ப.சுப்பிரமணிய முதலியார்

"இராவ் சாகிப்" வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார்

வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

ப.சுப்பிரமணிய முதலியார்

தாய்த் தமிழையும், அதன் செழுமைகளையும் மெல்ல மறந்துவரும் சூழ்நிலையில், தமிழ் இலக்கியதிற்கு வளமை சேர்த்த பல நல்லறிஞர்களுள் வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார் குறிப்பிடத்தக்கவர். அவரைக் குறித்து இன்றைய சந்ததியினர் அறிந்து கொள்வதென்பது அவரை மட்டும் அறிந்துகொள்வது மட்டுமன்று; நம் தமிழ்த் தாய்மொழியின் சிறப்பை அறிந்து கொள்வதும் ஆகும்.

காஞ்சி அருகில் மெய்ப்பேடு என்னும் சிற்றூரில் வாழ்ந்த தொண்டை மண்டல வேளாளர் மரபைச் சார்ந்த அரியநாதர் என்பவர் விஜயநகரப் பேரரசில் கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்காலத்தில் படைப்பிரிவில் பணியாற்றி வந்தார். பீஜப்பூர் சுல்தான் விஜயநகரப் பேரரசின் மீது படையெடுத்து வந்தான். போர்க்களத்தில் சல்மத்கான் என்பவன் கிருஷ்ணதேவராயரை குறிவைத்து தாக்க அவரை நெருங்கியபோது, அரியநாதர் அந்த வீரனுடன் யுத்தம் செய்து அவனை அவனது படையோடு துரத்தி அடித்து, தம் மன்னர்தான் வெற்றிவாகை சூட பேருதவியாக விளங்கினார்.
அரியநாதரின் இத்தீரச் செயலை மன்னர் பாராட்டி, அவருக்கு "படைமுதலி" என்னும் பட்டத்தைத் தந்து, அவரைப் படைத் தளபதியாக்கி அமைச்சருக்கு உரிய தகுதியையும் வழங்கினார். அன்றைய நாள் முதலாக அரியநாதர் "தளவாய் அரியநாத முதலியார்" என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டதோடு, அவரது வழிவந்த மரபின் மக்களும் தம் இயற்பெயரோடு "முதலியார்" என்னும் அப் பட்டப்பெயரையும் இணைத்துக்கொள்ள, அந்த "விருதுப்பெயர்" காலப்போக்கில் இனப்பெயராக வழங்கப்பட்டு வருகிறது.

 
அத்தகு அரியநாத முதலியார் வழிவந்த சுப்பிரமணிய முதலியார் திருநெல்வேலிச் சீமையை ஆண்டுவந்த மேடைதளவாய் திருமலையப்ப முதலியாரின் சகோதரி மகள் உலகண்ணியை திருமணம் செய்துகொண்டார். திருமலையப்ப முதலியார் ஆர்க்காடு நவாபு மன்னர்களின் பிரதிநிதியாக விளங்கியவர். அவர் ஒரு முறை தென்காசிக்கு அருகிலிருக்கும் வெள்ளக்கால் என்னும் சிற்றூருக்கு வந்து அங்கு ஓர் அழகான மாளிகை கட்டி குடியேறினார்.
 

சோழவந்தான் சுப்பிரமணிய முதலியார் – உலகண்ணி தம்பதியரின் குடும்பம் செழித்து தழைத்தது. அவர்களது புதல்வர் பழனியப்ப முதலியாருக்கு 1857ம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 14ம் நாள் பிறந்த தலைமகனுக்கு தாத்தாவின் பெயரான சுப்பிரமணியம் என்ற பெயர் இடப்பட்டு அவர் அவ்வாறே அழைக்கப்பட்டார். தனது தாத்தாவின் பெயரைப்பெற்று விளங்கிய பெயரன்தான் வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார்.
பிள்ளைப் பருவத்தை வெள்ளக்காலில் கழித்தபிறகு சிறந்ததொரு கல்வி கற்றுத்தேற தனது அத்தையின் கணவர் திருநெல்வேலி மேடை தளவாய் குமாரசாமி முதலியாரின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார். தெற்குப் புதுத்தெருவில் அமைந்திருந்த கணபதி வாத்தியாரின் திண்ணைப் பள்ளியில் தொடக்க கல்வி தொடங்கியது. பின்னர் வெ.ப.சு திருநெல்வேலி அரசடிப் பாலத்தில் இருந்த மிஷன் பள்ளியில் தமிழோடு ஆங்கிலமும் கசடறக் கற்றுத் தேர்ந்தார். 
 

அரண்மனையில் முத்துசாமிப்பிள்ளை என்னும் அந்தகர் (பார்வையற்றவர்) பணிபுரிந்து வந்தார். அவரிடமிருந்து
பாரதம்
இராமாயணம்
திருவிளையாடற்புராணம்
முதலிய இதிகாசங்களையும் மற்றும் பல புராணங்களையும் வெ.ப.சு வாய்வழியாக கற்றறிந்தார்.

மேலும் அந்த அரண்மனையிலேயே,
பாரத அம்மானை
வைகுண்ட அம்மானை
பவளக்கொடி மாலை
அல்லி அரசாணி மாலை
ஆகியவற்றை இளம்பருவத்திலேயே தினந்தோறும் கேட்டறிந்து வளர்ந்ததால் வெ.ப.சு இலக்கிய விருப்பத்திற்கு அவை பேருதவி புரிந்தன.

 

அவர் தம் பதினான்கு வயதிற்குள்ளாகவே,
திருக்குற்றாலத் தலபுராணம்
வரகுணாதித்தன் மடல்
விறலிவிடு தூது
கூளப்ப நாயக்கன் காதல்
ஆகிய சிற்றிலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார்.
வேம்பத்தூர் பிச்சு ஐயர்,
கல்போது புன்னைவனக் கவிராயர்,
அருணாசலக் கவிராயர்,
சுப்பிரமணியக் கவிராயர்
சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார்
ஆகிய பெரும்புலவர்கள் கூடும் சங்கங்களிலும் வெ.ப.சு பங்கேற்று அவர்களிடமிருந்து இலக்கிய அறிவை வளப்படுத்திக்கொண்டார்.

இப்படியாக இருபது வயதிற்குள்ளாக சிற்றிலக்கியங்களை கற்றுத் தெளிந்தார். பிறகு அவர்,
நன்னூல்
இலக்கணக்கொத்து
இலக்கண விளக்கச் சூறாவளி
தொல்காப்பிய முதற் சூத்திர விருத்தி
பிரயோக விவேகம்
ஆகிய இலக்கண நூல்களைக் கசடறக் கற்றுத்தேர்ந்தார். பின்னர் திருநெல்வேலி சந்திப்பில் அமைந்த இந்துக் கலாசாலைப் பள்ளியில் மெட்ரிகுலேசன் வகுப்பில் சேர்ந்தார்.
டி.என்.சிவஞானம் பிள்ளை இவரின் உற்ற தோழராக இருந்தார். தம் தோழரின் வற்புறுத்தலினால் சென்னை கிறித்துவக் கல்லூரியில் மேற்படிப்புக்காக சென்றார். அங்கு படிக்கும் மாணவர்கள் தமிழ்ப்பாடத்தில் ஏற்படும் ஐயங்களைப் போக்க வெ.ப.சு விடம் வந்து தெளிந்து செல்வார்களாம். அத்தகைய சூழலில் அவர்களுக்காகவே கம்பராமாயணத்தை வெ.ப.சு ஊன்றிப்படித்தாராம்.

 
அக்கல்லூரியில்தான்,
டாக்டர் மில்லர், கூப்பர்,
அலெக்ஸாண்டர்,
பேட்டர்சன்,
மெக்டனால்டு
ஆகிய வெளிநாட்டு பேராசிரியர்கள் மற்றும்,
சுப்பராமையர்,
ரெங்கையச்செட்டி,
சின்னச்சாமி பிள்ளை,
ரெங்கசாமிராசா
ஆகிய ஆசிரியப் பெருந்தகையாளர்களிடம் மிகச்சிறந்த கல்வியையும் மேலான ஒழுக்கத்தையும் கற்றுக்கொண்டு அத்தகைய வாழ்நெறிகளைத் தவறாமல் கடைபிடித்து வந்திருக்கிறார். ஆங்கிலம், தமிழ் இருமொழிப் புலமையையும் கிறித்துவக் கல்லூரியிலேயே கற்றுத் தெளிந்திருக்கிறார் வெ.ப.சு
சென்னை சைதாப்பேட்டையில் தொடங்கப்பட்ட அரசு வேளாண்மைக் கல்லூரியில் சேர்ந்து 1884ம் ஆண்டில் ஜி.எம்.ஏ.சி என்னும் வேளாண்மை பட்டம் பெற்றார். 1895ம் ஆண்டு கால்நடை மருத்துவத் துறையில் "முதுநிலை கால்நடை மருத்துவ உதவியாளராக" பதவி உயர்வு பெற்று, ஆறாண்டுகள் கழிந்த பின்னர் 1911ம் ஆண்டில் துணைக் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார்.

கால்நடை அறிவியல் துறை வாயிலாக வெ.ப.சு தமிழ்மொழிக்கு ஆற்றியிருக்கும் தொண்டுக்கு தாய் தமிழ்மேல் பற்றுகொண்ட யாவரும் வெ.ப.சு வுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள். இந்திய கால்நடைக்காரர் புத்தகம் மற்றும் இந்தியாவில் கால்நடைகளுக்குக் காணுகின்ற அதிக பிராணாபாயமான வியாதிகளைப் பற்றிய நூல் என்னும் இரு நூல்களும் வெ.ப.சு சீரிய தமிழ் மொழியாக்கத்தில் அரசு உதவியுடன் வெளியிடப்பட்டது. மேல்நாட்டு கால்நடை மருத்துவம் பற்றி தமிழ்மொழியில் வெளிவந்த முதல் நூல்கள் இவை. மேலும் அறிவியல் நூல்களை இனிய தமிழில் ஆக்கிக்காட்டியவர்களில் வெ.ப.சுவும் ஒருவர்.

1916ம் ஆண்டு வெ.ப.சு திருநெல்வேலி தாலுகா போர்டு உறுப்பினராகி, 1919ல் பதவி உயர்வு பெற்று, அதன் துணைத் தலைவரானார். அதற்கு அடுத்த ஆண்டில் தலைவராகவும் உயர்ந்தார். அவரின் நிர்வாகத் திறமையைக் கண்ட அன்றைய அரசாங்கம், அவரை 1922ம் ஆண்டு தென்காசி பெஞ்ச் கோர்ட்டின் தலைவராக நியமித்தது. இவரது அரும்பணிகளைக் கண்டு வியந்து, ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் அவருக்கு 1926ம் ஆண்டு "இராவ் சாகிப்" பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்.

சென்னை மாகாண தமிழ்ச்சங்கம் உருவாக்கிய "கலைச்சொற்கள்" அகராதி நூல் தயாரிப்புக் குழுவிலும் உறுப்பினராக இருந்து திறம்பட செயல்பட்டார். அதுபோல வேளாண்மைத் துறைக்கான கலைச் சொல்லாக்கம் இவரின் பெரு முயற்சியாலே உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 
உ.வே.சாமிநாதய்யர்
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை
"பத்மாவதி சரித்திரம்" நாவலை எழுதிய மாதவையா
மு.ரா. அருணாசலக் கவிராயர்
இரசிகமணி டி.கே.சி
ஹிருதாலய மருதப்ப தேவர்
கவிராஜர் நெல்லையப்ப பிள்ளை
போன்றோருடன் வெ.ப.சு நட்பு கொண்டிருந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக 25 ஆண்டுகள் அரும்பணியாற்றி தமிழ்த்துறையை மேன்மை அடையச்செய்தார்.

வெ.ப.சு வாழ்நாள் முழுவதும் சேர்த்த நூல்கள் யாவும் தொகுக்கப்பட்டு "வெ.ப.சுப்பிரமணிய முதலியார் நூல் நிலையம்" என்னும் பெயர்பெற்று திருநெல்வேலி ம.தி.தா இந்துக்கல்லூரி ஆட்சிமன்றக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டு இன்றும் செயல்பட்டு வருகிறது.

 
உலகத்தின் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட "சுவர்க்க நீக்கம்" (Paradise Lost) என்ற மில்டன் எழுதிய உன்னத காவியத்தை தமிழில் அழகுற செய்யுளில் படைத்தவர் வெ.ப.சு. இவர் படைத்திருக்கும்,
இலக்கிய நூல்கள்
அகலிகை வெண்பா
கம்பராமாயண சாரம் (7 காண்டங்கள்)
கல்வி விளக்கம்
கோம்பி விருத்தம்
சருவசன செபம்
தனிக்கவித் திரட்டு
நெல்லைச்சிலேடை வெண்பா
இராமாயண உள்ளுறை பொருளும்
தென்னிந்திய சாதி வரலாறும்
ஆகியவை.

கல்வியிலும், ஒழுக்கத்திலும் மேன்மைகொண்டு விளங்கிய ஆயிரம் பிறைகண்ட செந்தமிழ் தொண்டர் வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார் 12.10.1946ல் இவ்வுலகை விட்டு நீங்கினாலும் அவர் திருப்பெயர் தமிழ் உள்ளவரை நிலைத்திருக்கும்.
 

நன்றி: தமிழ்மணி (தினமணி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *