Home Folklore புது வருடத்திற்கான வேப்பம்பூப் பச்சடி

புது வருடத்திற்கான வேப்பம்பூப் பச்சடி

by Dr.K.Subashini
0 comment

புது வருடத்திற்கான வேப்பம்பூப் பச்சடி

திருமதி.கீதா சாம்பசிவம்  

 

செய்முறை: இரு வகையாகச் செய்யலாம்,

 

முதல் முறை:

 

பெரும்பாலும் தஞ்சை மாவட்டங்களில் செய்யப் படுவது.  தேவையான பொருட்கள்: புளிக்கரைசல் ஒரு கிண்ணம், வெல்லம் அரைக்கிண்ணம், உப்பு தேவையான அளவு. வேப்பம்பூ ஒரு டேபிள் ஸ்பூன், புதிய வேப்பம்பூவாகத் தான் வருடப் பிறப்புக்குச் சமைப்பார்கள் என்றாலும் இன்றைய நாட்களின் சிரமத்தை அனுசரித்து காய்ந்த வேப்பம்பூவையும் பயன்படுத்தலாம்.  ஏலக்காய் ஒன்றிரண்டு பொடித்தது, நெய், வேப்பம்பூவை வறுக்க.

 

புளிக்கரைசலில் உப்புச் சேர்த்துக் கொதிக்கவிடவும், புளி வாசனை போகக் கொதித்ததும், அதில் வெல்லத்தைச் சேர்த்து வெல்ல வாசனை போய்ப் பச்சடி கெட்டியாகும் வரை விடவும். கீழே இறக்கி வைத்து, நெய்யில் வறுத்த வேப்பம்பூவையும், ஏலக்காய்த் தூளையும் சேர்த்துக் கலக்கவும்.

 

 

இரண்டாம் வகை:

 

மாங்காய்த் துண்டங்கள் ஒரு கிண்ணம், உப்பு, வேக வைக்க நீர் தேவையான அளவு, வெல்லம் ஒரு கிண்ணம், ஏலப்பொடி, வேப்பம்பூ,, வறுக்க நெய்.   அரிசி மாவு தேவையானால்.

 

மாங்காய்த் துண்டங்களை நீரில் போட்டு வேக வைக்கவும்.  உப்புச் சேர்க்கவும். நன்கு வெந்ததும், வெல்லம் சேர்க்கவும்.  வெல்ல வாசனை போக வெந்ததும், கெட்டியாக இல்லை எனில் கொஞ்சம் அரிசிமாவைக் கரைத்து அதில் விடவும். கீழே இறக்கி ஏலப்பொடியையும், நெய்யில் வறுத்த வேப்பம்பூவையும் சேர்க்கவும்.

இதில் புளிப்பு, இனிப்பு, கசப்பு ஆகிய சுவைகள் இருக்கும்.  இதன் குறியீடு வாழ்க்கையில் புளிப்பான, இனிப்பான, கசப்பான சம்பவங்கள், நிகழ்வுகள் நடக்கும்.  அத்தனையையும் சமன் செய்து கொண்டு போகவேண்டும் என்பதே ஆகும்.  வருட ஆரம்பத்தில் இதை உண்பதன் மூலம் மனமும் எல்லாவற்றையும் சமமாகப் பார்க்கும் நிலைக்குக் கொண்டு வரும் ஒரு சின்ன உத்தியே இது.

 

அதோடு வேப்பம்பூ உடலுக்கும் நல்லது.  பித்தம், அஜீரணம், வாய்வுக் கோளாறு போன்றவற்றை நீக்கும்.  அதை அப்படியே நெய்யில் வறுத்தும் சாப்பிடலாம் என்றாலும் வருடப் பிறப்பின் போது இப்படிச் சாப்பிடுவதன் மூலம் நம் மனம் புது வருஷத்தின் கஷ்ட, நஷ்டங்களை எதிர்கொள்ளும் வலிமையைப் பெறும் என்பது ஒரு நம்பிக்கை.

You may also like

Leave a Comment