இரா.இளங்குமரன்
வெண்ணிலா விளையாட்டு என்னும் பெயரால் 1975 இல் ஒரு நெடும்பாடல் இயற்றினேன். அதில்கடலுக்கு ஒரு பெயர் சூட்டினேன். அஃது ‘ஏடு தின்னி’ என்பது.
யா.வி. பதிப்பு
என் நெஞ்சத்தின் ஆழத்துள் ‘கொடுங்கடல்’ கொண்ட செய்தியும், ‘வாரணங் கொண்ட தந்தோ’ என்னும் இரங்கலும் படிந்து கிடந்தன. அவற்றுக்கு மூலத்தூண்டலாக அடியார்க்கு நல்லாருரை, யாப்பருங்கலவிருத்தியுரை, களவியற் காரிகையுரை, புறத் திரட்டு என்பன அமைந்தன, இவற்றையெல்லாம் உணர்வுடையார் ஒருங்கே கண்டு கொள்ளுமாறு மயிலை. சீனி. வேங்கடசாமி அவர்கள் தொகுத்தளித்த ‘மறைந்து போன தமிழ் நூல்கள்’ என்னும் நூல் பேரசைவு அசைத்தது. இந்நிலையில் யாப்பருங்கல விருத்தி’ யைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகத்திற்காகப் பதிப்பிக்கும் பொறுப்பை யான் மேற்கொள்ள நேர்ந்தது. அது 1973- ஆம் ஆண்டு. அப்பதிப்பின் வழியாக ஏற்பட்ட ஏற்பட்டு வருகின்ற – நலங்கள் எண்ணற்றன.
மேற்கோள் நூற்பாத் தொகுப்பு
96 நூற்பாக்களைக் கொண்ட யாப்பருங்கலத்திற்கு அதன் விருத்தி யுடையார், தொல்காப்பியம், அவிநயம், காக்கை பாடினியம், சிறு காக்கை பாடினியம், பல்காயம், நற்றத்தம், சங்கயாப்பு, மயேச்சுரம் முதலிய இலக்கண நூல்களிலிருந்து 1034 நூற்பாக்களை மேற்கோள் காட்டி விளக்கியுள்ளார். அம்மேற்கோள் நூற்பாக்களின் அருமையும், பெருமையும் உணர்ந்து அவற்றை அடைவு செய்யவேண்டும் எனவுட்கொண்டேன். அப்பணி முடித்த பின்னர் தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களிலும் சிலப்பதிகாரம் முதலிய இலக்கிய நூல்களிலும் உரையாசிரியர்களால் எடுத்தாளப் பெற்றுள்ள மேற்கோள் நூற்பாக்களையும் தொகுத்தேன். ஆகச் சிதறிக் கிடந்த இலக்கண மேற்கோள் நூற்பாக்கள் மட்டும் ஈராயிரத்தைத் தாண்டியிருக்கக் கண்டு கழிபேருவகை யுற்றேன். அவற்றைப் பொருள் வகையால் அகர வரிசைப் படுத்தி "மேற்கோள் விளக்க நூற்பா அகர வரிசை" என்னும் பெயருடன் தனி நூலாக அமைத்துக் கொண்டேன்.
பின்னர்த் தெள்ளிதின் ஆசிரியர் பெயர் புலப்படும் நூற்பாக்களைத் தனித்தனி ஆசிரியர் பெயரால் அடைவு செய்து பார்க்கும் ஆர்வம் மீதூர்ந்தது. அவ்வகையில் அப்பொழுது காக்கை பாடினியத்தையும், அவிநயத்தையும் அடைவு செய்தேன். காக்கை பாடினிய அடைவும் உரையாக்கமுமே என்னுள் முந்து நின்றன.
காக்கை பாடினிய அடைவு
காக்கை பாடினியார் நூற்பாக்களை ஒழுங்குறுத்திப் பார்த்த அளவில் அவர் யாப்பிலக்கணம் மட்டுமே செய்தார் என்பது புலப்பட்டது. அவர் பாக்களை யாப்பிலக்கண முறைவைப்பாகிய எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா, இனம், ஒழிபு என்னும் முறையில் பகுத்துப் பார்வையிட்டேன். அந்நிலையில் யாப்பிலக்கணச் செய்திகள் எனப்படுவனவற்றுள் விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலவற்றைத் தவிர அனைத்துப் பகுதி நூற்பாக்களும் அமைந்து கிடக்கக் கண்டு அளப்பரும் வியப்பில் ஆழ்ந்தேன். என் ஆய்வுப் பார்வையில் என்னையறியாத இன்பம் எனக்கே உளதாகிப்பூரித்து நூலாக்கப் பணியில் புகுந்தேன்.
விடுபாடு நிரப்புதல்
தொடைகளுள் சிலவற்றுக்கும், நேரிசை ஆசிரியப்பா, ஆசிரியத் தாழிசை, குறட்டாழிசை முதலியவற்றுக்கும் மட்டுமே காக்கை பாடினியார் நூற்பாக்கள் கிடைத்தில, அல்லது அவர் நூற்பாக்கள் கிடைத்தும் அவர் நூற்பாக்களெனத் திட்டவட்டமாகப் பெயர் அறிந்து கொள்ள வாய்க்கவில்லை. அதனால்
"முன்னோர் மொழிபொருளே யன்றி அவர்மொழியும்
பொன்னே போல் போற்றுவம்"
என்னும் தொன்னெறிப்படி உரை மேற்கோளாக அமைத்துக் கோடல் சாலும் எனத் துணிந்தேன். அவ்வகையில் சிறு காக்கைப் பாடினியார்க்கு முதன்மை இடம் தந்து நான்கு நூற்பாக்கள் மேற்கொள்ளப்பட்டன. எஞ்சியவற்றுக்கு ஆசிரியர் தொல்காப்பியனார், அவிநயனார் முதலியோர் நூற்பாக்கள் மேற்கொள்ளப் பட்டன. அவ்வாறு மேற்கொள்ளப்ப்பட்ட நூற்பாக்கள் 13. அவற்றின் அடிகள் 17, அவை உரைமேற்கோள் நூற்பாக்கள் என்பதை அவ்வவ்விடத்துக் காட்டி ஆசிரியர் பெயரும் ஆங்காங்குத் தரப்பட்டன.
நூற்கொள்கை வரையறை
காக்கை பாடினியார் நூற்பாக்கள் தொல்காப்பிய இளம்பூரணருரை, பேராசிரியருரை, சேனாவரையுருரை, நச்சினார்க்கினியருரை, ஆகியவற்றிலும் நன்னூல் மயிலை நாதருரை, இறையனார் களவியலுரை, வீரசோழியவுரை ஆகியவற்றிலும் இடம் பெற்றுள. யாப்பருங்கலக்காரிகையுரை, யாப்பருங்கல விருத்தியுரை ஆகிய இரண்டனுள்ளும் மிகப் பலவாக இடம் பெற்றுள. ஒரு நூற்பா காக்கை பாடினியார் பெயரால் இருக்கலாம். பெயரால் இருப்பவை எல்லாம், அவர் நூற்பாக்களெனக் கொள்ள முடியாமையும் உண்டாயிற்று. அதனை நீக்குதற்குக் காக்கை பாடினியார் கொள்கைகளைத் தெளிவு செய்து கொள்ளுதல் இன்றியமையாததாயிற்று.
நேரசை -தனியசை
"வெண்சீர் இறுதியின் நேரசை பின்வரின்
வெண்சீர் வெண்டளை ஆகும் என்ப"
என்னும் நூற்பா டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையக் காரிகைப் பதிப்பிலும், பெரும்புலவர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பிலும், காக்கை பாடினியார் நூற்பா எனக் காட்டப் பட்டுள்ளது. காக்கை பாடினியார் மதம் நேரசையைத் ‘தனியசை’ என்றும் நிரையசையை ‘இணையசை என்றும் கொள்வது. ஆகலின் நேரசை என்னும் ஆட்சியுடைய இந்நூற்பா, காக்கை பாடினியம் சார்ந்ததன்று என விலக்குதற்கு முடிந்தது. அம்முடிவு சரியானதே என்பதை மெய்ப்பிப்பது போல், கழகப் பதிப்பிலும் அண்ணாமலைப் பல்கலைக் கழக பதிப்பிலும் அந்நூற்பா இடம்பெறவில்லை. அதனால் எடுத்த முடிவு உறுதியாயிற்று.
ஒரு பொருளுக்கு இரு நூற்பா
இனியொரு புதுவகைச் சிக்கல், செந்தொடை என்பதற்கு இரண்டு நூற்பாக்கள் கிடைக்கின்றன. அவ்விரண்டும் காக்கை பாடினியார் பெயரால் சில நூல்களிலும் வேறு பெர்யால் சில நூல்களிலும் இடம் பெற்றுள. இவற்றைத் தெளிந்து ஒன்றைத் தேர்வது பொறுப்புடனும் பொறுமையுடனும் செய்யத் தக்கதாம்.
"அசையினும் சீரினும் இசையினும் எல்லாம்
இசையாதாவது செந்தொடைதானே"
என்பது காக்கை பாடினிய நூற்பாவெனக் கழகப் பதிப்பு, உ.வே.சா.நூல்நிலையப் பதிப்பு, அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பதிப்பு ஆகியவை காட்டுகின்றன. கையனார், பல்காயனார் என்னும் பாட வேறுபாடுகளையும் காட்டுகின்றது நூல்நிலையப் பதிப்பு. கையனார் நூற்பாவென மே.வீ.வே. பதிப்புக் காட்டுகின்றது. இவை இவ்வாறிருக்க யாப்பருங்கல விருத்தி இதனைப்பல்காயனார் நூற்பா என்று காட்டுவதுடன், இந்நூற்பா அமைந்துள்ள இடத்திலேயே,
"செம்பகை அல்லா மரபினதாம் தம்முள்
ஒன்றா நிலையது செந்தொடை யாகும்"
என்னும் நூற்பாவைக் காக்கை பாடினியார் பெயரால் காட்டுகின்றது. ஆதலால் முன்னது காக்கை பாடினியம் சார்ந்ததன்று என்று தள்ளவும், பின்னது காக்கை பாடினியம் சார்ந்ததென்று கொள்ளவும் அவ்வுரை உதவியதாம். அது தானே இரண்டு நூற்பாக்கலையும் காட்டி இருவர் பெயரையும் கூறுகின்றது.
இவ்வாறே ‘இன்னிசை வெண்பா’ வின் இலக்கணத்தைக் கூறும் நூற்பாக்கள் இரண்டு காக்கை பாடினியார் பெயரால் சுட்டப் பெறுவதை ஆய்ந்து, "தனிச்சொல் தழுவலவாகி" என்னும் நூற்பாவே அவர் நூற்பாவெனக் கொள்ளப்பட்டது. அதற்குத் துணையாயமைந்ததும் யாப்பருங்கல விருத்தியேயாம்.
உரை மரபு
காக்கை பாடினியத்திற்கு இயன்ற வகையான் உரையெழுதுதல் வேண்டும் என்னும் எண்ணம் உண்டாயிற்று. பழைய நூலாகலின் பழமரபு போற்றுதல் வேண்டும் என்பதும் எழுந்தது. அதனால் அவ்வுரை இயங்குமாற்றைத் திடப்படுத்திக் கொண்டேன். அது வருமாறு:
"இந்நூற்பா என்ன கூறிற்றோ? எனின், "இன்னது கூறிற்று" என்று நூற்பா நுதல் பொருளும், பின்னர் நூற்பாவின் பிண்டப் பொருளும் அதன் பின்னே ஆராய்ச்சியுரை குறிப்புரை விளக்கவுரை எடுத்துக்காட்டு ஆகியனவும் முறையே அமைக்கப் பட்டன.
‘இவ்வாறு கூறியமையால் இது பெற்றாம்’ என்றும், ‘இவ்வாறு கூறாக்கால் இவ்வாறாம்’, என்றும், ‘இவ்வாறு கூறினும் அமையுமாக இவ்வாறு கூறியது இது பெறுதற்கு என்றும்,’ ‘இதற்கும் இதற்கும் இவ்வேற்றுமை’, என்றும் இவ்விலக்கணத்தை இவரிவர் இவ்விவ்வாறு கூறினார் என்றும், இவ்வாறு கூறவேண்டியதென்னை? என்றும் பெயர் கூறுமாற்றானே இலக்கணமும் கூறினார்’, என்றும், ‘நூற்பாவிலேயே இவ்விலக்கணம் அமைய வைத்தார் என்றும் இதனால் இதனக் கூறாராயினர் என்றும் இந்நூற்பாவை இவ்வாறியைக்கவேண்டும் என்றும் இதனை இவ்வாறு கொண்டு கூட்டவேண்டும்’ என்றும் ‘இதனை மேலே கூறினாம்’ என்றும், ‘இதனை முன்னே கூறுவாம்’ என்றும் இது தொல்லாசிரியர் நெறியாம் என்றும் இஃதிவர் மதமாம்’ என்றும், ‘இதனால் தழுவி உரைத்தாம் என்றும் அவ்வுரை இயங்குவதாயிற்று.
எடுத்துக்காட்டு நிரப்புதல்
‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்’ முன்னை மரபு; ஆனால் இலக்கணம் கண்டதற்கு இலக்கியம் படைத்தலும் பின்னை மரபாக அமைந்து விட்டமையால் உரையாசிரியர்கள் பேரிடப் பட்டிருப்பர் என்னும் எண்ணம் எடுத்துக்காட்டு அமைக்குங்கால் தோன்றியது.
வல்லின மோனைக்குக் ‘கயலேர் உண்கண்’ என்னும் பாடல் யாப்பருங்கல விருத்தி வழியால் கிடைத்தது. ஆனால் மெல்லின இடையின மோனைகளுக்கு எடுத்துக்காட்டுக் கிட்டவில்லை. வாளாவிடவும் மனமில்லை. ஆகலின்
"ஞயம்பட உரைக்கும் நாவினர் என்னும்
நலிதுயர்க் காட்படலின்றி
மாண்பயன் எய்தி வாழ்குவர் இனிதே"
என மெல்லின மோனைக்கும்
"வாழைக் கழகு வளமுற நீள்குலை
யாழுக்கழகிசையாம்"
என இடையின மோனைக்கும் புதிது யாத்தமைக்கப் பெற்றன. விளக்கமும் எழுதியாகும் நிலையும் உண்டாயிற்று.
"வல்லின மோனைக்கு நான்கு எழுத்துகள் (க,ச,த,ப) அமைந்த பாட்டைக் காட்டினாராக, மெல்லினத்திற்கு மூன்று எழுத்துகளாலும் (ஞ,ந,ம) இடையினத்திற்கு இரண்டு எழுத்துகளாலும், (வா,யா) சான்று காட்டிய தென்னை எனின் மெல்லினத்துள் ஞ,ந,ம என்னும் மூன்றும் இடையினத்துள் ய,வ என்னும் இரண்டும் அல்லா எழுத்துக்கள் மொழி முதலாகாவாகலின் இவ்வாறு காட்டினம் என்க. இனி "ங" கரம் மொழி முதல் வாராதோ எனின் ‘ஙனம்’ என்னும் ஓரிடத்தன்றி வாராதாகலின் விடுத்தாம்" என்பது அவ்விளக்கம். இவ்வாறே அளபெடைத் தொடைக்குச் சில எடுத்துக்காட்டுப் பாக்கள் யாக்க வேண்டியது நேர்ந்தது. அப்பொழுதுதான், பண்டை உரையாசிரியர்கள் பலரும் பாவன்மை மிக்கோராகவும் விளங்கியிருப்பர் என்பது புலப்பாடாயிற்று.
பழநூற்பயிற்சி நலம்
உறுப்பியல், செய்யுளியல், பொதுவியல் என மூவியல்களாகப் பகுத்துக் கொள்வதற்கும், அவற்றின் உட்பிரிவுகளை வகுத்துக் கொள்வதற்கும் நூற்பாக்களை முறையாய் அடைவுறுத்திக் கொள்வதற்கும், சிற்றுரை வரைதற்கும் பழநூற் பயிற்சியே மூலமாய் அமைந்தது என்று கூறுதல் என் கட்டாயக் கடமையாம்.
களவியற் காரிகை
யாப்பருங்கல விருத்தியைப்பதிப்பித்த பின் யான் பதிப்பித்த மற்றொரு நூல் களவியற்காரிகை. அது முதற்கண் பேராசிரியர் வையாபுரியாரால் பதிப்பிக்கப் பட்டது. அந்நூற்பெயர் தானும் அவராலே சூட்டப் பெற்றதே. அந்நூல் முதலும் ஈறும் இல்லா இறையெனவே காட்சியளித்தது. இடைஇடையே ஏற்பட்டிருந்த விடுபாடுகளையும் எண்ணி முடியா. ஓராற்றான் நூலுருவாக்கப் படுத்துதல் வேண்டும் என்னும் முனைப்பில் பயின்றேன்.
முதற்கண் அமைந்திருந்த சிதைவுப் பகுதிகளின் தொடர்களை நோக்க இறையனார் களவியலுரையே பளிச்சிட்டது. உரைவிளக்கம் வேண்டுமிடத்தும், உரை வேறுபாடு காணுமிடத்துமன்றி முந்துரையைத் தழுவியே உரையும் விளக்கமும் எடுத்துக்காட்டும் ‘உரைமரபு’ என்னுள் தோன்றியது. ஆகலின் இறையனார் களவியல், தமிழ்நெறிவிளக்கப் பொருளியல் இவற்றின் துணையால் சிதைவை ஓராற்றான் ஒழுங்குறுத்த வாய்த்தது.
சிதைவகற்றல்
களவியற்காரிகையின் 11-ம் காரிகை உரை: "இச்சூ….வெனின் பாலைக்குக் கரு வறிவித்தலைக் கருதிற்று.
வரலாறு: தெய்வம் பகவதியும் ஆதித்தனும்; பறை பூசற் பறையும் ஊரெறி பறையும்; செய்கை நிறை கோடலும்……ம்; யாழ் பாலை யாழ்; பண் பஞ்சரம்: தலைமகன் பேர் மீளி விடலை காளை; தலைமகள்……..ம் பாதிரிப் பூவும்; நீர் அறுநீர்க் கூவலும் அறுநீர்ச்சுனையும்; அந்நிலத்து மக்கட்பேர்….கரு"(கக)
மேல்வரும் களவியல் உரையொடும் இதனை ஒப்பிட்டுப் பார்க்க
தொல்காப்பியனார் பாலைக்கு நிலம் வேண்டிற்றிலர். வேண்டாமையின் தெய்வமும் வேண்டிற்றிலர்.
பிறர். பகவதியையும் ஆதித்தனையும் தெய்வம் என்று வேண்டுவர்
உணா- ஆறலைத் தனவும் ஊரெறிந்தனவும்
மா- வலியழிந்த யானையும் புலியும் செந்நாயும்
மரம்-இருப்பையும் ஓமையும்
புள்- கழுகும் பருந்தும் புறாவும்
பறை-பூசற்பறையும் ஊரெறி பறையும் நிரைகோட்பறையும்
செய்தி-நிரை கோடலும், சாத்தெறிதலும், சூறையாடலும்
பண்- பஞ்சுரம், பிறவும் என்றதனால்
தலைமகன் பெயர்-மீளி; விடலை, காளை
பூ- மராம்பூவும், குராம்பூவும், பாதிரிப்பூவும்
நீர்-அறுநீர்க் கூவலும், அறுநீர்ச்சுனையும்
ஊர்-கொல்குறும்பு
மக்கள் பெயர்- எயினர் எயிற்றியர் மறவர் மறத்தியர் எனப்படும்."
இவ்வொப்புமைப்பாடு களவியற் காரிகையின் முகப்பை அமைக்க உதவிற்று. இவ்வாறே எண்வகை மணச் செய்தியும் இறையனார் களவியற்செய்தியைக் கட்டளைக் கலித்துறையால் சொல்வதைக் கண்டு அமைத்துக் கொள்ளலாயிற்று.
களவியற் காரிகையின் இரண்டாம் பகுதித் தலைப்பு களவொழுக்கம் என்பது. முதற்பகுதித் தலைப்புத் தானம் இல்லை! என் செய்வது??
களவியற் காரிகையால் மிகுதியும் பாராட்டப் பெறும் தமிழ் நெறி விளக்கப் பொருளியலில் முதல் கரு உரிப் பொருள்களைக் கூறும் பகுதி அகப் பொருள் எனக் குறிக்கப் பெற்றுள்ளமையால் அப்பகுதிக்கு அப்பெயரே சூட்டப் பட்டது.
பதிப்பு வரவுப்பயன்
இதன் முதற்பதிப்பு வெளிவந்த நாளில் வெளிவராத நூல்கள் பின்னே வெளிவந்தமையால் இரண்டாம் பதிப்பு செம்மையுறுதற்கு வாய்ப்பும் உண்டாயிற்று.
:காணாய் தோழி நம் மேனற் றிண்புனம்
பேணா மனைபோய்ப் புறங்கொடுத்தென
வல்வேற்றானை வெள்வரிச்
செவ்வாய்ப் பாசினங் கவர்ந்து கொண்டனவே"
இவ்வாறு முதற்பதிப்பில் இருந்து பாடல் தமிழ் நெறி விளக்கப்பொருளியல் சார்ந்தது. அந்நூல் வெளிவந்தமையால் அப்பாடல்,
"காணாய் தோழிநம் மேனற் றண்புனம்
பேணா மன்னர் பெயர் புறங்கொடுத்தென
வல்வேற்றானை வல்வலிற்
செவ்வாய்ப் பாசனங் கவர்ந்து கொண் டனவே."
எனத் திருத்தம் பெற்றது.
"முளையெயிறு நிரம்பா இளமைப் பருவத்தன்
அளியன் ஒருவன் தளையவிழ் கண்ணி
முலையும் வாராள் முதுக்குறைந்தனளே"
என முற் பதிப்பில் சிதைவுற்றுக் கிடந்த பொருளியற் பாடல்
"முளையெயிறு நிரம்பா இளமைப் பருவத்
தொளிதிகழ் ஒருவன் நீட்டிய
தலையவிழ் கண்ணி தாங்கினன் உவந்தே"
என இரண்டாம் பதிப்பில் செப்பம் அடைந்தது. எனினும் "இளமைப் பருவத்துள் ஒளி திகழ் ஒருவன்" எனப் பாடம் அமைதலே சிறக்கும் என்பதை உணர்ந்தும், அப்பாடல் இன்மையால் அப்படியே வைக்கப் பட்டது. இவ்வாறே பிறநூல் ஒப்பீடு புதுப்பதிப்பு வரவு இவற்றால் சிதைவுகள் பிழைகள் ஒழுங்காக வாய்ப்புகள் உண்டாயின.
புனைந்து நிரப்புதல்
மேற்குறித்த வகைகளால் ஒழுங்காக்கும் வாய்ப்பில்லாத இடங்களும் களவியற் காரிகையில் உண்டு. கிளவித் தெளிவு என்பதொரு நூலின் மேற்கோள் பா ஒன்று. அந்நூல் வெண்பாவால் அமைந்தமை அழியக் கிடத்தலால் சிதைந்தது; வெண்பா என முடிவெடுக்க வாய்த்தது. அவ்வெண்பா,
"————–
ழிம்பரோ யாதோ விடம் வடிவு- கொம்பரோ
வண்ண மயிலோ கிளியோ மலைநாட
______________
என இடையடி இரண்டால் மட்டும் நிற்கின்றது, இஃது இடம் வினாதல் துறைக்கு எடுத்துக்காட்டாக வருவது. உளங்கவன்றுரைத்த பாங்கன், "எவ்விடத்து? எத்தன்மைத்து? நின்னாற் காணப்பட்ட உரு?" என்று தலைவனை வினாவுதல் என உரை கூறுகின்றது. இடம் வடிவு என்பவை இரண்டாம் அடி, மூன்றாம் சீரில் இடம் பெற்றுள்ளன. இடமும் நிரம்பவேண்டும். வடிவின் முடிவும் வேண்டும்.
(உம்பரோ நாகர் உலகோ இருங்கடல்சூ)
ழம்பரோ யாதோ விடம் வடிவு-கொம்பரோ
வண்ண மயிலோ கிளியோ மலைநாட
(எண்ணங் கவர்ந்த எழில்)
என நிறைவு செய்யப் பட்டது. முதற் பதிப்பில் இருந்த வகையை மு.ப. என அடிக்குறிப்பாகத் தரப் பட்டது. உண்மைப்பாடம் கிடைக்குமானால் இப்புனைவை விலக்கிக் கொள்ளலாம் அன்றோ! இப்படியே செய்த நிறைவுகள் மிகப் பலவாம். அங்கெல்லாம் முதற்பதிப்புப் பாடம் தவறாமல் காட்டப் பட்டது.
வைப்புநிதி
களவியற் காரிகையின் அச்சீடு முடிந்தது. ஆராய்ச்சி முன்னுரையின் மெய்ப்புத் திருத்தவந்தது. அந்நிலையில் வீரசோழியத்தின் வழியே சிதைவு நீக்கும் சில நூற்பாக்கள் கிடைத்தன. அவற்றை விடுதல் கூடாதே. அதனால் "களவியற்காரிகையில் சிதைந்துள்ள 16,17, ஆம் மேற்கோள் நூற்பாக்களும் விடுபெற்ற பகுதியும் வீரசோழிய உரையில் பின்வருமாறு அறியக் கிடக்கின்றன என அம்முன்னுரையிலே அமைத்துக் கொள்ளப் பட்டது. அதற்குப் பின்னரும் சில விடுபாடுகள் கிடைத்தன. அவற்றை அடுத்த பதிப்பில் உரிய இடத்தில் சேர்த்துக்கொள்ளலாமே வைப்பு நிதியம் இருப்பின் வாங்கிக் கொள்ள முடியுமே!
பழநூற் பதிப்புப் பயன்
களவியற் காரிகைப் பதிப்பின் வழியே பாண்டிக்கோவை முதலியவற்றில் இணைத்துக்கொள்ள வேண்டிய பாடல்கள் உண்மை புலப்பட்டது. புறத்திரட்டுப் பதிப்பால் கீழ்க்கணக்கு நூல்களும் இடம்பெற வேண்டிய பாடல்கள் சில உண்மை புலனாயிற்று. செவ்விய பாடங்கள் பல அவற்றில் கிடைத்தலால் மேல்வரும் பதிப்புகளுக்கு அப்பாடங்களும் பயன்படும் என்றும் உறுதியும் உண்டாயிற்று. தகடூர் யாத்திரை ‘கிளவித் தெளிவு", பொருளியல் என்பன நூல் வடிவுறும் வாய்ப்பும் நேரிட்டது.
யாப்பருங்கலப் பதிப்பில் சித்திரக் கவிகளைச் சித்திரத்தில் தீட்டிப் பார்த்து அமைத்தலால் பல செப்பங்கள் கிடைத்தன. ‘உழைக்க உழைக்கப் பயனில்லாமல் இல்லை’ என்னும் தெளிவும் கிடைத்தன. அதே பொழுதில் பதிப்பு எத்துணை விழிப்பாயிருப்பினும் மயக்குதல் உண்டு என்பதும் தெள்ளத்தெளிவாகப் புலப்பட்டது; புலப்பட்டும் வருகின்றது. அவற்றையெல்லாம் விரிப்பின் பெருகுமாகலின் ஒரெடுத்துக் காட்டுக் காட்டுவேன்.
விழிப்பின் இன்றியமையாமை
தமிழ்நாட்டு அரசின் பழஞ்சுவடிப் பதிப்பாக வெளிவந்த குறவஞ்சிகளுள் ஒன்று, சிக்கல் நவநீதேசுவர சுவாமி குறவஞ்சி. அதனைத் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்டது. அதில்,
"முத்துரேகைச் சகி வந்தாள்- மோகினிக்கனபா
முத்துரேகைச் சகி வந்தாள்"
என ஒரு தரு வருகின்றது. கனபா என்பது சரியான பாடம் எனக் கொண்டு அதற்குப் புகழ் பரவிய என்னும் குறிப்புரையும் வரைந்தேன், பின்னே உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வழியே அறிஞர் மு.கோ.இராமன் அவர்கள் எழுதிய சுவடி ஆய்வு நூலால் அப்பாடத்தைச் சுட்டிக் காட்டி மோகினிக்கன்பா" என்பதே பாடம் என்று குறித்திருந்தனர். அது’சுவடிப் பதிப்பில்’ விழிப்பு வேண்டும் என்பதை விளக்கிக் காட்டும் சான்றாகத் திகழ்கின்றது.
நிறைவுரை
தேனும் பாலும் ஊட்டி, ஊனும் உயிரும் கலந்த இன்ப அன்பால், தம் மகாரைப் போற்றும் தெய்வத் தாய்மார் பலர் சங்கச் சான்றோர் வரிசையில் இடம் பெற்றுத் திகழ்கின்றனர். அவர்கள் இலக்கியப் பயிரைப் பேணி வளர்த்தவர்கள். காக்கைப் பாடினியாரோ இலக்கணப் பயிரைப் பேணி வளர்த்த பெருமைக்குரியவர். அவர் தம் நூல் ‘இப்போது இல்லை’ என்றும், ‘மறைந்து போனது’ என்றும், ‘வாரணம் கொண்ட தந்தோ’ என்றும் முடிவு செய்யப் பெற்றது. அந்நிலை அகன்று ‘காக்கை பாடினியத்தைத் தமிழுலகம் இழந்துவிடவில்லை’ என்னும் ஒரு நிலை இந்நூலால் அமையுமாயின் அப்பேற்றை எளியேன் வழி அருளிய திருவருள் திறத்தை வாழ்த்தி வனங்கி ‘வண்டமிழ்த் தொண்டு புரிதல் என்றலைக் கடனாம்’ எனக் காக்கை பாடினிய ஆராய்ச்சி முன்னுரை நிறைவில் எழுதிய எழுத்தை நினைவுறுத்திக் கொள்கிறேன். மறைந்த நூல்களை வெளிக்கொணர்தலில் தனிப் பேரார்வலராகத் திகழ்ந்த சை.சி. கழக ஆட்சியாளர் தாமரைச் செல்வர் வ.சுப்பையா பிள்ளை அவர்களை இவண் நினைவு கூர்ந்து அமைகின்றேன்.
இக்கட்டுரையைத் தட்டச்சு செய்து உதவியவர்: திருமதி கீதாசாம்பசிவம்