Home village_deities மஹாமாரியம்மன்

மஹாமாரியம்மன்

by Dr.K.Subashini
0 comment

 

கீதா சாம்பசிவம்

 

மஹாமாறன் என்னும் அசுரன் தான் பெற்ற தவங்களால் உலகத்து மக்களை எல்லாம் பல வகையிலும் துன்புறுத்தி வந்தான்.  பல்வேறு விதமான நோய்களையும் உண்டாக்கினான்.  அதில் ஒன்றே வைசூரி என்னும் அம்மை நோய்.  இந்த நோய் வந்தவர்களை எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியவில்லை.  உடல் முழுதும் கொப்புளங்கள் உண்டாகிக் கண்பார்வையும் மறைக்கப் பட்டுத் துடிதுடித்த மக்களைக் காக்கவேண்டி அம்பிகை தன்னிலிருந்து உருவாக்கியவளே மஹாமாரி ஆவாள்.  இந்த மஹாமாரி அவதரித்ததுமே மஹாமாறனைக் கொன்றாள்.  அவனால் மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை எல்லாம் தன்னருகில் அம்பிகை அனுப்பி வைத்த கண்டா கர்ணன் என்னும் தேவதையின் உதவியோடு தீர்த்து வைத்தாள்.  அன்று முதல் மக்களின் ஆரோக்கியத்திற்கு அன்னையாக விளங்கி வருகிறாள்.

 

 
இன்னொரு விதத்தில் கூறுவது என்ன வெனில் தேவாசுர யுத்தத்தில் ஜெயித்த தேவர்களைப் பழிவாங்க எண்ணிய அசுரர்கள் குல குருவான சுக்கிராசாரியார் மூலம் அவர்கள் உடலில் அம்மைக் கொப்புளங்களை உருவாக்கினார்கள்.   தாங்க முடியாத வலியாலும், துன்பத்தாலும் துடித்த தேவர்கள் ஈசனை நாடி அவன் பாதங்களைப் பணிந்து வேண்ட, ஈசன் தன் ஜடாமுடியிலிருந்து அன்னை மாரியைத் தோற்றுவித்தார்.  தலையின் கங்கை இருக்கும் இடத்திலிருந்து தோன்றிய இவளை சீதளா என அழைத்தனர்.  அல்லல் பட்டுத் துன்புற்ற மக்களைத் தன் தண்மையான பார்வையாலும், கருணையாலும் காப்பாற்றி நோயை நீக்கிப் பூரண ஆரோக்கியத்தை அளித்தாள் மஹாமாரி.  உடனே தேவர்கள் அனைவரும் தங்களைக் கடுந்துயரிலிருந்து காத்த அன்னை இதே கோலத்தில் அனைத்து எல்லைகளிலும் குடி கொண்டு மக்களைக் கொடும் நோயிலிருந்து காத்தருள வேண்டும் என வேண்ட அவ்விதமே ஆகட்டும் என ஆசியளித்த அன்னை அவ்விதமே இன்றளவும் காத்து வருகிறாள்.
 
மூன்று கண்களுடனும், நான்கு கைகளுடனும், தீ ஜ்வாலை போல் மேல் நோக்கிய கூந்தலுடனும், காட்சி அளிக்கும் அன்னை, கறுப்பு ஆடையில் தோளில் கால சர்ப்பங்களை ஆபரணமாகப் பூண்டு, வலக்காதில் ஸ்ரீசக்ர வடிவான தாடங்கமும், இடக்காதில் தோடும் அணிந்து திருமேனியிலும் ஆபரணங்களைத் தரித்துக்கொண்டு, ஒரு காலை மடித்துக்கொண்டும், மறுகாலைத் தொங்க விட்டுக்கொண்டும், வட்ட வடிவான ஜோதியின் நடுவே தோன்றினாள்.  இந்தக் கோலத்திலேயே இவள் எல்லாக் கோயில்களிலும் பிரதிஷ்டை செய்யப் படுகிறாள்.

 


 

தீமிதிக் குண்டம்!

 

சென்ற வாரம் எங்க ஊர் பரவாக்கரை மாரியம்மன் கோயிலின் தீ மிதி விழாவில் கலந்து கொண்டோம்.  என்னைப் பொறுத்த வரையிலும் இது முதல் தீமிதி விழா.  பல கோயில்களில் நடந்தாலும், தீமிதி அன்று செல்ல முடியாமல் ஏதேனும் பிரச்னை வந்துவிடும்.  சித்திரை மாசம் பெளர்ணமி கழிந்த எட்டாம் நாள் தான் தீமிதிக்கு நாள் பார்க்கின்றனர். இதைக் குறித்த லெளகீகக் கருத்தைத் தற்சமயம் அறிய முடியவில்லை.  எல்லாரும் சுறுசுறுப்பாய்த் தீமிதியில் மூழ்கி இருந்தனர்.  ஒரு மாதம் முன்னாலிருந்தே விரதம் இருக்கின்றனர்.  பிரார்த்தித்துக்கொண்டவர்கள் மட்டுமே பூக்குழி என்றும் அழைக்கப் படும் இந்த அக்னிக்குண்டத்தில் இறங்குகின்றனர்.

 

மாரியம்மனைக் குளிர்விக்கவே இது நடத்தப்படுவதாய்ப் பொதுவான கருத்து.  கோடை நாட்களிலேயே பெருவாரியான தென்மாவட்டங்களின் கிராம தெய்வங்களின் திருவிழாக்கள் நடைபெறும்.  நான் சென்ற சமயம் கும்பகோணத்திலேயே இருக்கும் கிராமதெய்வமான பச்சைக்காளி, சிவப்புக்காளிக்கும் உற்சவம் நடந்து முடிந்திருந்தது.  அதிகச் சூட்டிலிருந்து உடல்நலம் கெடும் என்பதால் அம்மனை வேண்டித் தவமிருந்து தங்களைக் காக்கவேண்டியே இந்தக் கோடைநாட்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.  பூச்சொரிதல், அபிஷேஹ ஆராதனைகள், போன்றவற்றால் அம்மனைக் குளிர்வித்தல் என்பதோடு ஒரு சில பக்தர்கள் உலக க்ஷேமத்திற்கென வேண்டிக்கொண்டும் தனிப்பட்ட பிரார்த்தனைகளுக்காகவும் தீமிதிக்கின்றனர்.  ஒரு சில படங்களைக் கீழே காணலாம்.
 

 

தீமிதிக் குண்டம்!

 

சென்ற வாரம் ஊருக்குப் போனப்போ மாரியம்மன் கோயிலில் தீமிதிக்கான அக்னிக் குண்டத்தை எழுப்பிக்கொண்டிருக்கும் ஊழியர்கள். அம்மன் புறப்பாடு ஆகி ஊர்வலம் வந்து பின்னர் கோயிலுக்கு எதிரே இருக்கும் வயல்வெளியில் ஒரு இடத்தில் பள்ளம் தோண்டி அதிலே நெருப்பைக் காலையிலேயே மூட்டி விடுகின்றனர். மேலேமேலே கட்டைகள் போடப்பட்டு வைக்கோலால் மூட்டம் மாதிரிப் போட்டு வைக்கின்றனர்.

 

இந்தத் தீமிதிக்கெனப் பிரார்த்தனை செய்து கொண்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஒரு மாதம் முன்னாலிருந்து விரதம் இருப்பார்கள். ஒருவேளை உணவு மட்டுமே உட்கொள்ளுவார்கள். ஒரு சிலர் கோயிலிலேயே தங்குவதும் உண்டு. தலையில் கரகம் வைத்துக்கொண்டோ அல்லது காவடி எடுத்தவண்ணமோ இறங்குவதாய் வேண்டிக்கொள்வதும் உண்டு. இங்கே ஒருவர் அலகு குத்திக்கொண்டு காவடி எடுத்து வருகிறார். 

 

 

முதலில் குண்டம் இறங்குவதற்கு உரிமை உள்ளவர் அந்த அந்தக் கோயிலின் பூசாரிகளே ஆவார்கள். ஒரு சில கோயில்களில் ஊர்ப் பெரியவர்கள் இறங்கலாம். என்றாலும் பூசாரியே முதலில் இறங்குகிறார். அக்னியில் இறங்கியதும், காலை உடனே தரையில் மண்ணிலோ, வைக்கக் கூடாது என்பதால்,ஒரு பெரிய அண்டா நிறையப் பாலை வாங்கி, அதைத் தீமிதிக்குண்டத்தின் அருகே ஒரு பள்ளம் தோண்டி அதில் ஊற்றிவிடுகின்றனர். தீமிதிப்பவர்கள் அந்தப் பாலில் காலை நனைத்துக்கொண்டு பின்னரே மேலே ஏறுகின்றனர். இதோ இங்கே பள்ளத்தில் ஊற்றப்பட்ட பால்.  

 

 

 

You may also like

Leave a Comment