பிற மகான்களைப் போற்றும் மகான்
சுத்தானந்த பாரதி, எங்கும் எதிலும், எவரிலும் மேன்மையையே கண்டவர். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ எனும் குறளுக்கு ஓர் உதாரணமாகத் திகழ்ந்தவர்.
இவர் பல மகான்களை தனது வாழ்நாளில் சந்தித்து, அவர்களுடன் வாழ்ந்து, அந்நிலையில் தானும் கலந்து, சித்தி பெற்று, மேலும் ஆத்ம விசாரமும், அருளாசியும் பெற்று, எல்லா பெரியவர்களையும் (தெலுங்கில் தியாகய்யர் பாடிய பஞ்ச ரத்ன கீர்த்தனைதான் நினைவுக்கு வருகிறது) வணங்கி, வாழ்த்துப்பாக்களும், கட்டுரைகளும் புனைந்துள்ளார். அதிக ஆண்டுகள் அரவிந்தரோடு இருந்ததே அவரது குண்டலினி சக்தி, விரயமாகாமல், சொற்,கவிக் குவியலாய், சித்த சத்ய சுத்த வெளிப்பாடுகளாய், பாரத சக்தி மஹாகாவியமாய் வெளிவரக் காரணம். 25 ஆண்டுகள் மௌனத தவமியற்றி, அன்னை, அரவிந்தரின் பரிபூரண ஆசிகளோடு, அவர்கள் பணி செய்து, தானும் உயரிய நிலை பெற்றதால்தான். எனவே, அவர் போற்றிய மகான்களைப் பற்றி அவர் எழுதியதை மீண்டும் எழுத இருக்கும் இத்தொடரில், முதலில், அன்னை, அரவிந்தர் ஆகியோருடன் துவக்கம் செய்வோம்: அகர முதல எழுத்தெல்லாம், ஆதி பகவன் முதற்றே உலகல்லவா? சந்திரசேகரன் Tue, Apr 28, 2009
அரவிந்தர் நிழலில்…
தரிசனம்: கந்தர்வ லோகத்தில் புகுந்தேன். அடியார்கள் பட்டும் சரிகையும் அணிந்து மலர்களுடன் வந்திருந்தனர். ஒற்றைக் காஷாயம் கட்டியநான் அவர்களிடையே பத்மாசனம் போட்டுத் தியானித்தேன். மெளனம் தீவிரமாகியது. ‘ஷடுடானந்த்’ – என்ற சத்தம் கேட்டது. மேலே வரிசை -நடந்தேன்.
ஸ்ரீ அரவிந்தர் – மலைபோல் வீற்றிருந்தார் – அன்னை வலப்புறம் அல்லிமலர்க் குவியல் போல் அழகாக விளங்கினாள். அரவிந்தர் புன்னகைத்து தலையசைத்தார். நான் மாலை தந்து மலரால் அர்ச்சித்து வணங்கினேன். ஆசியளித்தார். முன்னே அவரை இரு முறை கண்டிருந்தேன். இப்போது ஆள் பழுத்துப் போனார். அன்று நான் பார்த்த அரவிந்தர் ப்ரகாசத்தினை (Sri Aurobindo the Divine Master – என்ற நூலில் பின்னர்) வர்ணித்தேன். எனது கவி மலரை அர்ப்பணித்து வந்து, நேரே சர்மா வீட்டு மாடியேறித் தியானத்தில் அமர்ந்தேன். மறுநாள் தனியாக அரைமணி நேரம் தியானித்தேன். அன்னை என்னை ஏற்றாள். ஆசிரமத்தில் இடம் பெற்றேன். என் பங்குப் பணமெல்லாம் அன்னைக்கே அர்ப்பணித்தேன். என் கைக்கு வந்த பணங்காசெல்லாம் அன்னைக்கே தந்தேன். சுமை ஒழிந்தது. கால் நூற்றாண்டு காலம் மெளனம் பூண்டு, ஸஹஸ்ரார நிஷ்டையிலிருந்து மஹாதுரீய ஸித்தி பெற்றேன். தெய்வப் புலமை எழுந்தது. பாரத சக்தி முதல் ஆத்ம சோதனை வரையில் ஆயிரம் நூல்கள் மலர்ந்தன. எல்லாம் தமிழன்னைக்கு நிவேதித்தேன்.
1908ம் ஆண்டு முதல் ஸ்ரீ அரவிந்தரிடம் எனக்கு அன்புண்டு. நான் நான்காண்டுகள் அவருக்கு உணவு தயாரித்தேன். சந்தேஷ், ரசகுல்லா, கிச்சடி, பூரி முதலியன நிவேதித்தேன். அக்காலம் என்னுடன் நளினீசர் உதவிக்கிருந்தார். அவரிடம் வங்காளம் கற்று, பங்கிம்சந்திரர் நாவல்களையும், தாகூர் காவியங்களையும் படித்தேன். சரத் நாவல்களையும் கற்றேன். அவற்றுள்ஆனந்த மடம், தேவி செளத்ராணி ஆகிய இரண்டையும் படித்த போது, அரவிந்தாசிரமம் முன்னின்றது. ஸ்ரீ அரவிந்தர் பாரதச்சுடர். தந்தையின் ஆங்கிலப் பண்பும், பாட்டன் ராஜநாராயண வசுவின் பாரதக் கலைப் பண்பும் அவரிடம் சேர்ந்தன. அவர் பதினான்காண்டுகள் (1879-93) இங்கிலாந்திலேயே கல்வி பயின்றார். ஆங்கிலம், கிரீக்கு, லத்தீன் ஆகிய மும்மொழிப் புலமை பெற்று, கேம்ப்ரிட்ஜ் பட்டதாரியாக இந்தியா திரும்பினார். பதின்மூன்று ஆண்டுகள் அவர் பரோடா சமஸ்தான ஊழியராகயிருந்தார். மகாராஜா கல்லூரியில் ஆங்கிலம் போதித்தார். இந்தக் காலமே, அவர்வடமொழிபயின்று கீதை,உபநிஷத்தில் அடங்கிய கருத்துக்களை சாதகம் செய்யத் தொடங்கினார். கீதையின் பிரபத்தி மார்க்கமே அவரைக் கவர்ந்தது. கண்ணன் அன்பு அவரைப் பற்றிக் கொண்டது. 1907ஆம் ஆண்டு முதல் மூன்றாண்டுகள் அவர் வங்காளத்தில் தேச சேவை செய்தார். திலகரின் சுதேசக் கிளர்ச்சியை அவரது வந்தேமாதரக் கட்டுரைகள் சுடரோங்கத் தூண்டிவிட்டன. திலகரின் தீவிரத்திற்கும் கோகலேயின் மிதத்திற்கும் ஒத்து வரவில்லை. சூரத் காங்கிரஸில் இரண்டிற்கும் பிளவு ஏற்பட்டது. அரவிந்தர் திலகரையே போற்றி, கோகலேயின் மிதவாதத்தைப் பலமாகக் கண்டித்தார். இதனிடையே புரட்சிக் காரர் குண்டெறிந்து இரண்டு வெள்ளைத் திருமேனிகளை ஒழித்தனர். கல்கத்தாவில் போலீஸ் தர்பார் கடுமையாக நடந்தது.வரீந்திரர் முதல் அரவிந்தர் வரையில் பல தேச பக்தர்கள் அலிபூர்சிறையில் அடைபட்டனர். ஆண்டவன் புண்ணியத்தாலும் சித்தரஞ்சனார் நாவன்மையாலும் அரவிந்தர் தலை தப்பியது. 05-05-1909 ல் அவர் விடுதலை அடைந்து உத்தரபாராபில் தர்மப் பிரசாரணி சபையில் ஸநாதன தர்மத்தைப்பற்றி ஒரு பிரசங்கம் செய்தார். அந்த ஆவேசப் பிரசங்கமே அவர் வாழ்வின் கன்ணாடியானது. கர்ம யோகி என்ற பத்திரிகை மூலம் நாட்டிற்கு வழிகாட்டிய அரவிந்தர் 04-04-1910ல் கப்பலில் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார்.
இங்கே குப்புசாமி ஐயர் வீட்டில் சில காலம் தங்கி அவர் மாப்பிள்ளை அருணாசல ஐயர் உபசரணையில் இருந்தார். பிறகு சங்கரச் செட்டியார் வீட்டில் இருந்து, வெள்ளைக்காரத் தெருவில் குடியேறினார். 1915ல் அவர் ஆரியா என்ற ஆன்மீகப் பத்திரிகை தொடங்கி, 1921 வரையில் நடத்தினார். பிறகு உள்ளாராய்ச்சியில் அடங்கினார். இச்சமயம் அரிய அறிவாளிகல் அவரைச் சூழ்ந்தனர். பாரீஸிலிருந்து பால் ரிஷார்டு தமது மனைவி அல்பாஸாவுடன் வந்தார். மனைவி – அன்னையானாள். ஆசிரமம் எழுந்தது. அன்னையின் குப்த சக்தியாலும் அரவிந்தரின் தாந்திரிக சக்தியாலும் ஆசிரமம் செல்வச் செழிப்புற்று அற்புதமாய் வளர்ந்தது. அரவிந்த ஆசிரமம் நவயுக உலகமாக விளங்கியது. பலநாடு, பல ஜாதி மதத்தினர் அங்கே வாழ்ந்தனர். அழகும் துப்புரவும் ஆசிரமத்தில் எங்கும் காணும். ஆசிரமிகள் அன்னையின் அடித் தொண்டு பறவுகிரார்கள். அன்னை, திருக்கரத்தால் மலர் தந்தும் ஆசியளித்தும் அடியார்களை ஆளுகிறாள். ஸ்ரீ அரவிந்தர் ஆண்டுக்கு நான்கு நாட்கள் தரிசனம் தந்தார். உத்தரவு கிடைத்தால் ஒரு நொடி கண்டு காணிக்கை செலுத்தி வரலாம். ஸ்ரீ அரவிந்தர் திருவுள்ளம், Life Divine, Synthesis of Yoga, Essays on Gita, Savitri, ஆகிய நான்கு நூல்களில் அடங்கும். சாவித்ரி,சத்தியவான் – சாவித்ரி கதி மூலம் உலகிற்கு அமரத் தன்மையை விளகும் மகா காவியமாகும். உலகம் உண்மை. உடலும் உண்மை. வாழ்வே யோகம். மானிடத்தில் தெடய்வீகத்தையும் உலகில் விண்ணரசையும் நாட்டலாம். மனதிற்கு மேலோங்கி,விஞ்ஞான சாதனம் அடைதலே வழி. விஞ்ஞான மாறுதலுக்கு அன்னையைச் சரண்புகுதலே வழி. உடல், பொருள், உயிர், எல்லாம் அன்னை திருவடிப் பணிக்கே நிவேதிக்க, அவள் இச்சைப்படி நடத்தல் ஒன்றே இங்கே சாதனம். ஸ்ரீ அரவிந்தரே தெய்வம். அன்னை பராசக்தி அவர்கள் தாசனாவதே உய்யும் வழி என்பது அரவிந்தாசிரம யோகமாகும். இந்த யோகத்தை உலகிற்கு விளக்க ஏராளமான இதழ்களும் நூல்களும் குவிந்து கிடக்கின்றன. ஆண் பெண் இருபாலரும் சரி நிகராக அன்னையின் கொடி பிடித்து ராணுவ நடை போடு விண்ணரசை நோக்குகிறார்கள். பலவகை மாந்தர் ஒன்று கூடி இப்படிக் கலியுகத்திலிருந்து கிருதயுகத்திற்குச் செல்லும் சமயம் ஸ்ரீ அரவிந்தர் இறந்தது வருந்தத்தக்கது. சில நாட்களாக மகா துரிய சமாதியில் ஆழ்ந்திருந்த நான் இதை உள்ளே உணர்ந்தேன். திடீரென்று 05.12.50 செவ்வாய் காலை எட்டு மணிக்கு சென்னியப்பர் கதவைத் தட்டினார். திறந்தேன். ‘ஸ்ரீ அரவிந்தர் காலஞ்சென்றார்” என்றார். அரவிந்தர் தரிசனம் கண்டேன். உயிரோடிருந்தபோது அவரைக் காண முடியாது மறைத்த மாயத்திரை அங்கே இல்லை. ஊரெல்லாம் அவரை வரிசையாகப் பார்த்தது. ஆசிரமம் சோகமான மெளனத்தில் புதைந்திருந்தது. ஸ்ரீ அரவிந்தர் முகத்தில் மட்டும் உயிர்க் களை பொலிந்தது. மெளனமாக பூமாலையும், பாமாலையும் வைத்துத் திரும்பினேன்.
யாரும் காணா அரவிந்தா – நின்னுடலைப்
பாராரும் காணப் பறந்தாயோ – சீராரும்
யோகத்தாற் போக முவந்தாய்; அரவிந்தா!
ஏகத்தால் என்னுள் இரு.
நித்தியமே தேகமென நீளப் பறையடித்த
சித்தர்களும் ஊனுதறிச் சென்றுவிட்டார் – இத்தலத்தில்
எந்தை இறையருளே எண்ணி, எனதுயிரே
வந்தனை செய்து மகிழ்.
இச்சம்பவம் என் ஆத்ம சாதனையிலும் சோதனையிலும் ஒரு புதிய திருப்பத்தை ஊக்கியது. பதியன்பு பலமானது மகாதுரிய சமாதியில் நாதவிந்து கலாகீதமாய்!உன்மணி சமனிக்கப்பலாய், எட்டாம் நிலை கடந்த பரம் பொருளை கலந்துணரும் பரமானந்தம் பெற்றேன்… சுத்தானந்த பாரதி
சிறு குறிப்பு: அரவிந்த விஜயம் என்று முதன் முதலில் ஸ்ரீ அரவிந்தரின் சரிதையை தமிழில் தந்தது சுத்தானந்தரே. அதன் தெலுகு பிரதியும் என்னிடம் உள்ளது. அது போக மேற்கண்ட கட்டுரை வாசிக்கும் போது, மிக ஆச்சரியமாக எனக்கு பட்டது, அவரின் நாட்குறிப்புகள்! துல்லியமாக, நாள், மாதம், வருடம் எப்படி நினைவில் வைத்துக் கொள்ள முடியும்? அவர் குறிப்புகள் எழுதிவைத்தோ, இல்லை முதலில் மாதிரி பின்னர் நினைவு பிரதிகள் எழுதியோ நான் பார்த்தவரை நினைவில் இல்லை! அதுதான் சித்தனின் சித்தம்! அபரிதமான நினைவாற்றல்!!