Home village_deities மாவிளக்கு

மாவிளக்கு

by Dr.K.Subashini
0 comment

மாவிளக்கு

திருமதி.கீதா சாம்பசிவம்

 

 

மாரியம்மன் என்றாலே ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தமிழ்நாட்டில் மாவிளக்குப் போடும் வழக்கம் உண்டு. மாவிளக்குப் போடாத தமிழ்ப் பெண்களைத் தேடித்தான் பிடிக்கணும்.  அம்மன் என்றாலே மாவிளக்கும், பானகமும், துள்ளு மாவும், காப்பரிசியும் கூடவே வரும். எங்க அம்மா வீட்டிலேயும் அந்த வழக்கம் இருந்து வந்தது.  அம்மா வீட்டிலேயே மீனாக்ஷி படத்திற்கு முன்னால் மாவிளக்கு ஏற்றி வைப்பார். யாருக்கானும் உடல்நலம் சரியில்லை என்றால் நேர்ந்து கொண்டு கோயிலுக்குப் போய்ப் போடுவதும் உண்டு.  என் மாமனார் குடும்பத்தில் குலதெய்வமே மாரியம்மன் தான்.  ஆகவே ஒவ்வொரு ஆடி, தை மாதம் தவிரவும் நேர்ந்து கொண்டு, புதுக்கல்யாணம் ஆகி வீட்டுக்கு வந்த மருமகளைப் போட வைப்பது என்று வழக்கம் உண்டு.  இந்த வகையில் எங்கள் மகனுக்கு 2005 டிசம்பரில் 11-ம்தேதி திருமணம் நடந்தது.

 

 

 

இது குறித்துப் பகிரப் பல சுவையான தகவல்கள் இருந்தாலும் இந்தப் படங்கள் குறித்த நிகழ்வுகளை மட்டுமே கூறப் போகிறேன். திருமணம் முடிந்ததுமே குடும்பத்தோடு அனைவருமே குலதெய்வம் கோயிலுக்குப் போய் அபிஷேஹ, ஆராதனைகளோடு மாவிளக்கையும் முடித்துக்கொண்டு சென்னை திரும்பவேண்டும் என்ற முடிவு ஏற்கெனவே எடுக்கப்பட்டு இருந்தது.  ஆனால் அந்த வருஷம் கொட்டித் தீர்த்த மழையில் திருமணத்திற்கு நான் எழுந்து நடமாடியதே பெரியவிஷயமாய்ப் போச்சு.  என்றாலும் அதன் பின்னரும் விடாமல் கோயிலுக்குக் கிளம்ப ஏற்பாடுகளைச் செய்துவிட்டோம்.  கோயிலுக்குப் போவதற்கு முதல்நாள் மருமகளுக்கு விசாவுக்கான நேர்முகத் தேர்வு.  கல்லூரித் தேர்வுகளில் எல்லாம் நன்கு செய்திருந்த என் மருமகளும் சரி, தன் மனைவி தன்னோடு வரமுடியுமா, முடியாதா என்ன நடக்குமோ என்ற கவலையிலிருந்த எங்க பையரும் சரி காலையிலே கவலையோடு கிளம்பிப் போனாங்க. ஒருவழியாய்த் தேர்வு முடிந்து மருமகளுக்கு விசாவும் கிடைத்தது என்ற நல்லசெய்தியை அன்று மதியம் 2 மணி அளவில் சொன்னார்கள்.

 

அதே சமயம் மறுநாள் ஊருக்குப் போகமுடியாது என்ற செய்தியை நாங்கள் அவங்களிடம் சொல்லவேண்டி வந்துவிட்டது. அன்று காலைதான்  என் கணவரின் வயதான அத்தை இறந்துவிட்டதால் நாங்கள் குறைந்த பக்ஷம் ஒரு மாதத்துக்காவது கோயிலுக்குப் போய் அபிஷேஹ ஆராதனைகளோ, மாவிளக்கு நேர்த்திக்கடனோ செய்யமுடியாது என்று ஆகிவிட்டது.  பையர் ஜனவரி மாசம் தான் மனைவியோடு ஊருக்குப் போகப் போகிறார் என்பதால் நானும் பொங்கல் கழிச்சுக் கிளம்பினால் தைமாதம் கோயிலுக்குப் போயிட்டு வந்துடலாம் என்று கூறினேன்.  ஆனால் பையரின் வேலைத் தொந்திரவால் அவரால் இருக்கமுடியவில்லை.  குறித்த தேதியில் கிளம்பிட்டாங்க.  அதுக்கப்புறமா 2007-ல் வரப்போறோம்னு சொன்னாங்க. அப்போவும் நவம்பர், டிசம்பர் தான்.  ஆனால் கார்த்திகை மாதம் இல்லை.  மாவிளக்குப் போன்ற நேர்த்திக்கடன்களை மார்கழி மாதம் செய்வதில்லை என்பதால் நான் கொஞ்சம் முன்னாலோ, அல்லது பின்னால் தை மாதமாக இருக்கும்படியோ வரச் சொல்லியும் அவங்களால் முடியலை.  மருமகள் எம்.எஸ். முடிக்கும் நேரம். கட்டாயம் இருந்தே ஆகணும் ஜனவரியில். வேறே வழியே இல்லை.

 

போனவருஷம் தான் அவங்க எங்க விருப்பப்படி கார்த்திகையில் வந்து கார்த்திகை தீபத்துக்கும் இருந்துவிட்டு, கோயிலுக்கும் அழைத்துப் போய் மாவிளக்கு நேர்த்திக்கடனையும் பூர்த்தி செய்துவிட்டு வந்தோம்.  என்னை பொறுத்தவரை ஆடிமாதம் ஒரு வெள்ளிக்கிழமையும், தை மாதம் ஒரு வெள்ளிக்கிழமையும் கோயிலுக்குப் போய் மாவிளக்குப் போட்டுவிட்டு வந்துவிடுவேன்.  அவங்க யு.எஸ்ஸிலிருந்து வரதாலே கொஞ்சம் முன்னே பின்னே தான் இருக்கும், என்றாலும் அம்மா கோவிச்சுக்கவா போறா?? நம் அம்மா தானே??

மாவிளக்கு செய்முறை

 

பச்சரிசி கால் கிலோ,

வெல்லம் பாகு கால்கிலோ தூள் செய்யவும்.

ஏலக்காய் நாலு, ஐந்து,

50கிராம், நல்ல பருத்திப் பஞ்சினால் ஆகிய திரி(நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்,)தேங்காய்

 

நிவேதனம் செய்ய வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கிழங்கு, பூ

 

பச்சரியை நன்கு களைந்து குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஊற வைக்கவும், ஊறிய அரிசியை மிக்சி ஜாரில் போட்டு நன்கு மாவாக்கவும்.  சில வீடுகளில் சலிக்கும் வழக்கம் கிடையாது.  மாரியம்மனுக்குப் போடும் மாவிளக்குப் பொதுவாய்ச் சலிப்பதில்லை என்றாலும் அவங்க அவங்க வீட்டு வழக்கத்திற்கு ஏற்ப மாறும்.  எங்க வீட்டில் சலிப்பதில்லை. நன்கு அரைத்துவிடுவோம்.  மாவாகிவிடும். வெல்லத்தைப் போட்டுக் கலந்தால் நன்கு கெட்டியாக உருட்டும் பதத்தில் வரவேண்டும்.  பந்து போல் உருட்டவேண்டும்,  அவரவர் வீட்டு வழக்கப் படி ஒரு உருண்டை அல்லது இரண்டு உருண்டை பிடிக்கவேண்டும். எங்க வீட்டில் இரண்டு உருண்டை. உருண்டையில் நடுவில் குழி செய்து கொள்ள வேண்டும்

 

அம்மன் சந்நிதியில் அம்மனுக்கு நேரே அம்மன் சாப்பிட்டால் இலையை எப்படிப் போடுவோமோ அப்படி நுனி அம்மனின் இடப்பக்கம் வருமாறு போட்டு மாவு உருண்டைகளை வைக்கவேண்டும்.  குழி செய்த இடத்தில் ததும்ப நெய்யை ஊற்ற வேண்டும். பஞ்சுத்திரியைக் கொஞ்சம் நெய்யில் முன்னாலேயே ஊற வைக்கவும்.  இல்லாட்டி மாவிளக்கை ஏற்றும்போது உடனே எரியாமல் அணைந்து போய் பலருக்கும் மனசு கஷ்டப் படும். பஞ்சுத் திரியை அந்தக் குழியில் விட்ட நெய்யில் வைத்துத் திரியை ஏற்றவும்.  இப்போது பூவை மாலை போல் இரண்டு மாவிளக்குகளையும் சேர்த்துப்போடவும். நாலுபக்கமும் மஞ்சள், சந்தனம், குங்குமத்தால் அலங்கரிக்கவும்.  பூவைத்திருக்கும் இடத்திலேயே வெற்றிலை, பாக்கு, வாழைப்பழத்தையும் வைத்துத் தேங்காயையும் உடைத்து வைக்கவேண்டும்.  திரி நன்கு எரியும்.  நீளமான திரி எரிந்து முடியும் நேரத்தில், (இதை அம்மன் மலை ஏறிவிட்டாள் என்று கூறுவார்கள்) அந்தத் திரியை ஒரு கரண்டியில் அல்லது ஸ்பூனால் எடுத்துக் கோயிலில் இருக்கும் விளக்குகள் ஏதாவதொன்றில் அணையாமல் வைக்கவேண்டும்.  பின்னர் தண்ணீர் சுற்றி நிவேதனம் செய்துவிட்டுக் கற்பூர ஆராத்தி எடுக்க வேண்டும்.

 

துள்ளு மாவு: முன் மாவிளக்குக்குச் சொன்ன அதே அளவு பச்சரிசி வெல்லம் மற்றப் பொருட்களை  எடுத்துக்கொள்ளவேண்டும்.  மாவை மிக்சியில் அரைத்துக்கொண்டு நன்கு காய வைத்து வெல்லத் தூளைச் சேர்த்துத் தேங்காய்துருவல், ஏலக்காய் சேர்க்கவேண்டும்.  இது உதிராகப் பொடியாகவே இருக்கும்.

 

காப்பரிசி: வெறும் பச்சரியை ஊற வைத்து நீரை வடிகட்டிவிட்டுத், தேங்காயைப் பல்லுப் பல்லாகக் கீறிப்போட்டு, வெல்லம், ஏலக்காய்  சேர்க்கவேண்டும். இது பிரார்த்தனைகளில் மட்டுமே செய்யப் படும்.  குழந்தை பிறந்து காப்புப் போடும்போது செய்யும் காப்பரிசியின் பக்குவம் வேறு.

 

பானகம்: வெல்லம், நீர், சுக்கு ஏலக்காய். வெல்லத்தைப் பொடித்துக்கொண்டு வேண்டிய அளவு நீர் விட்டு சுக்கும் ஏலக்காயும் கலந்து கொள்ளவேண்டும்.

 

You may also like

Leave a Comment