்கின. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் சென்ற ராமலிங்கம் நெய்வேலிக்கு அருகே உள்ள கருங்குழி என்னும் ஊரில் போய்த் தாம் அங்கேயே நிரந்தரமாய்த் தங்க முடிவு செய்தார். ஒன்பது வருடங்கள் அங்கே தங்கினார். திருஅருட்பா என்ற பெயரில் இரண்டு பாகங்களாக அவரது பாடல்கள் தொகுக்கப் பட்டன. பாடல்கள் தவிர, அவற்றில் சில கட்டுரை வடிவிலும், சில சீடர்களுக்கு அடிகளார் எழுதின கடித வடிவிலும் இருந்தன. அவை எல்லாமே திருஅருட்பா என்ற பெயரிலேயே தொகுக்கப் பட்டு அவரது சீடர்களால் படிக்கப் பட்டன.  இரண்டாம் பாகத்தில் உள்ள அருள் விளக்க மாலையும், அநுபவ மாலையும் மிகவும் முக்கியமானவையாகச் சொல்லப் படுகின்றன.

 

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்

வள்ளலாரை ஒரு சித்தர் என்று சொல்லுவது உண்டு. அதற்கேற்றாற்போலவே அவர் வாழ்விலும் பல சம்பவங்கள் நிகழ்ந்தன. அவற்றில் குறிப்பிடத் தக்கவையாகச் சில. ஒரு முறை தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களோடும், மற்றச் சீடர்கள் சிலரோடும் சேர்ந்து திருஒற்றியூர் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். எப்போதும் கோயிலுக்குச் செல்லும் வழியாக வள்ளலார் தெற்கு மாடவீதியையும் அதை ஒட்டிய நெல்லிக்காய்ப்பண்டாரம் சந்து என்னும் சந்தின் வழியாகவுமே செல்வது வழக்கம். அன்றைக்கென்று தேரடித் தெருவிற்குள் நுழைந்து செல்ல ஆரம்பித்தார். வள்ளலாரின் இன்னொரு சீடரான சோமு செட்டியார் குழம்பிப் போனார். இது தாசிகள் வீதி என அழைக்கப்படுமே? ஏன் இந்த வீதியில் நுழைகிறார் என்று எண்ணியவண்ணமே, தம் குருநாதரிடம் அந்த சந்தேகத்தையும் கேட்கிறார். வழக்கமான பாதையைவிட்டு மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பதையும் சுட்டிக்காட்டினார். வள்ளலாரோ அமைதியாக “ஆம்” என்ற ஒற்றைச் சொல்லை உதிர்த்துவிட்டு அமைதியாக, சோமு செட்டியாரோ விடாமல், “ஐயா, தங்களைப் போன்றவர்கள் இந்த வீதியைக் கண்டாலே நாணிக் கூசுவார்களே? அத்தகைய தாங்கள் இன்றைக்கு இந்தத் தேரடி வீதிக்குள் வந்தது ஏனோ? அதுவும் அனைவரையும் அழைத்துச் செல்கிறீர்களே? “ என்று வினவ, வள்ளலார், புன்முறுவலோடு, “என்னைக் காண இந்தத் தெருவில் வெகுநாட்களாய் ஒருவர் காத்துக்கொண்டிருக்கிறார். அவரைக் காக்க வைக்கக்கூடாது.” என்று சொன்னார்.
 
“யார் அவர்?” ஆச்சரியத்துடன் வினவிய சோமு செட்டியாருக்கு, “எல்லாரும் பார்க்கத் தான் போகிறீர்கள்” என்ற பதிலைக் கொடுத்துவிட்டு முன்னால் நடந்தார் வள்ளலார். அந்தத் தெருவில் ஒரு வீட்டுத் திண்ணையில் நிர்வாணத் துறவி ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டார். சோமு செட்டியார் அவரைச் சுட்டிக்காட்ட, வள்ளலாரும் அதனால் என்ன என்று கேட்டுவிட்டுத் துறவியைக் கூர்ந்து நோக்கினார்.  செட்டியார் உடல் நடுங்க, பயத்துடன், அவர் தெருவிலே போகிறவர்கள் வருகிறவர்கள் அனைவரையும் அவரவர் குணங்களை மானசீகமாய்க் கண்டறிந்து அதற்கேற்றாற்போல், “இதோ நாய் போகிறது, இதோ நரி போகிறது, இதோ குரங்கு போகிறது, இதோ, குதிரை போகிறது, இதோ கழுதை போகிறது.” என்றெல்லாம் சொல்லி ஏளனம் செய்து சிரிப்பார் என்று சொல்லித் தம்மையும் வள்ளலாரையும் கண்டு அவ்விதம் ஏதேனும் சொல்லிவிடுவாரோ என அஞ்ச ஆரம்பித்தார்.
 
“இவ்வளவு தானே? இதுக்கா பயப்படுவது? வாருங்கள் போகலாம்.” என்று சொல்லிவிட்டு வள்ளலாரோ மேலே நடக்க ஆரம்பித்தார். அந்த நிர்வாணத் துறவியை அனைவரும் கடந்தனர். அப்போது அதிசயம் நிகழ்ந்தது. அந்தத் துறவி ஸ்ரீராமலிங்க அடிகளைக் கண்டதுமே, பக்திப் பரவசம் மேலோங்கத் திண்ணையை விட்டுக் குதித்துக் கீழே இறங்கி, நடுவீதிக்கு வந்து, ஆநந்தக் கூத்தாடிக் கொண்டு, “கண்டேன், கண்டேன், கண்ணுக்கு இனியவரைக் கண்டேன், ஒரு மனிதனைக் கண்டேன், அதிலும் உத்தம மனிதனைக் கண்டேன். அதோ போகிறான், உத்தம மனிதன். இன்றுதான் கண்டேன் இவனை.” என்று உரக்கக் கத்திக் கூச்சலிட்டு ஆடிப் பாடினார். அனைவரும் ஆச்சரியப் பட ராமலிங்க அடிகளோ எப்போதும்போல் சாதாரணமாகவே இருந்தார்.  சோமு செட்டியாரோ மீண்டும் ஆச்சரியத்துடன் அடிகளைக் கண்டு, இதென்ன ஸ்வாமி என வினவ ராமலிங்க அடிகள் அவரைக் கண்டு பேசிவிட்டு வருவதாய்க் கூறிவிட்டு அவரருகில் சென்றார்.  அடிகளைக் கண்டதுமே அந்தத் துறவிக்கு வெட்கம் சூழ்ந்தது. மேனி கூசியது. தம் நிர்வாணத்தை மறைக்க ஆரம்பித்தார். ராமலிங்க அடிகளைக் காணக் காண அவருக்கு மேலும் மேலும் வெட்கம் வந்தது. ராமலிங்க அடிகள் அவரை வணங்கினார்.
 
“ஆஹா, எனக்கு அருள் புரிய வந்த ஞான ஜோதியே! யாம் இனி காட்டுக்குச் செல்கின்றோம். இனி நமக்கு அதுவே வீடு.” என்று சொல்லியவண்ணம் அங்கிருந்து சென்றுவிட்டார். அடிகளும் திரும்பிவந்து தம் சீடர்களோடு சேர்ந்து கொண்டார். அப்போது வேலாயுத முதலியார் ஸ்வாமிகளுக்காகவே அந்தத் துறவி காத்துக்கொண்டிருந்ததாகவும், இன்று அவர் நோக்கம் நிறைவேறியதும் சென்றுவிட்டதாகவும், அதைப் புரிந்து கொண்டே ஸ்ரீ அடிகள் இந்தத் தெருவில் நுழைந்து செல்ல ஆரம்பித்ததையும் புரிந்து கொண்டதாய்ச் சொல்ல சோமு செட்டியாருக்கும் அப்போது தான் விஷயம் விளங்கிற்று.  ஒற்றியூர் கோயிலுக்குச் சென்று திரும்ப தினம் தினம் ராமலிங்க அடிகளுக்கு நேரம் ஆகிவிடும். அவர் வரவுக்காக வெகுநேரம் காத்திருந்து, காத்திருந்து பார்த்துவிட்டு அவர் அண்ணியான பார்வதி அம்மை  ஒருநாள் தம்மை அறியாமல் தூங்கிவிட்டார். அவர் தூங்கிச் சிறிது நேரம் சென்றே அடிகள் வீட்டுக்குள் வந்தார். அண்ணி தூங்கிவிட்டார் என்பதை அறிந்ததுமே அண்ணியை எழுப்பித் தொந்தரவு கொடுக்கவேண்டாம் என உணவு உண்ணாமலேயே படுத்துவிட்டார்.  வடிவுடை அம்மை அவர் நினைவில் தோன்ற அம்மையைத் தியானித்துக் கொண்டே உறங்கவும் ஆரம்பித்தார்.

ஆனால் அன்னைக்குத் தாங்கவில்லை. எந்த அன்னை?? சாட்சாத் அந்த வடிவுடையாளுக்குத் தான். தன் கோயிலுக்கு வந்த பிள்ளை, தன் மேல் பாடல்கள் புனைந்த பிள்ளை இப்படி உண்ணாமல் உறங்குவது கண்டு பொறுக்கவில்லை அவளுக்கு.  என் மேல் மாணிக்க மாலை பாடிய பிள்ளை இப்படிப் பசியுடனா உறங்குவது??  வடிவுடையாள் உடனே அங்கே அடிகளது அண்ணி பார்வதி அம்மையின் உருவில் தோன்றினாள். வலக்கையில் உணவு வட்டில், இடக்கையில் குடிநீர்ச் செம்பு. அண்ணி எவ்விதம் எழுப்புவாரோ அவ்விதமே, “தம்பி ராமலிங்கம், எழுந்திருங்கள்.”என்று எழுப்பினார்.

உணவுப் பாத்திரத்தை அடிகளிடம் கொடுத்து உணவு அருந்தச் சொன்னார். இவ்வளவு நேரம் சென்றும் தம் அண்ணியார் உணவோடு தம்மை எழுப்புவதைக் கண்டு, அந்த அன்பில் மனம் உருகினார் வள்ளலார்.  மேலும் இனி அண்ணிக்கு இத்தகைய தொந்தரவைக் கொடுக்காமல் பார்த்துக்கொள்வதாயும் வாக்குக் கொடுத்தார்.  உணவருந்திய பின்னர் ராமலிங்கத்திற்குத் தம்மையும் அறியாமல் நித்திரை பெரும் மயக்கமாய் வர, புன்னகை பூத்த அன்னை மறைந்தாள். இங்கே அவருடைய அண்ணியார்  உண்மையாக உறக்கம் கலைந்து எழுந்தார். ராமலிங்கம் உணவு அருந்த வரவில்லை என்பதும், தாம் அப்படியே அசதியில் உறங்கியதும் நினைவில் வர, எழுந்து வெளியே வந்து பார்த்தார். ராமலிங்கம் திண்ணையில் படுத்திருப்பதைக் கண்டதும், மனம் பதறி, அவரை எழுப்பினார்.  மீண்டும் தூக்கம் கலைந்த அடிகள், “என்ன அண்ணி?” என வினவ, “உணவு அருந்த வாருங்கள், தம்பி, அசதியில் உறங்கிவிட்டேன் போலிருக்கிறது.” என்று கனிவோடு அழைக்க வியப்பின் உச்சிக்கே போனார் அடிகளார்.
 
“அண்ணி, இப்போது தானே உணவு கொடுத்தீர்கள்? தாங்கள் அளித்த உணவைத் தானே சாப்பிட்டேன்?” என்று சொல்ல, பார்வதி அம்மை குழம்பினார். குழப்பத்துடனேயே, “இல்லை தம்பி, நான் உறங்கிவிட்டேன். கதவையும் தாழிட்டு இருந்தேனே? இப்போதுதானே உறக்கம் கலைந்து வருகிறேன்?” என்று சொன்னார். மேலும் “நீங்கள் பசியோடு இருப்பீர்களே, உணவு பரிமாறத் தான் அழைத்தேன்.” என்றும் கூறினார். அடிகளார் அப்படியானால் எனக்கு உணவு பரிமாறியாது அண்ணியார் இல்லை எனில் பின்னர்?? தம்மை மறந்த நிலையில் தியானிக்க ஆரம்பித்தார்.  அப்போது வலக்கையில் உணவுப் பாத்திரத்துடனும், இடக்கையில் நீர்ச்செம்போடு வடிவுடை அம்மன் அவருக்குக் காட்சி கொடுக்க, பின்னர் கண்விழித்த அடிகளார் தம் அண்ணியிடம் வடிவுடையாளே வந்து தமக்கு உணவு கொடுத்திருப்பதைக் கூறினார்.  அந்தக் காட்சி உடனே ஒரு பாடலாகவும் வந்தது அவருக்கு.
 
“தெற்றியிலே நான் பசித்துப் படுத்திளைத்த தருணம்
திருஅமுதோர் திருக்கரத்தே திகழ்வள்ளத்தெடுத்தே
ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றெனையங்கெழுப்பி
உவந்து கொடுத்தருளிய என் உயிரிக்கிதாந்தாயே

 

மற்றொருநாள் திருஒற்றியூரிலே இரவு அர்த்தஜாம வழிபாடு முடிந்து திரும்பும்வேளையில் வானம் கருத்து பாதை தெரியாத அளவிற்கு இருள் சூழ்ந்திருக்கவே அடிகளார் தாமும், தம்முடன் வந்த நண்பர்களும் கோயிலின் மகாமண்டபத்தில் தங்கிச் செல்லலாம் என யோசனை சொல்ல அனைவரும் ஒப்புக் கொண்டனர். மகாமண்டபத்திற்குச் சென்று அங்கே படுத்துக் கொண்டனர் அனைவரும். ஆனால் யாருக்கும் தூக்கமே வரவில்லை. அனைவருக்குமே பசி வயிற்றைக் கிள்ளியது.  ராமலிங்க அடிகள் மட்டுமே தூங்க ஆரம்பித்தார். அப்போது நண்பர்கள் அனைவரும் புரண்டு படுக்கும் ஓசை கேட்டுக் கண்விழித்து, என்ன முதலியாரே? உறங்கவில்லையா எனக் கேட்க, அவரோ பசி வயிற்றைக்கிள்ளுவதாய்க் கூறினார். தனக்கும் பசி இருப்பதாய் அடிகள் ஒப்புக் கொள்ள அனைவரும் சேர்ந்து திரு ஒற்றியூர் தியாகராஜப் பெருமானைத் தான் வேண்டிக்கொள்ளவேண்டும் என முடிவு செய்து கொண்டனர். அவ்விதமே அனைவரும் வேண்டிக் கொண்டனர்.
 
தியாகராஜப் பெருமான் தம் அடியார் பசி பொறுக்காமல் தவிக்க விடுவாரா? கோயிலின் தலைமை குருக்கள் போல் மாறி கையில் பிரசாதத்தட்டோடு சென்றவர் தற்செயலாய்ப் பார்த்தவர் போல் நடித்து அவர்கள் முன்னிலையில் வந்து நின்றார். அவர்கள் அனைவருமே கோயிலின் குருக்கள் என்றே நினைத்தனர். என்ன இன்னுமா வீட்டிற்குப் போகவில்லை என ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்ள, தலைமை குருக்களும் இவர்கள் பசியோடிருக்கும் நிலையைப் புரிந்துகொண்டாற்போல் தம்மிடமிருக்கும் பிரசாதங்களைக் கொடுத்தார்.  அனைவரும் வயிறார உண்டனர்.  ஆனாலும் சோமு செட்டியாருக்கோ சந்தேகமாகவே இருந்தது. அவர் முகத்தைப் பார்த்த ராமலிங்க அடிகள்  என்னவென்று கேட்க கோயிலின் தலைமை குருக்கள் இரண்டு நாளாக வரவில்லை என்றும், வெளியூர் சென்றிருப்பதாகவும் நாளைக்குக் கூட வருவது சந்தேகம் என்றும் கோயிலின் மற்ற குருக்கள் பேசிக் கொண்டதைக் கேட்டதாய்ச் சொன்னார். அப்படி எனில் வந்தவர் யார்?? தலைமை குருக்கள் இல்லையா???
அனைவருக்கும் தூக்கிவாரிப் போட்டது. ராமலிங்கம் அனைத்தையும் கேட்டுவிட்டு மெளனமாகக் கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்தார்.
 
அவர் கண்களில் ஐயன் உருவம் நன்கு தெரிந்தது. தலைமை குருக்களாக மாறிய ஐயன் மீண்டும் ஐயனாகவும் மாறவே வந்தது யார் எனப் புரிந்து கொண்ட அடிகள் வந்தது “தியாகராஜனே! ஒற்றியூர் மாமணியே!” என வியந்து போற்றிப் பாடல் ஒன்றை அக்கணமே புனைந்தார்.
 
“நான் பசித்தபோதெல்லாம் தான் பசித்ததாகி
நல் உணவு கொடுத்தென்னைச் செல்வம் உற வளர்த்தே
ஊன்பசித்த இளைப்பென்றும் தோற்றாத வகையே
ஒள்ளியதென் அமுதெனக்கிங்குவந்தளித்த ஒளியே.”

ராமலிங்க அடிகளின் பக்தியினாலும் அவரின் தவத்தாலும் தங்கள் அனைவருக்கும் கிடைத்த பெறர்கரிய பேறை எண்ணி எண்ணி அனைவரும் வியந்தனர். அடிகளாரின் வீட்டில் இதைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தனர். அடிகளாரின் அண்ணனுக்கும், அண்ணிக்குமே மிகவும் பெருமிதமாகவும் இருந்தன அனைத்தும். அடிகளாரின் பக்தியும் ஆன்மீக ஈடுபாடுகளும், புராணப் பிரசங்கங்களும் அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. ஆனால் அவர் தாயாருக்கோ தம் இளைய மகன் இத்தனை வயது ஆகியும் திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கை நடத்தவில்லையே என எண்ணி மனம் வருந்தினார். திருமணம் செய்விக்க வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ளும்படி ராமலிங்க அடிகளின் அண்ணனாகிய சபாபதிப்பிள்ளையை வேண்டினார்.
 
தன் தம்பி ராமலிங்கத்தின் மனப்போக்கை நன்கறிந்திருந்த சபாபதிப்பிள்ளை அவருக்கு இல்வாழ்க்கையில் நாட்டமில்லை என்பதையும் புரிந்து கொண்டிருந்தார். ஆனாலும் அவர் அன்னைக்கு இது சம்மதமாய் இல்லை. மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார். அவர் வற்புறுத்தலின் பேரில் அடிகளாரின் நண்பராகிய ஒரு துறவியின் மூலம் அடிகளாரின் சம்மதத்தைப் பெற்று அவருக்குத் திருமணமும் நடத்தினார்கள். கடும் முயற்சிக்கும், கடும் விவாதத்துக்கும் பின்னர் திருமணத்திற்குச்  சம்மதம் கொடுத்திருந்த  அடிகளாரின் மனமோ திருமணத்திலே ஈடுபடவே இல்லை.  என்றாலும் தாயின் மன அமைதிக்காகவும் திருஞானசம்பந்தரை மேற்கோள் காட்டியும் ராமலிங்க அடிகளைச் சம்மதம் கூற வைத்த துறவியாராலேயோ, அல்லது அடிகளாரின் அண்ணனாலேயே திருமணம் முடிந்த கையோடு திரு ஒற்றியூருக்குத் தன்னந்தனியாக வந்து வழிபாடு நடத்தி இறைவன் திரு உருவத்தின் முன்பு தாரை தாரையாகக் கண்ணீர் வடித்த ராமலிங்கத்தைத் தடுக்க முடியவில்லை. பெருமானிடம் முறையிட்ட வண்ணமே அடிகளார் பாடியதாவது:
 
“முனித்த வெவ்வினையோ நின்னருட் செயலோ
தெரிந்திலேன் மோகமேலின்றித்
தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள்
ஒருத்தியைக் கைதொடச் சார்ந்தேன்
குனித்த மற்றவரைத் தொட்டனன் அன்றிக்
கலப்பிலேன் மற்றிது குறித்தே
பனித்தனன் நினைத்த தோறும் உள் உடைந்தேன்
பகர்வதென் எந்தை நீ அறிவாய்!”
 
இவ்வாறு பாடி முடித்துவிட்டு வெடவெடத்த நடுக்கும் உடலோடு, ஆறாய்ப் பெருகிய வியர்வை வெள்ளத்தோடு  மகாமண்டபத்திற்கு வந்து தியானத்தில் அமர்ந்து சிவசிந்தையோடு தியானத்தில் ஆழ்ந்தார். தம்மை மறந்தார்.

 

திருமண பந்தத்தில் இருந்து அத்தோடு விடுபட்ட அடிகளார் இதன் பின்னர் ஒழிவில் ஒடுக்கம் என்னும் நூலைப் பதிப்பித்தார் . திருப்போரூர் சிதம்பர சுவாமிகளால் உரை செய்யப் பட்ட அந்த நூலைப் பதிப்பித்து சமய உலகுக்கு அடிகள் அளிக்கும்போது அவரின் வயது இருபத்தி எட்டே ஆகும்.  அந்த வயதிலேயே சிறந்த ஞான நூல்களைப் படித்து ஆராய்ந்து அவற்றைப் பதிப்பிக்கும் ஆற்றலும் பெற்றிருந்தார். இதன் பின்னர் சென்னையிலிருந்து சாஸ்திர விளக்கச் சங்கத்தைச் சேர்ந்தவர்களால் மனுநீதிச் சோழன் வரலாற்றை விவரித்து சிறுவர்கள் படிக்கும் வண்ணம் ஓர் உரைநடை நூல் எழுதும் பணி அடிகளிடம் ஒப்படைக்கப் பட்டது. அதையும் சிறப்பாக எழுதித் தந்தார் அடிகளார். பெரிய புராணத்தில் சேக்கிழார் எழுதி இருக்கும் மனுநீதிச் சோழனின் வரலாற்றை விவரித்து ,”மனுமுறை கண்ட வாசகம்” என்ற பெயரில் வள்ளலார் எழுதிய உரைநடை நூல் அனைவர் மனதையும் கவர்ந்தது. அதிலும் முக்கியமாக அதிலே மனுநீதிச் சோழன் தன் மகனின் செயலால் செங்கோல் வளைந்தது எனப்புலம்பி அழும் இடத்திலே, மனுநீதிச் சோழன் இதற்கெல்லாம் காரணம் தான் செய்த பாவம் எதுவோ எனப் புலம்பிப் பட்டியல் இடும் இடத்தில் அனைவரும் உண்மையாகவே வாய் விட்டு மனம் விட்டு அழும் வண்ணம் அடிகளாரின் எழுத்து அமைந்தது. அடிகளார் பட்டியலிட்ட பாவங்களில் சில கீழே;
 
“நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங்கெடுத்தேனோ!
தானங்கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சிநேகரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரியுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ்செய்தேனோ!
மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ்செய்தேனோ
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
ஆசை காட்டி மோசஞ்செய்தேனோ!
வரவு போக்கொழிய வழியடைத்தேனோ!
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!
இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!
கோள் சொல்லிக் குடும்பங்குலைத்தேனோ!
நட்டாற்றிற் கையை நழுவ விட்டேனோ!
கலங்கி யொளிதோரைக் காட்டிக் கொடுத்தேனோ!
கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!
கணவன் வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!
கருப்பமழித்துக் களித்திருந்தேனோ!”
 
வள்ளலார் இவற்றை எல்லாம் பாவம் எனக் கூறி இருப்பதில் இருந்து அக்கால வாழ்வு முறையின் நெறிகள் வலுவான அடிப்படைகளில் இயங்கிக் கொண்டிருந்ததைப் புரிந்து கொள்ளமுடிகிறது. இதை அடுத்து படிக்காசுப்புலவர் பாடியுள்ள  தொண்ட மண்டல சதகம் அடிகளாரால் பதிப்பிக்கப் பட்டது.  அதில் தொண்ட மண்டலம் என்பது சிலரால் தொண்டை மண்டலம் என வழங்கப் படுவது சரியல்ல என ஆணித்தரமாக மறுத்திருப்பார் அடிகளார்.  ஆதொண்டன் என்னும் மன்னனால் ஆளப்பட்ட இருபது காத எல்லை வட்டமான நாட்டின் வளப்பத்தைக் குறித்த நூறு செய்யுட்பாக்களால் ஆன அந்தப் பாடல்களை தொண்ட மண்டல சதகம் என்றே சொல்ல வேண்டும் என்றும் ஆதொண்டன் தன் ஆட்சிக் காலத்தில் கட்டிய கோயில்களில் அவன் பெயரும்  இலச்சினையும் இடம் பெற்றிருக்கும் கல்வெட்டுக்களும் காணப்படும் என்று உறுதியும் செய்தார். அந்தக் கோயில்கள் திருவலிதாயம், வடதிருமுல்லைவாயில் ஆகியன ஆகும். அந்தக் கோயில்களுக்கும் தம் அன்பர்களோடு சென்று தரிசனம் செய்து வரத் திருவுளம் கொண்டார் அடிகளார்.
 
திருவலிதாயம் கோயிலில் வலிதாயநாதரையும், தாயம்மையையும் வழிபடச் சென்றிருந்த போது வலிதாய நாதருக்குக் கந்தைத்துணி ஒன்றைச் சார்த்தி இருக்கவே அடிகளார் மனம் பதறித் துடித்தது.  ஈசன் யாருமற்றவனாய்ப் போய்விட்டானோ? அவனுக்கே கந்தைத் துணியா எனக் கதறியவண்ணம் உருகிய அடிகளாரின் நாவில் அந்நிகழ்ச்சி ஒரு பாடலாக உருப்பெற்றது.
 
“மெல்லிதாயவிரைமலர்ப்பாதனே
வல்லி தாயமருவிய நாதனே
புல்லிதாய இக்கந்தையைப் போர்த்தினால்
கல்லிதாய நெஞ்சம் கரைகின்றதே!’
என்று உள்ளம் கரைந்து சுவாமிகள் பாடிய பாடலைக் கேட்ட அங்கு தரிசனம் செய்ய வந்த அன்பர்கள் கோயிலின் தலைமை குருக்களிடம் சென்று விஷயத்தைச் சொல்ல, வந்திருப்பது அடிகளார் என்பது தெரிந்த குருக்கள் புத்தம்புதிய வஸ்திரத்தை எடுத்துக் கொண்டு ஓடோடி வந்து,  வலிதாய நாதருக்குப் புது வஸ்திரம் சார்த்தினார். 

 

 
இதன் பின்னர் அவரின் மனம் திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரரைத் தரிசிக்க ஆவல் கொண்டது. அதன்படியே சென்னையை விட்டுப் புறப்பட்டு திருமுல்லைவாயிலுக்கு வந்து சேர்ந்தார். முல்லைக்காடாக இருந்த இந்த இடத்தில்  தொண்ட நாட்டு மன்னன் ஒருவனால் முல்லைக்கொடிகளுக்கு அடியில் இருந்த சிவலிங்கம் கண்டு பிடிக்கப் பட்டதையும், மன்னன் காட்டை அழித்துக் கோயில் கட்டியதையும் தம் கூட வந்த நண்பர்களுக்குச் சொல்லி அருளினார். முல்லைக்கொடிகளை வெட்டும்போது இறைவனுக்கு வெட்டுப்பட்டுக் குருதி வந்ததாகவும், அதனால் இறைவனுக்கு வெட்டுத் தாங்கி ஈஸ்வரர் என்னும் பெயரும் உண்டென்றும் கூறினார் அடிகளார். மேலும் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் இந்தக்கோயில் மாசிலாமணீஸ்வரர் பேரில் ஒரு பதிகம் பாடி இருப்பதையும் சுட்டிக் காட்டினார். அடிகளாரும் பத்துப் பாடல்களைக் கொண்ட பதிகம் ஒன்றை அந்தத் தலம் மீது பாடி அருளினார்.

“தில்லை வாய்ந்த செழுங்கனியே திரு
முல்லை வாயில் முதல் சிவ மூர்த்தியே
தொல்லையேன் உன் தன் தூய்திருக்கோயிலின்
எல்லை சேர இன்றெத்தவம் செய்ததே”
என்று ஆரம்பித்துப் பத்துப் பாடல்கள் கொண்ட பதிகத்தைப் பாடினார் ஸ்வாமிகள்.
 
அங்கிருந்து அடுத்து அடிகள் சென்ற கோயில் “திரு எவ்வுள்” என்னும் திருவள்ளூர் ஆகும். அனைவருக்கும் ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம். முருக உபாசகர், சிவநேசச் செல்வர், தம்மையே சிவனின் குழந்தை யாம் எனக் கூறிக்கொள்பவர் திருமால் எழுந்தருளியுள்ள கோயிலுக்கு வந்திருக்கின்றாரே? வியப்புத் தான் அனைவருக்குமே. அப்போது அடிகளார் அரியும் சிவனும் ஒண்ணு என்னும் சொலவடையைக் குறிப்பிட்டு, ரூபம் வேறாயினும் தான் வழிபடும் ஈசனே இங்கும் இருப்பதாய்க் குறிப்பிட்டுச் சொன்னார். ஆழ்வார்கள் அழகுத் தமிழில் பாசுரங்கள் பாடித் துதித்ததையும் எடுத்துச் சொல்லி வீரராகவப் பெருமாளையும் தரிசனம் செய்து கொண்டு அவர் மேல் ஒரு பாடலையும் பாடினார்.
 
“தண்ணமர் மதிபோற்சாந்தந்தழைத்தசத்துவனே போற்றி
வண்ணமாமணியே போர்றி மணிவண்னத்தேவா போற்றி
அண்ணலே யெவ்வுளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி
விண்ணவர் முதல்வா போற்றி வீர ராகவனே போற்றி.”
 
இதன் பின்னர் அடிகளார் பதிப்பித்த மற்றொரு புத்தகம் சின்மய தீபிகை. இது விருத்தாசலம் குமாரதேவ சுவாமிகள் ஆதீனம் முத்தைய சுவாமிகளால் அருளப் பெற்றது.  இதற்குப் பின்னர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் நீதி நூலுக்குச் சாற்றுக்கவியும் எழுதிக் கொடுத்தார். பின்னர் “குடும்பகோஷம்” என்னும் நூலை  எழுதும்போது பத்தொன்பது படலங்களாக விவரித்து அடிகள் எழுதிய முறையைக் கவனித்த அவரது நண்பர் குழாம் தம் வரலாற்றையே வேறு பெயர்களை வைத்து அடிகள் எழுதுகின்றாரோ என்னும் ஐயம் கொண்டார்கள்.  அந்தக் கால கட்டத்தில் தான் சுவாமிகளுக்கு ஞான வாழ்க்கையைத் தேடிச் செல்லவேண்டுமானால் சென்னை வாசம் சரிப்பட்டு வராது என்னும் எண்ணம் ஏற்பட்டது. சென்னையை விட்டுவிட்டுத் தொலை தூரம் செல்லவேண்டும் என எண்ணினார்.

 

ஞான வாழ்க்கையின் தேடலில்!

 

 

ஒருநாள் காலையில் கோயில் மண்டபத்தில் அனைவரும் கூடி இருந்த வேளையில் தம் எண்ணத்தைச் சொல்ல விழைந்தார் அடிகளார். நண்பர்கள் அனைவருக்கும் அரசல் புரசலாக எற்கெனவே விஷயம் ஒருவாறு புரிந்திருந்தது. என்றாலும் இது உண்மையாய் இருக்கக் கூடாது என்றே அவர்கள் நினைத்தனர். அடிகளார் வந்தார். அனைவரையும் பார்த்தார். தம் அணுக்கத் தொண்டர்களான வீராசாமி முதலியார், சபாபதி முதலியார், திருவாவடுதுறை ஆதீன வித்வான், சோமு செட்டியார் போன்றவர்களை எல்லாம் பிரிந்து செல்லப் போவதாய் அறிவித்தார். அனைவருக்கும் தூக்கிவாரிப்போட்டது. வேலாயுத முதலியாரால் தாங்க முடியவில்லை. “எங்களால் முடியாதே ஸ்வாமி, துயரம் மேலிடுகிறதே? உம்மைப் பிரிந்து எவ்வாறு இருப்போம்? முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்.” என்று அனைவரின் சார்பாகவும் வேண்டினார். அடிகளார் சிலகாலமாகவே தமக்குச் சென்னையின் ஆரவார வாழ்க்கை வெறுத்துவிட்டதாகவும், அலங்கோலமாயும் ஆடம்பரமாயும் இருக்கும் இந்த வாழ்வை விட்டு விலகித் தொலைதூரம் செல்ல விரும்புவதாயும் கூறினார். அப்போவே அப்படி இருந்தால் இப்போ பார்த்தால் என்ன சொல்லுவாரோ? மேலும் குடும்பத்தாரோடும் தமக்குத் தங்கி இருக்கப் பிடிக்கவில்லை என்றும் தமிழ்ப் பண்டிதனாகவும் இருக்க விருப்பமில்லை என்றும் ஞான வாழ்க்கையைத் தேடிச் செல்லப் போவதாயும் அறிவித்தார்.
 
செல்லுமிடமானும் கூறும்படி அனைவரும் வற்புறுத்தவே அதன் பேரில் தாம் பிறந்த ஊரான மருதூருக்கு முதலில் செல்லப் போவதாயும், அங்கிருந்து அடுத்தடுத்த தலங்களில் வழிபாடுகள் செய்யப் போவதாயும் பின்னர் முடிவாய்த் தங்குமிடத்தைச் சிந்திக்கவேண்டுமென்றும் கூறினார்.  இந்தத் தல யாத்திரையில் தம்முடன் சிதம்பர சுவாமிகள், சடைச்சுவாமிகள், வீராசாமி நாயக்கர், வேலாயுத முதலியார் ஆகியோரை மட்டுமே அழைத்துச் செல்லப் போவதாயும் கூறினார். ரத்தின முதலியார், முடிந்தபோதெல்லாம் சென்னைக்கு வந்து போகும்படிக் கேட்டுக் கொள்ள முடிந்தால் வருவேன் என்று சுவாமிகள் சொன்னார். ஈசன் சித்தம் எப்படியோ அப்படி முடிந்தவரை முயற்சிப்பதாயும் கூறினார். பின்னர் நண்பர்கள் அனைவருக்கும் ஆசிகளை வழங்கி விடைபெற்று உடன் வருபவர்களை அழைத்துக் கொண்டு சென்னையை விட்டுப் புறப்பட்டார். வண்டிப்பாதையிலேயே சென்ற அடிகளார்  இடை இடையே இருந்த தலங்களைத் தரிசித்துக் கொண்டு பாண்டிச்சேரிக்கு வந்து சில நாட்கள் தங்கிவிட்டுப் பின்னர் தான் பிறந்த  ஊரான மருதூருக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கே ஈசன் சிவயோகியாக வந்து நடந்து ஆரூடம் சொன்ன அந்தத் திருவீதியில் நடக்கும்போதே மெய் சிலிர்த்தது அடிகளாருக்கு. அங்கே இருந்த ஊர் மக்களிடம் தாம் பிறந்த வீட்டை விசாரித்தறிந்தார். வீடு இப்போது வேறொருவருக்குச் சொந்தமாகி இருந்தது. என்றாலும் உள்ளே அனுமதிக்கப் பட்டு தாம் பிறந்த வீட்டைக் கண்டு களித்து மெய்ம்மறந்து பின்னர் அங்கிருந்து கிளம்பி தற்போது வைத்தீசுவரன் கோயில் என்று அழைக்கப் படும் புள்ளிருக்குவேளூரை அடைந்து, அங்கேயும் தரிசனம் செய்து கொண்டார். தலத்தில் முருகனுக்கு உள்ள தனிச்சிறப்பை எடுத்துரைத்த அடிகளார் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்கும் முறையையும் விளக்கிச் சொல்லி இருக்கிறார்.
 
செவ்வாய்க்கிழமை விரதம் இருக்கும் முறை:
 
திங்கள் அன்று இரவில் பலகாரம் செய்து, செவ்வாயன்று சூரியன் உதிக்கும் முன்னேயே எழுந்து, இறை உணர்வோடு அங்க சுத்தி,, தந்த சுத்தி செய்து, திருநீறு அணிந்து கொண்டு, நல்ல நீரில் குளித்து, விபூதியை நீரில் குழைத்து அவரவர் வழக்கப்படி தரித்துக் கொள்ளவேண்டும். கணபதியை நினைத்து முதலில் வணங்கிவிட்டுப் பின்னர் ஐந்தெழுத்தான சிவ பஞ்சாக்ஷரத்தை நூற்றெட்டு முறை ஜபிக்கவேண்டும். சிவனையே நினைத்து தியானம் செய்யவேண்டும். எழுந்து வாயிலுக்கு வந்து உதயமாகி இருக்கும் சூரியனைப் பார்த்து “ஓம் சிவ சூரியாய நம” என்று சொல்லி சூரிய நமஸ்காரம் செய்து பின்னர் அங்கேயே நின்றுகொண்டு, கோரிக்கைகளை மனதில் நினைத்து முடித்துக் கொடுக்கவேண்டுமென ஸ்ரீவைத்திய நாதரையும், தையல் நாயகியையும் வேண்டிக்கொள்ளவேண்டும். பின்னர் “ஓம் வைத்தியநாதாய நம” என்று நூற்றெட்டு அல்லது ஆயிரத்தெட்டு முறை ஜபித்துவிட்டுப் பின்னர் ஒரு பலம் மிளகு எடுத்துக் கொண்டு துண்டிலோ, அல்லது ஒரு துணியிலோ  முடிந்து கொண்டு வைத்தியலிங்கார்ப்பணம் என்று சொல்லி அதைத் தனியாக ஓர் இடத்தில் வைக்கவேண்டும். சிவனடியார் எவரேனும் வருகின்றாரா எனப் பார்த்து அவரை அழைத்து சகலவிதமான உபசாரங்களோடு அமுது செய்வித்து அனுப்பவேண்டும். பின்னர் தாம் பச்சரிப்பொங்கல் மட்டும் அரையாகாரம் செய்யவேண்டும். அன்று மாலையில் சிவ தரிசனம் செய்யவேண்டும். இரவு படுக்கும்போது பாயிலோ அல்லது சயனக்கொட்டையிலோ படுக்காமல் மெழுகிய தரையில் கம்பளம் விரித்துப் படுக்க வேண்டும். சிவ சரித்திரம் கேட்கவேண்டும்.  வாசனாதித் திரவியங்கள், சந்தனம், புஷ்பம், தாம்பூலம், சுகம், பெருந்தூக்கம் போன்றவையை விட்டுவிடவேண்டும். இதுதான் செவ்வாய்க்கிழமை விரதமுறை என்று அனைவருக்கும் விரதம் இருக்கும் முறையைக் கற்றுத் தந்தார் அடிகளார்.
 
பின்னர் அங்கிருந்து செல்லக் கிளம்பியவரை வைத்தீசுவரன் கோயிலின் கட்டளைத் தம்பிரான் எதிர்கொண்டு அழைத்துச் சென்று சுவாமிகளை வைத்தியநாதரை மீண்டும் தரிசனம் செய்ய வைத்து வைத்தியநாதர் மீது பதிகங்கள் பாடி அருளவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
 
“இளவேனில் மாலையாய்க் குளிர்சோலை யாய்மலர்
இலஞ்சிபூம் பொய்கையருகாய்
ஏற்றசந் திரகாந்த மேடையா யதன்மேல்
இலங்குமர மியவணையுமாய்த்
தளவேயு மல்லிகைப் பந்தராய்ப் பால்போற்
றழைத்திடு நிலாக்காலமாய்த்
தனியிளந் தென்ரலாய் நிறை நரம் புளவீணை
தன்னிசைப் பாடலிடமாய்
களவேக லந்தகற் புடையமட வரல்புடை
கலந்த நய வார்த்தையுடனாய்க்
களிகொள இருந்தவர்கள் கண்டசுக நின்னடி
கழனிழற் சுகநிகருமே
வளவேலை சூழுலகு புகழ்கின்ற தவசிககா
மணியுலக நாதவள்ளல்
மகிழவரு வேளூரி லன்பர்பவ ரோகமற
வளர் வைத்தியநாதனே.”
 
இதன் பின்னர் சுவாமிகள் அங்கிருந்து திருவாரூருக்குச் சென்றார். அங்கே பத்துப் பாடல்களைக் கொண்ட திரு ஆரூர்ப்பதிகமும் பாடினார். அங்கிருந்து வைணவத் தலமான திருக்கண்ணமங்கை வந்தடைந்து,  அபிஷேகவல்லியையும், பெருமாளையும் சேவித்துவிட்டு அங்கே இருக்கும் சிற்ப அற்புதங்களையும் கண்டு மகிழ்ந்துவிட்டுச் சிதம்பரம் நோக்கிச் சென்றார்.  சிதம்பரத்தின் அனைத்துச் சிறப்புக்களையும் பட்டியலிட்டு நண்பர்களுக்கு விளக்கிய அடிகள் நடராஜர் சந்நிதிக்கு வந்து தீப ஆராதனையைக் கண் குளிரக் கண்டு மகிழ்ந்தார். தம் சிறு வயதிலேயே, பால் உண்ணும் பருவத்திலேயே சிதம்பர ரகசியம் இதுவெனத் தமக்குக் காட்டித் தந்த இறைவன் இவனே எனப் போற்றிப் பாடினார் அடிகளார்.
 
“தாய்முதலோரொடு சிறிய பருவமதில் தில்லைத்
தலத்திடையே திரைதூக்கத் தரிசித்தபோது
வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்
வெளியாகக் காட்டிய என் மெய் உறவாம் பொருளே
காய்வகை இல்லாதுளத்தே கனிந்த நறுங்கனியே
கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியா களிப்பே
தூய்வகையோர் போற்றமணி மன்றில் நடம்புரியும்
சோதி நடத்தரசே என் சொல்லும் அணிந்தருளே!”

 

சீடனைக் கண்டுபிடித்த குரு

  

சிதம்பரத்திலே அம்மையையும், அப்பனையும் கண்டு மகிழ்ந்த வள்ளலார் சிவகாமி அம்மையின் மேல் பத்துப் பதிகங்கள் கொண்ட, “அம்மை திருப்பதிகம்” பாடி அருளினார். அங்கேயே ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து அனைவரும் ஓய்வு எடுத்துக்கொண்ட வேளையில் பண்ணையார் போன்ற தோற்றமளிக்கும் ஒருவர் அவர்களிடம் வந்தார். வள்ளலாரைக் கண்டதும் பணிவோடு வணங்கி நின்றார். அவரிடம் வள்ளலார் அவர் வந்த காரியம் என்ன என வினவ, அவரும், தாம், அருகிலுள்ள வடலூர் என்னும் ஊருக்கருகே உள்ள கருங்குழி என்னும் கிராமத்து மணியக்காரர் என்றும், தம் பெயர், வேங்கட ரெட்டியார் என்றும் தெரிவித்தார். மேலும், வள்ளலாரைப் பற்றி நிறையக் கேட்டிருப்பதாகவும், அவரைத் தம் இல்லத்திற்கு அழைத்துச் செல்லவே அங்கே வந்திருப்பதாகவும், வள்ளலார் வர இசைவு தெரிவிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டு நின்றார்.  அப்போது வள்ளலார், தாமும் அங்கே அருகில் உள்ள கிராமங்கள் எதிலாவது தங்கிக்கொண்டு அடிக்கடி சிதம்பரம் வந்து ஆடல்வல்லானைத் தரிசிக்க நினைத்ததாகவும், கருங்குழிக்கு  வேங்கட ரெட்டியாரோடு வர ஆக்ஷேபணை எதுவும் இல்லை என்றாலும் தம்முடன் கூட நான்கைந்து சீடர்களும் வந்திருப்பதால் அவர்களைத் தனியே விட்டுத் தாம் மட்டும் வரமுடியாது எனத் தெரிவித்தார். ஆனால் வேங்கட ரெட்டியாரோ அனைவருமே வரலாம் எனக் கூறி, அனைவருக்குமே அழைப்பும் விடுத்தார்.

 

ஆனால் அவர்களோடு வந்திருந்த வேலாயுத முதலியாருக்குத் தாம் இங்கே வந்து பலநாட்கள் ஆகிவிட்டபடியால், இன்னமும் இங்கே இருக்க முடியாது என்றும், மேலும் தாம் வள்ளலாரோடு தங்கினால் அவருடைய ஞான வாழ்க்கைக்குத் தனிமை கிட்டாது என்றும் கூறினார். வள்ளலாரும் யோசித்து அவர்கள் விருப்பத்துக்கு உடன்பட, சென்னையிலிருந்து வந்த அன்பர்களும், வழியில் அவர்களோடு சேர்ந்து கொண்டவர்களும் வள்ளலாரை விட்டுப் பிரிந்தனர்.  அவர்களுக்கு அன்போடு விடை கொடுத்து அனுப்பிய வள்ளலார், வேங்கட ரெட்டியாரைப் பார்த்துத் தாம் கிளம்பும் முன்னர் தமக்குத் தனி அறை கிடைக்குமா என நிச்சயம் செய்துகொள்ள விரும்புவதாய்க் கூற, அவ்வாறே தனி அறை ஏற்பாடு செய்து தருவதாய் வேங்கட ரெட்டியார் உறுதி அளித்தார். இருவரும் சிதம்பரத்திலிருந்து கிளம்பி கருங்குழியை வந்தடைந்தார்கள்.  கருங்குழியில் தமது பரம்பரை நடத்தி வந்த விநாயகர் கோயிலுக்கு முதலில் வள்ளலாரை அழைத்துச் சென்றார் வேங்கட ரெட்டியார். அங்கே குருக்கள் வள்ளலாரைக் கண்டதும் அவர் யார் எனத் தெரிந்து கொண்டு மனமகிழ்வோடு வழிபாடுகள் நடத்திக் கொடுத்தார். வள்ளலார் அந்த விநாயகர் மேல் “கணேசத் திரு அருள் மாலை” என்னும் பத்துப் பதிகம் பாடி அருளினார். பின்னர் இருவரும் வேங்கட ரெட்டியாரின் வீடு நோக்கிச் சென்றனர். ரெட்டியாரின் மனைவியின் பெயர் முத்தியாலு என்பதாகும். அந்த அம்மையார் வள்ளலாரின் வரவால் மகிழ்ச்சி அடைந்தாள்.

 
அறையை முத்தியாலு அம்மையார் தயார் செய்து வைத்திருந்தார். அங்கே அவர் தங்குவதற்கு வசதியாக அனைத்து ஏற்பாடுகளையும் அம்மையார் செய்து வைத்திருந்தார். அன்றிலிருந்து வள்ளலாரின் கருங்குழி வாசம் தொடங்கியது. இங்கே இருக்கும்போதே “திரு அருட்பா” எழுதப் பட்டது. மேலும் தல தரிசனங்களும் தொடர்ந்தன. திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாசலம், திருவதிகை வீரட்டானம், திருவண்ணாமலை ஆகிய இடங்களைத் தரிசித்துக்கொண்டு மீண்டும் கருங்குழிக்கு வந்த வள்ளலாரைக் காண அவர் அண்ணாவான சபாபதிப்பிள்ளை வந்திருந்தார். அவரிடம் வீட்டில் அனைவரின் க்ஷேமலாபங்களைக் கேட்டறிந்த வள்ளலார் தம் அண்ணியார் தேக அசெளக்கியத்தைக் குறித்தும், வள்ளலாரைப் பிரிந்ததால் அவருக்கு ஏற்பட்ட மனவருத்தத்தைக் குறித்தும் அண்ணன் சொல்லக் கேட்டு வருந்தினார். தமையனைத் தேற்றினார். பின்னர் அண்ணனோடு அருகே இருந்த குறிஞ்சிப்பாடி விழப்பள்ளம் சிங்கபுரி கந்தர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். அங்கே சுப்பராய சுவாமிகள், கோல சுவாமிகள் இருவரையும் கண்டு தரிசித்தார். அவர்கள் இருவரிடமும் தன் அண்ணன் குடும்பத்தின் நலனுக்காகப் பிரார்த்தித்து ஆசிகளை வேண்டினார்.  அண்ணன் திரும்ப ஊருக்குச் சென்றார். வள்ளலாரோ தமக்காக ஒரு சீடர் காத்திருப்பதை ஞான திருஷ்டியால் உணர்ந்து அவரைத் தேடிச் சென்றார்.

 

சமரச சன்மார்க்க சங்கம்!

 

மீண்டும் தில்லை சென்ற ராமலிங்க அடிகளுக்குத் தான் சிறு வயது முதல் தில்லைக்கு வந்ததும், நடனசபாபதியின் பேரருளும், அவரின் ஆநந்தத் தாண்டவத்தையும் , சிறு குழந்தையாய் இருந்தபோதே தனக்கு ஈசன் காட்டித் தந்து அருளியதும் நினைவில் மோதியது. பெருமான் நிகழ்த்திய செயல்கள் அனைத்தும் அவருக்குக் கண் முன்னால் தோன்றின. ஈசன் சிறு குழந்தையாய் இருந்த தனக்கு ஆநந்தத் தாண்டவத்தைக் காட்டி அருளியதோடு அல்லாமல், அம்பலவாயிலில் திருவருளை நினைந்து அழுது நின்ற தன்னை, அருள்மொழி கூறித் தேற்றிச் சிலம்பொலி கேட்கும் வண்ணம், வந்து ஞாநயோக அநுபவங்களை அருளியதும், ஸ்பரிச தீக்ஷை, வாசக தீக்ஷை, திருவடி தீக்ஷை ஆகிய தீக்ஷைகளைத் தமக்கு முறைப்படி அருளியதும் நினைவில் மோதின.  மேலும் அம்பலத் திருவாயிலில் ஈசன் தம்மோடு கலந்து தன்னை இறவாநிலை பெற்று வாழப் பணித்ததையும், இனி பிரிய மாட்டோம் என வாக்கு அளித்ததையும் நினைவு கூர்ந்து கண்ணீர் சிந்தினார். அவற்றை எல்லாம் குறிக்கும் வண்ணம் ஓர் அற்புதப் பாடலையும் புனைந்தார்.
 
“கருவிற் கலந்த துணையே என்
கனிவில் கலந்த அமுதேஎன்
கண்ணிற் கலந்த ஒளியே என்
கருத்தில் கலந்த களிப்பேஎன்
உருவிற் கலந்த சுகமேஎன்
னுடைய ஒருமைப்பெருமானே
தெருவில் கலந்து விளையாடுஞ்
சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான
சித்தி அளித்த பெருங்கருணைத்
தேவே உலகத் திரளெல்லாம்
மருவி கலந்து வாழ்வதற்கு
வாய்த்த தருணம் இது என்றே
வாயே பறையாய் அறைகின்றேன்.
எந்தாய் கருணை வலத்தாலே”
 
என்று பாடிக்கொண்டே, “திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம்” என உருகி தொழுதார். கருங்குழியில் வேங்கட ரெட்டியார் வீட்டில் அமர்ந்திருந்த அடிகளைத் தேடிக்கொண்டு ஸ்ரீநிவாச வரதாசாரியார் என்பவர் வந்தார். திருவஹீந்திரபுரம் சென்றதாயும் கோயில் வைபவங்கள் இப்போதெல்லாம் சிறப்பாக நடைபெறுவதில்லை எனவும் கோயில்களில் ஆரவாரம் அதிகமாகிவிட்டதாயும், அதிகாரிகளுக்கும், செல்வந்தர்களுக்குமே முன்னுரிமை கொடுப்பதாயும் வருந்தினார். அடிகளாரும் ஆமோதித்தார். திருத்தலங்களில் தங்குவதற்கு முன்னைவிட இப்போது வசதிகள் குறைவாகவும், மனநிம்மதியுடன் தரிசிக்க முடிவதில்லை எனவும் ஒத்துக்கொண்டார். அப்போது தங்கள் பிள்ளைகளுக்குப் படிப்பு வரவில்லை என எண்ணி வருந்தி ஏங்கிய பெற்றோர்களிடம் கலைமகல் வாழ்த்தைக் கொடுத்து அதைப் பாராயணம் செய்யும்படி சொன்னார்.

“கலைபயின்ற உளத்தினிக்கும்கரும்பினைமுக்
கனியை அருட்கடலை ஓங்கும்
நிலபயின்ர முனிவரரும் தொழுதேத்த
நான்முகனார் நீண்ட நாவின்
தலைபயின்ற மறை பயின்று மூவுலகும்
காக்கின்ற தாயை வாகைச்
சிலை பயின்ற நுதலாளைக் கலைவாணி
அம்மையை நாம் சிந்திப்போமே.”
 
இம்மாதிரி மூன்று பாடல்களை எழுதிக் கொடுத்து அனுப்பி வைத்தார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஸ்ரீநிவாச வரதாசாரியார் ஸ்ரீராமன் மேலும் பதிகங்கள் பாடித் தரும்படி விண்ணப்பிக்க அவ்வாறே பத்துப் பாசுரங்கள் பாடிக் கொடுத்தார். அடிகளாரின் தகவல்கள் அவ்வப்போது கிடைக்கப் பெற்ற அவருடைய நண்பர்கள் வேலு முதலியார், வீராசாமி நாயக்கர், ரத்தினமுதலியார் போன்றவர்கள், சிதம்பரம் நடராஜரின் மேல் அடிகளார் தொத்திர மாலைகளும், சாத்திரமாலைகளுமாக சுமார் இருநூறு பாடி இருப்பதையும், தேவார நால்வர் ஆன ஞானசம்பந்தர், நாவுக்கரசர், மாணிக்கவாசகர், சுந்தரர் ஆகியோரின் பக்தியைப் போற்றி ஆளுடைய பிள்ளையார் அருள்மாலை, ஆளுடைய அரசுகள் அருள்மாலை, ஆளுடைய நம்பிகள் அருள் மாலை, ஆளுடைய அடிகள் அருள்மாலை போன்ற நான்கு பாமாலைகளும் பாடியதாகவும் மனமகிழ்வோடும், பெருமையோடும் பேசிக்கொண்டனர்.  நண்பர்களுக்கு அடிகளைக் காணவேண்டும் என்ற அவா உந்த, கருங்குழிக்குப் புறப்பட்டுச் செல்ல முடிவெடுத்தனர்.
 
கருங்குழியில் களத்து மேடு. வருடம் 1865. தொழுவூர் வேலாயுத முதலியார், கல்பட்டு ஐயா, வேங்கட ரெட்டியார் ஆகியோர் பணிவுடன் நின்றிருக்க ராமலிங்க அடிகளார் வீற்றிருந்தார். எப்போதும் இல்லாத மகிழ்வோடும், ஆநந்தத்தோடும் முகமும் உடலும் பிரகாசிக்க அடிகளார், தாம் கண்டறிந்த உண்மைகளை நடைமுறைப்படுத்துவதற்காக, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்” என்ற ஒன்றை நிறுவி இருப்பதாய்த் தெரிவித்தார். மேலும் அதைப் பற்றி விவரித்தார் அடிகளார். முன்னோர்கள் வகுத்த நான்கு மார்க்கங்கள் :

  • தாசமார்க்கம், இது இறைவனுக்கே அடிமையாதலைக் குறிக்கும் எனவும்
  • சற்புத்திரமார்க்கம், இறைவனுக்கு நல்ல மகனாதலைக் குறிக்கும் எனவும்
  • சகமார்க்கம் இறைவனுடன் நண்பனாய்ப் பழகுதலைக்குறிக்கும் எனவும்
  • சன்மார்க்கம் என்பது இறைவனுடன் ஒன்றி அவனே தானாதலைக்குறிக்கும் எனவும்

விளக்கிச் சொன்னார்.

இந்தக் கருத்தையே பெரும்பாலும் ஆன்றோர்கள் கூறி வருவதாயும் தம் கருத்து இதனின்று வேறுபடுவதாயும் கூறினார் அடிகளார். அனைவரும் ஆச்சரியத்துடன் நோக்க அடிகளார் விளக்க ஆரம்பித்தார்.

  • தாசமார்க்கம் என்பது எல்லா உயிர்களையும் தன் அடிமைகளாய்ப்பாவித்தல் என்றும்
  • எல்லா உயிர்களையும் தன் மகனாய்ப் பார்த்தல் சற்புத்திரமார்க்கம் என்றும்
  • எல்லா உயிர்களையும் தன் நண்பனாய்ப் பார்த்தல் சக மார்க்கம் என்றும்
  • எல்லா உயிர்களையும் தன்னைப் போல் பாவித்தலே சன்மார்க்கம் எனவும்,

இதுவே ஜீவ நியாயம் எனவும் எடுத்துக் கூறினார். இவை நான்கிலும் சன்மார்க்கமே சிறந்தது எனவும், மற்ற மூன்றும் சன்மார்க்கத்தை நோக்கிச் செலுத்தும் படிகளே என்றும் கூறினார். சன்மார்க்கமே கடைசியில் பரமுத்தியைத் தரும் வல்லமை பெற்றது எனவும் கூறினார். சன்மார்க்கமே  இறவாநிலை தரும் எனவும், இறவாநிலை பெற்றவனே சன்மார்க்கி எனவும் கூறினார்.

 

வள்ளலாரின் சீடர்களில் ஒருவரான கல்பட்டு ஐயா உடனே, வள்ளலாரிடம், “சுவாமி, சமரச சுத்த சன்மார்க்கத்தின் வழிமுறைகளும், கொள்கைகளும் என்ன என்று தெரிந்தால் நாங்கள் அதன்படியே நடப்போம்,” என்று கூற, அடிகளாரும் மிகவும் எளிய கொள்கைகளே அவை என்று கூறிவிட்டு ஒவ்வொன்றாய்க் கூறலானார்.
 
“இறைவன் ஒருவரே!  ஒருவனாகிய இறைவனை நம் உண்மையான அன்போடு ஒளிவடிவில்  வழிபட்டு வரவேண்டும்.  இந்த ஒரே இறைவனை ஒளிவடிவில் வழிபடுவது தவிர மற்றச் சிறுதெய்வங்கள் வழிபாடு கூடாது.  உயிர்ப்பலியும் கூடாது.  புலால் உண்ணுவதையும் தவிர்க்கவேண்டும்.  சாதிவேறுபாடுகளோ, சமய வேறுபாடுகளோ காட்டி ஒருவரை மற்றவர் தாழ்த்தக் கூடாது.  அனைத்து உயிர்களும் நம் உயிர் போல் கண்ணுக்குக் கண்ணாகக் கருத வேண்டும்.  ஏழைகளின் பசி அறிந்து அவர்கள் பசியைப் போக்குதலே முக்கியக் கடமையாகக் கொள்ளவேண்டும்.  புராணங்களும், சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்காது.  இறந்தவரைப் புதைக்கவேண்டும்.  அவர்களுக்கான ஈமச் சடங்குகளையும் தவிர்த்தல் நன்று.  இக்கொள்கைகளைப் பின்பற்றவும் இவற்றைப் பரப்பவுமே இந்த சுத்த சமரச சன்மார்க்கநெறியை உங்கள் அனைவரின் உதவியோடு கடைப்பிடிக்கவுமே, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தையும் நிறுவி இருக்கிறேன்.  இறைவன் என்னை மனிதனாகப் பிறப்படைய வைத்ததின் காரணமும் இதுதான்.”  என்றார்.
 
“அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்
திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க
சங்கத் தடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்
திடுதற்கென்றே எனை இந்த
உகத்தே இறைவன் வருவிக்க
உற்றேன் அருளைப் பெற்றேனே”
 என்ற பாடலைப் பாடிய வள்ளலார், இந்த சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்து உய்வடையும்படி அனைவரையும் அழைப்பதாயும் கூறியதோடு, இந்த மார்க்கத்தைப்பின்பற்றுவதால் ஏற்படும் பயனையும் கூறினார்.
 
“மார்க்கம் எலாம் ஒன்றாகும் மாநிலத்தீர் வாய்மை இது
தூக்கம் எலாம் நீக்கித் துணிந்துளத்தே-ஏக்கம்விட்டுச்
சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின் சத்தியம் நீர்
நன்மார்க்கம் சேர்வீர் இந்நாள்.”
அனைவருக்கும் ஆசி வழங்கிய வள்ளலார் புறப்பட அவருடைய அணுக்கத் தொண்டர்களான வேலாயுத முதலியார், கல்பட்டு ஐயா, வேங்கட ரெட்டியார் ஆகியோர் அவரைத் தொடர்ந்தனர். 
 
கடலூர்.  பங்குனி உத்திரம் கிண்ணித் தேர் உற்சவம் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.  அப்பாசாமிச் செட்டியார் என்பவரது வீட்டில் நண்பர்கள் கூடி இருந்தனர்.  புதுவையைச் சேர்ந்த உறையூர் துரைசாமிப் பிள்ளை என்பவர் செட்டியாரிடம் அவர் தமையனாரின் நாக்குப் புற்றுநோய் பற்றி விசாரித்தார், இப்போது எப்படி இருக்கிறார் என்றும் கேட்டார்.  அப்பாசாமிச் செட்டியார் எவ்வளவு வைத்தியம் பார்த்தும் சரியாகவில்லை என்றும் சொல்லிக் கொண்டிருந்தபோது, அப்படியே விட்டு விடாதீர்கள், வேறு வைத்தியம் பாருங்கள் என்று துரைசாமிப் பிள்ளை குறுக்கிட்டார்.  அப்பாசாமிச் செட்டியார், அப்படியே விடவில்லை என்றும் கருங்குழியில் உள்ள அருட்சித்தரிடம் கொண்டு காட்டியதாகவும் கூறினார்.
 
துரைசாமிப் பிள்ளைக்கு ஆச்சரியம் மேலிட, “இராமலிங்க அடிகளாரையா சொல்கிறீர்?” என்று கேட்க,”ஆம், அவரை உமக்குத் தெரியுமா?” என்று செட்டியார் வினவ, தாமும் சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்தவரே எனப் பிள்ளை தெரிவித்தார்.  பின்னர் செட்டியார் தம் தமையனாரைக் கருங்குழிக்கு அழைத்துச் சென்றதாயும் அடிகளார் தமையனாரிடம் மூன்று வேளை பூசிக்கொள்ளவும், உட்கொள்ளவும் திருநீறு கொடுத்ததாயும், அவ்வாறே செய்ததில் முற்றிலும் குணமாகிவிட்டதாயும் கூறினார்.  அது சமயம் அப்பாசாமிச் செட்டியாரின் தமையனாரே அங்கே வர, அவைடமே துரைசாமிப் பிள்ளை விசாரித்தார்.  அவரும் அடிகளார் செய்த அற்புதத்தைக் கூறிவிட்டுத் தம்பிடம், “அடிகளார் உள்ளே இருக்கிறாரா?” என்று வினவ, பிள்ளையவர்கள், அடிகளார் வந்திருக்கும் செய்தியைக் கூறவே இல்லையே என வருந்தினார்.  அப்பாசாமிச் செட்டியார், தான் நேரிலே சென்று அடிகளாரைக் கிண்ணித் தேர் விழாவுக்காக அழைத்து வந்ததாயும், சுவாமிகள் ஏகாந்தத்தில் திளைத்திருப்பதால் அவருக்கு இடையூறு செய்யக் கூடாது என்ற எண்ணத்தினாலேயே கூறவில்லை என்றும் கூறினார். 

அடிகளார் ஏகாந்த்த்தை விட்டுவிட்டு நம்மை அழைக்கும் வரை காத்திருப்போம் என அனைவரும் முடிவெடுக்க, அப்போது புதிய மனிதர் ஒருவர் வெகுவேகமாய் அவர்களைக் கடந்து உள்ளே சென்றார். அனைவரும் ஆச்சரியமாய்ப் பார்த்தனர்.  வந்தவரின் ஒளி வீசும் தோற்றத்தைக் குறித்து அனைவரும் வியந்து பேசிக்கொள்ள, உள்ளே சென்று பார்க்கலாம் என முடிவெடுத்தனர்.

 

கடலூர் நகரில் பங்குனி உத்திரக் கிண்ணித் தேர் உற்சவம் நடந்து கொண்டிருந்தது.  அதை முன்னிட்டு தேரடிக்கு அருகில் உள்ள அப்பாசாமி செட்டியார் வீட்டுக்கு வந்தவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.  அப்போது இராமலிங்கஸ்வாமிகளின் சித்துத் தன்மை பற்றி அனைவரும் வியந்து பேச துரைசாமி பிள்ளை தானும் சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்தவர் என்று கூறினார்.  அப்பாசாமி செட்டியாரின் தமையனாருக்கு வந்திருந்த புற்று நோயை ஸ்வாமிகள் திருநீறு கொடுத்துக் குணப்படுத்தியதையும் பற்றி அனைவரும் வியந்து பேச, அப்போது அங்கே வந்த அப்பாசாமி செட்டியாரின் தமையனாரான ராமசாமி செட்டியார் ஸ்வாமிகளைப் பார்க்க வேண்டும் என்று தம்பியிடம் கேட்க, அனைவரும் ஸ்வாமிகள் வந்திருப்பதை இதுகாறும் ஏன் சொல்லவில்லை என்று அப்பாசாமிச் செட்டியாரிடம் கேட்கின்றனர்.  ஸ்வாமிகளின் ஏகாந்தத்துக்கு இடஞ்சல் விளைவிக்கக் கூடாது என்ற எண்ணத்திலே சொல்லவில்லை என்று அப்பாசாமி செட்டியார் மறுமொழிகூறினார்.   அப்போது அங்கே எங்கிருந்தோ புதிய மனிதர் ஒருவர் வேகமாய் வந்தார்.  அவருடைய முகத்து ஒளி அனைவரையும் கவர்ந்தது.  இதற்கு முன்னால் இவரைப் பார்த்ததே இல்லையே என அனைவரும் வியந்து பேசிக்கொண்டிருந்தனர்.  குழப்பம் மேலிட அனைவரும் பேசிக்கொண்டு வந்தவர் யாராயிருக்க முடியும்?? வீட்டுக்குள் போய் ஸ்வாமிகளைக் கேட்கலாமா வேண்டாமா என ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். 

 

இராமசாமி செட்டியார் உள்ளே போனவர் ஸ்வாமிகளின் ஏகாந்தத்தைக் கலைத்துப் பேசிக்கொண்டிருப்பாராகையால் நாமும் போய் என்னவென்று பார்க்கலாம் என்று கூற அனைவரும் உடன்பட்டு உள்ளே சென்றனர்.  அங்கே ராமலிங்க அடிகளின் எதிரே ஒரு பெரிய லட்டு மட்டும் இருந்தது.  மனிதர் எவரையும் காணோம்.  அனைவரும் திகைப்போடு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.  ஆவலை அடக்க முடியாமல் ஸ்வாமிகளிடமே எவரோ வந்திருந்தார்களே எனக் கேட்க, அடிகளும் ஒரு சித்தர் வந்துவிட்டுச் சென்றதாகவும், அவர் காசிக்குப் போகவேண்டும் என்பதால் உடனே சென்றுவிட்டதாயும் இந்நேரம் காசியில் இருப்பார் என்றும் கூறிவிட்டு அவர் கொடுத்தது தான் இந்த லட்டு என்றும் கூறினார்.  அனைவருக்கும் மீண்டும் இந்தச் செய்தி ஆச்சரியத்தையே கொடுத்தது.   அற்புதமான நிகழ்வு என ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள, அடிகள் அனைவரையும் பார்த்துச் சிரித்து, விண்ணில் செல்லும் வல்லமை பெற்ற சித்தர் ஒருவர் வந்து தன்னைக் கண்டு சென்றதாகவும், இது ஆண்டவன் திருவிளையாடல்களில் ஒன்றெனவும், லட்டைத் தான் சிறிது எடுத்துக்கொண்டு அனைவருக்கும் தருவதாயும்  கூறிவிட்டுத் தான் சிறிதளவு எடுத்துக்கொண்டு மீதியை அப்பாசாமி செட்டியாரிடம் கொடுத்தார்.

லட்டை உண்ட அனைவரும் அதன் சுவையில் மயங்கினார்கள்.  சித்தர் ஒருவரே நம் அடிகளை நேரில் வந்து பார்த்துவிட்டுப் பிரசாதமும் கொடுத்துச் சென்றாரெனில் அடிகள் சித்தர்களுக்கெல்லாம் தலைமைச்சித்தர் என ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.  அங்கே இருக்கையிலேயே ஒரு நாள் அடிகளைக் காணவந்தவர்கள் செட்டியார் வீட்டு வாழைத்தோட்டத்துக்கு தற்செயலாய் வந்தனர்.  கூடவே அடிகளும் வந்தார்.  தோட்டத்தைப் பார்த்துவிட்டு வாழைமரங்களில் கண்ணாடி இலைகள் விட்டிருப்பதையும் பூவிடும் நேரம் வந்துவிட்டதாயும் ஒருவருக்கொருவர் சிலாகித்துப் பேசிக்கொண்டனர்.  தோட்டம் நன்றாய்ப் பராமரிக்கப் பட்டிருந்ததைப் பற்றி அனைவரும் பேசிக்கொள்ள அடிகள் குறிப்பிட்ட ஒரு வாழைமரத்தடிக்கு வந்ததும் நின்றார்.  அங்கே இருந்த ஒரு நல்லபாம்பு சீறியது. அடிகளை அது தீண்டிவிடப் போகிறதெனப் பயந்த செட்டியார் அடிகளைத் தூரப் போகச் சொல்ல பாம்போ சத்தம் கேட்டதும் பயத்தில் அடிகளைத் தீண்டியது. செட்டியார் பதறிவிட்டார். அனைவரையும் கூக்குரலிட்டு அழைத்தார்.  அடிகளைப் பாம்பு தீண்டியதையும் தலையில் ரத்தம் வருவதையும் சொல்லி உடனே வைத்தியரையும் அழைக்கச் சொன்னார். 

 

ஆனால் அடிகளோ அமைதியாகவே இருந்தார்.  அவர் செட்டியாரிடம் புன்முறுவலோடு வைத்தியரை அழைக்கவேண்டாம் எனவும், தன்னிடம் இருக்கும் திருநீற்றைவிடச் சிறந்த மருந்து வேறெதுவுமில்லை என்றும் கூறிவிட்டு இடுப்பிலிருந்து விபூதிப்பையில் இருந்த விபூதியை எடுத்துத் தலையில் பாம்பு தீண்டிய இடத்தில் தடவிக்கொண்டார்.  அதற்குள் ஓடி வந்த மற்றவர்கள் இன்னும் கோபம் அடங்காமல் படம் எடுத்துக்கொண்டு ஆடிக்கொண்டிருக்கும் பாம்பை அடிக்கப் போனார்கள்.  அப்போது அடிகள் அவர்களைத் தடுத்து, அந்தப் பாம்பு தான் சாகவே தன்னைத் தீண்டியதாய்க் கூறி பாம்பை அடிக்கவேண்டாம் எனத் தடுத்தார்.  அனைவருக்கும் குழப்பம் மீதூற அந்தப் பாம்போ இறந்து போய் வாழைமரத்திலிருந்து கீழே விழுந்தது.  மீண்டும் அனைவரும் திகைக்க ராமலிங்க அடிகள் நான் சொன்னது சத்தியம் எனப் புரிந்ததா எனக் கேட்டார்.  தங்கள் அறியாமையை மன்னிக்கும்படி அனைவரும் வேண்ட,  காலம் வரும்போது அனைவருக்கும் ஞாநம் பிறக்கும் என்றும் அறியாமைக்காக வருந்தவேண்டாம் எனவும் பாம்பை எரிக்காமல் புதைக்குமாறும் சொல்லிச் சென்றார்.  அனைவரும் இவர் அந்த நஞ்சுண்டகண்டனின் பிள்ளை என்பதை நிரூபித்துவிட்டார் எனத் தங்களுக்குள் பேசி மகிழ்ந்தனர்.

 

கடலூரில் இருந்த தேவநாயகம் பிள்ளை அவர்கள் அப்பாசாமிச் செட்டியார் வீட்டில் இருந்த அடிகளைக் காணக் கிளம்பிக்கொண்டிருந்த வேளையில் பிள்ளையவர்களைக் காண அங்கே   சுந்தரமுதலியார் என்பவர் வந்தார். தாம் வந்ததால் பிள்ளைஅவர்களின் பயணம் தடைப்பட்டுவிட்டதோ என அவர் வருந்த, பிள்ளை முதலியாரைச் சமாதானம் செய்துவிட்டு வந்த காரணத்தை வினவினார்.  முதலியார் தாம் ஒரு அலுவலாகத் தாசில்தாரைக் காண வந்ததாகவும் பிள்ளை அவர்களைக் கண்டு பல நாட்கள் ஆகிவிட்டதால் காண வந்ததாகவும் கூறினார்.  மேலும் கருங்குழி அடிகளிடம் பித்துக்கொண்டு அவரோடு சுற்றிக்கொண்டு இருப்பதைக் கேள்விப் பட்டு அதை விசாரிக்க வந்ததாகவும் கூறினார்.  பிள்ளைஅவர்கள் ஏற்கெனவே ரசவாதத்தில் அதிகப் பணத்தையும், பொருளையும் இழந்ததையும் நினைவூட்டினார்.

 

தேவநாயகம் பிள்ளைக்குக் கோபம் வந்தது.  பலரும் தம்மைத் தவறாய்ப் புரிந்து கொண்டிருப்பதை ஏற்கெனவே அறிந்த அவருக்கு இப்போது சுந்தர முதலியாருக்குப் பதில் கூறுவதன் மூலம் அந்த எண்ணத்தைப் போக்க நினைத்தார்.  ஆகவே தம் தந்தையார் இறக்கும் தருவாயில் தம்மிடம், தலையில் முக்காடு போட்டுக்கொண்டும், கையில் ஒரு பிரம்பை வைத்துக்கொண்டும் துறவி ஒருவர் வந்து உன்னிடம் இதுதானா உன் தந்தையின் வியோகஸ்தானம் என இந்த இடத்தைச் சுட்டிக் கேட்பார்.  அவர்தான் உனக்கு குரு. அவரைக் குருவாக ஏற்றுக்கொள் எனக் கூறியதாகச் சொன்னார்.

 

தன் தந்தை குருவாக ஏற்றுக்கொள்ளச் சொன்னவரைப் பற்றிய வர்ணனையைப் பிள்ளை அவர்கள் மேலும் விவரித்தார்.  முக்காடு போட்டவர் என்றதுமே அவரை ஆச்சரியத்துடன் பார்த்தார் முதலியார்.  பின்னர் மேலும் பிள்ளை அவர்கள் தொடர்ந்து தன் தந்தை அவ்வாறு சொல்லிவிட்டுப் போய் மூன்றாண்டுகளுக்கும் மேல் ஆகியும் அப்படி எந்த குருவும் வரவில்லை என்றும் தேவநாயகம் பிள்ளைக்கு அதனால் வியாகூலம் ஏற்பட்டதாயும் கூறினார்.  அப்போது முதலியார் அவரிடம், எனில் நீர் குருவைத் தேடி அலைந்திருப்பீர் என்று கூற அமைதியாகப் பிள்ளை அவர்கள், “அதுதான் இல்லை, சொன்னால் நம்பவே மாட்டீர்கள்” என்றார்.  அதிசயங்கள் நடப்பது உண்டுதான், ஆகவே சொல்லுங்கள் கேட்கலாம் என்று முதலியார் தூண்ட, பிள்ளை உற்சாகத்தோடு,  “திடீரென ஒரு நாள் சுவாமிகள் கருங்குழியிலிருந்து இங்கு வந்தார்.  என் தந்தையின் வியோகஸ்தானத்தைப் பிரம்பால் தட்டிக் காட்டி, இதுதான் உம் தந்தையின் வியோகஸ்தானமா என்று கேட்டார்.  உடனே இவர் தான் என் குரு என்று எனக்குப் புரிந்துவிட்டது.  அன்று முதல் அவரைக் குருவாய் ஏற்றுக்கொண்டேன்.  அவரின் அடிமையாகவே ஆகிவிட்டேன். “

 

சுந்தர முதலியாருக்கு வியப்பாய் இருந்த்து.  பிள்ளையோ மேலும் சுவாமிகளின் சீடனாய் ஆன பின்னும் அவர் பெற்ற அதிசய அனுபவங்கள் பற்றிக் கூற ஆரம்பித்தார்.  தான் இரச வாதத்தில் பொருளை இழந்தது பற்றி நினைவு கூர்ந்த பிள்ளை அதை எவ்வாறோ சுவாமிகள் அறிந்து கொண்டதாயும், உடனே தனக்காகவே ஓர் இரும்புத் தகடைக் கொண்டு வந்து அதைப் பொன்னாக்கிக் காட்டியதாயும் கூறினார்.  அதைக் கண்டு ஆச்சரியமடைந்த தன்னிடம், சுவாமிகள் அறிவுரை கூறும் தொனியில், “இச்சை இல்லாதவர்களுக்கே இந்த இரசவாத வித்தை எல்லாம் கை கூடும்.  ஆகவே இனி இவ்வேலை வேண்டாம்.” என்று கூறிவிட்டு அந்தப் பொன் தகட்டையும் தூக்கி எறிந்துவிட்டதாய்க் கூறினார்.  மேலும் அன்றிலிருந்து தன் மனம் மாற்றம் அடைந்து இரசவாதத்தில் ஈடுபாடு போய்விட்டதாயும் கூறினார். அடுத்த நிகழ்வையும் கூற ஆரம்பித்தார் பிள்ளை அவர்கள்.
“ஒரு சமயம் சுவாமிகள் செஞ்சி மலையைச் சுற்றிப் பார்க்க்க் கிளம்புகையில் நானும் உடன் சென்றேன். சுவாமிகள் மலை மீது பல இடங்களிலும் சுற்றினார்.  ஆனால் எனக்குக் களைப்பாகிவிட்டது. பசி வேறு வாட்டி எடுத்தது.  சுவாமிகள் அதைக் கண்டு என்னை ஓர் மரத்தடி நிழலில் அமர வைத்துவிட்டுச் சற்றுத் தூரம் சென்று பின் திரும்ப வந்தார்.   வரும்போது அவர் கையில் பெரிய லட்டு ஒன்றும் தண்ணீர்ச் செம்பும் இருந்தது.  என்னிடம் அதைக் கொடுத்துச் சாப்பிட வைத்து நீரும் அருந்தக் கொடுத்தார்.  செம்பை வாங்கிக் கொண்டு கொடுத்துவிட்டு வருவதாய்ச் சொல்லிச் சிறிது தூரமே சென்றார்.  ஆனால் திரும்பி வருகையில் அவர் கையில் செம்பே இல்லை.”

தேவநாயகம் பிள்ளையின் பேச்சைக் கேட்ட சுந்தர முதலியார் வியப்பின் எல்லைக்கே போய்விட்டார்.  ஆஹா, எவ்வளவு அற்புதம்!  எவ்வளவு ஆநந்தம்?? பிள்ளைவாள் கொடுத்து வைத்திருக்கிறார் என்று எண்ணிக்கொண்டு அவரைப் பாராட்டினார்.  பின்னர் பிள்ளையோடு தானும் சுவாமிகளைத் தரிசிக்க வருவதாய்க் கூறவே பிள்ளைக்கு ஆச்சரியமும் ஆநந்தமும் சேர்ந்து வந்தது.

 

 கருங்குழிக்கும் மேட்டுக்குப்பம் என்னும் ஊருக்கும் நடுவே ஓர் அற்புதமான தண்ணீர் ஓடை இருந்த்து.  சிவராமன், குருமூர்த்தி என்னும் இரு நண்பர்கள்  சுவாமிகளைத் தரிசிக்க வந்து அவர் இல்லாததால் ஏமாற்றம் அடைந்து ஓடைக்கரையிலே  மர நிழலிலே அமர்ந்து சுவாமிகளின் அற்புத சக்தியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.  அப்போது சுவாமிகளின் “கோடையிலே” என்று ஆரம்பிக்கும் பாடலை இருவரும் ஆசை தீரப் பாடினார்கள்.  சுவாமிகளைக் காண முடியவில்லையே என்று வருத்தமும் கொண்டார்கள்.

அவர்கள் பேச்சிலிருந்து சுவாமிகள் கூடலூருக்குப் போயிருந்ததாயும் மூன்று நாளைக்கும் மேல் ஆகியும் திரும்பவில்லை என்றும் தெரிந்த்து.  கூடலூரில் பல அற்புதங்களை சுவாமிகள் நிகழ்த்தி வருவதாயும் அதைப் பற்றி கூடலூர் இராமசாமி செட்டியார் என்பவர் சொன்னதாயும் கூறிக்கொண்டார்கள்.  மஞ்சக்குப்பத்தில் வசித்த ஆசிரியர் ராமகிருஷ்ணனுக்கு வழித்துணையாக சுவாமிகள் சென்றதாயும், வீட்டை அடையும்போது சுவாமிகள் கண்ணில் படமாட்டார் என்றும், கூறினார்.  மேலும் தாசில்தார் ஒருவர் தன் ஊழியனைச் சரியாக நடத்தாததையும் கண்டித்து அந்த ஊழியன் சார்பாய்ப் பேசியதாயும், பசித்துக் களைத்திருக்கும் ஊழியனைச் சாப்பிட வைத்ததாயும் கூறினார்.  ஜீவகாருண்யமே சுவாமிகளின் உயிர் மூச்சாக இருப்பதையும் பேசிக்கொண்டார்கள்.  சுவாமிகளின் மனம், வாக்கு, மெய், அனைத்தும் ஜீவகாருண்யத்தைத் தவிர்த்து மற்றதை நினைப்பதில்லை என்றும் கூறிக்கொண்டார்கள்.  கண்களில் கண்ணீர் ததும்ப இருவரும் பேசிக்கொண்டார்கள்.  கூடலூரில் வணிகர் ஒருவரின் பணியாளுக்கு வளர்ந்திருந்த உள்நாக்கைத் திருநீறு கொடுத்துக் குணமாக்கியதையும், கண்ணோய்க்காரன் ஒருவனுக்கும் அவ்வாறே கண்களில் ரஸ்தாளி வாழைப்பழத்தை வைத்துக் கட்டச் சொல்லிக் குணமாக்கியதையும் பெருமையுடன் பேசிக்கொண்டனர்.    அப்போது  ஓர் நாள் கூடலூரின் தென்பெண்ணை ஆற்றங்கரையில் திருவிழா நடை பெறும்போது சுவாமிகள் அங்கே தம் சீடர்களோடு சென்றிருந்தார்.   பிரம்மசமாஜத்தைச் சார்ந்த ஸ்ரீதர நாயக்கர் என்பவரும் தம் சீடர்களோடு  அங்கே  கூடி இருந்து அவரவர் கோட்பாடுகளைப் பற்றி சந்தேகம் கேட்பவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்கள்.  அப்போது அங்கிருந்த அறிஞர்களின் ஒருவர் சுவாமிகளிடம் சந்தேகம் ஒன்று கேட்கவேண்டும் என்று தயங்கியவாறே கூற, சுவாமிகள் தமக்கும் ஸ்ரீதர நாயக்கருக்கும் இடையில் விவாதம் ஆரம்பித்து வைக்கவே இப்படிக் கேட்கிறார் எனப் புரிந்து கொண்டு, “நல்லது ஆரம்பியுங்கள்” என்றார்.

உடனே அந்த அறிஞர் பிரம்ம சமாஜியான ஸ்ரீதர நாயக்கர் விக்ரஹ ஆராதனையை மறுத்தும்  கண்டித்தும் பேசி வருகிறாரே என்று சுவாமிகளைக் கேட்க அது பிரம்ம சமாஜத்தின் கொள்கை என்று சுவாமிகள் மறுமொழி கூறினார்  சந்தேகமே தமக்கு அதிலே தான் என்ற அந்தச் சீடர் விக்ரஹ ஆராதனை என்பதே இன்றி பிரம்மத்தை எப்படி வழிபடுவது, துதிப்பது என்று புரியவில்லையே என்றும் சுவாமிகளே அதைத் தீர்த்து வைக்கவேண்டும் என்றும் வேண்டினார்.

 

சுவாமிகளும்,” பிரம்மத்தை யார் எவ்விதம் அறிகின்றனரோ அவர்கள் அவ்விதமே அறிதலைத் தொடர்தல் வேண்டும்.  அருவமாக அறிகின்றவர்கள் அருவமாகவே அறிய வேண்டும். சிலருக்கு விக்ரஹ ரூபத்தில் அறிய முடிகிறது என்றால் அதற்கும் தடையில்லை.  அவர்களும் விக்ரஹ ஆராதனைகள் மூலமே அதனைச் செய்தல் வேண்டும்.  ஆனால் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டுத் தெளிவடைந்த யோகிகளுக்கும், ஞாநிகளுக்கும் விக்ரஹ ஆராதனை என்பதே தேவையில்லை. “  என்று கூறினார்.  உடனே ஸ்ரீதர நாயக்கரை அனைவரும் பார்த்து இது குறித்து அவர் கருத்தைச் சொல்லும்படி தூண்ட, அவரோ விவாதம் வேண்டாம் என்று எண்ணுவதாயும் தனிப்பட்ட முறையில் கடிதம் போட்டு சுவாமிகளுக்குத் தெரிவிப்பதாயும் கூற, மற்றவர்களோ தொடர்ந்து பிடிவாதம் பிடித்தனர்.  மேலும் ஸ்ரீதர நாயக்கரின் கருத்தை வலுப்படுத்த விரும்பினால் அதற்கேற்றவாறு தக்க காட்சி, கருத்து, உரை ஆகிய மூன்று பிரமாணங்களையும் கூறவேண்டும் என்றும் இது தான் விவாதச் சபையின் பொது விதி என்றும் கூறி, விவாதத்தில் ஈடுபடுமாறு கூறினார்கள். சற்று நேரத்தில் அங்கே மிகப் பெரிய வாக்குவாதம் ஒன்று ஆரம்பிக்கும் அறிகுறி தென்படலாயிற்று.  பிரம்ம சமாஜியின் சீடர்களுக்குக் கோபம் வர, ஸ்ரீதர நாயக்கர் செய்வதறியாது விவாதத்தில் பங்கேற்றாலொழிய இது முடியாது என்பதை உணர்ந்து விவாதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியவர் ஆனார்.

 

பிரம்ம சமாஜிகளுக்குத் தங்கள் குருவான ஸ்ரீதர நாயக்கர் விக்ரஹ ஆராதனை கூடாது என்பதை நிரூபித்து பிரம்ம சமாஜக் கொள்கையை நிலைநாட்டவேண்டும் என்ற ஆவல் மூண்டெழுந்தது.  ஆகவே அவர்களின் தொடர்ந்த வற்புறுத்தலால் ஸ்ரீதரநாயக்கர் எல்லோரையும் பார்த்து, “அந்த முக்காட்டுச் சாமியாரைச் சரியான மறுப்போடு என்னுடன் விவாதிக்கச் சொல்லுங்கள். “ என்று அடிகளிடம் கொண்ட கோபத்தோடும், வெறுப்போடும் கூறினார்.  அடிகளோ தன் சாந்தமான நிலையில் இருந்து முற்றும் மாறாமல், பிரம்ம சமாஜத்தின் கோட்பாடை விளக்கச் சொல்லி வேண்டினார்.  உடனே தன் வாதத்தைத் தொடங்கிய ஸ்ரீதர நாயக்கர்,  நித்திய, நிரஞ்ச, நிர்மல, நிராமய, நிராலம்ப சொரூபமானதும், அவாங் மநோகோசரமும் ஆன பிரம்மத்தை நினைத்தாலே போதுமானது.  விக்ரஹ ஆராதனை என்பது சிறிதும் உதவாத ஒன்று.  இதுவே பிரம்ம சமாஜத்தின் கோட்பாடு.” என்று கூறினார்.
 
அடிகள் உடனே,” மநோகோசரமான மனதிற்கு பிரம்மம் எட்டுமா?? அப்படி எட்டாத பிரம்மத்தை எவ்வாறு நினைப்பீர்கள்?  இது ஆகாயத்தை அடியாலும், படியாலும்  அளக்கலாம், காற்றையும் கையால் பிடிக்கலாம் என்பது போல் அன்றோ உள்ளது.  கொஞ்சமும் பொருந்தாத ஒன்று.” என்றார்.  ஸ்ரீதர நாயக்கரோ, “நம் ஞானம் ஓர் எல்லையிலே நிற்கிறது என்பதால் பிரம்மம் மனதுக்கு எட்டாது என்று கூற முடியுமா?  இது சரியில்லை.” என்றார். 
 
“அடிகளே, மெய்வாதம் புரியவேண்டும்.  தாங்கள் பொய்வாதம் புரிகிறீர்கள்.” என்றார் ராமலிங்க அடிகள் நாயக்கரிடம்.  மேலும், “பிரம்மம் மனதுக்கு மட்டுமல்ல, புத்தி, சித்தம், அஹங்காரம் போன்ற அந்தக்கரணங்களுக்கும், கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய பஞ்ச இந்திரியங்களுக்கும் ஒருக்காலும் விஷயமாக ஆகாது.  பிரம்மத்தின் நாமரூபமே விஷயமாகும்.  அதோடு மனம் லயமடைய வேண்டாமா?  மனம் லயமடைந்தாலே பிரம்மாநுபவம் ஏற்படும்.  அதை உணரவும் முடியும்.  அங்கே மனதின் முனைப்பு ஒரு கடுகளவு தென்பட்டாலும் ஆத்மஞானம் புரியாது, பிடிபடாது.  சுருதி, யுக்தி, அநுபவம் ஆகிய மூன்றும் இதை நிரூபித்துக் காட்டும்.”  என்றார்.  அங்கிருந்த வள்ளலாரின் அடியார்கள் மகிழ்வு பொங்க ஆரவாரம் செய்தார்கள்.  ஸ்ரீதர நாயக்கரைப் பார்த்து அடிகளார் அற்புத விளக்கம் கொடுத்திருப்பதாயும் இதை எதிர்த்தோ அல்லது மறுத்தோ உங்களால் கூற முடியுமா எனவும் வினவினார்கள்.  ஸ்ரீதர நாயக்கருக்கு உள்ளூரக் கொஞ்சம் பயம் தான்.  ஆனாலும் விட்டுக் கொடுக்காமல், “பிரம்மத்தை மனதால் தியானிக்கலாம் என்பதை நான் அறிவேன். வேறொன்றும் அறிய மாட்டேன்.  இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.”  என்று கூறி விவாதத்தை முடிக்க நினைத்தார்.
 
ஆனால் அடிகளோ, “பொதுவாய்ச் சொன்னால் எப்படி? பிரம்மம் மாயாதீதமானது.  மாயா காரியம் ஆன மனதிற்கு அது புலப்படாது.  ஆகவே இதைத் தாங்கள் தெளிவுபட விளக்கவேண்டும்.” என்றார்.
 
ஸ்ரீதரநாயக்கருக்கு வேறு வழி தென்படவில்லை.  ஆகவே அவர் அடிகளிடம், “நான் விளக்குவதை விடுங்கள்.  இப்போது நீங்களே விளக்குங்கள்.  அந்தக்கரணங்களாலும், பஞ்ச இந்திரியங்களாலும் அறிய முடியாதென்று நீங்கள் சொல்லும் பிரம்மத்தை அறிவது பின் எவ்வாறு?  அதைச் சொல்லுங்கள் முதலிலே!” என்று எகத்தாளமாய்க் கூறினார்.  இதற்கு அடிகளால் பதில் கூற இயலாது என்றே நாயக்கர் நினைத்தார்.  ஆனால் அடிகளோ, “ ஆன்மஞானத்தால் பிரம்மத்தை உணரலாம்.  அதைத் தாங்கள் அறியவேண்டும்.”  என்று கூறினார்.  நாயக்கரால் பதில் பேச முடியவில்லை.  அப்போது அடிகளாரின் நண்பர்கள் மேலும் ஸ்ரீதர நாயக்கரைப் பார்த்து, “இப்போதாவது ஒத்துக்கொள்கிறீர்களா? அல்லது இன்னும் மறுக்கிறீர்களா?” என்று கேட்க ஸ்ரீதர நாயக்கர் எழுந்து கிளம்ப ஆரம்பித்தார்.  கிளம்பும்போது, இந்த விஷயத்திற்குப் பதிலைத் தாம் கடிதம் மூலம் அடிகளுக்கு அனுப்புவதாயும் கூறினார்.  அனைவரும் கேலியாகச் சிரித்தனர்.  அடிகள் அதைத் தவறு என்று கண்டித்தார்.  ஸ்ரீதர நாயக்கருக்கோ அவமானத்தால் உடம்பும், உள்ளமும் கூசிற்று.  சினமும் ஏற்பட்டது.  உடனேயே அனைவரையும் பார்த்து, “எண்ணி எட்டே நாள்! உங்கள் அனைவரையும் அவமானப்படுத்தி நான் சிரிக்கிறேன்.” என்று சவால் விட்டார்.  அவர் நிலை பரிதாபமாய்த் தோன்றிற்று அனைவருக்கும்.  அதே சமயம் கண்டிக்கவும் நினைத்தனர்.  ஆனால் அடிகளோ அவர் மேல் இரக்கம் கொண்டு, “ஸ்ரீதர நாயக்க அடிகளே, இது என்ன கர்வம் கொண்டு பேசுகிறீர்?? இவ்வாறு பேசாதீர்கள். இது உமக்குத் தகாது.”  என்று கூற ஸ்ரீதர நாயக்கரும் அவரின் சீடர்களும் அவசரம் அவசரமாக அந்தச் சபையை விட்டு வெளியேறினார்கள்.
 
மற்றுமுள்ள தம் நண்பர்கள் அனைவரையும் பார்த்து ராமலிங்க அடிகளார், இது விஷயமாய் உங்களில் எவருக்கேனும் சந்தேகம் இருந்தால் கேட்டுக்கொள்ளுங்கள் என்று கூறினார்.  பின்னர் விக்கிரஹ ஆராதனைக்கு விளக்கம் கேட்ட நண்பரைப் பார்த்து, விக்கிரஹ ஆராதனை எல்லாரும் நினைப்பது போல் மூடப் பழக்கம் அல்ல.” என்று கூறிவிட்டு நிறுத்தினார்.  அனைவரும் தொடருங்கள் சுவாமி என்று அவர் மேலே சொல்லக் காத்திருந்தனர்.  அடிகள் பேச ஆரம்பித்தார். “மனம் வாக்குக்கு எட்டாத பிரம்மத்தை ஆராதனை செய்வதற்கு முதல் படியே விக்கிரஹ ஆராதனை.  இதைச் செய்து வர வரத் தானே பிரம்மாநுபவம் ஏற்படும்.  இதைச் செய்யாமல் பிரம்மாநுபவம் ஏற்படாது.” என்று திட்டவட்டமாய்க் கூறினார்.  மேலும் விக்கிரஹத்தைப் பற்றி விளக்க ஆரம்பித்தார்.

 

சுவாமிகள் பேச ஆரம்பித்தார்:”விக்ரஹம் என்பதற்கு விசேஷமான இடம் என்றே பொருள். ஆன்மா இருப்பதற்கான கிரகம் மானிடம் முதலிய தேகங்கள் என்பதைப் போலவே பிரம்மப் பிரகாசம் வெளிப்படுவதற்குரிய தேவ தேகம் விக்ரஹம் ஆகும்.  ஆகவே இந்த விக்ரஹங்களில் முறைப்படியும், விதிப்படியும் உபாசனைகள் செய்யவேண்டும்.  இவ்வாறு செய்து வர வர பிரம்மப்பிரகாசம் வெளிப்பட்டு அனுகிரஹம் கிடைக்கும்.  மக்களின் மனப்பக்குவத்திற்கு ஏற்றவாறு அவரவர் புரிதலுக்கு ஏற்ப ஆலய வழிபாடுகள் தாராளமாய்ச் செய்யலாம்.  நாளடைவில் பிரம்மஞானம் தானே சித்திக்கும்.”  என்று கூறி நிறுத்தினார் அடிகள்.

நண்பர்கள் மேலும் கூறும்படிக் கேட்க, அடிகளும் மேலும் கூறலானார்.  “இவ்விதம் வழிபாடுகள் செய்பவர்களுக்குச் சில அபூர்வமான சித்திகள் கிடைக்கும்.  சிலருக்குக் குன்மம் போன்ற வியாதிகளைத் தீர்த்து வைக்கும் சக்தியும் இன்னும் சிலர் மேலும் ஒருபடி போய் இறந்தவர்களைப் பிழைக்கவும் வைப்பார்கள்.  செயற்கரிய பல செயல்களைச் செய்வார்கள் சிலர்.  இப்போதும் சிலர் அவ்வாறு இருந்து வருகிறார்கள்.  ஆனால் பிரம்ம சமாஜிகளோ வேத சமாஜிகளோ அவ்விதம் செய்ய மாட்டார்கள்.  அவர்களுக்கான அடையாளம் இதுவல்ல.”  என்றார்.
 
“ஸ்ரீதர அடிகள் கூறியவாறு பிரம்மத்தைத் தியானிப்பதற்கும் முதலில் ஏதாவது ஓர் உருவத்தைத் தியானித்துப் பழகிய பின்னரே பிரம்மத்தை அறிந்து கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ இயலும்.  மனத்தால்  உருவமற்ற ஒன்றைப் பற்றுதல் முதலில் கடினமாகவே இருக்கும்.  உருவமாய் இருந்து அதைத் தியானித்து வர, வர உருவம் மெல்லக் கரைந்து அருவமாகும்.  இரண்டான துவைதம் எவ்வாறு ஒன்றான அத்வைதமாகிறதோ அதே தான் இங்கேயும்.  இப்போது புரிகிறதா?” என்று கேட்டார் சுவாமிகள்.  அனைவரும் மகிழ்ச்சியுடன்,”புரிகிறது சுவாமி!” என்றனர்.  விக்கிரக ஆராதனை என்பது ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று என்று அடிகள் தீர்மானமாய்ச் சொன்னார்.  அதன் மேல் அடிகள் அங்கிருந்து சென்று தாம் ஏகாந்தத்தில் இருக்கப்போவதாய்ச் சொல்ல சபையோர்கள் அனைவரும் சமணர்களை வாதில் வென்ற திருஞானசம்பந்தர் இவரோ என எண்ணி எண்ணி மயங்கினார்கள். 
 
அடிகள் கூடலூரில் இருந்து கருங்குழிக்கு மீண்டும் வந்துவிட்டார்.  சில நாட்கள் சென்றன.  தினமும் தனியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபடுவதும், அருட்பாடல்களை இயற்றுவதும், உலாவுதலும், அன்பர்களோடு இறை அருளைப் பற்றி உரையாடுவதுமாயும், அவ்வப்போது அருகிலுள்ள சிதம்பரம் போன்ற தலங்களுக்குச் சென்று வருவதுமாய் அடிகளாரின் பொழுது இனிமையிலும் இனிமையாகக் கடந்து கொண்டிருந்த்து.  ஒரு நாள் அவரைக் கவனித்துக்கொள்ளும் ரெட்டியாரின் மனைவி முத்தியாலு அவசர வேலையாக வெளியூரில் இருக்கும் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார்.  மறுநாள் காலை அடிகளுக்குப் பணிவிடை செய்யவேண்டும் என்பதால் அதிகாலையிலேயே ஊருக்குத் திரும்பியும் விட்டார்.  வந்தவர் அடிகளாரின் அறையைப் பெருக்கிக் கூட்டி முடித்துச் சுத்தம் செய்யவேண்டி அறைக்குள் நுழைந்தவள் திகைத்துப் போனாள்.
 
அறையில் இரவு முழுதும் அகல்விளக்கு எரிந்து கொண்டிருந்திருக்கிறது.  ஆனால் மண்கலயத்தில் எண்ணெயோ குறைவாய்த் தான் முத்தியாலு வைத்துவிட்டுப் போயிருந்தார். அந்தக் குறைவான எண்ணெய் எடுக்கப் படவே இல்லை.  வேறொரு புத்தம்புது மண்கலயம் பழக்கப் படுத்துவதற்காக நீர் நிரப்பி வைத்திருந்தது.  ஆனால் அதிலே தண்ணீரே இல்லை.  சுத்தமாய்க் காலியாகி இருந்த்து.  அகல் விளக்கிலும் எண்ணெய் விட்டு எரித்த அடையாளமே இல்லாமல் தண்ணீராக அல்லவோ இருக்கிறது?  நீரில் விளக்கு இரவு முழுதும் எரிந்ததா?  அது எப்படி முடியும்?? இது என்ன அதிசயம்?  எனில் சுவாமிகள் இரவு தியானம் செய்யாமல் அருட்பாக்களும் எழுதாமல் இருந்துவிட்டாரா?  தண்ணீரில் விளக்கு எரிந்திருக்கவே முடியாது.  அடாஅடா, இரவு முழுதும் சுவாமிகள் இருட்டில் அன்றோ இருந்திருப்பார். 
 
யோசித்து யோசித்து மண்டை குழம்பியது முத்தியாலு அம்மாவுக்கு.  அதற்குள்ளாக வெளியே சென்றிருந்த அடிகளும் திரும்பிவிட்டார்.  அவசரம் அவசரமாகச் சுவாமிகளின் முன்னே சென்று, “வாருங்கள் சுவாமி!”  என்று வரவேற்றாள்.  சுவாமிகளும் அவரைப் பார்த்து,”என்ன ரெட்டியாரம்மா, ஊருக்குப் போய்விட்டு உடனே திரும்பிவிட்டாற்போல் இருக்கிறதே?”  என்று விசாரித்தார்.  மேலும் ஊரில் சுற்றத்தாரின் நலம் குறித்தும் விசாரித்தார்.  முத்தியாலுவுக்கோ தன் சந்தேகம் தீர்த்துக்கொள்ளவேண்டிய அவசரம்.  ஆகவே, சுவாமிகளிடம், “எல்லாரும் நலமே சுவாமி.  ஆனால் ஒரு சந்தேகம்…” என்று இழுத்தார்.  அடிகளும் என்ன சந்தேகம் என்று கேட்க, “சுவாமி! இரவு முழுதும் விளக்கு எரிந்த்தா?  இருட்டில் எவ்வாறு இருந்தீர்கள்?”  என்று கேட்டாள். சுவாமிகளும் அவரை அதிசயத்தோடு பார்த்துக்கொண்டு, “ஏன் கேட்கிறீர்கள்?  விடிய விடிய விளக்கும் எரிந்த்து.  நானும் தியானம் செய்தேன்.  வழக்கம்போல் பாடல்களும் எழுதினேன்.  ஏன் இவ்வாறு கேட்கிறீர்கள் ? புரியவில்லையே?”  என்று வினாவினார்.
 
சுவாமிகள் அருகிலிருந்து புதிய மண்கலயத்தைச் சுட்டிக்காட்டிக்கொண்டே ,”இதோ இந்தக் கலயத்தில் இருந்த  எண்ணெயை ஊற்றித் தான் விளக்கை எரித்துக்கொண்டேன்.” என்றார். முத்தியாலு அம்மாவிற்கு விஷயம் புரிந்து விட்ட்து.  வியப்புக்கு ஆளாகி மேனி சிலிர்க்க, மனம் உருக, “ இது எண்ணெய்க் கலயம் அல்ல சுவாமி.  தண்ணீர்க் கலயம்.  புது கலயம் என்பதால் பழக்குவதற்காக நீர் ஊற்றி வைத்திருந்தேன்.  வாய் உடைந்த பழைய கலயத்தில் நான் வைத்துவிட்டுப் போன எண்ணெய் அப்படியே இருக்கிறது சுவாமி.  இரண்டு கலயங்களும் அருகருகே இருந்தமையால் தாங்கள் தண்ணீர்க் கலயத்தில் இருந்து நீரை எடுத்து எண்ணெய் என நினைத்து வார்த்திருக்கிறீர்கள்.  விளக்கும் இரவு முழுதும் எரிந்திருக்கிறது.  சுவாமி, சுவாமி, தங்கள் அருளால் அன்றோ இந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது?  தண்ணீர் விளக்கும் எரியும் அற்புதம் இங்கே நிகழ்ந்திருக்கிறது.  சுவாமி தாங்கள் இங்கே தங்கவும் இத்தகைய அற்புதங்கள் எங்கள் இல்லத்தில் நடக்கவும் எத்தனை ஜென்மங்களில் நாங்கள் புண்ணியம் செய்தோமோ! இறைவன் திருவருள்தான் இவை எல்லாம்!”  என்று கண்ணீர் மல்கக் கூறிக்கொண்டே அடிகளின் பாதங்களில் பணிந்து வணங்கினார்.
 
அதைக் கேட்டுக்கொண்டே வந்த ரெட்டியாரோ, “நமிநந்தி அடிகளுக்கு இறைவன் ஆணை கிடைத்து நீர் ஊற்றி விளக்கை எரித்தார்.  ஆனால் இங்கே அடிகளுக்கோ அவ்விதம் ஆணை எதுவும் இல்லை.  எண்ணியும் செய்யவில்லை.  தற்செயலாகத் தானாகவே நடந்திருக்கிறது.  திருவருட்செயல் தான் இது.  சுவாமிகளும்  ஒரு ஏமச்சித்தர் தான்.” என்று வியந்து பாராட்டி வணங்கி மகிழ்ந்தார்.  அடிகளும் ரெட்டியாரிடம் இது இறைவன் திருவருள் தானே தவிர தன்னால் எதுவும் இல்லை எனவும், தன் சென்னை நண்பர்களுக்கு இது குறித்துத் தெரிவிக்க விரும்புவதாயும், தம்மைத் தனிமையில் விட்டுச் செல்லவேண்டும் எனவும் இந்த நிகழ்ச்சி குறித்த ஒரு பாடலை எழுதப் போவதாகவும் கூற அவ்வளவில் இருவரும் அங்கிருந்து சென்றனர்.

 

 

அடிகளார் மிகுதியாய் இருந்த நீரை ஊற்றி மீண்டும் விளக்கை எரிக்க விளக்குச் சுடர் விட்டுப் பிரகாசித்தது.  இறைவனின் பேரருளை  எண்ணிப் பரவசம்  அடைந்த அடிகள் அதைக் குறித்து ஒரு பாடலை எழுதினார்:

“மெய்விளக்கே விளக்கல்லால் வேறு விளக்
கில்லையென்றார் மேலோர் நானும்
பொய் விளக்கே விளக்கெனவுட் பொங்கிவழி
கின்றேனோர் புதுமை யன்றே
செய்விளக்கும் புகழுடைய சென்னநகர்
நண்பர்களே செப்பக் கேளீர்
நெய்விளக்கே போன்றொரு தண்ணீர் விளக்கு
மெரிந்து சந்நிதி முன்னே” 

 

என்று பாடலை முடித்துவிட்டுத் திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம் என்று பக்தி உணர்வில் கூறிக்கொண்டே தியானத்தில் ஆழ்ந்தார். தன் பொருட்டு ஈசன் செய்த இந்தப் பெருஞ்செயல் அவர் மனதை உருக்கியது.  மேலும் அந்த தீப ஒளியில் இதுவரையிலும் தமக்காக ஈசன் செய்த அருட் செயல்கள் அனைத்தும் காட்சிகளாய்த் தெரிய உடலும் உள்ளமும் நெகிழ்ந்து குழைந்து மெழுகெனக் கரைந்தார்.  மேலும் ஒரு பாடல் புனைந்தார்.
 
“என் வடிவந் தழைப்பஒரு பொன்வடிவந் தரித்தே
என்முன் அடைந் தெனைநோக்கி இளநகைசெய் தருளித்
தன்வடிவத் திருநீற்றுத் தனிப்பை அவிழ்த் தெனக்குத்
தகுசுடர்ப்பூ அளிக்கவும் நான் தான் வாங்கிக் களித்து
மின்வடிவப் பெருந்தகையே திருநீறும் தருதல்
வேண்டுமென முன்னாது விரும்பியளித்தனம் நாம்
உன்வடிவிற் காண்டியென உரைத்தருளி நின்றாய்
ஒளிநடஞ்செய் அம்பலத்தே வெளிநடஞ்செய் அரசே!’

 

என்று பாடி தீபத்தை நமஸ்கரித்துவிட்டு உலாவுவதற்காக ஓடைக்கரைக்குச் சென்றார்.

சென்னை நகரில் அவர் நண்பர்கள் அனைவரும் ஒருங்கே கூடி அடிகளாரின் பாடல்களைத் தொகுப்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர் இரத்தின முதலியார் வீட்டிலே.  இங்கே இரத்தின முதலியார் வீட்டில் ஒரே கலகலப்பு.  புதுவை வேலு முதலியார், சிவாநந்தபுரம் செல்வராய முதலியார், உபயகலாநிதிப் பெரும்புலவர் தொழுவூர் வேலாயுத முதலியார், இறுக்கம் இரத்தின முதலியார் ஆகியோர் கூடிப் பேசிக்கொண்டிருந்தனர்.  அப்போது தபால் ஒன்று வந்தது.  கடிதம் அடிகளிடமிருந்து என்று கண்டதும் அனைவரும் மகிழ்ந்தனர்.  கடித்த்தைப் படிக்கச் சொன்னார்கள் மற்றவர்கள் அனைவரும்.  அவ்வாறே இரத்தின முதலியார் கடிதத்தைப் படித்தார்.  அனைவருக்கும் தம் ஆசிகளைத் தெரிவித்திருந்த அடிகள் தாம் இதுவரையில் எழுதிய பாடல்களைச் சிதற விட்டிருப்பதாயும் அவைகளைச் சேர்ப்பிக்க இரண்டு மாதம் பிடிக்குமென்றும் பங்குனி மாதத்துக்குள் சேர்ப்பித்துவிட்டுச் சென்னை வருவதாயும் எழுதி இருந்தார்.  மேலும் இரத்தின முதலியார் தம் பாடல்களைப் பற்றியும் அவை சேமிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைக் குறித்தும் தம்மிடம் தெரிவித்திருந்தவைகளையும் குறிப்பிட்டுவிட்டு இரத்தின முதலியார் உணவு கூட உட்கொள்ளாமல் தம் பாடல்களைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் என்று  எழுதி இருந்ததைப் படித்த தமக்கும் உணவு உடலில் பொருந்தாமல் இருப்பதாயும் குறிப்பிட்டிருந்தார். 
 
மேற்கண்ட விஷயங்களைக் கடிதம் மூலம் படித்த இரத்தின முதலியார் ஆஹா, ஸ்வாமிகளுக்கு மனவேதனையைக் கொடுத்துவிட்டேனே என்று கலங்கிப் போனார்.  அனைவருக்கும் அந்தக் கலக்கம் அதிகம் ஆனது.  மேலே கடிதத்தைப் படித்த இரத்தின முதலியார் எதுவும் பேசாமல் கண்கள் கலங்கி தேம்ப ஆரம்பிக்க, வேலாயுத முதலியார் கடித்த்தை வாங்கிப் படிக்க ஆரம்பித்தார்.  அதிலே ஸ்வாமிகள், இரத்தின முதலியாரை போஜனம் ஒருவேளை மட்டுமே உட்கொள்ளும்  நிபந்தனை வைத்திருந்ததை  நீக்கித் தமக்கு அமைதியைத் தருமாறும், அதுவரையிலும் தாமும் ஒருவேளையே போஜனம் உட்கொள்ளுவதாயும் மும்முறை சத்தியம் செய்து எழுதி இருந்தார்.  இதைப் படித்த வேலாயுதம் முதலியாரும் விம்மி விம்மி அழ ஆரம்பித்துவிட்டார்.  கடிதத்தை மேற்கொண்டு அவராலும் படிக்க இயலவில்லை.  இரண்டு மாதத்துக்குள்ளாகப் பாடல்களைச் சேர்ப்பித்து அனுப்பி வைப்பதாகவும் ஆகவே இரத்தின முதலியார் நிபந்தனையைத் தளர்த்திக்கொண்டு உணவு உட்கொள்ள ஆரம்பிக்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டு அடிகள் கடிதத்தை முடித்திருந்தார்.  இரத்தின முதலியாரின் வேதனை அதிகமாயிற்று.  கதறி அழ ஆரம்பிக்க, அனைவரும் அவர் செய்த இச்செயலால் நன்மையே விளைந்தது என்றும், இல்லை எனில் அடிகளார் தம் பாடல்களைப் பதிப்பிக்க ஒத்துக்கொண்டிருக்க மாட்டார் எனவும், வருங்கால சந்ததியினருக்கு அடிகளாரைப் பற்றியும், அவர் தம் பாடல்கள் குறித்தும் தெரியாமல் போயிருக்கும் என்றும் பலவாறு அவரைத் தேற்றி, இரத்தின முதலியார் உணவு உட்கொள்ள ஏற்படுத்தி இருந்த நிபந்தனையை விலக்கிக் கொள்வதாய்க் கடிதம் எழுதுமாறும் ஆலோசனை கூற இரத்தின முதலியாரும் அதை ஒத்துக்கொண்டு அவ்விதமே கடிதம் எழுதினார்.

 

You may also like

Leave a Comment