[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]
30. சிலை விளையாட்டு
சிறுவர் சிறுமியர் விளையாடும் விளையாட்டு இது. விளையாடுகின்றவர்கள் தங்களுக்குள் கூடி ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர்.
பட்டவர் விளையாடும் மற்றவர்களுக்குத் தன் முதுகுப்புறத்தைக் காட்டி நின்று கொண்டு ஓன், ட்டு, த்ரி என்று 10 வரை கூறுகிறார். கூறி முடித்தபிறகு மற்றவர்களை நோக்கித் திரும்புகிறார். அவ்வாறு திரும்புவதற்குள் மற்றவர்கள் ஒரு செயலைச் செய்து கொண்டிருப்பது போல் நிற்கின்றனர். பட்டவர் அவர்களுக்கு அருகில் வந்து நின்று கொண்டு அவர்களுக்குச் சிரிப்பு உண்டாக்குகிறார். அதாவது தானும் சிரித்து அல்லது சிரிப்பு வருவது போல் பேசி நடித்து அவர்களுக்கும் சிரிப்பு உண்டாக்குகிறார். இப்போது ஒருவர் சிரித்துவிட்டால் அவர் பட்டவராகிறார். சிரிப்பது மட்டுமின்றி ஒருவருடைய பல் தெரிந்தாலே சிரித்ததாகக் கருதப்படுகிறது. பட்டவர் மீண்டும் ஒன், ட்டு, த்ரி சொல்ல மற்றவர்கள் சிலை போன்று நிற்கின்றனர். இவ்வாறு விளையாட்டு தொடர்கிறது. இறுதிவரை பட்டவராக மாறாதவரே வென்றவர்.
மற்றவர்கள் செய்யும் செயலர்களாக நடனமாடுவது, பேசுவது, குனிந்திருப்பது, சண்டையிடுவது, பாடுவது, எழுதுவது, படிப்பது, தூங்குவது, சாப்பிடுவது போன்றவை அமைகின்றன. பட்டவர் இவர்களைச் சிரிக்க வைப்பதற்காக அவர்களைப் போலவே ஆனால் கோணல் மாணலாக நிற்பது அவர்களுடைய பட்டப்பெயரை உச்சரிப்பது, அவர்களை கேலிபண்ணுவது, நகைச்சுவையாக பேசுவது போன்றவற்றைச் செய்கிறார். ஆனால் பட்டவர் மற்றவர்களைத் தொடக்கூடாது.
சேகரித்த இடம் : கச்சைகட்டி, மன்னாடிமங்கலம்
[பகுதி 31 க்குச் செல்க]