புரிசை கிராமம்
பதிவும் படங்களும்:சுபா
தெருக்கூத்து வித்தூன்றிய கிராமம் புரிசை!
- வீராசாமி தம்பிரார்
- ராகவத் தமிபிரார்
- கிருஷ்ணத் தம்பிரார்
- நடேசத் தம்பிரார்
அந்த வரிசையில் இப்போது தெருக்கூத்துக் கலையை பாரம்பரியமாக வளர்த்து வருகின்றார் திரு.சுப்பிரமணியத் தம்பிரார் அவர்கள்.
புரிசை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம். இக்கிராமம் தமிழகத்தின் தெருக்கூத்துக் கலைக்கு புகழ் சேர்க்கும் ஒரு மையமாக இன்று திகழ்கின்றது.
புரிசை சுப்பிரமணியத் தம்பிரான் அவர்களுடனான பேட்டி:
ஒலிப்பதிவு : {play}http://www.subaonline.net/thf/thf_depot/kidangku/thiruvannamali/subramaniyathambiran.mp3{/play}
தனது 14 வயதிலிருந்து தனது தந்தையார் கண்ணப்ப தம்பிரான் தெருக்கூத்து அமைப்பில் கலைஞராக பங்கு பெற்று வருகின்றார். மகாபாரதக் கதை, அரிச்சந்திரன், நல்லத்தங்காள், கோவலன் சரித்திரம், சத்தியவான் சாவித்திரி, நீலி, சிறுதொண்டர் கதைகளை மையமாகக் கொண்டு தெருக்கூத்து கதைகள் அமைக்கப்படுகின்றன. இவர் தந்தையார் நடேசத் தம்பிரான் போலவே இவரும் தனது கலைச்சேவைக்காக தமிழ் நாடு அரசின் கலைமாமணி பட்டம் பெற்றிருக்கின்றார்.
நடேசத் தம்பிரானின் பெரும் முயற்சியினால் தெருக்கூத்து எனப்படும் இக்கலை மிகப் பிரபலமாக வளர்ந்தது. திரு.நடேச தம்பிரான் காலத்தில் தான் தெருக்கூத்து எனும் இக்கலை பிரபல்யம் பெற்றது. இதற்கு நடேசத் தம்பிரான் அவர்களின் பங்களிப்பும் முயற்சிகளும் குறிப்பிடத்தக்க ஒன்று. தமிழ் நாட்டில் புரிசை கிராமம் தெருக்கூத்து கலைக்கு பெயர் சொல்லும் வகையில் அமைந்திருப்பதற்கு இவர் மிக முக்கிய காரணம் என்று குறிப்பிடலாம். பல்வேறு கடினமான முயற்சிகளையும் இவர் தனது நாடக்த்தில் மேற்கொண்டவர். வாயிலிருந்து நெருப்பு கக்குவது போல செய்வதற்கு சில வித்தைகளையும். போர் காட்சிகளுக்கு வெடி மருந்துகளை வைத்து காட்சிகளை தத்ரூபமாக அமைக்க முயற்சிகள் மேற்கொண்டவர். இப்படி ஒரு முயற்சியில் பாதிப்பு ஏற்பட்டு தனது கை விரல்களை ஒரு விபத்தில் இழந்தார். ஆனாலும் தொடர்ந்து விடாமுயற்சியுடன் இவரது கலைச்சேவை தொடர்ந்தது. இவரது துச்சாதனன், ஹிரன்யகசிபு பாத்திரங்கள் மக்கள் மத்தியில் நிறைந்த வரவேற்பை பெற்றன.
தந்தையார் மறைவிற்குப் பின்னர் இக்குழுவின் தலைமைப் பொறுப்பினை ஏற்று தெருக்கூத்துப் பள்ளியினை தொடர்ந்து மேற்பார்வை செய்து வருவதோடு பல இடங்களுக்குச் சென்று தெருக்கூத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார் இவர். தற்சமயம் இந்தக் குழுவில் மொத்தம் 17 பேர் இடம்பெற்றிருக்கின்றனர். இந்த உறுப்பினர்கள் அனைவரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கின்றனர். தெருக்கூத்து நிகழ்த்த வேண்டுமென்றால் அனைவரும் இணைந்து கொள்கின்றனர்.
சுப்பிரமணியத் தம்பிரான்
இவர்கள் தெருக்கூத்து குழுவில் பெண்கள் இடம்பெறுவதில்லை. ஆண்களே பெண்கள் வேடம் போட்டு நடிப்பது வழக்கமாக உள்ளது.
பாரம்பரியமான இந்தக் கலை அழியக் கூடாது என்ற எண்ணத்தில் தனது மகனையும் தெருக்கூத்து கலையில் இவர் ஈடுபடுத்துயுள்ளார். இந்தப் பாரம்பரியக் கலை அழியக் கூடாது. இதனை அழிவதிலிருந்து காக்க பொதுமக்களின் ஆதரவும் மிகவும் அவசியம் என்பதை நாம் மறுக்க முடியாது.
புரிசை கிராமம் வரைபடத்தில் (நன்றி:கூகள் மேப்)