முனைவர் காளைராசன்
முன்பு ஒரு முறை மின்தமிழிலில் திருமதி.சுபாஷினி டெர்மல் அவர்கள் ஐயனார் கோயில்கள் பற்றியும் கிராமதேவதைகள் மற்றும் தெய்வங்கள் பற்றியும் எழுதுமாறு கேட்டிருந்தார். நானும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஐயனார்கோயில்கள் பற்றி எழுதுவதாகக் கூறியிருந்தேன். மேலும் கொல்லங்குடி வெட்டுடையார்காளி பற்றி எழுதுவதாகவும் கூறியிருந்தேன்.
கடந்த நந்தன வருடம் ஐப்பசி 12ஆம் நாள் (28 அக்டோபர் 2012) ஞாயிற்றுக் கிழமையன்று சிவகங்கையில் நடைபெற்ற ஒரு திருமணத்திற்குச் சென்றோம். காலையிலேயே திருமணம் இனிதே நடந்து முடிந்தது. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகே உள்ள கொல்லங்குடி அருள்மிகு வெட்டுடையார் ஐயனார் மற்றும் அதன் பரிவார தெய்வமாகிய அருள்மிகு வெட்டுடையார் காளி கோயிலுக்குச் சென்று வழிபட்டோம்.
கொல்லங்குடி
மதுரை-தொண்டி மாநில நெடுஞ்சாலையில், சிவகங்கையிலிருந்து காளையார்கோயில் செல்லும் வழியில் காளையார்கோயிலுக்கு அருகே கொல்லங்குடி உள்ளது.
முன்பு காளையார்கோயிலில் நாணய உற்பத்தி சாலைகள் இருந்தன என்கின்றனர். அவ்வாறு நாணயங்களை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலைகளில் பணியாற்றிய கொல்லர்கள் இந்த ஊரில் வசித்த காரணத்தினால் இவ்வூர் கொல்லங்குடி என வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால் இவ்வூரில் வேளார் (குயவர்) குலத்தினரே அதிகம் வாழ்கின்றனர். ஸ்ரீ வெட்டுடையார் ஐயனார் கோயிலுக்குத் தொண்டு தொட்டுப் பூசைகள் செய்வோர் சுமார் 300 குடும்பங்கள் இக்கிராமத்தில் வாழ்கின்றனர்.
தீர்த்தம்
அருள்மிகு ஸ்ரீ வெட்டுடையார் கோயிலின் தெற்கு வாயிலில் ஒரு பெரிய தெப்பம் உள்ளது. கோயிலின் பின்னே ஒரு வாய்க்கால் உள்ளது.
ஸ்ரீ வெட்டுடைய ஐயனார் ஸ்ரீ பூரணா புஷ்கலா சமேத வெட்டுடைய ஐயனார் மூலவர் ஆவார்.
மண்ணில் புதைந்து கிடந்து. வெட்டி எடுத்ததால் வெட்டுடையார் ஐயனார் என்ற காரணப் பெயர் உண்டாகிவிட்டது. வெட்டுடைய ஐயனாரின் பழைய பெயர் என்ன என்று அறிந்து கொள்ள முடியவில்லை. ஐயனாருக்குச் ஜடாமகுடம் இல்லாமல், காளிக்கு உள்ளது போல, அக்னிகேசமாக இருப்பது ஒரு சிறப்பு.
காளி
அனைத்து ஐயனார்களுக்கும் உரியது போலவே இவருக்கும் எல்லாப் பரிவார தெய்வங்களும் உள்ளனர்.
இப் பரிவார தெய்வங்களுள், கருவுற்ற தாயையும் பிள்ளையையும் காப்பதில் சூலாட்டுக் (சூல்+ஆடு) காளி பிரசித்தம்.
ஸ்ரீ வெட்டுடையார் காளி
அனைத்து ஐயனார் கோயில்களிலும், ஐயனார் கிழக்கு முகமாக இருப்பார். ஐயனாரின் பரிவாரதெய்வங்களில் ஒன்றான காளியானது, ஐயனாரின் வலது புறத்தே வடங்கு நோக்கி இருப்பாள். ஆனால் இக்கோயிலில் வெட்டுடையார்காளியானவள் பத்துக் கைகளுடன் பல்வேறு ஆயுதங்களுடன் ஐயனாரைப் பார்த்தபடி மேற்கு நோக்கி இருக்கிறாள்.
வெட்டுடையார் ஐயனார் கோயிலில் உள்ளதால் வெட்டுடையார்காளி என்ற காரணப் பெயர் உண்டானது.
வக்கற்றோரும், வகையற்றோரும், தெம்பற்றோரும், திராணியற்றோரும், திக்கற்றோரும் நாணயம் தவறியோரிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளத் தெய்வமே துணையென்று வெட்டுடையார்காளியிடம் முறையிடுகின்றனர்.
தங்களது முறையீடுகளைச் சொல்லிக் காசு (நாணயம்) வெட்டிப் போடுகின்றனர்.
இவ்வாறு யாரேனும் பிராது கொடுத்தால், வெட்டுடையார்காளியானவள் சோணைச்சாமியை ஏவிவிட்டு உண்மை நிலையை அறிந்துகொண்டு தண்டனை வழங்குகிறாள் என்பது ஐதீகம்.
அருள்மிகு வெட்டுடையார்கோயில் பரம்பரை ஸ்தானிகர் சீர்மிகு.கண.சந்திரன் அவர்கள் அளித்த பேட்டியை இணைத்துப் பதிவு செய்துள்ளேன். இவரது பேட்டியில் அரிய பல கருத்துக்களைப் பதிவு செய்தள்ளார்.
பேட்டியைக் கேட்க: http://voiceofthf.blogspot.de/2012/11/blog-post.html