Home Games விளையாட்டுப்பாடல்கள்

விளையாட்டுப்பாடல்கள்

by Dr.K.Subashini
0 comment

முனைவர் ச. கண்மணி கணேசன்

ஓய்வுபெற்ற முதல்வர், காளீஸ்வரி கல்லூரி, சிவகாசி, தமிழ்நாடு

 

இது ஒரு குழு விளையாட்டின் போது பாடப்படும் பாட்டு.
பாட்டில் ஏதோ குறிப்புப் பொருள் உள்ளது என்று இப்போது புரிகிறது. ஆனாலும் தெளிவாகத் தெரியவில்லை. சிறு வயதில் பொருள் புரியாமலேயே இதை பாடிக்கொண்டு விளையாடுவதுண்டு.
எத்தனைபேர் வேண்டுமானாலும் சேரலாம்.

1) மக்கா சுக்கா பால் பரங்கி
ஆட்டுமை கூட்டுமை சீ சல்
சல்லத் தூக்கி மேல போட்டா செட்டியார் வீட்டு நண்டு
நண்டத் தூக்கி மேல போட்டா நாகரத்தினப் பாம்பு
பாம்பத் தூக்கி மேல போட்டா பாளையங்கோட்டை ராஜாவுக்கு விடிய விடியக் கல்யாணம்

வட்டமாக அமர்ந்து இரண்டு கைகளையும் கவிழ்த்து வைக்க வேண்டும்.
விளையாட்டை நடத்திச் செல்பவர் ஒரு கையை மட்டும் கவிழ்த்து வைத்து மறு கையின் ஆள்காட்டி விரலால் எல்லோருடைய கவிழ்த்த கையையும் வரிசையாகத் தொட்டுக் கொண்டே இப்பாட்டைச் சொல்வார். பாட்டு முடியும் போது யாருடைய கையின் மேல் ஆட்காட்டிவிரல் இருக்கிறதோ அந்தக் கையைப் புரட்டி மல்லாக்க வைக்க வேண்டும். மீண்டும் பாட்டு தொடரும்….கடைசியில் கை புரளும்…இப்படியே தொடர்ந்து செய்ய… மல்லாந்த கையில் பாட்டு முடிந்தால் அந்தக்கையைப் பின்னெடுக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு கையாகக் கழித்துக்கட்டி இறுதியாக எந்தக்கை பின்னெடுக்காமல் உள்ளதோ அவர்தான் தோற்றவர்…. அவர்தான் நொண்டி அடித்து வந்து மற்றவர்களைத் தொட வேண்டும்.

 

2) பிஸ்கட் பிஸ்கட் ஜாம் பிஸ்கட்
என்ன ஜாம் ரா ஜாம்
என்ன ரா கோ ரா
என்ன கோ டீ கோ
என்ன டீ பாட்டி

மேற்சுட்டிய விளையாட்டுக்கு இப்பாட்டையும் பாடி விலக்கி இறுதியில் ஒருவரை நொண்டி அடிக்கத் தேர்வு செய்வது உண்டு.

3) ஒரு பத்தி இரு பத்தி ஓரி யா மங்களம்
சீப்பு சிணுக்கரி சின்னப்பிள்ள லாலாச்சி —சிச்சிக்கோ

இப்பாடலும் ஒருவர் தவிரப் பிறரை விலக்கி நொண்டி அடிக்க ஆள் தேர்வு செய்யப் பாடப்படும். இதில் எதோ நகைச்சுவைக் கருத்து பொதிந்துள்ளது என்று மட்டும் தெரிகிறது. ஆனாலும் தெளிவுபடவில்லை.

அமர்ந்த நிலையில் குழுவாகச் சேர்ந்து விளையாடுவது 

1,2,3 ஆகிய எண்ணிட்ட ஏதேனும் ஒரு விளையாட்டில் இறுதியாகத் தோற்பவர் ஆட்டத்தை நிகழ்த்துபவர் மடியில் குப்புறப் படுத்துக் கொள்ள வேண்டும். பிறர் எல்லாம் தம் கைகளை அவரது முதுகில் விரித்து வைப்பர். சிறு துரும்பு ஒன்றை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டே ஆட்டம்நடத்துபவர் ஒவ்வொரு கையிலும் அத்துரும்பை வைத்து வைத்து எடுத்துக் கடைசியில் ஒருவரிடம் வைத்தே விடுவார்.அப்போது

“அடுப்புல கெடந்த மிதுக்கம்பழத்த
யாரெடுத்தா? எவரெடுத்தா?
காமன் எடுத்தான் ;காமன் தலையில
கொள்ளி வைக்க ; உருண்டை தெரண்டை
உருண்டை தெரண்டை ……”

என்று பாடிக் கொண்டே எல்லோரும் நிமிர்ந்து இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றோடொன்று சேர்த்து தேய்த்துக் கொண்டே இருப்பர். எந்த உள்ளங்கையில் துரும்பு இருக்கிறது என்று நிமிர்ந்தவர் கண்டுபிடிக்க வேண்டும். அது தான் அவருக்கு வெற்றி. கண்டுபிடிக்க இயலவில்லை என்றாலும்; தவறாகக் கூறினாலும் மீண்டும் குப்புறப் படுக்க வேண்டும்.

 

இருவர் சேர்ந்து விளையாடும் ஆட்டங்கள்

இருவர் சேர்ந்து விளையாடும் ஆட்டங்கள் பின்வருமாறு :

1) ஒருவர் இருகைகளையும் சேர்த்து தாமரைப்பூ போல மலர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும். மற்றோருவர் தனது ஒரு உள்ளங்கையை மடக்கி எதிரில் இருப்பவர் கைகளுக்குள் குத்த வேண்டும். பின்வரும் பாட்டைப் பாடி முடித்து பிடிகொழுக்கட்டை என்று சொல்லும் போது குத்துபவர் கையைக் குத்து வாங்குபவர் பிடிக்க வேண்டும் .பிடிபடாமல் தப்பிப்பது குத்துபவர் சாமர்த்தியம்.

மாக்கொழக்கட்டை –
மஞ்சக்கொழக்கட்டை
மாமியார் கொடுத்த
பிள்ளையார் கொழக்கட்டை
பிடி கொழக்கட்டை.

2) ஒருவர் தன் கை ஒன்றைக் கவிழ்த்து வைத்து அமர; மற்றவர் எதிரில் அமர்ந்து தன் கையைக் குவித்து மடக்கி; கவிழ்ந்திருக்கும் கையின் இரு புறமும் குத்தி பின்னர் கை மேலே குத்த வேண்டும். குத்து வாங்காமல் தப்பிப்பது அவரது சாமர்த்தியம். தப்பாமல் குத்துவது இவரது சாமர்த்தியம். இவ்வ்விளையாட்டின் போது சொல்லப்படும் வாசகம் :

“தத்தக்கா -புத்தக்கா – தவக்களை “
‘தத்தக்கா, புத்தக்கா’

என்று சொல்லும் போது கையின் இருபுறமும் அடுத்தடுத்து குத்துவர். ‘தவக்களை’ என்று சொல்லும் போது கைமேல் குத்து விழும்.

கடற்கரையில் அமர்ந்திருக்கும் போதோ, / ஆற்றங்கரையில் அமர்ந்திருக்கும் போதோ;அல்லது ஆற்று மணல் கொட்டிக் கிடைக்கும் போதோ இருவர் மட்டும் சேர்ந்து விளையாடும் ஆட்டம் இது:
மண்ணில் நெடுக இரண்டு வரிசையாகப் பள்ளங்கள் அமைத்துக் கொள்வர். ஒருவர் தம் கையில் சிறு துரும்பை எடுத்துக் கொண்டு அதை ஒவ்வொரு குழியிலும் ஒளித்து வைப்பது போல் பாவனை செய்து கொண்டே

“கிச்சு கிச்சு தாம்பாளம் ; கியா கியா தாம்பாளம் “

என்று பாடிக் கொண்டு இறுதியில் சாமர்த்தியமாக ஒரு குழிக்குள் மறைத்து விடுவார். எந்தக் குழிக்குள் அவர் வைத்தார் என்பதைக் கூறுவது தான் மற்றவரின் சாமர்த்தியமான வெற்றி .

 

இரண்டு குழுவாகப் பிரிந்து ஆடும் விளையாட்டு:

முதலில் குழுத்தலைவர் என இருவர் இருக்க வேண்டும். அவர்கள் உத்தி கேட்கும் தகுதி உடையவர்.
எஞ்சியிருப்பவர் எல்லாம் இருவர் இருவராகப் பிரிந்து சென்று தம் இருவருக்கும் தனித்தனியாக ஒரு ரகசியப் பெயர் வைத்துக் கொள்ள வேண்டும். தலைவர் முன்னால் வந்து ” உத்தி உத்தி யார் உத்தி?” என்று கேட்க வேண்டும். அதாவது தம் ரகசியப் பெயர்களை இன்னார்க்குரியது என்று காட்டிக் கொள்ளாமல் சொல்லி; இருவரில் யார் யாருடைய அணி என்று உறுதி செய்யும் முறை இது. இரண்டு தலைவர்களும் அடுத்தடுத்து மாறி மாறி தம் முறை வரும் போது உத்தி கேட்க வேண்டும். (சான்றாக உத்தி பிடித்த இருவரும் ஒருவருக்கு மல்லிகை என்றும்; இன்னொருவருக்கு ரோஜா என்றும் ரகசியப் பெயர் வைத்திருக்கலாம். உத்தி கேட்பவர் முன் “மல்லிகை வேண்டுமா? ரோஜா வேண்டுமா? என்று கேட்க வேண்டும். கேட்பவர் ‘ரோஜா’ என்று பதில் சொன்னால் அப்பெயரை வைத்துக் கொண்டவர் உத்தி கேட்பவர் அணியைச் சேர்ந்தவர்; எஞ்சியவர் மற்றவரின் அணியைச் சேர்ந்தவர். இந்த ரகசியப் பெயர் வைப்பதில் சிறுவரின் கற்பனைக்கும் புதுமை புனைதலுக்கும் வேலை இருக்கும்.)இப்படிக் கேட்டு இரண்டு அணியாகப் பிரிந்த பின்னர் ஒவ்வொரு அணியினரும் எதிரெதிராக வரிசையாக நின்று கொள்ள வேண்டும். இரு புறமும் அருகருகே இருப்பவரின் கையுடன் கை கோத்துக் கொண்டு பின்வருமாறு ராகத்தோடு எல்லோரும் சேர்ந்து முன்னே அடி எடுத்து வைத்து கேள்வி கேட்டுப் பதிலும் சொல்லிக் கொள்வர். கேள்வியும் பதிலும் வருமாறு:

“பூப்பறிக்க வருகிறோம்; பூப்பறிக்க வருகிறோம் இந்த மாதத்தில்”
“எந்தப் பூவைப் பறிக்க வருகிறீர்கள் இந்த மாதத்தில் ?
” —————- பூவைப் பறிக்க வருகிறோம் இந்த மாதத்தில் “
“யாரை விட்டு அனுப்புகிறீர்கள் இந்த மாதத்தில்?”
“——————ஐ விட்டு அனுப்புகிறோம் இந்த மாதத்தில்”.

பதில் சொல்லும் குழு தன் விருப்பத்திற்கேற்ப எதிரணியில் ஒரு பெயரையும், தன் அணியில் ஒரு பெயரையும் உரக்கச் சொல்லும்.

இருவரும் ஒருவரை ஒருவர் தம் பக்கம் இழுக்கும் பலப்பரீட்சையில் ஈடுபடுவர். வலுத்த கை உடையவர் வெற்றி பெறுவார். இழுக்கப்பட்டவர் வெளிச்செல்ல வேண்டும்.கேள்வி கேட்பதும் பதில் உரைப்பதும் இரு அணிக்கும் மாறி மாறி வரும் வாய்ப்பாகும். பிறகு மீண்டும் கேள்வியும் பதிலுமாகப் பாடல் தொடர்ந்து அடுத்த பலப்பரீட்சை ……….என விளையாட்டு தொடரும். எதோ ஒரு அணி ஆளில்லாமல் எல்லோரும் வெளியேறும் போது விளையாட்டு முற்றுப் பெறும்.

 

 

You may also like

Leave a Comment