Home Games நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 32

நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 32

by Dr.K.Subashini
0 comment

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

32. தில்லாக்கு விளையாட்டு

இது சிறுமியர்கள் மட்டும் விளையாடும் விளையாட்டாகும். இதில் இரண்டுவகை காணப்படுகிறது. தனித்தனியாக விளையாடுவது, சோடியாக விளையாடுவது என இருவகை. இவ்விளையாட்டை தனியாக விளையாடினால் இரண்டு முதல் நான்கு நபர்களுக்கு மேல் விளையாடுவதில்லை. சோடியாக விளையாடினால் எட்டு நபர்களுக்கு மேல் விளையாடப்படுவதில்லை.

அ. தனிநபர் ஆட்டம்
ஆரம்பம் முடிவு

மேலே படத்தில் காட்டியதுபோல் (ஆரம்பம்) கட்டம் போட்டுக்கொள்கின்றனர். விளையாடுகின்றவர்களில் முதலில் ஆடுபவர் கட்டத்திற்கு ஓருபுறமாக (ஒன்று என்கிற எண்ணிற்கு முன்னால்) நேராக நின்று கொள்கிறார். விளையாட ஆரம்பிக்கிறார். விளையாட்டு நிறைய உட்பிரிவுகளைக் கொண்டது.

கையிலுள்ள தில்லாக்கை ஒன்று என்று எழுதியிருக்கும் கட்டத்தி;ல் தூக்கிப் போட்டுவிட்டு நொண்டியடித்துக் கொண்டே 1, 2, 3, 4, 5 ஆகிய கட்டங்களுக்குச் சென்று விட்டு மீண்டும் 3, 2 – ற்கு வந்து ஒன்றிலிருக்கும் தில்லாக்கை மிதித்து அதனைக் கையிலெடுத்துக்கொண்டு பழைய இடத்திற்கு வந்துவிடுகிறார். இதுபோலவே தான் 2, 3, 4, 5 ஆகிய ஆட்டங்களும் ஒவ்வொன்றிற்கும் முறையே 2, 3, 4, 5 ஆகிய கட்டங்களில் தில்லாக்கை எறிந்து நொண்டியடித்துச் சென்று திரும்பி வருகின்றபோது அதனை எடுத்துக்கொண்டு திரும்புகிறார். இவ்வாறு இரண்டான் மூன்றான், நான்கான், ஐந்தான் ஆகிய ஆட்டங்கள் முடிகின்றன. இதுவரை விளையாடும்போது தி;ல்லாக்கு கோட்டில் விழுந்தாலோ நொண்டியடிப்பவர் காலைத் தரையில் ஊன்றினாலோ கோட்டை மிதித்தாலோ விளையாட்டை நிறுத்திவிடுகிறார். ஆட்டம் அடுத்தவருக்குச் செல்கிறது. இரண்டாமவர் தவறு செய்யும்போது ஆட்டம் மூன்றாமவருக்குச் செல்கிறது. இவ்வாறு விளையாடுபவர்கள் அனைவரும் விளையாடிய பிறகு ஆட்டம் மீண்டும் முதலாமவருக்கு வரும் போது அவர் விட்ட, .இடத்திலிருந்து தொடருகிறார்.
எண் ஐந்து வரை விளையாடி முடிந்த பிறகு விளையாடுபவர்கள் தங்கள் உடலின் உறுப்புகளில் தில்லாக்கை வைத்துக்கொண்டு விளையாடுகின்றனர். அதாவது கை, அகங்கை, புறங்கை, முழங்கை, மடக்கு, சோடா, தோள, கைவிரலிடுக்கு, கால், கால் விரலிடுக்கு, முழங்கால் மடக்கு, தலை, முதுகு போன்ற உறுப்புகளில் தில்லாக்கை வைத்து விளையாடுகின்றனர். தில்லாக்கை மேற்குறிப்பிட்ட இடங்களில் வைத்து முன்பு விளையாடியது போன்றே நொண்டி அடித்துச் சென்று மீண்டும் திரும்பி வந்து ஒன்று என்கிற எண் எழுதப்பட்ட இடத்தில் நின்று கொண்டு தில்லாக்கைக் கட்டத்திற்கு வெளியில் (அந்தந்த, .இடங்களில் இருக்கின்ற படியே) எறிந்துவிட்டு ஒன்றாம் எண்ணிலிருந்தே அந்த்தில்லாக்கை நொண்டியடித்து மிதிக்கிறார். ஆனால் இப்படிச் சரியாக மிதிக்காவிட்டாலோ கோட்டை மிதித்தாலோ நொண்டியடிக்கும் போது தில்லாக்கு கீழே விழுந்தாலோ ஒருவர் ஆட்டம் முடிந்தது. அடுத்தவர் தனது ஆட்டத்தைத் தொடருகிறார்.

அகங்கை – கைகளை நீட்டியபடி உள்ளங்கையில் தில்லாக்கு வைத்துக்கொள்வது
புறங்கை – கைகளை நீட்டியபடி புறங்கையில் தில்லாக்கு வைத்துக் கொள்வது
முழங்கை – முழங்கையின் சமமான இடத்தில் வைத்துக் கையை மடக்கிக் கொள்வது
சோடா – கைவிரல்களை முடிக்கொண்டு கையை நேராக நெட்டுக்குத்தலாக பிடிக்கும் போது ஆள் காட்டி விரலும் கட்டை விரலும் சேர்ந்து தில்லாக்கை வைக்குமளவிற்கு அங்கே இடம் கிடைக்கிறது. இந்த இடத்தில் தில்லாக்கை வைப்பது
கைவிரலிடுக்கு – கைவிரல்களில் ஆள்காட்டி விரலிற்கும் அடுத்த விரலிற்குமிடையில் தில்லாக்கு வைக்கப்படுகிறது.

தோள் – தோள்பட்டையில் தில்லாக்கு வைக்கப்படுகிறது
தலை – உச்சந்தலையில் தில்லாக்கு வைக்கப்டுகிறது
முதுகு – குனிந்துகொண்டு முதுகில் தில்லாக்கு வைக்கப்டுகிறது
கால் – கால் பாதத்தில் (மேல்பக்கம்) தில்லாக்கு வைக்கப்படுகிறது
கால்விரலிடுக்கு – காலின் கட்டைவிரலுக்கும் அடுத்தவிரலுக்கும் இடையிலான
இடுக்கில தில்லாக்கு வைக்கப்படுகிறது
முழங்கால்மடக்கு – கால் முழங்காலை மடக்கி உட்புறம் அந்த இடுக்கில்
தில்லாக்கு வைக்கப்டுகிறது

மேற்கண்டவற்றில் முதுகு எனப்படும் ஆட்டம் தான் கடினமானதாகும் இதையெல்லாம் விளையாடிய பிறகு ஒண்ணானுக்கு முன்புறம் நின்று கொண்டு தில்லாக்கை ஐந்தானுக்கு அப்புறம் விழும்படியாகத் தூக்கி எறிகிறார். தில்லாக்கு விழுந்ததும் எறிந்தவர் கண்ணைமுடிக்கொண்டு வானத்தை நோக்கியபடி ரைட்டா ரைட்டா என்று கேட்டவாறு ஒவ்வொரு கட்டமாகக் கோட்டை மிதிக்காமல தாண்டி நாலான் ஐந்தானுக்கு வருகிறார். இடையில் கோட்டை மிதித்தால் மற்றவர்கள் தவறு என்று கூற ஆட்டம் மற்றவருக்குச் செல்கிறது. நாலான் ஐந்தானுக்கு வந்தவுடன் கண்ணைத் திறந்து தனது தில்லாக்கு இருக்கின்ற இடத்தைப் பார்த்துவிட்டு அங்கிருந்தபடியே அதனை நொண்டியடித்து (ஒரே தடவையாக) மிதிக்கிறார். மிதித்துவிட்ட பிறகு நாலான் ஐந்தானுக்கு அருகில் (கட்டத்திற்கு வெளியே) வந்து கட்டத்திற்கு முதுகுகாட்டியபடி நின்று கொண்டு குடையா? பூவா? என்று கேட்க மற்றவர்கள் குடை என்று கூறுகின்றனர். குடை என்றவுடன் தில்லாக்கைத் தன் தலைக்கு மேற்புறமாகப் பின்னாலிருக்கும் கட்டங்களில் ஒன்றில் தூக்கிப் போடுகிறார். தில்லாக்கு விழுகின்ற கட்டம் பழமாகும். பழம் அவருக்குச் சொந்தமானது. உடனே அந்தக் கட்டத்தில் குறுக்குக்கோடுகள் போட்டுவிட்டு மற்றவர்கள் செல்வதற்காக அந்தக்கட்டத்தின் வெளிப்புறம் ஒரு அரைவட்டம் வரைகிறார். இதற்கு யானைக்கால் என்று பெயர். மற்றவர்கள் இதன் வழியாகத் தான் நொண்டியடித்துச் செல்கிறார்கள். அதாவது ஒருவர் இரண்டானைப் பழமாக்கியிருந்தால் அதனருகிலிருக்கும் யானைக்காலில் தான் மற்றவர்கள் இரண்டானை விளையாடுகிறார்கள். ஆனால் பழமாக்கியவர் தன் பழத்திலேயே இரண்டானை விளையாடுகிறார். இவர் பழமான இடத்தில் நொண்டியடிக்கத் தேவையில்லை. மற்ற கட்டங்களில் மட்டுமே நொண்டியடிக்கிறார். ஒருவர் பழம் வாங்கியபிறகு ஆட்டத்தை மற்றவருக்குத் தந்துவிடுகிறார். இப்படியே விளையாட்டு தொடர்கிறது. ஐந்து கட்டங்களில் அதிகமான கட்டங்களைப் பெறுகின்றவரே வென்றவராகிறார்.

ஆ. சோடி ஆட்டம்
இதில் ஒரே சமயத்தில் இரண்டு நபர்கள் ஒன்றாக விளையாடுகின்றனர். விளையாடும் முறை தனியாக விளையாடும் விளையாட்டு போன்றதேயாகும். விளையாடுகின்ற இருவரும் ஒன்னானில் தில்லாக்கைப் போட்டு ஒரே சமயத்தில் நொண்டியடித்துச் சென்று ஐந்தானுக்கு வந்தபின் எதிரெதிர் கட்டங்களுக்கு மாறி அடுத்த கட்டத்தி;ன் வழியாக வெளியேறுகின்றனர். ஒருவர் தான் போட்ட தில்லாக்கை மிதித்து தன்னுடைய கட்டத்தின் வழியே சென்று மற்றவருடைய தில்லாக்கை மிதித்து எடுத்து வெளியேறுகிறார். அடுத்து இரண்டாம் விளையாடுகின்றபொழுது அவரவர் கட்டத்திற்கு வந்துவிடுகின்றனர்.

மேலும் ரைட்டா ரைட்டா சொல்லிச் செல்கின்றபோது ஒவ்வொருவராகச் செல்கின்றனர். குடையா பூவா இருவரும் ஒன்றாக நின்று போடுகிறார்கள். இருவரும் ஒரே கட்டத்தில் அதாவது ஒருவர் நாலானில் போட்டால் அடுத்தவரும் நாலானில் தான் போடுகிறார். அப்போதுதான் பழமாக ஒத்துக்கொள்கிறார்கள்.
இந்த விளையாட்டில் ஒருவர் மட்டும் தவறு செய்தால் அவர் வெளியேறிவிட மற்றவர் அவருக்கும் சேர்த்து இரண்டுமுறை விளையாடுகிறார். அவரும் தவறு செய்தால் ஆட்டம் அடுத்த சோடிக்கு செல்கின்றது.
சேகரித்த இடம் – வலசை

பிற
1. இவ்விளையாட்டில் ஐந்தான் முடிந்தவுடன் மற்றவையெல்லாம் விளையாடப்படாமல் ரைட்டா? ரைட்டாவும், குடையா? பூவாவும் விளையாடப்படுகின்றன. இப்படி விளையாடும்போது விளையாட்டு சீக்கிரம் முடிவடைந்து விடுகிறது (கீழக்குயில்குடி)

2. குடையா பூவாவில் குடையா என்பதற்கு பதில் தலையா? பூவா? என்று கேட்கப்படுகிறது. தலை என்றால் தலைக்கு மேல் தூக்கிப்போடப்படுகிறது. பூ என்றால் கால்களை அகட்டி வைத்து நின்று கொண்டு குனிந்து அந்த இடைவெளி வழியாகப் பார்த்துத் தில்லாக்கைத் தூக்கிப் போடுகின்றனர்.

3. ஒருவர் ஒருபழம் எடுத்தபிறகும் தொடர்ந்து விளையாடலாம் (தல்லாகுளம்)

 

[பகுதி 33 க்குச் செல்க]

You may also like

Leave a Comment