முனைவர். ம.இராசேந்திரன்
முன்னுரை
காலமும் இடமும் கடந்து நிலைத்து நிற்க கருத்துக்கள் பதிவு செய்யப் படுகின்றன. கால்களில் இரண்டைக் கைகளாக மாற்றிக் கொண்டு விலங்கினின்று மனிதன் வேறு பட்ட காலம் முதல் கருத்தறிவித்தல் இருந்திருக்கிறது.
மனித குல வரலாற்றின் தொன்மைப் பொதுவுடைமைச் சமுதாயத்தில் வேட்டைக்குச் சென்ற இடம் பற்றியும், வேட்டையாடிய விலங்கு பற்றியும், வேட்டையாடிய முறை பற்றியும் கோடுகளால் அக்கால மக்கள் வரைந்து காட்டியுள்ளனர். இவ்வாறு தொடர்ந்து ஒவ்வொரு கட்ட சமுதாய வளர்ச்சியின் போதும் பதிவு செய்யும் முறையிலும், பதிவு செய்யப் பயன்படுத்தும் பொருள்களிலும் பல்வேறு வகையான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அவ்வகையில் தொன்மையான வரலாற்றிற்குரியவர்களாகிய சுமேரியர்கள் பச்சைக்களிமண்ணைப் பயன்படுத்தியுள்ளனர். எகிப்தியர்கள் கி.மு. நான்காம் நூற்றாண்டிலேயே கிரேக்கத்திற்கு ஏற்றுமதி செய்ததோடு தாங்களும் பேப்பிரசைப் பயன்படுத்தியுள்ளனர். ஆசியாவைச் சார்ந்தவர்கள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பர்ச்மெண்ட் (Perchment) என்னும் விலங்கின் தோலையும் கி.பி. முதல் நூற்றாண்டு முதல் பேப்பிரசையும் இரண்டாவது நூற்றாண்டில் கோடெக்சையும் (codex) பயன்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு அந்தந்த நாட்டுச் சூழலுக்கு ஏற்பவும் கிடைக்கும் பொருட்களுக்கு ஏற்பவும் செய்யப் படும் பொருட்களில் நிலவிய வேறுபாடுகள் பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய குடியேற்ற ஆதிக்கத்தாலும் இன்று அறிவியல் வளர்ச்சியாலும் மறைந்து வருகின்றன. இந்தியாவில் கல்வெட்டு, ஓலை, செப்பேடு, தாள், அச்சு, ஒலிப்பதிவு, ஒலி, ஒளிப்பதிவு, கணிப்பொறி என்று பகுத்துப் பதிவு பல்வேறு வகையில் வளர்ந்து வருகிறது. அவற்றுள் ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் உள்ள தமிழக வரலாற்றின் பன்முகப் பாங்கையும் வெளிப்படுத்தும் கருத்துப் பதிவுகளைத் தம்மகத்தே கொண்டுள்ள தாள் சுவடிகளின் நூலாக்க நெறிமுறைகளை ஓலைச்சுவடிகளின் நூலாக்க நெறிமுறைகளுடன் ஒப்பிட்டு ஆய்வது இக்கட்டுரையாகும்.
தாள்
கடுதாசி (லெக்.573) போர்த்துகீசியர் சொல்லாகிய கேர்டாசு (cartaz) என்பதிலிருந்தும் காகிதம் என்பது மராத்தியச் சொல்லாகிய காகடா (kagada-kagaz in urdu) என்பதிலிருந்தும் தமிழில் வந்து சேர்ந்துள்ளன. தமிழிலேயே அப்பொருளுக்குத் “தாள்” என்று வழங்கி வருகிறது. (லெக். 1855)
எகிப்தின் நைல்நதிக்கரைப் பகுதியில் உள்ள பேப்பிரஸ் (Papyriss) எனும் ஒருவகையான தாவரத்தின் பகுதியை எழுதுவதற்குப் பயன்படுத்திய காரணத்தால் (Paper) என்னும் பெயர் தோன்றியுள்ளது. இதனாலேயே “விவிலியம்” “பைபிள்” என்று அழைக்கப்பட்டது என்பர்.* 1நான்காயிரம் ஆண்டுகட்கும் முற்பட்ட கிரேக்க, ரோமானிய பேப்பிரசு சுவடிகள், கெய்ரோ, (National Museum) லண்டன், பெர்லின் ஆகிய இடங்களில் இன்றும் பாதுகாக்கப் பட்டு வருகின்றன.*2
தாள் உற்பத்தி ஆலை வரலாறு: இயற்கையாகக் கிடைத்தவற்றை எழுதுவதற்குப் பயன்படுத்தி வந்த மக்கள் வளர்ச்சிப்போக்கில் எழுதுவதற்குத் தேவையான பொருளை உற்பத்தி செய்யத் தொடங்கினர். கி.பி. 150-ல் சீனப் பேரரசின் அரசவையிலிருந்த ‘சை லூன்’ (Tsai Lun) எனும் அலுவலர், மல்பெர்ரி (Mulberry) முதலான இழைகளை மீன் வலை, பழைய துணி, கூடை ஆகியவற்றின் துண்டுகளுடன் சேர்த்து ஒற்றைத் தாளாக உருவாக்கியுள்ளார்.
பின்னர் தாள் செய்யும் கலை மைய ஆசியாவின் சமர்கந்து (Samarkand) பகுதிக்கு கி.பி. 751-ல் சென்றுள்ளது. கி.பி. 793-ல் அருன் – ஆர்- இரசீது (Harun – ar-Raschid) காலத்தில் மொகம்மதியர்களின் பொற்காலத்தில் பாக்தாத்தில் முதன்முதலாகத் தாள் உற்பத்தி தொடங்கப்பட்டது. அங்கிருந்து பின்னர் ஐரோப்பா சென்றது. கி.பி பதினான்காம் நூற்றாண்டில் தான் ஆலைகள் ஐரோப்பா முழுவதும் குறிப்பாக சுபெயின் (Spain), இத்தாலி, பிரான்சு, செர்மனி நாடுகளில் எண்ணற்றவை ஏற்பட்டன.
கி.பி.1450-ல் அச்சுப்பொறி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தாளின் தேவை மிகுந்தது. நாளும் நாளும் தாள் உற்பத்தி ஆலைகள் மிகுந்து வந்தன எனினும் அன்றையத் தேவை நிறைவாகவில்லை. கி.பி. 1799-ல் நிக்கோலசு லூயிசு இராபர்ட் (Nicolas Louis Robert) எனும் பிரான்சுக்காரர் முதன்முதலில் தொடர்ச்சியாகத் தாள் சுருள் உருவாக்கும் பொறியைக் கண்டு பிடித்தார். அப்பொறியை இலீகர் டிடாட் (St. Legar Dedot)என்பவரிடம் விற்றார். வாங்கியவர் அதனை இலண்டனுக்கு எடுத்துச் சென்று ‘பிரியன் டான்கின் (Bryan Donkin) என்னும் ஓர் பொறியாளரின் உதவியுடன் மேலும் அப்பொறியைச் செம்மையான வடிவத்துக்கு மாற்றியமைத்தார். அதன்பின்னர் தனித்தாளிற்குப் பதிலாக ஆலைகளில் தாள் உருளைகள் உருவாக்கப் பட்டன.
தாள் உருளைகளாக உருவாக்கப் பட்டபொழுது, அதற்குரிய கச்சாப் பொருட்கள் கிடைக்காமல் போயின. ஆகவே மலிவானதும் நிறையக் கிடைப்பதுமான ஒரு பொருளிலிருந்து தாள் தயாரிக்க வேண்டியிருந்தது. 1940-ன் ‘பிரட்ரிச் கோத்தோலோப் கெல்லர்’ (Fredrich GoetoRob Keller) என்னும் செருமானியர் மரக்கட்டைகளை அரைத்துக் கூழ் செய்யும் ஒரு இயந்திரத்தை உருவாக்கினார். பின்னர் 1850-ல் தான் இரசாயன முறையில் கூழ் தயாரித்துத் தாள் தயாரிக்கும் முறை அக் பர்கீசு (Hugh Burgees) என்னும் ஆங்கிலேயரால் வளர்ச்சி பெற்றது. இன்றும் அது தொடர்ந்து பல்வேறு தொழில் நுட்பங்களால் வளர்ந்து வருகின்றது. *3
சுவடி: மேனுசுகிருப்டசு (Manuscriptus) எனும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து மேனுசுகிருபட்சு (Manuscripts) எனும் ஆங்கிலம் எடுத்துக்கொண்டுள்ளது. இதற்கு இணையாகத் தமிழில் சுவடி என்னும் சொல் கையாளப்படுகிறது.
அவை ஓலைச்சுவடி, தாள் சுவடி என்று இருவகையாகப் பகுக்கப் படுகின்றன. மேனு (Mann) கிருப்டசு (Scriptus) எனும் இரண்டு சொற்கள் கையால் எழுதப் பட்டது. (written by hand). எனும் பொருள் தருவதால் எழுதப்பட்ட ஓலைகளை ஓலைச்சுவடி என்றும், எழுதப் பட்ட தாள்களை தாள் சுவடி என்று மட்டுமே கூடக் குறிப்பிடலாம். ஏனெனில் ஓலைச்சுவடி என்று அழைப்பதால் வெளிப்படும் தெளிவு அரிய கையெழுத்து காகிதச்சுவடி என்றழைக்கும்போது கிடைப்பதில்லை. சிலர், கையெழுத்துப் பிரதிகள், (Marx, Engels Manuscripts, unaddressed letters)என்ற தலைப்பில் அச்சிட்டுள்ளனர். 1597-ம் ஆண்டினைச் சேர்ந்த ஒரு நூல் Certain Worthy Manuscript Poems of Great Antiquitie என்றே தலைப்பிடப் பட்டுள்ளது.
பழமையான தாள் சுவடிகள்: இவ்வாறு ‘காகிதத்தில் எழுதிய சுவடிகளிலேயே இதுகாறும் நமக்குக் கிடைத்தவற்றுள் மிகவும் பழமையானது மத்திய ஆசியப் பகுதியில் காஷ்கரில் இருந்து கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் வழங்கிய குப்த எழுத்துக்களில் எழுதப் பட்டுக் கிடைத்ததாகும். *5 எனினும் நம் நாட்டில் கிடைக்கும் காகிதப் பிரதிகள் கி.பி.பதினான்காம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தனவாக இல்லை.*6
தமிழில் தாள் சுவடிகள்: தமிழ்நாட்டில் தாளும் அச்சும் வந்த பின்னரும் ஓலையில் எழுதுவதையும் எழுதி வைப்பதையுமே பெருமையாகவும் உண்மையுடையதாகவும் கருதி வந்தனர். இன்றும் சிலர் பிறந்த நாள்பற்றிய குறிப்புக்களை ஓலையில் எழுதி வருவதையும் ஐரோப்பியப் பாதிரிமார்கள் தங்கள் நூல்களை ஓலையில் எழுதி வைத்துள்ளமையும் மேற்கூறிய கருத்துக்குச் சான்றுகளாகின்றன. மேலும் அச்சு நூலைப் பார்த்தும் ஓலையில் படி எடுத்திருக்கிறார்கள். மெய்ப்பில் விடுபட்டுப் போன பிழைகள் அச்சடிப்பிழை என்று ஓலைச்சுவடியில் குறிப்பிடப் பட்டுள்ளன. *7
எனவே ஓலையில் எழுதி வைப்பது என்பது நம்பிக்கையின் அடிப்படையில் தாள் வந்தபிறகும் இங்கு நடைபெற்று வந்துள்ளது. ஆனால் காலப்போக்கில் எளிமையும் முயற்சிச் சுருக்கமும் அறிவியலும் ஓலையின் பயன்பாட்டைக் குறைத்துவிட்டன.
ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் தாளின் பயன்பாடு தமிழகத்தில் அதிகமாயிற்று. வாணிக விபரங்களும் அரசியல் குறிப்புகளும் தாளில் குறிக்கப் பட்டன. தொடர்ந்து நமது பழக்க வழக்கம் பண்பாடு, வரலாறு தொடர்பான செய்திகளை ஐரோப்பியர்கள் தொகுக்கவும் எழுதி வைக்கவும் தொடங்கினர். இங்கிருந்த கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவை கூட தாளில் படி எடுக்கப் பட்டன. அதனால் அவை பாதுகாக்கவும்பட்டன. இவ்வாறு தமிழ்நாடு பற்றித் தமிழிலும் பிற மொழிகளிலுமான தாள் சுவடிகள் தமிழகத்திலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உலகின் பல நாடுகளிலும் இடம் பெற்றுள்ளன. *8
இதுவரை நமக்குக் கிடைத்துள்ள தமிழ்ச்சுவடிகளுள் (தாள்) இந்தியாவின் முதல் தலைமை நில ஆய்வாளராகப் பணியாற்றி மறைந்த கர்னல் காலின் மெக்கன்சி (Col. Colin Meckenzie-1753-1821) என்பவர் தொகுத்து வைத்திருக்கும் தாள் சுவடிகள் தான் பெரும்பான்மையாக உள்ளன.
வகைகள்
தமிழில் உள்ள தாள் சுவடிகளை, ஓலைச்சுவடிகளிலிருந்து படியெடுக்கப் பட்டவை, மூலமாகத் தாளிலேயே எழுதிவைக்கப்பட்டவை என்ற இரண்டு பெரும்பிரிவுகளுக்குள் அடக்கலாம்.
ஓலையின் நகல்: ஓலைச்சுவடிகளிலிருந்து படி எடுக்கப்பட்ட தாள் சுவடிகளுள் 90 விழுக்காடு செய்யுள் நடையிலேயே அமைந்திருக்கின்றன. இச்சுவடிகள் சிதைவுற்றிருப்பினும் மூல ஓலைச்சுவடியிலிருந்து நிறைவு செய்து கொள்ள முடியும். அது போன்றே படி எடுக்கப்பட்ட பின்னர் ஓலைச்சுவடி சிதைந்திருப்பின் அப்பகுதிகளைத் தாள் சுவடிகொண்டு நிறைவு செய்து கொள்ள முடியும். இலக்கியம், இலக்கணம், மருத்துவம், புராணம் என ஓலைச்சுவடிகளின் பெரும்பான்மையான துறைகளைச் சார்ந்தே இத்தாள் சுவடிகள் அமைந்திருக்கின்றன.
மூலமான தாள் சுவடிகள்: ஐரோப்பியர்களே தமிழகத்தில் தாளில் எழுதும் முறையைப் பெரிதும் பயன்படுத்தினர். அவர்களுக்கு உதவியாக தமிழகத்தில் இருந்த சிலரும் தாளில் எழுத்த் தொடங்கினர். அவ்வாறு எழுதி வைக்கப்பட்ட தாள் சுவடிகள் மூலமான தாள் சுவடிகளாகும்.
நூலாக்கத்தில் பொதுப்பண்புகள்: தமிழர்கள் தாளில் எழுதத் தொடங்கிய பிறகும் பழக்கத்தால் ஓலையில் எழுதுவது போன்றே எழுதி வந்தனர். அதனால் குறில்;நெடில்;உயிர்மெய், மெய், துணையெழுத்து, உயிர்மெய்/மெய்யெழுத்து ஆகியவற்றில் ஓலைச்சுவடி போன்றே வேறுபாடுகளற்றும் இடைவெளியின்றியும் தாள் சுவடிகள் எழுதப்பட்டுள்ளன. சான்றாக, ‘தெக்குமாமபலகை’ என்ற சொல் ஓலையில் எப்படி எழுதப்படுமோ அவ்வாறே, ‘பழவேற்காடு சைபீது’ எனும் தாள் சுவடியிலும் எழுதப்பட்டுள்ளது. இதனைத் தேக்குமரம்பலகை என்றும் தேக்குமாம்பலகை என்றும் கருதலாம். எனினும் இரண்டாவதே ஏற்புடையதாகும். இது போன்று ஓலைச்சுவடிகள் நூலாக்கம் செய்யும்பொழுது மேற்கொள்ளவேண்டிய சில நெறிமுறைகள் தாள்சுவடிக்கும் பொருந்துவனவாக அமைந்துள்ளன. மேலும் ஓலைச்சுவடியிலிருந்து படி எடுக்கப்பட்ட தாள் சுவடிகளை நூலாக்கம் செய்யும்பொழுதும் ஓலைச்சுவடிகளுக்குள்ள நெறிமுறைகளே அத்தகைய தாள் சுவடிகளுக்கும் பொருந்துவனவாகும்.
நூலாக்கத்தில் (தாள்-ஓலைச்சுவடி) வேறுபாடுகள்
உள்ளடக்கம்
ஓலைச்சுவடிகள் இலக்கியம், இலக்கணம், புராணம், மருத்துவம், சோதிடம் எனும் வகைக்குள் பெரும்பான்மையும் அடங்கிவிடும். ஆனால் மூலமான தாள் சுவடிகள்
1.)ஆவணம்,
2.) கடிதம்,
3.)வரலாறு,
4.)அயல்நாட்டார் குறிப்புகள்,
5.)விண்ணப்பம்,
6.)வாக்குமூலம்,
7.)நீதிமன்ற முடிவுகள்,
8)ஆட்சிமுறைப் பதிவேடுகள்,
9.)காவல்துறைப்பதிவேடுகள்,
10.)நாட்டுப்புறவியல்,
11,)நாட்குறிப்பேடுகள்,
12.)தலவரலாறுகள்,
13.) அறிக்கைகள்,
14.)பேட்டிகள்
என்று பல்வேறு வகைகளாக அமைந்துள்ளன. இவற்றை ஐரோப்பியர் காலத் தமிழகம் பற்றியவை என்றும் தமிழர்களின் வரலாறு, பண்பாடு பற்றியவை என்றும் இருபெரும் பிரிவுகளாக்கலாம்.
உள்ளடக்க வேறுபாடுகள் நூலாக்க நெறிமுறைகளையும் வேறுபடுத்தும் என்பதால் ஓலைச்சுவடி, தாள்சுவடி நூலாக்கத்திலும் இத்தகைய வேறுபாடுகள் வெளிப்படுகின்றன. இலக்கணக்குறிப்பு, பொருள், குறிப்புரை, முன்னுரை, பின்னிணைப்பு என்று ஓலைச்சுவடிகளை நூலாக்கம் செய்வது போல் மூலமான தாள் சுவடிகளை நூலாக்கம் செய்திட முடியவில்லை. மூலமான தாள் சுவடிகளை ஆதாரமாகக் கொண்டு, அவற்றிலிருந்து கிடைக்கும் செய்திகளை முற்கால, தற்கால, இக்காலச் சான்றாதாரங்களுடன் ஒப்பிட்டு இருக்கின்ற வரலாற்றுச் செய்திகளைத் தெளிவு படுத்தும் வகையிலும் புதிய செய்திகளை வெளிப்படுத்தும் வகையிலும் தாள் சுவடிகள் நூலாக்கம் செய்யப் படுகின்றன.
நூலாக்கம் அமைப்பு
ஓலைச்சுவடியை நூலாக்கும் பொழுது சுவடியே நூலாகிறது, மூலத்தாள் சுவடியை நூலாக்கும்போது நூலில் அது ஒரு பகுதியாகிறது.
நூலாக்கத் தேர்வு
இதுவரை அச்சாகவில்லை என்பதும், மொழியின் வளர்ச்சிக்கு ஒரு நூல் புதிதாக வருகிறது என்பதுமே ஓலைச்சுவடியை நூலாகத் தேர்ந்திடும்போது அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன.
ஆனால் தாள் சுவடியை நூலாக்க எடுத்துக்கொள்ளும்பொழுது இதுவரை அச்சாகவில்லை என்பதுடன் அச்சிடப்பட்டால் வெளிப்படும் புதிய செய்தி என்ன என்பது அடிப்படையாகிறது. அதனால் தாள் சுவடியின் நூலாக்கத் தன்மையை அதன் உள்ளடக்கமே தீர்மானிக்கிறது எனலாம்.
பதிப்பாசிரியர் தகுதிகள்
ஓலைச்சுவடிப் பதிப்பாசிரியர், தாள் சுவடிப்பதிப்பாசிரியர் இருவருக்கும் இருக்கவேண்டிய அடிப்படையான தகுதிகள் பொதுவாகின்றன. ஆனால் தாள்சுவடிப்பதிப்பாசிரியர்க்குரிய தனித் தகுதிகளும், ஓலைச்சுவடிப் பதிப்பாசிரியர்களுக்குரிய தனித் தகுதிகளும் வேறுபடுகின்றன. அவை பின் வருமாறு:
ஓலைச்சுவடிகள் பெரும்பாலும் செய்யுள் நடையில் அமைந்திருப்பதால் பதிப்பாசிரியருக்கு யாப்பறிவு இன்றியமையாததாகும். யாப்பறிவால் ஓலையின் சிதைந்த பகுதிகளையும், எதுகை, மோனை, இலக்கண விதிமுறை ஆகியவை கொண்டு துணிந்திட இயலும். மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து, குறில், நெடில் போன்ற வேறுபாடுகளைக் கண்டறிந்து சரியான பாடத்தைத் தேர்ந்திட இயலும். ஆனால் மூலமான தாள் சுவடி பெரிதும் உரைநடையில் அமைந்துள்ளதால் , பதிப்பாசிரியருக்கு யாப்பறிவு அடிப்படைத் தேவையாக இல்லை. மேலும் நாட்டுப்புறப் பாடல்களாக உள்ள தாள் சுவடிகளும் இலக்கண விதிகளோடு முழுவதும் பொருந்தி இருப்பதில்லை.
ஓலைச்சுவடிப் பதிப்பாசிரியர் இலக்கிய, இலக்கணப் புலமையுடன் வரலாற்றுப் பார்வையும் கொண்டிருந்தால் பாராட்டிற்குரியவராகிறார். ஆனால் தாள் சுவடிப் பதிப்பாசிரியருக்கு மொழியியல், மொழிபெயர்ப்பியல், தொல்லியல், கடலியல், வரலாறு, நிலவியல், நீதிமுறை, வாணிகவியல், சமூகவியல், புள்ளியியல், பொருளியல், மானிடவியல், விலங்கியல், தாவரவியல், அளவையியல், பண்பாடு ஆகிய பல்வேறு துறைகளின் வாலாறும், வளர்ச்சியும் பற்றிய பொது அறிவு தேவையாகிறது. 18-ம் நூற்றாண்டிற்குப் பின்னர் ஆராய்ச்சி பல்வேறு துறைகளில் பரந்து விரிந்தமையால் அதன் பின்னர் தமிழகத்தில் பெரிதும் பயன்பாட்டிற்கு வந்த தாளில் அத்துறை சார்ந்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே அதற்கு முந்தைய பயன்பாட்டில் இருந்த ஓலையில் அத்தகைய பல்துறை சார்பான செய்திகள் தாள் சுவடியில் இடம் பெற்றிருக்கும் அளவுக்கு இடம் பெறவில்லை. எனவே ஓலைச்சுவடிப் பதிப்பாசிரியரை விடவும் தாள் சுவடிப் பதிப்பாசிரியருக்கு அத்தகைய பொது அறிவு தேவையாகிறது. அவற்றைப் பின்வரும் சான்றுகள் உறுதிப்படுத்தும்.
மொழியியல்
ஓலைச்சுவடி பாடல் அமைப்பில் இலக்கிய வழக்கில் இருப்பதால் அகராதிகள்கொண்டே பொருள் காணமுடியும். ஆனால் தாள் சுவடியில் பெரிதும் பொதுமக்கள் பேச்சு மொழியே எழுதப் பட்டுள்ளது. ஓலைச்சுவடியாக இருப்பின் இலக்கண விதிகளுக்கேற்பச் சொற்களின் உண்மை வடிவத்தைக் கண்டு பிழை நீக்கி மூல பாடத்தைக் காண முடியும். தாள் சுவடியில் அக்காலத்திய பேச்சு மொழி எழுத்து வடிவம் பெற்றிருப்பதால் அச்சொல்லின் இலக்கிய வழக்கு தெரிந்த பின்னரே பொருள் காண இயலும். பெரும்பாலான சொற்கள் அகராதியிலும் இடம் பெற்றிருப்பதில்லை. இச்சிக்கலைத் தீர்ப்பதற்கு முதலில் அப்பேச்சு மொழிச் சொற்களின் சரியான வடிவத்தைக் கண்டறிதல் வேண்டும். அதற்கு மொழியியல் அறிவு அவசியமாகிறது. ஒரு சொல் எந்த அமைப்பில் அருகில் என்ன ஒலி வரும்பொழுது பேச்சில் எவ்வாறு மாறுதலடையும் என்பதை மொழியியல் விதிகளின் வழியே கண்டறிந்து அச்சொல்லின் சரியான வடிவத்தைக் காணவேண்டியுள்ளது. (சான்றுகள், உரல்-ஒரல்; இலை-எலை; வெற்றி-வெத்தி)
மொழிபெயர்ப்பியல்: தமிழில் பிறமொழிக்கலப்பு காலந்தோறும் அரசியல் சமூகப் பொருளியல் ஆதிக்கங்களால் நடந்து வருகின்றன. எழுத்து வழக்கை விடவும் பேச்சு வழக்கில் கலப்பு அதிகமாகக் காணப்படுகிறது. பேச்சு வழக்கே தாள் சுவடியில் பெரிதும் எழுதியுள்ளனர். அவ்வாறு எழுதும்பொழுது சில சொற்களை மொழிபெயர்ப்பாகவும் சில சொற்களை எழுத்துப்பெயர்ப்பாகவும் (transliteration) அமைத்துள்ளனர். சான்றாக, “தீபாராதனை” என்பது , “தீப்பூசை” என்று தாள் சுவடியில் இடம்பெற்றுள்ளது. “ஜூனியர் காப்டன்” என்பது (Junior Captain) “சின்னக் கப்பித்தான்” என்று முதற்பகுதி, (Junior), மொழிபெயர்ப்பாகவும், இரண்டாம்பகுதி (Captain) எழுத்துப் பெயர்ப்பாகவும் இடம் பெற்றுள்ளன. ‘கவர்னர்’ (Governor) என்பது, ‘கெவுனர்’ என்றும், ‘கம்பெனி’ (company) என்பது, ‘கும்பினி’ என்றும், ‘போர்த்துக்கீசியர்’ (Porutugal) என்பது ‘புடிதீசுகாரர்’ என்றும் ‘கோசுடல் கார்டுசுமென் (coastal guardsmen) என்பது கொஸ்தகுற வந்தோர் என்றும் எழுதப் பட்டுள்ளன. எளிதில் பொருள் புரியா வகையில் சில சொற்களும் இடம் பெற்றுள்ளன.
தொல்லியல்: ஓலைச்சுவடியைப் பதிப்பிக்கும்பொழுது சுவடியில் உள்ள விவரங்களே ஆய்வுக்குரியவையாகின்றன. தாள் சுவடியைப் பதிப்பிக்கும்பொழுது அதன் முற்காலத் தொல்லியல் சான்றாதாரங்களும் கவனத்திற்குரியவையாகின்றன.
சான்றாகப் பழவேற்காடு பற்றிய ஆய்வுக்கு கி.பி.1521-ம் ஆண்டைச் சேர்ந்த நாகலாபுரம் கல்வெட்டில் பழவேற்காடு துறைமுகமாக இருந்த செய்தியும் அத்துறைமுகத்தில் நின்ற கப்பலில் ஏற்றப்படும் சேலை மற்றும் துணிகளுக்கு விதிக்கப்பட்ட வரி பற்றிய செய்தியும் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது.
வரலாறு: தாள் சுவடிகள் பெரிதும் ஐரோப்பியர் வருகைக்குப் பின்னரே எழுதப்பட்டுள்ளதால் அவற்றை நூலாக்கம் செய்வோர்க்கு ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் தமிழகம், ஐரோப்பியர் ஆட்சியில் தமிழகம் ஆகிய வரலாறு தெரிந்திருக்க வேண்டியிருக்கிறது.
இவ்வாறே பிறதுறை அறிவும் தாள் சுவடிப் பதிப்பாசிரியருக்கு மிகவும் தேவையாகும்.
கள ஆய்வுப் பணி
ஓலைச்சுவடியை நூலாக்கம் செய்வோர் பெரிதும் கள ஆய்வுப்பணி செய்வதில்லை. சான்றாக உ.வே.சா. சிலப்பதிகாரம் குறிப்பிடும் மதுரைக்குப் போகும் வழிகளைக் கண்டறியாமலே சிலப்பதிகாரத்தைப் பதிப்பித்திருக்கிறார். பின்னர் கரந்தை சி.கோவிந்தராசன் அவ்வழியே சென்று கண்ணகி சிலையைக் கண்டு பிடித்தார். எனவே கள ஆய்வுப்பணி என்பது ஓலைச்சுவடிப்பதிப்புக்கு இன்றியமையாததாக எடுத்துக்கொள்ளப் படுவதில்லை.
தாள் சுவடிப்பதிப்பிற்குக் களப்பணிகள் மிகவும் தேவை. சான்றாக, ‘உலாந்தாக்காரர்கள் பழவேற்காட்டில் கரிமணலில் வந்திறங்கினார்கள்’, என்னும் சுவடிச் செய்தியைப் படித்தால் அங்கு கடற்கரையின் மணல் கறுப்பாக இருக்கும்போலிருக்கிறது என்று எண்ணிக் கரிமணலுக்குப் பொருள் கொள்ளச் செய்தது. களப்பணி சென்று வந்த பின்னரே அங்குள்ள ஓர் இடத்திற்குக் கரிமணல் என்ற பெயர் இருப்பது தெரியவந்தது. மேலும் ஓலையில் உள்ள செய்திகளை விடவும் தாளில் உள்ள செய்திகளை நேரில் கண்டறிந்துகொள்ள ஒப்பிட்ட அளவில் தாள் சுவடிகளின் கால இடைவெளிக்குறைவும் அதற்குத் துணையாகின்றது.
ஒப்பிட்டாய்வு
ஓலைச்சுவடியின் செய்திகளை இன்றைய நிலையுடன் ஒப்பிட்டு நூலாக்கம் செய்வதில்லை. சான்றாக பரிபாடலைப் பதிப்பிக்கும் ஒருவர் இன்றைய அழகர்மலையுடன் ஒப்பிட்டு ஆராய்வதில்லை. ஆனால் தாள் சுவடியில் கூறப்படும் செய்திகள் இன்றைய நிலையுடன் ஒப்பிட்டறியப்படும். சான்றாக 1816-ம் ஆண்டு பழவேற்காட்டிலிருந்த மக்கள் தொகை, சாதி, தொழில்கள் ஆகிய சுவடியின் செய்திகளை இன்றைய பழவேற்காட்டில் உள்ள விபரங்களுடன் ஒப்பிட்டு அறிந்து அவற்றின் வளர்ச்சி, வீழ்ச்சி பற்றிய வரலாறு வெளிப்படுத்தப் பட்டுள்ளது. ஓலைச்சுவடிகள் பதிப்பிற்கு அத்தகைய தேவைகள் ஏற்படுவதில்லை.
பின்னிணைப்பு
நூலின் பிற் பகுதியில் சுவடிப்பதிப்பின் பொதுவான கூறுகளாகிய அருஞ்சொல்லகராதி, துணை நூற்பட்டியல் ஆகியவற்றுடன் பேச்சுமொழிச் சொற்கள் நிறைந்திருப்பதால் தாள் சுவடி நூலாக்கத்திற்கு முழுச் சொல்லடைவும் பயன்பெற்ற புள்ளிவிபரப் பட்டியலும், நாட்டுப்படங்களும், வரைபடங்களும் தேவையாகின்றன.
முடிவுரை
எழுதிவைக்கப் பயன்படுத்தப் பட்ட பொருட்களின் வரலாற்று வரிசையில் தாள் கடந்த மூன்று நூற்றாண்டுகளாகப் பெரும்பாலோர் பயன்படுத்தும் பொருளாக உள்ளது. கடந்த எக்காலத்தை விடவும் இன்று கல்வியும், அறிவியலும் வளர்ச்சியடைந்துள்ள நிலையில் தாளும் அவ்வாறே மக்களின் பயன்பாட்டில் பொதுமைப்படுத்தப் பட்டுள்ளது. தாளில் வாழ்ந்து அச்சேறாத சுவடிகளைத் தேவை கருதி நூலாக்கம் செய்யும்பொழுது நேர் கொள்ளவேண்டிய நெறிமுறைகளும் தாள் சுவடிகளுக்கே உரிய தனி நெறிமுறைகளும் இக்கட்டுரையில் ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
பின்குறிப்புகள்:
1.ச.வையாபுரிப்பிள்ளை, இலக்கிய உதயம், முதற்பகுதி, தமிழ்ப்புத்தகாலயம், `1958, பக், 18,19
2.New Standard Encyclopeadia, Vol.10 Page 80
3.ibid, page 78
4.The Oxford English Dictionary, Vol.VI, Reprint, 1961, page 145
5.Bengal Asiatic Society Journal, Vol.66
6.தி.நா.சுப்பிரமணியம், தென்னிந்தியக் கோயிற் சாசனங்கள், பாகம் 3, பகுதி 2, 1975, பக் 349
7. டாக்டர், இ. சுந்தரமூர்த்தி, சுவடியியல், களஞ்சியம் தொகுதி1 இதழ்1 வளர் தமிழ் மன்ற வெளியீடு, சென்னை, ஏப், 1986, பக் 61
8. Gregory James, ‘European Sources for Tamil Manuscripts’, Journal of Tamil Studies, vol.18, I.I.T.S. 1980 p.p. 4, 13
9.A.Krishnamurthy, ‘A Report on a Scientific Catalogue of the Tamil Manuscripts in Europe, 1960, (prepared for the Govt. of Madras)
கட்டுரையைத் தட்டச்சு செய்து உதவியவர்: திருமதி.கீதா சாம்பசிவம்