Home Tamil Writers தொ.மு.சி. இரகுநாதன்

தொ.மு.சி. இரகுநாதன்

by Dr.K.Subashini
0 comment

"பாரதி பித்தர்" தொ.மு.சி. இரகுநாதன்

கலைமாமணி விக்கிரமன்

 

 

தொ.மு.சி. இரகுநாதன் – எழுத்தும், பெயரும் அறியாதவர்கள் மிகக் குறைவே.

1941ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் தாக்கம், அடிமைப்பட்டிருந்த பாரதம் முழுவதும் எதிரொலித்தது.

இரகுநாதன் போன்ற இளம் இரத்தம் ஓடுபவர்கள் துடித்தெழுந்தார்கள்.

அவர் துடிப்புக்கு வழிகாட்டியாக, திருநெல்வேலியில் முத்தையா தொண்டைமான் என்ற தேசியவாதி, அந்நியர் ஆட்சியை அகற்றும் விடுதலைப் போராட்டங்களில் இளைஞர்களை ஈடுபடச் செய்தார்.

இரகுநாதன், திருநெல்வேலி மாவட்டத்தில், 1923ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி முத்தையா தொண்டைமான் – முத்தம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

பள்ளிப் படிப்புக் காலத்தில் பொழுதை வீணே கழிக்காமல் தந்தையாரின் நூலகத்திலிருந்த புத்தகங்களை, கள்ளச்சாவி போட்டுத் திறந்து எடுத்துப் படிக்கும் அளவுக்கு அவருக்கு ஆர்வம் இருந்தது.

"ஆண்டுக்கு ஆயிரம் புத்தகங்களையாவது படித்திருப்பேன்" என்று கூறும் இரகுநாதன், எல்லாவிதமான – தரமான நூல்களையும் படித்தார்.

இரகுநாதனின் மூத்த சகோதரர்தான் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்.

அரசுப் பணியில் சேர்ந்து படிப்படியாக முன்னேறி இ.ஆ.ப.வாக (I(ndian).A(dministrative).S(ervice) பெரும் பதவி வகித்தவர்.

பின்னாளில், டி.கே.சி.யின் வட்டத்தொட்டியில் கலந்துகொண்டு இலக்கியங்களைக் கற்றவர்.

இரகுநாதன், கல்லூரியில் இன்டர்மீடியட் முடித்தார். கல்லூரியில் படிக்கும்போதே மாணவர் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றார்.

கல்லூரிப் பேராசிரியர்கள் அவருக்கு ஆங்கில இலக்கியங்களைக் கற்பித்தார்கள். தமிழ் இலக்கியங்களில் ஈடுபாட்டை ஏற்படுத்தினார்கள்.

ஆங்கிலப் பேராசிரியரான அ.சீனிவாசராகவன், பாரதியிலும் கம்பரிலும் இரகுநாதனை ஈடுபாடு கொள்ளச் செய்தார்.

தனது "வெள்ளைப் பறவை" என்ற கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை தருமாறு மாணவர் இரகுநாதனைக் கேட்டார்.

"என்னையா!” என்று வியப்படைந்தார் இரகுநாதன்.

"ஆம்! டி.கே.சி. இருந்தால் அவரிடம் கேட்டு வாங்கியிருப்பேன்” என்ற அ.சீ.ரா.வின் புகழுரை இரகுநாதனை மெய்சிலிர்க்க வைத்தது.

"முதல் வாசகர் குரல்" என்று தலைப்பிட்டு முன்னுரை எழுதித்தந்தார்.

அந்தக் கவிதைத் தொகுதிக்கு சாகித்ய அகாதெமி பரிசும் கிடைத்தது.

இரண்டாவது உலகப் போரின்போது கம்யூனிஸ்டுகளின் போக்கு – கொள்கை மாறுதல் இரகுநாதனுக்குப் பிடிக்கவில்லை.

ஆனால், பிற்காலத்தில் பொதுவுடைமை இயக்கத்தைப் பலப்படுத்த பெரிதும் உதவியவர்களுள் இரகுநாதன் முதன்மையானவர்.

கனல் கக்கப் பேசும் ப.ஜீவானந்தத்தின் புயல் வேகப் பேச்சும், முத்தையா, அ.சீ.ரா., போன்றவர்களின் பேச்சும் இரகுநாதனுக்கு, பாரதி இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை ஏற்படச் செய்தது.

பிற்காலத்தில், "பாரதி – காலமும், கருத்தும்" என்ற விரிவான சிறந்த நூலைப் படைத்து பல விருதுகள் பெற அடித்தளம் வகுத்தது.

இரகுநாதனின் முதல் கதை "பிரசண்ட விகடனில்" வெளிவந்தது.

மணிக்கொடி எழுத்தாளர்களுடைய எழுத்துகள் அவருடைய இலக்கியத் தாகத்தை வளர்த்தது.

காண்டேகருடைய தாக்கம் தொ.மு.சி.க்கு மராட்டிய மொழியைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது.

காண்டேகருடைய "கருகிய மொட்டு" படித்ததன் விளைவாக, "செக்ஸ்" பற்றி நேரடியாக எழுதாமல், மறைமுகமாக ஏன் எழுத வேண்டும் என்ற எண்ணத்தினால், "முதல் இரவு" என்ற நாவலை எழுதினார்.

அப்போது இரகுநாதன் "சக்தி" இதழில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

"முதல் இரவு" வெளிவந்த கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள், அதைப் படித்தவர்கள் முகம் சுளித்தார்கள்.

ஆனால், மறைமுகமாகப் படித்தவர்களால் பல ஆயிரம் பிரதிகள் விற்பனையாயின.

அரசு அந்த நூலின் மீது சீறிப் பாய்ந்தது.

நான்காவது பதிப்பு வெளிவந்தபோது காவல்துறையினர் பதிப்பகத்துக்குள் நுழைந்து, அச்சிடப்பட்டிருந்த நூல்களை எரித்தனர்.

இரகுநாதனைக் கைது செய்து, பிறகு ஜாமீனில் விடுவித்தனர்.

இரகுநாதன், 1948ஆம் ஆண்டு இரஞ்சிதம் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஓர் ஆண் பிள்ளையும், மூன்று பெண் பிள்ளைகளும் பிறந்தனர்.

1944 – 45களில் "தினமணி" நாளிதழில் பணியாற்றினார்.

பிறகு "முல்லை" பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

அந்தப் பத்திரிகையில் தன் பெயரிலும், புனைபெயரிலும் நிறைய எழுதினார்.

முல்லை பத்திரிகை 1947ஆம் ஆண்டுடன் நின்றுவிட்டது.

1948இல் "சக்தி"யில் சேர்ந்த பிறகு அவர் படைப்பில் புதுப்பொலிவு ஏற்பட்டது.

கு.அழகிரிசாமியும் "சக்தி"யில் சேர்ந்தார்.

இருவரும் ஒன்று சேர்ந்து கதை எழுதினார்கள்; கவிதை எழுதினார்கள்.

இலக்கிய உலகில் "இரட்டையர்களாக" வலம்வந்தனர்.

புதுமைப்பித்தனை தன் இலட்சிய எழுத்தாளராக மதித்தார். புதுமைப்பித்தனை தமிழ்நாட்டு மக்கள் மறக்காமல் இருக்க சிறந்ததொரு பிரசார பீரங்கியாக இறுதிநாள் வரை திகழ்ந்தார்.

"திருச்சிற்றம்பலக் கவிராயர்" என்ற பெயரில் இரகுநாதன் எழுதிய கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதில் தமது கலைத்திறனின் தன்மையையும், தரத்தையும் முத்திரையிட்டிருக்கிறார்.

தமிழிலிருந்து ஐரோப்பிய மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட முதல் நாவல் என்ற பெருமையைப் பெற்றதுதான் "பஞ்சும், பசியும்" என்ற நாவல். செகோஸ்லேவிய நாட்டில் முதல் பதிப்பிலேயே ஐம்பதாயிரம் பிரதிகள் விற்பனையாயின.

சிறுகதை மன்னர், சிறந்த கவிஞர் என்று இதுவரை அறியப்பட்ட இரகுநாதன் சிறந்த நாவலாசிரியர் நிலைக்கு உயர்ந்தார்.

இரகுநாதனின் சாதனைகளுள் தலைசிறந்தது 1982ஆம் ஆண்டு வெளிவந்த "பாரதி – காலமும், கருத்தும்" என்ற பாரதி திறனாய்வு நூல். அந்த நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.

சொந்தப் பத்திரிகை தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் "சாந்தி" என்ற மாத இதழைத் தொடங்கினார். இளம் எழுத்தாளர்களுக்காகத் தொடங்கப்பட்ட பத்திரிகை என்றாலும், உயர்ந்த நோக்கத்துடன் வெளிவந்த மாத இதழில் பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளும் வெளிவந்தன.

ஆனால், இலட்சியப் பத்திரிகைகளுக்கு ஏற்பட்ட முடிவுதான் "சாந்தி"க்கும் ஏற்பட்டது.

இரகுநாதன், "கலை, இலக்கியப் பெருமன்றம்" என்ற அமைப்பை முதன்  முதலில் தொடங்கினார். அந்த அமைப்பு, தமிழ்நாட்டில் பெரும் சக்தியாக விளங்கிக்கொண்டிருந்தது.

1967ஆம் ஆண்டில் கம்யூனிஸ்டு கட்சி – தி.மு.க.வுடன் கூட்டு வைத்ததனால், கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவர் பதவியைத் துறந்தார்.

பிறகு, "சோவியத் நாடு" அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். சோவியத் நாடு செய்தித்துறை ஆசிரியராக 20 ஆண்டுகள் பணியாற்றினார். இரகுநாதன் மொழிபெயர்த்த லெனின் கவிதாஞ்சலிக்கு சோவியத் நாடு நேரு விருதும், பரிசும் கிடைத்தன.

தனக்குப் பிறகு தான் சேர்த்த நூல்களுக்கு அழிவு வந்துவிடக் கூடாது என்று இரகுநாதன் எண்ணினார். எட்டயபுரம் இளசை மணியன் உதவியுடன், எட்டயபுரத்தில் நூலகம் ஒன்று பெரும் முயற்சியால் அமைந்தது.

2000ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி இரகுநாதன் நூலகம், பாரதி ஆய்வு மையத்துக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

சேற்றில் மலர்ந்த செந்தாமரை
க்ஷணப்பித்தம்
சுதர்மம்
இரகுநாதன் கதைகள்
இரகுநாதன் கவிதைகள்
கவியரங்கக் கவிதைகள்
காவியப் பரிசு
சிலை பேசிற்று
மருதுபாண்டியன்
பஞ்சும் பசியும்
புதுமைப்பித்தன் வரலாறு
புதுமைப்பித்தன் கதைகள்
இளங்கோவடிகள் யார்?
பாரதியும் ஷெல்லியும்
பாரதி – காலமும் கருத்தும்
கங்கையும் காவிரியும்
இலக்கிய விமர்சனம்
சமுதாய விமர்சனம்
முதலிய கவிதை, சிறுகதை, நாவல், வரலாற்று நூல் விமர்சனம் எனப் பல படைப்புகளுக்கு இரகுநாதன் சொந்தக்காரர்.

உறுதியான கொள்கைப் பிடிப்பு உள்ள "பாரதி பித்தர்" இரகுநாதன், 2001ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி காலமானார்.

அவர் மறையவில்லை; எட்டயபுரத்தில் அவர் நினைவாக உள்ள நூலகமும், பாரதியைப் பற்றிய "பாரதி – காலமும், கருத்தும்" ஆய்வு நூலும் உள்ளவரை அவரது புகழ் மறையாது.

எட்டயபுரம் செல்பவர்கள், இரகுநாதன் உயிருக்குயிராக நேசித்து, அமைத்த நூலகத்தைப் பார்த்து வருவதுடன், அந்த நூலகம் சிறப்பாக நடைபெற புத்தகக் கொடையும், பொருள் உதவியும் செய்ய வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

நன்றி:- தினமணி

You may also like

Leave a Comment