ஸ்ரீநிவாச பெருமாள் கோயில்

ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் [விஷ்ணு ]

கிருஷ்ணன், சிங்கை

 

 

விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடுவது வைணவமாகும். இந்து மதத்தவரில் பெரும்பான்மையோரால் பின்பற்றப்படும் சமயமும் இதுவாகும். சைவரை எவ்வாறு மிளிரும் திருநீறு அடையாளம் காட்டுகிறதோ அவ்வாறே வைணவரை திருநாமாம் உணர்த்துகிறது. விஷ்ணுவை முத்தொழில்களுள் காத்தல் தொழில் புரியும் தெய்வம் எனக் குறிப்பிடுவதுண்டு. விஷ்ணு என்னும் பொருள் எங்கும் பரந்து இருப்பவன் என்பதாகும்.

 

 

 

 

ஆகவே கடல், வானம் என்று உலகெங்கும் வியாபித்துள்ள நீல நிறத்தை அவனுடைய நிறமாகக் கருதுவது சாலப் பொருத்தமானது.இதன் பொருட்டே கார்மேக வண்ணன் என வர்ணிக்கப்படுகிறான்.பாற்கடலின் நடுவே ஆதிசேஷன் யோக நித்திரை ஆழ்ந்திருந்தவாறே திருமால் நமக்குப் பல்வேறு தத்துவ விளக்கங்களை அருள்கிறார். ஊழிக்கால முடிவினிலே அண்டங்களெல்லாம் ஒடுங்கிய நிலைக்கு வருவதைப் பாற்கடல் விளக்குகிறது.

 

 

 

 

திருமாலின் யோக நித்திரையானது அறிதுயில் என்னும் தூங்காத்துயில் என்றும் பொருள் உணர்த்தப்படுகிறது. சித்தர்கள் இதனை, ‘தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது’ என்பார்கள். அந்நிலையிலிருந்தவாறே உலகனைத்தையும் காத்துக் கொண்டிருக்கிறார். திருமாலின் நாபிக் கமலத்தின் சூழிலிருந்து உருவானவர் நான்முகன் பிரம்மா.பஞ்சபூதங்கள்,உயிர்கள், இயற்கை அனைத்துக்கும் தோற்றுவாயிலாக அமைந்துள்ளது பிரம்மாவின் தோற்றம்.திருமாலின் நான்கு திருக்கரங்களுள் சங்கை ஏந்திய கை இறைவன் பிரணவப் பொருள் என்பதை உணர்த்துகிறது. மற்றொரு கையிலுள்ள தர்ம சக்கரம் கொண்டு உலக அனைத்தையும் காத்துக் கொண்டு வருகிறார் திருமால். அறம் செய்கின்றவர்களைக் காப்பாற்றியும் கேடு செய்கின்றவர்களைத் தண்டித்தும் வருகின்றது. தர்ம சக்கரம் திருமாலின் காலச்சொரூபம் என்பதை உணர்த்த ஆழியைக் காலச்சக்கரம் எனச் சொல்வதும் உண்டு. மற்ற இரண்டு கைகளிலுள்ள கதையும், கமலமும் அறிவின் தோற்றங்களாகிய வல்லியல்பு, மெல்லியல்பை உணர்த்துகின்றன. துன்பம் வழங்கும் வல்லியல்பானது, முன்னேற்றத்தை வழங்குகிறது.இதை உணர்த்த கதையும், இனிமையின் வடிவினைத் தரும் மெல்லியல்பை உணர்த்த கமலமும், திருமாலின் கையில் விளங்குகின்றன. இவ்வாறு உலகெங்கும் நீக்கமற வீற்றிருக்கும் விஷ்ணுவைப் பற்பல பெயர் கொண்டு அழைக்கின்றனர்.

நாராயணன் : தன்னிடத்தினின்று தோன்றி வந்த உலகில் வீற்றிருப்பவன்.

 

  • கோவிந்தன் : சீவன்களின் நிலையை அறிபவன்.
  • பரமாத்தமன் : பிரபஞ்சத்துக்கு அப்பால் உள்ளவன்.
  • கேசவன்    : மும்மூர்த்தி வடிவினன்

எனப் பல்வேறு பெயர்கள் வழங்கப்படுவதுண்டு.

      
விஷ்ணு வழிபாடானது ஆதிகாலந் தொட்டே இருந்து வந்ததாயினும் இதிகாச புராணகாலத்தின்கி.மு 600-கி.பி 200) போது வளர்ச்சி பெற்றதுள்ளது. இக்காலத்தில் தோன்றிய இதிகாசங்களான மகாபாரதம், இராமாயணம் ஆகும். விஷ்ணுவின் அவதாரமாக இராமன், கிருஷ்ணன்– விஷ்ணுவையே முழுமுதற் கடவுளாக கொண்டு எழுதப்பட்டன. அரங்கநாதனை அழகன் என்று இயம்பலாம். தெய்வ சம்பத்துக்களில் அழகும் ஒன்று. அழகை இரசிப்பவர்கள் தங்களை அறியாது தெய்வ சொரூபத்தில் ஆழ்ந்துவிடுகிறார்கள். வடிவத்திலும், ஓசையிலும், ஒளியிலும், அழகுண்டு. சயனித்திருப்பதில் சவுந்திரம் உண்டு.

 

அனந்த சயனம் அத்தகையதன்று அரங்கத்து அம்மான் பள்ளி கொண்டுடிருப்பதில் பொலிவொன்று உண்டு. பார்க்கப் பார்க்க பூரிப்பை ஏற்படுத்துவது. காந்தம் ஊசியைக் கவர்ந்தது போன்று அன்பர்கள் உள்ளத்தைக் கொள்ளைக் கொள்வது. நாம் இருக்க வேண்டிய பெரு நிலை அது. ஏனென்றால் அது தெய்வத்தின் துகில். இந்த நிலையினை அறிந்திருபவர் தெய்வத்தையே அறிந்தவர். அரங்கநாதன் அணிந்திருக்கும் கிரீடமும், கெளஸ்துபம் என்னும் ஆபரணமும் சேர்ந்து அரங்கனின் அழகைப் பன்மடங்கு அதிகரிக்கிறது. ஆபரணத்திற்கு ஒரு தன்மையுண்டு. அழகை அது மேலும் அழகுப்படுத்துகிறது. அப்புருஷோத்தமனே ஸ்ரீநிவாசன் என்று அழைக்கப்படுகிறான். திருமகளும் அவன் இருப்பிடம்.
               

நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய வழிபாட்டுத் தலங்களையும், ஆலய உற்சவங்களை ஏற்படுத்தினார்கள். நிலங்களைத் தானமாகக் கோயிலுக்கு எழுதி வைத்தார்கள். அப்படிப்பட்ட பெருமைக்குரிய ஓரு கோவில்களில் ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலும் ஒன்று. 

 

ஆலய தோற்றம்

 

1800 நூற்றாண்டின் பிற்பகுதியில் ஸ்ரீ நிவாச பெருமாள் கோயில் தோற்றம் கண்டது. இந்த ஆலயம் உருவாக்கத்திற்கும், தோற்றத்திற்கும் வழிக்கோலியவர்கள் சமூக தலைவர்களாக இருந்த அருணாச்சலப் பிள்ளை, கோட்ட பெருமாள் பிள்ளை, இராமசாமி பிள்ளை, அப்பாசாமி பிள்ளை, சொக்கலிங்கப் பிள்ளை, இராமசாமி ஜமீந்தார் ஆகியோர். தாய்நாட்டை விட்டு வந்திருந்த போதிலும், இறைவழிபாட்டை மறவாது கோயில் கட்டி, தங்களி?ன் கலாச்சாரம்,மதம்,மொழி ஆகிவற்றை மறவாது ஒழுகி நிற்கத் துடித்த காலம்.

 

 

தங்களின் சக்திக்கேற்ப ஆங்காங்கே சிறு குடில்களாகக் கோவில்களை அமைத்து வழிப்பட்டார்கள்.அப்போது வைணவர்களுக்கு ஒரு சிறப்பான கோயில் வேண்டும் என்ற பொதுநல எண்ண உந்தலில் 1855-ம் ஆண்டு ஜூலைத் திங்கள் 20-ம் நாள் திரு. நரசிங்கம் என்பவருக்குக் கிழக்கிந்தியக் கம்பெனி சிராங்கூன் சாலையில் 2 ஏக்கர் 19 போல்ஸ் பரப்புள்ள நிலத்தை இருபத்தொன்று ரூபாய் மூன்று அணாவுக்கு விற்று நிலத்தை அவருக்கு உரிமையாக்கிக் கொடுத்தது.(அப்போது சிங்கப்பூரில் இந்திய நாணயம்தான் உபயோகித்தில் இருந்து இருக்கிறது). வாங்கப்பட்ட நிலத்தில் எழும்பிய கோயிலுக்கு "நரசிம்ம பெருமாள் கோயில்" என்று பெயர் வழக்கப்பட்டது. கோவிலுக்குப் பக்கத்தில் ஒரு குளமும் இருந்தது. கோவிலுக்குப் போகும்முன் அக்குளத்தில் குளித்து விட்டு தூய்மையுடன் சன்னதி அடைந்து வழிபட்டு வந்தனர். குளம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணால் மூடப்பட்டுவிட்டது.சிறிய கோவிலாக இருந்தபோதிலும் பக்தர் கூட்டம் அதிகரிக்க,பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பக் கோவில் பெரிதாக இருக்கவேண்டும் என்று அறக்காப்பாளர்கள் அன்றைய பிரிட்டிஷ் அரசிடம் முறையிட்டார்கள். அம்முறையீட்டிற்கிணங்க, 25,792 ச.அடி நிலம் $ 25. 00 வெள்ளி விலையில் 08-05-1894 -ம் ஆண்டு சிராங்கூன் சாலையில் இருக்கும் நரசிங்கப் பெருமாள் கோவில் அறக்காப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. 15-08-1912-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியாரிடமிருந்து 3,422 ச.அடிநிலம் 999 ஆண்டுக்கு வருடம் ஒரு வெள்ளி வீதம் குத்தகைக்கு வழங்கப்பட்டது.

 

 

 

"நரசிம்ம பெருமாள் கோயில்" என வழங்கப்பட்ட பழைய கோவில் அப்போதே சிராங்கூன் சாலையை முகப்பாகக் கொண்டு அமைந்திருந்தது. ஒநரசிம்ம பெருமாள், மகாலெட்சுமி, ஆண்டாள், ஆஞ்சநேயர், மகாலெட்சுமி விக்கரங்களுடன், கோவிலின் வெளியில் அரசமரத்தடியில் பிள்ளையார் சிலையை வைத்து வழிபட்டு வந்துள்ளார்கள்.

 

இக்கோயில் 1907-ம் ஆண்டு முதல் முகமதிய இந்து அறக்கட்டளை வாரியத்தினால் மேலாண்மை செய்யப்பட்டு, பின்னர் இந்து அறக்கட்டளை வாரியத்தின் முழு அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.1952-ம் ஆண்டு, மிகவும் மோசமான நிலையில் இருந்த கோவிலைத் திருத்தி அமைத்துப் புது கட்டிடம் ஒன்றை எழுப்ப வாரியம் முடிவு செய்தது. மேலும் கோவிலுக்குள் நுழையும் வழியைத் தவிர சிராங்கூன் சாலையின் முகப்பில் அமைந்திருக்கும் நிலத்தில் கடைகளுடன் கூடிய வீடுகள் கட்டி 99 வருடக் குத்தைக்கு விடவும் வாரியம் எண்ணியது. அத்திட்டம் அமுல்படுத்தப்பட்டிருப்பின், இப்போது இருப்பதைவிடக் கோவில் சிறியதாக அமைந்திருக்கும் என்பதுடன் கோவில் உத்தேசக் கட்டிடங்கள் பின்புறத்தை முகப்பாகவும் கொண்டு அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.பொதுமக்கள் அத்திட்டத்திற்கு எதிர்ப்புக் தெரிவித்ததால், திட்டத்திற்கு அங்கீகாரம் பெற நீதி மன்றத்திற்கு விண்ணப்பம் செய்த மனு விசாரணைத் தேதியின்றி ஒத்திவைக்கபட்டது. 

 

இருப்பினும், 1957-ம் ஆண்டு ஜூன் 30-ம் நாள் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற உபயக்காரர்களின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் வாரியம் தயாரித்த புதுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு மனநிறைவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.அத்திட்டத்தை 1961-ம் ஆண்டு பிப்ரவரியில் உயர் நீதிமன்றமும் அங்கீகரித்தது. அதனைத் தொடர்ந்து உள்நாட்டு குத்தகைகாரர்களைக் கொண்டு கோயில் கட்டுமானப்பணி ஆரம்பிக்கப்பட்டது.

1963-ம் ஆண்டு தமிழகத்திலிருந்து  வரவழைக்கப்பட்ட சிற்பிகளைக் கொண்டு சிற்ப வேலை நடைபெற்றது. இராஜ கோபுரம்,பிள்ளையார் சந்நிதி, இவற்றைத் தவிர தற்சமயமுள்ள கோவில் 1966-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

 

பெயர் மாற்றம்

 

நரசிங்கப் பெருமாள் கோவில் ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலாக பெயர் மாற்றம் பெற்றது. நரசிங்க அவதாரம் எடுத்த விஷ்ணுவின் உருவத்திற்குப் பதிலாகத் திருப்பதி வெங்கடேசப் பெருமாளை ஒத்த திருவுருவத்தைக்
கோவிலில் மூலவராக வைக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் கருஞ்சிலையும் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டது.ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் வளாகத்திலேயே கோவிந்தசாமி பிள்ளை அவர்களால் ஒரு கல்யாண மண்டபம் கட்டப்பட்டு, 1965-ம் ஆண்டு சிங்கப்பூர் முதல் அதிபர் இஞ்சே யூசோப் பின் இஸ்ஸாக் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. கல்யாண மண்டபம் திருமணங்கள், கூட்டங்கள்  இன்னும் பல்வேறு சமய சமூக நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக இன்று பயன்படுத்தப்படுகிறது.

 

ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் 1966-ம் ஆண்டு புதிப்பித்து கட்டப்பட்டுக் கும்பாபிஷேகம் முடிவுற்றவுடன் கோவிலுக்கு இராஜ கோபுரம் கட்டும் திட்டத்தில் நாட்டம் செலுத்தி அதனைக் கட்டி நன்கொடை மூலம் கட்டி முடித்தனர். 1975-ம் ஆண்டு கும்பாபிஷேத்தைச் சிறப்பாக நடத்த வைணவ ஆகமங்களில் தேர்ச்சி பெற்ற அலங்கார பட்டர் தமிழகத்திலிருந்து வந்து நடத்தினார். 41 நாட்கள் மண்டலாபிகஷேகத்தில் கலாச்சார நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திருமதி. எம்.எஸ். சுப்புலெட்சுமி, புலவர் கீரன் அவர்களும் வருகை புரிந்தனர்.

 

1978-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் சிங்கப்பூர் தேசிய நினைவு சின்னங்கள் பாதுகாப்பு வாரியத்தால் அரசாங்கத்தால் அங்கீரிக்கப்பட்டது.

 

 

 

 

 

கோவில் கோபுரம், விமானத்தில் உள்ள சுதை சிற்பங்களாகத் தாயார், ஆண்டாள், பெருமாள் பொழியுடன் காட்சியளிக்கிறார்கள். சன்னிதானத்தில் மூலவராக பெருமாள், ஆண்டாள், தாயார் ஆகியோரின் உற்சவ திருவுருவங்கள் ஏகாதசி மண்டபத்தில் வைக்கப்பட்டு அன்றாட பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. கொடி மரம் இழைக்கப்பட்டு இந்தியாவிலிருந்து வந்த செம்புத் தகட்டினால் மூடப்பட்டுள்ளது. காரைக்குடியில் உள்ள சிறந்த நுட்பவாதிகளைக் கொண்டு இராஜகோபுரத்திற்கான கதவு செய்யப்பட்டுள்ளது.

 

 

 

முக்கிய விழாக்கள்

 

புரட்டாசி சனி:- புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். ஏழுமலை வெங்கடாசலபதி இந்த புரட்டாசி மாதத்தில்தான் மக்களை நெறிபடுத்தியதாகக் கூறப்படுகிறது. சனிக்கிழமை பெருமாளுக்கு உரிய தினம். அன்று கோயிலில் அதிக கூட்டமிருக்கும். புரட்டாசி சனியில் அன்னதானம் செய்யும் வழக்கம் பெருமாள் கோயிலில் 1900 -களின் தொடக்கத்திலிருந்தே உள்ளதாக வாய்மொழி வரலாறு உண்டு. இன்று வரை புரட்டாசி சனியில் அன்னதானம் நடைபெற்று வருகிறது.

 

 

வைகுண்ட ஏகாதசி
 
ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் மற்றொரு முக்கிய விழா வைகுண்ட ஏகாதசி. அன்றிரவு முழுவதும் பக்தர்கள் கண் விழித்துப் பெருமாளை வழிபடுவது வழக்கம். மறுநாள் காலை சொர்க்கவாசல் திறக்கப்படும்.சொர்க்கவாசல் திறந்து தரிசனம் செய்த பிறகே பக்தர்கள் தங்கள் விரத்தை முடிப்பார்கள்.இவ்விழா 1900களின் தொடக்கம் முதல் நடைபெற்று வருகிறது.

 

கலியுகத்தில் பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்து அவர்களுடைய துன்பங்களை நீக்கும் கற்பகத் தருவாக விளங்குகிறார் திருமலை திருவேங்கடமுடையான்.

 

இந்தியாவிலிருந்து இங்கு வந்து வேலை செய்யும் இந்தியர்களுக்கு ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் திருமலைப்  திருவேங்கடமுடையான் போலிருந்து சிங்கப்பூர் பக்தர்களுக்கு அருள்மழை பொழிந்துகொண்டும் கொண்டுள்ளார் ஸ்ரீநிவாச பெருமாள்.

 

பச்சைமாமலைப்போல் மேனி பவளவாய் கமலச்செங்கன்            
அச்சுதா வமரரேறே ஆயர்தம் கொழுந்தோ வென்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும்

 

 

Sri Srinivasa Perumal Temple,
397, Serangoon Road,
Singapore. 218123
Tel. 62985771 Fax. 6298 9884

 

நன்றி: சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியம்
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *