Home Tamilmanigal வள்ளல் கா.நமச்சிவாயர்

வள்ளல் கா.நமச்சிவாயர்

by Dr.K.Subashini
0 comment

 

தமிழ்மணி – வள்ளல் கா.நமச்சிவாயர்

பேரா.ஆ.திருஆரூரன்

 

புலவர்கள் என்றாலே பிறரை வாழ்த்திப்பாடி வயிறு வளர்ப்பவர்கள்; வறுமையில் வாடுபவர்கள் என்ற எண்ணம் நம் நாட்டில் நெடுங்காலமாக நிலவி வருகிறது. ஆனால், சிறந்த புலவராக விளங்கியதோடு தம்மைப் போன்ற புலவர்களையும் பிறரையும் வாழவைக்கும் வள்ளலாகவும் விளங்கியவர் பேராசிரியர் கா.நமச்சிவாயம்.

 

 
வட ஆற்காடு மாவட்டம் காவேரிப்பாக்கம் என்ற ஊரில், 1876ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி, இராமசாமி முதலியார் – அகிலாண்டவல்லி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
 
தந்தை இராமசாமி முதலியார் காவேரிப்பாக்கத்தில் நடத்தி வந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நமச்சிவாயர் தம் இளமைக்கால கல்வியைக் கற்றார்.

 • நல்வழி
 • நன்னெறி
 • நீதிநெறி விளக்கம்
 • விவேக சிந்தாமணி

முதலிய நூல்களைக் கற்றுத் தேர்ந்த இவர், தமது பதினாறாவது வயதில், காவேரிப்பாக்கத்தை விட்டு நீங்கி, சென்னை தண்டையார்பேட்டையில் தங்கி, அங்கிருந்த ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியேற்றார்.

 

வாழ்க்கையில் முன்னேறத்துடித்த நமச்சிவாயர், தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்க விரும்பினார். தொண்டை மண்டல துளுவ வேளாளர் பள்ளியில் தமிழ்ப் புலவராகப் பணியாற்றி வந்த மகாவித்துவான் மயிலை சண்முகம் பிள்ளையை அணுகி, தமது விருப்பத்தைக் கூற, அவரும் நமச்சிவாயரைத் தமது மாணாக்கராக ஏற்றுக்கொண்டார்.
 
பன்னிரண்டு ஆண்டுகள், தண்டையார்பேட்டையிலிருந்து மயிலாப்பூருக்கு ஞாயிறுதோறும் நடந்தே சென்று பாடம் கேட்டுவந்தார் நமச்சிவாயர்.

 

மகப்பேறு இல்லாத மகாவித்துவான், நமச்சிவாயரைத் தமது மகனாகவே கருதி தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத்தந்தார். நமச்சிவாயரும் ஆசிரியரின் மனம் கோணாது ஒழுகி அனைத்தையும் கற்றுத்தேர்ந்தார்.
 
தமிழாசிரியராகப் பணியாற்ற விரும்பிய நமச்சிவாயருக்குத் தொடக்க காலத்தில் அப்பணி எளிதில் கிட்டவில்லை.
  
1895இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு சிறிய வேலையில் சேர்ந்தார். ஓராண்டுக்குப் பிறகு அதிலிருந்து நீங்கி, சென்னை செயிண்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியில் சேர்ந்தார்.
 
பின்னர், இராயபுரத்தில் இருந்த "நார்த்விக்" மகளிர் பாடசாலையிலும் அதன்பிறகு "சிங்கிலர்" கல்லூரியிலும் தமிழ்ப் பணியாற்றினார். 1902 முதல் 1914 வரை சென்னை வேப்பேரியில் இருந்த எஸ்.பி.ஜி. உயர்நிலைப் பள்ளியில் (தற்போது செயிண்ட் பால்ஸ் பள்ளி) தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.
 
1914ஆம் ஆண்டில் பெண்களுக்கென அரசினரால் தொடங்கப்பட்ட இராணி மேரி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக ஆண்கள் எவரும் பணியாற்ற முன்வராத நிலையில், துணிவோடு அப்பணியை ஏற்றுச் சிறப்பித்தார் நமச்சிவாயர். இறுதியாக, இராஜதானிக் கல்லூரி (மாநிலக் கல்லூரி) யில் தமிழ்ப் பேராசிரியர் பணி இவரைத்தேடி வந்தது.
 
1906ஆம் ஆண்டு சுந்தரம் என்னும் அம்மையாரை நமச்சிவாயர் மணந்தார். கணவரின் குறிப்பறிந்து ஒழுகிய சுந்தரம் அம்மையாரும் விருந்தோம்பி, இல்லாதவர்க்கு ஈந்து, இல்லறத்தில் சிறந்து, ஆண்மக்கள் இருவரையும் பெண் மக்கள் இருவரையும் பெற்றெடுத்தார்.
 
உ.வே.சாமிநாதய்யர், மறைமலை அடிகளார், திரு.வி.க., ஆகியோர் நமச்சிவாயர் காலத்து வாழ்ந்த சான்றோர்களாவர். சென்னைப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு, சென்னை விவேகானந்தா கல்லூரி தமிழ்த்துறை மேனாள் தலைவர் சி.ஜெகந்நாதாசாரியார், உச்ச நீதிமன்ற மேனாள் நீதியரசர் பி.எஸ்.கைலாசம், மேனாள் மத்திய அமைச்சர் ஓ.வி.அளகேசன் ஆகிய பெருமக்கள் பேராசிரியர் கா.நமச்சிவாயரிடம் பயின்ற மாணாக்கர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
 
1917ஆம் ஆண்டில் அப்போதிருந்த தமிழ்க் கழகத்தின், தலைமைத் தேர்வாளராக நமச்சிவாயரை அன்றைய ஆங்கிலேய அரசு நியமித்தது. 1918ஆம் ஆண்டில் தமிழ்க்கல்வி அரசாங்க சங்கத்தில் உறுப்பினர் பதவியை ஏற்றார். 1920 இல் இச்சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1934 வரை இப்பதவியில் தொடர்ந்தார்.
 
அந்நாளில் வித்துவான் பட்டங்கள் வடமொழி கற்றவருக்கே வழங்கப்பட்டன. "தமிழ்க்கல்வி அரசாங்க சங்க"த்தின் தலைவரான நமச்சிவாயர், அத்தடையை அகற்றி, தமிழ் மொழியில் இலக்கண, இலக்கியங்களைக் கற்றவர்களுக்கும் "வித்துவான்" பட்டம் அளிக்க அரசுக்குப் பரிந்துரை செய்தார். அரசும் இவர் கருத்தை ஏற்றுக்கொண்டது. தமிழ் மட்டுமே படித்தவர்களும் வித்துவான் பட்டம் பெற வழிவகுத்த பெருமை கா.நமச்சிவாயரையே சாரும்.
 
1905 வரை மாணாக்கர் தமிழ்ப் பாடங்களைப் படிக்க ஆங்கில அறிஞர்கள் எழுதிய பாடநூல்களையே படிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அக்குறையைப் போக்க நமச்சிவாயரே தமிழ்ப்பாட நூல்களை எழுதத் தொடங்கினார். எஸ்.எஸ்.எல்.சி, இன்டர்மீடியட், பி.ஏ., ஆகிய வகுப்புகளில் இவரது பாட நூல்களே இடம்பெற்றன.

 • பிருதிவிராசன்
 • கீசகன்
 • தேசிங்குராசன்
 • சனகன்

என்ற தலைப்புகளில் நாடக நூல்களையும் இவர் எழுதியுள்ளார். மேலும் நாடகமஞ்சரி என்ற பெயரில் பத்து நாடகங்கள் இவரால் எழுதப்பட்டு, மேடைகளில் அரங்கேறின. சிறந்த குழந்தைக் கவிஞராகவும் திகழ்ந்த நமச்சிவாயர்,

 • ஆத்திசூடி
 • வாக்குண்டாம்
 • நல்வழி

முதலான நீதி நூல்களுக்கும் உரை எழுதியுள்ளார்.

"நன்னூல் காண்டிகை" என்னும் இலக்கண நூலுக்கும் உரை கண்டார். "தமிழ்க்கடல்" என்ற பெயரில் அச்சகம் ஒன்றை நிறுவி,

 • தணிகை புராணம்
 • தஞ்சைவாணன் கோவை
 • இறையனார் களவியல்
 • கல்லாடம்

முதலான நூல்களைப் பதிப்பித்தார்.

 

"நல்லாசிரியன்" என்ற பெயரில் செய்தித்தாள் ஒன்றை, பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். "ஜனவிநோதினி" என்ற மாத இதழில் சிறந்த கட்டுரைகளையும் எழுதிவந்தார் நமச்சிவாயர்.

 

தைத் திங்கள் முதல்நாளைத் தமிழ்த் திருநாளாகக் கொண்டாட வழி செய்தார். திருவள்ளுவருக்கு முன் – திருவள்ளுவருக்குப் பின் என தமிழகத்துக்கு ஒரு சகாப்த கால அளவு கிடைக்க வழிவகுத்தவரும் இவரே. இதற்கு உற்ற துணையாக உ.வே.சாமிநாதய்யரும், மறைமலை அடிகளாரும் இருந்தனர். நமச்சிவாயரது தமிழ்ப்பணி அனைத்துக்கும் பனகல் அரசர், தமிழவேள் சர் பி.டி.இராஜன், டாக்டர் ஏ.எல்.முதலியார், இராஜாசர் அண்ணாமலை செட்டியார் ஆகியோர் பெரும் பங்களிப்புச் செய்துள்ளனர்.
 
அஞ்சா நெஞ்சமும், நிமிர்ந்த நடையும், விடா முயற்சியும், அயரா உழைப்பும் கொண்ட பேராசிரியர் கா.நமச்சிவாயரது வாழ்க்கை வரலாறு, முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி எனலாம்.
 
தமிழுக்கும் தமிழர்களுக்கும் எல்லையில்லா தொண்டாற்றிய இவ்வள்ளல், 1936ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.
 
இவரது நினைவைப் போற்றும் வகையில் சென்னை மண்ணடி பவழக்காரத் தெருவில் இயங்கும் ஏ.ஆர்.சி.மகளிர் பள்ளியில் நக்கீரர் கழகம் – திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரியின் காப்பாளர், சிறுவை மோகனசுந்தரம் என்ற அருந்தொண்டர், ஆண்டுதோறும் பல தமிழ் அறிஞர்களை ஒன்றுதிரட்டி, "நமச்சிவாய நினைவுச் சொற்பொழிவு" நிகழ்ச்சியை 1988 வரை நடத்தி பேராசிரியருக்குப் பெருமை சேர்த்தார் என்பதும், நுங்கம்பாக்கம் இரயில் நிலையம் அருகில் இவர் பெயரால் அமைந்த "நமச்சிவாயபுரம்" என்றும் குடியிருப்புப் பகுதியும் இவரது தமிழ்த்தொண்டுக்குப் பெருமை சேர்க்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கவை.

 

நன்றி:- தினமணி

 

You may also like

Leave a Comment