வ.ராமசாமி (வ.ரா)
கலைமாமணி விக்கிரமன்
19ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தேசிய மறுமலர்ச்சி இயக்கம் தோன்றியது. வ.உ.சி., பாரதி போன்றவர்கள் தோன்றி, விடுதலை வேள்வி ஓங்கி உயர வழி செய்தனர்.
வ.வே.சு.அய்யர், சுப்பிரமணிய சிவா, வீரவாஞ்சி, திருப்பூர் குமரன் போன்றவர்களின் ஆவேசமிக்க பேச்சாலும் எழுத்தாலும் கவரப்பட்டு தம் வாழ்க்கையையே மாற்றிக்கொண்ட இளைஞர்கள் பலர். அவர்களுள் "வ.இரா" என்ற
ஈரெழுத்துகளால் பெருமையுடன் புகழப்படும் வ.இராமசாமி அய்யங்காரும் ஒருவர்.
நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் தஞ்சை மாவட்டத்தில் திருவையாறுக்கு அருகிலுள்ள திங்களூரில் 1889ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி வரதராஜ அய்யங்கார் – பொன்னம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.என்ன வியப்பு!
அதே ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி பரலி சு.நெல்லையப்பர் பிறந்தார்.பாரதியாருக்கு உறுதுணையாக, மரியாதை மிக்க சீடர்களாக, மிகவும் பற்றும் பாசமும் கொண்ட இரட்டையர்கள் கிடைத்தனர்.வ.ரா., பாரதியின் பெருமை பரப்புவதைக் கடமையாகக் கொண்டார்.
1944-45களில் சென்னை ஹிந்தி பிரசார சபா அரங்கில் நடந்த கூட்டமொன்றில், "என் வாழ்நாளில் பாரதியாரின் பாடல்களை இசைத்தட்டுகளின் மூலம் பட்டிதொட்டிகளிலெல்லாம் முழங்கச் செய்து பாரதியின் புகழ் பரவச்
செய்வேன்” என்று வீராவேசத்துடன் பேசிய வ.இரா.வின் அந்தப் பேச்சு, இன்றும் செவிகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
தஞ்சை மாவட்டம் உத்தமதானபுரம் கிராமத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் வ.இரா.வின் ஆரம்பக் கல்வி தொடங்கியது.
பிறகு தஞ்சை, திருச்சி என்று பல இடங்களில் அவர் படிப்பு தொடர்ந்தது.
அவருடைய தந்தை வரதராஜ அய்யங்கார் நடுத்தரக் குடும்பத்தினர். பரம வைதீகர். பிழைப்புக்காக திருப்பழனம் என்ற ஊரில் குடியேறினார். தன் மகனைக் கல்வியில் சிறக்கச் செய்ய பெருமுயற்சி எடுத்துக்கொண்டார். அவருடைய நெருங்கிய நண்பர் கொடியாலம் வி.அரங்கசாமி அய்யங்கார், வ.இராமசாமியின் கல்விக்கு பலமுறை உதவினார்.
தேசத்தொண்டில் ஆசைகொண்ட வ.ரா., மற்றெதிலும் நாட்டம் கொள்ளவில்லை என்பதை உணர்ந்த கொடியாலம் வி.அரங்கசாமி அய்யங்கார், புதுவைக்குச் சென்று அரவிந்தர் அங்கு வந்திருப்பதைப் பற்றிய முழு விவரம் தெரிந்து வருமாறு பணித்தார். கொடியாலம் வி.அரங்கசாமி அய்யங்கார், வ.இரா.வைப் புதுவைக்கு
அனுப்பிய வேளை நல்ல வேளை. வ.இரா.வின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை.
வ.இரா., அரவிந்தரைச் சந்திக்கும் முன்பே பாரதியைச் தரிசனம் செய்துவிட்டார்.புதுவையில் வ.இரா., பாரதியாருடன் அரவிந்தரையும் சந்தித்தார். அரவிந்தரைத் தரிசித்த செய்தியை கே.வி. அரங்கசாமி அய்யங்காருக்குத் தெரிவித்தார். மீண்டும் திருச்சி சென்று கொடியாலம் அரங்கசாமி அய்யங்காரோடு வ.இரா.
புதுவைக்குத் திரும்பினார். 1911 முதல் 1914 வரை வ.இரா., அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கினார். அரவிந்தரின் அன்பையும், ஆசியையும் பெற்றார்.
பாரதியார் அருகே இருந்து பழகியதால் வ.இரா.வுக்குப் பாரதியாரிடம் தனிப்பற்று ஏற்பட்டது. அந்த வாய்ப்பு, பிற்காலத்தில் "மகாகவி பாரதியார்" வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கு ஏற்ற முழுச் செய்திகளும் கிடைத்தன.
வ.இரா.வுக்கு வங்கமொழி தெரியும். அதனால் ஓய்வு நேரத்தில் பங்கிம்சந்திர சட்டர்ஜியின் "ஜோடி மோதிரம்" என்ற புதினத்தை மொழிபெயர்த்தார். அது, பெண் கல்வியை வற்புறுத்தும் கதை. பாரதி அதைப் படித்து, வ. இரா.வின் உரைநடையழகைப் பாராட்டினார்.
மகாகவி பாரதியின் தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், விதவைத் திருமணம், பெண்களுக்குக் கல்வி போன்ற சீர்திருத்தக் கருத்துகளைக் கூர்ந்து கவனித்து ஏற்ற வ.இரா.
பிற்காலத்தில் சுந்தரி, சின்னச்சாம்பு, விஜயா, கோதைத்தீவு போன்ற புதினங்களை எழுதினார். அவர் எழுதிய சிறுகதைகளில் சமூகத்துக்குச் சாட்டையடி கொடுத்துப் போராடும் தன்மை இருந்தது. அவருடைய குருநாதரின்
குரல், இலட்சியம் வ.இரா.வின் பேச்சிலும் எழுத்திலும் பிரதிபலித்தன.
1914ஆம் ஆண்டிலிருந்து பத்திரிகைப் பணியில் ஈடுபட்டார். தஞ்சையிலிருந்து வெளிவந்த "சுதந்திரன்" பத்திரிகையின் ஆசிரியரானார். அவர் ஓரிடத்தில் நிலைத்து நிற்கவில்லை. பிறர் கட்டளையிடப் பணிசெய்வது அவருக்குப் பிடிக்காது.
வர்த்தமித்திரன், பிரபஞ்சமித்திரன், தமிழ்நாடு, சுயராஜ்யா, வீரகேசரி, பாரததேவி என்று பல பத்திரிகைகளில் பணியாற்றினார். வ.இரா.வின் வாழ்க்கையில் பெரிய திருப்பம், "மணிக்கொடி"யில் சேர்ந்தது. அதற்குப் பிறகுதான் அவரது பெருமை நாட்டுக்குத் தெரிந்தது.
ஸ்டாலின் சீனிவாசன் என்பவர், திரைப்படத் தணிக்கைத் துறையில் யாருக்கும் விட்டுக்கொடுக்காத அதிகாரியாக – இரும்பு மனிதராகத் திகழ்ந்தவர். பாரதியாரின் படைப்புகளுக்கு அடிமையானவர். அதனால், பாரதியின் சீடர்கள்
பரலி சு.நெல்லையப்பர், வ.இரா., பாரதிதாசன் போன்றோரிடம் மிகுந்த மதிப்புக் கொண்டவர். காங்கிரஸ் போராட்டத்தில் பலமுறை சிறை சென்றவர்.
சிறைவாசத்தின்போது வ.இரா.வும் டி.எஸ்.சொக்கலிங்கமும் நெருங்கிய நண்பர்களானார்கள்.
சிறையிலிருந்து வெளிவந்த பிறகு, இலக்கியப் பத்திரிகை ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டார் சீனிவாசன். திருப்பழனத்துக்குச் சென்று அங்கே வசித்து வந்த வ.இரா.வை அழைத்துவந்தார். "மணிக்கொடி" தொடங்கியது.
"டி.எஸ்.சொக்கலிங்கம், வ.இரா., நான் மூவருமாக எங்கள் இலட்சியப் பத்திரிகைக்குத் திட்டமிட்டோம். என்ன பெயரிடுவது என்று வெகுவாக விவாதித்தோம். ஒருநாள் ஏதோ நினைவாக கம்பனைப் புரட்டியபோது, அவன்
மிதிலையில் மணிக்கொடிகளைக் கண்டதாகச் சொன்னது என் மனதை நெருடிக் கொண்டிருந்தது. அன்று மாலை கோட்டைக்கு அடுத்த கடல் மணலில் நாங்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்தோம். கோட்டைக் கொடிமரத்தில் பறந்த யூனியன் ஜாக் திடீரென்று கீழே விழுந்தது".
"விழுந்தது ஆங்கிலக்கொடி, இனி அங்கு பறக்க வேண்டியது நமது மணிக்கொடி” என்றேன்.அதுவே எங்கள் பத்திரிகைக்குப் பெயராகட்டும் என்று குதூகலத்துடன் முடிவுசெய்தோம். மூவரும் கையெழுத்திட்டு, "மணிக்கொடி"யைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்தோம்.ஆங்கில இலக்கியம் முன்னேறியது போன்று தமிழ் இலக்கியமும் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு மிக்கவர் வ.இரா.
மணிக்கொடியில் நடைச் சித்திரம் என்ற தலைப்பில் பொது விஷயங்களைப் பற்றி எழுதினார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பது வ.இரா.வுக்குப் பிறவிக்குணம்."கல்கி"யை ஊக்கப்படுத்தி அவர் எழுதிய "விமலா" என்ற நாவலை தமது சுதந்திரன் பத்திரிகையில் வெளியிட்டார். அதுதான் கல்கியின் முதல் நாவல்.
புதுமைப்பித்தனை மிகவும் ஊக்கப்படுத்தி எழுத வைத்தவர் வ.இரா. மணிக்கொடி எழுத்தாளர்கள் வரிசையில் கொடிகட்டிப் பறந்தவர் புதுமைப்பித்தன் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
இன்றைக்கு 63 ஆண்டுகளுக்கு முன்பு, "தமிழ்ப்பண்ணையிலிருந்து சின்ன அண்ணாமலை, வ.இரா. எழுதிய நூல் ஒன்றை வெளியிட்டார். வ.இரா. எழுதிய "தமிழ்ப் பெரியார்கள்" புத்தகம் வெளிவந்தவுடன் உடனே விற்பனையாகிவிட்டது. அத்துடன் மிகக் கடுமையான சர்ச்சைக்கு உட்பட்டது. தமிழ்நாட்டில் பல்வேறு
துறைகளில் முன்னணியில் அன்றிருந்த பிரமுகர்களைப் பற்றிய பேனா சித்திரம் என்றும் அந்தத் தொகுப்பைக் கூறலாம்.
வைதிக வைஷ்ணவக் குடும்பத்தில் பிறந்த வ.இரா., தன் குல ஆசார அனுஷ்டானங்களை விட்டுவிட்டார். பூணூல் கிடையாது. குடுமி இல்லை. பெற்றோர், சகோதரர், உற்றார் உறவுகளைத் துறந்தார். அவர் பிறந்த சமூகம் அவரை ஒதுக்கி வைத்ததற்கு அவர் அஞ்சவில்லை.
சாதிமத சம்பிரதாயங்களுக்கு அப்பாற்பட்ட வ.இரா., இலங்கையில் பத்திரிகை ஒன்றில் பணியாற்றும்போது புவனேஸ்வரி அம்மையாரை மணந்து கொண்டார். இறுதிவரை அவர்கள் இருவரும் கணவன் – மனைவிக்கு ஓர் எடுத்துக்காட்டாக இலட்சியத் தம்பதியாக சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்தனர்.
வ.இரா. கதரே அணிவார். இளம் வயதில் தீவிரமாக கதர் பிரசாரம் செய்திருக்கிறார். அவருடைய புரட்சிக் கருத்துகளுக்காக அறிஞர் அண்ணா அவரை, "அக்கிரஹாரத்தின் அதிசய மனிதர்" என்று புகழ்ந்தார்.
அவர் எழுதியவை நான்கு நாவல்கள், வாழ்க்கை வரலாறு ஐந்து, சிந்தனை நூல்கள் ஆறு, மொழிபெயர்ப்பு இரண்டு. கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தியின் முயற்சியால் வ.இரா.வுக்கு மணிவிழா கொண்டாடப்பட்டது. கணிசமான நிதியும் வழங்கப்பட்டது.
1951ஆம் ஆண்டு ஆகஸ்டு 23ஆம் தேதி உணவுக்குப் பிறகு சிறிது கண்ணயர்ந்த அந்தத் தாய்ப்பறவை, பிறகு கண் விழிக்கவே இல்லை.
நன்றி:- தினமணி