மணிக்கொடியை உயர்த்திய பி.எஸ்.இராமையா
கலைமாமணி விக்கிரமன்
வத்தலகுண்டு தமிழ்நாட்டில் உள்ள சிறு கிராமம்.
அந்த மண்ணுக்குத் தனி மகிமை உண்டு.
படைப்பிலக்கிய எழுத்தாளர்களால்தான் இலக்கியத்தில் அந்தப் பெயர் பதிக்கப்பட்டது.
வத்தலகுண்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணிய ஐயர் – மீனாட்சியம்மாள் தம்பதிக்கு கடைக்குட்டிமகனாக, 1905ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி பி.எஸ்.இராமையா பிறந்தார்.
படிக்க வசதியில்லை.
ஆனால், படிப்பில் ஆர்வம் கொண்ட இராமையா, வாரச் சாப்பாடு சாப்பிட்டும், உபகாரச் சம்பளம் பெற்றும் நான்காவது படிவம் வரையில் படித்தார்.
வேலை தேடி சென்னைக்குப் புறப்பட்டார்.
படித்த படிப்பு நாலாவது பாரத்துக்கு (ஒன்பதாம் வகுப்பு) மதிப்பு இருந்தாலும், அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை.
ஊருக்குத் திரும்பலாம் என்று நினைத்தபோது, திருச்சியில் ஒரு ஜவுளிக்கடையில் வேலை கிடைத்தது.
ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை.
பிறகு கடலூரில் சிறு சிறு பணிகள் செய்தார். அதுவும் ஒத்துவரவில்லை.
மீண்டும் சென்னைக்குத் திரும்பி பற்பல இடங்களில் பணியாற்றி, ஆர்ய பவன் உணவுச்சாலையில் சர்வர் வேலையில் சேர்ந்தார்.
18 வயது வாலிபரான இராமையா, செய்யாத தொழிலில்லை. பார்க்காத வேலையில்லை.
முன்பே நெஞ்சில் கனலை வளர்த்துக்கொண்டிருந்த தேசிய இயக்கம், இராமையாவைச் சிலிர்த்து எழச் செய்தது.
காந்தி தொடங்கிய உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டதால், கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை பெற்றார்.
அப்போதுதான் அவரது வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது.சிறையில், வ.இரா., ஏ.என்.சிவராமன், சங்கு சுப்பிரமணியம் முதலியவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைத்தது.
சிறைத் தண்டனை முடிந்தவுடன் கதர் விற்பனை நிலையத்தில் வேலை கிடைத்தது.
கதர் ஆடைகளைத் தோளில் சுமந்தபடி விற்பனை செய்தார்.
மனதில் புதுத் தெம்பு ஏற்பட்டது.
காந்திஜியின் நிர்மாணத் திட்டங்களில் ஈடுபாடு ஏற்பட்டது.
தொண்டர் படை முகாமிலிருந்து தொண்டாற்றினார்.
ஓரணா விலையுள்ள சுதந்திர இயக்கப் புத்தகங்களை விற்பனை செய்தார்.
தூத்துக்குடி, இராஜபாளையம், திருநெல்வேலி, மதுரை, ஈரோடு முதலிய ஊர்களுக்குச் சென்று தொண்டர் படை முகாம்கள் அமைத்தார்.
1932இல் மீண்டும் சென்னைக்கு வந்த இராமையாவுக்கு அடுத்து என்ன செய்வதென்ற குழப்பம் ஏற்பட்டது.
காங்கிரஸ் இயக்கத்து ஈடுபாட்டைக் குறைத்துக்கொண்டார்.
முன்பே ஜே.ஆர்.ரங்கராஜு நாவல்கள், இராஜம் ஐயர், கமலாம்பாள் சரித்திரம் முதலியவற்றைப் படித்திருந்ததால், படைப்பிலக்கிய ஆர்வமும் சேர்ந்திருந்தது.
"ஆனந்த விகடன்" சிறுகதைப் போட்டி அறிவிப்பைப் பார்த்தார்.
அதற்குக் கதை எழுதத் தூண்டியவர் சங்கு சுப்பிரமணியம்தான்.
அவர் தீவிர தேசிய இயக்கக் கொள்கை உடையவர்.
பாரதி பக்தர். ஆனந்த விகடன் சிறுகதைப் போட்டிக்குக் கதை அனுப்பினார் இராமையா.
முதலிடம் பெற்ற கதைக்கு நூறு ரூபாய் பரிசு கிடைத்தது.
இராமையா எழுதிய "மலரும் மணமும்" கதைக்கு ஆனந்த விகடனின் ஊக்கப்பரிசாக பத்து ரூபாய் சன்மானம் கிடைத்தது.கதையை அனுப்பிய அவசரத்தில் எழுதியவர் பெயரை எழுத மறந்துவிட்டார் இராமையா.
கதையை வெளியிட்டு, எழுதியவர் பெயரைத் தெரிவிக்கவும் என்று பத்திரிகையில் எழுதிய பிறகே, எழுதியது தான்தான் என்று தெரிவித்து அந்தப் பத்து ரூபாயைப் பெற்றார்.
அதன்பிறகு, பத்திரிகை உலகப் பணி அவரைக் கவர்ந்தது.
"ஜயபாரதி" இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.
எழுத்தாளர்களின் இலட்சியத்தை வெளியிடும் ஜயபாரதி, சுதந்திரச் சங்கு, காந்தி ஆகிய இதழ்களைப் பற்றி இந்தத் தலைமுறையினர் அவசியம் அறிந்து கொள்ளவேண்டும்.
1933ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டதுதான் மணிக்கொடி.
ஸ்டாலின் சீனிவாசனின் ஆர்வமும், இலட்சியமும்தான் மணிக்கொடி பிறக்கக் காரணம்.
"மணிக்கொடி" இதழ் பி.எஸ்.இராமையாவை மிகவும் கவர்ந்தது.
"மணிக்கொடி"க்குத் தொடர்ந்து எழுதினார்.
மணிக்கொடிக்கு விளம்பரம் சேகரித்துக் கொடுக்கும் பணியிலும் இறங்கினார்.
"மணிக்கொடி காலத்துக்குப் பின் தமிழ்நடையில் படிப்பவர், கேட்பவர் உள்ளங்களில் கனல் மூட்டும் விசையும் வேகமும் திராவிட முன்னேற்றக் கழக எழுத்தாளர் சிலரிடம் இருக்கின்றன. இந்த வகையில், அறிஞர் அண்ணாதுரை மற்றவர்களுக்கு ஒருபடி மேலே நிற்கிறார். ப.ஜீவானந்தத்துக்கு எழுத்திலும், பேச்சிலும் விசையும் வேகமும் கொண்ட தமிழ்நடை கூடியிருக்கிறது; கனல் இருக்கிறது”
என்ற தம் தூய கணிப்பை தாம் எழுதிய "மணிக்கொடி காலம்" என்ற தொடரில் எழுதி, தமிழுக்குப் பெரும் தொண்டு செய்திருக்கிறார் பி.எஸ்.இராமையா.
"மலரும் மணமும்" வெளிவந்தபோது அவருக்குச் சிறுகதை எழுதும் நுணுக்கங்கள் தெரியாது.
"மலரும் மணமும்" பிரசுரமான பிறகு அவருக்குப் புதிய உற்சாகம் ஏற்பட்டது.
"மணிக்கொடி"யின் வளர்ச்சியில் நகமும், சதையுமாக இருந்த இராமையா, பல சிறுகதைகள் எழுதிக் குவித்தார்.
இராஜாஜியிடமிருந்து கட்டுரை வாங்கி "மணிக்கொடி"யில் வெளியிட்டார் இராமையா.
பலருக்கு அதில் அதிருப்தி.
"கல்கி"யைத் தவிர வேறு இதழ்களில் தொடர்ந்து எழுதாத இராஜாஜி, "மணிக்கொடி"யில் தொடர்ந்து எழுதுவதாக வாக்களித்தார்.
ஆனால், அதை வெளியிடும் பேறு "மணிக்கொடி"க்கு இல்லை.
சிறுகதை இலக்கியத்தைப் பற்றி பி.எஸ்.இராமையா அழுத்தமான கொள்கை உடையவர்.
"இலக்கியம் என்ற ஆலமரத்தின் ஒரு கிளையாக சிறுகதையைச் சொல்லலாம்" என்றார்.சி.சு.செல்லப்பா, பி.எஸ்.இராமையாவின் பண்பு, எழுத்து, வாழ்க்கை மூன்றையும் அறிந்தவர். தன் புதினம் வெளிவருவதற்கு முன்பே தன் சொந்தச் செலவில், "இராமையாவின் சிறுகதைப் பாணி" என்ற நூலை வெளியிட்டார்.
சிறுகதை இலக்கியத்தைப் பெரிதும் விரும்புபவர்கள் அந்த நூலைக் கட்டாயம் படிக்க வேண்டும். இராமையாவின் வாழ்க்கைச் சரிதத்தை விவரமாக அறிய, சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற "மணிக்கொடி காலம்" என்ற நூலைப் படிக்க வேண்டும்.
அவர் வளர்த்த, தியாகம் செய்த, சிறிது காலத்துக்குக் (மணி) கொடியைத் தாங்கிப்பிடித்த "மணிக்கொடி" என்று வாசகர்களும், எழுத்தாளர்களும், விமர்சகர்களும் மார்தட்டிக் கொள்பவர்களும் பேசும்படியாகச் செய்த "மணிக்கொடி"யிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
பின்னர், இராமையா தன் புது வாழ்க்கையை முடிவு செய்துவிட்டார்.
திரைப்படத் துறையில் கவனம் செலுத்தினார்; நாடகம் எழுதினார்; திரைப்படத் தயாரிப்புக்கு உதவினார்.
ஆனால், அவர் வாழ்க்கையை நடத்தியது, சிறுகதைக் கலைக்குத் தொண்டு செய்வதன் மூலமாக ஆனந்த விகடன், தினமணி கதிர் (முதல் ஜன்மம்), குமுதம் பத்திரிகைகளில் வாராவாரம் கதைகள் எழுதி, சன்மானத் தொகையைப் பெற்றார்.
சி.சு.செல்லப்பாவின் பட்டியல்படி அவர் 304 சிறுகதைகள், மூன்று நாவல்கள், ஆறு நாடகங்கள் எழுதியுள்ளார்.
1957இல் "பிரசிடென்ட் பஞ்சாட்சரம்" என்ற நாடகம் எழுதியுள்ளார். அந்த நாடகம், திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு பெரும் வெற்றிகண்டது.
"போலீஸ்காரன் மகள்" என்ற நாடகம், மேடையில் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இந்த நாடகமும் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
பி.எஸ். இராமையா, வெற்றிலை, சீவலுடன் புகையிலை போடும் பழக்கத்தால், அவரது தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்டது.
பி.எஸ்.இராமையா, 1983ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி (78வது வயதில்) காலமானார் என்ற செய்தியைக் கேட்டு எழுத்துலகமும், வாசகர் உலகமும் கண்ணீர் விட்டது.
சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபட்டதையும் மணிக்கொடிக்காக அவர் செய்த தியாகத்தையும் எழுத்தில் அடக்கிவிட முடியாது.
நன்றி:- தினமணி