Home Printing&Publishing பாடவேறுபாடும் பாடத் தெரிவும்

பாடவேறுபாடும் பாடத் தெரிவும்

by Dr.K.Subashini
0 comment

 

த.கோ.பரமசிவம்

“எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்
படித்தவன் பாட்டைக் கெடுத்தான்”

 

என்னும் பழமொழி மிகப் பரவலாகவும்,மிக மிகச் சாதாரண நிலையிலும் வழங்குகிறது.  இப்பழமொழி எல்லாவகைப்பட்ட நூல்களிலும் பாடவேறுபாடுகள் தோன்றுவது இயல்பு, தவிர்க்க முடியாதது. அவ்வக் காலத்தே கூடத் தோன்ற முடிந்த விரைவைக் கொண்டது என்பவற்றைத் துல்லியமாகக் காட்ட வல்லதாம்.

 

பாடவேறுபாடுகளும், பாடத் தெரிவும் என்னும் இக்கட்டுரையில் ஒரு நூலின் படிகளாகக் காணப்பெறும் சுவடிகளில் அமைந்த பாடவேறுபாடுகள் தோன்றும் சூழலையும்  அப்பாடங்களுள் மூல பாடமாகக் கருதத்தக்க-  சிறந்த பாடமாகக் காணத்தக்க பாடத்தைத் தேர்வு செய்வதற்கு வேண்டிய வழிமுறைகளையும் காண்போம்.

 

பாடவேறுபாடு தோன்றும் விதம்

 

பனிமலையிலிருந்து உருண்டு வரும் பனிக்கட்டி அடிவாரத்துக்கு வரும்முன் பல்வேறு மாற்றங்களை அடைதல் கண்கூடு.  வடிவச் சிதைவும், வடிவ மாற்றமும் அடைவதோடு அளவில் கூட அது மாற்றத்தையடைய நேரிடும்.  அப்பனிக்கட்டி பல பொருட்களுடன் கூடித் திரண்டு , பெருத்து வரலாம்.  பாறைகளில், மரங்களில் மோதிச் சிதறிச், சிறுத்தும் வரலாம்.  ஒரு காலத்தில் ஒரு தலைமுறையில் தோன்றிய நூல்களும்,  கால இடையீடுகளுக்குப் பின்பும், தலைமுறை இடையீடுகளுக்குப் பின்பும் பல்கியும், சிறுத்தும் வேறுபட்டு வடிவ வேறுபாடுகளுடன் காணப்படுதல் இயல்பு.

 

ஆயினும் மனிதனுக்கிருக்கின்ற பகுத்தறிவும் அதைச் சார்ந்த நினைவாற்றலும் இவ்வேறுபாடுகளைத் தவிர்க்கப் பெரிதும் துணை நிற்பவை. எனினும் சில நேரங்களில் இவையே வேறுபாடுகளைத் தோற்றுவிக்கவும் துணை செய்கின்றன எனத் தோன்றுகிறது.

 

நம் காலத்தில் கையெழுத்தைப் பார்த்துத் தட்டச்சு செய்யும் போதும், அச்சுக் கோர்க்கும்போதும்,  எம்பெருமான் என்பதை எமபெருமான் எனவும், கதலிவாழை என்பதைக் காதலி வாழை எனவும், தேவாரத் திரட்டு என்பதை தேவாரத் திருட்டு எனவும் சிந்தனை என்பதை நிந்தனை எனவும்  பல்வேறுவகைப்பட்ட எழுத்துப் பிழைகளைச் சந்தித்து அதனால் பொருள் விபரீதங்களை அடைந்து வருந்துகிறோம்.  அவ்வாறெனில் எப்போதோ தோன்றிய நூல்கள் வாய்மொழியாகக் கேட்கப் பெற்றும், எழுதப் பெற்றும், திருத்தப் பெற்றும் மீண்டும் மீண்டும் கால இடையீட்டுக்குள்ளான தலைமுறைகளால் படியெடுக்கப் பெற்றும் வருகின்றன.  அத்தகு நூல்களில் பதிப்புக்கலையும் அச்சுக்கலையும் தோன்றாத காலத்துப் பாடவேறுபாடுகள் தோன்றுவது இயல்பே.  பாடவேறுபாடுகள் தோன்றாதிருப்பதுதான் வியப்புக்குரியது.

 

பாடவேறுபாடுகள் தோன்றுவதற்கு அடிப்படையே மொழியின் ஒலியமைப்புத் தான் என்றால் அது மிகையாகாது.  நெருங்கிய ஒப்புமை கொண்ட ஒலியமைப்பும், மிக நுட்பமான வேறுபாட்டைக் கொண்ட ஒலியமைப்பு முறையும்தான் ஒன்றை மயங்கிக் கேட்பதற்கும், புரிந்து கொள்வதற்கும், மயங்கிய நிலையிலேயே எழுதுவதற்கும் காரணமாக அமைகின்றன.  மனம் என்பதும் மணம் என்பதும் கிட்டத்தட்ட ஒலியமைப்பில் ஒன்று போலவே தோற்றமளிப்பன.  பனி-பணி, வால்-வாள்-வாழ், அனு-அணு, பரவை-பறவை, போன்றன நுட்பமான ஒலி வேற்றுமை கொண்டன.  இவை ஒன்று மற்றொன்றாகக் கருதப்பெற்றால்  எவ்வளவோ பொருள் மாறுபாட்டை விளைவித்து விடுவனவாம்.  நுண்ணிய ஒலி வேறுபாடுகளையுடைய எழுத்துக்கள் மிகுந்துள்ள மொழிகளின் நூல்களில் இத்தகு பாடவேறுபாடுகள் மிக்கிருப்பது தவிர்க்க முடியாததாம்.  மூலபாட ஆய்வில் பாடவேறுபாடுகள் தோன்றும்  காரணங்களை அறிந்து கொள்ளாமல் பாடத் தெரிவில் நுழைவது அடிப்படையில்லாமல் கட்டடம் கட்டுவது போன்ற சிக்கலை உருவாக்குவதாம்.

 

வாய்மொழி நூல்கள்

 

உலக மொழிகளுள் பெரும்பாலன தொடக்க காலத்தில் வாய்மொழிவழியாகவே நூல்களைப் பரவச் செய்தன.  (பைபிள் எழுதப்பட்ட காலம் அது எழுந்த காலத்தை விட மிக மிகப் பிந்தியதாகும்.)  நம் பாரத நாட்டின் பழம்பெரும் காவியமான மகாபாரதம் தோன்றிய வரலாறு இக்கருத்தை அரண் செய்தல் நோக்கத்தகும்.

வியாசர் மகாபாரதக் கதையைத் தம் ஐந்து சீடர்களுக்கும் மொழிந்தார்.  அவர்கள் ஆங்காங்கு அதைச் சொற்பொழிவாகப் பரவச் செய்தனர்.  அவர்கள் தாம் சென்ற நாடு, திசை, மொழி, கேட்கும் மக்கள், சூழல் இவற்றையொட்டித் தம் விளக்கங்களை மாற்றித் தான் பரப்பியிருப்பர்.  ஆகத் தொடக்கக் காலத்திலேயே வியாசர் காலத்திலேயே 5 வகைப்பட்ட பாரதக் கதை உருவாக்கப் பட்டுவிட்டது எனலாம்.  அதாவது ஒன்று ஐந்தாக, ஐந்து பத்தாக, பத்து நூறாக  என அக்கதை நாடு முழுவதும் பரவப் பரவப் பல்கிப் பெருகி விட்டது.  அடிப்படை ஒன்றாக அமைந்தாலும் இடம், காலம், சூழல், மொழி, அரசியல், கேட்போர் அறிவு முதலான பல்வேறு சூழல்களுக்கு ஏற்பச் சொற்பொழிவாளரின் மொழித்தன்மை , கற்பனைச் சூழல், பாத்திரப் படைப்பு விளக்கக் கதைகள் ஆகியன மாறிவிட்டன.  இச்சூழலுடன் காலந்தோறும் மாறிவந்த மொழிமாற்றங்கள், எழுத்து மாற்றங்கள், நாகரீகப் பழக்கவழக்கங்கள் இவையும் அக்கதையில் ஊடுருவி விட்டன.  அதாவது இம்மாற்றங்கள் வெறும் சொற்களில் மட்டும் நிகழ்ந்துவிடவில்லை.  சுலோகங்களின் எண்ணிக்கை, கதையமைப்புகளில் கூடப் பெரும் மாற்றத்தை உருவாக்கிவிட்டன.

 

சான்றாக மகாபாரதத்தின் ஆதி பருவத்தைக் காண்போம்.

கல்கத்தா பதிப்பு         8,460 சுலோகம்
பம்பாய் பதிப்பு           8,620 சுலோகம்
சென்னை சாஸ்திரியார் பதிப்பு 9, 984 சுலோகம்
கும்பகோணப் பதிப்பு 10, 889 சுலோகம்
சாரதா சுவடி                  7, 984 சுலோகம்

அதாவது குறிப்பிட்டுச் சொல்லும் சிறப்புடைய பதிப்புகளிலும் சுவடிகளிலும் கூட இவ்வளவு பெரிய மாற்றங்கள் காணும்போது பாட வேறுபாடுகளின் தோற்றத்தை நாம் ஓரளவு கணிக்க முடியும். விரிவான மாற்றங்களை எத்தாங்கரின் மகாபாரதப் பதிப்பில் காணலாம்.

 

நம் தமிழ்மொழியின் நூல்களும் இவ்வாறு வாய்மொழியாகவே பரவத் தொடங்கிய சூழலை நாம் பல்வேறு சான்றுகளால் தெளியலாம்.  இந்நூல்கள் தோன்றி ஆயிரம் ஆண்டுக்கால இடைவெளிக்குப் பின்பும் எழுத்து வடிவம் பெறுவதுண்டு.  அதுவரை வாய்மொழியாகவே-செவிவழிச் செய்தியாகவே பரவி நிலைத்திருக்கும்.
இறையனார் அகப்பொருள் உரை தோன்றிய வரலாறு இதனை அரண் செய்தல் காணலாம். 

 
“மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார் தம் மகனுக்கு உரைத்தார்.  அவர் தேனூர்க் கிழார்க்கு உரைத்தார்.  அவர் படியங்கொற்றனார்க்கு உரைத்தார்.  அவர் செல்வத்தாசிரியர் பெருஞ்சுவனார்க்கு உரைத்தார். அவர் மணலூர் ஆசிரியர் புளியங்காய்ப் பெருஞ்சேந்தனார்க்கு உரைத்தார்.  அவர் செல்லூராசிரியர் ஆண்டைப்பெருங்குமாரனார்க்கு உரைத்தார்.  அவர் மாதவனார் இளநாகர்க்கு உரைத்தார். அவர் திருக்குன்றத்தாசிரியர்க்கு உரைத்தார்.  அவர் முசிறியாசிரியர் நீலகண்டனார்க்கு உரைத்தார். “

என ஒன்பது தலைமுறை வரை வாய்மொழியாக வளர்ந்து வந்த செய்தியைக் காண்கிறோம்.

 

இவ்வாறே சங்க இலக்கியக் குறிப்புகளில் காணப்படும் தொகுத்தார் தொகுப்பித்தார் போன்ற செய்திகளும், வாய்மொழியாகப் பரவிய நூல்கள் சில காலத்துக்குப் பின்பே எழுத்து வடிவம் பெற்றன என்பதை உறுதி செய்கின்றன. 

 

படி எடுத்தல்

 

வாய்மொழியாகக் கேட்டு எழுதும் பழக்கத்தைத் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் வரலாற்றிலும் நாம் காணலாம்.  எழுதுகிறவர் ஓய்ந்து போகும் அளவுக்கு ஆசுகவியாக, காளமேகமாகப் பாடல்களைப் பாடுகின்ற புலவர்கள் பெரும்பாலான நூல்களைத் தம் மாணாக்கரைக் கொண்டே எழுதுவித்தனர்.  மூல நூலின் தோற்றம் இந்நிலையில் காணப்படுகிறது. எழுதுவித்தபின் அவற்றைப் பிழையறப் பார்த்தோதித் திருத்துவது நூலாசிரியர் கடனாகும்.  அவர் திருத்திய செய்தியினைக் கேட்டுப் பல படிகளைத் தொழில்முறை எழுத்தர்கள் உருவாக்கிப் பரப்பினர்.

 

நூலாசிரியரிடம் நெருங்கிப்பயின்று வந்த மாணாக்கரின் நுண்ணறிவைப் போன்றதொரு அறிவைத் தொழில்முறை எழுத்தர்களிடம் நாம் எதிர்பார்க்க முடியாது.  எனவே மாணாக்கர் எழுதிய படியை விடத் தொழில் முறை எழுத்தர் எழுதிய படிகள் மாறுபாடுகள் குறிப்பிடும் அளவில் புகுவதற்குப் பெரிதும் வாய்ப்புள்ளது எனக் கருத வேண்டும்.

 

அறிவிற் சிறந்த மாணாக்கர் கேட்டு எழுதும்போது கூட ஒலி மாற்றம் காரணமாக எழுத்துக்களைப் பிழைபட எழுதுவதற்கும், கைச்சோர்வால் சொற்களிடையே சிலபல மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் இடம் உண்டு.  இவ்வாறே படிப்பவரின் ஒலிப்பு முறையும் ஒரு சில பிழைகளை உருவாக்குதல் கூடும்.  இந்நிலையில் தொடக்க காலச் சுவடிகளிலே கூட அதாவது ஆசிரியரின் காலத்தே படி எடுக்கப் பெற்ற நூல்களிலே கூட எழுத்துக்களும், சொல் வடிவங்களும் மாற்றங்கண்டன என்றால் அது மிகையாகாது.

மாணாக்கர் சுவடியே இவ்வாறு மாற்றங்களை உண்டாக்குவதற்கு  வாய்ப்பாக இருக்கும்போது பொருளீட்டல் கருதித் தொழில்முறையாக விரைவாக எழுதித் தருவோரால் மாற்றங்கள் ஏற்படாதிருக்குமோ?  இத்தகையோர் நூல்களை எழுதி வரும்போது படித்தவாறோ, கேட்டவாறோ, அல்லது புரிந்து கொண்டவாறோ தம் மொழியறிவுக்கு ஏற்ப எழுதிவிடுவர்.  நினைவாற்றலால் தமக்குத் தெரிந்த நூல்களில் உள்ள சொற்களை, தொடர்களை, சிலர் புகுத்திவிடுவதும் உண்டு.

 

ஆசிரியர் தாமே முயன்று எழுதிய சுவடியிலும், தம் மேற்பார்வையில் எழுதுவித்த சுவடியிலும் பிழைகள் குறைந்திருக்கும்.  பிழைகள் இல்லை எனும்படி நிறைவாக மூலப்படியாக அவை இலங்கும்.  மூலப் படியைப் பார்த்து ஒன்றின்பின் ஒன்றாகக் கால இடையீட்டுடன் பெருகிய படிகளில் பிழைகள், மாற்றங்கள் பலவாகப் பெருகி நிற்றல் இயல்பு.

முதுமுனைவர் வ. அய். சுப்பிரமணியம் அவர்கள், சுவடிப் பதிப்பில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர்கள், தோய்ந்த அறிவைப் புலப்படுத்தியவர்கள்.  அவர்கள் மூல, படி ஏடுகளைப் பற்றி பிரதிபேத ஆராய்ச்சியின் (மு.இராமகிருட்டிணன்) அணிந்துரையில் கூறும் செய்தி இவண் சுட்டத் தருவதாம்.

 

“இலக்கிய ஆசிரியர் தாமே எழுதிய  அல்லது பிறர் எழுதத் தாமே சரிபார்த்துத் திருத்திய பிரதியைத் தன் பிரதி (Autograph) என்பார்கள்.  இந்தப் பிரதி கிடைக்குமாயின், அந்த இலக்கியத்தின் பாடத்திற்கு இதை விட உறுதி நல்கும் வேறொரு சான்று இருக்க முடியாது.  பின்னுள்ளவர்கள் இந்தப் பிரதியைப் பலமுறை நகல் செய்திருப்பர்கள்.  இவ்வாறு செய்பவர்கள் மனிதர்கள். ஆகையால், அறிந்தோ, அறியாமலோ பல மாறுபாடுகள் நகலில் புகுவது திண்ணம்.  எடுத்துக்காட்டாகப் புறநானூற்று ஏட்டைப் புலவர் சொக்கன் நகல் எடுத்தார் என வைத்துக்கொள்வோம்.  அந்த நகலிலிருந்து எழுத்தர் முருகன் மீண்டும் நகல் செய்தார் என்றும் வைத்துக்கொள்வோம்.  ஒவ்வொரு நகலிலும் ஒரு விழுக்காடு (percentate) பிழை இருக்குமென்றும் வைத்துக்கொள்வோம். புற நானூற்றின் மூலப் பிரதி முற்றிலும் (100%) சரியாக இருக்கும். சொக்கனின் நகல் ஒரு விழுக்காடு குறையுள்ளதாக இருக்கும்.  முருகனின் நகல்., 2.73 விழுக்காடு குறையுள்ளதாக இருக்கும்.  இதில் இருந்து தலைமுறை தலைமுறையாக வழங்கிவரும் இலக்கிய ஏட்டு நகல்களில் எவ்வளவு மாறுபாடுகள் மலிந்திருக்கும் என்று தெளியலாம். “(பக்.9)

 

இவ்வாறு தவறாகப் படிப்பதால் கைத்தவறாக, வாய்த்தவறாக, மறதியாகத் தோன்றின பாடவேறுபாடுகள் போலவே தமிழ் எழுத்துக்களின் கால வளர்ச்சியும் பாட வேறுபாடுகளை உருவாக்கின.  குறில், நெடில் மாற்றமில்லாமை, மெய்யெழுத்துக்களும், உயிர்,மெய்யும் ஒன்று போலவே எழுதப் பட்டமை, ரகரத்திற்கும் காலுக்கும் வேறுபாடின்றி எழுதப் பட்டமை, ஒற்றைக் கொம்பிற்கும் டுவிற்கும் வேறுபாடின்மை; இவ்வாறே த, ற, ந; @, ரு, ஞ; ர, ற; து, று,நு;  மு, மூ, ழு, ழூ; ன, ண; ல, ள, ழ; அ,வ,சு; ஆ,கு; பா,ய; ப,ய; த,ச,க,; போன்றன.  ஒன்றைப் போன்று வேறொன்றின் தோற்ற மயக்கத்தைக் கொடுத்துப் பின் பொருள் வேறுபாட்டை உண்டாக்குகின்றன.   வரிவடிவில் இவற்றிடையே காணப்படும் வேறுபாடு சிறிதே. எனினும் பொருளடிப்படையில் பெருத்த வேறுபாட்டைக் காட்டுவன.  அச்சுக்கலை தோன்றிய இக்காலத்தும் இவ்வெழுத்துக்கள் ஒன்றுக்கொன்று மயக்கமூட்டி அச்சுப் பிழைகளை உண்டாக்குகின்றனவெனில் பழைய சுவடிகளின் எழுத்து மாற்றத் தோற்றங்கள் பலவாக இருப்பது வியப்புக்குரியதன்று.  ஆக இவ்வாறெல்லாம் பாடவேறுபாடுகள் தோன்றுகின்றன என்பதை முதற்கண் அடிப்படையாகத் தெரிந்து கொண்டு பாடத் தெரிவுக்குச் செல்வோம்.

 

பாடங்களைத் தேர்வு செய்தல்

 

ஆசிரியரின் மூலம் எதுவதாக இருக்கும் என்பதை நுண்ணிதின் ஆய்ந்து தேர்வு செய்வதே பாடத் தெரிவு ஆகும்.  ஒருவரால் ஒரு காலத்து இயற்றப் பட்ட மூலத்தில் பிற்காலத்தில் நிகழ்ந்த மாசுகளை நீக்கிஅம்மூலத்தின் உண்மையான பொருளை நிச்சயித்து மூலத்தை நிலைபெறச் செய்தலையே மூலபாட ஆய்வு(Textual Criticism) என்பர்.

 

சுவடிகளில் இவ்வாறெல்லாம் பல வேறுபாடுகள், மாறுபாடுகள் தோன்றும் விதத்தை நம் முன்னோர் நன்கு உணர்ந்திருந்தனர்.  பாடல்களைத் தேர்வு செய்து உரை கண்டனர்.  தொல்காப்பிய உரைகளிலும், திருக்குறள், சிந்தாமணி, கலித்தொகை போன்ற நூல்களின் உரைகளிலும் வருகின்ற குறிப்புகள் நம் முன்னவரிடம் மூலபாட ஆய்வு சிறப்பாகக் குடி கொண்டிருந்தமையைப் புலப்படுத்துவனவாம். ‘இன்னவாறு பாடம் ஓதுவாரும் உளர்’  ‘இன்னவாறு பாடங் கொள்வாரும் உளர்’ ‘இன்னதூ உம் பாடம்’ இன்ன காரணத்தால் அது பொருந்தமையறிக’, என வரும் குறிப்புகள் இக்கருத்தை அரண் செய்தல் காணலாம்.  இவற்றினின்று வேறொரு சிறந்த குறிப்பும் நமக்குக் கிடைக்கிறது.  நூலாசிரியரும், உரையாசிரியரும் தாம் பயில்வதற்கும், பயிற்றுவிப்பதற்கும் ஒரே நூலின் பல சுவடிகளை, படிகளைத் தொகுத்திருக்கின்றனர் என்பதே அது.

 

நூல்களைப் பதிப்பிப்பாரும் முதற்கண் தொடர்புடைய சுவடிப்படிகளைத் தொகுத்துக் காண்பது இன்றியமையாக் கடமையாகக் கொள்ளவேண்டும் என்பது நம் முன்னோர் அடிச்சுவட்டினின்று தெரிவதாகும்.  கத்தாங்கரின் மகாபாரதப் பதிப்புக்கு நாடெங்குமிலிருந்து 200க்கும் மேற்பட்ட சுவடிகள் தொகுத்து ஒப்புக் காணப்பெற்றன என்பது ஈண்டு குறிப்பிடவேண்டிய செய்தியாகும்.

 

சுவடிகளும் பாடவேறுபாடுகளும் மிக மிக -ஆசிரியரின் மூலம் எது என்பதைத் துணிவதில் குழப்பமும், தயக்கமும் மிகும். பாடவேறுபாடுகள் நூல்களின் இலக்கிய, இலக்கணத் தன்மைக்கேற்பவும் மாறுபடுகின்றன.  அறிஞர் பெருமக்களிடம் மட்டுமே உலவித் திரிகின்ற நூல்களில் பாடவேறுபாடுகள் குறைவு.  ஆயின் இலக்கிய நூல்களில் குறிப்பாக, பாமரமக்களிடம் பரவியுள்ள நாடக நூல்கள், புராணங்கள் போன்றவற்றில் பாடவேறுபாடுகள், கதை வேறுபாடுகள் மிக்குக் காணப்படுகின்றன. மகாபாரதத்தில் பாடவேறுபாடுகள் மிகுந்து  காணப்படுவது அது நாடெங்கும் பரவியதாலேயாம்.  நம் தொல்காப்பியத்துள் பாடமாறுபாடுகள் குறைந்திருப்பதற்குக் காரணம் அது அறிஞர் தம் மத்தியில் மட்டுமே உலவியதுதான் எனலாம்.  அவ்வாறே மக்களிடம் அதிகம் பரவாத சங்க இலக்கியங்களில் பாடவேறுபாடுகள்  குறைவு. ஆயின் மக்களிடையே அதிகமாகப் பரவிய கம்பராமாயணத்தில் பாடவேறுபாடுகள் மிகுதி.  பாடல் எண்ணிக்கையில் கூடப் பெருத்த மாற்றம்.  சங்க இலக்கியத்துள் (குறுந்தொகை 400 என்பதற்கு 420 என்றோ 500 என்றோ மாறுபடுமளவிற்கு) பாடல் எண்ணிக்கை மாறுபாடுகள் காணப் படவில்லை.  கம்பராமாயணத்தில் ஒரு படலத்திலேயே கூட நூற்றுக்கணக்கான பாடல்கள் மாறுபடுகின்றன.  இந்த அடிப்படையை மனத்தில் இருத்தி முதற்கண் ஏடுகளைத் தொகுத்தல் வேண்டும்.

 

ஏடுகளைத் தொகுத்தபின் அவற்றை இனங்காண முடியுமா? என்னும் ஆய்வில் ஈடுபட்டு ஏடுகளின் கொடிவழியைக் காணல் வேண்டும். இதற்கு இது மூலமாக இருக்குமா? எழுத்தமைதியாலும், ஓலைகளின் பழமையாலும் ஏட்டின் பழமையை நிச்சயித்து அந்த அடிப்படையில் தலைமை ஏடு ஒன்றை மூலமாகக் கருதிப் பாடங்களைத் தொகுத்தல்  பயனுடையதாக அமையும்.  ஏடுகளை வகைப்படுத்தி இனம் காணப் பெற்றால்தான் ஏடுகளின் மொழிநிலை உறுதியாகும்.  ஏடுகளில் காணப்படும் ஒற்றுமைப்பகுதிகள் ஒன்று போல அமைவதைக் கண்டு இனம் பிரிக்கலாம்.  வேற்றுமைப் பகுதிகள் ஒன்றாக தவறுகளும், பிழைகளும் குறையும் ஒன்றாக அமைவதையொட்டியும் இனம் பிரிக்கலாம்.  ஏடுகளைத் தொகுத்தபின் அவற்றின் உள்ளே காணப்படும் முற்குறிப்பு, பிற்குறிப்புகளை ஆய்தல் வேண்டும்.  அவற்றுள் காணப்படும்காலம், எழுதியவர் வரலாறு, போன்ற குறிப்புக்கள் ஏட்டின் தரத்தை நிச்சயிப்பதற்குப் பெரிதும் பயன்படுவதாகும்.  காலப் பழமைக்கு அகச்சான்றையும், புறச்சான்றையும் உறுதிப் படுத்தியபின் அவற்றின் கொடிவழியைக் கண்டு பாடவேறுபாடுகளின் புள்ளிவிவரங்களைக் கணக்கிடலாம். 

 

பாடவேறுபாடுகளைத் தொகுத்தபின் பழைய உருவத்தை மீட்டுருவாக்கம் செய்யமுடியுமா என்பதில் தலைப்படுதல் வேண்டும்.  அவ்வாறு தலைப்படும்போது ஒற்றுமையான பாடங்கள், சற்று வேற்றுமை காட்டுவது, முற்றிலும் வேறுபட்டன என மூவகையாகப் பிரித்துக்கொண்டு ஒப்பியல் நோக்கில் ஏடுகளையும், பாடங்களையும் இனப்படுத்த  வேண்டும்.  வேறுபாடுகளில் ஒரு விதிமுறை இருக்கிறதா என நுணுகிக் காணலாம்.

ஏடுகளைத் திரட்டும்போது இது தொடர்பான உரைநடை நூல்களையும், பிற உரை நூல்களையும், பிற நூல்களில் எடுத்தாளப் பெறும் மேற்கோள் வடிவங்களையும் தொகுத்தல் இன்றியமையாததாகும்.  புற நானூற்றில் சில பாடங்கள் பாட்டின் பழைய உரையால் திருத்தம் பெற்றமை இங்கே சுட்ட வேண்டுவதாம்.  இவை போன்றே மொழிபெயர்ப்பு நூல்களையும், செய்திகளையும் கூடத் திரட்டி நோக்குதல் வேண்டும்.  இவற்றையெல்லாம் திரட்டிப் பாடவேறுபாடுகளைத் தொகுத்த பின்பு முந்தைய திராவிட மொழியமைப்பு எவ்வாறிருந்தது என்பதை ஆராய்ந்தால் பழைய நூல்களின் பதிப்புக்கு அது வகை செய்வதாக அமையும்.  பழந்திராவிட மொழியாய்வும், சொல் வழக்குகளும், பிற நூல்களில் காணப்பெறும் ஒப்புமை வடிவங்களும், பொருள்களும் பாடங்களைத் தெரிவதில் பெரிதும் துணை நிற்பனவாம்.

 

 பெரும்பாலான ஏடுகளில் ஓரடி, ஒரு சொல், மாற்றமின்றிக் காணப்படின் அது மூலமாக இருக்கமுடியும் எனக் கருதலாம்.  அது பிழையான வடிவமாக இருப்பினும் அதை ஏற்க வேண்டும்.  சொல்லும் பொருளும் மயக்கத்தை உண்டாக்குகிறதா என்பதைக் கூர்ந்து பார்த்து ஏற்பது, ஏலாதது, ஐயமாவது என அவற்றைத் துணிந்து பொருள் பொருத்தம் காண முற்படவேண்டும்.  அவ்வாறு தேர்ந்தெடுக்கும் பாடம் யாப்போடு உடன்பட்டு உள்ளதா?  நூல் முழுவதும் யாப்பமைதி எவ்வாறுள்ளது?  நூலாசிரியரின் யாப்புக் கொள்கை யாது? சொல்லின் இலக்கண அமைதி இடங்கொடுக்கிறதா?  ஒரு குறிப்பிட்ட புலவரின் தொடரை, சொல்லை ஆயும்போது வேறு இடங்களில் அவர்தம் தொடர்கள், சொற்கள் எவ்வாறு உள்ளன என்பதை ஆராய்ந்தால் அவர்தம் யாப்புக் கொள்கை புரிந்துவிடும்.  பரணர் பாடல்கள் எல்லாமே இப்படித்தான் இருந்தனவா என்றவாறெல்லாம் ஆய்ந்து  துணிதல் வேண்டும்.  இவ்வகை இலக்கண, இலக்கிய மொழி ஆய்வு அக்குறிப்பிட்ட நூலில், குறிப்பிட்ட காலத்தைச் சார்ந்த இலக்கிய வகையில் அப்பதிப்பாசிரியர்க்கு  மிகுந்த பயிற்சியிருந்தாலொழியச் சிறக்காது எனலாம்.

 

இவ்வாறெல்லாம் செய்யுமுன் ஏடுகளைத் தொகுத்த உடனே தள்ளவேண்டியவற்றைத் தள்ளிவிட வேண்டும்.  இது நம்பிக்கைக்குரிய ஏடன்று-இவ்வளவு பிழை மலிந்ததைச் சான்றேடாகக் கொள்ளலாமா? எனச் சிந்தித்துத் தள்ளுவது போலவே பாடவேறுபாடுகளிலும் தள்ளத் தகுந்த வடிவங்கள், பொருளற்ற வடிவங்கள், முரணான வடிவங்கள் போன்றவற்றைத் தள்ளிக் கழித்தபின் பொருளான பாடங்களுள் தேர்வு செய்தல் சிறந்ததாக அமையும்.

 

எவ்வளவு விழிப்பாகச் செய்தாலும் மூல நூலாசிரியரின் பாடத்தை மீட்டுருச் செய்துவிட்டோம் என்று கூறிவிட முடியாது.  மூல நூலாசிரியருக்கு நெருங்கிய வடிவுக்குச் சென்றிருக்கிறோம் என்ற நிலை கிடைத்தாலும் அப்பதிப்பு வெற்றி பெற்ற பதிப்பாகக் கருத முடியும்.

 

சுருங்கச் சொல்லின் பாடத் தெரிவுக்குக் கீழ்க்கண்ட வழிகளில் ஆய்வு செய்தல் சிறந்த பயனைத் தருவதாகும்.

 

1.மூல ஏடுஒப்பு
2. பல சுவடி ஒப்பு
3. எடுத்தாண்ட நூல்கள் ஒப்பு
4. உரைகள் ஒப்பு
5. பொருட் பொருத்தங்காணல்,
6. இலக்கண அமைதி காண்டல், செய்யுளாயின் யாப்பமைதி நோக்குதல்
7. சொல்வழக்கு, சொல்லாட்சி ஆய்தல்
8.செய்யுளும் உரையுமாயின் உரையால் தெளிதல்
9.மொழிபெயர்ப்பாயின் மூல நூல் ஒப்பு
10. நூலின் பொதுக்கோட்பாட்டில், நோக்கில், அமைப்பில், மாறுபாடாமை ஆய்தல்
11. மொழி நூல் ஒப்பு
12. பிற நூல் ஒப்பீடு

 

பொருட் பொருத்தம் கருதுதல்

 

பொருட்பொருத்தமும் பொருட்செறிவும் கருதிப் பாடங்களைத் தேர்வு செய்தல் சில நேரங்களில் மூலபாட ஆய்வுக்குச் சிறந்ததாகத் தோன்றும். இலக்கண மரபு, யாப்பமைதி எனப் பல்லாற்றானும் ஒத்து விளங்குகின்ற பாடங்களுள் ஒன்றைத் தெரிவு செய்வது எவ்வாறு?  இச்சூழலில் அப்பாடங்களுள் பொருட்பொருத்தமும், பொருட் செறிவும் கொண்டு நூலில் மையக் கருத்தை -சூழலைப் பெரிதும் பொருந்தியிருக்கின்ற பாடங்களைத் தேர்வு செய்தலே சிறந்ததாக அமையும்.

 

“ஆவொடு பட்ட நிமித்தம் கூறலும்” எனும் பொருளதிகாரப் பகுதியுள் (தொல்.பொருள்.நச்.177) “வேள்விக் கபிலையாற் பயங்குறுதலும், குன்றாது கலநிறையப் பொழிதலானும்” என்பது முந்தைய அச்சுப் பாடமாகக் காணப் படுகிறது.  இப்பகுதியின் பொருட்பொருத்தம் கருதி (பா, யாவாகத் தவறாகப் படிக்கப் பட்டது என்பதை யுணர்ந்து) கழகப் பதிப்பினர், “வேள்விக் கபிலைபாற் பயங்குன்றுதலும்” என்று மாற்றி அச்சிட்டுள்ளனர்.  உள்ளபடியே பாராட்ட வேண்டிய பாடமாகும் இது.

 

இவ்வாறே மற்றோரிடத்து (தொல்.பொருள்.நச்.187) “தலைவியும், தலைவனும் துணிந்தும் இருத்தலிற் பிரிந்துரையார் எனப் பன்மையாற் கூறினார்” என்றிருப்பதின் பொருட்செறிவின்மையை யுணர்ந்து (ன-ணவாகப் படிக்கப் பட்டுத் தவறாகப் பதிப்பிக்கப் பெற்றது) கழகப் பதிப்பினர், “தலைவியும், தலைவனும் துனித்தும் இருத்தலிற் பிரிந்துரையார் எனப் பன்மையாற் கூறினர்” எனப் பதிப்பித்துள்ளனர்.  அகப் பொருளில் துனித்திருத்தலுக்குள்ள சிறப்பிடத்தைக் காண இப்பொருட்செறிவு கொண்ட பாடத் துணிவு பாராட்ட வேண்டியதேயாகும்.

 

அக நானூற்றில் (31) ‘சென்றால் என்பிலர் தோழி’ என்ற பகுதிக்குச், ‘சென்றார் அன்பிலர் தோழி” என்றொரு பாடம் கிடைக்கும்போது ,’சென்றார் அன்பிலர் தோழி’ என்னும் பாடத்தைத் தேர்வு செய்வதுதானே பொருட்பொருத்தமுடையதாகும்?

 

இலக்கண அமைதி காணல்

 

இலக்கண அமைதி கொண்டும் யாப்பமைதி கண்டும் பாடங்களைத் தெரிவு செய்தல் பல நேரங்களில் பொருத்தமாக இருப்பதைக் காணலாம்.  சங்க இலக்கியங்களில் காணப்பெறும் சேர நாட்டு ஊரான மாந்தை, பதிப்பாசிரியப் பெருமக்களால் (சி.வை.தா., வையாபுரியார்) மாந்தை, மரந்தை என்றெல்லாம் மாற்றி மாற்றிப் படிக்கப் பெற்றது.   ஊர்ப்பெயர் என்னவாக இருக்கும் என்பதை உறுதியாகக் கூறமுடியவில்லை.  ஆயின், இராகவையங்கார் அவர்கள் அச்சொல் இடம் பெறும் வெண்பாவைச் சுட்டிக் காட்டி வெண்பாவுக்கு வேண்டிய தளை, தொடையமைப்புகளையும் விளக்கி, அது, “மாந்தை” என்றுதான் படிக்கப் பெறுதல் வேண்டும் என்பதை நிறுவினார்கள்.

 

இவ்வாறே சங்க இலக்கியத்தில் பயிலப் பெறும் ,மரவகை ஒன்றின் பெயரும் பல்வேறு வகையான வடிவுடன் காட்டப் பெற்றது. ‘யா’ எனப்படும் அம்மரத்தின் பெயரை, “யாஅ” எனவும், “யாம்” எனவும் தவறாகக் கணித்தனர் என்பதை அவர்கள் கொண்ட விளக்கங்கள் காட்டுகின்றன.  செய்யுளின் ஓசை கருதி வரும் அளபெடை, சந்தி கருதி வரும் எழுத்துக்கள் அப்பெயரைக் காட்டுவதில் மயக்கமூட்டின.
 
மென்சினை யாஅம் நெறிக்கும் –குறுந் -37
நிலையுயர் யாஅந் தொலையக் குத்தி-குறுந்- 307
யாஅங் கொன்ற மரஞ் சுட்டு- குறுந்-198

இங்கெல்லாம் அளபெடை ஓசை கருதியே இடம் பெற்றுள்ளது.  ஆயின் அதையும் பெயருடன் இணைத்து யாஅம் எனவும், சந்திகளைச் சேர்த்து யாவும் எனவும் கருதிய பதிப்பாசிரியர்கள் உண்டு.  ‘மரப்பெயர்க்கிளவி மெல்லெழுத்து மிகுமே’ –தொல். உயிர்மயங் 15,

‘குறியதன் முன்னரும், ஓரெழுத்து மொழிக்கும்,
அறியத் தோன்றும் அகரக் கிளவி – தொல்-உயிர் மயங், 24

யாமரக்கிளவியும், பிடாவுந்தளாவும்
ஆமுப்பெயரும் மெல்லெழுத்து மிகுமே-தொல் –உயிர் மயங்- 27

 

என வருகின்ற நூற்பாக்களைக் காணும்போது, “யா” என்பது தான் அதன் பெயர் என்பது வெள்ளிடைமலையாகிறது.  உ.வே.சாமிநாதையரைக் கூட இந்த இடம் மயக்கிவிட்டது போலும். இவ்வாறு இலக்கண மரபுகளை யாப்பு வடிவங்களைக் கொண்டும் பாடங்களைத் தெரிவு செய்தல் அறிஞர் தொழிலாகும்.
 

பாடவேறுபாடு-வடிவ வேறுபாடு

 

ஒரே நூலின் படிகளாகவுள்ள சுவடிகளுள் காணப்படும் செய்திகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் என்பர். ஒன்று பாடவேறுபாடு, மற்றொன்று வடிவ வேறுபாடு.  இவை இரண்டுக்கும் உள்ள வேற்றுமை நுண்ணிது.
பாடலின் கருத்தை மாற்றுவதாகவோ தொடரின் பொருளுக்கு மாற்றுக் கருத்தைத் தருவதாகவோ, ஒரு சொல்லுக்கோ தொடருக்கோ மாற்றுச் சொல்லோ, மாற்றுத் தொடரோ காணப்படுவது பாடவேறுபாடாகும்.  இது ஓசையமைப்பிலும், யாப்பமைதியிலும்கூடப் பொருந்திக் காணப்படுவதாம்.

 

‘மாதர்கள் கற்பின் மிக்கார் கோசலை மனத்தை ஒத்தார்’ இக்கம்பராமாயண அடிக்கு (கைகேயி சூழ்வினைப் 70)
‘மாதர்கள் வயதின் மிக்கார் கோசலை மனத்தை ஒத்தார்’ என்பது பாடவேறுபாடாகும்.  இவ்வேறுபாடுகளுள் கம்பரின் உயர்ந்த நோக்கை – காப்பியத்தின் ஒட்டு மொத்த பார்வையை-சொற்களின் ஆழமான பொருளுணர்ச்சியைக் கருத்தில் கொண்டு நாம் உரியவற்றைத் தேர்ந்தெடுத்தல் வேண்டுவதாகும்.  இத்தேர்வுக்கு மொழிப்பயிற்சி இன்றியமையாதது. சிந்தனைத் தெளிவும், மொழியறிவும் காப்பியத்தை -நூற்பொருளை முழுவதுமாக ஊடுருவிய நுண்ணறிவும் இன்றியமையாததாகும். திருக்குறளுக்குச் சுகாத்தியர் கண்ட மாற்றங்கள் கூட பாடவேறுபாடுகள் (தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும்-தக்கார் தகவிலர் என்பது அவரவர் மக்களாற் காணப்படும்)போல்வனவே.

 

வடிவ வேறுபாடு என்பதும் கிட்டத்தட்ட இது போல்வதோர் வேறுபாடே, எனினும் இது பெரும்பாலும் பொருளடிப்படையில் பெரிய மாற்றத்தை உருவாக்குவதாக அமையாது.  அதாவது பாடலில், தொடரின் முழுக்கருத்தை மாற்றுவதாக இவ்வேறுபாடு காணப்படாது.  ஒரு சொல்லில், தொடரில், காலப் போக்கில் காணப்படும் உருமாற்றமாகவே இதனைக் கருதலாம். 

 

புலைத்தி- புலத்தி- குறுந்- 230
புலைத்தி-புலச்சி- குறுந்- 230
கொடுங்கால்-கொடுந்தாள் –குறுந்- 324
தப்பற்கு-தப்பிற்கு-குறுந்- 292
அவிழ்ந்த- விரிந்த- குறுந்-282

 

இவை பொருளடிப்படையில் பெருமாற்றத்தைத் தரவில்லை.  ஆயின் இவ்வகை ஒத்த பொருளுள்ள சொற்களிலே கூடச் சில பொழுது பொருள் மாற்றத்தை நாம் சந்திக்கவேண்டி வரும் என்பதும் இங்கு சுட்டத் தகுவதாம்.

சினை என்பதற்கு மாற்றுச் சொல்லாகக் கிளை என்பது வடிவ வேறுபாடாகத் தோன்றலாம்.  அதுவே முட்டை என்ற பொருளையும் பயந்து நிற்பதால் ஆண்டு மயக்கமும் நேர்தல் கூடும்.  இவ்வகை வடிவ வேறுபாட்டைக் கூர்ந்து நோக்கி, மொழி வரலாற்றுக் காலப் போக்கோடு, நூல் தோன்றிய காலச் சூழலோடு நாம் நுண்ணிதின் வேறுபடுத்தி இது நூலின் சொல்லாக இருக்கக் கூடும், இது பிற்கால வழக்கினது என்றெல்லாம் உறுதி செய்யலாம்.

சங்க இலக்கியத்துள் கடந்தான் என்ற பொருளுக்கு இறந்தான் என்ற சொல்லை விடுத்துச் செத்தான் என்ற வடிவ வேறுபாடு காணப்பட்டால் எவ்வளவு பொருள்மாற்றம் வந்துவிடும்??  இவ்வித வேறுபாடுகளை நுண்ணிதில் உணர்ந்து அவ்வக் காலத்துத் தோன்றிய பிற நூல்களை எல்லாம் ஒப்பீடு செய்வதால் தெளிவாக்கிக் கொள்ளல் கூடும்.

 

திவ்வியப் பிரபந்தம் முதலாயிரம் முகவுரையில் அதன் பதிப்பாசிரியர் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையவர்கள்  இவ்விரண்டையும் பற்றிக் கூறியுள்ள கருத்து இங்கு சிந்திக்கத் தருவதாகும்.

 

“பாடபேதம் என்று குறிப்பது ஒரு சொல்லுக்குப் பிரதியாக வரும் பிறிதொரு சொல்லை, உதாரணமாக, “கோளரி மாதவன்” (556) என்பதற்குக் “கோளரி வாமனன்” என்று வருவது போல்வன. பாட பேதங்கள் ‘துரியோதனன் – திரியோதனன் (175) முழுசாதே- முழுவாதே (734) என வருவன போல்வன ரூப பேதங்கள்.”

பொருளடிப்படையில் இவை பெருமாற்றத்தை உண்டாக்காவிட்டாலும் மூல நூலாசிரியரின் சொல்லுக்கு மாறுபட்ட எதுவும் பாடவேறுபாடாகக் கொள்ளத்தகுவனவேயாம் எனக் கருதுவோரும் உளர்.  வளர்ந்து வரும் மொழிநிலை காலந்தோறும் சொற்பொருள் மாற்றத்தை உருவாக்கி நிற்பதாகும்.  ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளில் நாற்றம் என்ற சொல்லின் பொருள்  இந்நூற்றாண்டில் கொள்ளும் பொருளோடு முற்றிலும் மாறுபட்டதாகும்.  ஒரு காலத்தில் தோன்றிய சொல்லுக்கு வேறொரு காலத்தில் மாற்றுச் சொல்  போட்டுவிட்டு அதனை மற்றொரு காலத்தில் கற்பார் முற்றிலும் மாறுபட்ட பொருளைக் காண வேண்டிய சூழலுக்கு ஆளாதல் தவிர்க்க முடியாததாகும்.  எனவே மாறுபட்ட சொல், தொடர் எதுவும் பாடவேறுபாடே எனக் கொள்வதில் தவறேதுமில்லை எனலாம்.

 

சொற்திரிபுகள், சொற்குறைகள், திரிந்த வழக்குகள், மாறுபட்ட பேச்சு மொழிகள், போலி மரூஉ மொழிகள், கொச்சை வடிவங்கள், கிளை மொழிகள், வட்டார வழக்குகள், பிறமொழிச் சொற்கள்  போன்றனவும் வடிவ வேறுபாடுகளாகக் கருதத் தக்கனவே.  தொடங்கற்க-துடங்கற்க, பைய-பய, பசலை-பயலை, தசை-சதை, இயம்பினான் -சொன்னான், துளை-தொளை,  வெண்ணெய்-வெண்ணை, தஞ்சாவூர்-தஞ்சை, சொன்றி-சோறு, அழகு-சுந்தரம், அழகு-ரம்யம், ஞமலி-நமலி, ஞெண்டு-நண்டு, போன்ற வேறுபாடுகளும், நூல் தோன்றிய காலச் சூழலுள், வட்டாரச் சூழலுள் மொழிவழக்குகள் மயக்கத்தைக் காட்டுவதால் இவ்வேறுபாடுகளையும் நாம் பாடவேறுபாடுகளாகவே கருதலாம்.

 

இவ்வகை வேறுபாடுகளையெல்லாம் நுண்ணிதில் நோக்கி பிழைபட்டன இவை, மாறுபட்டன இவை, தள்ளத்தக்கன இவை, கொள்ளத்தக்கன இவை என்றெல்லாம் சிந்தித்துத் தெளிதல் பதிப்பாசிரியர் கடனாம்.  இவற்றைத் துணியும்போது இலக்கிய ஆட்சி, வழக்கு மொழி, மொழி மரபு ஆகியவற்றை ஒப்பு நோக்கியும், மொழிபெயர்ப்பு நூல்களுக்கு மூல நூல் கொண்டும் உரை நூல்களுக்கு உரைப்பொருள் கருதியும் அவ்வக் காலத்தின் இலக்கண அமைதி, ஓசையமைதி, எதுகைமோனையமைப்பு ஆகிய மொழியின் பலதரப்பட்ட அமைதியுடன்  பொருள் பொருத்தத்தைக் கணித்துத் தேர்வு செய்தல் நலம் பயப்பதாகும்.

 

பாடவேறுபாடுகள் தருதல்

 

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பல சுவடிகளை ஒப்பு நோக்கிக் கம்பராமாயணத்தைப் பதிப்பித்து வெளியிட்டது.  அதில் 5,000 பக்கம் மூலம், 5,000 பக்கம் உரை, 5,000 பக்கம் பாடவேறுபாடுகள் என்னும் விகிதத்தில் மூல நூலின் அளவுக்குப் பாடவேறுபாடுகள் பல்கியிருப்பதைக் காணலாம்.  அவர்கள் பார்வைக்குக் கிட்டாத-பதிப்புக்கு எடுத்துக்கொள்ளாத கம்பராமாயணச் சுவடிகள் மேலும் சிலவாக இருத்தல் கூடும்.  அவ்வாறானால் இந்த 5,000 பக்கத்தையும் தாண்டி 5,000 பக்கம் மூலநூலை விட பாடவேறுபாடுகளின் அளவு மிகுந்து தோன்றுவதற்கு வாய்ப்பு உள்ளமை நாம் உணரலாம்.

 

டாக்டர் உ.வே.சாமிநாதையர், பேராசிரியர் ச.வையாபுரிப் பிள்ளை போன்ற பதிப்பாசிரியப்பெருந்தகையினர் வெளியிட்ட நூல்களில் பாடவேறுபாடுகளையும் நாம் காணலாம்.  அவ்வாறே சைவ சித்தாந்த மகாசமாஜத்தினரின் திருவாசகம், திருமந்திரம், மர்ரே இராஜமையரின் திவ்வியப் பிரபந்தம் போன்ற நூல்களிலும் அவர்கள் பாடவேறுபாடுகளைத் தொகுத்துத் தந்துள்ளனர்.  வையாபுரிப் பிள்ளையவர்கள் வெளியிட்ட சங்க இலக்கியப்பதிப்புக்கும் பாடவேறுபாடுகள் தொகுக்கப் பெற்றன.  ஆயின் அப்பாடவேறுபாடுகள் பொருளாதாரத் தட்டுப்பாடு கருதி நூலுள் சேர்க்கப்படவில்லை.

 

சில நூல்களில் முதல் பதிப்பில் கண்ட பாடங்கள் அடுத்த பதிப்பில் தள்ளப் பெற்றும் காணப்படுகின்றன.  மொழி அறிவும், பிறநூல் ஒப்பும் பெருக மூலபாட ஆய்வின் தரம் உயர்வதை இவை காட்டுகின்றன எனலாம்.  இவற்றை உற்று நோக்கும்போது பாடவேறுபாடுகளையும் பதிவு செய்தல் இன்றியமையாததாகத் தோன்றுதல் காணலாம்.

 

பாடங்களைச் சீர் தூக்கித் தேர்வு செய்த பின்பு பிற பாடங்களை ஒதுக்கி இருட்டடிப்பு செய்து விடுதல் பதிப்பாசிரியர் நேர்மையாகாது.  தாம் கண்ட பாடங்களை ஏதேனும் ஓர் இடத்தில் அடிக்குறிப்பாலோ, வேறோரிடத்துத் தொகுத்தோ காட்டுதல் வேண்டும்,  இவ்வாறு பாட வேறுபாடுகளையெல்லாம் தொகுத்துத் தருவது ஆராய்ச்சி முறையில் பதிப்பிக்கும் ஒரு பதிப்புக்கு இன்றியமையாத அமைப்பாகக் கருதப் பெறும்.
பாடவேறுபாடுகளின் தொகுப்பு எல்லோருக்கும் பயன்படுவதன்று. எனினும் ஆராய்ச்சியாளர்கட்கு மொழி பற்றிய பல்வேறு மரபுகள், வழக்குகளை ஆய்ந்து துணிய இவை பெரிதும் பயன்படுவதாகும்.  மொழி நூல் வல்லார், இலக்கியக் கலைஞர், இலக்கணிகள், இலக்கணங்கற்றார், மொழிவழிச் சமுதாயத்தை ஆய்வார்,  ஒப்பியல் மொழி ஆய்வார் போன்றோர்க்கு இவ்வேறுபாடுகள் மொழியின் மரபையும்,  மாற்றத்தையும், வளர்ச்சியையும் இவற்றின் காரணத்தையும் அறியப் பெரிதும் பயன் தருவனவாம்.  எனவே சுவடியில் தாம்கண்ட பாட வேறுபாடுகளையெல்லாம் தொகுத்துத் தருவது பதிப்பாசிரியரின் பெருங்கடமையாகும்.  இவ்வாறு காணப்பெறும் பாடவேறுபாடுகள் எந்தச் சுவடியில் காணப்பட்டன என்னும்  விபரத்துடன்  அவற்றைத் தருவது மேலும் பயனுடையதாகும், அறமுடையதாகும் எனலாம்.

 

தவறுகளைத் திருத்தலாமா?

 

நமக்குக் கிடைக்கின்ற சுவடிகளில் எல்லாம் காணப்படுகின்ற பாடவேறுபாடுகளும், வடிவ வேறுபாடுகளும் தவறாகவோ, பொருத்தமற்றதாகவோ தோன்றுகின்ற சூழல்களும் சிலபோது ஏற்படும்.  சொற்பிழை, எழுத்துப் பிழை, ஒலிப்பிழை போன்ற பிழைகளை விடுவித்துப் பாடமாற்றப் பிழைகளாகத் தோன்றுகின்ற பிழைகளை என்ன செய்வது?  ஓர் ஏட்டிலும் காணாத ஆனால் பொருத்தமாக இருக்கும் எனக் கருதும் பாடத்தை நாமாகப் புகுத்தலாமா?  நூலமைப்பில், உரை அமைப்பில் இடமாற்றத்தைச் செய்வதைக் கூட நாம் சுட்டிக்க்காட்டவேண்டிய அமைப்பியல் மாற்றத்தைச் சுட்டிக் காட்டவேண்டிய கடப்பாடு நமக்குண்டு.  அவ்வாறு இருக்க நாமாகப்புகுத்தும் பாடங்களை அறிஞர் உலகு ஏற்குமா?  அது பதிப்பாசிரியர் அறமாகுமா?

ஏடெழுதுவோரால்  நேர்ந்த பிழையைத் திருத்துவதற்குக் கூட முந்தைய பதிப்பாசிரியர்கள் அஞ்சினர். 

 

அடியோடு அழிந்து போகும் பழைய நூல்களை
நிலை நிறுத்துவான் புகுந்தேனாதலின் நூலைத் திருத்துவதும்
பொருள் இசையச் செய்வது என் கடமையன்று.  இயன்றளவும் பூர்வரூபம்
பெறச் செய்வதும் இயலாதவிடத்து இருந்தபடி உலகிற்கொப்பிப்பதுமே யான் தலையிட்ட தொழில்
(சி.வை.தா. கலி. பதிப்புரை)

 

எட்டுச்சுவடிகளிற் கண்ட பாடங்களின்  வேறுபாட்டைக் கண்டு கண்டு என் மனம் புண்ணாகி இருக்கிறது. இன்னபடி இருந்தால் பொருள் சிறக்குமென்று எனக்குத் தோற்றின இடங்களிலும்  பிரதியில் உள்ளதையே பதிப்பித்தேன்.  என்னுடைய கருத்தையோ, திருத்தத்தையோ சிந்தாமணியில் ஏற்றாமல் மிகவும் ஜாக்கிரதையாகக் கவனித்துப் பதிப்பித்தேன். பதிப்பிக்கத் தொடங்கிய நூல் எனக்கு ஒரு தெய்வ விக்கிரஹம் போல் இருந்தது. அதன் அழுக்கைத் துலக்கிக் கவசமிட்டுத் தரிசிக்க வேண்டுமென்பதே என் ஆசை.  ‘கை கோணியிருக்கிறது, வேறு விதமாக அமைக்கலாம்; நகத்தை மாத்திரம் சிறிது திருத்தலாம் என்ற எண்ணம் எனக்கு உண்டாகவில்லை. அதன் ஒவ்வோரணுவிலும் தெய்வீக அம்சம் இருக்கிறதென்றே நம்பினேன்.  அழுக்கை நீக்கி விளக்குவதற்கும் அங்கத்தையே வேறுபடுத்துவதற்கும் உள்ள வித்தியாசத்தை நன்கு அறிந்திருந்தேன்.
(உ.வே.சா. என் சரித்திரம் பக்கம் 389)

 

இன்னோரன்ன குறிப்புக்களைக் காணும்போது நாமாக எதையும் புகுத்துவதோ, திருத்துவதோ அறமாகாது என்பது வெள்ளிடைமலை.  எனினும் எழுத்துப் பிழைகளை, வழூஉக்களைத் திருத்தி அச்சிட்டால் அவை குறித்த விளக்கத்தை முன்னுரையில் சொல்லி விடுதல் இன்றியமையாததாகும்.

 

முடிவுரை

 

பாடவேறுபாடுகளைக் கண்டுணர்ந்து பாடத் தெரிவை மேற்கொள்வதில் பதிப்பாசிரியரின் சிந்தனையாற்றல் தலை சிறந்த இடத்தைப் பெறுவதாகும்.  பாடவேறுபாடுகளைப் பற்றிய ஆய்வில் எல்லாவகைப்பட்ட நோக்குகளிலும் ஆய்வை மேற்கொண்ட பின்பு சுயமாகச் சிந்தித்து நாம் இப்பாடத்தை ஏன் தேர்வு செய்யவேண்டும்? இத்தேர்வுக்கு நாம் எதைக் காரணமாகக் காட்ட முடியும்?  அக்காரணம் அறிஞர் பெருமக்களால் ஏற்கப் படுமா?  ஏற்கப் படாதென்றால் அவர்களின் தடைகளுக்கு விடை கொடுக்க முடியுமா?  என்பவற்றை ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.  மொழிநிலை, காலநிலை, சொல்நிலை இவற்றைத் தெளிந்து தாம் அந்நூலின் தோய்ந்து நின்ற பயிற்சியை வெளிப்படுத்தி நிற்கும்போது  அவர் தேர்ந்தெடுத்த பாடம் சிறந்ததாக விளங்க முடியும் என்பது திண்ணம்.  அத்தகு பதிப்பாசிரியர்கள் வெளியிட்ட நூல்களை அறிஞர் உலகம் நம்பிக்கையுடன் வரவேற்று மகிழும்.

 

இன்றைய இலக்கிய இலக்கண ஆய்வுலகம்  எவ்வளவோ விரிந்தும், பரந்தும், ஆழ்ந்தும் விளங்குகிறது.  சொல்லடைவுகள், தொடரடைவுகள், பிற அகராதிகள், ஒப்பீடுகள்  போன்ற பல வசதிகள் பெருகியமைந்துள்ளன.
  கணிப்பொறியின் பயன்பாடு இதில் மிகச் சிறந்த நிலையில் பயன்படுவதாக வளர்ந்துள்ளமையும் இங்கு சுட்டத் தகுவதாம்.   இந்நிலையில் மொழிநிலை, சொல்நிலை, காலநிலை இவற்றையெல்லாம் பிற நூல்களுடன், பிற உரைகளுடன், பிற விளக்கங்களுடன், பிற இன மொழிகளுடன் ஒப்பிட்டு ஆய்வது எளிதாகிவிட்டது.  இவ்வளர்ச்சியும், வாய்ப்பும் சுவடிப்பதிப்பாசிரியர்க்குப் பெரிதும் துணை செய்வதாய் அமைதல் மகிழ்வுக்குரியதாகும்.

 

இவ்வாறெல்லாம் சிந்தித்து ஆய்ந்து வெளியிட்ட நூல்களையும் அறிஞர் தம் கருத்துரைக்கனுப்புதல் நன்று.  அவர் தம் கருத்துரையை ஏற்று அடுத்தடுத்த பதிப்புகளில் திருத்தி வெளியிடுதல் மேலும் அந்நூலைச் செப்பம் செய்வதாக அமையும்.  ஒருமுறை பதிப்பித்து வெளியிட்ட நூல்களை, “பதிப்பித்து வெளியிட்டாயிற்று, இனி நமக்கென்ன” என்று வாளாவிராமல் அதைப் பற்றிய சிந்தனையைத் தொடர்ந்து செயலாக்க வேண்டும்.  டாக்டர் உ.வே.சாமிநாதையரின் முதற்பதிப்பு நூல்களையும் அடுத்தடுத்து வந்த பதிப்புகளையும் காண்பார் மேலே கூறியவற்றின் தேவையை நன்கு உணர்வர்.  பதிப்பாசிரியத் தந்தையாக விளங்கிய சி. தாமோதரம் பிள்ளையவர்களின் தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்புரை இதனை அரண் செய்தல் காணலாம்.

 

இஃது இப்போது வழுவறப் பிரசுரஞ் செய்யப் பட்டதன்று கொள்ளற்க.
எனக்குச் சந்தேகம் பிறந்துழியெல்லாந்
தற்காலத்துப் பெயர் போந்த வித்வான்களாயுள்ளார் பலரையும்
வினவியும் அயனூற் துணிபுகள் மேற்கோள்களோடு சீர் தூக்கியும்
இன்றும் ஐயமறுத்துக்கொள்ளாத இடங்கள் அநேகம் உள.
அவைகளைக் கூடிய மாத்திரம் பிரதிகளிலிருந்தவாறு
அச்சிடுவித்தனன். ஆயினும் பொருட் தொகுதி, போரூட் தொகுதி,
பேரர் உட் தொகுதி, பேர் அருட் தொகுதி, பேரருட் தேர்குதி,
போரூட் தேர்குதி, பொருட் தேர்குதி, என்றற் தொடக்கத்தனவாய்
இன்னும் பல பாடபேதமாகப் படித்தற்கிடம்பெற்றுப்
பொருட்டொகுதி என்றெழுதிக் கிடந்த தொன்றையான்
அவற்றுள் ஒன்றாக என் சிற்றறிவு சென்ற வழிக் குறிப்பிட்டுப்
பதிப்பித்தமை பற்றி அதுவே பாடமென்று நிச்சயிற்க. சமுசய
நிகழ்வுழியெல்லாஞ் சந்தியை மீளவும் இலக்கணப் பிரகாரம்
புணர்த்துப் தீர்க்க பேதத்தையும், புள்ளியையும் நீக்கிப் பாடபேதப்
படுத்திப் பார்க்குமாறு வேண்டிக்கொள்கிறேன். (பக்.6)

பனிரண்டு சுவடிகளைத் தேடித் தொகுத்துச் சிறந்த முறையில் ஒப்பிட்டுப் பதிபித்தவரின் கூற்றே இது என்பது நினைவில் கொள்ளத் தகுவதாம்.

 

இது அவர்தம் பதிப்பாசிரியர் தரத்தை நிறுவுவதாகவும் திகழ்தல் காணலாம்.

 

எனவே, பாடவேறுபாடுகளுடன் கூடிய சுவடிகளைப் பதிப்பித்து வெளியிடும் பதிப்பாசிரியர்க்கு மொழியறிவும் சிந்தனையாற்றலும் இருந்தால் போதும்……. அவர் வழிச் சிறந்த நூல்கள் வெளிவந்துவிடும் என்று உறுதியாக நம்பலாம்.  அவர் தேர்ந்தெடுத்த பாடத்தையும் பதிப்பித்த நூலையும் முழுதும் ஏற்று மகிழலாம்.  அத்தகு மொழியறிவு நிறைந்த சிந்தனையாளர்கள் பலராகத் தமிழன்னைக்கு வாய்ப்பார்களாக.


 

தட்டச்சு செய்து வழங்கியவர்: திருமதி.கீதா சாம்பசிவம்

 

You may also like

Leave a Comment