Home Tamilmanigal தி.சங்குப்புலவர்

தி.சங்குப்புலவர்

by Dr.K.Subashini
0 comment

"சித்திரக்கவி வித்தகர்" – தி.சங்குப்புலவர்

பா.வள்ளிதேவி


 

பண்டைத் தமிழ்ப் புலவர்களின் மரபில் பிறந்தவர்.  இவரது முன்னோர்கள் இறையருளும் தமிழ் அன்னையின் ஆசியும் பெற்று வாழ்ந்தவர்கள்.  இவரது பாட்டனார் சங்குப்புலவர், "மலைசாயப் பாடிய சங்குப்புலவர்" என்று தமிழ் வரலாற்றில் புகழப்பட்டவர். 

 

சேத்தூரை அடுத்த தேவதானம் என்ற ஊரில்  பெற்ற நாயகி அம்மன் ஆலயம் உள்ளது. ஆலயத்தின் கல்வெட்டும், தனிப்பாடல் திரட்டு என்ற நூலில் உள்ள பாடல்களும் அப்புகழுக்குரிய சான்றாகக் காணப்படுகிறது.

 

இவரது மரபில் இரண்டாம் தலைமுறையில் வந்தவரே இங்கு குறிப்பிடப்படும் தி.சங்குப்புலவர். அக்கால மரபுப்படி பாட்டனார் பெயரே இவருக்கும் அமைந்தது.

 

இவர்கள் நெல்லை மாவட்டம் சேத்தூர் அருகே உள்ள எட்டிசேரி என்ற சிற்றூரில் வாழ்ந்தனர். இவரது தந்தையாரும் செந்தமிழ்ப் புலவராக வாழ்ந்தவர். ச.திருமலைவேற் கவிராயர் எனப் பெயர் பெற்றவர்.

 

சேத்தூர் ஜமீன் அவைப் புலவராகவும் இருந்தார். இவரும் பல இலக்கிய நூல்களும்,தனிப்பாடல்களும் இயற்றியுள்ளார்.

கரிவலம்வந்தநல்லூர் இறைவன் மீது பாடப்பட்ட

 

 • திருக்கருவைத் தலபுராணம்
 • திருக்கருவைச் சந்தப்பா
 • பால்வண்ணநாதர் பதிகம்

போன்றவை குறிப்பிடத்தக்கவை.

 

இவரது சிலேடைப் பாடல்கள் – தனிப்பாடல் திரட்டு என்ற நூலில் காணப்படுகின்றன.

 

நெல்லை மாவட்டம், சேத்தூர் அருகே உள்ள எட்டிசேரி என்ற சிற்றூரில் 1893ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம்,31ஆம் தேதி, திருமலைவேற் கவிராயர் – தீரம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

 

குடும்பச் சூழல் காரணமாக நெல்லை மாவட்டத்தை விட்டு நீங்கி, மதுரை சின்னோவலாபுரம் என்ற கிராமத்துக்கு இடம் பெயர்ந்தனர்.

 

இவரது காலத்தில் கல்விச்சாலைகள் இல்லாத நிலை. பதிப்பித்த நூல்களும் அரிது. ஒரு சில திண்ணைப் பள்ளிக்கூடங்களே இயங்கின. பண்டைய ஏட்டுச் சுவடிகள் சிலவே அரிதாகக் கிடைத்தன.

 

இவரும் தந்தையாரிடமே இலக்கண, இலக்கியங்களைக் கற்றறிந்தார். சொல்வதைக் கேட்டு மீண்டும் சொல்லி, அவற்றை மனனம் செய்து கற்றுணர்ந்தார்.

 

 • நிகண்டு
 • நன்னூல்
 • தொல்காப்பியம்

போன்ற இலக்கணங்களையும், புராண, இதிகாசங்களையும் ஐயந்திரிபறக் கற்றார். தான் கற்றது மட்டுமன்றி தன்னைச் சார்ந்த தமிழ் ஆர்வலர்களுக்கும் கற்றுக்கொடுத்தார்.

 

புராணங்களை, மாலை நேரங்களில் தொடர் சொற்பொழிவாற்றியும் தமிழ் வளரச் செய்தார். அக்காலத்தில், தமிழ்மொழி அறிந்தவர்கள் எவருக்கும் பட்டம், பதவி என எதுவுமில்லை. கல்வி நிலையங்களும்,தேர்வு முறைகளும் அறியப்படாத நிலை.

 

இவ்வாறே தமிழ்ப் பணியிலும், விவசாயப் பணியிலும் சங்குப்புலவரின் வாழ்க்கை சென்றது. மதுரை மாநகரில் நான்காம் தமிழ்ச் சங்கம் 1901இல் அமைக்கப்பட்டது. தேர்வுகளும், பட்டங்களும், பரிசும், பாராட்டும் அளிக்கப்பட்டு வந்தன.

 

இச்செய்தியை தனது மைத்துனர் கர்ணம் வாயிலாக அறிந்த சங்குப்புலவர், ஆர்வமாகச் சென்று தனித் தேர்வாக (கல்லூரி பயிலாமல்)

 

 • பால பண்டிதம்
 • பண்டிதம்
 • வித்வான்

என்ற மூன்று தேர்வுகளையும் மிகச் சிறப்பாக எழுதினார். அப்போது அவருக்கு வயது 32.

 

 • தங்கப் பதக்கம்
 • தங்கத் தோடா
 • பொற்கிழி (ஆயிரம் வெண் பொற்காசுகள்)

என மூவகைப் பரிசுகளும், பாராட்டும் பெற்றார்.

 

சைவ சமய மடாதிபதிகள் பலராலும் பாராட்டி, கெளரவிக்கப்பட்டார். திருவாவடுதுறை ஆதீனத்தார், பொன்னாடை போர்த்தி, "சகலகலாவல்லி மாலை" என்ற செப்பேடு அளித்து சிறப்பித்துள்ளனர்.

 

வித்துவான் தேர்வுக்குப் பின் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பதவியேற்றார் சங்குப்புலவர். உத்தமபாளையம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார்.

 

மாணவர்களுக்குப் புரியும் வகையில் தெளிவாகக் கற்பிக்கும் அவரது ஆற்றலைப் பெரிதும் பாராட்டினர். தமிழ்மொழி ஆர்வலர்கள் பலர் இல்லம் தேடி வந்து, கற்றுணர்ந்து பெருமை பெற்றனர்.

 

அவர்களில், இஸ்லாம் மதத் தலைவரும், காங்கிரஸ் தியாகியுமான முகமது இஸ்மாயில், உப்பார்பட்டி ஞான தேசிகம் பிள்ளை, தேவாரம் நாராயண செட்டியார், கோம்பை ஜமீன்தார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

 

 • சேக்கிழார் மன்றம்
 • தமிழ் இலக்கிய மன்றம்
 • கம்பன் கழகம்

போன்ற அமைப்புகளின் வழி மக்களின் தமிழ்ப்பற்றை வளரச் செய்தார் சங்குப்புலவர்.  புராண, இதிகாசங்களின் சொற்பொழிவு, மாணவர்களின் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் என பல வகையிலும் செயல்பட்டு வந்தார்.  இதற்கு நண்பர்களும், தமிழாசிரியர்களும் உறுதுணையாக இருந்தனர்.

 

சின்னமனூர் புலவர் சிவாக்கிரகம், புலவர் குருசாமி, புலவர் இராமசாமி, புலவர் சிவக்கொழுந்து ஆகியோர் நினைவில் நிற்பவர்கள். ஆசிரியப்பணியை நிறைவு செய்தபின் மதுரைத் தமிழ்ச் சங்கத்திலும், சென்னை சைவ சித்தாந்தக் கழகத்திலும் சில ஆண்டுகள் பணியாற்றினார். 

 

உரையாசிரியராகவும், நூல்களில் திருத்தங்கள் செய்தும், நூலாராய்ச்சி செய்தும், சைவ சித்தாந்தக் கட்டுரைகள் எழுதியும் வந்தார்.

 

 • தமிழ்விடு தூது
 • அழகர் கிள்ளைவிடு தூது
 • தக்கயாகப்பரணி
 • காஞ்சிப்புராணம்

போன்ற நூல்களுக்குத் தெளிவான விளக்கங்களுடன் உரை எழுதியுள்ளார்.

 

பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பற்றிய ஆராய்ச்சியும், விளக்க உரையும் எழுதியுள்ளார்.  புலவர் குழுவாக இணைந்து இயற்றிய "ஐங்குறுநூற்றுச் சொற்பொழிவு" என்ற நூலிலும் இவரது கட்டுரை இடம் பெற்றுள்ளது. சங்குப்புலவரின் தமிழ்ப் பணியைப் பாராட்ட எண்ணிய தமிழன்பர்கள், அவருடன் பணியாற்றிய தமிழாசிரியர்கள் பலர் இணைந்து இவருக்கு மணிவிழா நடத்தி, கெளரவித்தனர்.

 

இவ்விழாவில் பங்கேற்ற கி.ஆ.பெ.விசுவநாதம், "சங்குப்புலவரின் மூளையே சிறந்த நூலகம். அதில் பதியப்படாத இலக்கிய, இலக்கணங்களே இராது" எனப் பேசியது சங்குப்புலவரின் புலமைக்குச் சான்றாகும். கி.ஆ.பெ.விசுவநாதம் அமைத்த புலவர் குழு, தமிழ்ப்பணியின் சிறப்புக்கு எடுத்துக்காட்டு.  அறிஞர் அண்ணா தலைமையில் நிகழ்ந்த, உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்றார் சங்குப்புலவர்.

 

சங்குப்புலவருக்கு, இலக்கணங்களில் கடினமான பகுதிகளை எடுத்தாள்வதில் தான் மிகவும் விருப்பம். வெண்பா இயற்றுவதிலும் சிறந்தவர் சங்குப்புலவர். 

 

யாப்பிலக்கணத்தில் பாவகையில், "சித்திரக்கவி" என்ற பிரிவு உண்டு. அதை இயற்றுவது மிகக் கடினமான செயல். புலவர்கள் அந்த முயற்சியை அரிதாகவே செய்வர்.

 • சித்திரக்கவியில்,
 • கமலபந்தம்
 • இலிங்கபந்தம்
 • இரதபந்தம்

என்ற ஒருவகைப் பாடல்கள் உண்டு.

 

வெண்பா இயற்றி, அதிலுள்ள எழுத்துகளை முறைப்படுத்தி,

 

 • கமலமாகவோ (தாமரை)
 • இலிங்கமாகவோ
 • இரதமாகவோ (உருவம்)

கட்டங்களை நிறைத்து அமைக்கப்படுவது.

 

அத்தகைய பாடல்களைப் பாடி மகிழ்வதில் இவருக்கு அதிக ஆர்வம் உண்டு. சங்குப்புலவர் இயற்றிய "இரதபந்த" வெண்பா ஒன்று வருமாறு:-

"மான் மலையான் வந்தாலு மென்மாலை பூண் பனகந்

 தோண் மன் சிவனன்பனோர் போதே காண்பா

 ரருமை மனந்தேர்வான் ஞாலத் திருவா

 வரு ஞான தேசிக பூமான்."

 

மிக நெருங்கிய நண்பரும், பெருநிலக் கிழாருமான உப்பார்பட்டி ஞானதேசிகம் பிள்ளை என்பவரைச் சிறப்பித்துப் பாடப்பட்ட "இரதபந்தம்" சான்றாகக் காணப்படுகிறது.

 

அன்னாரது இல்லத்தில் வழிபாட்டு அறையில் வைத்துச் சிறப்பாகப் போற்றப்படுகிறது. வெண்பாவின் அமைப்பும், சொல், பொருள் அழகும் உணர்ந்து மகிழத்தக்கது.

 

இலக்கண ஆராய்ச்சியில், "தொல்காப்பிய எண் இலக்கண"த்தில் ஒரு சிறு ஆராய்ச்சியை மேற்கொண்டார் சங்குப்புலவர். ஆனால் அந்த ஆராய்ச்சி நிறைவு பெறாமல் நின்றுவிட்டது.

 

ஆராய்ச்சி நிறைவு பெறுமுன் 1968ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 19ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார். தொண்ணூறு, தொள்ளாயிரம் என்பது ஏன், எவ்வாறு அமைக்கப்பட்டது?

எட்டு + பத்து – எண்பது
எட்டு + நூறு – எண்ணூறு
ஒன்பது + பத்து – தொண்ணூறு என்றும்
ஒன்பது + நூறு – தொள்ளாயிரம்

என்றும் அமைக்கப்பட்டுள்ளது.

 

தொள் +ஆயிரம் என்றால் தொள்ளாயிரம் என்பது குறை, எனப்பொருள் கொண்டு, நூற்றுக்கு ஒன்று குறை, ஆயிரத்தில் ஒன்று குறை எனக் கொள்ளலாமா?  என்ற சங்குப்புலவரின் ஆராய்ச்சி நிறைவு பெறவில்லை. 

 

தமிழறிஞர்கள் இவ்வாய்வை நிறைவாக்கி, வெளியிட வேண்டியது காலத்தின் கட்டாயமும் அவசியமுமாகும். அன்னாரின் வழித்தோன்றல்கள் இன்றும் தமிழாசிரியர்களாகவும், தமிழ்ப் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

 

நன்றி:- தினமணி

You may also like

Leave a Comment