Home History திருமலை குந்தவை ஜினாலய பாறை சிற்பங்களும் ஓவியங்களும்

திருமலை குந்தவை ஜினாலய பாறை சிற்பங்களும் ஓவியங்களும்

by Dr.K.Subashini
0 comment

Saturday, September 19, 2015 Posted by Dr.Subashini

 

வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
குந்தவை ஜினாலயம் என்பது இராஜராஜ சோழனின் சகோதரியான குந்தவை நாச்சியார் இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்திற்குப் பின்னர் கட்டியதாக அறிகின்றோம். இது கி.பி.11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ​

கருவறைக்கு அடுத்தார் போலக் காணும் தூண்கள் மட்டுமே சோழர்காலத் தூண்கள். ஏனைய தூண்கள் ஏனைய கட்டுமானப் பணிகளின் போது புணரமைக்கப்பட்டன. இக்கோயிலில் குன்றினில் அமர்ந்த குருவாய் இருப்பவர் நேமிநாதர். கருவறைக்கு வெளியே வந்தால் அங்கும் ஒரு மூலவர் சிலை இருப்பதைக் காணலாம். இதுவே இவ்வாலயத்தைக் குந்தவை கட்டியபோது  வைக்கப்பட்டிருந்த நேமிநாதர் சிற்பமாகும். இதன் வேலைப்பாடு கி.பி.11ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வேறு எங்கும் காணாத வகையில் இச்சிலையில் மூங்கிற் கீற்றுகள் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.  இதே கோவிலில் பிரம்மதேவருக்கும் ஜ்வாலாமாலினிக்கும் கற்சிலைகள் உள்ளன.

கோயிலுக்கு வடக்கில் பாறையில் கலைச்செழுமை வாய்க்கப்பெற்ற ஒரு பகுதி உள்ளது. புதையல் போன்று காட்சியளிக்கும் இப்பகுதி பொக்கிஷம் போல பாதுகாக்கப்பட வேண்டியது என்பதில் அய்யமில்லை. குறுகலான படிகளில் ஏறிச்சென்றால் உள்ளே குகைக்குள்  தருமதேவி, நேமிநாதர், பாகுபலி ஆகியோரது சிற்பங்கள் இருப்பதைக் காண முடியும்.
தருமதேவியின் சிற்பம் நான்கரை அடி உயரம் கொண்டது. தனது இடது காலை சிம்மத்தின் மீது  வைத்த வண்ணம் காட்சி தருகின்றார்.


பாகுபலியின் சிற்பத்தின் அருகில் இருக்கும் காட்சி அற்புதமானது. அவரது உடலை மாதவிக் கொடிகள் (காட்டு மல்லிக)  படர்ந்திருப்பதையும் அதனை அவரது ஒரு சகோதரிகள் தூய்மை செய்வதையும் காட்டும் வகையில் இச்சிற்பத்தைத் செதுக்கி உள்ளனர்.


இதனை அடுத்து வெளியேறி மறு பக்கத்துக் குகைக்குச் சென்றால் அங்கே பல அறைகள் கொண்ட குகைப்பள்ளி இருப்பதைக் காணலாம். காண்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் மிக விரிவாக  கல்லினால் செய்யப்பட்ட அறைகள் பாறைக்குள் குடைந்து செதுக்கப்பட்டிருப்பது விந்தையிலும் விந்தை.
இந்த குகைப்பள்ளிக்குள் சுவர்களில் ஆங்காங்கே சமனச் சின்னங்கள் சித்திரங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இவற்றில் பல சிதிலமடைந்து போயுள்ளன. இவை மிக விரைவாகப் பாதுகாக்கப்பட வேண்டியது மிக அவசியம்.
இங்குள்ள ஓவியங்களில் குறிப்பிடத்தக்கனவாக இருப்பவை:
  • ஜ்வாலாமாலினி வடிவம்
  • சமவசரண வட்டம்
  • லோக ஸ்வரூபம்
  • ஜம்புத் தீவு ஓவியம்
  • படை பட்டையான சிவப்பு மேற்கூரை ஓவியங்கள்.
சிவப்பு நிறத்தினால் கீறப்பட்ட  அனைத்து ஓவியங்களும் சோழர் காலத்தவையே.



இந்த குகைப்பள்ளிக்கு வெளியே சில கல்வெட்டுக்களும் இங்குள்ளன.
 
குறிப்பு – முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு என்னும் நூலை வாசிக்கவும்.
10 நிமிடப் நேரப் பதிவு இது.
விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2015/09/blog-post_19.html
யூடியூபில் காண:  https://www.youtube.com/watch?v=V5VbqJGmyLs&feature=youtu.be
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி

 

[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

You may also like

Leave a Comment