Home History திருஎறும்பீஸ்வரர்

திருஎறும்பீஸ்வரர்

by Dr.K.Subashini
0 comment

வணக்கம்.

 
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 
 
சோழநாட்டுக் கோயில்களின் பதிவுகளின் வரிசையில் மேலும் ஒரு கோயில்.!
 
விலங்குகள் வழிபடும் ஆலயங்கள் என பிரத்தியேகமாக குறிப்பிடப்படும் ஆலயங்களின் வரிசையில் எறும்புகள் வழிபட்ட தலமாக கருதப்படுவது திருவெறும்பேஸ்வரர் கோயில். இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம் புற்றுமண்ணால் உருவாகியிருக்கும் சுயம்புலிங்கம். அபிஷேக காலங்களில் லிங்க வடிவத்தின் மேல் கவசம் அணியப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகின்றது. 
திரு.வி.கந்தசாமி அவர்களின் தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும் எனும் நூல் இது ஆதித்த சோழன் காலத்தின் கற்றளியாக எழுப்பப்பட்ட ஆலயம் என்ற குறிப்பைத்தருகின்றது. கல்வெட்டு ஆய்வுகள் இது முதலாம் ராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் விரிவாக கட்டப்பட்டதாக குறிப்பிடுகின்றன. ஆக ஆதித்த காலன் காலத்தில் கோயில் கட்டப்பட்டு பின்னர் ராஜராஜ சோழன் காலத்தில் விரிவாக வடிவம் பெற்றிருக்கலாம். கண்டராதித்த சோழன், சுந்தரசோழன், முதலாம் ராஜராஜன், ராஜேந்திர சோழன் ஆகியோர் புகழ் சொல்லும் கல்வெட்டுக்கள் ஆலயப் பிரகாரச் சுவற்றிலும்  அனைத்து இடங்களிலும் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக கல்வெட்டுத் துறையாளரால் முதலாம் ஆதித்தன் கல்வெட்டு என்று கருதப்படும். கோவிராஜகேசரிபன்மற்கு யாண்டு நாலாவது என்று தொடங்கும் கல்வெட்டில் இறைவர் ஷ்ரீகண்ட சதுர்வேதி மங்கலத்து தென் கயிலாயத்து மகாதேவர் என்று குறிக்கப் பெற்றுள்ளார்.
 
கற்பாறைகள் மேல் பிரமாண்டமாக நிற்கும் ஆலயம்! இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இவ்வளவு நேர்த்தியான ஒரு கட்டுமானமா என காண்போரை வியக்க வைக்கும் கோயில் ஆர்க்கிட்கெக்சர்.
 
ஆலயத்தின் சுவாமி எறும்பேஸ்வரர். அம்மன், சௌந்தரநாயகி அம்மன். வில்வ மரம் இவ்வாலயத்தின் தல விருட்ஷம்.
கி. பி. 1752ஆம் ஆண்டு ஆங்கிலேயர் மற்றும் ஃபிரெஞ்சுப் படையினருக்கு இடையில் நிகழ்ந்த போரில் இம்மலை போர் வீரர்களின் தளமாகப் பயன்பட்டது என்னும் குறிப்பு  தமிழ் விக்கி பீடியாவில் காணப்படுகின்றது.
போர்காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ நிகழ்ந்த அழிவில் ஆலயத்தின் வசந்த மண்டபப் பகுதி மிகச் சிதைவுற்றுப் போனது. இந்த சிதைந்த பகுதிகளைச் சேர்த்து ஆலயத்தின் இடது புறத்தில் வசந்த மண்டபம் போன்ற ஒரு வடிவத்தை இந்திய தொல்லியல் துறை அமைத்திருக்கின்றது.
ஆலயத்தினுள்ளே சுரங்கப் பாதை ஒன்றும் உள்ளது.  இது தேவார முதல்வர்களான நால்வர் சன்னிதிக்குப் பக்கத்தில் உள்ள வாசல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இச்சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது.
இந்தக் கோயிலின் முன்புற மண்டபத்தில் அருள்மிகு செல்வ விநாயகர் சன்னதி உள்ளது. இந்த சன்னதி அருகே சுமார் 3 அடி உயர கால பைரவர் சிலை இருந்தது. ஆனால் 2010ம் ஆண்டு இந்த பைரவர் சிலை காணாமல் போனது. (தினமணி செய்தி) ஆலயச் சிற்பங்கள் கொள்ளயடிக்கப்படுவது பற்றி ஆங்காங்கே கேள்விப்படுகின்றோம். இக்கோயிலிலும் இது நிகழ்ந்திருக்கின்றது. உலகின் எந்த மூலையில் உள்ள அருங்காட்சியகத்தில் அல்லது தனியார் சேகரிப்பில் இந்த கால பைரவர் சிலை இருக்கின்றதோ தெரியவில்லை. 
 
தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களின் வரிசையில் இடம் பெறும் சிறப்பும் இக்கோயிலுக்கு உண்டு.

 

திருஎரும்பீஸ்வரர் ஆலயத்தில் திருநாவுக்கரசு ஸ்வாமிகள் அருளிச்செய்த தேவாரப் பாடல்:
 
விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமே
கரும்பின் ஊறல்கண் டாய்கலந் தார்க்கவன்
இரும்பின் ஊறல் அறாததோர் வெண்தலை
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே !!
 
பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுசீர்க்
கறங்கு பூத கணமுடைக் கண்ணுதல்
நறுங்கு ழல்மட வாளொடு நாள்தோறும்
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே !!
 
மருந்து வானவர் தானவர்க்கு இன்சுவை
புரிந்த புன்சடைப் புண்ணியன் கண்ணுதல்
பொருந்து பூண்முலை மங்கைநல் லாளொடும்
எறும்பி யூர்மலை யான் எங்கள் ஈசனே !!
 
நிறங்கொள் கண்டத்து நின்மலன் எம்இறை
மரங்கொள் வேல்கண்ணி வாள்நுதல் பாகமாய்
அறம்பு ரிந்தருள் செய்தஎம் அங்கணன்
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே !!
 
நறும்பொன் நாண்மலர்க் கொன்றையும் நாகமும்
துறும்பு செஞ்சடைத் தூமதி வைத்திடுவான்
உறும்பொன் மால்வரைப் பேதையோடு ஊர்தொறும்
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே !!
 
கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில்
திறம்பி யூர்வன மற்றும் பலவுள
குறும்பி யூர்வதோர் கூட்டகத் திட்டுஎனை
எறும்பி யூரான் செய்த இயற்கையே !!
 
மறந்து மற்றிது பேரிடர் நாடொறும்
திறம்பி நீநினை யேல்மட நெஞ்சமே
புறஞ்செய் கோலக் குரம்பையில் இட்டுஎனை
எறும்பி யூர்அரன் செய்த இயற்கையே !!
 
இன்பமும்பிறப் பும்இறப் பின்னொடு
துன்ப மும்உட னேவைத்த சோதியான்
அன்ப னேஅர னேஎன்று அரற்றுவார்க்கு
இன்பன் ஆகும் எறும்பியூர் ஈசனே !!
 
கண்நி றைந்த கனபவ ளத்திரள்
விண்நி றைந்த விரிசுடர்ச் சோதியான்
உள்நி றைந்துரு வாய்உயி ராயவன்
எண்நி றைந்த எறும்பியூர் ஈசனே !!
 
நிறங்கொள் மால்வரை ஊன்றி எடுத்தலும்
நறுங்குழல் மட வாள்நடுக்கு எய்திட
மறங்கொள் வாளரக்கன் வலி வாட்டினான்
எறும்பி யூர்மலை எம்மிறை காண்மினே !!

 

விழியப் பதிவைக் காண: 
 
யூடியூபில் இப்பதிவைக் காண:  
 
இப்பதிவு ஏறக்குறைய 13 நிமிடங்கள் கொண்டது.
 
புகைப்படங்கள் விரைவில் தொகுக்கப்பட்டு தகவல் அறிவிக்கப்படும்.
 
இப்பதிவினை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். இப்பதிவில் சில தகவ்ல்களை பகிர்ந்து கொள்பவர் இந்திய தொல்லியல் துரை ஆய்வு மாணவர் பரந்தாமன்.
 
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

புகைப்படங்கள்
சிதைந்த வசந்த மண்டபம்
கோயில் தீர்த்தம்

You may also like

Leave a Comment