வள்ளிமலை ஸ்வாமிகள்

வள்ளிமலை ஸ்வாமிகள்

திருமதி.கீதா சாம்பசிவம்

 

முருகப் பெருமான் பேரில் அருணகிரிநாதர் திருப்புகழைப் பாடிவிட்டுப் போயிட்டார். ஆனால் அந்தத் திருப்புகழைத் தமிழ்நாடெங்கும் பரப்பியது யார் தெரியுமா? திருப்புகழைத் தொகுத்து அதை மீண்டும் பரப்பியவர் சச்சிதாநந்த ஸ்வாமிகள் ஆவார். திருப்புகழைப் பரப்பியதால் திருப்புகழ் ஸ்வாமிகள் என்றும் அழைக்கப் பட்டார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவதரித்த இம்மஹான் தமது ஞானத்திலும் சித்தி அடைந்தார். திருப்புகழைப் பரப்புவதிலும் சித்தி அடைந்தார். இவரின் சமாதி இருக்குமிடம் வள்ளிமலையில் தான். சச்சிதாநந்த ஸ்வாமிகளின் தவ வாழ்க்கை சிறப்புப் பெற்றதும் வள்ளிமலையாலே தான். இந்த வள்ளி மலை  வேலூரில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் உள்ளது. வேலூரில் இருந்து 23 கிமீட்டர் தூரம் இருக்கலாம்.  இந்த வள்ளி மலைக்குச் சென்னையிலிருந்து செல்ல காட்பாடி ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். சோளிங்கர்-திருத்தணி சாலையில் சென்றால் சுற்றிலும் பச்சைப் பசேல் என வயல்கள் ஒருகாலத்தில் இருந்த இடத்தில் வழியெங்கும் சிறு சிறு குன்றுகள். அத்தகையதொரு குன்றுதான் வள்ளிமலை.
 
வள்ளி இங்கே தான் தினைப்புனம் காத்து வந்ததாகவும், அப்போது தான் முருகன் கிழவர் உருவில் வந்து வள்ளியிடம் தேனும், தினைமாவும் பெற்றுச் சாப்பிட்டதாகவும், அப்போது தாகம் எடுத்த முருகனுக்கு வள்ளி சுனையிலிருந்து நீர் அருந்தக் கொடுத்தாள். அந்தச் சுனை இங்கே இருப்பதாகவும் சொல்கின்றனர்.  கடைசியில் வள்ளியை முருகன் மணம் புரிந்து கொண்டதும் இங்கே தான் என்றும் அங்கே உள்ள ஒரு சுரங்கப் பாதை வழியே தான் முருகன் வள்ளியைத் திருத்தணி அழைத்துச் சென்றதாகவும் கூறுகின்றனர். இப்படி வள்ளியையும், முருகப் பெருமானையும் சம்பந்தப் படுத்திப் பல இடங்களை இங்கே காட்டுகின்றனர்.  அவர்களை நினைவுறுத்தும் சம்பவங்களைத் தாங்கிய இடங்களே இங்கே காணமுடிகின்றன. இப்படி முருகன் புகழைப் பேசும் ஓர் இடத்தைத் தேடி வந்து தவ வாழ்க்கை மேற்கொண்டார் வள்ளிமலை ஸ்வாமிகள். அவர் யார் என்றும் எங்கிருந்து வந்தார் என்றும் காண்போமா?
 
கோயம்புத்தூருக்கு அருகே ஒரு கிராமம். பூநாச்சிபுதூர் என அழைக்கப் படும் அந்தக் கிராமத்தில் சிதம்பர ஐயர் என்பவர் வசித்து வந்தார். வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றிருந்த பண்டிதர் ஆன அவர் முதல் மனைவி இறந்துவிட மகாலக்ஷ்மி என்னும் உறவுப் பெண்ணை இரண்டாம் முறையாக மணம் செய்து கொண்டார். இருவருக்கும் பல வருஷங்கள் குழந்தை பாக்கியமே இல்லை. மகாலக்ஷ்மிக்கு அதீத இறை பக்தி உண்டு. ஒருநாள் பாம்பு ஒன்று படமெடுத்து ஆடுவதைக் கண்ட மகாலக்ஷ்மி பயந்து போய் அருகில் உள்ள திருச்செங்கோடுக்கு (அதற்கு நாககிரி என்ற பெயரும் உண்டு) வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபாடுகள் செய்வதாக வேண்டிக் கொண்டாள். பாம்பு மறைந்தது. திருச்செங்கோடு அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப் பட்ட தலமாகும். தனது வேண்டுதலை நிறைவேற்றினாள் மகாலக்ஷ்மி. பனிரண்டு அமாவாசைகள் தொடர்ந்து திருச்செங்கோடு சென்று நெய்தீபம் ஏற்றி வழிபட அதன் பலனாக ஒரு பெண்குழந்தை பிறக்க நாகம்மாள் என்ற பெயரிட்டார். ஆண்குழந்தை ஒன்றும் பிறந்தது. அந்தக் குழந்தைக்கு அர்த்தநாரீஸ்வரர் ஆன ஈசன் பெயரையே அர்த்த நாரி என வைத்தார். அர்த்தநாரிக்கு ஐந்து வயதாகும்போது தந்தை சிதம்பர ஐயர் இறந்துவிட்டார். திகைத்த மகாலக்ஷ்மி தன் தமையன் வீட்டில் தஞ்சம் புகுந்தார். அர்த்தநாரிக்கு மாமன் வீட்டிலேயே உபநயனமும் ஆனது. பள்ளியிலும் சேர்க்கப் பட்டார். ஆனால் படிப்பே வரவில்லை. ஆகவே பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டார். நல்ல குரல்வளம் இருந்ததால் ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தான் அர்த்த நாரி. பாலமுருகன், பாலகிருஷ்ணன் போன்ற வேடங்களை ஏற்று அற்புதமாகப் பாடி ஆடி நடித்தான்.
 
மாமன் தன் மகளையே திருமணமும் செய்து வைத்திருந்தார். பிழைப்புக்காக மைசூர் சென்று அரண்மனையில் வேலை பார்த்தார் அர்த்தநாரி. அரண்மனையில் சமையல் வேலை பார்த்த அர்த்தநாரிக்கு அங்கேயே கூட வேலைசெய்த நஞ்சம்மா இரண்டாம் மனைவியாக வாழ்க்கைப் பட்டாள். முதல் மனைவி தன் மாமியாருடன் பூநாச்சிபுதூரில் வசித்துவந்தார். அவரின் குழந்தைகள் ஒவ்வொன்றாக இறக்க அதே ஏக்கத்தில் மகாலக்ஷ்மியும் இறந்தார். இரண்டாம் மனைவியான நஞ்சம்மாவின் குழந்தைகளும் இறக்க கடைசியாகப் பிறந்த நரசிம்மன் என்ற சிறுவன் மட்டும் உயிருடன் இருந்தான். வாழ்க்கை மீது வெறுப்புக் கொண்ட அர்த்தநாரி தற்கொலை செய்துகொள்ள எண்ணினார். அடிக்கடி ஏற்பட்ட வயிற்று நோவும் அவரை வருத்தி வந்தது. அதுவரையிலும் இறை உணர்வோ, பக்தியோ சிறிதும் இல்லாமல் வாழ்க்கை நடத்தி வந்த அவருக்கு இப்போது அடிக்கடி இறை உணர்வும், சிந்தனைகளும், உயிர் பற்றிய தத்துவங்களும் வலம் வர ஆரம்பித்தன. பழநி சென்று முருகனைத் துதித்தால் வியாதி தீரும் என அனைவரும் சொன்னதால் மைசூர் அரண்மனை வேலையை விட்டு விட்டு மனைவியுடனும், எஞ்சி இருந்த ஒரு குழந்தையுடனும் பழநிக்கு வந்தார் அர்த்தநாரி.
 
அங்கே வந்ததுமே தன் மனம், உடல் இரண்டுமே புத்துணர்ச்சி அடைந்ததை  உணர்ந்தார் அர்த்தநாரி. வயிற்று வலியும் படிப்படியாய்க்குறைந்தது. அர்த்தநாரிக்கு சந்நியாசி ஆகவேண்டும் என்ற ஆவல் பிறந்தது. ஆனால் மனைவி, குழந்தையுடன் குடும்பஸ்தர் ஆன அவருக்கு சந்நியாசம் கொடுக்க யாரும் முன்வரவில்லை. வெறுப்படைந்த அர்த்தநாரி சொந்த ஊரான பூநாச்சிபுதூர் சென்று எஞ்சி இருந்த சொத்துக்களை எல்லாம் பிரித்துக் கொடுத்துவிட்டுத் தான் எதுவும் வைத்துக் கொள்ளாமல் பழநிக்குத் திரும்பினார். அன்ன ஆகாரம் எதுவுமில்லாமல் ப்ரசாதமாய்க் கிடைத்த பாலையும், பழத்தையுமே உண்டு வந்தார். எப்போதும் கோயிலில் பூஜை, தியானம் செய்வது என ஆலய மண்டபத்திலேயே தங்கி இருந்தார்.  மைசூரிலிருந்து வந்ததால் இவரை மைசூர் ஸ்வாமிகள் என அங்கே வரும் மக்கல் அழைக்க ஆரம்பித்தனர்.
 
ஆலயப் பணிகளில் உதவி வந்தார். மக்களைத் தரிசனத்துக்குச் செல்ல ஒழுங்கு செய்வார். அதிகாலையில் எழுந்து நதியில் குளித்துக் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு ஆயிரத்தெட்டு காயத்ரி ஜபம் செய்வார்.  கோயிலுக்கு வரும் அன்பர்கள் பாடும் திருப்புகழ் பாடலைக் கேட்டுக் கேட்டு அதில் ஈடுபாடு பிறந்தது. திருப்புகழ்ப் பாடல்களில் தன்னை மறந்தார். அதற்காக மீண்டும் படிக்க ஆரம்பித்து எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டு திருப்புகழை மனப்பாடம் செய்தார். தினமும் தான் கற்ற திருப்புகழை முருகன் சந்நிதியில் பாட ஆரம்பித்தார். நல்ல குரல்வளம் நிரம்பிய அவரால் பாடப் பட்ட திருப்புகழ் பெருமை அடைந்ததா? அல்லது ஸ்வாமிகளுக்குப் பெருமையா? சொல்வது கடினமே.

 

ஸ்வாமிகள் பாடும் திருப்புகழ்ப்பாடல்களைக் கேட்கக் கூட்டம் கூடியது. திருப்புகழ் ஸ்வாமிகள் என்ற பெயரிலும் அழைக்க ஆரம்பித்தனர் மக்கள். பழநியில் இருந்து பொதிகைமலை, பாபநாசம், திருக்குற்றாலம் போன்ற இடங்களுக்குத் தல யாத்திரை சென்றார் ஸ்வாமிகள். அங்கே பலரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் பல ஞாநிகளும் சித்தர்களும் அடங்குவார்கள். அவர்களின் ஆசிகளோடு அல்லாமல் சித்துக்களும் கைவரப் பெற்றார் ஸ்ரீஸ்வாமிகள். தன்னை நம்பி வந்து வேண்டுவோர்க்குத் திருநீறு பூசுவார். மூலிகைகள் மூலம் மருந்துகள் கொடுத்துவந்தார். பலருக்கும் நோய்கள் குணமடைய மக்கள் நம்பிக்கையுடனும், பக்தியுடனும் அவரைத் தேடி வந்தனர். திருச்செந்தூர், மருதமலை, ராமேஸ்வரம், கதிர்காமம் போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று முருகனைத் தரிசித்துவந்தார். நாளுக்கு நாள் துறவு மேற்கொள்ளும் ஆசை அதிகரித்துவந்தது. ஆனால் வழிதான் தெரியவில்லை. அப்போது ஓர் அன்பர் திருவண்ணாமலைக்குச் சென்றால் வழிபிறக்கும் என்று சொல்ல, உடனே திருவண்ணாமலைக்குப் பயணம் ஆனார் ஸ்ரீஸ்வாமிகள். சேஷாத்ரி ஸ்வாமிகள், ஸ்ரீரமணர் போன்ற மகான்களுக்கெல்லாம் ஆதரவு கொடுத்து வரவேற்ற திருவண்ணாமலை வள்ளிமலை ஸ்வாமிகளையும் வரவேற்றது.
 
வள்ளிமலை ஸ்வாமிகள் சென்றதும் வேறு யாரிடமும் அல்லை. பகவான் ஸ்ரீரமணரிடமே சென்றுவிட்டார். அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் தரிசித்துவிட்டு வந்திருப்பதாயும் துறவுக்கான தீக்ஷை வேண்டி வந்திருப்பதாயும் வேண்டுகோள் விடுத்தார். ஸ்ரீரமணர் முன்னிலையில் முருகனின் திருப்புகழ்ப்பாடல்களைப் பாடிவந்தார். நாட்கள் கழிந்தன. ஆனால் துறவு கிடைக்கவில்லை.  அங்கிருந்து மீண்டும் திருத்தலயாத்திரை செல்ல எண்ணி ஸ்ரீரமணரிடம் உத்தரவு பெற்று யாத்திரை தொடங்கினார்.  இம்முறை சென்னைக்கு வந்து கந்தகோட்டத்து முருகனைத் தரிசித்து திருத்தணிக்கும் சென்றார். அங்கே ஒரு அன்பர் மூலம் திருப்புகழின் மற்றொரு பாகமும் கிடைக்கவே மனமகிழ்வோடு மீண்டும் பழநிக்கே சென்றார். பழநியில் இருக்கும்போதே பர்மாவில் இருந்த தன் ஒரே மகனை வரவழைத்துத் தன் மனைவியான நஞ்சம்மாவை அவரிடம் ஒப்படைத்தார். பின்னர் வடநாடு சென்று அங்கே இமயாலயத்தில் தவம் செய்யும் யோகிகளைத் தரிசித்தார். அவர்களில் ஒரு யோகி மூலம் தீக்ஷை பெற்று, “சச்சிதாநந்த ஸ்வாமிகள்” என்ற தீக்ஷா நாமத்துடன் துறவு பூண்டார். ஸ்வாமிகள் வடநாட்டுத் தல யாத்திரை மேற்கொண்டபோதே முருகன் அருள் அவருக்குக் கிடைத்திருப்பதை உறுதி செய்யும் வண்ணமாக அவர் பசியுடன் இருக்கும்போது சில குரங்குகள் மூலம் உணவும், இருட்டில் வழிதெரியாமல் தவித்தபோது தீப்பந்தங்கள் துணையாக வந்தும் , முருகன் அருளைப் பூரணமாக அவருக்கு உணர்த்தின.
 
மீண்டும் ரமணரைத் தரிசிக்க எண்ணித் திருவண்ணாமலை சென்றார். அங்கே ரமணரோ அவரைக் கண்டு ஒருநாள், “போ, போ, இங்கே நிற்காதே, கீழே போ” என்று விரட்டிவிட, திருப்புகழ் ஸ்வாமிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் தான் மனதால் குருவாக வரித்தவர், குருவின் வார்த்தையை மீறுவது எப்படி?  மலையிலிருந்து கீழே இறங்கிவிட்டார். என்ன ஆச்சரியம்?? அங்கே இவரை வரவேற்று அழைத்தவரோ ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள். ரமணரின் தீர்க்க தரிசனம் அப்போது தான் புரிந்தது ஸ்ரீவள்ளிமலை ஸ்வாமிகளுக்கு. திருப்புகழ் ஸ்வாமிகளைத் தன்னருகே அழைத்து அமர வைத்துக்கொண்டு அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தார் ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள்.  சிவமானஸ ஸ்தோத்திரத்தின் நான்காம் ஸ்லோகத்தைச் சொல்லி அதன் பொருளையும் விளக்கிச் சொன்னார். அதற்கு ஈடான திருப்புகழை வள்ளிமலை ஸ்வாமிகளைக் கூறச் சொல்லிக் கேட்டுத் தானும் மகிழ்ந்தார் ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள். பின்னர் அவரிடம், “திருப்புகழே உனக்குத் தாரக மந்திரம். உன் சிந்தனை, சொல், செயல் என அனைத்தையும் இந்தத் திருப்புகழுக்கே அர்ப்பணம் செய்து தவ வாழ்க்கை வாழவேண்டும் நீ. வேறு எந்தவிதமான மந்திரங்களோ நூல்களோ உனக்குத் தேவையில்லை. திருப்புகழ்தான் உனக்கு மகாமந்திரம். நீ செல்லுமிடமெல்லாம் இனி திருப்புகழ் ஒலிக்கட்டும். இப்போது நீ வள்ளிமலைக்குச் சென்று தவம் மேற்கொள்வாயாக. விரைவில் நாமும் அங்கே வருவோம்.” என்று ஆசீர்வதித்து அனுப்பினார்.

 

குருவின் ஆணைப்படியே வள்ளிமலை வந்தடைந்தார் ஸ்ரீஸ்வாமிகள். வள்ளிமலையில் தவம் செய்யலானார். அதன் பின்னர் அவர் பெயர் திருப்புகழ் ஸ்வாமிகள் என்பதில் இருந்து வள்ளிமலை ஸ்வாமிகள் என ஆனது.  . சென்னையிலும் சில காலம் தங்கினார் ஸ்ரீஸ்வாமிகள். அவர் சென்னையில் இருந்த சமயம் அவருடைய சீடர்கள் சிலர் அப்போதைய ஆங்கில அரசில் பணி புரிந்து வந்தனர். அந்தச் சமயம் டிசம்பர் 31-ம் தேதி, மறுநாள் ஜனவரி ஒன்றாம் தேதி. தங்கள் ஆங்கிலேய அதிகாரிகளுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லவேண்டும் என ஸ்வாமிகளிடம் தெரிவித்துவிட்டு அந்தச் சீடர்கள் ஆங்கிலேய அதிகாரிகளைச் சந்திக்கச் சென்றுவிட்டனர். மனம் நொந்துபோனார் வள்ளிமலை ஸ்வாமிகள். அழியாத பெருவாழ்வைத் தரும் ஆறுமுகன் இருக்க ஆங்கிலேயரைத் தேடிப் போகின்றனரே? அதுவும் நம் வழக்கம் இல்லாத ஒரு நாளைக் கொண்டாட என ஸ்வாமிகள் மிகவும் வருந்தினார்.  அதுவும் முருகப்பெருமான் விரும்பி மணந்த வள்ளியை நேரிலே தரிசிக்கும் பேறு பெற்றவர் எனவும் சொல்வதுண்டு . . ஆனாலும் உலகத்துக்கே அதிகாரியான முருகனை விட்டுவிட்டு, அவன் புகழ் பாடும் திருப்புகழை விட்டுவிட்டு, நம்மை அடிமைப் படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரைப் பார்த்து அவர்கள் காலில் விழுவதா? 
 
வள்ளி கணவன் பெயரை வழிப்போக்கர் சொன்னாலும் ஊனும் உருகும், உள்ளம் குழையும், உன்மத்தம் ஆகுமே எனச் சொன்ன வள்ளிமலை ஸ்வாமிகள், திருத்தணியில் திருப்புகழைப் பாடிக் கொண்டே படிகளில் ஏறி மேலே செல்ல ஆரம்பித்தார். இது ஆரம்பிக்கப் பட்ட ஆண்டு 1918. திருத்தணியில் 365 படிக்கட்டுகள். ஒரு வருடத்தின் மொத்த நாட்களைக் குறிக்கும் இந்தப் படிக்கட்டுகளில் திருப்புகழைப் பாடிக் கொண்டே பாராயணம் செய்து கொண்டே ஏறி திருத்தணி முருகனைத் தரிசிப்பது ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாகச் செய்தார்.  இவரால் தொடங்கப் பட்ட இந்தப் படி உற்சவம் பின்னர் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீமஹாஸ்வாமிகளால் திருப்புகழ் மணி என்ற பட்டம் சூட்டப் பட்ட டி.எம். கிருஷ்ணஸ்வாமி அவர்களால் தொடரப் பட்டு பிரபலமாக்கப் பட்டு இன்றளவும் நடக்கிறது. பின்னர் இந்தப் படி உற்சவம் கண்ணனுக்கும், கந்தனுக்கும் வித்தியாசம் பார்க்காமல்  பழநி, குன்றத்தூர், திருச்சி, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம், ஸ்வாமிமலை, பெரும்பேறு, மயிலம், போன்ற இடங்களையும் சோளிங்கபுரத்தையும் தழுவிக் கொண்டு நடக்க ஆரம்பித்தது.
 
பின்னர் மீண்டும் வள்ளிமலை வந்தார் ஸ்வாமிகள்.  வள்ளிமலையில் இருந்த ஆலயம் மற்றும் மலைப்பகுதிகளைச் சீரமைத்துத் தமக்கு ஆஸ்ரமமும் அமைத்துக் கொண்டார். திருப்புகழின் பெருமையைப் பரப்பினார்.  நாடி வரும் அன்பர்களுக்குத் திருநீறு அளித்தும், திருப்புகழ் மந்திரம் ஓதியும் நோய் தீர்த்துவந்தார்.  ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி தருவார் ஸ்ரீஸ்வாமிகள். தன்னிடம் வரமுடியாமல் தவிக்கும் அன்பர்களின் இருப்பிடம் சென்று அவர்களின் நோயைத் தீர்த்தும், ஆபத்துகளில் இருந்து அவர்களைக் காத்தும் வந்தார்.
வள்ளிமலை அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்குப் படிக்கட்டுகள் செல்கின்றன. படிகளில் இடப்புறமாய் விநாயகரும் அருணகிரிநாதரும் அருள் பாலிக்க, படிகள் அழகாய்ச் சரியான அளவுகளில் ஏற வசதியாய் இருக்கும் என்று சொல்கின்றனர்.  படிகளின் பாதி தூரத்தில் தெரியும் எட்டுக்கால் மண்டபம் படிகள் திருப்பணி செய்தபோது மண்டபத்தைத் திருப்பணி செய்ய யத்தனித்தார்களாம். ஆனால் அங்கிருந்து திடீரெனப் புகை வந்ததாயும், ஒருவேளை சித்தர்கள் சமாதி அடைந்திருக்கும் இடமாய் இருக்கலாம் என்பதால் அப்படியே விட்டுவிட்டதாகவும் கூறுகின்றனர். மலைக்கோயிலின் சுற்றுச் சுவர் கோட்டை போன்ற அமைப்பில் இருக்கிறது. கொடிமரம் நீண்டு உயர்ந்து காணப்படுகிறது. வேலுக்கும், மயிலுக்கும் தனி சந்நிதியைத் தாண்டி உள்ளே செல்லவேண்டும். குடைவரைக் கோயில். ஒரே பாறையில் குடையப் பட்டுள்ளது, அங்கே வள்ளியை மணந்து கொண்ட இடத்தில் வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீமுருகப் பெருமான் விநாயகர் துணையோடு காட்சி அளிக்கின்றார்.
 
கோயிலினுள் தெரியும் துவாரம் வழியாக வள்ளியை முருகன் திருத்தணி அழைத்துச் சென்றதாய்க் கூறுகின்றனர்.  கோயிலை விட்டு வெளியே வந்தால் இடப்புறம் தனியே தெரியும் பாதையில், பாறைகளையே படிகளாய்ச் செதுக்கி இருக்கும். அந்தக் கரடுமுரடான பாதையில் நடந்தால் சச்சிதாநந்த ஸ்வாமிகளின் ஆஸ்ரமத்தை அடையலாம். முகப்பில் பொங்கியம்மன் சந்நிதி உள்ளது.  ஸ்ரீ ஸ்வாமிகள்  1950-ம் வருஷம் நவம்பர் மாதம் 21-ம் தேதி மஹாசமாதி அடைந்ததாய்த் தெரிய வருகிறது. அவரது பூதவுடல் சென்னையிலிருந்து வள்ளிமலைக்கு எடுத்துவரப்பட்டு அவர் தவம் செய்த குகையிலேயே சமாதியில் வைக்கப் பட்டது. அந்தக் குகையில் தற்சமயம் ஸ்வாமிகளின் சமாதியின் மேலே வேல் மற்றும் சிலை வடிவிலான தக்ஷிணாமூர்த்தி பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. அதன் எதிரே திருப்புகழை நமக்குத் தந்த அருணகிரிநாதரும் காட்சி கொடுக்கிறார்.  வள்ளி வாழ்ந்த இந்த இடத்தில் ஸ்ரீஸ்வாமிகளுக்கு முருகன் வள்ளியோடு பல முறை காட்சி தந்திருக்கின்றார்.  அதுபோல் அங்கே செல்லும் அன்பர்களுக்கும்  அங்கே சென்றதும் மனதில் அமைதியும் மகிழ்வும் பொங்க முருகனும், வள்ளியும் அருள் செய்வார்கள்.

வெற்றி வடிவேலனுக்கு அரோகரா!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *