வரலாற்று ஆசிரியர்
சந்திரசேகரன் – Mon, May 25, 2009
பிற மகான்களையும், சம காலத்து, சரித்திர பெரியோர், அறிஞர்கள், சான்றோரைப் பற்றிய பதிவுகளை கவிதைகளிலும், சரிதைகளிலும், தனது பாடல்களிலும் பதித்தவர் கவியோகி மஹரிஷி சுத்தானந்த பாரதியார்.
‘பெரியவாள் கதை’ என்ற் ஒரு புத்தகம்; அருள்நிலையம் பதித்தது. ஆண்டு 1947 (05-12-1947). ஆவலாய் திறந்து எதோ ஒரு பிராம்மண பெரியவரின் கதை என்று நினைத்துப் படித்..’தேன்’. ஆம் கள்ளுண்ட வண்டு போல் ஆகிவிட்டேன். சரித்திர சான்றுகள், கல்வெட்டுகள், கோவில்கள் என்று சுற்றும் எனக்கு, இதுவரை அறிந்திடாத, சரிவர அறிந்திடாத சரித்திரச் சாகரத்திலிருந்து அரிய துளிகள் பருக கிடைத்தால் எப்படி இருக்கும்?
அதில் ஒரு விசேஷம். ஒவ்வொரு சரித்திர பதிவின் கடைசியிலும் முத்தாய்ப்பாக ஒரு வெண்பா! அந்த கதையின் தலைவனை, அல்லது தலைவியைப் பற்றி!
சத்தியமாய் இந்த சரித்திரங்களைப் இந்த சரித்திரங்களைப் படிப்போருக்குக் கட்டுரையும், இறுதியில் அமைந்துள்ள வெண்பாவும் மனத்தைவிட்டு அகலாதென்பது திண்ணம்.
இந்திய வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை எல்லாம் 28 கட்டுரைகளில் தொகுத்தமைத்து எழுதியிருப்பது மற்றோர் அதிசயம். உங்கள் கருத்துக்கள் என்னுடையவற்றுடன் ஒத்துப்போகிறதா என்று படித்துத்தான் சொல்லுங்களேன்!
1) மாங்கல்யம் காத்த நாடு
புதுக்கோட்டை சமஸ்தானத்தில், தென்னக்குடி ஒரு புகழ் பெற்ற ஊர். ஒரு காலம் அங்கே தென்னன் என்ற அரசன் ஆண்டான். அந்த நாட்டில் பகைவர் படையெடுத்துக் கொள்ளை அடித்தனர். தென்னன் வாளெடுத்துப் பகைவரை ஒழித்து ஊருக்கு நல்லது செய்ய புறப்பட்டான். அவன் மனைவி மங்களாதேவி, ‘நாதா! உம்மைப் பிரிந்து ஒரு கணம் வாழேன். கொடிய போர் முனைக்கு யானும் வந்து உமது பணிவிடைகளைச் செய்வேன்,” என்றெல்லாம் பேசி கண்ணீர் வடித்து நின்றாள். “மங்களம்! உனக்கு வீட்டுப் பணி; எனக்கு நாட்டுப் பணி. நீ இங்கே இரு. இரத்தகளத்தை உனது கருணை விழிகள் காணக்கூடாது. அழகு தெய்வமே, நீ கொடிய காட்டுமிராண்டிப் போர்களை சகிக்க மாட்டாய். நான் பகைவரை ஒழித்துவிட்டு வருவேன். இதோ இந்த மலர். இதியே பார்த்திரு. மலர் வாடுவதற்குள் வருவேன்,” என்று விடை பெற்றுச் சென்றான்.
பத்தினி, கணவன் அளித்த தாமரை மலரை சிவ பாதத்தில் வைத்து, “ அப்பனே, நீயே அவரை நலமாக வரச் செய்ய வேண்டும்,” என்று வணங்கினாள். இரண்டு நாட்கள் கழிந்தன. கணவன் செய்தியே தெரியவில்லை. மலர் வாடிக்கொண்டிருந்தது. பத்தினி மனமும் வாடியது. அச்சமயம் யாரோ ஒருவன் தாடி மீசை பலமாக வைத்துக் கொண்டு, கீச்சுக் குரலில் பேசி, “மங்களம், எனது நண்பனான உனது கணவன் சாகும்போது, தன் சொத்து சுகங்களை எல்லாம் என்னையே பார்த்துக் கொள்ளச் சொன்னான், “ என்றான். பத்தினி, “போ! போ,” என்று அந்த தாடிவாலாவை நெருப்பெழ நோக்கி, முன்பே அடுக்கி வளர்ந்திருந்த தீக்குழியில் இறங்கக் காலெடுத்து வைத்து, “நாதா! இதோ உங்களுடன் வருகிறேன். நான் உடல்; நீர் உயிர். நீர் போனபின் இந்த உடலுக்கென்ன வேலை? இங்கே உமது பணி செய்தேன். அங்கும் உமக்குத் தொண்டாற்ற வருகிறேன்,” என்று தீயில் இறங்கப்போனாள். முன் சொன்ன ஆள், “மங்களம், என்ன காரியம் செய்தாய்? நூறாண்டு வாழ்ந்திரு,” என்றான். ‘நாதனுடனேதான் வாழ்வேன்,” என்றாள் பத்தினி. ‘நானார் பார்?,” என்று தாடியை உருவி எறிந்து எதிரே நின்றான் தென்னன்!
“கண்ணே! உன்னை சோதிக்கவே இந்தக் கதை நடத்தினேன்,” என்றான். அதே சமயம் ஒரு பெரிய மழை வந்து தீக்குழியை அணைத்துவிட்டது! இந்த சம்பவத்தை கேட்ட ஊரார், பத்தினியின் பெருமையைக் கொண்டாடி, அவள் செய்த தீக்குழியை ஒரு பெரிய குளமாக வெட்டி, ஊருக்கு நீர் வளம் பாய்ச்சினர். இன்றும் அந்த ஊருக்கு மாங்கல்யம் கொடுத்த நாடு என்று பெயர் வழங்குகின்றது!
தாமரைக்கு நீருந் தழைக்கும் பயிருக்கு
பூமியும் போலப் பொருந்திவளர் – சேமமிகும்
கற்புக் கனலொளியே காரிகையார் ஆருயிராம்;
அற்புதமெல் லாங்கற்பின் அன்பு!
இதில் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். கட்டுரையின் ஓட்டத்திலேயே ஒரே மூச்சில் அவர் இவற்றைப் புனைகிறார் என்பதைக் காணலாம்.
உதாரணம்: தாடிவாலா.. என்று விளிக்கிறார்! தாடிக் காரன் என்று திருத்தலாமே? இல்லை. இந்த சொலவடை, சொல் வழக்கு பழகு தமிழில் இருந்ததும், வடக்கு தெற்கு என்ற பாகுபாடுகள் பேச்சுத் தமிழில் நுழையவில்லை என்ற சரித்திர சான்றும், இந்த கட்டுரை மூலம் நமக்குப் புலனாகின்றன!